கண்ணியமானவர்களை
கண்ணியப்படுத்துவோம்!
சமூகத்திலே
இன்று பிறரை கண்ணியப்படுத்துவதுவது என்பது மிகவும் அரிதாகிவிட்டது.
தான்
எவ்வாறு பிறரால் மதிக்கப்பட வேண்டும் என கருதுகின்றார்களோ அது போன்று பிறரையும்
மதிக்கவேண்டும் என்று பலரும் கருதுவதில்லை.
செல்வாக்கும்,
ஆள்பலமும் பணபலமும் உள்ளவர்களை மட்டுமே மதிக்க வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும்
என்ற மனோநிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.
இயக்க
வெறி, கொள்கை வெறி, மஹல்லா வெறி என பல்வேறு வெறிகளுக்கு இன்றைய முஸ்லிம் சமூகம்
இரையாகி, தங்களின் இயல்பியப் பண்புகளை இழந்து முச்சந்தியில் முகவரியின்றி
நிற்பதைக் காணமுடிகிறது.
மனிதர்கள்
எல்லோருமே மதிக்கப்பட வேண்டியவர்கள், அதிலும் குறிப்பாக கண்ணியம் வாய்ந்த
மேன்மக்கள் அது யாராக இருப்பினும் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்,
கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என ஓர் ஒப்பற்ற வழிகாட்டுதலை இஸ்லாம் நமக்கு
வழங்கியிருக்கிறது.
கண்ணியமான
ஒருவர் கண்ணியப்படுத்தப்படும் போது உண்மையில் அங்கே உயர்வுபெறுவது சமூகமும்
சம்பந்தப்பட்ட நபரும் தான்.
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் ஹிராக்குகையில் தனித்திருந்து தவமிருந்தபோது வானவர் தலைவர்
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இறைச் செய்தியை கொண்டு வருகின்றார்கள்.
அண்ணலார்
அதுவரை இப்படியொரு அனுபவம் பெற்றிராததின் காரணத்தினால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
வந்து போன செய்தியை தம் அருமைத் துணைவியார் அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம்
தமக்கேற்பட்ட அனுபவத்தை முறையிடுகின்றார்கள்.
”அடுத்த முறை உங்களுக்கு இறைச்செய்தியை கொண்டுவரும் அவ்வானவர்
வரும்போது என்னிடம் தெரிவியுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாருக்கு
ஆறுதல் கூறினார்கள்.
நபிகளாருடன் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் ஹிராக்குகையில் அமர்ந்திருந்த
போது, திடீரென அண்ணலார் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் வருகையை உணர்கின்றார்கள். இதோ
அவர் வந்து விட்டார் என நபிகளார் கூற, ”எனது வலது தொடையின் மீது வந்தமருங்கள்” என கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதோ இங்கேயும் வந்து விட்டார் என அண்ணலார் கூறினார்கள். அப்படியானால்
“எனது இடது தொடையின் மீது வந்தமருங்கள்” என கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அங்கேயும் வந்து விட்டதாக அண்ணலார் கூறியபோது, “என் மடியில் வந்து
அமருங்கள்” என்றார்கள். அப்பொழுதும் அண்ணலார் முன்பு போலவே
கூற, அன்னை கதீஜா (ரலி) அவர்கள் தங்களின் மேலாடையை மாநபியின் மீது போர்த்தி,
தங்களின் மார்போடு கட்டியணைத்துக் கொண்டவர்களாக, இப்போது அவர் தெரிகின்றாரா? என
அண்ணலாரிடம் கேட்டார்கள்.
அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் இல்லை, தெரியவில்லை என்றார்கள்.
அப்படியானால், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! நீங்கள் பயப்பட
வேண்டாம்! வந்தது ஷைத்தான் அல்ல, அல்லாஹ்வின் தூதுவரான வானவர் தான் என
தைரியப்படுத்தினார்கள்.
அல்லாஹ் அடுத்த முறை இறைச்செய்தியைக் கொண்டு ஜிப்ரயீல் (அலை) அவர்களை
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில் அனுப்பும் போது ”தான்
கதீஜா (ரலி) அவர்களுக்கு ஸலாம் சொன்னதாகச் சொல்லச் சொன்னான்”.
அல்லாஹ்வின்
ஸலாத்தைக் கொண்டு முதன்முதலில் கண்ணியப்படுத்தப் பட்ட முதல் பெண்மணி எனும் பேற்றை
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அடைந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களையும், ஜிப்ரயீல்
(அலை) அவர்களையும் கண்ணியப்படுத்தியதன் விளைவாக அல்லாஹ் தன் ஸலாத்தை கொடுத்தனுப்பி
கண்ணியப்படுத்தினான்.
(நூல்:
இஸ்தீஆப், பாகம்:3, பக்கம்:203.)
அண்ணல்
நபிகளாரின் முன்மாதிரி
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் தங்களது வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் கண்ணியமானவர்களை
அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பினும் கண்ணியப்படுத்தியிருக்கின்றார்கள்.
1.ஸஃபானா
(ரலி) & அதீ இப்னு ஹாத்திம் (ரலி).
ஸஃபானா
நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது
நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.
ஸஃபானாவோடு,
அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின்
சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை
அறிந்ததும், ஸஃபானா வையும், தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.
அண்ணலார்,
மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது
இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதரே!
எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள்
அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.
தொடர்ந்தார்
ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின்
தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்!
என்று கூறி முடித்தார்.
நபிகளார்
மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும்
ஸஃபானா அழைக்க, அருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.
ஸஃபானா, ”அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும், கஷ்டத்தில்
சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும், பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும்,
குடும்ப உறவுகளை பலப்படுத்தியும், பிரயாணிகளுக்கு உணவளித்தும், ஏழைப் பெண்களுக்கு
திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள்
எனக்கு கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள்.
ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் “உண்மையில்
நீ சொன்ன அனைத்து நற்காரியங்களும், இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! உனக்கு
எம் கருணையுண்டு! உன்னை நான் விடுதலை செய்கின்றேன்!”
என்று கூறினார்கள்.
சிறிது நேரத்தில், ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின்
வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.
வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் “குடிமக்களுக்கு
ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர்
ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி
மகிழ்ச்சியாய் இருக்கும்? என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும்” என்று ஸஃபானா கூறினார்.
இது கேட்ட அண்ணலார், சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார்
அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.
மேலும், ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும், பயணிக்க வாகனமும்,
வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
கண்ணியப்படுத்தினார்கள்.
(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம்,
பக்கம்:272)
கண்ணியமான நடத்தையும், கண்ணியமான செயலும் கொண்டிருந்த ஒருவரின் மகளை,
அதே கண்ணியமான நடத்தையோடு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} நடந்து கொண்டார்கள்.
பத்திரமாய் வந்திரங்கிய சகோதரியையும், கோத்திரத்தார்களையும் கண்ட ஸஃபானாவின்
சகோதரர் அதீ இப்னு ஹாத்திம் அசந்து போனார். இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின்
மீதும் அவர் கொண்டிருந்த தவறான எண்ணத்தை அழித்தொழித்து விட்டு, ஒட்டு மொத்த
சமூகத்தார்களையும், தம் சகோதரியையும் அழைத்துக் கொண்டு இஸ்லாத்தை ஏற்க மதீனா
நோக்கி வந்தார்.
மதீனா வந்தடைந்ததும் அண்ணலாரைக்காண அனுமதி வேண்டி நின்றார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுமதி கொடுத்ததும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் வீட்டிற்குள் நுழைந்ததும், அண்ணலார் வழங்கிய கண்ணியம் அப்படியே அவரை
உலுக்கிப் போட்டுவிட்டது.
ஆம்! அவர் உள்ளே வந்ததும், மிருதுவான ஒருதலையணையை கீழே வைத்து, அதன்
மேல் தங்களின் மேல் துண்டை விரித்து அதீ இப்னு ஹாத்திம் அவர்களை அண்ணலார்
அமரச்சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வெறுமெனே தரையில்
அமர்ந்தார்கள்.
(நூல்:
தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:273,274.)
(வரலாறு மிக நீண்டது) இங்கே அண்ணலார் ஒரு தலைமுறைக்கு முன்னால்
நடைபெற்ற நற்குணத்தை கண்ணியத்தைக் கொண்டு கௌரவப்படுத்தினார்கள்.
நல்லதை அதை விட மிக நல்ல நடைமுறையைக் கொண்டு அங்கீகரித்தார்கள்.
2.ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஹிஜ்ரி 8 ரமலான் மாதத்தின்,
மக்காவில் நுழையும் முன் ஓர் இரவில் ஸஹாபாக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு
சந்தர்பத்தில் இப்படிக் கூறினார்கள்: “ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு,
ஜுபைர் இப்னு முத்இம், அத்தாப் இப்னு உஸைத் இந்நால்வரும் இஸ்லாத்திற்கு வரவேண்டும்
என நான் அதிகம் விரும்புகின்றேன்.” என்றார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களை விட, ஐந்து வயது மூத்தவர், ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களின் மாமி
தான் அன்னை கதீஜா (ரலி) அவர்கள்.
நியாயமாக
ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டியவர் ஃபத்ஹ் மக்காவிற்கு பின்,
ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
ஃபத்ஹ் மக்கா, பரபரப்பான
அந்த தருணங்கள் இணைவைப்பாளர்களான குறைஷியர்களின் கண்களில் மரணபயத்தை
உண்டுபண்ணியிருந்தன.
என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என அஞ்சிக்கொண்டிருந்த வேளையில்
அண்ணலாரிடமிருந்து அப்படியொரு உத்தரவு வரும் என்று யாரும் எதிர் பார்த்திட வில்லை.
ஆம்! அபூ சுஃப்யான் வீட்டிற்குள் புகுந்தவர்களுக்கும் அபயம்
நல்கப்படும்! ஹகீம் இப்னு ஹிஸாம் வீட்டிற்குள் நுழைபவர்களுக்கும் அபயம்
நல்கப்படும்!” என்ற அந்த உத்தரவு...
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள
பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டது ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களின்
வீட்டைத்தான்! ஹிந்தா அவர்களும் அங்கே தான் அபயம் தேடிக்கொண்டார்கள்.
ஏன் ஹகீம் இப்னு ஹிஸாம் என்பருக்கு இந்த அளவு நபிகளார் கண்ணியம்
வழங்க வேண்டும்? கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் மட்டும் தான் அதற்கான விடையை
காணமுடியும்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பிறப்பதற்கு சரியாக ஐந்து
ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் கஃபாவின் உள்பகுதியிலே ஏதோ ஒரு காரணத்திற்காக
குறைஷியர்கள் ஆண்களும், பெண்களுமாக குழுமியிருந்தனர்.
நிறைமாத கர்ப்பிணியான ஹகீம் இப்னு ஹிஸாமின் தாயாரும் அங்கு நின்று
கொண்டிருந்தார். திடீரென பிரசவ வலி, அங்கேயே பிரசவம் பார்க்கப்பட்டது. அங்கு தான்
அன்று தான் ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்கள் பிறக்கின்றார்கள்.
உலகில் கஃபா தோன்றிய காலத்திலிருந்து அன்றுவரை (இன்று வரையும் கூட)
வேறெவருக்கும் கிடைக்காத அரும்பாக்கியம் ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களுக்கு
கிடைத்தது.
இதை பெரும் பேற்றாகவே ஒட்டுமொத்த குறைஷிகளும் கருதினார்கள். அவரின்
அனைத்து பருவத்திலும் அவர் கண்ணியத்தோடே குறைஷிகளால் நடத்தப் பட்டார்.
ஒரு கால கட்டம் வருகிறது, ஹகீம் இப்னு ஹிஸாம் பெரும் செல்வாக்கோடு
இருக்கும் கால கட்டத்தில் மக்காவில் ஹரமிற்கு ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களுக்கு
(இலவசமாக) உணவு வழங்கும் உயர்வான, உன்னதமான பொறுப்பை வழங்கி மேலும்
கண்ணியப்படுத்தியது குறைஷிக்கூட்டம்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதிலிருந்து, ஃபத்ஹ்
மக்கா வரை நடந்த எந்த ஒரு யுத்தத்திலும் அவர், இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்ற
எண்ணத்திலோ, முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ கலந்து கொள்ளவில்லை.
இன்னும் சொல்லப்போனால், யுத்தகளத்தில் நுழைந்ததிலிருந்து, வெளியேறும்
வரை முஸ்லிம்களுக்கு தம்மால் சிறு கீறல் கூட விழுந்து விடக்கூடாது என்பதில் மிகக்
கவனமாக இருப்பார்.
வலுக்கட்டாயமாகவே அவர் யுத்தகளத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பார்.
இது அவர் பின் நாளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் சொன்னதாகும்.
பத்ர் நடைபெறுவதில் அவ்வளவாக இஷ்டம் இல்லாததால், உத்பா இப்னு ரபீஆ
விடம் பேசி எப்படியாவது யுத்தம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என ஹகீம் இப்னு ஹிஸாம்
முயற்சி மேற்கொண்டார். ஆனால், அபூ ஜஹ்லின் பிடிவாதத்தால் அந்த முயற்சி
தோல்வியுற்றதாக இப்னு ஹிஷாம் (ரஹ்) அவர்கள் தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் நூலில்
குறிப்பிடுவார்கள்.
இப்படி பல்வேறு காரணங்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை ஹகீம்
இப்னு ஹிஸாம் விஷயத்தில் கண்ணியம் செலுத்தத் தூண்டியது.
இறுதியாக, ஃபத்ஹ் மக்காவின் இரண்டொரு நாளிலேயே இஸ்லாத்தைத்
தழுவினார்கள் ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில், ஹகீம் (ரலி) அவர்கள்
கண்களில் ஏக்கத்தோடு இப்படிக் கேட்டார்கள்: “நான் இஸ்லாத்திற்கு வரும் முன்னர் பல
நல்லறங்களை செய்திருக்கின்றேன். அதன் நன்மைகள் கிடைக்குமா?” என்று...
ஆம்! இஸ்லாத்திற்கு வரும் முன் நூறு அடிமைகளை விடுதலை
செய்திருந்தார். (அந்த அடிமைகளில் ஒருவர் தான் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அவரை
அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்கள்.) நூறு ஒட்டகைகளை
அறுத்து ஏழைகளுக்கு தர்மம் செய்திருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஹகிம் இப்னு ஹிஸாம் (ரலி)
அவர்களிடம் ”நீர் இஸ்லாத்திற்குள் நுழையும் போதே
அவையனைத்தையும் சேர்த்தே தான் வந்து விட்டீர்” என
பதில் கூறினார்கள்.
ஹுனைன் யுத்ததில் கிடைத்த பெரும் கனீமத்தில் ஹகீம் இப்னு ஹிஸாம்
அவர்களின் பங்காக 100 ஒட்டகம் வழங்கி அண்ணலார் கண்ணியப்படுத்தினார்கள்.
சற்றேரக்குறைய 120 வயது வரை வாழ்ந்தார்கள். தங்களின் வாழ்க்கையில்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாம் இஸ்லாத்திற்கு தாமதமாக வந்ததை நினைத்து கண்ணீர்
வடிப்பார்கள்.
அப்படி ஒரு நாள் அவர்கள் அழுது கொண்டிருந்த போது அவர்களின் மகனார்
“தந்தையே! ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கவர், ”என் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் எனக்கு
முன்னாலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நன்மையால் முந்திக் கொண்டு விட்டார்கள். நான்
அவர்களுடைய அந்தஸ்துக்கு அருகில் கூட செல்லமுடியாதே என நினைத்து அழுகின்றேன்” என்றார்களாம்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஜாஹிலிய்யாவிலும், 60 ஆண்டுகள்
இஸ்லாத்திலும் வாழ்ந்த அவர்கள் மிகக் கடுமையாக போட்டி போட்டு இஸ்லாமிய
வாழ்க்கையில் இபாதத்கள் செய்தார்கள்.
ஒருமுறை ஹஜ் செய்ய வரும் போது தன்னுடன் 100 ஒட்டகைகளை அழைத்து வந்து,
அவைகளை குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு வினியோகித்தார்களாம்.
மற்றொரு முறை ஹஜ் செய்ய வரும்போது தன்னுடன் நூறு அடிமைகளை அழைத்து
வந்தார்கள். அவர்களின் கழுத்துகளில் “அல்லாஹ்விற்காக ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களால்
விடுவிக்கப்படுவர்கள்” என வெள்ளி யால் ஆன பட்டைகளில் பொறிக்கப்பட்டு
இருந்ததாம். பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.
(நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபதில் அஸ்ஹாப், பாகம்:1,
பக்கம்:184,185.)
3. நுஅய்ம் இப்னு அப்தில்லாஹ் அன் நஹ்ஹாம் (ரலி).
அவர்களின் இயற்பெயர் நுஐம் இப்னு அப்தில்லாஹ் தான். அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் அன் நஹ்ஹாம் – கனைக்கக்கூடியவர் என்று பெயர் கூறி
அழைத்தார்கள்.
காரணம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நான்
சுவனத்தை சுற்றிபார்த்துக் கொண்டிருந்தேன். ஓரிடத்தில் ஒருவர் கனைக்கும் சப்தம்
கேட்டது. அருகே சென்று பார்த்தேன். அங்கே நுஐம் இப்னு அப்தில்லாஹ் வீற்றிருக்க
கண்டேன்” என்றார்கள்.
கிட்டத்தட்ட 10 –ஆம் நபராக இஸ்லாத்திற்கு வந்தார்கள். தன்
குடும்பத்தார்களுக்கும், தன் கோத்திரமான பனீஅதீய் கோத்திரத்தார்களுக்கும்
தெரியாமல் மறைத்து வைத்திருந்தார்கள்.
பனீ அதீ கோத்திரத்தார்களின் விதவைகளையும், அநாதைகளையும் அவர்களே தன்
சொந்த செலவில் பராமரித்து வந்தார்கள்.
இந்நிலையில் ஹிஜ்ரத் கடமையானது. அப்போது, தங்களின் இஸ்லாத்தை
வெளிப்படுத்திய நுஐம் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் பயணமாவதாக கூறினார்கள்.
அப்போது அவர்களின் கோத்திரத்தார்கள் “நீர் ஹிஜ்ரத் மேற்கொண்டு
விட்டீர் என்றால் இந்த அநாதைகளும், விதவைகளும் ஆதரவின்றி சீரழிந்து விடுவார்கள்.
நீர் முஸ்லிமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் எந்த குறுக்கீடும்
செய்யமாட்டோம்!” என்று கூறினார்கள்.
பின்னர், நுஐம் (ரலி) அவர்கள் கைபரின் போது ஹிஜ்ரத் செய்து
அண்ணலாரிடம் வருகை தந்து, காரணத்தைக் கூறி ஹிஜ்ரத்தின் நன்மையை தாம் இழந்து
விட்டதாக வருத்தம் அடைந்தார்கள்.
அப்போது அண்ணலார் {ஸல்} அவர்கள் “நுஐமே! உம்முடைய சமூகத்தார்
உம்மிடம் நல்ல முறையிலேயே நடந்து கொண்டனர். ஆனால், என் சமூகத்தார்களோ என்னை ஊரை
விட்டே வெளியேற்றி விட்டனர்” என்றார்கள்.
அதற்கு, நுஐம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமூகம்
உங்களை ஹிஜ்ரத்திற்காக அல்லவா விரட்டினார்கள். ஆனால், என் சமூக மக்களோ என்னை
ஹிஜ்ரத்தின் பலனை அடைய முடியாமல் அல்லவா தடுத்து விட்டார்கள்” என்று
கூறினார்கள்.
அதற்கு அண்ணலார் “அல்லாஹ் உம்முடைய நல்லறங்களுக்காக உம்மை
கண்ணியப்படுத்துவான்” என்று கூறி ஆறுதல் மொழி பகர்ந்தார்கள்.
(நூல்: அத்-தபகாத்துல் குப்ரா லி இப்னி ஸஅத், பாகம்:4, பக்கம்:138,
அல் இஸாபா லி இப்னி ஹஜர், எண்:8799, இஸ்தீஆப், பாகம்:3, பக்கம்:15.)
ஆம்! சுவனத்தில் இருக்கும் காட்சியை அண்ணலாருக்கு அறிவித்துக்
கொடுத்து அல்லாஹ் கண்ணியப்படுத்தினான்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அன் நஹ்ஹாம் என்று பெயர் வைத்து
அழைத்து கண்ணியப்படுத்தினார்கள்.
நபித்தோழர்களின் முன்மாதிரி
ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் எங்காவது பயணம் கிளம்பும் போது,
அல்குர்ஆனின் தலைமை விரிவுரையாளர், அறிவுக் களஞ்சியம் ஹல்ரத் அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் அங்கே உடனே வந்து விடுவார்கள்.
குதிரையின் சேணத்திலிருந்து தொங்கும் கால் வைப்பதற்கான வளையத்தைத்
தம் கைகளால் தாங்கிக்கொண்டு, குதிரையின் கடிவாளத்தைக் கைகளில் ஏந்தியவாறு
நிற்பார்கள் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
ஏதோ ஓர் அடிமை தனது எஜமானனுக்கு சேவகம் செய்வது போன்று அந்தக் காட்சி
இருக்கும்.
திகைத்துப் போன ஜைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “இறைத்தூதரின்
குடும்பத்தைச் சேர்ந்தவரே! வளையத்தை விடுங்கள்! கடிவாளத்தை என்னிடம் கொடுத்து
விடுங்கள்!” என்று..
அதற்கு, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவார்களாம்: “அறிவிலும்,
வயதிலும் மூத்த அறிஞர்களுக்கு இப்படித்தான் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்து
கொள்ளவேண்டும் என்று எங்களுக்கு கற்பித்து தரப்பட்டிருக்கின்றது”
அது
கேட்ட, ஜைத் (ரலி) அவர்கள் “கொஞ்சம் உங்களுடைய கையை கொடுங்களேன்” என்றார்கள். அப்துல்லாஹ் (ரலி) கையை நீட்டியது
தான் தாமதம் ஜைத் (ரலி) குனிந்து அந்தக் கையில் முத்தம் கொடுத்து விட்டு
“எங்களுடைய இறைத்தூதரின் குடும்பத்தாருக்கு இப்படித்தான் அன்பு (கண்ணியம்) செலுத்த
வேண்டும் என்று எங்களுக்குக் கற்பித்து தரப்பட்டிருக்கின்றது” என்றார்களாம்.
(நூல்: நன்றி: மார்ச், 1-15,
2014. சமரசம் மாதம் இரு முறை இதழ்.)
உமர் (ரலி) அவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களுக்கு
மாதாந்திர உதவித்தொகை வழங்கி வந்தார்கள்.
ஒரு முறை உஸாமா (ரலி) அவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய பின்னர்
அடுத்து வந்த உமர் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு
உதவித்தொகையை வழங்கினார்கள் உமர் (ரலி) அவர்கள்.
தமக்கு உஸாமா (ரலி) அவர்களை விட குறைவாக வழங்கப்பட்டிருப்பதைக் கண்ட
இப்னு உமர் (ரலி) அவர்கள், ”அமீருல் முஃமினீன் அவர்களே! எந்த ஒரு யுத்தத்திலும்
கலந்து கொள்ளாத உஸாமா அவர்களுக்கு அதிகமாகவும், சிறுபிராயத்திலிருந்தே இஸ்லாத்தின்
அத்துனை போர்களிலும் பங்கெடுத்த எனக்கு குறைவாகவும் தந்தது எப்படி நியாயமாகும்?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில், உஸாமா (ரலி) அவர்கள்
எத்தகைய கண்ணியம் வாய்ந்தவராக இருந்தாரோ, அப்படித்தான் இந்த உமரிடத்திலும்
கண்ணியம் வாய்ந்தவராக மதிக்கப்படுவார்.
மேலும், உன்னுடைய தந்தை உமரின் மீது வைத்திருந்த கண்ணியத்தை விட,
உஸாமா வின் தந்தை ஜைத் அவர்கள் மீது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உயர்ந்த
மரியாதையையும், கண்ணியத்தையும் வைத்திருந்தார்கள்.” என்று
பதில் கூறினார்கள்.
(நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:183.)
ஒரு முறை அரசின் உதவியைப் பெறுவதற்காக வரிசையில் காத்துக்
கொண்டிருந்த உம்மு ஸலீத் (ரலி) அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் தம் பணியாளரை
அழைத்து “உஹத் யுத்த களத்தில் காயமுற்ற பல தோழர்களுக்கு, நாவறண்ட பல
நபித்தோழர்களுக்கு, உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த என் தோழர் பலருக்கு தண்ணீர்
புகட்டிய வீரப்பெண் உம்மு ஸலீத் அங்கே வெயிலில் காய்ந்து கொண்டிருக்கின்றார்.
குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு, அடுத்த மாதத்திலிருந்து உங்கள்
வீடு தேடி உங்களுக்கான அரசின் உதவிகள் வந்து சேரும்! என கூறச் சொன்னார்கள்.
(நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்: 186.)
ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் குறித்து ஹிம்ஸ் மாகாண மக்கள்
ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களை அணுகி நான்கு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்த
போது,
1.காலையில் மிக தாமதமாகவே பணிக்கு வருகின்றார்.
2.இரவு நேரங்களில் எங்களின் முறையீடுகளுக்கு செவி சாய்ப்பதே இல்லை.
3.மாதத்தில் இரு நாட்கள் எங்களைச் சந்திப்பதை முற்றிலும்
தவிர்க்கிறார்.
4.சில நேரங்களில் மயங்கி கீழே விழுந்து விடுகின்றார்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படிப்
பிரார்த்தித்தார்களாம் “யாஅல்லாஹ்! உன் பொருப்பை சுமக்கும் விஷயத்தில் இது வரை
நான் அவரை கண்ணியமானவராகவே அறிந்து வைத்திருக்கின்றேன்! என் உள்ளத்தில் இருக்கும்
அந்த உத்தமரின் கண்ணியத்தை எடுத்து விடாதே ரஹ்மானே!” என்று....
விசாரணை மன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஸயீத் மேற்கூறிய
குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக விளக்கம் தந்தார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முதல்குற்றச்சாட்டிற்கான விளக்கத்தை
நான் கொடுக்கும் முன்பாக, நான் பகிரங்கப்படுத்த விரும்பாத ஒன்று என்ற போதிலும்
மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து வருந்துகின்றேன்.
1.எனது வீட்டில் வேலையாட்கள் கிடையாது. எனது குடும்பத்தாருக்கு
வீட்டு வேலைகளில் நான் தான் உதவி ஒத்தாசையாக இருப்பேன். தினமும் காலையில்
எழுந்ததும் ரொட்டிக்கு மாவு பிசைந்து, பின்னர் சமைத்து கொடுத்து விட்டு வருவேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இரண்டாம் குற்றச்சாட்டிற்கான விளக்கத்தை
நான் கொடுக்கும் முன்பாக, இதற்கும் பதில் கூறுவதை நான் விரும்பவில்லை. ஆயினும், நான்
சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மிகவும் வருந்துகின்றேன்.
2.பகலெல்லாம் இவர்களுக்காக உழைக்கின்றேன்; இரவை படைத்த என்
இரட்சகனுக்காக ஒதுக்கி வைத்துள்ளேன்.
மூன்றாம் முறையும் முன்பு போலவே சத்தியமிட்டுக் கூறி தமது வருத்தத்தை
வெளிப்படுத்தினார்கள்.
3.என்னிடத்திலே உடுத்துவதற்கு என்று பிரத்யேகமாக எந்த ஆடையும்
கிடையாது. இதோ நான் உடுத்தியிருக்கிற ஓர் ஆடை மட்டும் தான் என்னிடம் உள்ளது.
மாதத்தில் ஒரு நாள் சலவை செய்து, காயவைத்து பின்னர் உடுத்த வேண்டியுள்ளது. அதனால்
தான் அன்று என்னால் இவர்களை சந்திக்க முடியாமல் போனது.
நான்காவது குற்றச்சாட்டிற்கு பதில் கூறும் போது ஸயீத் (ரலி) அவர்கள்
மிகவும் உணர்ச்சி வயப்பட்டவர்களாக காணப்பட்டார்கள்.
4.இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் ஒரு நாள் அந்த கொடூரக் காட்சியை
பார்த்தேன். ஆம்! குபைப் இப்னு அதீ (ரலி) இறைவிரோதிகளால் கொல்லப்பட்டதை என்னுடைய
இந்த இரண்டு கண்களால் பார்த்தேன்.
குறைஷிகள் மிகக் குரூரமாக வெட்டி, ரத்த வெள்ளத்தில் அவரை மிதக்க
விட்டிருந்தனர். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அவ்வேளையில், கொடியோர்கள் அவரிடம்
இப்படிக்கேட்டனர்: “உமக்கு பதிலாக இப்போது இங்கே முஹம்மத் இருந்திருக்கலாமே என்று
நினைக்கின்றாய் தானே?” என்று...
மரணத்தின் வாசல் வரை வந்து விட்ட பின்னரும் கூட, இந்த கேள்வியைக்
கேட்டதும், மிகவும் ஆவேசமடைந்தவர்களாக “முஹம்மத் {ஸல்} அவர்கள் மீது சிறு முள்
தைப்பதைக் கூட என்னால் அனுமதிக்க முடியாது” என்று உரக்கக் கூறினார்கள்.
இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத விரோதிகள், உடனடியாக சிலுவையில்
அறைந்து கொன்றனர்.
இந்த கொடூரங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு, ஒரு சாட்சியாக, அவரைக்
காப்பாற்ற முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேனே! என்ற எண்ணம் எனக்கு
மேலோங்கும் போதெல்லாம், அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து அஞ்சி நடுக்கம் ஏற்பட்டு
மயக்க நிலைக்கு சென்று விடுகின்றேன்.” என பதில் கூறி முடித்தார்கள்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே!
நான் ஸயீத் (ரலி) அவர் மீது கொண்டிருந்த கண்ணியம் எதுவும் வீண்போகவில்லை” என்று மீண்டும் துஆ செய்தார்கள்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:156, குலஃபாவுர் ரஸூல்
{ஸல்}, பக்கம்:131.)
ஆனால், சமூகத்தில் இன்று கண்ணியம் நிறைந்த ஸஹாபாக்கள், இமாம்கள்,
மார்க்கத்தின் உயர்வுக்காக உயிர் நீத்த மேன்மக்கள், சங்கை மிகு ஆலிம்கள் என
எல்லோரையும் தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சிப்பதை நாம் கண்கூடாக
கண்டுவருகின்றோம்.
மிகவும் உயர்ந்த இவர்களின் நிலையே இவ்வாறென்றால், சாதாரண மனிதரின்
நிலை என்னவாகும்?
அரசியல் களத்தில், பொது தளத்தில் இன்னும் மோசமாக மோதிக்கொள்கிற நிலை
தான் நீடிக்கிறது.
அல்லாஹ்வும், அவன் தூதரும், உத்தம தோழர்களும் கண்ணியமானவர்களை
கண்ணியப்படுத்துவதை அழகிய நடைமுறையாக மேற்கொண்டிருந்ததை மேற்கூறிய வரலாறுகள்
நமக்கு உணர்த்துகின்றன.
இப்பொழுது அருகிப் போய்விட்ட இது போன்ற நற்குணங்கள் கொண்ட நல்லோர்களை
அவர்கள் எந்தச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வித்தியாசம் பாராமல்
கண்ணியத்தோடும் மரியாதையோடும் நாம் நடத்த வேண்டும்.
இது இன்றே துவங்கப்பட வேண்டிய ஒன்றும் கூட!
அல்லாஹ் கண்ணியம் வாய்ந்த ஒவ்வொருவரையும் கண்ணியப் படுத்துகிற
மேன்மக்களாக உங்களையும் என்னையும் ஆக்கியருள் புரிவானாக!
ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!
அல்ஹம்து லில்லாஹ் மிக அற்புதமான கட்டுரை பல வேலைகளுக்கு மத்தியில் தாங்கள் ஒவ்வொரு வாரமும் பயான் போடுவது மிக அருமை. அல்லாஹ் தங்களின் மற்ற வேலைகளை இலகுவாக்கி தங்களின் வாழ்கையில் பரகத் செய்வானாக. ஆமீன்
ReplyDeleteமவ்லானா! கட்டுரை பாராட்டுக்குரியது! வரும் வாரம் எதிர்வரும் தேர்தலுக்கான தொடர் பயானை முயற்சிக்கலாமே!
ReplyDeleteஅற்புதமான படைப்பு. அழகான வரலாறுகள். மென்மேலும் பணி தொடர துஆ செய்கிறோம்.
ReplyDeletemakkalin ullangalil irunthu uthirnthu pona (kanniyamanavargalai kanniyapaduthuthal enum) gunaththai makkal manrathil samarpiththa hazrath avargalin muyarchi paratirkuriyathu.......Alhamthulillah
ReplyDeleteUngaludaiya kadumaiyana muyarchikku allah narkooli valanguvanaha.Jazakallah.
ReplyDeleteNalla bala dua kkalodu karuthhukkala i vazhangiya anaivarukkum جزاك الله خيرً..
ReplyDeleteகண்ணியமான கட்டுரை
ReplyDelete