Thursday, 17 February 2022

விழித்துக் கொள்ளுமா முஸ்லிம் சமூகம்??

 

விழித்துக் கொள்ளுமா முஸ்லிம் சமூகம்??



நாடெங்கிலும் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. கர்நாடகாவைத் தொடர்ந்து மத்திய பிரதேசம், புதுச்சேரி, ஆந்திராவிலும் சர்ச்சை கிளம்பி இருக்கின்றது.

இந்திய தூதரகத்தின் முன்பாக குவைத் நாட்டின் பெண்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக பேரணி மற்றும் கர்நாடக அரசுக்கெதிராக கண்டனக்குரல் எழுப்பியதன் மூலம் தற்போது இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் நீதிபதி தீக்ஷித் அவர்கள் வழக்கை விசாரித்துஇந்த வழக்கை பல நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை மாணவ மாணவியர் மத அடையாளங்களோடு கல்வி நிலையங்களுக்குச் செல்ல தடை விதித்தார்.

தற்போது ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணையை கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரித்துராஜ் அஸ்வதீ தலைமையிலான, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்ஷித், ஜெ.எம் காஸி ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொண்டு வருகின்றது.

மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் ஆஜாராகி மிகச் சிறப்பான முறையில் வாதாடி வருகின்றார்.

கடந்த ஐந்த நாட்களாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் புதன் அன்று தேவ்தத் காமத் அவர்களின் வாதம் எதிர் தரப்பு பிரதிவாதங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருக்கின்றது.

இன்றும் (வியாழக்கிழமை) வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று நீதிபதிகள் சொல்லி இருக்கின்றனர். இன்றும் விசாரித்து விட்டு நாளைக்கு மீண்டும் விச்சரணை நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

நீதிமன்றங்களும்நீதிபதிகளும்முஸ்லிம் சமூகத்தின் வழக்குகளும்

இந்தியாவின் முஸ்லீம்கள் தங்கள் மீது ஏவப்படும் அத்துணை அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் மிக அதிக பட்ச சகிப்புத் தன்மையோடு எதிர்கொண்டு வருகிறோம்.

ஜனநாயகத்தின் மீது நாங்கள் மிக அதிகமாகவே நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை இந்தியாவின் அனைத்து சமூகமும் அறிவார்கள். முஸ்லிம்கள் இந்த தேசத்தின் மக்கள் இங்கு வாழும் அனைத்து மக்களோடு கலந்து இணைந்து சகோதரத்துவம் பேணும் மக்கள்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்த தேசத்தைக் கலவரங்களால் பிரிவினைகளால் அரசியல் சுய இலாபத்திற்காக ஃபாசிஸ கும்பல் ஒன்று இந்த தேசத்தை நாசபடுத்திக் கொண்டு இருக்கிறது என்று பிறந்த குழந்தைகளுக்கு கூட தெரியும் பொழுது இந்த தேசத்தின் நீதிதுறைக்கு தெரியாமல் இருப்பது ஏன் என்று கேட்கின்றோம்.

தற்போதைய ஹிஜாப் வழக்கில் கூட உயர்நீதிமன்றம் இஸ்லாமிய சமூகத்திற்கு நியாயமாக நீதி வழங்கும் என்று முன்பு போலவே எதிர்பார்த்து நிற்கிறது.  

எனினும் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் தொடர்பான விவகாரங்களில், வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கண் முன் வந்து செல்லாமல் இல்லை.

இந்த முறையாவது முஸ்லிம் சமூகத்தின் காத்திருப்பை காயப்படுத்தி விடாதீர்கள் மாண்புயர் நீதிபதிகளே!!

கடந்த காலங்களை திருப்பிப் பார்த்தால் இந்து முஸ்லிம் பிரச்சனைகளில் நீதித்துறை இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கு எதிரான தீர்ப்புகளையே வழங்கியிருக்கிறது.

குஜராத் கலவரம் போல மிக மோசமான மனித உரிமை மீறல் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இந்த தேசத்தில் எங்கும் நடந்ததில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளை  தண்டிக்க வேண்டும் என்றால் குறைந்தது நூறு பேருக்காவது தூக்கு தண்டனை  வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது?

பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதை இந்த உலகமே வேடிக்கை பார்த்தது. இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் பாபரி மஸ்ஜித் இடிக்கப் படுவதை நேரலையில் காண்பித்தார்கள். ஆனால், என்ன நடந்தது?

இதுவரை இந்தியாவின் நீதித்துறை அந்த  குற்றாவாளிகளுக்கு எவ்வித தண்டனையும் வழங்கவில்லையே?.

அயோத்தியில் தான் ராமர் பிறந்தார் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் தான் ராமர் கோவில் இருந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் தேவையில்லை என்று கூறி, பெரும்பான்மை மக்களின் மதநம்பிக்கை போதும் என்று சொல்லி, இந்திய சாட்சிய சட்டத்தையே ஆட்டம் காண வைத்த உச்சமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய மக்களுக்கு  நீதிதுறையால் வழங்கப்பட்ட மற்றும் ஒரு அநீதி இல்லையா? 

காஷ்மீர் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி என்கின்ற ஒற்றை

காரணத்திற்காக மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு

விரோதமாக செயல்பட்ட பொழுது மௌனம் காத்த இந்திய நீதித்துறையின் செயல்பாட்டைத் தான் நாம் மறந்து விட முடியுமா?

முஸ்லிம் என்கின்ற ஒற்றை காரணத்திற்காக ஆஃசிபா என்கின்ற ஐந்து வயது குழந்தை மத வெறியர்களால் கூட்டு பாலியல் கொடுமை செய்து கொன்றார்களே?. இந்திய நீதிதுறைக்கு மனசாட்சி இருந்திருந்தால் அந்த குழந்தையை புதைக்கும் முன் குற்றவாளிகளை தூக்கில்  இட்டுருக்க வேண்டாமா?

உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் டெல்லியில் ஷாஃபியா என்கின்ற 21 வயது இஸ்லாமிய பெண் ஊழல் முறைகேடுகளை வெளியே கொண்டு வர முயற்ச்சித்தாள் என்கின்ற ஒரே காரணத்திற்காக அவள் முஸ்லிம் என்கின்ற ஒரே காரணத்திற்காக பிறப்பு உறுப்பை சிதைத்து மார்பகங்களை அறுத்து கொடுரமாக கொலை செய்ததை பற்றி இதுவரை இந்திய நீதித்துறை வாய் திறந்து என்ன பேசி இருக்கின்றது?

திரிபுராவில் சங்பரிவார அமைப்புகள் தான் திட்டமிட்டு இஸ்லாமிய மக்கள் மீது கலவரங்களை கட்டவிழ்த்து விடுகின்றன என்று தெரிந்தும் இந்திய நீதித்துறை மௌனம் காத்தது இதுவரை சங்பரிவார இயக்கங்களுக்கு எதிராக ஒரு சிறிய கண்டனத்தை கூட இந்திய நீதித்துறை பதிவு செய்யவில்லையே?.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்திறஞ எதிராக இந்தியாவில் வாழும் 20 கோடி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத்திய அரசு தன்னுடைய ஃபாசிஸ சிந்தனையை விதைப்பதை தெரிந்தும் இந்திய நீதித்துறை இதுவரை எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காப்பது இஸ்லாமிய மக்களுக்கு வழங்கபட்ட நீதி என்று சொல்லிவிட முடியுமா?

இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை கொன்று குவிப்போம் என்றும் அவர்களை நாட்டை விட்டே விரட்டவேண்டும் என்றும் வெளிப்படையாக காவி சாமியார்கள் மேடையிலே முழங்குகினார்களே அவர்களை இந்த நீதிமன்றங்களும் இந்திய நீதிபதிகளும் என்ன செய்து விட்டார்கள்?

இந்திய நீதிதுறைக்கு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் வேண்டுகோள்!

இந்து முஸ்லிம் பிரச்சினைகள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும்

முன்பு தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு சங்பரிவார அமைப்புகள், அவற்றின்

கொள்கைகள் ,செயல்பாடுகள், தேசம் முழுவதும் அவர்கள் மேற்கொண்ட கலவரங்கள், வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் அவர்களின் செயல்திட்டங்கள் போன்றவற்றை நிச்சயம் படித்துவிட்டு வாருங்கள் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றையும் அதில் இந்திய முஸ்லீம்களின் தியாகங்களையும் கொஞ்சம் படித்துவிட்டு வாருங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டங்களும், விதிகளும், என்ன சொல்கிறது ஜனநாயக மரபுகளும், கலாச்சார விழுமியங்களும் எவ்வாறு இருக்கின்றது என்பதையும் படித்து விட்டு வாருங்கள் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

முஸ்லிம் சமுதாயம் என்ன செய்ய வேண்டும்?..

பல்வேறு வடிவங்களிலான பிரச்சினைகளை எதிர் கொள்ளும் முஸ்லிம் சமூகம் எதிர் காலத்தில் சிறந்து விளங்க, வெற்றி வாகை சூட என்ன செய்ய வேண்டும்?

உலகின் அநியாயக்காரர்களையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும் எதிர் கொண்டு வெற்றி வாகை சூடிய நமது முன்னோர்களின் வழித்தடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

மிக முக்கியமாக மூன்று விதமான கட்டமைப்புகளை முஸ்லிம் சமூகம் தாமதிக்காமல் நிர்மாணிக்க வேண்டும்.

1. அதிகார மட்டத்தில் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்துகிற துறையில் நமது சமூகத்தின் பிரதிநிதிகளை அமர வைத்தல்.

2. அந்தப் பிரதிநிதிகளை உருவாக்குதல்.

3. சமுதாயத்தின் உள்கட்டமைப்பை சீர் படுத்துதல்.

1. அதிகாரம்

அதிகார மட்டம் ஒரு சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை மூன்று நபிமார்களின் வாழ்க்கையின் வரலாற்றின் ஊடாக அல்லாஹ் நமக்கு உணர்த்துகின்றான்.

1.ஸுலைமான் (அலை) அவர்கள்.

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (35)

என்னுடைய இறைவனே! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின்னர் எந்த ஒருவருக்கும் கிடைக்காத அரசாட்சியை எனக்கு நன்கொடையாய் வழங்குவாயாக! நிச்சயமாக நீயே! மிகப்பெரும் கொடையாளனாக இருக்கின்றாய்!” என (ஸுலைமான் அலை) பிரார்த்தித்தார்”.                                      ( அல்குர்ஆன்: 38: 36 )

2. யூஸுஃப் (அலை) அவர்கள்.

وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ أَسْتَخْلِصْهُ لِنَفْسِي فَلَمَّا كَلَّمَهُ قَالَ إِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ (54) قَالَ اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ (55)

நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! எனக்காக நான் அவரை பிரத்யேகமான உதவியாளராய் வைத்துக் கொள்கின்றேன்என்று அரசர் கூறினார். யூஸுஃப் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது யூஸ்ஃபிடம் அரசர்நிச்சயமாக! நீர் இன்று (முதல்) நம்மிடம் உயர்ந்த இடத்தைப் பெற்றவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றீர்என்று கூறினார்.

அதற்கு, (யூஸுஃப்) “இந்த தேசத்திலுள்ள சேமிப்புக் கிடங்குகளின் மீது என்னை அதிகாரியாக நியமியுங்கள். நிச்சயமாக! நான் அவற்றை நன்கு பாதுகாப்பவனாகவும், அவை பற்றி நன்கறிந்தவனாகவும் இருக்கின்றேன்என்றார்.  ( அல்குர்ஆன்: 12: 54,55 )

3. துல்கர்னைன் (அலை) அவர்கள்.

حَتَّى إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا (93) قَالُوا يَاذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا (94) قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا (95) آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا (96) فَمَا اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا (97)

முடிவாக இரு மலைகளுக்கு இடையே அவர் அடைந்த போது அவ்விரண்டிற்கும் அப்பால் ஒரு கூட்டத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தப் பேச்சையும் விளங்கிக் கொள்பவர்களாக இல்லை. அந்த கூட்டத்தார்துல்கர்னைனே! நிச்சயமாக, யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். ஆகவே, எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்துவீராக! அதற்காக உமக்கு ஒரு தொகையை நாங்கள் தரலாமா?” என்று கூறினார்கள்.

அதற்கு, அவர் எனது ரப்பு எதில் எனக்கு வசதியளித்துள்ளானோ அது மிகச் சிறந்ததாகும். ஆகவே, உங்கள் உழைப்பின் ஆற்றலைக் கொண்டு எனக்கு நீங்கள் உதவிடுங்கள். உங்களுக்கும் அவர்களுக்குமிடையே உறுதியான ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துகின்றேன்என்று கூறினார்.

நீங்கள் இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்! என்றார். அவை இரு மலைகளின் உச்சிக்குச் சமமாக உய்ர்ந்த பொழுது நெருப்பை ஊதுங்கள்! என்றார். எனவே, அதனை நெருப்பாக ஆக்கியதும் உருக்கிய செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார். நான் உருக்கிய செம்பை அதன் மீது ஊற்றுகின்றேன்என்றார்.

பின்னர் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாராகிய அவர்கள் அதன் மீது ஏறிடவும் சக்தி பெற மாட்டார்கள். அதனைத் துளைத்து துவாமிடவும் மாட்டார்கள்என்றார். மேலும், இது எனது இறைவனின் புறத்திலிருந்துமுள்ள அருளாகும். எனது இறைவனின் வாக்குறுதியாகிய மறுமை வந்து விட்டால் இதனையும் அவன் தூள் தூளாக்கி விடுவான். எனது இறைவனின் வாக்குறுதி உண்மையானதாக இருக்கின்றதுஎன்றும் அவர் கூறினார்.                   ( அல்குர்ஆன்: 18: 93 – 98 )

ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை நமக்கு அதிகாரத்தின் மீது ஆசை வைப்பது தவறில்லை. அதை இறைவனிடமே கேட்டுப் பெறலாம் என்பதையும், யூஸுஃப் (அலை) அவர்களின் அரசரின் முன்பான வேண்டுகோள் நாம் அதிகார மட்டத்தின் எந்தத் துறைக்கு தயாராக இருக்கின்றோமோ அதை நோக்கி பயணிக்கலாம் என்பதையும், துல்கர்னைன் (அலை) அவர்களின் சேவை உண்மையில் அதிகாரமும் துறை சார்ந்த அறிவும் தான் சாமானிய மக்களின் நீண்ட கால பிரச்சினையை, நெருக்கடியை நிரந்தரமாக தீர்க்கும் ஆற்றல் கொண்டவை என்பதை உணர்த்துகின்றது.

பெருமானார் {ஸல்} அவர்கள் இஸ்லாம் மதீனாவில் படிப்படியாக உயர்ந்து வருகிற போது சத்தமில்லாமல் சில அம்சங்களை இந்த உம்மத்தில் ஏற்படுத்தினார்கள்.

அது என்னவெனில்இந்த உம்மத்திற்கு துறை சார்ந்த விற்பன்னர்களைஅறிமுகம் செய்து அவர்களோடு மக்கள் தொடர்பில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.

ذكره الحلواني عن يزيد بن هارون وروى عمر رضي الله عنه من وجوه:.

وأخبرنا عبد الوارث بن سفيان حدثنا قاسم بن أصبغ حدثنا أحمد ابن زهير قال حدثنا أحمد بن عبد الله بن يونس قال حدثنا سلام عن زيد العمي عن أبي الصديق الناجي عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم: " أرحم أمتي بها أبو بكر وأقواهم في دين الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي بن أبي طالب وأفرضهم زيد وأقرؤهم لكتاب الله أبي بن كعب وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح وأبو هريرة وعاء للعلم " . أو قال: " وعاء العلم

என் உம்மத்தினரில் உம்மத்தின் மீது அதிக பரிவும் பற்றும் கொண்டவர் அபூபக்ர் (ரலி) ஆவார்கள். என் உம்மத்தினரில் ஷரீஆ விவகாரங்களில் அதிக ஆற்றல் கொண்டவர் உமர் (ரலி) ஆவார்கள். வாய்மையாளர் உஸ்மான் (ரலி) ஆவார்கள். நீதியும் நேர்மையும் மிக்கவர் அலீ (ரலி) ஆவார்கள். வாரிசுரிமை சட்ட வல்லுனர் ஜைத் (ரலி) ஆவார்கள். அருள்மறை வேதத்தை அழகிய முறையில் கற்றுணர்ந்தவர் உபை இப்னு கஅப் (ரலி) ஆவார்கள். ஹலால், ஹராம் விஷயங்களில் மிகச் சிறந்த கல்வியாளர் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள். இந்த உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா (ரலி) ஆவார்கள். கல்வியின் பாதுகாவலர் அபூ ஹுரைரா (ரலி) ஆவார்கள். ( அல் இஸ்தீஆப் லி இமாமி இப்னு அப்தில் பர் (ரஹ்) பாகம் 1, பக்கம் 27, கிதாபின் முகத்திமாவில் இருந்து.. )

இன்று வரை இதை முன்னறிவிப்பாகவும், நபித்தோழர்களின் சிறப்பாகவுமே இந்த உம்மத் கண்டு வந்திருக்கின்றது.

ஆனால், கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இது இந்த உம்மத்திற்கான ஆளுமை குறியீடுகள் என்பதை உணர முடியும்.

இந்த உம்மத்தின் நம்பிக்கையாளர் என்பதைஇந்த சமுதாயத்தின் உள்விவகார & வெளி விவகாரங்களை பாதுகாப்பவர்என்று பொருள் படுத்தினால் நம் உலக வழக்கப்படி உள்துறை அமைச்சர். பாதுகாப்புத்துறை அமைச்சர். வெளியுறவுத்துறை அமைச்சர்.

என் உம்மத்தின் மீது அதிக பரிவும், பற்றும் கொண்டவர் என்பதை இந்த சமுதாயத்தின் நலன் மீதும், மேம்பாட்டின் மீதும் அக்கறை கொண்டவர் என்று பொருள் படுத்தினால் நம் உலக வழக்கப்படி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

மாநபி {ஸல்} அவர்களின் உள்ளார்ந்த இந்த பொருள்களை உணர்ந்து கொண்ட அந்த ஸஹாபிய சமூகம் மாநபி {ஸல்} அவர்களின் தூய மறைவுக்குப் பின்னர் மேற்கூறிய மாமனிதர்களை அப்படியே பயன்படுத்திக் கொண்டனர்.

பிலால் (ரலி) அவர்கள் என்றாலே பாங்கு சொன்னார் என்று மட்டுமே இந்த சமூகம் படித்திருக்கின்றது.

ஆனால், பிலால் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் மெய்க்காப்பாளர், மாநபி {ஸல்} அவர்கள் அமைத்த முதல் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் நிதியமைச்சர், பெண்களின் சார்பாக வினவப்படும் கேள்விகளுக்கு மாநபி {ஸல்} அவர்களிடம் இருந்து விடையும், தீர்வும் பெற்றுத் தந்த மக்கள் பிரதிநிதி நம் பாஷையில் எம்.எல்.ஏ அல்லது எம்.பி. இன்னும் பல பொறுப்புகளில் பிலால் (ரலி) அவர்கள் பயணித்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் அமைத்த இராணுவத்துக்கு இராணுவ தளபதிகளாக காலித் இப்னு வலீத் (ரலி) அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) என ஒரு நீண்ட பட்டியலையே தர முடியும்.

ஆகவே, இந்த சமுதாயம் துறை சார்ந்த வல்லுநர்களை, நிபுணர்களைப் பெற்றிருப்பதோடு அந்த துறையோடு அதிகார மட்டத்திலும் வீற்றிருக்க வேண்டும்.

தற்போதைய ஜனநாயக இந்திய திருநாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும்?

அரசியல் அதிகாரம் பெற வேண்டும். பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவைகளிலும் ஊராட்சி, உள்ளாட்சி (நகர்மன்றம், மாநகராட்சி) ஆகியவற்றிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது.

ஆனால், தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

எப்போது அரசியல் கட்சிகளின் மாயையில் இருந்து மீண்டு, இயக்க, அமைப்பு எனும் எனும் சிந்தனையில் இருந்து விடுபட்டு ஓரணியில் இந்த சமூகம் ஒன்று திரள்கின்றதோ அப்போது தான் சாத்தியம் ஆகும். நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது வரும்.

இரண்டாவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகார மையங்களில் அமர்வது. இது முயற்சி செய்தால் சாத்தியமே.

அதற்கு இந்த சமூகம் செய்ய வேண்டியதெல்லாம் சிறிய அளவிலான தியாகங்களைத் தான்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2A நடைபெறாத நிலையில், 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம்  குரூப் 4 தேர்வும் நடைபெறும் என TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு வகையான பதவிகளுக்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் இதர தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 தேர்வு முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. குரூப் 2 தேர்வானது நேர்முத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என இருவிதமான பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளில் 5831 காலியிடங்கள் நிரப்பட உள்ளதாகவும், குரூப்-4 இல் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5255.

தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 2021 டிசம்பர் 7 -ம்தேதி வெளியிடப்பட்டது.

நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அதே போன்று கடந்த 05/02/22 அன்று இந்தியாவின் மிக உயர்ந்த பணியிடங்களுக்கான தேர்வான இந்திய குடிமை பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணி சேவைகளின் தேர்வுக்கான அறிவிப்பு இது.

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இந்திய குடிமை பணிகள் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு மூலம் கீழ்கண்ட பதவியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

 

Indian Administrative Service

 

Indian Foreign Service

 

Indian Police Service

 

Indian Audit and Accounts Service, Group ‘A’

 

Indian Civil Accounts Service, Group ‘A’

 

Indian Corporate Law Service, Group ‘A’

 

Indian Defence Accounts Service, Group ‘A’

 

Indian Defence Estates Service, Group ‘A’

 

Indian Information Service, Junior Grade Group ‘A’

 

Indian Postal Service, Group ‘A’

 

Indian P&T Accounts and Finance Service, Group ‘A’

 

Indian Railway Protection Force Service, Group ‘A’

 

Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’

 

Indian Revenue Service (Income Tax) Group ‘A’

 

Indian Trade Service, Group ‘A’ (Grade III)

 

Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)

 

Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’

 

Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group ‘B’

 

Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’

 

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 861

 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2022

 

கூடுதல் விவரங்களுக்கு...

https://upsconline.nic.in/mainmenu2.php

 

https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-22-engl-020222F.pdf

 

இந்த இணையதளங்களைப் பார்வையிடவும்.

 

2011 நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை படி...

அரசுத் துறைகள், மற்றும் உயர் கல்வி, வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றில் முஸ்லிம்களின்  இன்றைய நிலை

இந்திய நாட்டின் மக்கள் தொகை யில் 13.4 சதவிகிதமாகவுள்ள முஸ்லிம்கள் கல் வியிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர்.  

மத்திய அரசுத் துறைகளில் முஸ்லிம்கள் வெறும் 4.9 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.  அரசின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே யில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.2 சதவிகிதம் மட்டுமே என்பதும், அவர்க ளிலும் 98.7 சதவிகிதம் முஸ்லிம்கள் கடைநிலை பணிகளிலேயே உள்ளனர்.

இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் போன்ற உயர் பதவிகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் மட்டுமே. நீதித்துறையில் கூட 7.8 சதவிகிதம் மட்டுமே முஸ்லிம்கள்.

தேசிய அளவில் கல்வியில் கூட முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருந்தனர். பட்டப்படிப்பு முடித்தவர் 3.4 சதவிகிதம், முதுகலைப் பட்டம் பெற்றவர் 1.2 சதவிகிதம் மட்டுமே.

எனவே,  நமது சமூகத்தின் இளைய தலைமுறையினரை அரசின் உயர் அதிகார பணிகளைப் பெற்றிட தயார்படுத்த வேண்டும். 

அதற்காக உயர் அதிகாரப்  பணிகளுக்கான TNPSC & UPSC தேர்வுகளில் மஹல்லா இளம் தலைமுறையினரான உயர் கல்வி பயின்ற சகோதர, சகோதரிகளை   ஒவ்வொரு மஸ்ஜித் (பள்ளிவாசல்) நிர்வாகமும் பங்கேற்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது  இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.

மேலும் சமுதாய அமைப்புகளில் பயணிக்கும்  மாணவரணியினர் மற்றும் இளைஞர்கள் சப்தமில்லாமல் இப்படிப்பட்ட உயர் அதிகார மற்றும் துறை சார்ந்த பணிகளுக்கான அரசு பணிகளைப் பெறுவதில் முயற்சி செய்ய வேண்டும். 

நம் சமூகத்தின் இளைஞர்கள் TNPSC, UPSE, SSC, அரசுத் தேர்வுகளில் பங்கு பெறும் பொருட்டு மஸ்ஜிதை ஒட்டிய இடங்களில் கம்யூட்டர் மற்றும் மேற்கூறிய தேர்வுகளை எழுவதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

தொடர்ந்து ஜும்ஆ உரைகள் துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் இது  பற்றிய விழிப்புணர்வை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அரசு அதிகாரத்தில் நாம் பங்கு பெறாத வரையில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

பியூன் முதல் கலெக்டர் வரை, VAO முதல் தாசில்தார் வரை, கான்ஸ்டபிள் முதல் DIG வரை, ஆசிரியர் முதல் CEO வரை, வார்டு பாய் முதல் மெடிக்கல் டீன் வரை என்று எங்கு பார்த்தாலும் தொப்பியும், தாடியும், புர்காவும் இருந்தால் நம்முடைய குரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

2.பிரதிநிதிகளைத் தயார்படுத்துதல்...

மத்திய மாநில அதிகார மையங்களை நாம் கையகப்படுத்த வேண்டுமானால் நாம் உயர் கல்வியில் சாதித்தவர்களாய் இருக்க வேண்டும்.

இன்றைய முஸ்லிம் சமூகமும், இளைஞர்களும் உயர்கல்வி எனும் போது அதிகம் தேர்ந்தெடுப்பது தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) பொறியியல் (எஞ்சீனியரிங்) துறை சார்ந்த பாடப்பிரிவுகளைத் தான். ஏனெனில், அந்தப் படிப்பை படித்தால் ஏராளமான சம்பளம் கிடைக்கும். வீடு, கார், சொத்து என சுக போகமாக வாழலாம் எனக் கருதுகின்றனர்.

இறுதியில், வெளிநாட்டு பயணம், சொல்லெனாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமாக இருப்பது இளைஞர்கள் மட்டுமல்லபெற்றோர் மற்றும் சமூகம் என்று அனைவருக்கும் இதில் பங்குண்டு.


قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ

 

அல்லாஹ் கூறுகின்றான்: அறிந்தோரும்அறியாதோரும் சமமாவார்களா?” .                                                                          ( அல் குர்ஆன் 39: 9 )

 

வெறுமனே கல்வியைப் பொருளாதார தேவையைப் பூர்த்தி  செய்வதற்காக  கற்பவனும், உலகம் அனைத்திலும் உள்ள மக்களுக்கு பயன் தர வேண்டும் எனும் நோக்கில் கற்பவனும் சமமாவார்களா?

 இது தான் இங்கு அல்லாஹ் எழுப்புகிற யதார்த்தமான கேள்வி இதை இந்த உம்மத் சரியாக விளங்கவில்லை என்பதே பேருண்மையாகும்.

 

தான் கற்கும் கல்வியின் மூலம் தனக்கும், சமூகத்திற்கும் பயன் தர வேண்டும். மேலும், அந்த கல்வியின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும் ஒரு முஸ்லிம் பெற வேண்டும் இது தான் இஸ்லாம் கல்விக்கு கூறும் இலக்கணம் ஆகும்.

இதை இன்றைய எந்தக் கல்வியின் மூலமும் ஒரு முஸ்லிம் பெற முடியும். ஆனால், முஸ்லிம் சமூகம் தான் அதை அடைவதற்கு தயாராக இல்லை.

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான எல்லா வழிகாட்டுதலையும் பெற்றிருக்கிற ஓர் ஒப்பற்ற சமூகமான நாம் இன்றைய நம்முடைய தேவையான உயர்கல்வி விஷயத்தில் இஸ்லாத்தின் ஆழமான பார்வைகளோடு உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்போம்!

கல்வி தான் அனைத்திற்கும் அடிப்படை…

ஆட்சியதிகாரம் வேண்டுமானால் கல்வி முக்கியம்.

أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ (246) وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (247)

(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்என்று கூறினார்.                                                ( அல்குர்ஆன்: 2: 246 )

وَشَدَدْنَا مُلْكَهُ وَآتَيْنَاهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ

மேலும், நாம் தாவூதுக்கு அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு கல்வி ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.                                                ( அல்குர்ஆன்: 38: 20 )

 

அநீதியை ஒழித்து நீதி நிலை நாட்ட வேண்டுமானால் கல்வி முக்கியம்..

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (18)

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.                                              ( அல்குர்ஆன்: 3: 18 )

உலகில் ஒரு மனிதன் மதிக்கப்பட வேண்டும் என எண்ணுகின்றான். மேலும், அதற்கான தகுதிகளையும் பெற முயற்சிக்கின்றான். உண்மையில் தகுதிகளை பெற்றுத் தரும் சாதனங்களில் மிகப்பெரிய சாதனம் கல்வியாகும்.

அந்த மனிதனிடத்தில் கல்வி இருக்கின்றதோ அந்த மனிதனை அந்தக் கல்வி உயரிய இடத்திற்கு அழைத்துச் சென்று அரியணையில் வைத்து அழகு பார்க்கும்.

ஆம்! அல்லாஹ்வே கூறுகின்றான் பாருங்கள்:

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.    ( அல்குர்ஆன்: 58: 11 )

ஒரு சமூகத்தில் அனைவரும் கல்வியாளர்களாய் மிளிரும் பட்சத்தில் அந்த சமூகமே உயர்வு பெறுகின்றது. ஏனைய சமூகங்களிடையேயும் மதிப்பைப் பெறுகின்றது.

மூன்றாவது உள்கட்டமைப்பை சீரமைப்பது…

1.   மஹல்லா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் சமூகத்திற்கு தந்திருக்கின்ற மிகப் பெரும் கொடை ஜமாஅத் மற்றும் மஹல்லா அமைப்பு.

இந்த அமைப்பை பயன்படுத்தி சமூகத்தின் கடைநிலை முஸ்லிமைக் கூட உயர்நிலைக்கு கொண்டு வந்திட இயலும்.

ஆனாலும் தொழுகைக்கு ஆட்களே வராத ஊரில் கோடி ரூபாய் செலவில் ஆடம்பரப் பள்ளி வாசல், மிஹ்ராபில் ஒளிரும் விளக்குகள், கக்கூஸில் பளிங்குக்கல் ஆனால், அதே ஊரைச் சார்ந்த ஒருவர் குமருக்காக, மக்களின் கல்விக்காக, அடுத்த வேலை சாப்பாட்டுக்காக, கடன் பிரச்சினையில் இருந்து மீள்வதற்காக, மருத்துவ செலவுகளுக்காக என பள்ளிவாசல், பள்ளிவாசலாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

என்னவென்று சொல்வது? அந்த ஊரில் அவர்களின் உறவினர்கள் இல்லையா? சொந்த பந்தம் இல்லையா? மஹல்லா நிர்வாகம் இல்லையா? இருக்கின்றார்கள் ஆனால், அவர்களுக்கு அதில் பொறுப்பில்லை என்று கருதுகின்றார்கள்.

நமக்கெல்லாம் தெரிந்த செய்தி தான் ரபீஆ இப்னு கஅபுல் அஸ்லமீ எனும் ஏழை நபித்தோழருக்கு பெண் பேசி மணமுடித்து வைத்து வீடு கட்டுவதற்கு சிறு நிலத்தையும் கொடுத்த மாநபி {ஸல்} அவர்கள், அவரின் தூரத்து உறவினர்களை அழைத்து வாழ்க்கையில் இன்னும் சற்று மேலோங்க கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விடுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

உங்களுக்கு பிரியமானதை அல்லாஹ்வின் பாதையில் மனமுவந்து செலவளிக்காத வரையிலும் நன்மையை பெற்றுக் கொள்ள முடியாது எனும் இறைவசனம் ஒன்று இறக்கியருளப்பட்ட போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தங்களுக்கு மிகப் பிரியமான பைருஹா எனும் தோட்டத்தை மாநபி {ஸல்} அவர்களிடம் கொண்டு வந்து இதை அல்லாஹ்வின் பாதையில் செலவளித்து விடுங்கள் என்றார்கள். உமர் (ரலி) அவர்களும் தங்களுக்கு போரில் கிடைத்த நிலம் ஒன்றை கொண்டு வந்து மாநபி {ஸல்} அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீ பேரில் எழுதி வைக்கவில்லை. மஸ்ஜிதுன் நபவீக்கு வக்ஃப் செய்து விடுமாறு கோரிக்கை வைக்கவில்லை. அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் உங்கள் தந்தை வழி உறவினர்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கின்றார்கள். அந்த தோட்டத்தை அவர்களிடம் பங்கு வைத்து கொடுத்து விடுங்கள் என்றார்கள். உமர் (ரலி) அவர்களிடமும் இது போன்றே கூறினார்கள்.

இது தான் மாநபி {ஸல்} அவர்கள் உருவாக்கிய மஸ்ஜித் நிர்வாகம், மஹல்லா கட்டமைப்பு, ஜமாஅத் செயல்பாடு ஆனால், இங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது.

பொறுப்பிற்கு வந்தோம், அதிகாரம் பெற்றோம், புகழ் சேர்த்தோம், செல்வாக்கு அடைந்தோம், பள்ளிவாசலுக்கு பணம் சேர்த்தோம் என்று ஐந்தாண்டுகளை கழித்துக் கொண்டிருக்கின்றோம்.

சமூகத்தின் பொறுப்பாளர்கள் மாநபி {ஸல்} அவர்களின் பின்வரும் எச்சரிக்கையை பயந்து கொள்ள வேண்டும்.

من لم يهتم بأمر المسلمين فليس منهم 

ஹுதைஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் கவலை கொள்ளாமல் ( கண்டும் காணாதது போல ) வாழ்கிறவர் முஸ்லிம் சமூகத்தையே சார்ந்தவர் அல்லர்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ)

 

عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: (أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسؤولٌ عَنْ رَعِيَّتِهِ،

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                   ( நூல்: புகாரி )

அப்புறம் இன்று மார்க்கத்தின் பெயரால், சமூகத்தின் பெயரால் உருவாக்கி இருக்கிற அமைப்புகள், இயக்கங்கள், அதன் பொறுப்பாளர்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கின்றன நம் சமூகத்து இயக்கங்கள்.

சமூக சேவையில் முதலிடம், இரத்த தானத்தில் முதலிடம், மருத்துவ உதவியில் முதலிடம் என ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றார்களே தவிர வேறென்ன இருக்கின்றது அவர்களிடம் சொல்வதற்கு.

எந்த ஒரு இயக்கமாவது ஒரு மருத்துவரை இந்த சமூகத்திற்கு தந்திருக்கின்றதா?

எந்த ஒரு அமைப்பாவது ஒரு கலெக்டரை, ஒரு தாசில்தாரை, ஒரு சப் கலெக்டரை, ஒரு காவல்துறை அதிகாரியை, ஒரு நீதிபதியை உருவாக்கி இருக்கின்றதா?

ஆளாளுக்கு இந்த சமூகத்தின் இளைஞர்களை பங்கு போட்டது தான் மிச்சம். அவர்களும் நீங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இசைந்து கொடுக்கின்றார்கள்.

எனவே, நாம் நம் சமூகத்தின் உள்கட்டமைப்பை சீர் படுத்த வேண்டும். முதல் வேலையாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமானால் கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டும். பயிற்சி பட்டறைகளை நிறுவ வேண்டும். மத்திய மாநில அரசுப்பணியிடங்களின் அதிகார மையத்தில் அமர்வதற்கு தேவையான பயிற்சியும், விழிப்புணர்வும் வழங்க வேண்டும்.

நம் சமூகத்தின் பிரச்சினைகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அவர்களே வழி நடத்துவார்கள்.

இனியும் நாம் காலம் தாழ்த்துகின்றோம் என்றால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும், இல்லை உச்ச நீதிமன்றமாவது நல்ல தீர்ப்பை கொடுக்கும் என்று ஒவ்வொருவரையும் எதிர் பார்த்து இந்த தேசத்தில் ஒவ்வொன்றாக இழந்து நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டு விடுவோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அத்தகைய நிலைகளில் இருந்து பாதுகாப்பானாக!

5 comments:

  1. Very very important message hazrat super barakallah

    ReplyDelete
  2. சிறந்த அவசியமான படிப்பினைக்குரிய பதிவு. ஜஸாகல்லாஹு கைர்

    ReplyDelete
  3. காலத்திற்கு ஏற்ற பதிவு பாரக்கல்லாஹ்

    ReplyDelete
  4. Mashaa allah nalla seithigal kidaithathu hazrath

    ReplyDelete