Thursday, 24 February 2022

வெற்றி பெற்ற வேட்பாளர்களே! உங்களைத்தான்…

 

வெற்றி பெற்ற வேட்பாளர்களே!

உங்களைத்தான்



நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவு பெற்று ஆளும் மாநில அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதை நாம் அறிவோம்.

இந்த தேர்தலில் பெருவாரியான முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்பது ஆறுதலான செய்தியாகும்.

ஆளும் அரசின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக) சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும், தனியாக களம் கண்ட எச்.டி.பி. சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும், மஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும், உவைசி கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களை விட தற்போதைய உள்ளாட்சி தேர்தல் களத்தில் நம் சமுதாயத்திற்கு அதிக பிரநிதித்துவம் கிடைத்துள்ளது. நம்மை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த வகையில் வெற்றி பெற்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர்களை விட கவனம் பெறுகின்றார்கள். மக்களால் கவனிக்கவும் படுவார்கள்.

ஆரம்பமாக, வெற்றி பெற்ற நம் சமுதாய வேட்பாளர்களுக்கு வாழ்த்தையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றியாளர்களான நம் சமூகத்தின் பிரதிநிதிகள் இரண்டு விஷயங்களை முதலில் நினைவில் நிறுத்த வேண்டும்.

1. அரசியலை நோக்கிய நம் சமுதாயத்தினுடைய நகர்வில், நீண்ட கால போராட்டத்தில் இந்த வெற்றி என்பது புதிய மைல்கல் ஆகும்.

2. இந்த வெற்றியை பாகுபாடற்ற சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு தக்க வைத்துக் கொள்வதும், எதிர் காலத்தில் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெறவும் உங்களுக்குத் தரப்பட்டுள்ள 5 ஆண்டு காலத்தை மக்கள் நலப்பணியில் சிறப்பாக ஈடுபடுத்தி தேர்ந்தெடுத்த மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பு என்பது

மத்திய & மாநில அரசின் மக்கள் நல திட்டங்களையும், நிதி ஆதாரங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிற மகத்தான ஒரு அமைப்பாகும்.

மேலும், சுகாதாரம், குடிநீர் விநியோகம், தெரு மற்றும் சாலை விளக்குகள், வீட்டு வசதி திட்டங்கள், பிறப்பு & இறப்பு சான்றிதழ் என பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற் கொள்ள உதவும் சிறப்பான பொறுப்பாகும்.

இன்னொரு புறம் இருந்து நோக்கினால் 50 ரூபாயில் இருந்து லட்சம், கோடி என லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடும் இடமாகவும் அது இருக்கின்றது.

பொறுப்புணர்வோடும், எச்சரிக்கை உணர்வோடும் செயல்பட வேண்டிய பொறுப்பானவார்டு கவுன்சிலர்பதவிக்கு தேர்வாகியுள்ள நம் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு ஒரு முஃமினாக சிறிய நினைவூட்டலை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.

அந்த அடிப்படையில் ஒரு சில செய்திகளை உங்களோடு நான் பரிமாறிக் கொள்கின்றேன்.

1.   முஸ்லிமாக நடந்து கொள்ளுங்கள்!

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ் வழங்கி இருக்கின்ற வழிகாட்டலில் மிகவும் முதன்மையானதுஒரு முஸ்லிம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் முஸ்லிம் என்கிற தனித்துவமான அடையாளத்துடன் மட்டுமேவாழ வேண்டும் என்பது தான்.

إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا وَلَهُ كُلُّ شَيْءٍ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ

நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் ரப்பை நான் வணங்க வேண்டும் என்பதைத்தான். அவன் எத்தகையவனென்றால், இந்த ஊரை, இந்த கஅபாவை அவன் தான் கண்ணியப்படுத்தினான். மேலும், உலகின் அனைத்து பொருள்களும் அவனுக்கே உரித்தானது. இன்னும், முஸ்லிம்களில் ஒருவனாகவே நான் இருந்திட வேண்டுமென்றும் நான் ஏவப்பட்டுள்ளேன்என்று நபியே! நீர் கூறுவீராக!”.                                                 ( அல்குர்ஆன்: 27: 91 )

இந்த வகையில்ஒரு முஸ்லிம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் முஸ்லிம் என்கிற தனித்துவமான அடையாளத்துடன் மட்டுமேவாழ வேண்டும் என்பதில் கூட ஒரு முஸ்லிம் இரண்டு அம்சங்களை கவனத்தில் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றான்.

1.கொள்கை மற்றும் வணக்க வழிபாடுகள் சார்ந்த விஷயங்களில்முதல் நிலைமுஸ்லிமாக இருக்க வேண்டும்.

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (சகல) வணக்க, வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலத்தாரின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்என்றும் அவனுக்கு யாதோர் இணையும் இல்லை இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். அவனுக்கு வழிப்பட்டு வாழ்வோரில் முதல் நிலை முஸ்லிமாக இருக்கின்றேன்என்றும் நபியே! நீர் கூறுவீராக!”.                                             ( அல்குர்ஆன்: 06: 162,163 )

ஏனெனில், இங்கே பலர் அரசியல் காரணம் காட்டி தீமைகளுடன் சமரசம் செய்து கொள்கின்றனர். மிக எளிதாக ஷரீஆவின் எல்லைகளை, வரம்புகளை மீறி விடுகின்றனர். எனவே, கவனமும், எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.

2.பண்பாடுகள், சக மனிதர்களுடன் உறவாடுதல், நன்மையான காரியங்களைச் செய்தல் ஆகியவற்றைச் செய்யும் போதுநான் முஸ்லிமாக இருப்பதால் தான் இப்படி எல்லாம் என்னால் நடந்து கொள்ள முடிகின்றது என்று இஸ்லாத்தின் பக்கம் அறை கூவல் விடும் முன்மாதிரிமுஸ்லிமாக இருக்க வேண்டும்.

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

எவர் நற்கருமங்களைச் செய்து, நிச்சயமாக! நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறி அல்லாஹ்வின் பால் அழைப்பு கொடுக்கின்றாரோ அவரை விட சொல்லால் மிக அழகானவர் யார்”.                           ( அல்குர்ஆன்: 41: 33 )

ஏனெனில், முஸ்லிமாக வாழ ஆசைப்படுவதும், முஸ்லிமாகவே மரணிக்க விரும்புவதும் நபிமார்களின் பண்பாகும்.

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ (127) رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ

இப்ராஹீமும், இஸ்மாயீலும் கஅபாவின் அஸ்திவாரத்தை உயர்த்திய போதுஎங்கள் இறைவா! எங்களிடமிருந்து இப்பணியை நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக! நீயே செவியேற்பவனாகவும், மிக அறிபவனாகவும் இருக்கின்றாய்!”

எங்கள் இறைவா! எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் வழிபட்டு முஸ்லிம்களாக வாழ்பவர்களாகவும், இன்னும் எங்கள் சந்ததியில் இருந்தும் உனக்கு வழிபட்டு வாழும் முஸ்லிம்களையும் ஆக்கியருள்வாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.                                               ( அல்குர்ஆன்: 02: 128 )

رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

என்னுடைய இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஆட்சியதிகாரத்தைத் தந்தாய்! இன்னும் கனவுகளின் விளக்கத்தையும் எனக்குக் கற்றுத் தந்தாய். வானங்களையும், பூமியையும் நூதனமாகப் படைத்தவனே! நீயே இம்மையிலும், மறுமையிலும் என் பாதுகாவலன் ஆவாய்! நீ என்னை முஸ்லிமாக மரணிக்கச் செய்து, நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்திடுவாயாக!” என யூஸுஃப் (அலை) பிரார்த்தித்தார்.                                             ( அல்குர்ஆன்: 12: 101 )

2.   பொறுப்பை பொறுப்பாக நிறைவேற்றுங்கள்!

இன்று பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பை, பதவியை அதிகாரமும், செல்வாக்கும் கொண்ட அம்சமாகக் கருதி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், பொறுப்பை புகழ், செல்வம் தேடும் கருவியாக பயன்படுத்துபவர்களும் இருக்கின்றார்கள்.

ஆனால், பொறுப்பு என்பது நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதம் என்று இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது.

எவர் பொறுப்பை உணர்ந்து பொறுப்பாக செயல்படுகின்றார்களோ அவர் நாளை மறுமையில் எவ்வித சிரமும் இல்லாமல் இறைவனைச் சந்திப்பார் என்று ஊக்கப்படுத்துகின்றது.

حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي شُعَيْبُ بْنُ اللَّيْثِ، حَدَّثَنِي اللَّيْثُ، بْنُ سَعْدٍ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو،

عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ الْحَضْرَمِيِّ، عَنِ ابْنِ حُجَيْرَةَ الأَكْبَرِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَسْتَعْمِلُنِي قَالَ فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي ثُمَّ قَالَ

يَا أَبَا ذَرٍّ إِنَّكَ ضَعِيفٌ وَإِنَّهَا أَمَانَةٌ وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْىٌ وَنَدَامَةٌ إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا ‏"‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை ஏதாவது பணியில் அமர்த்தக்கூடாதா? என்று நான் கேட்டேன். அப்போது நபி {ஸல்} அவர்கள் தங்களுடைய கையால் என்னுடைய தோள் பட்டையில் தட்டிக் கொடுத்துஅபூதர் அவர்களே! நீர் பலகீனமானவர்! அதுவோ அமானிதம். யார் அதை கையாள் வேண்டிய முறைப்படி கையாண்டு, தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகின்றாரோ அவரைத் தவிர மற்றவர்களுக்கு மறுமை நாளில் அது இழிவாகவும், கைசேதமாகவும் அமைந்து விடும்என்று கூறினார்கள்.                               ( நூல்: புகாரி )

பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒருவர் அந்த பொறுப்பில் இருந்து கொண்டு மக்கள் நலன் காக்க தவறினால் அவர் மேலான சுவனத்தின் நறுமணத்தை நுகரும் பாக்கியத்தை இழப்பதோடு சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து விடுகின்றார் என இஸ்லாம் எச்சரிக்கின்றது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ الْجَوْهَرِيُّ، نا هَوْذَةُ، نا عَوْفٌ، عَنِ الْحَسَنِ قَالَ: مَرِضَ مَعْقِلُ بْنُ يَسَارٍ فَأَتَاهُ ابْنُ زِيَادٍ يَعُودُهُ فَقَالَ: إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مِنَ اسْتُرْعِيَ رَعِيَّةً فَلَمْ يُحِطْهُمْ بِنَصِيحَةٍ لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ , وَرِيحُهَا يُوجَدُ مِنْ مَسِيرِ عَامٍ»

மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அப்போது, அன்னாரைச் சந்தித்து நலம் விசாரிக்க அன்றைய பஸரா நகர ஆட்சியாளர் உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அப்போது அவரிடம் மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள்ஓர் அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவர் அந்த குடிமக்களின் நலனைக் காக்கத் தவறினால் அவர் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாதுஎன நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்ட இந்த செய்தியை உம்மிடம் அறிவிக்கின்றேன் என்றார்கள்.

أخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ الْقَاهِرِ الْخَطِيبُ، أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ جَعْفَرُ بْنُ أَحْمَدَ الْقَارِئُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ شَاهِينَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَاسِيٍّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدُوسٍ، حدثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، حدثنا أَبُو الأَشْهَبِ، عن الْحَسَنِ، قَالَ: عَادَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي قُبِضَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ: إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا لَوْ عَلِمْتُ لِي حَيَاةً مَا حَدَّثْتُكَ، سمعت رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً يَمُوتُ يَوْمَ يَمُوتُ غَاشًّا لِرَعِيَّتِهِ، إِلا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ".

இன்னொரு அறிவிப்பாளர் அறிவிக்கும் அறிவிப்பில், “குடிமக்களின் பொறுப்பை ஏற்று, அந்த குடிமக்களின் பொறுப்பில் மோசடி செய்த நிலையில் மரணிப்பாரானால் சொர்க்கத்தை அல்லாஹ் அவருக்கு தடை செய்து விடுகின்றான்என்றும் கூறியதாக இடம் பெற்றுள்ளது. ( நூல்: புகாரி )

சமுதாய சமூக நலனை பாதுகாக்கும் விஷயத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவருக்கு கண்டிப்பாக நபி {ஸல்} அவர்களின் பிரார்த்தனையில் இரண்டில் ஒன்று உண்டு என இஸ்லாம் கவனப்படுத்துகின்றது.

عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بيتي هذا: ((اللهم من وَلِيَ من أمرِ أمتي شيئًا فشَقَّ عليهم فاشقُقْ عليه، ومن وَلِيَ من أمر أمتي شيئًا فرفَق بهم فارفُقْ به))؛ رواه مسلم.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னுடைய இல்லத்தில் வைத்துஇறைவா என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர் அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால் நீயும் அவரை சிரமத்திற்குள்ளாக்குவாயாக! இறைவா என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர் அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால் நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!” என்று துஆச் செய்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  ( நூல்: முஸ்லிம் )                      

எனவே, கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன், நான் சார்ந்த அமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன், என்று இருந்து விட்டு மக்களுக்கான பொறுப்புக்களில் மோசடி செய்தால், மக்களின் நலன் சார்ந்த விஷயங்களைச் செய்யாமல் தட்டிக் கழித்தால் மேற்கூறிய அம்சங்களை நினைவு படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள்.

3.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்!

தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இன்று மக்களிடம்  வாக்குறுதிகள் பல கொடுக்கப்படுவதும், இறுதி வரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதும் தான் அரசியல் வாதிகளிடம் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகின்றது.

வாக்குறுதியை நிறைவேற்றுவது புகழுக்குரிய பண்பாகவும் அது நபிமார்களின் பண்பாகவும், இறை நம்பிக்கையாளர்களின் உயர்ந்த பண்பாகவும் அமைந்துள்ளது.

وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا (54)

“(நபியே) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்”.  ( அல்குர்ஆன் 19: 54 )

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுபவர்களே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்”.                                              ( அல்குர்ஆன்: 2: 177 )

وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا

உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேள்வி கேட்கப்படும்.                                               ( அல்குர்அன்: 17: 34 )

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ  

இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்”. ( அல்குர்ஆன்: 23: 8 )

வாக்குறுதியை நிறைவேற்றுவது (இறைநம்பிக்கை) ஈமானுடனும், மார்க்கத்துடனும் தொடர்புடையது என்றும், அதை ஒரு முஸ்லிம் நிறைவேற்றாமல் போகும் போது அவரிடமிருந்து உண்மையான இறை நம்பிக்கையும், ஆக்கப்பூர்வமான மார்க்கப்பற்றும் சந்தேகத்திற்குள்ளாகிறது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

عن أنس بن مالك -رضي الله عنه- قال: خطبنا رسول الله -صلى الله عليه وسلّم- فقال في الخطبة: "لا إِيمانَ لِمَن لَا أمَانةَ له ولا دينَ لِمَن لا عهدَ له"

எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இஸ்லாம் மார்க்கம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ( நூல்: அஹ்மது )

வாக்குறுதியை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம்..

حدثنا يونس بن محمد، قال حدثنا عبد الرحمن بن الغسيل، قال حدثني أسيد بن علي، عن أبيه، علي بن عبيد عن أبي أسيد، صاحب رسول الله ﷺ وكان بدريا وكان مولاهم قال قال أبو أسيد بينما أنا جالس عند رسول الله ﷺ إذ جاءه رجل من الأنصار فقال يا رسول الله هل بقي علي من بر أبوي شيء بعد موتهما أبرهما به قال نعم خصال أربعة الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما وإكرام صديقهما وصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما فهو الذي بقي عليك من برهما بعد موتهما.

”ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து இறைத்தூதரே, எனது தாயும், தந்தையும் இறந்துவிட்டனர். இருவரின் இறப்புக்குப்பிறகும் அவர்களுக்காக நான் நன்மை ஏதும் செய்வது மிச்சம் உள்ளதா?’ என கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அவ்விருவருக்காகவும் பிரார்த்திப்பது, பாவமன்னிப்பு வேண்டுவது, அவர்கள் கொடுத்த வாக்கை அவர்களுக்குப் பிறகு நிறைவேற்றுவது, அவர்களின் உறவினர்களுடன் உறவாடுவது, அவர்களின் நண்பர்களை சங்கையாக நடத்துவது உள்ளதுஎன்று கூறினார்கள் என அபூ உஸைத் மாலிக் இப்னு ரபிஆ அஸ்ஸாதி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: அபூதாவூத் )


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي كَذَا وَكَذَا فَحَثَى لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُ مِائَةٍ وَقَالَ خُذْ مِثْلَيْهَا

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி {ஸல்} அவர்கள் வபாத்தான போது அபூபக்கர் (ரழி) அவர்களிடம் பஹ்ரைனில் இருந்து அலாவு இப்னு அல் ஹழ்ரமீ (ரழி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள்யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், “எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்என்று கூறினேன். – “இப்படிக் கூறும் போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர் (ரலி) அவர்கள் மூன்று முறை விரித்துக் காட்டினார்கள்என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ (ரஹ்) கூறினார்கள். அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.                          ( நூல்: புஹாரி )

நபி {ஸல்} அவர்கள் மரணித்த பின்னரும் கூட நபியவர்கள் உயிரோடிருக்கின்ற வேளையில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் அவர்களது மரணத்தோடு நிறைவேற்றப்படாமல் இருந்து விடக்கூடாது என்பதில் தான் நபித்தோழர்கள் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள்.

வாக்களித்து விட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் சக்தியிருந்தும் ஒருவன் நிறைவேற்றாவிட்டால், அல்லது கண்டு கொள்ளாதிருந்தால், அல்லது பொய்யான விஷயங்களை வாக்குறுதியாக அளித்தால் அவன் நரகின் அடித்தட்டில் தண்டனை பெறும் நயவஞ்சகனுடைய பட்டியலில் சேர்ந்து விடுகின்றான் என இஸ்லாம் எச்சரிக்கிறது.

حديث أبي هريرة 

 أن رسول الله ﷺ قال

 آية المنافق ثلاث، إذا حدث كذب وإذا وعد أخلف، وإذا اؤتمن خان

..وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. 1) அவன் பேசினால் பொய் பேசுவான், 2) அவன் வாக்களித்தால் மாறு செய்வான், 3) அவனை நம்பினால் அவன் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                       ( நூல்: புகாரி )

வாக்கு கொடுத்தவர் மறந்த நிலையிலும் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக மூன்று நாட்கள் காத்திருந்த நபி {ஸல்} அவர்கள்.


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ، قَالَ: بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ، فَنَسِيتُ، ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ، فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ، فَقَالَ: «يَا فَتًى، لَقَدْ شَقَقْتَ عَلَيَّ، أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ

நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பு நான் அவர்களிடம் ஒரு வியாபாரம் செய்தேன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை சிறிது இருந்தது. இங்கே நில்லுங்கள், நான் அதை கொண்டு வந்து தருகிறேன்என்றேன். நானும் மறந்து போய்விட்டேன். மூன்று நாட்கள் கழித்து ஞாபகம் வந்ததும் அங்கே சென்றேன். அதே இடத்தில் நபி {ஸல்} அவர்கள் இருந்தார்கள். என்னைப் பார்த்த நபியவர்கள், ‘இளைஞனே, நீ எனக்கு சிரமம் தந்து விட்டாய். நான் உன்னை எதிர்பார்த்து இங்கேயே மூன்று நாட்கள் காத்திருக்கிறேன் என்று கூறினார்கள்” என அப்துல்லாஹ் பின் அபூஹம்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,  ( நூல்: அபூதாவூத் )

கொடுத்த வாக்கு யாருக்காயினும் சரியே!


حَدَّثَنَا حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ، قَالَ: مَا مَنَعَنِي أَنْ أَشْهَدَ بَدْرًا إِلَّا أَنِّي خَرَجْتُ أَنَا وَأَبِي حُسَيْلٌ، قَالَ: فَأَخَذَنَا كُفَّارُ قُرَيْشٍ، قَالُوا: إِنَّكُمْ تُرِيدُونَ مُحَمَّدًا، فَقُلْنَا: مَا نُرِيدُهُ، مَا نُرِيدُ إِلَّا الْمَدِينَةَ، فَأَخَذُوا مِنَّا عَهْدَ اللهِ وَمِيثَاقَهُ لَنَنْصَرِفَنَّ إِلَى الْمَدِينَةِ، وَلَا نُقَاتِلُ مَعَهُ، فَأَتَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْنَاهُ الْخَبَرَ، فَقَالَ: «انْصَرِفَا، نَفِي لَهُمْ بِعَهْدِهِمْ، وَنَسْتَعِينُ اللهَ عَلَيْهِمْ»

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் பத்ருப் போரில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி குலக் காபிர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டனர். நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம்.

அப்போது குறைஷியர் நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாதுஎன அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர்.

நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது நபி {ஸல்} அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்என்று சொன்னார்கள்.                         ( நூல்: முஸ்லிம் )

ஆகவே, ஒரு முஸ்லிமாக பொறுப்புகளின் கனம் அறிந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மகத்துவம் புரிந்து முன்மாதிரி முஸ்லிமாக நடந்து நிகழ்கால அரசியலை ஸ்திரமாக்குவோம். எதிர் கால அரசியலை தீர்மானிப்போம்!

No comments:

Post a Comment