Thursday, 7 October 2021

 

வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய

வாஞ்சை நபி {ஸல்} அவர்கள்!!!

 


உலகில் தலைவர்களாக வலம் வந்த பலர் மக்களுக்கும், உலகிற்கும்  பல்வேறு திட்டங்களை அறிவித்தனர்.

அறிவித்த திட்டங்களில் சில திட்டங்களை நிறைவேற்றவும் செய்தனர். ஆனால், சில திட்டங்கள் காலப்போக்கில் காணாமல் போயின. இன்னும் சில திட்டங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. பல்வேறு திட்டங்கள் இன்றளவும் வார்த்தைகளாக மட்டுமே இருக்கவும் செய்கின்றன.

உலகில் ஹீரோயிசம் காட்டிவரும் பலரும் மக்களுக்கான, உலகிற்கான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக கூறி வருகின்றனர். இன்றளவும் தீராத பிரச்சினைகளாகவே அவைகள் இருந்து வருகின்றன.

ஆனால், இந்த உலகத்தில் ஒருவர் வாழ்ந்தார். தலைமைத்துவத்துக்கே இலக்கணமாக வாழ்ந்தார். நடிக்கத்தெரியாத ஆனால், வாழ்ந்து காட்டத் துணிந்த முதல் தர ஹீரோவாக ஜொலித்தார்.

வார்த்தைகளாக மட்டுமே பார்க்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல் படுத்தி மக்களுக்கு வாழ்க்கையாக்கினார். தீர்வுகளே கிடையாது என்று கைவிடப்பட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வுகளை வழங்கினார். மாற்றவே முடியாது என்று கூறி மக்களை மடைமாற்றம் செய்த பல்வேறு காரியங்களை மாற்றிக் காட்டிமாற்றம் ஒன்றே மாறாததுஎனும் தத்துவத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தார்.

சொல்வதை மட்டுமே செய்து கொண்டிருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் தாம் சொல்லாததையும் செய்து காட்டி மக்களை மகிழ்வித்தார்.

அவர் ஒரு சிறந்த தலைவர். மிகச்சிறந்த முன்மாதிரி மனிதர் ஆம்! அவர் தாம்வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல் நபி {ஸல்} அவர்கள்ஆவார்கள்.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

அல்லாஹ் அவனை நம்பியவர்களின் மீது திண்ணமாக பேருபகாரம் செய்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர், அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களை தூய்மையாளர்களாக ஆக்குகின்றார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக! அவர்கள் இதற்கு முன்னர் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருக்கின்றனர்”.          ( அல்குர்ஆன்: 3: 164 )

வார்த்தையளவில் இருக்கும் சமத்துவம்

சர்வதேச அளவில் இன்றைய நாள் வரை கேள்விக்குறியாக இருக்கும் ஓர் அம்சம் இருக்குமேயானால் அது சமத்துவம்சம உரிமை தான்.

சர்வதேச அளவில் இனத்தால், நிறத்தால், மொழியால் வேற்றுமை பாராட்டி, பாகுபாட்டுடன் நடத்தப்படுகிற அவலங்களுக்கு எதிரான கோஷங்கள் இங்கு நீண்ட காலமாகவே முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கடைபிடிக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிற அவலங்களை எதிர்த்து பன்னெடுங்காலமாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு சட்டங்களை இயற்றி, அது செய்து விடுவோம் இது செய்து விடுவோம் என்று பூச்சாண்டி காட்ட முடிகிறதே தவிர தீண்டாமையை ஒழித்து, பாகுபாட்டை அழித்து சமத்துவத்தை, சம உரிமையை நிலை நாட்ட முடியவில்லை.

ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, அண்ணல் அம்பேத்கர், ஈவேரா என போராட்ட தலைவர்களின் புரட்சிகர தீர்வுகள் இருப்பதாக கூறினாலும் சமூகத்தில் தீர்வு என்னவோ இன்னும் ஜீரோ நிலைதான்.

உலகத்தையே திரும்பிப்பார்க்க வைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது உலகில் எங்கேனும் நடப்பதுண்டு. அப்படி நடந்த ஒரு சம்பவம் தான்ஜார்ஜ் ப்ளாயிட்சம்பவம்.

நவ நாகரீக, நவீன விஞ்ஞான உலகில் இப்படியும் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வார்களா? என மக்கள் எல்லோராலும் கேட்க்கப்பட்ட, உலகையே உலுக்கிய சம்பவம் அது என்றால் மிகையாகாது.

இனவெறியால் உயிரிழந்த ஜார்ஜ் ப்ளாயிட்

2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதியன்று, மின்னியாபோலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க காவல் துறையினர் வந்துள்ளனர்,

காவலர் அவரை நெருங்கியபோது ஜார்ஜ் ஃப்ளாய்ட் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது 

46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட "காவல் துறையின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்" என அவரது மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டது.

கைது முயற்சியின்போது 20 முறைக்கும் மேல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ''என்னால் மூச்சுவிட இயலவில்லை'' என்று கூறியதுடன், அம்மா, அம்மா என்று அழைத்துக்கொண்டே, ''ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்" என மன்றாடினார். அவசர ஊர்தி வந்தபோது அசைவற்றுக் கிடந்தார். ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைது செய்யப்பட்ட போது, தற்போது 45 வயதாகும் முன்னாள் காவல் அதிகாரி டெரிக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேல் முழங்காலை வைத்து அழுத்தியது படம்பிடிக்கப்பட்டது. மிகவும் பரவலாக பகிரப்பட்ட இந்தக் காணொளி இனவெறிக்கு எதிராகவும் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராட்டங்களைத் தூண்டியது.

இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை குற்றம் மற்றும் மனிதக் கொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் டெரெக் சாவின் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் இன்னொரு நபரை உள்நோக்கம் எதுவும் இல்லாமல் கொன்று விடுவதை மனிதக் கொலை குற்றமாக அமெரிக்க சட்டங்கள் வகைப்படுத்துகின்றன.

இரண்டாம் நிலை கொலை குற்றத்தில் ஒருவரது கொலைக்கு காரணமான செயல்கள் அவரைக் கொல்லும் நோக்கத்துடனோ நோக்கம் இல்லாமலோ இருக்கலாம். இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் 40 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஒருவர் அல்லது பலரது மரணத்திற்கு காரணமாகும் வகையில் ஒரு நபர் செய்யும் செயல்கள் மூன்றாம் நிலைக் கொலைக் குற்றமாக வகைப்படுத்தப்படுகிறது.

முன்னாள் காவல் அதிகாரி டெரெக் சாவினை விடுதலை செய்வதா இல்லை அவரை சிறைக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பு 12 நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலம் முழுவதும் அவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவர்கள் வயதில் குறைந்தவர்களாகவும், அவர்களில் அதிகம் பேர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், கூடுதல் எண்ணிக்கையில் பெண்களாகவும் இருந்தனர்.

இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்து, மேலும், 22 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர். ( நன்றி: மாலைமலர், சென்னை பதிப்பு, ஜூன் 26, 2021 03:19 பிபிஸி நியூஸ் தமிழ் 21 ஏப்ரல் 2021 )

22 ஆண்டுகள் 6 மாத சிறைத்தண்டனை என்பது அநியாயமாக இனப்பாகுபாட்டால் கொல்லப்பட்ட ஒருவரின் உயிருக்கு ஈடாகுமா? உண்மையில் எதிர் வரும் காலங்களில் இனப்பாகுபாடு பிரச்சினைகளுக்கு இது போன்ற தண்டனைகள் தீர்வாகுமா?

அப்படியென்றால் இங்கு எது தேவை? எந்த மாதிரியான செயல்களை மேற்கொண்டால் இன ரீதியான, மொழி ரீதியான, நிற ரீதியான பாகுபாடுகள் நீங்கும்? சமத்துவமும், சம உரிமையும் தழைத்தோங்கும்?

இப்படியான கேள்விகளோடு நாம்வள்ளல் நபி” {ஸல்} அவர்களின் வாழ்வை அணுகினால் அங்கே ஆயிரமாயிரம் விடைகள் வானளாவ கிடைக்கின்றது.

வாழ்க்கையாக்கப்பட்ட சமத்துவம்

அன்றைய அரபுலக மக்கள் குலப்பெருமையாலும், இன பேதத்தாலும், நிற வெறியாலும், மொழி பாகுபாட்டாலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், தலைமுறைக்கும் பகைமையை வளர்த்து பழிதீர்த்துக் கொண்டும் இருந்த கால கட்டத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அம்மக்களிடையே ஏகத்துவ சுகந்தத்தை, இஸ்லாமிய அழைப்பை அறிமுகப் படுத்தினார்கள்.

இன, நிற, மொழி ரீதியான பாகுபாடு, பேதம் ஆகியவற்றின் வீரியத்தை, அதன் விபரீதத்தை அல்லாஹ்வின் அழகிய வழிகாட்டலோடு அங்குலம் அங்குலமாய் தெளிவு படுத்தினார்கள்.

மனிதன் தன் சக மனிதன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தும், கொடுக்க வேண்டிய உரிமைகளிலிருந்தும் புறக்கணித்து ஒதுங்கி நிற்கும் போது தான் தீண்டாமை உருவாகிறது என்று கூறி மாசு படிந்திருந்த அவர்களின் இதயங்களைத் தூய்மைபடுத்தினார்கள்.

சக மனிதனின் மீதான உரிமையை, கடமையை நிறைவேற்றும் போது இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் வெகுமதிகளைக் குறித்து ஆர்வமூட்டி, சக மனிதனின் மீதான உரிமைகளில், கடமைகளில் தவறிடும் பட்சத்தில் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் சாபங்களைக் குறித்து எச்சரித்து சக மனிதர்களை சமத்துவமாகக் கருதுகிற, சகோதரனாக பாவிக்கிற ஓர் உன்னத நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்தார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

அன்றிலிருந்து தான் அரபுலக மக்கள் மானுடத்தின் வசந்தத்தைநுகர ஆரம்பித்தார்கள்.

1. மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே!

 

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ()

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவராவார். அல்லாஹ்வே நன்கறிபவன்; நன்கறிந்தவன்”.                                              (அல்குர்ஆன்:49:13)

இந்த ஓர் இறைவசனத்தின் உதவி கொண்டு பெருமானார் {ஸல்} அவர்கள் இறைவனின் பெயரால் நிலவி வந்த தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

மனித இனம் முழுமையும் ஆதம், ஹவ்வா (அலை) என்கிற ஒரே ஜோடியின் மூலம் தான் படைக்கப்பட்டுள்ளனர். மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பால், இனத்தால், மொழியால், நிறத்தால் கலாச்சாரத்தால், நாட்டால் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது என்ற தீண்டாமைக்கு எதிரான இந்த முதல் பிரகடனமே அம்மக்களின் அறியாமைக்கு திரையிட்டது.

நபி (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமூகத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழி வெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.

தம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்டே அந்தச் சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்றே குறிப்பிட்டனர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருத முன்வரவில்லை. 

மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.

மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில்.... 

حدثنا ‏ ‏إسماعيل ‏ ‏حدثنا ‏ ‏سعيد الجريري ‏ ‏عن ‏ ‏أبي نضرة ‏ ‏حدثني ‏ ‏من ‏‏سمع خطبة رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏في وسط ‏ ‏أيام التشريق ‏ ‏فقال (( يا أيها الناس ألا ‏ ‏إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على أعجمي ولا ‏ ‏لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى
هذا الحديث قد رواه الإمام أحمد بن حنبل في ( باقي مسند الأنصار - رقمه 22391

 மக்களே! அறிந்து கொள்ளுங்கள்!! உங்கள் இறைவன் ஒருவனே!!  உங்கள் தந்தையும் இருவரே!! அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது  சிகப்பாக இருக்கின்ற எவரும், கருப்பாக இருப்பவரை விட சிறந்தவராக மாட்டார். கருப்பாக இருக்கின்ற எவரும், சிகப்பாக இருப்பவரை விட சிறந்தவராக மாட்டார். ஆனாலும், இறையச்சம் தான் சிறப்பைத் தீர்மானிக்கும்என்று பிரகடனம் செய்தார்கள்.

தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் 

2. தீண்டாமையில் உழல்பவன் சுவனம் செல்லத் தடை.

பிற மனிதர்களை எந்த நிலையிலும் அவர்கள் தம்மை விட தாழ்ந்தவர்களாகக் கருதுவதும், தன்னை உயர்வாகக் கருதுவதும் தான் ஒரு வகையில் தீண்டாமை வேர் விட்டு வளர காரணம் என்பதை உணர்ந்த நபி {ஸல்} அவர்கள் அதற்கு இப்படி ஓர் தடை உத்தரவை பிறப்பித்தார்கள்.

وعن عبد الله بن مسعود رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا، ونعله حسنة ؟ قال: إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس رواه مسلم .

بطر الحق: دفعه ورده على قائله غمط الناس: احتقارهم .

எவருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த ஓர் சபையில் பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அப்போது, நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது செருப்பு அழகாக இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகின்றார். இதுவும் தற்பெருமையாக கருதப்படுமா?” என்று வினவினார்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ் அழகானவன்; அழகையே விரும்புகின்றான். உண்மையில், தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மக்களைக் கேவலமாக எண்ணுவதும் தான் என்று பதில் கூறினார்கள்.

3. தொழில் ரீதியிலான பாகுபாட்டிற்கு தடை.

அன்றைய சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு தொழிலை, குறிப்பிட்ட சமூக மக்கள் தான் செய்ய வேண்டும் என்ற நிலையும், அத்தகைய தொழிலை மேற்கொள்பவர்கள் இழிநிலை கொண்டோராக கருதப்படுவதையும் கண்ட மாநபி {ஸல்} அவர்கள், அதை களைவதற்கு அந்த தொழிலில் தம்மையும் ஈடுபடுத்தி, தொழிலில் எதுவும் இழிந்த தொழில் இல்லை என்பதை உணர்வுப்பூர்வமாக நிரூபித்துக் காட்டினார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் அனுப்பிய எல்லா இறைத்தூதர்களும் ஆடு மேய்த்திருக்கின்றார்கள் என்று நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த ஓர் சபையில் அண்ணலார் {ஸல்} அவர்கள் கூறிய போது, நபித்தோழர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் ஆடு மேய்த்திருக்கின்றீர்களா?” என்று ஆச்சர்யத்தோடு வினவிய போது, “ஆம்! நானும் மக்காவாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான் என நெகிழ்ச்சியோடு பதில் கூறினார்கள்.

وعن الأسود بن يزيد قال: سئلت عائشة رضي الله عنها: ما كان النبي صلى الله عليه وسلم يصنع في بيته ؟ قالت: كان يكون في مهنة أهله - يعني: خدمة أهله - فإذا حضرت الصلاة، خرج إلى الصلاة رواه البخاري .

أنه كان النبي صلى الله عليه وسلم في بيته في خدمة أهله يحلب الشاة يخصف النعل، يخدمهم في بيتهم،

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மக்களில் சிலர் வந்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?” என்று வினவியதற்கு, “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வீட்டில் தமது அறுந்து போன செருப்பைத் தைப்பார்கள். தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் எங்களோடு இணைந்து செய்வார்கள். ஆடுகளின் பாலைக் கறந்து தருவார்கள் என்று பதிலளித்தார்கள்.                         ( நூல்: புகாரி  

حدثنا أحمد بن عثمان، حدثنا شريح بن مسلمة، حدثني إبراهيم بن يوسف، حدثني أبي، عن أبي إسحاق، عن البراء يحدث قال: لما كان يوم الأحزاب وخندق رسول الله رأيته ينقل من تراب الخندق، حتى وارى عني التراب جلدة بطنه، وكان كثير الشعر، فسمعته يرتجز بكلمات عبد الله بن رواحة، وهو ينقل من التراب

அகழ்யுத்தத்தின் போது நபி {ஸல்} அவர்கள் மக்களுடன் இணைந்து அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டார்கள். மண் சுமந்தார்கள். அப்போது நபிகளாரின் வயிற்றுப் பகுதியை மண் மறைத்திருந்ததை நான் பார்த்தேன் என பர்ராஃ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                       ( நூல்: புகாரி )

عن هشام عن عروة ، عن أبيه ، عن عائشة أن رسول الله - صلى الله عليه وسلم - رأى في جدار القبلة بصاقا ، أو مخاطا ، أو نخامة فحكه .

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பள்ளிவாசலில் எங்கேனும் சளியைக் கண்டால் அதைத் தாமே தங்களின் கையால் சுரண்டி சுத்தம் செய்வார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.            ( நூல்: புகாரி )

فإن أول عمل قام به النبي صلى الله عليه وسلم عندما قدم إلى المدينة المنورة هو بناؤه لمسجده الشريف في المكان الذي بركت فيه ناقته، وكان ملكاً ليتيمين فاشتراه النبي صلى الله عليه وسلم وأقام عليه المسجد، وكان يعمل فيه بنفسه مع أصحابه الكرام، وقد بدأ بناء المسجد في ربيع الأول سنة واحد من الهجرة بعد وصول النبي صلى الله عليه وسلم مباشرة، كما جاء في كتاب "الرحيق المختومللمباركفوري وغيره.

நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தடைந்த போது, இறையில்லத்தை நிர்மாணித்தார்கள். மக்களோடு சேர்ந்து தாமும் கல்லையும், மண்ணையும் சுமந்தார்கள்.                                              ( ரஹீக் அல் மஃக்தூம் )

இப்படி படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வந்த மாநபி {ஸல்} அவர்கள் அடுத்த கட்ட நகர்வாக திருமண பந்தத்தின் மீதான பாகுபாட்டைக் களையும் விதமாக அமைந்தது.

مرّ رجلٌ على رسول الله صلى الله عليه وسلم فقال: «ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن يُنْكح، وإن شَفَع أن يُشَفّع، وإن قال أن يُسْتمع له. قال: ثم سكت، فمر رجل من فقراء المسلمين فقال: ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن لا يُنْكح، وإن شَفَع أن لا يُشَفّع، وإن قال أن لا يُسْتمع له، فقال رسول الله صلى الله عليه وسلم

«هذا خيرٌ من ملء الأرض من مثل هذا» «»

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்கள் சிலரும் அமர்ந்திருந்த இடத்தை ஒரு மனிதர் கடந்து சென்றார்.

அப்போது, அண்ணலார் இவர் மீதான உங்களின் அபிப்பிராயம் என்ன?” என்று வினவியதற்கு நபித்தோழர்கள் இவர் சுதந்திரமான ஒருவர், இவர் திருமணம் செய்ய பெண் கேட்டால், மணமுடித்து வைக்கப்படுவார். ஏதேனும் ஒரு விவகாரத்தில் இவர் பரிந்துரைத்தால் உடனடியாக இவரின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். அவர் ஏதாவது சொன்னால் செவி தாழ்த்தி மக்களெல்லாம் கேட்பார்கள் என்று பதில் கூறினார்கள் 

இது கேட்ட மாநபி {ஸல்} அவர்கள், சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் அண்ணலாரின் சபையைக் கடந்து சென்ற ஒரு ஏழை முஸ்லிமைக் குறித்து இவரின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று வினவினார்கள்

அதற்கு, நபித்தோழர்கள், “இவரும் ஒரு சுதந்திரமான மனிதர் தான், எனினும் இவர் பெண் கேட்டால் எவரும் கொடுக்க முன் வர மாட்டார்கள். இவர் பரிந்துரைத்தால் அது பரிசீலிக்கப்படவே மாட்டாது. இவர் பேச்சை எவரும் காது கொடுத்து கேட்கவும் மாட்டார்கள் என பதிலளித்தனர்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நீங்கள் முதலில் விமர்சித்த நபரை விடவும், நிரப்பமான இந்த பூமியை விடவும் இந்த ஏழை மனிதர் தான் மிகவும் சிறந்தவர் என கூறினார்கள்.                              ( நூல்: புகாரி ) 

மனிதர்களை மதிப்பதின் மீதான உங்களின் அளவீடுகளும், அணுகுமுறையும் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டி சுயமரியாதை உள்ள எந்த ஒருவரும் மதிக்கப்பட வேண்டும் என்பதை நபிகளார் தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.

ذكره أبو داود في (المراسيل)، حدثنا عمرو بن عثمان وكثير بن عبيد قالا حدثنا بقية بن الوليد قال حدثني الزهري قال: أمر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بني بياضة أن يزوجوا أبا هند امرأة منهم، فقالوا لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

نزوج بناتنا موالينا؟  فأنزل الله عز وجل:" إِنَّا خَلَقْناكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثى وَجَعَلْناكُمْ شُعُوباً" الآية. قال الزهري: نزلت في أبي هند خاصة.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பனூ பயாளா எனும் கோத்திரத்தார்களிடம் நீங்கள் உங்கள் கோத்திரப் பெண்களில் ஒருவரை அபூ ஹிந்த் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு அம்மக்கள் உயர் குலத்துப் பெண்களான எங்களின் பெண்மக்களில் ஒருவரை எங்களிடம் சேவகம் செய்யும் அடிமை குலத்து வம்சத்தைச் சார்ந்த ஒருவருக்கு நாங்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் ஹுஜுராத் அத்தியாயத்தின் 13 –ஆவது வசனத்தை இறக்கியருளினான்.                                                                            ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

அடுத்த கட்டமாக மாநபி {ஸல்} அவர்கள் எவ்வித பின்புலமும் இல்லாத, சாமானியர்களான ரபீஆ இப்னு கஅபுல் அஸ்லமீ (ரலி) அவர்கள், ஜுலைபீப் (ரலி) அவர்கள் ஆகியோருக்கு பெண் கொடுக்குமாறு பரிந்துரை செய்து மணம் முடித்தும் வைத்தார்கள்.

மாற்றம் முன்னேற்றம்

அந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கிய போது மக்கா வெற்றி கொள்ளப்படுகின்றது.

ஹிஜ்ரி 8 மக்கா வெற்றி கொள்ளப்பட்டு, அண்ணலார் வெற்றி வீரராய் வீற்றிருக்கின்றார்கள்.

புனித கஅபாவின் பொறுப்புகள் இணைவைப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்டு, நபித்தோழர்கள் சிலரிடம் ஒவ்வொன்றாக ஒப்படைக்கப் படுகின்றது.

ஆவலோடு எல்லோரும் காத்திருக்கும் அவ்வேளையிலே, மதிய தொழுகையான லுஹர் தொழுகையின் நேரமும் வருகின்றது.

பாங்கு சொல்வதற்காக நீக்ரோவான பிலாலை அழைத்து, கஅபாவின் மீதேறி நின்று பாங்கு சொல்லுமாறு மாநபி {ஸல்} ஆணையிட்ட போது… “கருப்பர், நீக்ரோ இவர்களெல்லாம் அந்த மக்களிடையே அடிமைகளாகவே அன்றி அவர்களை நெருங்க முடியாது என்ற நிலையில் இருந்த இந்தத் தீண்டாமையை இன்றோடு இம்மண்ணிலிருந்து வெளியேற்றி விட்டேன் என்று பெருமானார் {ஸல்} அவர்கள் பறைசாற்றும் விதமாகத்தான் அது அமைந்திருந்தது 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அடுத்து எடுத்து வைத்த அடி இருக்கிறதே அது அம்மக்களிடம் இருந்த மிச்ச சொச்ச பாகுபாடுகளையும் களையெடுக்கும் முகமாக இருந்தது.

حدثنا قتيبة بن سعيد عن إسماعيل بن جعفر عن عبد الله بن دينار عن ابن عمر رضي الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم بعثا وأمر عليهم أسامة بن زيد فطعن بعض الناس في إمرته فقام رسول الله صلى الله عليه وسلم فقال إن كنتم تطعنون في إمرته فقد كنتم تطعنون في إمرة أبيه من قبل وايم الله إن كان لخليقا للإمارة وإن كان لمن أحب الناس إلي وإن هذا لمن أحب الناس إلي بعده

 

ஆம், அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அவர்களின் மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்கு தளபதிகளாக நியமித்து, தலைமைப் பொறுப்புக்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று மார் தட்டிய குறைஷிகளின் குலப்பெருமையை குழிதோண்டிப் புதைத்தார்கள் 

மாநபி {ஸல்} அவர்கள் உருவாக்க விரும்பிய சமூகம் உருவானது

روت كتب التاريخ أن بلال بن رباح حينما ذهب يخطب لأخيه خالد بن رباح امرأة من بني حسل من قريش، قال بلال وهو يقدم نفسه وأخاه لمن يريد مصاهرتهم: "نحن من عرفتم يا قوم كنا عبدَين فأعتقنا الله وكنا ضالين فهدانا الله وكنا فقيرين فأغنانا الله! وأنا أخطب إلى خالد أخي فلانة منكم، وهي ذات حسب ودين ومروءة فإن تنكحوه فالحمد لله، روت كتب التاريخ فقالت: "خطب بلال رضي الله عنه لأخيه خالد بن رباح امرأة من بني حسل من قريش، فقال بلال وهو يقدم نفسه وأخاه لمن يريد مصاهرتهم: "نحن من عرفتم يا قوم كنا عبدَين فأعتقنا الله وكنا ضالين فهدانا الله وكنا فقيرين فأغنانا الله! وأنا أخطب إلى خالد أخي فلانة منكم، وهي ذات حسب ودين ومروءة فإن تنكحوه فالحمد لله، وإن تردوه فالله أكبر"!.
وبعدمما انتهى منكلامه وقد سمع القوم مقالته سكتوا قليلا، ثم أقبل بعضهم على بعض يقولون: "هو بلال" وليس مثله من يدفع! ثم أجمعوا على قبول الخاطب.
وبعدما انتهى المر بالقبول وقد خرج بلال وأخوه وجد خالد بن رباح في نفسه شيئا من كلام بلال فعاتبه، قائلا: "يغفر الله لك يا بلال، ألا ذكرت سوابقنا وشواهدنا مع رسول الله صلى الله عليه وسلم. وهنا صاح بلال: "مه يا خالد صدقنا فنفعنا صدق الحديث".

روى الحصين بن نمير أن بلالًا خطب على أخيه خالد، فقال: أنا بلال وهذا أخي، كنا رقيقين فأعتقنا الله، وكنا عائلين فأغنانا الله، وكنا ضالين فهدانا الله، فإن تنكحونا فالحمد لله، وإن تردونا فلا إله إلا الله، فأنكحوه، وكانت المرأة عربية من كِنْدَة.َ

மாநபி {ஸல்} அவர்களின் தூய மறைவுக்குப் பிறகு, ஒரு நாள் பிலால் (ரலி) அவர்கள் தம்முடைய ( நபி {ஸல்} அவர்களால் சகோதரத்துவ உறவு ஏற்படுத்தப்பட்ட )  சகோதரர் அபூ ருவைஹா என்ற காலித் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவின் பிரபல்யமான கோத்திரமான குரைஷ் கோத்திரத்தின் பனூ ஹஸ்ல் குடும்பத்தாரிடம் வந்து நான் பிலால், இதோ என் சகோதரர் காலித் “நாங்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்! இருவரும் அடிமைகளாக இருந்தோம். அல்லாஹ் எங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தான். நாங்கள் வறியோர்களாக இருந்தோம். அல்லாஹ் செல்வத்தை வழங்கி எங்களை வளமாக்கினான். நாங்கள் வழிகேட்டில் இருந்தோம். இஸ்லாம் எனும் நேர்வழியை அல்லாஹ் எங்களுக்கு வழங்கினான். என் சகோதரருக்கு உங்கள் குடும்பத்தாரில் இருந்தும் மார்க்கப்பற்றுள்ள, குடும்பப் பாரம்பர்யமிக்க ஒரு பெண்ணை மணமுடிக்க பெண் தந்தீர்கள் என்றால் அல்லாஹ்வைப் புகழ்வோம். தரமாட்டோம் என எங்களை திருப்பி அனுப்பி வைத்தீர்கள் என்றால் அல்லாஹ் எங்களுக்கு உதவி புரிவான்” இன்னொரு அறிவிப்பில் “அல்லாஹ்வே மிகப்பெரியவன்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அக்கோத்திரத்தினர் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். பின்னர் அவர்களில் சிலர் சிலரது முகத்தை பார்த்துக் கொண்டே “இவர் பிலால், இவர் சொல்வதை யார் தான் தட்டிவிட முடியும்” என்று கூறி பெண் தர சம்மதித்தனர். மகிழ்வோடு அங்கிருந்து இருவரும் திரும்பி வந்தனர். வரும் வழியில் அபூ ருவைஹா (ரலி) அவர்கள் “சகோதரரே! அல்லாஹ் உம்மை மன்னிக்கட்டும்! (நம்முடைய கடந்த கால நிலைகளை அவர்களிடம் சொல்லாமல்) நம்முடைய அர்ப்பணிப்புகளை, மாநபி {ஸல்} அவர்களோடு நாம் பங்கேற்ற யுத்தங்களைப் பற்றி கூறியிருக்கலாம்” என்று கடிந்து கொண்டார். அதற்கு, பிலால் (ரலி) அவர்கள் “போதும், நிறுத்துங்கள் சகோதரரே! நாம் உண்மையைத் தானே சொன்னோம். உண்மையைச் சொன்னதால் தானே நாம் பயனும் பெற்றிருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள். பின்னர் அவர்கள் சொன்னது போன்றே காலித் (ரலி) அவர்களுக்கு தங்கள் குடும்பப்பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தனர். ( நூல்: உஸ்துல் காபா, அல் இஸ்தீஆப், அல் இஸாபா )

இன்னும் சில அறிவிப்புகளில் இருவருக்கும் சேர்த்தே பெண் கேட்கப்பட்டு, மணமுடிக்கப்பட்டது என்றும் வந்துள்ளது.

அபுத் தர்தா (ரலி) அவர்களின் மகளை முஆவியா (ரலி) அவர்கள் தங்களின் மகனுக்கு மணம் முடிக்க பெண் கேட்ட போது, தமது மகள் தர்தா (ரலி) அவர்களை பெண் தர மறுத்ததோடு சாமானிய மனிதர் ஒருவருக்கு அபுத்தர்தா (ரலி) மணம் முடித்துக் கொடுத்தார்கள் என்று வரலாற்றில் வருகின்றது.

வரலாற்று ஆசிரியர் ராமகிருஷ்ண ராவ் என்பவர் தான் எழுதிய நூல் ஒன்றில் தீண்டாமை அகல வழி கூறும் போது.... 

"He must be called the Savior of Humanity. I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness."

 [The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8, 1936 

அனைத்துலக சகோதரத்துவம், மனித இன சமத்துவம் குறித்து முஹம்மது {ஸல்} அவர்கள் பறைசாற்றிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் சமூக முன்னேற்றத்திற்கு மாபெரும் சேவைகள் ஆற்றியிருப்பதை எடுத்துரைக்கின்றன.

பெரும் சமயநெறிகள் அனைத்தும் இதே கொள்கையை போதிக்கின்றன. ஆனால், இஸ்லாத்தின் தூதர் முஹம்மது {ஸல்} அவர்கள் மட்டுமே இந்தக் கொள்கையை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார்.

அந்தக் கொள்கையின் மதிப்பு முழுமையாக உணரப்பட வேண்டும். அவர்களின்  சாதனை ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.

உலக மக்களின் மனசாட்சி விழித்தெழுந்து விட்டால் இனமாச்சரியங்கள் மறைந்து விடும்; மனித இன சகோதரத்துவக் கொள்கை நடைமுறக்கு வந்து விடும்என்று குறிப்பிடுகின்றார்.

( நூல்: MOHAMMAD THE PROPHET OF ISLAM, PAGE NO: 7 )


உலகின் முதல் இனவெறி எதிர்ப்பாளர் என முஹம்மது நபியை புகழ்ந்து, ரைஸ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் டாக்டர். க்ரைக் கான்ஸ்டிடைன் (பார்க்க படம்) வெளியிட்ட வீடியோ, சமீபத்திய அமெரிக்க இனவெறி நிகழ்வுகளுக்கு பிறகு, அதிகப்படியான பார்வையாளர்களை பெற்றுவருகிறது

இன்றைய காலமே இனவெறி கொள்கைகளில் வேரூன்றி இருக்கும் போது, அன்றைய காலத்தில் இறுதித்தூதர் (அமைதி உண்டாவதாக) இனவெறியை ஒரு சமூக அவலமாக எப்படி அடையாளங்கண்டு அதனை வேரறுத்தார் என்பதை மிக எளிமையான ஆங்கிலத்தில், மிக பொறுமையாக விளக்குகிறார் க்ரைக்.

இனவெறி என்பது அறிகுறி மட்டுமே என்பதையும், அதன் உண்மையான நோய் மக்கள் மனங்களில் இருக்கும் ஆணவமே என்பதையும் மிக சரியாக கணித்து முஹம்மது நபி செயலாற்றியதாக குறிப்பிடுகிறார் க்ரைக். முக்கியமாக இனவெறியை வெறுப்பவராக மட்டும் இல்லாமல் அதற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு, தன் மக்களையும் செயல்பட வைத்த காரணத்திற்காக, நான் முஸ்லிம் இல்லை என்ற போதிலும் தன்னை மிகவும் கவர்ந்த நபராக முஹம்மது நபி இருப்பதாக அந்த காணொளியில் கூறுகிறார் க்ரைக்.

பல மொழி சப்டைட்டில்களுடன் சில நிமிடங்களே ஒடும் இந்த வீடியோ, Youtube-பில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. 

எனவே, சமத்துவம், சம உரிமை என்பது கேள்விக்குறியாக இருந்த ஒரு சமூகத்தில், வெறும் வார்த்தையாக மட்டுமே பார்க்கப்பட்ட ஒரு சமூகத்தில் பெருமானார் {ஸல்} அவர்கள் படிப்படியாக மாற்றம் செய்து, சமத்துவம் எல்லோருக்குமானது என்பதை உறுதி செய்தார்கள் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல் நபி {ஸல்} அவர்கள்.

3 comments:

  1. அல்லாஹ் அருள்வானாக
    தங்களுடைய கல்வியை பொருந்திக்கொள்வானாக

    கட்டுரையாக படிக்கும் போதே உள்ளத்தில் உவகையும் கண்ணகளில் கண்ணீரும்....

    ReplyDelete
  2. சும்மா சொல்ல கூடாது ஹழ்ரத். தங்களது போனா வேற லெவல்ல பேசுது.

    அல்லாஹ் தங்களது ரிஸ்கில் பரக்கத் செய்வானாக.ஆமீன்.

    இப்படிக்கு.
    காதிர் மீரான் மஸ்லஹி.
    பஷீர் உஸ்மானி ரசிகர் மன்றம்.
    அரக்கோணம் கிளை.

    ReplyDelete
  3. மக்களே! அறிந்து கொள்ளுங்கள்!! உங்கள் இறைவன் ஒருவனே!! உங்கள் தந்தையும் இருவரே!! அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது” சிகப்பாக இருக்கின்ற எவரும், கருப்பாக இருப்பவரை விட சிறந்தவராக மாட்டார். கருப்பாக இருக்கின்ற எவரும், சிகப்பாக இருப்பவரை விட சிறந்தவராக மாட்டார். ஆனாலும், இறையச்சம் தான் சிறப்பைத் தீர்மானிக்கும்” என்று பிரகடனம் செய்தார்கள்.

    இந்த நபிமொழியில் ஒருவரே! என்பதற்கு பதிலாக இருவரே! என்று தவறாக பதிவாகி விட்டது.

    ReplyDelete