Wednesday, 17 March 2021

 தீனில் முஸீபத் பேரிழப்பாகும்!!!

 

 


 

ஒவ்வொரு முஸ்லிமும் தனக்கு வாழ்க்கையில் முஸீபத் ஏற்பட்டு விடக்கூடாது என்றே விரும்புவார்.

உண்மையில் முஸீபத் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்பட்டு விடுமானால் அவன் என்ன மாதிரி எல்லாம் ஆகி விடக்கூடாது என்று பயந்து இருப்பானோ அந்த நிலைக்கு வந்து விடுவான்.

ஒரு மனிதனுக்கு பொருளில், வியாபாரத்தில், பொருளாதாரத்தில் ஏற்படுகிற முஸீபத் அவனை வட்டி, கடன், பசி போன்ற நெருக்கடியில் தள்ளிவிட்டு அதள பாதாளத்தில் வீழ்த்தி விடுகின்றது.

ஒரு மனிதனுக்கு மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தில் ஏற்படுகிற முஸீபத் பிரிவினை, உறவு முறிவு போன்ற தவிப்பில் தள்ளிவிட்டு நிலை குலைய வைத்து விடுகின்றது.

ஒரு மனிதனுக்கு உடலில், வீட்டாரின் ஆரோக்கியத்தில் ஏற்படுகிற முஸீபத் கவலை, சிரமம் ஆகியவற்றில் ஆழ்த்தி அமைதி, நிம்மதி இழக்கச் செய்து விடுகின்றது.

ஒவ்வொன்றிலும் ஏற்படுகிற முஸீபத் அவன் வாழ்வில் வெவ்வேறான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

மொத்தத்தில் முஸீபத் என்பது ஒரு மனிதனின் மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, இன்பத்தை தாழிட்டு பூட்டி விடுகின்றது. எனவே தான் எந்த மனிதனும் தனக்கு முஸீபத் ஏற்படுவதை விரும்புவதில்லை.

முஸீபத் என்றால் என்ன 

நம்மை சிந்திக்க விடாமல், செயல்பட விடாமல் முடக்கிப் போடுமே அது தான் முஸீபத்.

எதிலும் ஆர்வமில்லாமல், நாட்டமில்லாமல், கவனமில்லாமல் ஆக்கிவிடுமே அது தான் முஸீபத்.

நம் நிம்மதியை கெடுத்து, நம் அமைதியை சீர் குலைத்து எதற்காக வாழ வேண்டும்? என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுமே அது தான் முஸீபத்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல் குர்ஆனில் முஸீபத் குறித்து ஏறத்தாழ 75 இடங்களில் பேசுகின்றான்.

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முஸீபத் ஏற்படும் என்று எச்சரிக்கவும் செய்கிறான் 

பொருளாதாரமும், மழலைச் செல்வங்களும் மனிதனுக்கு உலக வாழ்வின் அலங்காரம் என்று வர்ணிக்கிற அல்லாஹ் சில போது அவைகளே மனிதனுக்கு முஸீபத்தாக அமையும் என்கிறான்.

இறைவனிடம் அதிகப்படுத்தித்தா என்று கேட்க வேண்டிய கல்வியை பொக்கிஷம் என்று கூறுகிற அல்லாஹ் சில போது அதுவே மனிதனுக்கு முஸீபத்தாக அமையும் என்கிறான்.

அதிகாரமும், ஆற்றலும், சமூகத்தில் கிடைக்கும் மரியாதையும் ஒரு மனிதனுக்கு அடையாளம் என்று சிலாகித்துப் பேசுகிற அல்லாஹ் சில போது அவைகளே மனிதனுக்கு முஸீபத்தாக அமையும் என்கிறான்.

இப்படியாக முஸீபத் என்பது இந்த உலக வாழ்க்கையில் ஒரு மனிதனோடு இரண்டறக்கலந்த ஒன்றாகவே ஆக்கப்பட்டுள்ளது.

இப்போது சொல்வோம் நம்மில் யார் தான் முஸீபத்தை விரும்புவார்? ஆம்! ஒருவரும் விரும்ப மாட்டார்.

ஆனாலும், இந்த விவகாரங்களில் ஒரு முஃமினுக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது. ஒரு சோபனம் இருக்கின்றது.

உலக விவகாரங்களில், பொருளில், பொருளாதாரத்தில், உடலில், ஆரோக்கியத்தில் ஏதேனும் முஸீபத் ஏற்பட்டு அது விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியைப் பொருந்திக் கொண்டு பொறுமை காத்தால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த முஃமினுக்கு அதை விட சிறந்த பகரத்தைத் தருவான். அல்லது அந்த முஸீபத்தில் இருந்து பாதுகாப்பான். அல்லது கடந்த காலங்களில் நிகழ்ந்த பாவங்களுக்குப் பரிகாரமாக மாற்றுகின்றான். அல்லது மறுமையில் மிகச் சிறந்த அந்தஸ்துகளை அல்லாஹ் வழங்குவான்.

ஆனால், ஒருவருக்கு தீனில், மார்க்க அடிப்படையில் வாழ்வதில் முஸீபத் ஏற்பட்டு விட்டால்? என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

அப்படி ஒருவருக்கு தீனில் முஸீபத் ஏற்பட்டு விட்டது என்றால் அவர் இந்த உலகத்திலும் நஷ்டவாளி. மறுமையிலும் நஷ்டவாளியாகி விடுவார்.

உலக காரியங்களில், விவகாரங்களில் முஸீபத் ஏற்படுவதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் வேண்டிய பெருமானார் {ஸல்} அவர்கள்தீனில் முஸீபத்ஏற்படுவதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.

அனுதினமும் சபை முடிந்து செல்கிற போது இந்த நீண்ட பாதுகாப்பு துஆவை மாநபி {ஸல்} அவர்கள் கேட்டதாக நபிமொழிக் கிரந்தங்களில் காண முடிகின்றது. அதில் பின்வரும் துஆவும் இடம் பெறுகின்றது. 

وعن ابن عمر رضي الله عنهما قال: قَلَّمَا كَانَ رسول الله ﷺ يَقُومُ مِنْ مَجْلس حَتَّى يَدعُوَ بهؤلاَءِ الَّدعَوَاتِ 

الَّلهمَّ اقْسِم لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تحُولُ بِه بَيْنَنَا وبَينَ مَعاصيك، وَمِنْ طَاعَتِكَ ماتُبَلِّغُنَا بِه جَنَّتَكَ، ومِنَ اْليَقيٍن ماتُهِوِّنُ بِه عَلَيْنا مَصَائِبَ الدُّنيَا، الَّلهُمَّ مَتِّعْنا بأسْمَاعِناَ، وأبْصَارناَ، وِقُوّتِنا مَا أحييْتَنَا، واجْعَلْهُ الوَارِثَ منَّا، وِاجعَل ثَأرَنَا عَلى مَنْ ظَلَمَنَا، وانْصُرْنا عَلى مَنْ عادَانَا، وَلا تَجْعلْ مُصِيَبتَنا فِي دينَنا، وَلا تَجْعلِ الدُّنْيَا أكبَرَ همِّنا وَلاَ مَبْلَغَ عِلْمٍنَا، وَلا تُسَلِّط عَلَيَنَا مَنْ لاَ يْرْحَمُناَ رواه الترمذي، وقال: حديث حسن.

 

 وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا 

”அல்லாஹ்வே! எங்கள் தீனில் நீ முஸீபத்தை ஏற்படுத்தி விடாதே!! 

தீனுல் இஸ்லாமும், தீனுல் இஸ்லாத்தில் நிலைத்திருப்பதும் மகத்தான பாக்கியம்

 

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

 

திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி ( மார்க்கம்தீன் ) ஆகும்”. ( அல்குர்ஆன்: 3: 19 )

உலக மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகளில் மகத்தான அருட்கொடை இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியைத் தந்ததாகும்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

 

இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்தும் விட்டேன். இன்னும், உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.                                    ( அல்குர்ஆன்: 5: 3 )

மனிதனை மனிதனாகவும், புனிதனாகவும் மாற்றுகிற, பண்படுத்துகிற மகத்தான ஆற்றல் இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு. ஏனெனில், இஸ்லாம் மாத்திரமே படைத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மாதமாகும்.

உலகில் மனித சமூகத்தின் எல்லா வகையான உயர் சிந்தனைகளும், அழகிய செயல்பாடுகளும் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அங்கே இஸ்லாம் நிச்சயம் இடம் பெற்றாக வேண்டும்.

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ()

 

இஸ்லாத்தை விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒரு போதும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும், மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்”.                                                  ( அல்குர்ஆன்: 3: 85 )

ஒரு முஃமின் இந்த உலகத்தில் மிகச் சரியாக வாழ்கிறான் என்றால் அல்லாஹ் அவனுக்கு இந்த உலகில் நான்கு வகையான சோபனங்களை வழங்குகின்றான். அதில் ஒன்று வாழ்ம் காலமெல்லாம் தீனுல் இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாகும்.

அல்லாஹ் அந்தப் பேற்றை மிகச் சரியாக வாழும் ஒரு முஃமினுக்கே வழங்குகின்றான். மற்றவர்களுக்கு தீனில் முஸீபத்தை ஏற்படுத்துகின்றான்.

பெருமானார் {ஸல்} அவர்கள் மக்காவை விட்டும் ஹிஜ்ரத் செய்திருந்த தருணம் அது.

பத்ரில் துவங்கிய ஆயுதம் தாங்கிய நிலை தொடர்ந்தது. எப்போதும் எதிரிகளைப் பற்றிய அச்சமும் பயமும் இருந்து கொண்டே இருந்தது.

அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் பயப்படாத நிலை எப்போது ஏற்படும் என ஏங்கியவர்களாக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இருந்தனர். குறிப்பாக அகழ் யுத்தத்தின் போது முஸ்லிம்களிடம் அச்சம் கூடுதலாக காணப்பட்டது.

காரணம் அனைத்து தரப்பு எதிரிகளும் ஒன்று கூடி மதீனாவையும், முஸ்லிம்களையும் பூண்டோடு அழித்திட வேண்டும் என்கிற முனைப்போடு போருக்கு வந்திருந்தனர். இதில் தங்களின் நிலை என்னவாகுமோ என முஸ்லிம்கள் அதிகம் அஞ்சினர்.

அல்லாஹ்வைத் தவிர அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறெவராலும் காப்பாற்றவே முடியாது என்கிற சூழல் நிலவுகிற போது அல்லாஹ் நான்கு சோபனங்கள் அடங்கிய பின்வரும் இறைவசனத்தை இறக்கியருளினான்.

1.   முன்னிருந்தவர்களை ஆட்சி செய்யும் பிரதிநிதிகளாக இப்பூமியில் அவன் ஆக்கியது போன்று உங்களையும் ஆக்குவான் 

2.   அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய  இஸ்லாமிய மார்க்கத்தில் உங்களை உறுதியாக்கி வைப்பான்.

3.   அச்சத்திற்குப் பின்னர் அவன் உங்களுக்கு அச்சமின்மையை வழங்குவான்.

4 .அவனை மட்டுமே வணங்குகின்ற, அவனுக்கு இணை கற்பிக்காதவர்களாக உங்களை ஆக்கியருள்வான்.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ (55)

உங்களில் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நல்லமல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு, முன்னிருந்தவர்களை இப்பூமியில் ஆட்சி செய்யும் பிரதிநிதிகளாக அவன் ஆக்கியது போன்று இவர்களையும் பிரதிநிதிகளாக ஆக்குவான். மேலும், அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற அவர்களுடைய (இஸ்லாமிய) மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களுடைய அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை அவர்களுக்கு வழங்குவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். மேலும், அவர்கள் என்னையே வணங்குவார்கள், எனக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டார்கள். இதன் பின்னரும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாம் தீயவர்கள் ஆவார்கள்”.                                                 ( அல்குர்ஆன்: 24: 55 )

இந்த இறைவசனத்தின் இரண்டாவது சோபனம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தீனில் நிலைத்திருக்கச் செய்வது இறைவனின் மகத்தான அருளும், கருணையும் ஆகும்.

ஆதலால் தான் மாநபி {ஸல்} அவர்கள் தீனில் முஸீபத் ஏற்படுவதை விட்டும் பாதுகாவல் தேடினார்கள்.

தீனில் முஸீபத்?...

அமல்களில் அலட்சியம் ஏற்படுவது, உலக இன்பங்களில் மூழ்கிப்போவது, மரணத்தை மறந்து போவது, மறுமையின் சிந்தனை இல்லாமல் போவது, ஹாராமான காரியங்களில் துணிவுடன் ஈடுபடுவது, நற்பண்புகளில் இருந்து பிறழ்வது, சோதனைகளின் போது பொறுமை இல்லாமல் போவது, மனோ இச்சையைப் பின்பற்றுவது, நன்மையான காரியங்கள் செய்ய விடாமல் தடுக்கப்படுவது, கெட்ட ஆட்சியாளர்கள் சாட்டப்படுவது, சத்திய சன்மார்க்கத்தை விட்டும் மதம் மாறிப்போவது என மாநபி {ஸல்} அவர்கள் கேட்ட பாதுகாவலுக்கு அறிஞர் பெருமக்கள் விளக்கம் தருகின்றார்கள்.

இணைவைப்பும் இறைமறுப்பும் மட்டுமே ஈமான் பறிபோக காரணமாக அமையும் என்று சொல்ல முடியாது. பல நேரங்களில் ஈமான் பறிபோக பாவங்களும், தீயகுணங்களும் காரணமாக அமைந்துவிடும் என்பதை பின்வரும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன 

நற்பண்புகளில் இருந்து பிறழ்ந்து போனதால்.. 

ملك غسان جبلة بن الأيهم، الذي منعه الكبر من الثبات على الإسلام، بعد أن دخل فيه؛ روى ابن الكلبي وغيره: أن عمر لما بلغه إسلام جبلة فرح بإسلامه، ثم بعث يستَدْعيه ليراه بالمدينة، وقيل: بل استأذنه جبلة في القُدُوم عليه، فأذن له، فركب في خلْق كثير من قومه، قيل: مائة وخمسين راكبًا، فلما سلَّم على عمر رحب به عمر وأدنى مجلسه، وشهد الحج مع عمر في هذه السنة، فبينما هو يطوف بالكعبة، إذ وطئَ إزارَه رجلٌ من بني فزارة فانحل،

 فرفع جبلة يده فهشم أنف ذلك الرجل 

ومن الناس مَن يقول: إنه قلع عينه، فاستعدى عليه الفزاري إلى عمر، ومعه خلْق كثيرٌ من بني فزارة، فاستحضره عمر فاعترف جبلة، فقال له عمر: أقدته منك؟ فقال: كيف، وأنا ملك وهو سوقة؟! فقال: إن الإسلام جمعك وإياه، فلست تفضله إلا بالتقوى، فقال جبلة: قد كنتُ أظُن أن أكونَ في الإسلام أعز مني في الجاهلية، فقال عمر: دع ذا عنك، فإنك إن لم ترضِ الرجل أقدته منك، فقال: إذًا أتنَصَّر، فقال: إن تنَصَّرتَ ضرَبتُ عنقك، فلما رأى الحدَّ قال: سأنظر في أمري هذه الليلة، فانصرف من عند عمر، فلما ادلَهَمَّ الليلُ ركب في قومه ومن أطاعه، فسار إلى الشام، ثم دخل بلاد الروم .

ஹிஜ்ரி 13 -ஆம் ஆண்டு யர்மூக் போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக் கவர்னர்களில் இறுதியானவரான ஜபலா இப்னு அய்ஹம்என்பவர் அமீருல் முஃமினீன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிமானார்.

பின்னர் மதீனா வந்த அவரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்த கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜுடைய நாட்கள் நெருங்கி வருவதால் ஹஜ் செய்து விட்டு ஊர் திரும்புமாறும், அதுவரை மதீனாவிலேயே தங்குமாறு வேண்டிக்கொண்டார்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு ஹஜ்ஜுக்குச் சென்ற ஜபலா தவாஃப் செய்து கொண்டிருந்தார். அருகில் தவாஃப் செய்து கொண்டிருந்த ஒரு கிராமவாசி கூட்ட நெரிசலில் தவறுதலாக ஜபலாவின் காலில் மிதித்து விட்டார் 

தான் ஒரு நாட்டின் அரசன் எனும் அகங்காரம் மேலிடவே அந்த கிராமவாசியை கண்மூடித்தனமாக அடித்து தாக்கினார். ஒரு அறிவிப்பில் அவரின் இரு கண்களில் ஒரு கண் பிதுங்கி வெளியே வந்து விட்டது.

மருத்துவசிகிச்சை எடுத்துக் கொண்ட அந்தக் கிராமவாசி ஹஜ்ஜுடைய நாட்கள் முடிந்ததும் ஜபலாவின் செயல் குறித்து முறையிட்டார்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜபலாவிடம் இது குறித்து விசாரித்து விட்டு, சம்பந்தப்பட்ட அந்த கிராமவாசியிடம் நடந்து கொண்ட செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருங்கள்! அவர் மன்னித்து விட்டால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.

அவர் மன்னிக்கவில்லை என்றால் பழிக்குப்பழி எனும் அடிப்படையில் அவர் உம்மை நீர் அடித்தது போன்று அடிப்பார் என்றார்கள் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அதற்க, ஜபலா நான் ஒரு நாட்டின் ஆட்சியாளன், அவனோ ஓர் கிராமவாசி அதுவும் சாமானியன். ஆட்சியாளனுக்கு எதிராக சாமானியனுக்கு இவ்வளவு துணிச்சலை எப்படி வழங்க முடியும்? என்று கேட்டார்.

இஸ்லாம், கலிமா ஷஹாதா என்கிற அற்புதம் இந்த பேதத்தைக் களைந்து இருவரையும் ஒன்றாகவே பார்க்கத்தூண்டுகின்றது. இருவரும் சரிசமமான மனிதர்கள் என்கிற தத்துவத்தை போதிக்கின்றது என்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அப்படியென்றால், நான் மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போகின்றேன் என்று மிரட்டினார் ஜபலா.

இதைக் கேட்டதும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “செய்த தவருக்கு மன்னிப்பு வேண்டி, அவர் மன்னித்தால் ஒன்றும் இல்லை. அவர் மன்னிக்காவிட்டால் பழிக்குப்பழி அடிப்படையில் தண்டனை மட்டும் தான். நீர் மதம்மாறினால் உமக்கு மரண தண்டனை என்றார்கள்.

அவ்வளவு தான் ஜபலாவின் முகம் வெளிறியது. எனக்கு சிறிது அவகாசம் வேண்டும். நாளை காலையில் இது குறித்து நான் என் பதிலைச் சொல்கின்றேன் என்றார்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவகாசம் அளித்தார்கள். ஆனால், ஜபலாவிற்கோ அகம்பாவமும், பெருமையும் இடம் தர மறுத்ததால் மதீனாவை விட்டு ஓடி விட்டார்.

ஜபலா மதீனாவை விட்டு ஓடிய பிறகு அவருக்கு நேர்வழியின் பால் அழைப்பு விடுக்க ஒரு தூதரை உமர் ரலியல்லாஹு அன்ஹு அனுப்பி வைத்தார்கள்.

தூதர் சென்ற போது அவர் தங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தங்கத்தட்டில் உணவு உண்டு கொண்டு, தங்க டம்ளரில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

தூதர் அவரிடம் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கருணையோடு அவரை திரும்ப அழைத்து வரச் சொன்னதை சொன்னார். ஜபலாவின் கண் கலங்கியது.

எனக்கு நேர்வழியில் நீடித்து இருக்க கிடைத்த ஒரு பொன்னான வாய்பை நான் தவற விட்டு விட்டேன். என்று கதறி அழுதார். ஆனால், அவர் மீண்டும் இஸ்லாத்தில் வரவில்லை.

தூதர் திரும்பி வந்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்கள். அவர் அழுததை கண்டு ஆதங்கப்பட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர் மது குடிக்கிறாரா? என ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

ஆம்! என தூதர் பதில் கூறியதும் அப்படியானால், இனி அவர் ஒரு போதும் திருந்த வாய்ப்பே இல்லை. அவர் நேர்வழியிலிருந்து வெகு தூரமாகி விட்டார் என்றார்கள். இறுதியில் ஜபலா கிருத்துவராகவே மரணித்தார்.  ( நூல்: அல்வாஃபீ ஃபில் வஃபிய்யாத், அல் பிதாயா வன் நிஹாயா )

அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தடம் மாறிச் சென்றிடும் ஈமானை விட்டும் பாதுகாவல் தேடுமாறு வலியுறுத்துகின்றார்கள்.

உலக மோகமும்.. பேராசையும் மிகைத்ததால்

பல்ஆம் இப்னு பாவூரா பனூ இஸ்ரவேலர்களில் மிகச் சிறந்த அறிஞர், நபி மூஸா {அலை} அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்.

அல்லாஹ் அவருக்கு தன் புறத்திலிருந்து பல அத்தாட்சிகளை வழங்கியதாக கூறுகின்றான். பூமியில் இருந்து அல்லாஹ்வின் அர்ஷை பார்ப்பதும், வாழ்நாளில் அவர் செய்த எந்த துஆவும் மறுக்கப்பட்டதில்லை என்பதும் இஸ்முல் அஃலம் எனும் அல்லாஹ்வின் விசேஷ திருநாமத்தை அறிந்து வைத்திருந்ததும், தவ்ராத் வேதம் முழுவதும் மனனம் செய்த நான்கு பேரில் ஒருவராக அவர் இருந்ததும் அவர்பெற்ற அற்புதங்களில் உள்ளதாகும்.

இவ்வளவு தூரம் இறைவனின் நெருக்கம் பெற்ற ஒருவரை அல்லாஹ் ஈமானை பிடுங்கி சபித்த வார்த்தையை கவனித்துப் பாருங்கள்.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

“(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.

நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது” என்று கூறுகின்றான். ( அல்குர்ஆன்: 7: 175, 176 )

பல்ஆம் இப்னு பாவூரா நேரடியாக இணைவைப்பு, இறைமறுப்பு போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை. உலக மோகத்தின் காரணமாக, செல்வங்களுக்குப் பேராசைப் பட்டு நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக துஆ செய்ய கையேந்தினார் எனும் பாவமே அவரின் ஈமான் இழப்புக்கு காரணமாகிவிட்டது. 

சோதனையின் போது பொறுமை இல்லாமல் போனதால்

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِى مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ حَدَّثَنِى أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ أَنَّ رَجُلاً مِنْ أَعْظَمِ الْمُسْلِمِينَ غَنَاءً عَنِ الْمُسْلِمِينَ فِى غَزْوَةٍ غَزَاهَا مَعَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - فَنَظَرَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - فَقَالَ « مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى الرَّجُلِ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا » . فَاتَّبَعَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ ، وَهْوَ عَلَى تِلْكَ الْحَالِ مِنْ أَشَدِّ النَّاسِ عَلَى الْمُشْرِكِينَ ، حَتَّى جُرِحَ فَاسْتَعْجَلَ الْمَوْتَ ، فَجَعَلَ ذُبَابَةَ سَيْفِهِ بَيْنَ ثَدْيَيْهِ حَتَّى خَرَجَ مِنْ بَيْنِ كَتِفَيْهِ فَأَقْبَلَ الرَّجُلُ إِلَى النَّبِىِّ - صلى الله عليه وسلم - مُسْرِعًا فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ . فَقَالَ « وَمَا ذَاكَ » . قَالَ قُلْتَ لِفُلاَنٍ « مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَيْهِ » . وَكَانَ مِنْ أَعْظَمِنَا غَنَاءً عَنِ الْمُسْلِمِينَ ، فَعَرَفْتُ أَنَّهُ لاَ يَمُوتُ عَلَى ذَلِكَ فَلَمَّا جُرِحَ اسْتَعْجَلَ الْمَوْتَ فَقَتَلَ نَفْسَهُ . فَقَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - عِنْدَ ذَلِكَ « إِنَّ الْعَبْدَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ ، وَإِنَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، وَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ ، وَإِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ ، وَإِنَّمَا الأَعْمَالُ بِالْخَوَاتِيمِ » .

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி {ஸல்} அவர்களுடன் கைபர் போரில் கலந்து கொண்டேன். போரில் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான பங்காற்றிய ஒருவரைப் பார்த்த நபி {ஸல்} அவர்கள் நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்என்று கூறினார்கள்.

அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பதை அறிவதற்காக மக்களில் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்தார். அந்த மனிதரோ இணைவைப்பாளர்களை எதிர்த்துப் போராடுவதில் எல்லோரையும் விட கடுமையாக போராடும் அதே நிலையில் இருந்தார்.

இறுதியில் அவர் எதிரிகளால் கடுமையாகக் காயப்பபடுத்தப் பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து விட விட விரும்பி, தமது வாளின் கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்து அழுத்திக் கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

பின் தொடர்ந்து சென்ற அந்த மனிதர் நபி {ஸல்} அவர்களை நோக்கி வந்து அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று உறுதி படக் கூறுகின்றேன்என்றார்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அப்போது, அவர் தாங்கள் எவரைக் குறித்து நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டீர்களோ அவர் முஸ்லிம்களுக்காக போராடுவதில் மகத்தான பங்காற்றினார்.

தாங்கள் அவர் குறித்து இவ்வாறு கூறியதால் நிச்சயம் அவர் இதே தியாக நிலையில் இறக்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டு, அவரைப் பின் தொடர்ந்தேன். அவர் எதிரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட போது அவசரமாக இறந்து விட விரும்பி தற்கொலை செய்து கொண்டார்என்று சொன்னார்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்து வருவார். ஆனால், இறுதியில் அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராகி விடுவார். இன்னொருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். இறுதியில் அவர் நரக வாசிகளில் ஒருவராகி விடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றனஎன்று கூறினார்கள்.

يَا رَسُولَ اللَّهِ صَدَّقَ اللَّهُ حَدِيثَكَ ، قَدِ انْتَحَرَ فُلاَنٌ فَقَتَلَ نَفْسَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « يَا بِلاَلُ قُمْ فَأَذِّنْ ، لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ مُؤْمِنٌ ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ » .

இன்னொரு அறிவிப்பில்.... பிலாலே! எழுந்து சென்று இறைநம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுவான்என்று மக்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

               ( நூல்: புகாரி, கிதாபுல் கத்ர், பாபு அல் அமலு பில் ஃகவாதீமி )

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ ()

 

அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.”       ( அல்குர்ஆன்:3:8 )

حدثنا يزيد أخبرنا همام بن يحيى عن علي بن زيد عن أم محمد عن عائشة قالت : كان رسول الله صلى الله عليه وسلم يقول يا مقلب القلوب ، ثبت قلبي على دينك ، قلت : يا رسول الله ، إنك تدعو بهذا الدعاء ، قال : يا عائشة ، أوما علمت أن القلوب أو قال : قلب بني آدم بين إصبعي الله ، إذا شاء أن يقلبه إلى هدى قلبه ، وإذا شاء أن يقلبه إلى ضلالة قلبه

 

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதயங்களை புறட்டக்கூடியவனே! என் இதயத்தை உன் சத்திய மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக!என்று அதிகமதிகம் இறைவனிடம் இறைஞ்சக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நான் நபிகளாரிடம் அல்லாஹ்வின் தூதரே! ஏன் நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்து கொண்டு இப்படி பிரார்த்திக்கின்றீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! ஆதமுடைய சந்ததியினரின் இதயத்தை அல்லாஹ் தன் இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருக்கின்றான். அவன் நாடினால் நேர்வழியின் பால் புறட்டுகின்றான். அவன் நாடினால் வழிகேட்டின் பால் புறட்டுகின்றான். ஆதலால் தான் நான் அவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்என்று கூறினார்கள்.        ( நூல்: திர்மிதீ )

 

عبد الله بن مسعود ، روى أن رسول الله دخل الْمَسْجِدَ وَهُوَ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وهو يُصَلِّي، وَإِذَا هُوَ يَقْرَأُ النِّسَاءَ، فَانْتَهَى إِلَى رَأْسِ الْمِائَةِ فَجَعَلَ ابْنُ مَسْعُودٍ يَدْعُو وَهُوَ قَائِمٌ يُصَلِّي فَقَالَ النَّبِيُّ : ((اسْأَلْ تُعْطَهْ اسْأَلْ تُعْطَهْ))، ثُمَّ قَالَ: ((مَنْ سَرَّهُ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ فَلْيَقْرَأْهُ بِقِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ))، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَيْهِ أَبُو بَكْرٍ لِيُبَشِّرَهُ وَقَالَ لَهُ: مَا سَأَلْتَ اللَّهَ الْبَارِحَةَ قَالَ: قُلْتُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ إِيمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ مُحَمَّدٍ فِي أَعْلَى جَنَّةِ الْخُلْدِ.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நாள் இரவு இஷாத் தொழுக்கைக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு வருகை தந்தார்கள்.

அங்கே உமர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது நான் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் சூரா அந்நிஸாவை ஓதிக் கொண்டிருந்தேன். சூரா அந்நிஸாவின் நூறாவது வசனத்தோடு என் தொழுகையை நான் நிறைவு செய்தேன்.

தொழுது முடித்ததும் என்னை அழைத்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அப்துல்லாஹ்வே! அல்லாஹ்விடம் நீ விரும்பியதை கேள்! உனக்கு அல்லாஹ் நீ விரும்பியதை வழங்குவான்!” என இரு முறை கூறினார்கள்.

பின்பு, “யார் குர்ஆனை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் கொண்டு வந்து இறக்கியருளிய போது ஓதப்பட்டதைப் போன்று ஓத வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள் இப்னு உம்மி அப்த் ( இது இப்னு மஸ்வூத் அவர்களின் செல்லப்பெயர் ) அவர்கள் ஓதுவது போன்று ஓதிக் கொள்ளட்டும்!” என்றும் கூறினார்கள்.

மறுநாள் வைகறைத் தொழுகை முடித்து நான் அமர்ந்திருக்கும் போது என்னிடம் வந்த அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த சோபனத்தை என்னிடம் கூறிய பிறகுஅப்துல்லாஹ்வே! நீ விரும்பியதை அல்லாஹ்விடம் கேள்!

அல்லாஹ் நீ விரும்பியதை உமக்கு தருவான்!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மிடம் கூறினார்களே இன்றைய அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அல்லாஹ்விடம் நீர் என்ன துஆ செய்தீர் என்று கூறுங்களேன்என்று கேட்டார்கள்.

அதற்கு, நான்அல்லாஹ்வே! உன்னிடம் நான் நிலையான, தடம் மாறிப்போய் விடாத ஈமானையும், அழிந்து போகாத அருட்கொடைகளையும், உயர்வான சுவனத்தில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு என்றென்றும் தோழமை கொள்கிற பெரும் பேற்றையும் கேட்கிறேன்”  என்று நான் கேட்ட அந்த துஆவைக் கூறினேன்.

ஆக, எக்காரணத்தைக் கொண்டும் தம்மை விட்டும் ஈமான் பறிபோய் விடக்கூடாது என்பதில் எந்தளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மேற்கூறிய நபி மொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஹிதாயத்தை நஸீபாக்குவானாக!

வாழும் காலமெல்லாம் ஹிதாயத்தோடு வாழ்ந்து, ஹிதாயத்தோடு மரணிக்கும் நஸீபையும் தந்தருள்வானாக! தீனில் முஸீபத் ஏற்படுவதை விட்டும் பாதுகாப்பானாக!!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!!

6 comments:

  1. எல்லாவிதமான ப(B)லா முஸீபத்தில் இருந்தும் எல்லாம்வல்ல அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்

    ReplyDelete
  2. அழகானபதிவு அல்லாஹ் உங்கள் கல்வி அறிவை அதிகப்படுத்துவானாக ஆமீன்

    ReplyDelete
  3. ஜும்ஆவுக்கு தேவையான கருத்துகள் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்.
    ஈமான் பறிபோவதே ஆக பெரிய முஸீபத் என்பதை தெளிபடுத்தியுள்ளீர்கள் الحمد لله وجزاكم الله خيرا كثيرا يا استاذ الكريم திருப்பூர்

    ReplyDelete