Thursday, 14 October 2021

வாழ்க்கையை வளமாக்கும் வள்ளல் நபி ﷺ யின் சோபனங்கள்!!!

 

வாழ்க்கையை வளமாக்கும்

வள்ளல் நபி   யின் சோபனங்கள்!!!

 


 

 

உலகத்தில் உத்திரவாதமுள்ள வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் உரிய ஒரு மாமனிதர் இருப்பாரானால் அது முஹம்மத் {ஸல்} அவர்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்களில் சொல்லுக்கு சக்தி உண்டு, அவர்களின் செயலுக்கு ஆற்றல் உண்டு, அவர்களின் அங்கீகாரத்திற்கு அதிகாரம் உண்டு, அவர்களின் மௌனத்திற்கு ஆன்மா உண்டு, அவர்களின் உறக்கத்திற்கு உயிர் உண்டு. அவர்களிடம் இருந்து வெளிப்படுகிற அனைத்திற்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு 

இந்த உலகத்தில் வாழ்வதற்காக வந்தவர்களே அதிகம். ஆனால், முஹம்மது முஸ்தஃபா {ஸல்} அவர்கள் மட்டுமேவாழ்ந்து காட்டுவதற்காகவும், வாழ வைப்பதற்காகவும்வந்தவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை அல்குர்ஆனில் பல்வேறு முறையில் அடையாளப்படுத்தும் அல்லாஹ் ஓரிடத்தில்உங்களை வாழ வைப்பதற்காகவேபெருமானார் {ஸல்} அவர்கள் உங்களை அழைக்கின்றார் என்று குறிப்பிடுகின்றான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் பதிலளியுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதராகிய அவர்உங்களை வாழ வைக்கின்ற காரியத்தின் பால்அழைக்கின்றார். நிச்சயமாக! அல்லாஹ் மனிதனுக்கும், அவனது இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து செயலாற்றிக் கொண்டு இருக்கின்றான் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அவனின் பக்கமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்:8:24 )

 

எனவே, மகத்தான மாமனிதரை, மனிதரில் புனிதரை இறைத்தூதராகப் பெற்றமைக்காக, அவர்களின் உம்மத்தில் நம்மை இடம் பெறச் செய்தமைக்காக நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!!!

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் வார (10 ) ஜும்ஆவிற்குப் பிறகு தற்போது தான், அதுவும் பெருமானார் {ஸல்} அவர்கள் பிறந்த இந்த மாதத்தின் இரண்டாம் ஜும்ஆவை நிறைவேற்ற அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பெருமானார் {ஸல்} அவர்களின் மீது நேசம் கொள்வதற்கும், நேசத்தை வெளிப்படுத்துவதற்கும், அவர்களின் வரலாற்றை பேசுவதற்கும், கேட்பதற்கும் கேட்டது போல் பேசியது போல் செயல்படுவதற்கும் நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

இன்று இந்த உலகில் நம் அனைவரின் தேடலாக இருப்பது ஒன்றே ஒன்று தான். ஆம்! நிம்மதி என்ற அந்த ஒன்று தான் 

நாம் தொழுகிறோம், குர்ஆன் ஓதுகின்றோம், ஹஜ் செய்கின்றோம், தான தர்மங்கள் செய்கின்றோம், பல்வேறு வணக்க, வழிபாடுகளை செய்து வருகின்றோம். எனினும், நாம் நிம்மதியைப் பெற்ற, பெறுகிற விஷயத்தில் மன நிறைவை இன்னும் அடையவில்லை.

எது இருந்தால் நமக்கு நிம்மதி கிடைக்கும்? எது கிடைத்தால் நாம் நிம்மதியை உணர்வோம்? இது தான் இன்றைய நம்முடைய கேள்வியும், தேடலும்

 

நபித்தோழர்களின் வாழ்க்கையின் தரவுகளில் நாம் தேடிப்பார்த்தால் இதற்கான விடையை விசாலமாகவே பெற முடிகின்றது.

 

ஆம், சதா நெருக்கடிகள், போர்கள், மரணங்கள், இரத்தக் காயங்கள், ஏழ்மை, வறுமை என பல்வேறு துன்பங்களுக்கு இடையேயும் அந்த நபித்தோழர்கள் நிம்மதியை உணர்ந்தார்கள்.

 

அந்த நபித்தோழர்களுக்கு கிடைத்த அந்த நிம்மதி நமக்கு கிடைக்காமல் போனதற்கான காரணங்களை நாம் அலசி ஆராய்ந்தால் நாம் மகத்தான ஒரு அருட்கொடையை இழந்திருக்கின்றோம் என்பதை அறிய முடிகின்றது.

 

ஆம்! அந்த அருட்கொடைவாழ்க்கைக்கையை வளமாக்குகின்ற ஆற்றல் கொண்ட வள்ளல் நபி {ஸல்} அவர்களின் சோபனமும், துஆவும்தான் என்றால் அது மிகையல்ல.

 

அவர்களின் வணக்க வழிபாடுகளோடு வள்ளல் நபியின் துஆவுடைய பரக்கத்தும் நிறைந்து இருந்ததால் அவர்கள் நிம்மதியை உணர்ந்தார்கள். நிம்மதியாய் வாழ்ந்தார்கள்.

 

அப்படியென்றால், வள்ளல் நபி {ஸல்} அவர்கள் நமக்காக துஆ செய்யவில்லையா? நபி {ஸல்} அவர்களின் துஆவுடைய பரக்கத் நமக்கு கிடைக்காதா? என்று நாம் அங்கலாய்க்கத் தேவையில்லை.

 

வள்ளல் நபி {ஸல்} அவர்களின் துஆ இன்றும், நாளையும், உலக முடிவுநாள் வரையிலும் நமக்குண்டு, அவர்களின் துஆவின் பரக்கத்தும் நமக்குண்டு!

 

ஆனால், அந்த துஆவைப் பெறுகிற விஷயத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம்? அந்த துஆவின் பரக்கத்தை அனுபவிக்கும் விஷயத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்? என்பதில் பிரச்சினை இருக்கின்றது.

 

      நமக்காக வள்ளல் நபி {ஸல்} அவர்கள் செய்த துஆ ஹதீஸ் கிரந்தங்களில் நிரப்பமாக இருக்கின்றது. நமக்காக வள்ளல் நபி கூறிய சோபனங்களும் ஏராளமாக குவிந்து கிடக்கின்றது.

 

இன்ஷாஅல்லாஹ்.. இன்றைய ஜும்ஆவின் அமர்வில் மிக முக்கியமான இரண்டு துஆக்களை நாம் பார்க்க இருக்கின்றோம்.

 

அதற்கும், முன்பாக வள்ளல் நபி {ஸல்} அவர்களின் துஆவால் வளமான வாழ்க்கையைப் பெற்றவர்கள், வெற்றி அடைந்தவர்கள், பரக்கத் பெற்றவர்கள் என்று வரலாறு அடையாளப்படுத்தும் நபித்தோழர்களின் வாழ்விலிருந்து சில செய்திகளை நாம் அறிந்து கொண்டால் நாமும் நபி {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத்தில் வாழ்ந்திட ஆசைப்படுவோம்! அதற்காக முயற்சிப்போம்! அதற்காக செயல்படுவோம்!.

 

நாம் காணும் இன்றைய மதீனாவின் செழிப்பு, அமைதி தவழும் சூழ்நிலை மாநபி {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத்தாகும். இன்ஷா அல்லாஹ்இந்த உலகம் அழியும் நாள் வரையிலும் இப்படித்தான் மதீனாவின் இருப்பை இந்த உலகம் காணும்.

 

வள்ளல் நபி {ஸல்} அவர்கள் சில இடங்களுக்கு துஆ செய்திருக்கின்றார்கள், சில உயிரினங்களுக்கு துஆ செய்திருக்கின்றார்கள். சில நபிமார்களுக்கு துஆ செய்திருக்கின்றார்கள். சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களுக்கு துஆ செய்திருக்கின்றார்கள். குறிப்பிட்ட சில நபித்தோழர்களுக்கு துஆ செய்திருக்கின்றார்கள். மாநபி {ஸல்} அவர்களை மகிழ்வித்தவர்களுக்கு, உதவி புரிந்தவர்களுக்கு, தீனுக்காக தியாகம் செய்தவர்களுக்கு, பிறருக்கு உதவியவர்களுக்கு இப்படி நீண்ட பட்டியலே இருக்கின்றது.

 

அந்த துஆக்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் வளமாக்கியது? என வரலாறு பக்கம் பக்கமாய் தன்னுள் பலரது வாழ்க்கையை பாதுகாத்து வைத்திருக்கின்றது.

 

இவ்வளவு ஏன்? நாளை மறுமையில்இந்த உலகில் ஈமான் கொண்டு, பாவம் செய்து நாளை மறுமையில் நரகம் என்று தீர்ப்பெழுதப்பட்டவர்களுக்காகக் கூட வள்ளல் நபி {ஸல்} அவர்கள் நரக விடுதலை வேண்டி துஆ செய்வார்கள்என்று கூட நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றது.

 

வாழ்வாங்கு வாழ்ந்த ஜாபிர் (ரலி) அவர்கள்…

 

عن جَابِر بْن عَبْدِ اللَّهِ، قال:

لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي: (يَا جَابِرُ مَا لِي أَرَاكَ مُنْكَسِرًا؟) .

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ اسْتُشْهِدَ أَبِي، وَتَرَكَ عِيَالًا وَدَيْنًا .

قَالَ: (أَفَلَا أُبَشِّرُكَ بِمَا لَقِيَ اللَّهُ بِهِ أَبَاكَ؟) .

قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ.

قَالَ: (مَا كَلَّمَ اللَّهُ أَحَدًا قَطُّ إِلَّا مِنْ وَرَاءِ حِجَابٍ، وَأَحْيَا أَبَاكَ فَكَلَّمَهُ كِفَاحًا. فَقَالَ: يَا عَبْدِي تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ. قَالَ: يَا رَبِّ تُحْيِينِي فَأُقْتَلَ فِيكَ ثَانِيَةً. قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ: إِنَّهُ قَدْ سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لَا يُرْجَعُونَ ) .

قَالَ: وَأُنْزِلَتْ هَذِهِ الآيَةُ: (وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا) آل عمران/169 .

 

 

ஒருநாள் வாட்டமுடன் அமர்ந்திருந்தார் ஜாபிர். அதைக் கவனித்த நபியவர்கள், “ஓ ஜாபிர்! ஏன் சோகமாய் இருக்கிறீர்?” என வினவினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையோ வீரமரணம் அடைந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற கடனும் நான் பராமரித்து கரையேற்ற வேண்டிய என் சகோதரிகளையும் நினைத்துக் கவலையில் உள்ளேன்

ஓ ஜாபிர்! நான் உனக்கு நற்செய்தி ஒன்று சொல்கிறேன் கேள். அல்லாஹ் தனக்கு இட்டுள்ள திரைக்குப் பின்னால் இருந்தே மற்றவரிடம் உரையாடி இருக்கிறான். உன் தந்தையிடம் மட்டும் நேருக்கு நேராய் உரையாடியுள்ளான். என் அடிமையே! என்னிடம் என்ன வேண்டுமோ கேள்; நீ கேட்பது உனக்கு அளிக்கப்படும்என்று அல்லாஹ் அவரிடம் கூறினான். அதற்கு உன் தந்தை, ‘என் இறைவனே! என்னை மீண்டும் உலகிற்கு அனுப்பு. உனக்காக உன்னுடையப் பாதையில் போராடி மீண்டும் என் உயிரை இழக்கிறேன்என்று கூறிவிட்டார்

அதற்கு அல்லாஹ், “இறந்தவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டார் என்பது விதியாக்கப்பட்டு விட்டதுஎன்று அவரிடம் கூறினான்.

அப்படியானால், எனக்குப் பின்னால் பூமியில் தங்கியிருப்பவர்களிடம் நீ எங்களுக்கு அளித்துள்ள நற்பேறை அறிவித்துவிடுஎன்றார் உன் தந்தை அப்துல்லாஹ்.

அப்படியே ஆகட்டும் என்று வசனங்களை அருளிளான் இறைவன். அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். தன் அருட்கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள். மேலும் தம்முடன் (வீரமரணத்தில்) சேராமல் (உயிருடன் உலகில்) இருப்போரைப் பற்றி, 'அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்' என்று கூறி மகிழ்வடைகிறார்கள்என்று கூறி மூன்றாம் அத்தியாயமான சூரா ஆலு இம்ரானில் 169, 170ஆம் வசனங்களை ஓதிக்காண்பித்து, ஜாபிருக்கு அந்நேரம் தேவையான மாபெரும் ஆன்ம பலம் அளிக்கும் உண்மை ஒன்றை உரைத்து ஜாபிர் (ரலி) அவர்களைத் தேற்றினார்கள். நபியவர்கள். 

 

அடுத்த கட்டமாக...

 

ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தைக்குக் கடன் கொடுத்த யூதன் அவருக்கு அவகாசம் அளிக்க மறுத்து,  'முப்பது வஸக்' பேரீத்தம்  பழங்களையும் உடன் திருப்பித்தருமாறு கேட்டு நின்றான். கருணை  நபி (ஸல்) அவர்களின்  கவனத்திற்கு கொண்டு வந்தார்கள் ஜாபிர் (ரலி) அவர்கள்.

 

நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) இருவருடனும், ஜாபிரின் தோட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு நின்று பேரீத்த மரங்களைப் பார்த்தார்கள். மிகச் சொற்ப மரங்களே கொஞ்சம் கனிகளைக் கொண்டிருந்தன! உடனே, மரங்களுக்கிடையே சுற்றிவரத் தொடங்கினார்கள். பிரார்த்தித்தார்கள். அதன்பிறகு, ஜாபிரிடம் 'இம்மரங்களின் கனிகளை எல்லாம் கொய்துவிடு! கடன்களை அடைத்துவிடு! உன் பிரச்னைகள் தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ்!' என்று சொல்லிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிட்டார்கள். அவ்வாறே ஜாபிர் (ரலி) மரங்களின் பழங்களைப் பறித்தார். என்ன அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு ஏராளமாக இருந்தன.

அந்த யூதன் உட்பட, தம் தந்தை கடன் பட்டிருந்த அனைவரையும் அழைத்து, ஒருவர் விடாமல், அனைவருக்கும் செலுத்த வேண்டிய கடன்களை எல்லாம் நிறைவேற்றினார். அவ்வாறு எல்லோருக்கும் கடன்களை நிறைவேற்றிய பிறகும் அவரிடம் பனிரெண்டு 'வஸக்'குகள் (ஏறத்தாழ 2,150 கிலோ) பேரீத்தம் பழங்கள் மீதம் இருந்தன! விட்டன!”                                                ( நூல்: புகாரி )

பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத்தை உணர்ந்த ஜாபிர் (ரலி) அவர்கள் துஆவின் பரக்கத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்கள்.

 

வாழ்வில் இப்படியும் ஒரு நிலை...

 

முகவாட்டத்தோடு காணப்படும் போதும், கடன் சுமையோடு நடமாடும் போதும் காருண்ய நபியின் கருணையால், துஆவால் நாம் வாழ்வை மகிழ்வாக ஆக்கி கொண்டோம். ஆனால், அந்த நபி {ஸல்} அவர்கள் அஹ்ஸாப் யுத்தத்தின் போது சக தோழர் ஒருவர் பசியின் கோரத்தை முறையிடுகிற போது நபி {ஸல்} அவர்கள் “தங்களது வயிற்றில் கட்டியிருந்த இரு கற்களை காண்பித்த போது துடிதுடித்துப் போனார் ஜாபிர் (ரலி).

 

அடுத்து நடந்தவை இதோ...

 

அண்ணலாரின் மெலிந்த, வலிமை குன்றிய தோற்றம் ஜாபிரின் மனத்தை வருத்தி எடுத்தது! வீட்டுக்குச் சென்றார். இருந்த ஒரே ஒரு செம்மறி ஆட்டை அறுத்துப் பொறிக்க ஏற்பாடு செய்தார். மீதம் இருந்த சிறிது வாற் கோதுமையைக் கொண்டு மனைவியிடம் ரொட்டி செய்யச் சொல்லிவிட்டு, இருள் படரத் தொடங்கியபின், அண்ணலாரைக் காணச் சென்று, மெல்லிய குரலில், "உணவு தயார் செய்திருக்கின்றேன். என் வீட்டுக்குத் தாங்கள் வரவேண்டும், அல்லாஹ்வின் தூதரே!" என அழைத்து நின்றார்.

 

ஆனால், நபி (ஸல்) அவர்களோ, ஜாபிரின் உள்ளங்கையை அவர்களின் உள்ளங்கையோடு பொருத்தி, ஜாபிரின் விரல்களை நபியின் விரல்களால் முடிச்சுப் போட்டதுபோல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அங்கே பசியோடும், களைப்போடு நின்ற ஆயிரக் கணக்கானவர்களையும் பார்த்து 'தோழர்களே! ஜாபிருடைய வீட்டில் எல்லோருக்கும் உணவு தயாராக உள்ளது. ஜாபிர் உங்களை அழைக்கின்றார். அவர் வீடு நோக்கி எல்லோரும் விரையுங்கள்' என்றார்கள்.

 

ஜாபிர் (ரலி) அவர்களுக்கோ, ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்றது. இன்னொரு பக்கம் பயம் பற்றிக் கொண்டது! இக்கட்டான சூழலில் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொல்லிக் கொண்டே மனைவியை எச்சரிக்க வீட்டை நோக்கி விரைந்தார். 

 

மனைவி கேட்டார்: அவர்கள் அனைவரையும் நீங்கள் அழைத்தீர்களா அல்லது அல்லாஹ்வின் தூதர் அழைத்தார்களா?’ ‘அல்லாஹ்வின் தூதர்தாம்!’ 'அப்படியானால் அவர்கள் வரட்டும். நீங்கள் கவலையை விடுங்கள்' என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வீட்டிற்குள் நுழைந்தார்கள். நபியவர்களின் முன்னால் உணவு வைக்கப்பட்டது. இறுதித் தூதர் (ஸல்) அமர்ந்து இறைவனிடம் இறைஞ்சினார்கள். தோழர்களிடம், 'அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள். அன்று அகழில் பணியாற்றிய அத்தனைத் தோழர்களும் ஒருவர் விடாமல் வயிறார உணவுண்டு முடித்தார்கள். பின்னரும் சிறிது ரொட்டியும் மாமிசமும் மீதமிருந்தது.                                            ( நூல்: புகாரி )

 

உயர்வின் உச்சநிலை…

 

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் கடும் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது நபி {ஸல்} அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னைக் காண நடந்தே என் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். நபி {ஸல்} அவர்கள் உளூச் செய்து விட்டு மீதமிருந்த தண்ணீரைக் கொண்டு என் முகத்தில் தெளித்தார்கள். நான் தெளிவு பெற்று பார்க்கும் போது என்னருகே நபி {ஸல்} அவர்கள் இருப்பதை நான் கண்டேன்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! என் சொத்துக்களை நான் என்ன செய்வது? நானோ கலாலாவாக – பெற்றோர்கள், மனைவி, மக்கள் இல்லாதவராக இருக்கின்றேன். எனக்கு ஒன்பது சகோதரிகள் மட்டுமே இருக்கின்றார்கள். நான் (இந்த வியாதியில் இறந்து விட்டால்) என் சொத்துக்களை என்ன செய்வது? யாருக்கு விநியோகிப்பது?” என்று கேட்டேன். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் எந்தப்பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்கள். பின்னர் அந்நிஸா அத்தியாயத்தின் 176 வது வசனம் இறக்கியருளப்பட்டது என்று” ஜாபிர் (ரலி அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

 

இந்த சந்திப்பின் பின்னர் அவர்கள் பூரண குணமடைந்து தங்களது 94 –ம் வயதில் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் ஆட்சிக் காலத்தில் மதீனாவில் இறப்பெய்தினார்கள். மதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழரும் ஜாபிர் (ரலி) அவர்கள் தாம்.

 

தங்களின் தந்தை பெற்ற கடனான 30 வஸக் பேரீத்தம் பழங்களை அடைக்க வழியில்லாமல் விழி பிதுங்கி நின்ற ஒரு நபித்தோழரின் வாழ்வில் பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத் எப்படியான மாற்றங்களையெல்லாம் நிகழ்த்தியது.

 

மதீனாவின் மகத்தான பெண்மணி…

 

وقال  الإمام أحمد: حدثنا عبد الرزاق، أخبرنا مَعْمَر، عن ثابت البُنَاني، عن أنس قال: خطب النبي صلى الله عليه وسلم على جُلَيْبيب امرأة من الأنصار إلى أبيها، فقال: حتى أستأمر أمها. فقال النبي صلى الله عليه وسلم: فنعم  إذًا. قال: فانطلق الرجل إلى امرأته،فذكر ذلك لها  ، فقالت: لاها الله ذا  ، ما وجد رسول الله صلى الله عليه وسلم إلا جلَيبيبا، وقد منعناها من فلان وفلان؟ قال: والجارية في سترها  تسمع. قال: فانطلق الرجل يريد أن يخبر النبي صلى الله عليه وسلم بذلك. فقالت الجارية: أتريدون أن تَرُدّوا على رسول الله صلى الله عليه وسلم أمره؟ إن كان قد رضيه لكم فأنكحوه. قال: فكأنها جَلَّت عن أبويها، وقالا صدقت. فذهب أبوها إلى رسول الله صلى الله عليه وسلم فقال: إن كنت رضيته فقد رضيناه. قال: "فإني قد رضيته". قال: فزوجها  ، ثم فزع أهل المدينة، فركب جُلَيْبيب فوجدوه قد قتل، وحوله ناس من المشركين قد قتلهم، قال أنس: فلقد رأيتها وإنها  لمن أنفق بيت بالمدينة  .

 

وقال  الإمام أحمد: حدثنا عفان، حدثنا حماد -يعني: ابن سلمة -عن ثابت، عن كنانة بن نعيم العدوي، عن أبي برزة الأسلمي أن جليبيبا كان امرأ يدخل على النساء يَمُرّ بهن ويلاعبهن، فقلت لامرأتي: لا يدخلن اليوم عليكم  جُليبيبُ، فإنه إن دخل عليكم  لأفعلن ولأفعلن. قال: وكانت الأنصار إذا كان لأحدهم أيّم لم يزوجها حتى يعلم: هل لنبي الله صلى الله عليه وسلم فيها حاجة أم لا ؟ فقال رسول الله صلى الله عليه وسلم لرجل من الأنصار: "زوجني ابنتك". قال: نعم، وكرامة يا رسول الله  ، ونُعْمَة عين. فقال: إني لست أريدها لنفسي. قال: فلمن يا رسول الله؟ قال: لجليبيب.

 

 

ஒரு முறை நபி {ஸல்அவர்கள்ஜுலைபீப் (ரலி) அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையாஎன்று கேட்டார்கள்.

 

அதற்கு ஜுலைபீப் அவர்கள் ”அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்என்று விரக்தியுடன் கேட்டார்”.

 

தோழரேஅல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லைஊரின் இந்த பகுதியில் உள்ள (ஒரு இடத்தை சுட்டிக்காட்டிஇன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்அவர்கள்.

 

அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள்அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல்ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.                        

 

 ப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து….

 

வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன்நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்”  என்று கூறிவிட்டு....

 

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا (36)

 

 “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்தார்கள்.

 

பின்பு  என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன்ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்”  என்று கூறினார்கள்.

 

                                            (நூல்: இப்னு கஸீர், பாகம்:3)

 

جليبيب بضم الجيم، على وزن قنيديل، وهو أنصاري، له ذكر في حديث أبي برزة الأسلمي في إنكاح رسول الله صلى الله عليه وسلم ابنة رجل من الأنصار، وكان قصيراً دميماً، فكأن الأنصاري أبا الجارية وامرأته كرها ذلك، فسمعت الجارية بما أراد رسول الله صلى الله عليه وسلم فتلت قول الله: " وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم " وقالت: رضيت، وسلمت لما يرضى لي به رسول الله صلى الله عليه وسلم، فدعا لها رسول الله، وقال: " اللهم اصبب عليها الخير صباً، ولا تجعل عيشها كداً " ز فكانت من أكثر الأنصار نفقة ومالاً.

 

நபி {ஸல்அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலிவிவரித்துக்கொண்டிருந்தார்கள்.

 

 அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்அவர்கள்

இறைவாஅப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான

 நலவுகளையும் கொட்டுவாயாககேடுகளும்சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே!” என்று அகம் மகிழ துஆ செய்தார்கள்.

 

                இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள் மதீனாவிலேயே, 

அன்ஸாரிப்பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள்

 கண்டதில்லை  என்று கூறுகின்றார்கள்.   ( நூல்: உஸ்துல் ஃகாபா, இஸ்தீஆப்,பாகம்:1, பக்கம்:155,156 )

 

தூய வாழ்க்கைக்கு உரியவரான இளைஞர்…

 

அபூ உமாமா அல் பாஹிலீ {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

 நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார். வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே! எனக்கு  நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்என்றார்.                                         

            அங்கிருந்த நபித்தோழர்கள் அவரை தாக்கிட முனைந்தனர். நபித்தோழர்களில் ஒருவர் இப்படிக் கேட்டார் அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் கழுத்தை கொய்து விடுகின்றேன்.  அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்என்பது போன்று சைகை செய்தார்கள்.                       

 

 பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் உன் தாய் விபச்சாரம் செய்திட நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.              

 இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.என்றார் அவ்வாலிபர்.                   

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள். பதறித்துடித்தவராக, அவ்வாலிபர் ஒரு போதும் எனது மனம் விரும்பிடாதுஎன்றார் அவ்வாலிபர்.                                  

 

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் அப்படித்தான் நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும்  இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள். மீண்டும், அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா? உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள். அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் கேட்டு விட்டோம்என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.                                        

அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, இல்லை, இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்என்றார்.                                                          

அதன் பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவரை நோக்கி சீர் திருத்தும் தொணியில் உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!என்று கூறினார்கள்.                                                  

 

இதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் அல்லாஹ்வின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன் கேட்டார்.                          

 

அவரை அருகில் அழைத்த மாநபி {ஸல்} அவர்கள், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, யாஅல்லாஹ்! இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! யாஅல்லாஹ்! இவரின் பிழைகளை பொறுத்தருள்வாயாக! யாஅல்லாஹ்! இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக! என்று துஆ செய்தார்கள்.

 

இறுதியாக அந்த வாலிபர் பெருமானார் {ஸல்} அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது….                                 

 இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம் தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டதுஎன்று சொல்லியவாறே சென்றார்.                                     

 

 இந்த சம்பவத்தை அறிவிக்கும் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை. (நூல்: முஸ்னத் அஹ்மத், பாகம்:5, பக்கம்:256,257.)

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), உர்வா இப்னு அல் ஜஃது (ரலி), மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அபூகதாதா (ரலி) என வியக்க வைக்கும் வரலாறுக்கு சொந்தக்காரர்கள் நிறையவே இருக்கின்றார்கள். எனினும் மேற்கூறப்பட்ட சில செய்திகளே போதுமானதாகும்.

 

நாம் விஷயத்து வருவோம்! இன்றைக்கும் பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவைப் பெற்றுத் தருகிற இரண்டு அமல்களில் ஒரு அமல் தம்பதியர்களாய் வாழ்வில் இணையும் ஆணும், பெண்ணும் வாழ்வில் இணையும் அந்த நாளில் இருந்து துவங்க வேண்டும்.

 

தவறியவர்கள் நாளையில் இருந்து கூட துவங்கலாம்.

 

இரண்டாம் அமல், தம்பதியர்களாய் இணைந்து இல்லற வாழ்வில் ஒன்றறக் கலந்ததன் அடையாளமாக அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நமது சந்ததிகளோடு தொடர்பில் இருக்கிற அமலாகும்.

 

இந்த இரண்டையும் நாள் தோரும் நாம் செய்து வருகிற போது பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத்தை வாழ்க்கையின் இறுதி வரை மரணத்தின் விளிம்பு வரை ஏன்? மஹ்ஷரில் கூட நாம் அனுபவிக்க முடியும்.

 

அந்த இரண்டு துஆக்கள் எதுன்னு நீங்க ஆர்வமா இருக்கிறது தெரிகின்றது. இதோ!!

وعَنْ أَبي هُريرة 

، قَالَ: قالَ رسُولُ اللَّهِ ﷺ

 رحِمَ اللَّه رَجُلا قَامَ مِنَ اللَّيْلِ، فصلىَّ وأيْقَظَ امرأَتهُ، فإنْ أَبَتْ نَضحَ في وجْهِهَا الماءَ، رَحِمَ اللَّهُ امَرَأَةً قَامت مِن اللَّيْلِ فَصلَّتْ، وأَيْقَظَتْ زَوْجَهَا فإِن أَبي نَضَحَتْ فِي وجْهِهِ الماءَ 

 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அருள் புரிவானாக! இரவில் எழுந்து, இறைவனைத் தொழுது தன்னுடைய மனைவியையும் இறைவனைத் தொழுவதற்காக எழுப்புகின்றார். தூக்கக் கலக்கத்தில் எழுந்திருக்க மறுக்கும் தம் மனைவியின் முகத்தில் தண்ணீரை தெளிக்கின்றாரே! (தெளித்து கண் விழித்து தொழ வைக்கின்றாரே!) அந்த மனிதனுக்கு அருள் புரிவானாக! “அல்லாஹ் ஒரு பெண்ணுக்கு அருள் புரிவானாக! இரவில் எழுந்து, இறைவனைத் தொழுது தன்னுடைய கணவனையும் இறைவனைத் தொழுவதற்காக எழுப்புகின்றார். தூக்கக் கலக்கத்தில் எழுந்திருக்க மறுக்கும் தம் கணவரின் முகத்தில் தண்ணீரை தெளிக்கின்றாரே! (தெளித்து கண் விழித்து தொழ வைக்கின்றாரே!) அந்த பெண்ணுக்கு அருள் புரிவானாக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

روي عن ابن عمر رضي الله عنهما.

رحم الله والدًا أعان ولده على بِرِّه

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பெற்றோருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அவர்கள் தங்கள் குழந்தைகளை தங்களுக்கு உபகாரிகளாக ஆக்கும் விஷயத்தில் உதவி புரிகின்றார்களே! அத்தகைய பெற்றோருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அல்ஜாமிவுஸ் ஸகீர் )

இன்று தங்களது பிள்ளைகளை டாக்டர்களாக, கலெக்டர்களாக, எஞ்சினீயர்களாக பெரிய பெரிய படிப்பு படித்தவர்களாக உருவாக்கும் எத்துனை பெற்றோர்கள், தங்களை மதிக்கும், தங்களின் மீது கருணை காட்டும், தங்களின் வாழ்வில் இறுதி நேரத்தில் இரக்கத்தோடு நடந்து கொள்ளும் உபகாரம் செய்யும் பிள்ளைகளை உருவக்கி இருக்கின்றார்கள்?

 

இந்த இரண்டு அமல்களை இந்த உம்மத் அலட்சியமாக விட்டதன் விளைவுகளை இன்று நாம் சமூகத்தில் கண்கூடாக கண்டு வருகின்றோம்.

 

பெருமானார் {ஸல்} அவர்கள் துஆவின் பரக்கத் இல்லாத ஒரு வாழ்வும் ஒரு வாழ்வா?

 

பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத்தை அனுபவிக்காத ஒரு முஸ்லிம் முஸ்லிமா?

 

சிந்திப்போம்! இன்றே செயல்படுத்த முயற்சிப்போம்! பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவின் பரக்கத்தை அனுபவித்து வளமான. நிம்மதியான வாழ்வை வாழ்வோம்!!!

4 comments:

  1. பெருமானாரின் துஆ வினால் நமது வாழ்வு வளம் பெறட்டுமாக

    அற்புதமான அறிவை வளர்க்க ஏதுவான கட்டுரை

    பாரக்கல்லாஹ் உஸ்மானியாரே பாரக்கல்லாஹ்

    ReplyDelete
  2. نضر الله امرأ سمع مقالتي وحفظها واداها كما سمعها என்ற நபிமொழியின் அடிப்படையில் அல்லாஹ் உங்களுடைய ஈருலக வாழ்வையும் செழிப்பாக்குவானாக! ஆமீன் யாரப்பல்ஆலமீன்

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்! லாக்டவுன்ல ஜும்ஆ நடைபெற வில்லையென்றாலும் தங்களது ஆக்கத்தை தாங்கள் வழங்குவதில் எந்த தங்குதடையுமில்லை..
    الحمد لله وجزاكم الله خيرا حضرت

    ReplyDelete
  4. அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்ளட்டும் சிறந்த கூலியை தரட்டும் உங்களின் வார்த்தைகள் மிகச்சிறந்த ஞானத்தை ஊட்டுகிறது கண்ணியமிகு உஸ்தாத் அஸ்ஸலாமு அலைக்கும்

    ReplyDelete