தலைமைத்துவம்
எனும் முள் கிரீடம்!
ஆசையில்லாத மனிதர்கள்
கிடையாது. ஒவ்வொருவருக்கும் நிச்சயம்
ஓர் ஆசை இருக்கிறது.
அந்த ஆசைகளைப்
பொறுத்து அதை அடையும்
வழிகளும் அதை நோக்கிய
பயணமும் வேறுபடும்.
உலகில் ஆசைப்பட்ட
எல்லோரும் அதை பெற்றுக்
கொண்டதாகவோ, ஆசைப்பட்ட அனைத்தையும்
அடைந்து கொண்டதாகவோ வரலாறு
கிடையாது.
ஆனாலும், பணக்காரன்,
ஏழை,
படித்தவன், பாமரன் முதலாளி,
தொழிலாளி என எல்லோருக்கும்
பொதுவான ஓர் ஆசை
இருக்குமானால் அது தலைமைத்துவம்
எனும் பதவியின் மீதான
ஆசைதான்.
எனவே தான்
ஆசைகளை நோக்கிய பயணத்தை
தொடர்கிற ஓர் இறைநம்பிக்கையாளனை அழைத்து இஸ்லாம்
பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறது.
قُلْ
كُلٌّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَى
سَبِيلًا
நபியே! அவர்களிடம்
நீர் கூறுவீராக! ஒவ்வொருவரும்
தத்தமது வழிமுறைப்படி (ஆசைப்படி)
செயல்படுகின்றனர்.”
وَلَا
تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ
அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ் உங்களில்
சிலருக்கு சிலரை விட
எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய
நீங்கள் ஆசை கொள்ள
வேண்டாம்.”
وَلِكُلٍّ
وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
“ஒவ்வொருவரும் ஒரு
திசையை (ஆசையை) நோக்கி
பயணிக்கின்றனர். நீங்கள் நன்மையான
ஆசையை நோக்கி பயணிப்பதில்
ஒவ்வொருவரும் முன்னேறிச் செல்லுங்கள்.”
(اِحْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ, وَاسْتَعِنْ
بِاَللَّهِ, وَلَا تَعْجَزْ) قَالَ رَسُولُ
اَللَّهِ صلى الله عليه
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “உமக்கு பயன்
தருகிற அத்தனைக்கும் நீ
ஆசைப்படு! அதை அடைந்து கொள்ள அல்லாஹ்விடம்
உதவி கேள்!
அதனை அடையும் வழிகளில்
சோர்வடைந்து விட வேண்டாம்.”
மேன்மையான ஆசைகளால்
தான் ஒருவருக்கு சிறப்பான
வாழ்க்கை அமையப் பெறுகிறது.
அந்த வாழ்க்கையை
ஒருவர் அனுபவிக்கிற போது
தான் ஆனந்தம் பிறக்கிறது.
அந்த ஆனந்தத்தை ஒருவர்
உணர்கிற போது தான்
வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது.
எனவே, தான்
ஆசைப்படுவதை அங்கீகரிக்கிற இஸ்லாம்
அதற்கான எல்லைகளையும், நியதிகளையும்
வகுத்திருக்கின்றது.
ஓர் இறைநம்பிக்கையாளனை நோக்கி அத்தனைக்கும்
ஆசைப்படச் சொன்ன இஸ்லாம்
தலைமைத்துவத்தின் மீதான
ஆசையைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.
ஏனெனில், அதன்
மூலம் ஏற்படுகிற நன்மைகள்
நீளமானவை என்றால் அதன்
மூலம் ஏற்படுகிற தீமைகள்
அகலமானவை, மிகவும் ஆழமானவை.
عن أبي موسى الأشعري
- رضي الله عنه - قال: دخلت على النبي - صلى الله عليه وسلم - أنا ورجلان من بني
عمي، فقال أحدهما: يا رسول الله، أمرنا على بعض ما ولاك الله - عز وجل -، وقال
الآخر مثل ذلك، فقال: «إنا
والله لا نولي هذا العمل أحدا سأله، أو أحدا حرص عليه»
. متفق عليه
அபூ மூஸல்
அஷ்அரீ (ரலி) அவர்கள்
கூறுகின்றார்கள்: “ஒரு நாள்
நானும் என்னுடைய சிறிய
தந்தையின் புதல்வர்கள் இருவரும்
சேர்ந்து அண்ணலாரைச் சந்திக்கச்
சென்றோம்.
அப்போது என்னுடைய
சகோதரர்கள் இருவரும் “அல்லாஹ்வின்
தூதரே! அல்லாஹ் உங்களை
பொறுப்பாக்கி இருக்கிற காரியங்களில்
ஏதாவது ஒன்றிற்கு எங்களை
தலைவர்களாக நியமியுங்களேன்” என்று
வேண்டினார்கள்.
அப்போது, மாநபி
{ஸல்}
அவர்கள் ”அல்லாஹ்வின் மீது
ஆணையிட்டுக் கூறுகின்றேன்! நிச்சயமாக,
நாம் பொதுமக்களோடு தொடர்புடைய
விவகாரங்களில் தலைமைப் பொறுப்பைக்
கேட்பவருக்கோ, அதன் மீது
ஆசை கொள்பவருக்கோ தர
மாட்டோம்” என்று கண்டிப்பாக
கூறிவிட்டார்கள்.
ஆனால், இன்று
சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தலைமைப்
பொறுப்பிற்கு வருவதற்கே அதிகம்
ஆசைப்படுகின்றனர்.
அதனால் தான்
இன்று பல இடங்களில்
பள்ளிவாசல் நிர்வாகிகளில் தேர்வு
கூட பலத்த போலிஸ்
பாதுகாப்போடு நடைபெறுகிறது.
இயக்கங்களின் பெருக்கமும்
கூட முஸ்லிம்களின் தலைமைத்துவத்தின் மீதான ஆசையை
வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கிறது.
ஆனால், சத்திய
மேன்மக்களான அந்த ஸஹாபாக்கள்
ஆட்சியாளர்களாய், அதிகாரிகளாய், தலைவர்களாய்
வலம் வருவதை வெறுத்தார்கள்.
மேலும், அது
தேடி வந்து அழைத்த
போதும் ஓடி, ஓடி
ஒளிந்தார்கள்.
أبوبكر ودفعه الخلافةَ عن نفسه:
وقد كان أبوبكر – وهو أرضى الناس عند
الله وعند رسوله وأجلّ الناس عند المؤمنين وأفضل الخلق بعد الأنبياء – يدفع عن
نفسه أمرَ الإمارة والخلافة دفعاً شديدًا، وحاول أن يدفعها إلى عمر، فقال لعمر
يومَ السقيفة: اُبْسُطْ يَدك نُبَايِعْك، فقال عمر: أنت أفضلُ مني، فقال: أنت أقوى
منّي، هنالك قال له: فإن قوتي لك مع فضلك.
قال
أبوبكر الصديق رضي الله عنه في خطبته أمام المهاجرين والأنصار يوم السقيفة: «وقد
رضيت لكم أحد هذين الرجلين يشير إلى عمر بن الخطاب وأبي عبيدة بن الجراح
فبَايِعُوا أَيَّهُما شئتم: «فوالله ما كِرِهْتُ من مقالته غيره»
أيها
الناس! إني شيخ كبير، فاستعملوا عليكم من هو أقوى مني على هذا الأمر وأضبط له
فضحكوا، وقالوا: لانفعل أنت صاحب رسول الله صلى الله عليه وسلم في المواطن، وأحق
بهذا الأمر. فقال: أما إذا أبيتم فأحسنوا طاعتي ومؤازرتي
..
طبقات ابن سعد (نقلاً عن «أبي بكر
الصديق»).
رواية ابن شهاب: «الرياض النضرة في
فضائل العشرة» للمحب الطبري.
مختصر الموافقة للزمخشري - «أبوبكر
الصديق» ص: 276
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்களின் மறைவுக்குப் பின்னர்
அடுத்த ஆட்சியாளரைத் தேர்வு
செய்ய வேண்டிய இக்கட்டான
தருவாயில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் போது அபூபக்ர்
(ரலி)
அவர்கள், உமர் (ரலி)
அவர்களை நோக்கி உமர்
அவர்களே! உங்கள் கையை
நீட்டுங்கள்! உங்களை தலைமைத்துவத்தில் அமர வைக்க
நான் பைஅத் செய்கிறேன்!”
என்றார்கள்.
அப்போது, உமர்
(ரலி)
அவர்கள் “அபூபக்ர் (ரலி)
அவர்களே! தலைமைத்துவத்திற்கு என்னை
விட நீங்களே மிகவும்
சிறந்தவர்கள்” என்றார்கள். அதற்கு
அபூபக்ர் (ரலி) அவர்கள்
”உமர் அவர்களே! என்னை
விட நீங்கள் தான்
அதிகம் தகுதியானவர்கள்” என்றார்கள்.
பின்னர் மக்கள்
முன் எழுந்து நின்ற
அபூபக்ர் (ரலி) அவர்கள்
“என்னை விட இந்த
இடத்திற்கு பொறுத்தமானவர்களாக உமர்
மற்றும் அபூ உபைதா
அல்ஜர்ராஹ் (ரலி – அன்ஹுமா)
ஆகிய இருவரை மற்றுமே
கருதுகிறேன்.”
ஆகவே, இந்த
உம்மத்தை வழி நடத்துவதற்கு
இந்த இருவரில் யாரை
வேண்டுமானாலும் தேர்வு செய்து
கொள்ளுங்கள்!” என்றார்கள்.
தொடர்ந்து, ”மக்களே!
நான் வயதானவன், என்னை
விட வலுவானவர்களை தலைவராக
நியமியுங்கள்!” என்றார்கள்.
இதைக் கேட்டதும்,
ஏனைய நபித்தோழர்கள் புன்னகைத்தவர்களாக
“ஒரு போதும் அப்படி
நாங்கள் செய்ய மாட்டோம்!
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் உயிரோடு இருக்கும்
காலத்தில் ஒவ்வொரு காரியத்திலும்
உங்களை முன்னிலை படுத்தி
இருப்பதை நாங்கள் அறிந்து
வைத்திருக்கிறோம்.
மேலும், தலைமைத்துவம்
விஷயத்தில் நீங்களே மிகப்
பொறுத்தமானவர்கள்!, ஆகவே, உங்களையே
நாங்கள் தேர்வு செய்கிறோம்”
என்று கூறி ஒருவர்
பின் ஒருவராக பைஅத்
செய்தார்கள்.
( நூல்: தபகாத்
இப்னு ஸஅத், அர்
ரியாளுன் நள்ரா ஃபீ
ஃபளாயிலுல் அஷ்ரா )
فكان عليّ يقول لطلحة: «اُبْسُطْ يَدَك يا طلحةُ لأبايعك»
ويقول له طلحة: «أنت أحقّ، فأنت أميرُ المؤمنين فابْسُطْ يدَك»
وعبد الله بن عمر بدوره عُرِضَتْ عليه
الإمامةُ فيمن ثُرِضَتْ عليهم عند مقتل سيدنا عثمان، فهَرَبَ منها، كما كان
يـهْرُبُ منها طلحةُ والزبيرُ وعليٌّ.
இது போன்றே
அலீ
(ரலி),
அப்தில்லாஹ் இப்னு உமர்
(ரலி),
தல்ஹா (ரலி), ஜுபைர்
(ரலி)
ஆகியோரும் தங்களை நோக்கி
தலைமைத்துவம் தேடி வந்த
போது வேண்டாம் என்று
விலகி நின்றார்கள்.
( நூல்: முக்தஸர் அத்
துஹ்ஃபத்துல் லி இஸ்னய்
அஷரிய்யா )
ஆனால், இன்றோ
பதவி ஆசையின் மீதான
மோகமும், பதவிக்கு வந்த
பின்னர் அதன் மூலம்
அவர்கள் போடுகிற ஆட்டமும்,
ஊழலும், அந்தப் பதவியைத்
தக்க வைக்க அவர்கள்
மேற்கொள்கிற பகீரதப் பிரயத்தனங்களும் தான் எத்தனை,
எத்தனை?
இந்த தலைப்பின்
கீழ் பயான் போட
முடிவு செய்த பின்னர்
சில வலைதளங்களையும், வலைப்பூக்களையும் தலைமைத்துவம் எனும்
தலைப்பின் கீழ் தேடிய
பொழுது ஜான் சி. மேக்ஸ்வெல்
எனும் எழுத்தாளன் எழுதிய
“The
360* Leadr” என்ற புத்தகத்தைப் பற்றிய
ஒரு சிறுகுறிப்பை ஒரு
வலைப்பதிவில் படிக்க நேரிட்டது.
அதில் ஒன்று
இதோ உங்களின் கவனத்திற்கு…
ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.
எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை."
எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!"
வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே
அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது.
மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது.
உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்! காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்..
வான் கோழி பணால்! உசரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று!
உச்சிக்குப்போவது அவ்வளவு பெரிதான விஷயமில்லை! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும்.
ஆனால், கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முடிவது தான்!
இந்தக் கதையின் மூலம் மேக்ஸ்வெல் சொல்ல வருவது இது தான் தலைமைத்துவம் என்கிற
பதவியின் மூலம் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் அரிதான ஒன்று.
ஏனெனில், ஒன்று ஆட்சியாளர் தவறிழைக்க நேரிடும்; அல்லது அந்த ஆட்சியாளரின்
கட்டளைகளை அம்மக்கள் புறக்கணிக்க நேரிடும்.
இரண்டில் எது நடந்தாலும் அது தலைமைத்துவத்திற்கு ஆபத்தே!
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய நிலப்பரப்புகள் விரிவடைந்து
கொண்டிருந்த அற்புதமான தருணமும் கூட!
அந்த நேரத்தில் அன்றைய பெரும் வல்லரசுகளான ரோம் மற்றும் பாரசீகப் படைகளுடன்
முஸ்லிம்கள் இரு வேறு திசைகளில் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
இன்றைய இராக்கின் முக்கால் பகுதி அன்றைய பாரசீகத்தின் வசம் தான் இருந்தது.
முஸ்லிம்களின் பெரும்படையொன்றை அனுப்பிய கலீஃபா உமர் (ரலி) அவர்கள் பாரசீகத்தை
வென்று வருமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
பெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம்களின் கை ஓங்கியிருந்தாலும் பாரசீகர்களில்
இராணுவத்தலைமை இடமாகத் திகழ்ந்த உபுல்லா நகரை முஸ்லிம்களால் நெருங்கக் கூட
முடியவில்லை.
இந்தத் தகவலை முஸ்லிம்களின் படைத்தளபதி கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்குத்
தெரிவித்து, இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் ஒரு படை வந்தால் பாரசீகத்தின் வெற்றி
நிச்சயம் உறுதி செய்யப்படும் என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயை விட்டு வெளியே
வந்து ஆள் அரவரம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்ற வீதியைப் பார்க்கிறார்கள்.
பெரும்பாலான ஆண்கள் ரோமையும், இன்ன பிற பகுதிகளையும், வெற்றி கொள்ள
போராளிகளாகச் சென்று விட்ட நிலையில் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும்
ஒரு படைத் தளபதியின் வேண்டுகோளை நினைத்து உமர் (ரலி) அவர்கள் உருகிக்
கொண்டிருந்தார்கள்.
தக்க தருணங்களில் பலன் மிக்க ஆலோசனைகளை வழங்கிடும் காலித் (ரலி), அபூ உபைதா
(ரலி), தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) போன்றோரும் அருகில்
இல்லை.
உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அங்கும் இங்குமாய் உலவிக்
கொண்டிருந்தார்கள்.
திடீரென ஓர் யோசனை மனதில் பளிச்சிடவே உடனடியாக களமிறங்கினார்கள்.
மதீனாவில் மிச்ச மீதி இருக்கிற ஆண்களை திரட்டினார்கள். முன்னூற்றி சொச்சம்
பேர் தேறினார்கள்.
வீரர்கள் தயார். அடுத்த பிரச்சனை வழி நடத்திச் செல்ல தளபதி வேண்டுமே? இது உமர்
(ரலி) அவர்களின் சிந்தனையை மறுபடியும் உசுப்பி விட்டது.
இப்போதும் ஓர் மின்னல் பளிச்சென மனதில் தோன்றி மறைந்தது. உமர் (ரலி) அவர்களின்
முகம் ஒளிக்கற்றை போல் இலங்கியது.
உமர் (ரலி) அவர்களின் அவர்களின் பேச்சிலும், செயலிலும் ஓர் உத்வேகம் பிறந்தது.
அங்கிருந்த ஒரு வீரரை அழைத்து ”ஓடிப் போய் நபித்தோழர் உத்பா பின் கஸ்வான்
(ரலி) அவர்களைச் சந்தித்து உடனடியாக கலீஃபா உங்களை அழைத்து வரச் சொன்னார்கள்! இது
கலீஃபாவின் ஆணை!” என்று கூறி அழைத்து வர ஆணையிட்டார்கள்.
عتبة
بن غزوان
யார் இந்த உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள். இஸ்லாத்தில் ஏழாவது நபராக தம்மை இணைத்துக்
கொண்ட பெரும் பாக்கியசாலி.
இரு பெரும் ஹிஜ்ரத்திலும் பங்கு பெற்ற சீதேவி, எதிரிகளை எதிர்த்து முதல்
வரிசையில் நின்று பத்ரில் துவங்கி ஃபத்ஹ் மக்காவைத் தொடர்ந்து முஸைலமாவை
கொன்றொழித்திடும் போர்க்களம் வரை வீராவேசத்துடன் களம் கண்டு போராடிய மாபெரும்
போராளி.
உமர் (ரலி) அவர்களின் ஆணையைக் கேட்டதும் தான் தாமதம் வில்லில் இருந்து
புறப்படும் அம்பு போன்று பாய்ந்து வந்து கலீஃபாவின் முன் வந்து நின்றார் உத்பா
இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள்.
அது வரை தாங்களை எதற்காக அமீருல் முஃமினீன் அவர்கள் அழைத்து வரச் சொன்னார்கள்
என்று உத்பா (ரலி) உட்பட அங்கு நின்ற எவருக்கும் தெரிந்திருக்க வில்லை. படைப்
பிரிவில் உத்பா (ரலி) அவர்களின் மனைவி உட்பட
படை வீரர்கள் சிலரின் மனைவிமார்களும், சகோதரிகளும் இடம் பெற்றிருந்தனர்.
فقال له أمير المؤمنين - عمر بن
الخطاب: "انطلق أنت ومن معك، حتى تأتوا أقصى بلاد العرب، وأدنى بلاد
العجم، وسِرْ على بركة الله ويُمنِه، ادعُ إلى الله مَن أجابك، ومن أبَى فالجزية،
وإلا فالسيف في غير هَوادة، كابدًا العدو، واتقِ الله ربك".
ஹிஜ்ரி 14 –ஆம் ஆண்டு உத்பா (ரலி) அவர்களின் கரங்களில் இஸ்லாமிய கொடியைக்
கொடுத்த உமர் (ரலி) அவர்கள் ”உத்பா அவர்களே! இதோ இம்மக்களை அழைத்துக் கொண்டு
உபுல்லா நோக்கிச் செல்லுங்கள்.
முந்தைய படை வீரர்களுக்கு துணையாக உங்களை அனுப்புகின்றேன். உபுல்லா இது பாரசீகர்களின்
இராணுவத்தலைமையகம் ஆகும்.
அதை வெற்றி கொள்ள அல்லாஹ் உமக்கும், உம் படைக்கும் உதவி புரிவான். நீங்கள்
அம்மக்களை வெற்றி கொண்டால் அல்லாஹ்வின் சத்திய தீனின் பால் அழைப்பு விடுங்கள்!
அம்மக்கள் உமது அழைப்பை ஏற்றுக் கொண்டால் அன்போடு அம்மக்களை நடத்துங்கள். உமது
அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஜிஸ்யாவை அவர்களின் மீது விதியாக்குங்கள்.
இதற்குப் பிறகும் அவர்கள் உம்மோடு பகைமை கொண்டால் அவர்களின் பகைமை தீரும் வரை,
உமது தலைமையை அவர்கள் ஏற்கும் வரை அவர்களுடன் நீர் போரிடுவீராக!
உத்பா அவர்களே! உங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் எல்லா நிலைகளிலும்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!” என்று உரை நிகழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.
ஒரு இராணுவத் தலைமையகத்தை வெற்றி கொள்ள முந்நூற்றி சொச்சம் பேரை அனுப்பி
வைக்கிறார்கள். அவர்களும் கொஞ்சம் கூட மறுப்பேதும் கூறாமல் புறப்பட்டுச்
செல்கிறார்கள்.
அங்கே, அவர்கள் ஈமானிய உணர்வின் மூலம் அடைந்த அசாத்தியமான தைரியத்தோடும்
துணிவோடும் தங்களின் இனிய பயணத்தை தொடர்ந்தார்கள்.
உபுல்லாவை நெருங்கியதும் உத்பா (ரலி) அவர்களும், படைவீரர்களும்
அதிர்ச்சியுற்று நின்று விட்டனர். காரணம் எதிரிகளின் எண்ணிக்கை பெருமளவில்
இருந்ததைக் கண்டார்கள்.
நேரடித் தாக்குதல் உடனடியாக எந்தப் பயனையும் தராது என்பதை உணர்ந்த உத்பா (ரலி)
அவர்கள் வேறு வழியில் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
அதன் விளைவாக, ஒரு யோசனைத் தோன்றவே தம் படை வீரர்களையும், பெண்களையும் இரு
அணிகளாகப் பிரித்தார்கள்.
முன்னால் ஆண்களின் அணியைத் தாங்கள் வழி நடத்திச் செல்வதென்றும், பின்னால்
பெண்களின் கையில் ஏராளமான கொடிகளைக் கொடுத்து ஒருவர் பின் ஒருவராக சிறிது இடைவெளி
விட்டு நடந்து வரவேண்டும் என்றும்,
கால்களால் புழுதிகளைக் கிளறிக் கொண்டே வர வேண்டும். தூரத்தில் இருந்து பார்க்கின்ற
எதிரிகளுக்கு ஏதோ பெரும் படையொன்று தம்மைத் தாக்க வருவது போல் ஒரு மாயத் தோற்றத்தை
அது ஏற்படுத்தி, எதிரிகளின் உள்ளத்தில் ஒருவித பீதியை உண்டு பண்ண வேண்டும்” என்றும்
முடிவு செய்து அப்படியே படைப் பிரிவை அமைத்துக் கொண்டு உபுல்லாவை நெருங்கினார்
உத்பா (ரலி) அவர்கள்.
அவர்கள் எதை நினைத்து இந்த தந்திரத்தைக் கையாண்டார்களோ, அது ஒரு சில
மணித்துளிகளிலேயே நடைபெறவும் செய்தது.
ஆம்! பெரும் படையொன்று தம்மை நோக்கி தாக்க வருவதாக நினைத்துக் கொண்ட
பாரசீகர்கள் உபுல்லாவை காலி செய்து விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடியே விட்டார்கள்.
எந்த போராட்டமும், இரத்தமும் சிந்தாமல் பாரசீக வெற்றி சாத்தியமானது.
உபுல்லாவின் கோட்டைக்குள் நுழைந்த முஸ்லிம் படையினருக்கு ஆச்சர்யம்
தாளவில்லல்.
கோட்டைக்குள் பொன்னும், பொருளும் மலை போல் குவிந்து கிடந்தது.
கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு இந்த வெற்றியை குறித்தும் எதிர்கால திட்டம்
குறித்தும் விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்கள்.
அதில் உடனடியாக அங்கே ஓர் பள்ளிவாசலை நிறுவ வேண்டும் என்றும் உபுல்லாவின் கோட்டையை இஸ்லாமிய
இராணுவத்தளமாகவும், ஒரு நகரை உருவாக்கி ஆட்சியின்
தலைமையிடமாகவும் அமைக்க வேண்டும்கொண்டு என்று கடிதத்தில் குறிப்பிட்டு
இருந்தார்கள்.
உத்பா (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதற்கு
இசைவு தந்தார்கள்.
பஸ்ரா எனும் நகரை உருவாக்கி, ஒரு பள்ளிவாசலையும் நிறுவி, இராணுவத்
தலைமையிடத்தையும் உருவாக்கினார்கள்.
கலீஃபா உமர் (ரலி) அவர்கள் உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்களையே இஸ்லாமிய
அரசின் முதல் ஆளுநராக நியமித்தார்கள்.
பாரசீகத்தின் வளங்களைக் கேள்விப் பட்ட மதீனத்து முஸ்லிம்கள் பெருமளவில்
பஸராவிற்கு குடிபெயர்ந்தார்கள்.
ஆனால், மிகவும் துடிப்போடு இருந்த முஸ்லிம்கள் பாரசீக வளங்களைக் கண்டதும்
ரொம்பவே மாறிப் போய் விட்டார்கள்.
நிலம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் தங்களை முழு வீச்சில் ஈடுபடுத்திக்
கொண்ட முஸ்லிம்களைக் கண்டதும் கலங்கிப் போன உத்பா (ரலி) ஆழ்ந்த கவலையில் மூழ்கிப்
போனார்கள்.
இப்படியே போனால், சொகுசு வாழ்க்கையில் இம்மக்கள் மூழ்கிப்போனால் ஈமானிய
வாழ்க்கையை இழந்து விடுவார்களோ? என்ற அச்சம் உத்பா (ரலி) அவர்களின் ஆழ்மனதை
ரணமாக்கிக் கொண்டிருந்தது.
أخبرنا
يحيى بن محمود بن سعد بإسناده عن أبي بكر بن أبي عاصم قال: حدثنا أزهر بن حميد أبو
الحسن، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا أيوب السختياني، عن حميد بن هلال،
عن خالد بن عمير: أن عتبة بن غزوان - وكان أمير البصرة - خطب فقال في خطبته:
" ألا إن الدنيا قد ولّت حذّاء، ولم يبق
منها إلا صبابة كصبابة الإناء يتصابها أحدكم، وإنكم ستنتقلون منها لا محالة،
فانتقلوا منها بخير ما بحضرتكم إلى دار لا زوال لها ، وأعوذ بالله أن أكون عظيماً
في نفسي صغيراً في أعين الناس، "
நிலைமை விபரீதமாவதற்குள் மக்கள் அனைவரையும் பள்ளிவாசலில் ஒன்று கூட ஆணையிட்டார்கள்.
மக்கள் ஒன்று கூடியதும், மக்கள் திரள்
நோக்கி “மக்களே! அறிந்து கொள்ளுங்கள்!
இவ்வுலக வாழ்வும் அதன் சொகுசும் மிக விரைவில் அழிந்து போய் விடும்!
அழிவே இல்லாத ஒரு உலகத்தை நோக்கியே நாம் வாழ வேண்டும் என நபி
{ஸல்} அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்கின்றோம்.
அந்த உலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமேயானால் மிகச் சிறந்த நற்செயல்கள் செய்திருக்க
வேண்டும்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம்
செய்த போது அவர்களுடன் இருந்தது ஒரு சின்னஞ்சிறு கூட்டம் அந்தக் கூட்டத்தில் ஏழாவது
நபராக நான் இருந்தேன்.
لقد
رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم، ما لنا طعام إلا ورق الشجر،
حتى قرحت اشداقنا.
அண்ணலாரையும், அவர்தம் குடும்பத்தார்களையும், தோழர்களையும் ஊர் விலக்கு செய்து அபூ தாலிப் கணவாயில் தங்கியிருந்த போது அவர்களுள்
நானும் ஒருவன், உண்ண உணவின்றி இலைகளையும், தழைகளையும் உண்டதால் எங்களின் உதடுகளிலும் வாய்களிலும் கொப்பளங்கள் ஏற்பட்டது.
ولقد
رزقت يوما بردة، فشققتها نصفين، أعطيت نصفها سعد بن مالك، ولبست نصفها الآخر"
மேலும், என்னிடம் அணிந்து கொள்ள ஆடை கூட கிடையாது,
ஒரு போது யாரோ தூக்கியெறிந்த ஒரு பழைய துணி ஒன்று வீதியில் கிடந்தது.
அதை எடுத்து பாதியாகக் கிழித்து நானும் ஸஅத் இப்னு மாலிக் (ரலி) அவர்களும் இடுப்பில் அரைத் துணியாக கட்டிக் கொண்டோம்.
ஆனால், இன்றோ அக்குழுவில் இருந்த எங்களில் சிலர் சில
நகரங்களுக்கு தலைவர்களாக ஆகியிருக்கின்றோம்.
உலக மக்களின் பார்வையில் நான் உயர்ந்தோனாகவும், அல்லாஹ்வின் பார்வையில் கீழோனவனாகவும் ஆகிவிடாமல் இருக்க அவனிடமே
நான் பாதுகாவல் தேடுகின்றேன்!” என்று கூறி தமது உரையை முடித்து
விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.
ثم
خرج حاجاً وخلف مجاشع بن مسعود، وأمره أن يسير إلى الفرات، وأمر المغيرة بن شعبة
أن يصلي بالناس،
ஏறக்குறைய நான்காண்டுகள் அம்மக்களோடு இருந்து அவர்களின் குண நலன்கள் மாறிட போராடினார்கள். இறுதியாக ஹிஜ்ரி 18 –ஆம் ஆண்டின் ஒரு ஷவ்வால்
மாதத்தின் இறுதியில் இந்த உரையை நிகழ்த்தி விட்டு ஹஜ்ஜுக்காக அங்கிருந்து புறப்பட்டார்கள்.
தங்களுக்கு பகரமாக முஜாஷஃ இப்னு மஸ்வூத் (ரலி)
அவர்களை தற்காலிக ஆளுநராகவும், முகீரா இப்னு ஷுஅபா
(ரலி) அவர்களை இமாமாகவும் வைத்து விட்டு ஹ்ஜ்ஜுக்கு
புறப்பட்டு வந்தார்கள்.
فلما
وصل عتبة إلى عمر استعفاه عن ولاية البصرة، فأبى أن يعفيه،
ஹஜ் கடமையை முடித்ததும் மதீனா வந்த உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள் நேராக ஆட்சியாளர் உமர்
(ரலி) அவர்களைச் சந்தித்து தன்னால் தொடர்ந்து ஆளுநர்
பதவியில் நீடிக்க முடியாது என்றும், ஆளுநர் பதவியில் இருந்து
தம்மை அகற்றிவிடுமாறு கோரி நின்றார்கள்.
فيصيح به عمر:
"
والله لا أدعك.. أتضعون أمانتكم وخلافتكم في عنقي.. ثم تتركوني"..؟؟!!
فقال عتبة بن غزوان:
اللهم لا تردني إليها! فسقط عن راحلته فمات ، وهو منصرف من مكة إلى البصرة، بموضع
يقال له: معدن بني سُليم، قاله ابن سعد.
அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில்
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களின் பொறுப்புக்களை,
உங்களின் தலைமைத்துவத்தை என் கழுத்தில் சுமத்தி விட்டு சென்று விடலாம்
என்று எண்ணுகின்றீகளா?”
ஒரு போதும் உங்களை நான் விட்டு விட மாட்டேன்! மீண்டும் பஸராவிற்கு செல்லுங்கள்!” என்று
கண்டிப்புடன் கூறினார்கள்.
இதைக் கேட்டதும், பஸராவை நோக்கி தமது வாகனத்தை
செலுத்திய உத்பா இப்னு கஸ்வான் (ரலி) அவர்கள்
வானை நோக்கி கையை உயர்த்தி “யா அல்லாஹ்! என்னை பஸராவிற்கு அழைத்துச் சென்றிடாதே!
அல்லாஹ் மனத்தூய்மையுடன் செய்த அந்த துஆவை ஒப்புக் கொண்டான். ஆம்! பஸரா சென்றிடும் வழியில் பனூ ஸுலைம்
பள்ளத்தாக்கின் அருகே வாகனம் இடரி கீழே விழுந்து ஷஹீதானார்கள்.
( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் {ஸல்}.. )
அரசு உத்தியோகம், கவர்னர் பதவி,
அதுவும் புதிதாக உருவாகியிருந்த ஓர் தலைநகருக்கு அதுவும் செல்வ வளங்களும்,
கனிம வளங்களும் நிறைந்திருந்த ஓர் வளமான பூமிக்கு…
அந்த பூமியை இஸ்லாமிய எல்லைக்குள் கொண்டு வந்து, அந்நகரை உருவாக்கியவர் என்கிற காரணங்களையெல்லாம் தாண்டி உத்பா
(ரலி) அவர்களின் தூய வாழ்வை உணர்ந்திருந்த உமர்
(ரலி) அவர்கள் உத்பா (ரலி)
மறுத்த போதும் மீண்டும் பதவியைக் கொடுத்து அனுப்பினார்கள்.
ஆனால், மக்களின் தவறான அணுகுமுறை எங்கே தங்களின் ஈமானிய
வாழ்வை உரசிப் பார்த்து விடுமோ, அசைத்துப் பார்த்திடுமோ என்று
பயந்த உத்பா (ரலி) தலைமைத்துவத்தை விட்டும்
விலகிச் சென்றிட துடித்தார்கள்.
ஆனால், இன்று மக்களை தங்களின் தவறான கொள்கையின் மூலமும்,
இலவசங்களின் மூலமும் பேராசை கொண்டவர்களாய் மாற்றி அதன் மீது அரசியல்
செய்கிற அசிங்கமான அரசியல் தலைவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் உத்பா இப்னு
கஸ்வான் (ரலி) அவர்கள்.
ஆட்சியைப் பிடிப்பதற்கும், பிடித்த பின்
அதைத் தக்க வைத்துக் கொள்ள இழக்கக் கூடாதவைகளை எல்லாம் இழக்க முன்வருகிற தற்கால அரசியல்
ஆட்சியாளர்களைப் பார்த்து பழகி விட்ட நமக்கு உண்மையில் தலைமைத்துவத்தை முள் கிரீடமாய்
நினைத்த மேன்மக்களின் வாழ்க்கை சிறந்த ஓர் முன் மாதிரி தான்!
அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்!
வஸ்ஸலாம்
அல்ஹம்து லில்லாஹ் காலத்திற்கு தேவையான மிக அற்புதமான உபதேசம்
ReplyDeleteதலைமையை பாதுகாக்கத்தான் இன்று எவ்வளவு முயற்சிகள்! முள் கிரீடம் என்கிறீர்கள்; அதை உணர்வாரில்லையே!
ReplyDeleteஉத்பா! இன்று எனது குத்பா
மிகவும் சிறந்த காலத்திற்குத் தேவையான கட்டுரை
ReplyDeleteஇக்கட்டுரையை http://nidurseasons.blogspot.in/2017/10/blog-post_23.html இதில் உங்கள் லிங்க் கொடுத்து பகிர்ந்துள்ளேன் .மக்கள் பயனடைய .நன்றி