Thursday, 3 April 2014

வாழ்க்கை நிஜங்களும்.. நிழல்களும்...



              வாழ்க்கை நிஜங்களும்.. நிழல்களும்...



 



வாழ்க்கை வாழ்வதற்கு தான் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு மனிதனுக்கு எப்படியான வாழ்க்கை மன நிறைவையும், மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் பெற்றுத்தரும் என்பதை இஸ்லாம் அழகாகவே வகுத்துத்தந்துள்ளது.

இறைவன் நமக்கு தந்திருக்கிற எந்த ஒரு அருட்கொடையையும் நாம் எப்படி பயன்படுத்தினால் அது நம் வாழ்க்கையை அழகுபடுத்தும், உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதையும் இஸ்லாம் அருமையாகவே வரையறுத்துத் தந்துள்ளது.

இஸ்லாம் வகுத்துத்தந்துள்ளதின் அடிப்படையில், வரையறுத்துத்தந்துள்ளதின் வழியில் பீடுநடை போடுகிறபோது ஓர் இறைநம்பிக்கையாளனின் ஈருலக வாழ்வும் ஈடு இணையில்லா இன்பமயமாகும் என்பதில் அணுவளவும் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தமது புனித வாயால் பல சோபனத்தை உரித்தாக்கிய ஒரு சிறுவரை அழைத்து இப்படிச் சொன்னார்களாம்: “சிறுவரே! சில வார்த்தைகளை நான் உமக்குச் சொல்லித்தருகின்றேன். அவற்றை நீர் செவி தாழ்த்திக் கேளும்!

1. அல்லாஹ்வை நீர் பேணிக்கொள்ளும்! அவ்வாறெனில் அல்லாஹ் உமக்கு சிறந்த பாதுகாப்பை நல்குவான்.
2. அல்லாஹ்வை நீர் பயந்து கொள்ளும்! அவனை நீர் உமது நெருக்கத்தில் பெற்றுக் கொள்வீர்.

3. நீர் செல்வச் செழிப்போடு வாழும் காலங்களில் அல்லாஹ்விற்கு உம்மை (உம் தாராளத் தன்மையை) க் காட்டி விடும்! உமக்கு ஏற்படும் நெருக்கடியான நேரங்களில் அவன் உமக்கு தனது தாராளக் குணத்தைக் காட்டித் தருவான்.

4. நீர் ஒன்றைத் தேவைப்பட்டு அதைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், அல்லாஹ்விடமே அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்வீராக!

5. நீர் வாழ்நாளில் அனுபவிக்கப்போகும் அனைத்துக்காரியங்களைப் பற்றியும் திட்ட வட்டமாக அல்லாஹ் முன்னரே எழுதிவைத்து விட்டான். ஆகவே, உலகமே ஓரணியில் திரண்டெழுந்து உமக்கு எதிராக தீங்கிழைக்க முனைந்தாலும் இன்பம், துன்பம், நன்மை, தீமை ஆகிய விதிகளில் அல்லாஹ் உமக்கு எதை நிர்ணயித்துள்ளானோ அதைத்தவிர வேறெதுவும் உம்மை அணுகாது.

6. உம்மால் அல்லாஹ்வை திருப்தி படுத்தும் வண்ணம் ஏதேனும் வணக்க வழிபாடுகளை, இறை நம்பிக்கையுடன் செய்ய முடியுமானால் அதைச் செய்வீராக! உம்மால் அவற்றைச் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை நிலை குலைந்து விடாதீர்.

7. மனம் வெறுக்கின்ற செயல்கள் மீது நீர் பொறுமையை மேற்கொள்வீராக! அப்பொறுமையில் அநேக நன்மைகள் இருக்கின்றன. 

(நூல்: அல் ஜாமிவுஸ் ஸஹீஹ் லில் அல்பானீ, ஹதீஸ் எண்:7957)


அந்தச் சிறுவர் வேறு யாருமல்ல அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்ன அந்தப் போதனை அவருக்கு மாத்திரம் உரித்தானதும் அல்ல. இந்த முழு உம்மத்திற்கும் தேவையான போதனையும் கூட.

நிஜமான வாழ்க்கையை வாழவிரும்புபவர்களுக்கு அந்த ஏழுபண்புகளும்  ஏற்றங்கள் பல தரும் ஏணியாகும்.

வாருங்கள் நிழலுக்கும் நிஜத்திற்குமான வேறுபாட்டை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்.



1.       ஹிலால் இப்னு உமைய்யா (ரலி) அவர்கள்.

ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள், நபிகளாரின் நற்பெரும் தோழர்களில் ஒருவர். அல்லாஹ் இவர் விஷயத்தில் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்காக தவ்பா செய்த போது, மன்னித்து அருள் பாளித்தான் என்று அல்குர்ஆன் 9-ஆம் அத்தியாயம் 118-வது வசனம் சான்று பகர்கின்றது.

அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையோடு நடந்து கொண்டார் என்பதற்கு அந்த வரலாற்று நிகழ்வே போதுமானதாகும்.

ஒரு காலகட்டம் பெரும் சோதனை ஒன்று அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவருக்கு பக்கபலமாகவும், உற்ற துணையாகவும் இருந்து வந்த அவரின் துணைவியார் அவருக்கு துரோகம் விளைவித்ததை கண்ணால் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மான உணர்வு உள்ள எந்த ஓர் ஆணும் அந்த இழி செயலை ஏற்றுக் கொள்ள மாட்டான். மிகவும் பேணிக்கையான மனிதர் ஆயிற்றே ஹிலால் (ரலி) அவர்கள் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபை நோக்கி மிக விரைவாக வந்தார்கள். சபையின் முன் வந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! நேற்று இரவு நான் இஷாவிற்குப் பிறகு வீட்டிற்குச் சென்றேன். என் துணைவியாரோடு அந்நிய ஆண் ஒருவன் சமீபித்திருப்பதை என் கண்களால் கண்டேன். அவர்கள் கொஞ்சிப் பேசுவதை என் காதால் கேட்டேன். இது இன்று சுபுஹ் நேரம் வரை நீடித்தது  என்றார்கள்.

இது கேட்கப் பிடிக்காத அண்ணலார் {ஸல்} அவர்கள் “தக்க ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள். இல்லையேல் உங்களுக்கு பத்தினிப் பெண்கள் மீது அவதூறு சொன்ன குற்றத்திற்காக கசையடி தண்டனையாக வழங்கப்படும்என்றார்கள்

அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நம்மில் ஒரு மனிதர் தம் மனைவியரோடு இன்னொரு ஆண் தனித்திருக்கக் கண்டால், ஆதாரத்தை தேடிக்கொண்டிருக்க வேண்டுமா?எனக் கேட்டார்கள்.

(இதற்கு முன்பொறுமுறை அல்லாஹ் பத்தினிப்பெண்கள் குறித்து “எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வில்லையோ அவர்களுக்கு எண்பது 80 சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே கெட்டவர்கள்.” (அல்குர்ஆன்:24:4) எனும் இறைவசனம் இறக்கியருளப்பட்ட போது...

நபித்தோழர் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவியோடு ஒருவன் தவறான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பின் நான் நான்கு சாட்சிகளை தேடிக்கொண்டிருக்க வேண்டுமா? அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! நிச்சயமாக நான் அவனை கொன்றே விடுவேன். என்றார்கள்.

இந்த உரையாடலை ஆச்சர்யத்தோடு கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “என்ன ஸஅத் அவர்களின் ரோஷத்தை நீங்கள் ஆச்சர்யத்தொடு பார்க்கின்றீர்கள் போலிருக்கின்றதே? நிச்சயமாக நாம் அவரை விட நிரம்பவே ரோஷம் நிறைந்தவராவோம். அல்லாஹ் என்னை விட ரோஷம் நிறைந்தவனாவான்என பதிலளித்தார்கள்.)

ஹிலால் (ரலி) அவர்களின் முறையீட்டைக் கேட்ட அண்ணலார் {ஸல்} அவர்கள் முன்பு போலவே ஒன்று நான்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள். இல்லையேல் அவதூறு குற்றத்திற்கான தண்டனை உமக்கு அளிக்கப்படும்என்றார்கள்.

இதைக் கேட்ட ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணை! நான் உண்மையாளன். உண்மையைத் தான் சொல்கின்றேன்! அல்லாஹ் என்னுடைய இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு சட்டத்தை இறக்கியருளுவான். எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றுவான். மேலும், என்னுடைய உயிரையும் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு மிகுதியாகவே இருக்கிறது  என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ் “மேலும், யார் தம் மனைவியரின் மீது அவதூறு சுமத்துகிறார்களோ, மேலும் அதற்கு தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் பகர வேண்டும்.

மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் “அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்என்று கூறவேண்டும்.

“இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்என அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி, ஐந்தாவது தடவையாக “இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்!என்று அவள் சாட்சியம் அளிக்க வேண்டும்.

மேலும், அவள் அளிக்கும் இந்த சாட்சியம் அவளை விட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்தால், மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இல்லாது போயிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்தி விட்டிருக்கும்!) என்கிற 24-ஆம் அத்தியாயத்தின் 6-10 ஆகிய (லிஆன் – சாப அழைப்பு பிரமாண சட்ட) வசனங்களை இறக்கியருளினான்.

அங்கு நின்று கொண்டிருந்த ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களை அழைத்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ஹிலாலே அல்லாஹ்விட்த்திலிருந்தும் உண்டான சுபச்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்! இதோ அல்லாஹ் உங்கள் விவகாரத்தில் மகிழ்ச்சி தரும் சட்டத்தை இறக்கியருளியுள்ளான்என்றார்கள்.

அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதைத் தானே நானும் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைத்தேன்  என்று பதில் கூறினார்கள்.

பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட அவரின் மனைவி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சபைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

இருவருக்கும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த இறைவசனத்தின் சட்டத்தை விளக்கி கூறினார்கள். பின்னர் குரலை உயர்த்தி “நன்றாக அறிந்து கொள்ளுங்கள்! உலகத்தின் தண்டனையை விட மறுமையின் தண்டனை மிக மிகக் கடுமையானதுஎன்று கூறினார்கள்.

அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் “நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மையானது  என்றார்கள்.

இதற்கு அவரின் மனைவி “இவர் என் மீது சொன்ன குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்யாகும்என்றார்.

இருவரின் வாக்குமூலத்தையும் கேட்ட அண்ணலார் இருவரையும் லிஆன் (சாப அழைப்பு பிரமாணம்) செய்யுமாறு கூறினார்கள்.

முதலில் ஹிலால் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் சட்டத்திற்கேற்ப நான்கு சத்தியங்களைச் செய்தார். அவர் ஒவ்வொரு முறை சத்தியம் செய்யும் போதும் நபி {ஸல்} அவர்கள் “உங்களில் ஒருவர் பொய் சொல்கிறீர்கள் என்று இறைவனுக்கு தெரியும். எனவே, பாவ மன்னிப்புக் கேட்டு மீள்கிறவர் உண்டா?  என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஐந்தாவது முறை சத்தியம் செய்வதற்கு ஹிலால் (ரலி) அவர்கள் முனைந்தபோது, சுற்றியிருந்த நபித்தோழர்கள் ஹிலால் (ரலி) அவர்களை நோக்கி “அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள். மறுமையின் தண்டனையை விட இம்மையின் தண்டனை மிக எளிதானது. ஆகவே, ஐந்தாவது சத்தியம் செய்யும் முன் நன்கு யோசித்துக் கொள்ளும்! நீர் செய்யும் இந்த ஐந்தாவது சத்தியம் உம்மீது இறைத்தண்டனையை கட்டாயமாக்கிவிடும்  என்று கூறி எச்சரித்தார்கள்.

அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் ஒரு போதும் என்னை தண்டிக்கவோ, வேதனை செய்யவோ மாட்டான்  என்று கூறியவாறு ஐந்தாவது முறை சத்தியம் செய்தார்கள்.

அதன் பின்னர் அப்பெண்மணி எழுந்து, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

ஐந்தாவது முறை அவள் சத்தியம் செய்ய தயாரானபோது, சுற்றியிருந்த நபித்தோழர்கள் அப்பெண்மணியை நோக்கி “அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள். மறுமையின் தண்டனையை விட இம்மையின் தண்டனை மிக இலகுவாகும். ஆகவே, ஐந்தாவது சத்தியம் செய்யும் முன்பாக நன்கு யோசித்துக்கொள்! நீ செய்யும் இந்த ஐந்தாவது சத்தியம் உம்மீது அல்லாஹ்வின் தண்டனையை அவசியமாக்கிவிடும்என்று கூறி எச்சரித்தார்கள்.

அப்போது, அப்பெண்மணி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னுடைய இந்த நிலைகண்டு என் சமூகத்தினர் ஒருபோதும் என்னை கேவலமாக கருதமாட்டார்கள்  என்று கூறியவாறு ஐந்தாவது முறை சத்தியம் செய்தாள்.

பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இருவரின் விவாக ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்கள்.

பிறக்கும் குழந்தைக்கும் ஹிலாலுக்கும் எந்த உறவும் இல்லை என்று கூறினார்கள்.

மேலும்,ஹிலாலைப்போன்று குழந்தை பிறந்தால் அது ஹிலாலுக்கு பிறந்த குழந்தை தான் என ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.

மேலும், இன்னின்ன (அருவருப்பான) முறையில் பிறந்தால் அந்நிய ஆடவனுடன் உறவாடிய காரணத்தால் அவனுக்கு பிறந்த குழந்தை என ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்  என்றும் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஆனால், அவளுக்கு பிறந்த குழந்தை அல்லாஹ்வின் தூதர் சொன்ன அருவருப்பான தோற்றத்துடன் பிறந்ததாக இருந்ததை நாங்கள் கண்டோம் என அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகின்றார்கள்.

நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:7, பக்கம்:126-128., தஃப்ஸீர் அல் மள்ஹரீ, பாகம்:6, பக்கம்:343,344. மற்றும் ஸிஹாஹ் ஸித்தா அனைத்திலும் லிஆன் பாடத்தில்.)

அல்லாஹ்வின் விஷயத்தில் ஹிலால் (ரலி) அவர்கள் கொண்டிருந்த பேணிக்கை அவர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பையும் நெருக்கத்தையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பெற்றுத் தந்தது.

ஆனால், நம்மில் பலரும் மனம் போன போக்கில் வாழ்ந்து விட்டு நம்மை செல்வமும், செல்வாக்கும் பெற்றெடுத்த உறவுகளும் காப்பாற்று வார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

நிழலுக்கும் நிஜத்திற்கும் உண்டான உண்மையான இடைவெளியை மேற்கூறிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.


2.       அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், சுயமரியாதையும், பெருந்தன்மையும் கொடைத்தன்மையும் இயற்கையாகவே இறைவனால் வழங்கப்பட்டவர்கள்.

உலகில் நடமாடும் போதே சுவனவாசிகளில் ஒருவராக நடமாடும் அரும் பெரும் பாக்யத்திற்கு சொந்தமானவர்கள்.

அல்லாஹ்வின் தூதரின் மீதும், அவர்தம் குடும்பத்தார் மீதும், ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மீதும் அளப்பெரும் பாசமும் நேசமும் கொண்டிருந்தவர்கள்.

இவர்கள் வசதியாய் வாழும் காலங்களில் இவரின் பொருளாதாரத்தின் மூலம் பயன் அடையாத ஒருவர் கூட இல்லை என கூறும் அளவிற்கு இவர்களின் கொடைத்தன்மையால் அரவணைத்தார்கள்.

பத்ர் யுத்த மேகம் சூழ்ந்திருந்த இக்கட்டான தருணம் அது. எல்லா நிலைகளிலும் முஸ்லிம்கள் மிகவும் பலகீனமாக இருந்த நேரமும் கூட.

இந்த பத்ர் யுத்தம் மாபெரும் வெற்றியை ஈட்டுமானால், அந்த வெற்றிக்காக அரும்பாடு படுகின்ற ஒவ்வொரு வீரர்களுக்கும் சுமார் 400 திர்ஹம் தாம் வழங்கப்போவதாக நேர்ச்சையும் செய்து கொண்டார்.

அல்லாஹ் அந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வரலாறு காணாத வெற்றியை நல்கினான்.

அவரும் அந்த யுத்தத்தில் கலந்து கொண்டு கடுமையாக இஸ்லாமிய வெற்றிக்காக போராடினார்.

அவரின் குடும்பத்தில் இருந்து அவரோடு அவரது சகோதரரும் கலந்து கொண்டு கடுமையாக போராடி ஷஹீத் எனும் வீரமரணம் எய்தப் பெற்றார்.

மதீனா நகரெங்கும் வெற்றியின் பிரதிபலிப்பாக மக்களின் முகங்களில் புன்னகை நிரம்பி பிரகாசித்தது.

ஆனால், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மாத்திரம் ஆழ்ந்த சிந்தனையில் வீற்றிருந்தார்கள்.

வெற்றியை விரும்பியவரல்லவா அவர்? ஊர் முழுக்க மகிழ்ச்சியை பங்கு போட்டுக் கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தனியாக ஏன்? ஆழ்ந்த சிந்தனையில்...

அல்லாஹ்விற்காக அவர்கள் செய்த நேர்ச்சை ஞாபகம் வந்தது. உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்றாலும், தாமதிக்காது கொடுத்து விட வேண்டும் அதுவும் வெற்றிக் களிப்பில் இருக்கிற போதே! என்கிற எண்ணம் மேலோங்கவே ஆழ்ந்த சிந்தனையில் அவர் மூழ்கியிருந்தார்.

உடனடியாக கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்த அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அதற்கான அடுத்த முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இஷாத்தொழுகையை முடித்து விட்டு பணமுடிப்பை எடுத்துக் கொண்டு பத்ரியீன்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற அவர்கள் 400 திர்ஹமை கையில் கொடுத்து விட்டு, அதற்கான காரணத்தையும் விவரித்தார்கள்.

அவர்கள் கடைசியாக கொடுத்து முடிக்கும் போது சுபுஹ் தொழுகைக்கான பாங்கு அழைப்பை கேட்கின்றார்கள்.

மஸ்ஜிதுன் நபவீயிற்கு சென்று உளூ செய்து, முன் சுன்னத் தொழுது முடித்து விட்டு ஃபர்ளு தொழுகைக்காக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

தன் மனதில் இருந்த பாரத்தை (எப்படி இந்த நேர்ச்சையை நிறைவேற்றப் போகிறோமோ என்ற கவலையை) இறக்கி வைத்து விட்ட திருப்தியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.

இகாமத் சப்தம் அவரின் சிந்தனையை மாற்றியது. அணியில் நின்றார். தொழுதார். தொழுது முடித்ததும் அல்லாஹ்விற்கு தம் நன்றியை உரித்தாக்கினார்கள் கண்ணீர் மல்க.

அப்துர்ரஹ்மான் எங்கே? தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கேட்டது இது தான்.

இதோ நான் இங்கிருக்கின்றேன் என்று எழுந்தார் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள்.

தம்மை நோக்கி வருமாறு பணித்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், முகமலர்ச்சியோடு அப்துர்ரஹ்மான் அவர்களை நோக்கிவாறு “என்னருமைத்தோழரே! இப்போது என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். அல்லாஹ் உமக்கு தன் புறத்திலிருந்து ஸலாம் கூறினானாம்!

மேலும், நேற்றிரவும், இன்று அதிகாலையும் நீங்கள் பத்ர் வீரர்களுக்கு வழங்கிய அந்த அழகிய அன்பளிப்பை அவன் பொருந்திக் கொண்டான்.

அதற்குச் சான்றாக உங்களுக்கு “வகீலுல்லாஹி வரஸூலிஹி  எனும் சிறப்பு கௌரவத்தை வழங்கியுள்ளான். மேலும், நீங்கள் விரும்பிய அளவுக்கு செல்வத்தை சேர்த்து வைக்க அனுமதி வழங்கியுள்ளான்.

மேலும், உங்களின் பொருள் வளமாகுவதையும், நீங்கள் சுவனம் செல்வதையும் அவன் உறுதி செய்துவிட்டான்  என்று கூறினார்கள்.

                                    (நூல்: நுஜ்ஹத்துல் மஜாலிஸ்)

மேற்கூறிய இந்த வரலாற்றுச் செய்தியை பொறுத்த வரையில் பல்வேறு கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவுகின்றது.

அல்லாமா தஹபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துர்ரஹ்மான இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரணிக்கும் முன் “பத்ர் ஸஹாபிகள் ஒவ்வொருவருக்கும் 400 திர்ஹம் வழங்க வேண்டும்  என வஸிய்யத் செய்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் அது நிறைவேற்றப்பட்டது. உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் அதிலிருந்து வழங்கப்பட்டது.

                                   (நூல்: ஸியர் அஃலா மின் நுபலா)

இதை அடிப்படையாகக் கொண்டு அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் மரணத்திற்கு பின்னர் தான் பத்ர் வீரர்களுக்கு வழங்கப்பட்டது என சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறியுள்ளனர்.

நாம் இந்த சம்பவத்தை கொண்டு வந்ததின் நோக்கம் எப்போது கொடுக்கப்பட்டதில் தான் பிரச்சனை இருக்கிறதே தவிர, சம்பவத்தில் இல்லை என்பதற்காகத்தான்.

ஹிஜ்ரத் செய்து வந்த இரண்டே ஆண்டுகளில் அவர்கள் தான் சம்பாதித்த அத்துணை செல்வத்தையும் அல்லாஹ்விற்காக கொடுக்க முன் வந்த போது, தொட்டதெல்லாம் துலங்குகிற அல்லாஹ்வின் வணிகராக வரலாற்றில் வலம் வரச்செய்தான் வல்ல ரஹ்மான்.


3.       ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள்.


ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள், நபிகளாரின் தோழர்களில் குறிப்பிடும் படியான வாழ்விற்கும், புகழுக்குரிய வாழ்விற்கும் சொந்தக்காரர் ஆவார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று ஒன்று மிகப் பிரபல்யமானது. ஒரு மாகாணத்தின் ஆளுநராக இருந்த போதும் மதீனாவில் தமக்கென சொந்த வீடு கூட இல்லாத நிலையில் தம் வாழ்க்கையை வாடகை வீட்டில் கழித்தவர் ஸயீத் (ரலி) அவர்கள்.

ஒரு முறை ஹிம்ஸ் –ன் முக்கிய பிரதிநிதிகள் ஸயீத் (ரலி) அவர்களைச் சந்திக்க வருகை புரிந்திருந்தனர்.
வந்தவர்கள் ஒரு பணமுடிப்பை ஸயீத் (ரலி) அவர்களின் கையில் கொடுத்து இதை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்  என்றனர்.

இதைக் கேட்டதும் ஸயீத் (ரலி) அவர்கள் “இன்னா லில்லாஹி.. வஇன்னா இலைஹி ராஜிவூன்... என்றார்கள்.

இந்த வார்த்தையை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஸயீத் (ரலி) அவர்களின் துணைவியார் இங்கே நடந்த சம்பவங்கள் தெரியாததால் என்ன கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்களா? என்று கேட்டார்கள்.

இல்லை, இல்லை அதை விட மிகப் பெரிய சோதனை ஒன்று என்னை பீடித்துள்ளது என்று ஸயீத் (ரலி) கூறினார்கள்.

யாராவது பெரும் படையுடன் முஸ்லிம்களை தாக்க வருகை தந்து விட்டார்களா? என அவர்களின் துணைவியார் கேட்க, இல்லை இல்லை அதை விட பெரும் சோதனை என்றார்கள்.

அப்படி என்னதான் பெரும் சோதனை உங்களை வந்தடைந்து விட்டது? கொஞ்சம் சொல்லுங்களேன் இது அவர்களின் துணைவியார்.

நான் உன்னிடம் சொன்னால் அந்த விஷயத்தில் எனக்கு உறுதுணையாக இருப்பாய் என்று நீ உறுதி அளித்தால் நான் உனக்கு சொல்கின்றேன்  இது ஸயீத் (ரலி) அவர்கள்.

உறுதியளித்ததும், ஸயீத் (ரலி) அவர்கள் சம்பவத்தை கூறினார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களைப் பார்க்க ஹிம்ஸ் மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் மதீனா வந்திருந்த சமயம் அது. பல்வேறு விஷயங்களை பரிமாறிய பின்னர் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் ஏழைகளின் பட்டியலை தாருங்கள் நாம் அவர்களின் துயர் துடைத்திட பண உதவி அளிக்கின்றோம்  என்றார்கள்.

அங்கேயே பட்டியலை தயார் செய்து உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒப்படைத்தனர் ஹிம்ஸின் பிரதிநிதிகள்.

பட்டியலின் முதல் பெயரை உமர் (ரலி) அவர்கள் வாசிக்கின்றார்கள் ஸயீத் இப்னு ஆமிர் என்றிருந்தது. யார் இந்த ஸயீத் என்று கலீஃபா வினவ, அதுவா நம்ம ஹிம்ஸின் ஆளுநர் ஸயீத் (ரலி) அவர்கள் தான்  என்று பிரதிநிதிகள் கூற உமர் (ரலி) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.

பின்பு ஒரு பண முடிப்பை கொடுத்து இதை உங்கள் ஆளுநர் ஸயீத் (ரலி) அவர்களிடம் கலீஃபா உமர் தந்தார் என்று சொல்லி கொடுத்து விடுங்கள் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அந்த பணத்தை தான் இப்போது பெரும் சோதனை என்று சொல்லி தம் மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

பின்பு ஹிம்ஸ் பகுதியின் ஏழைகளை அழைத்து அந்த பணத்தை அப்போதே பங்கு வைத்து கொடுத்து விட்டார்கள்.

கொஞ்சம் நமக்கு எடுத்து விட்டு கொடுத்திருக்கலாமே என்று அவர்களின் துணைவியார் கூறிய போது நம் தேவைகளை நிறைவேற்ற அல்லாஹ்வே எப்போதும் போதுமானவன். என்று ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

                 (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:156)

அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் வாயிலாக முஸ்லிம் ஷரீஃபில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸ் “நபி {ஸல்} அவர்களில் தோழர்களில் சிலரிடத்தில் பைஅத் ஒப்பந்தம் வாங்கும் போது “மக்களிடம் எதையும் கேட்க வேண்டாம்  என்பதையும் சேர்த்தே ஒப்பந்தம் வாங்கினார்கள்.

மேலும், அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் வாயிலாக முஸ்னத் அஹ்மதின் ஓர் அறிவிப்பில் “நபித்தோழர்களில் சிலர் சாட்டை போன்றவை தம் கையை விட்டு கீழே விழுந்தால் கூட பிறரிடம் அதை எடுத்து தாருங்கள் என்று கூட கேட்க மாட்டார்கள்.


4.ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி)

எவர் ஆஸிம் இப்னு ஸாபித் அவர்களின் தலையை கொய்து வந்து கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு நூறு ஒட்டகைகளும், அவர் கேட்கிற பணமும் தரப்படும்இந்த அறிவிப்பை கேட்டதிலிருந்து அரபுலக குரைஷி இளைஞர்களுக்கு கண்ணில் உறக்கமே இல்லை.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தலைக்கு வைத்த விலைக்குப் பிறகு ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்களுக்கு தான் இந்த விலை என மக்காவில் பிரபல்யமாக பேசப்பட்டது.

விலை வைக்கிற அளவுக்கு அவர் என்ன தான் செய்தார்? மக்காவில் பிரபல்யமான ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த தலைமுறையையும் உஹதில் காலி செய்தார் ஆஸிம் (ரலி) அவர்கள்.

அந்த குடும்பத்தின் சுலாஃபா பிந்த் ஸஅத் என்கிற பெண்மணி “என் குடும்பத்தை கூண்டோடு காலிசெய்த ஆஸிமின் மண்டை ஓட்டில் மதுவருந்தாமல் நான் ஓய மாட்டேன்  என சபதம் செய்திருந்தாள்.

ஆம்! உஹதில் அவரின் கணவர் தல்ஹா என்பவரையும், அவர்களின் இரண்டு மகன்கள் ஹாரிஸ் இப்னு தல்ஹா, மற்றும் மஸாஃபிஉ இப்னு தல்ஹா ஆகியோரையும் அம்பெய்து வீழ்த்தியிருந்தார்கள்.

குற்றுயிராய் வீழ்ந்து கிடந்த மாஸாஃபிஉ –வை தனது மடியில் கிடத்தி  உங்களைக் கொன்றது யார்? என சுலாஃபா கேட்ட போது, என்னை அம்பெய்து வீழ்த்தியவர் என்னை கீழே கிடத்தி என் அருகாமையில் நின்று கொண்டு நான் தான் ஆஸிம் இப்னு ஸாபித் இப்னு அபில் அக்லஹ் என கர்ஜித்தார். அவர் தான் என் சகோதரனையும், என் தந்தையையும் கொலை செய்தார்  என்று சொல்லி விட்டு இறந்து போனான்.

என்றாலும் சுலாஃபா வுக்கு ஒரேயொரு ஆறுதல் இருந்தது உஹதில் குஃப்ஃபார்களின் கொடியை ஏந்தி வந்த அவரின் இன்னொரு மகன் உஸ்மான் இப்னு தல்ஹா உயிரோடி இருந்தார்.
 

ஆஸிம் (ரலி) அவர்களின் முடியை கூட எளிதில் நெருங்கிட முடியாது என்பதை அறிந்திருந்ததால் தான் இவ்வளவு விளம்பரம், இவ்வளவு வெகுமதிகள்.

இந்த சபதம் ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்களுக்கும் தெரியும்! ஆனாலும் அவர்கள் அதை அலட்டிக் கொள்ளவே இல்லை.

ஏனென்றால், உலகமே திரண்டு வந்தாலும் அல்லாஹ் விதித்ததை தவிர வேறெதுவும் நிகழ்ந்து விடாது என்பதில் ஆஸிம் (ரலி) அவர்கள் மிக உறுதியாய் இருந்தார்கள்.

இந்த தருணத்தில் தான் அல்லாஹ்வின் நாட்டம் அது நடந்தது.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஸஃபர் மாதம், அளல், காரா எனும் இரு குலத்தார்கள் மாநபி {ஸல்} அவர்களைச் சந்தித்து எங்களிடையே இஸ்லாம் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது.

எங்களில் அநேகம் பேர் முஸ்லிம்களாக இருக்கின்றனர், ஆகவே எங்களுக்கு சன்மார்க்கத்தின் விளக்கத்தை போதிப்பதற்கும், எங்களுக்கு வழிகாட்டவும் எங்களோடு சில நபித்தோழர்களை அனுப்பித்தர வேண்டுமென கோரினர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நபி {ஸல்} அவர்கள் ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட நபித்தோழர்களின் குழுவொன்றை அனுப்பி வைத்தார்கள்.

                           (நூல்: புகாரி, பாடம், பாபு ஃகஜ்வதிர் ரஜீஉ)

மற்ற அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் அல் ஃகனமீ என்பவர்களின் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவை நபி {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

1.மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் (ரலி) 2.ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) 3.ஸைத் இப்னு தஸினா (ரலி) 4.காலித் இப்னு புகைர் (ரலி) 5.குபைப் இப்னு அதீ (ரலி) 6.அப்துல்லாஹ் இப்னு தாரிக் (ரலி) 7,8,9,10.ஆகியோர் பெயர் அறியப்பட வில்லை.

இவர்கள் இக்கூட்டத்தாருக்கு சன்மார்க்க நெறிகளை போதிப்பதுடன், மக்கா தலைவர்களின் நிலையை தெரிந்து கொண்டு உளவு தகவல் அனுப்ப வேண்டும் எனும் நோக்கத்துடன் நபிகளார் {ஸல்} அவர்களால் அனுப்பப்படுகின்றார்கள்.

இவர்கள் புறப்பட்டு ஹுதைல் எனும் அரபு பூர்வீக குடிமக்கள் வசித்து வரும் ரஜீஉ எனும் பகுதியை அடைந்தனர். (ரஜீஉ எனும் இடம் மக்காவிற்கும் ஹிஜாஸிற்கும் மத்தியில் இருக்கின்றது)

இந்த தகவல் ஹுதைல் குலத்தாரின் பனூ லிஹ்யான் கூட்டத்தினருக்கு தெரிந்து விடுகின்றது. இவர்கள் நபித்தோழர்களின் குழுவினரை பிடித்து குறைஷிகளிடம் கொடுத்தால் பணம் சம்பாதிக்கலாம் எனும் ஆசையில் தேடிப் பிடித்து சூழ்ந்து கொண்டனர்.

ஏதோ நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்த நபித்தோழர்கள் அருகே இருந்த ஃபத்ஃபத் எனும் மலைக்குன்றில் ஒளிந்து கொண்டனர்.

கீழிருந்த பனூ லிஹ்யான் கூட்டத்தினர் குன்றில் ஒளிந்து கொண்டிருந்த நபித்தோழர்களை நோக்கி “கீழிறங்கி வந்து விடுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் உங்களை கொல்ல மாட்டோம். நாங்கள் உங்களை பிடித்துச் சென்று மக்காவாசிகளிடம் விலை பேசி விற்றுவிடத்தான் இங்கு வந்திருக்கின்றோம். எங்களை நம்புங்கள். கீழே வந்து விடுங்கள் என்றார்கள்.

அதற்கு ஆஸிம் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் “நான் இறை மறுப்பாளர்களின் வாக்குறுதியை நம்பி அவர்களின் பாதுகாப்பில் ஒரு போதும் இறங்கிச் செல்ல மாட்டேன்! இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்கு தெரிவித்து விடு  என்று கூறினார்கள்.

அப்போது, அக்கூட்டத்தினர் நபித்தோழர்கள் மீது அம்பெய்து தாக்குதல் நடத்தினர். எதிர் பாராத இத்தாக்குதலில் ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழு பேர் ஷஹீதாக்கப்பட்டனர்.

மீதமிருந்த மூவரும் அவர்களின் வாக்குறுதியை நம்பி கீழிறங்கி வந்தனர் அவர்களில் குபைப் (ரலி), ஜைத் இப்னு தஸினா (ரலி) ஆகியோரை மக்காவில் கொண்டு விற்று விட்டனர்.

கிழிறங்கி வந்த மூன்றாமவரையும் அவர்கள் கொன்று விட்டனர். மொத்தம் 8 பேர் ஷஹீதாக்கப் பட்டார்கள்.

பனூ லிஹ்யான் கூட்டத்தில் ஒருவன் ஆஸிம் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஷஹீதாகி கிடப்பதை கண்டு ஆனந்தப்பட்டான்.

ஆம்! சுலாஃபா வின் சபதம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவரின் தலையை கொய்து கொண்டு போய் சுலாஃபா விடம் தந்தால் கேட்கும் பணமும் 100 ஒட்டகையும் பரிசாக கிடைக்கும் என்ற ஆசையால் உந்தப்பட்டு சில நண்பர்களை அழைத்துக் கொண்டு ஆஸிம் (ரலி) அவர்களின் தலையை வெட்டி எடுக்க அருகே சென்றான்.

அங்கு தான் ஆச்சர்யம் காத்திருந்தது. அவனும் நண்பர்களும் ஆஸிம் (ரலி) அவர்களின் அருகே சென்றதும் தேனீ போன்ற வண்டு கூட்டம் ஒன்று அவர்களின் புனித உடலை நெருங்க முடியாத படி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் அருகே செல்லும் போதெல்லாம் அவர்களை விரட்டியடித்தது.

எப்படியும் இரவில் வண்டுகள் சென்று விடும். இரவின் பிற்பகுதியில் சென்று எப்படியாவது தலையை கொய்து, பரிசில் பெற்று விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

இதற்குள் இந்தச் செய்தி சுலாஃபாவின் காதுகளுக்கு எட்ட குறைஷி இளைஞர்கள் சிலரை அனுப்பி ஆஸிம் (ரலி) அவர்களின் தலையை கொய்து வாருங்கள். என்னுடைய சபதத்தை நிறைவேற்றும் நாள் நெருங்கி விட்டது என ஆர்ப்பரித்தாள்.

அவர்களும் வந்து சேர்ந்தனர். சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லவா வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ், பெரும் மழையை பொழியச் செய்தான்.

இரவு முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. அந்த இடம் முழுக்க நீரால் வழிந்தோடியது.

மழை நின்றதும் காலையில் பனூ லிஹ்யான் கூட்டத்தினரும், குறைஷி இளைஞர்களும் தேடிப்பார்த்தனர் உடலை மழை நீர் அடித்துச் சென்றதை அறிந்து ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.

மறுநாள் மக்காவிலும், மதீனாவிலும் இதைத் தான் பிரபல்யமாக மக்கள் பேசிக்கொண்டனர்.

இந்தச் செய்தியை கேள்வி பட்ட உமர் (ரலி) அவர்கள் “ஆஸிம் (ரலி) அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் அல்லாஹ்விடம் அதிகமதிகம் இப்படிக் கேட்பார்களாம் “யாஅல்லாஹ் நான் எந்த ஒரு இறை மறுப்பாளனையும் தொட மாட்டேன். என் உடலையும் எந்த ஒரு இறை மறுப்பாளனையும் தொடும் படிச் செய்து விடாதே  என்று..

இதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் “அவரின் இந்த வேண்டுதலையும், உறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றினான்.மேலும், “அல்லாஹ் முஃமினான அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாப்பது போன்று, அவரின் மரணத்திற்கு பின்னரும் பாதுகாக்கின்றான்.  என்று கூறினார்கள்.

ஃபத்ஹ் மக்காவில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நேர்மையை கண்டு வியந்து போன சுலாஃபா பிந்த் ஸஅத், தம் மகன் உஸ்மான் இப்னு தல்ஹா வோடு சேர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

நூல்: அல் மஃகாஸீ லில் வாகிதீ, பக்கம்:354-357, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:155,156., ஜாதுல் மஆத், அல் இஸாபா, அல் இஸ்தீஆப்.)
5.மர்ஸத் இப்னு அபூ மர்ஸத் அல் ஃகனவீ (ரலி)

இவர்களும் ஆஸிம் (ரலி) அவர்களோடு ஷஹீதாக்கப் பட்டவர்களில் ஒருவர். பத்ர் மற்றும் உஹத் யுத்தகளங்களில் கலந்து கொண்ட தீரர்களில் ஒருவர்.

இவர் கைதிகளாகவும், பிணையாகவும் பிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வீரராக அன்றைய அரபுலகத்தில் அறியப்பட்டார்கள்.

அநியாயமாக பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற கைதிகளை எதிரிகளின் இடத்திற்கே சென்று அசாத்திய தைரியத்தோடு மீட்டு வரும் தைரியசாலி. அதற்காக சில திர்ஹத்தை சம்பந்த பட்டவர்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.

ஒரு நாள் அவர்கள் ஒருவரை மீட்டெடுக்க இரவு நேரத்தில் ஓரிடத்தில் பதுங்கியிருந்த போது அவர்களின் ஜாஹிலிய்யா காலத்து காதலி அனாக் என்பவளைச் சந்திக்க நேரிடுகின்றது.

இவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அன்று தான் அவளைச் சந்திக்கின்றார்கள். தற்போது அவள் தகாத செயல் செய்யும் விபச்சாரியாக மாறிவிட்டிருந்தாள்.

அந்த இரவிலும் இவரை அடையாளம் கண்டு கொண்ட அனாக் இன்றிரவு தம்மோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றாள்.

அனாக்! இஸ்லாம் விபச்சாரத்தை தடை செய்திருக்கின்றது அது மானங்கெட்ட செயல் என்றும், அதன் அருகே கூட நெருங்கக் கூடாது எனவும் தடை செய்திருக்கின்றது. ஆகவே தூர விலகிச் செல் என்று கூறி விரட்டி விட்டார்கள் மர்ஸத் (ரலி) அவர்கள்.

 நம்மை காசு பணம் கொடுத்து அழைக்க ஆயிரம் பேர் காத்து கிடக்க, நாம் வலிய அழைத்தும் வராமல் நம்மை அலட்சியம் செய்து விரட்டி விடுகிறாரே எனும் கோபத்தில் அவரை அவர் எந்த இடத்தில் மறைந்து கைதியை தூக்கிச் செல்ல வந்திருந்தாரோ அவர்களின் பெயர் கூறி அழைத்து இதோ மர்ஸத் உங்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு கைதியை களவாடிச் செல்ல வந்திருக்கின்றார்  என்று கூறி  சிக்க வைத்தாள்.

அவர்கள் துரத்தி வர மர்ஸத் (ரலி) அவர்கள் அங்கிருந்து தப்பி, அருகே இருந்த ஒரு குறுகலான மலைக்குன்றில் ஒளிந்து கொண்டார்கள்.

அவரைத் தேடி வந்த அந்த நபர்கள் மர்ஸத் (ரலி) அவர்கள் ஒளிந்திருந்த அந்த மலைக்குன்றின் மீது வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சிறுநீர் கழித்தனர்.

மலைக்குன்றின் பின் புறம் ஒளிந்திருந்த மர்ஸத் (ரலி) அவர்களின் தலை முழுக்க சிறுநீர் நன்றாக நனைத்து விட்டிருந்தது.

துரத்தி வந்தவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி வந்து நடந்த சம்பவத்தை நபிகளாரிடம் விளக்கிக் கூறி தாம் அனாக்கை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னார்கள்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் மர்ஸத் (ரலி) அவர்கள் கேட்க, அப்போதும் நபிகளார் {ஸல்} அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

பின்னர் அண்ணலாரின் சபையிலிருந்து மர்ஸத் (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.

அவர்கள் சென்ற பின்னர், அல்லாஹ் நூர் அத்தியாயத்தின் 3-ஆம்  வசனத்தை இறக்கியருளினான்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், மர்ஸத் (ரலி) அவர்களை அழைத்து வரச் சொல்லி “விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண்ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணையோ தவிர வேறெவரையும் திருமணம் செய்ய வேண்டாம்.

விபச்சாரம் செய்யும் பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இணைவைப்பாளனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடுக்கப்பட்டிருக்கின்றது  எனும் (அல்குர்ஆன்:24:3) வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

பின்பு அனாக்கை நீர் திருமணம் செய்ய வேண்டாம்  என்று கூறினார்கள்.

(நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:7, பக்கம்:116., அல் இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:382,383., அபூ தாவூத், கிதாபுன் நிகாஹ்)

மனம் வெறுக்கின்ற ஒரு பாவத்தை அல்லாஹ் தடுத்திருக்கின்றான் என்பதற்காக விட்டு விலகி, தனிமையில் யாரும் இல்லை என்பதற்காக அதைச் செய்திடாமல் பொறுமையை மேற்கொண்டு, அதை சபையில் எல்லோரின் முன்னிலையிலும் வெளிப்படுத்திக் கூறிய அந்த நல் உள்ளத்திற்கு அல்லாஹ் நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையேயான வேறுபாட்டை இறைவசனத்தை இறக்கியருளி நிவர்த்தி செய்தான்.

மாற்றாருடன் ஓடிப்போகும் நம் காலத்து இளைஞர்களும், இளைஞிகளும் சிந்தித்து உணர வேண்டிய ஓர் பாடத்தை மேற்கூறிய வரலாறு உணர்த்துகின்றது.

உருகி உருகித் தீர்ந்து போகும் வரை வெளிச்சத்தை தரும் மெழுகும், எரிந்து எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து மணத்தை கமழச் செய்யும் ஊதுவத்தியும் கூட நமக்கு வாழ்க்கையின் நிஜம் எது? நிழல் எது? என கற்றுத்தருகிறது.

ஆனால், நாம் தான் பாடம் பெற மறுக்கின்றோம்! புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.

சத்திய தோழர்களான ஸஹாபாக்களின் மேற்கூறிய வரலாறுகள் வாழ்க்கைக்கான பல பாடங்களை நம் மனக்கண் முன்னால் கொண்டு வந்து தந்திருக்கின்றது.

நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கி மன நிறைவான மகிழ்ச்சியான வாழ்வு வாழ வல்ல ரஹ்மான் உங்களுக்கும், எனக்கும் துணை புரிவானாக!

        ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

                    வஸ்ஸலாம்.




    














 



2 comments: