Friday, 15 March 2024

அழகிய முறையில் கடனை திருப்பி செலுத்துதல்!!

 

தராவீஹ் சிந்தனை: 5, உங்களில் சிறந்தவர் தொடர்: - 4.

அழகிய முறையில் கடனை திருப்பி செலுத்துதல்!!


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் நான்காவது நோன்பை நிறைவு செய்து விட்டு, ஐந்தாவது நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக்கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசியும் கேட்டும் வருகின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய அமர்வில் கடனை திருப்பி செலுத்துவதில் அழகிய முறையில் நடந்து கொள்பவர் குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

حَدَّثَنَا ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‏ ‏إِنَّ ‏ ‏خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "உங்களில் சிறந்தவர் கடனை மிக அழகிய முறையில் திருப்பி செலுத்துபவர் தான்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

கடன் என்பது மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக இடம் பெற்றுள்ள ஓர் அம்சமாகும்.

கடன் வாங்கும், கடன் கொடுக்கும் பழக்கம் மனித சமூகம் கூட்டாக வாழத் தொடங்கியதிலிருந்தே துவங்கியதாக வரலாறுகளில் காணப்படுகின்றது.

நிர்பந்தமான, இக்கட்டான, அவசியமான சூழ்நிலையில் அகப்பட்ட ஓர் மனிதன் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள சக மனிதர்களிடம் குறிப்பிட்ட ஓர் கால அவகாசத்தை நிர்ணயித்து, பொருளாகவோ அல்லது பணமாகவோ பெற்றுக் கொள்வதற்கு கடன் எனப்படுகின்றது.

இறைநம்பிக்கையாளன் ஒருவனுக்கு வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் ஏற்பட்டால், கடன் வாங்கிக் கொள்ள இஸ்லாமிய மார்க்கமும் அனுமதி வழங்குகின்றது.

ஆனால், அதற்கான எல்லைகளை அவன் கடந்து விடக்கூடாது. அதன் வரம்புகளை அவன் மீறி விடக்கூடாது.

ஆம்! ஏனைய விஷயங்களுக்கு வகுத்துத் தந்திருப்பதைப் போன்றே கடன் விஷயத்திலும் இஸ்லாம் அழகிய வழிகாட்டலை வழங்கியிருக்கின்றது.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளைக் குர்ஆனில் குறிப்பிடும் அல்லாஹ் அவைகளின் எல்லா பரிமாணங்களையும் மிக விரிவாகக் கூறிட வில்லை.

 

ஆனால், கடன் குறித்து பேசுகிற போது மிக விரிவாக, தெளிவாக விவரித்துப் பேசுவதை 2- ஆம் அத்தியாயத்தின் 282 – ஆம் வசனத்தில் பார்க்கலாம். இன்னும், சொல்லப்போனால் அல்குர்ஆனின் 6666 வசனங்களில் மிகப்பெரிய வசனம் கடன் குறித்துப் பேசுகிற இந்த வசனம் தான்.

கடன் என்பது மேற்கூறிய இக்கட்டான சூழ்நிலைகளின் போது வாங்கிய காலம் போய் எடுத்ததற்கெல்லாம் கடன் வாங்கும் பழக்கம் இன்று பெருகிப் போய் இருக்கின்றது.

வீட்டுக்கடன், கல்விக்கடன், விவசாயக் கடன், இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன், அணியும் ஆடைகள், மின் சாதனப் பொருட்கள், சமையல் அறைச் சாதனங்கள் என ஒரு நீண்ட பட்டியலைக் கொண்டது இந்த கடன்.

ஆடம்பர மோகம், பிறர் போல் வாழ வேண்டும் என்கிற ஆசை எந்த வழியிலாவது வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்கிற வெறி, வீண் விரயமான செலவுகள் என வாழ்க்கைப் போங்கை மாற்றத் துவங்கியதன் விளைவு இன்று நடமாடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் கடனாளிகளாகவே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் கடன் வாங்குவதிலிருந்து பாதுகாப்பானாக!, வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுப்பதற்கு தவ்ஃபீக் செய்வானாக!

அவன் தந்த பொருளாதாரத்தில் பரக்கத் செய்து அதைக் கொண்டு திருப்தியோடு வாழும் நல்ல நஸீபை தவ்ஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!

கவலையிலும், சங்கடத்திலும் முடக்கி விடும் ஆற்றல் கொண்டது கடன்....

روى أن النبي – صلى الله عليه وسلم – دخل ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة ، فقال : يا أبا أمامة ما لي أراك جالساً في المسجد في غير وقت الصلاة ؟ فقال : هموم لزمتني وديون يا رسول الله ، قال : أفلا أعلمك كلاماً إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك ؟ قال : قلت : بلى يا رسول الله ، قال : " قل إذا أصبحت وإذا أمسيت : اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل ، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال " ، قال : ففعلت ذلك ، فأذهب الله عز وجل همي وقضى عني ديني ، ومنها ما رواه أحمد والترمذي وصححه الحاكم وحسنه الألباني

ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டார்கள். அப்போது அவரை நோக்கி: தொழுகையுடைய நேரமல்லாத ஒரு நேரத்தில் உங்களைப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருக்கக் காண்கிறேனே!?”  என ஆச்சரியத்துடன் வினவினார்கள்.

அதற்கவர் என்னைப் பீடித்த துயரமும் கடன்களும் தான் காரணம் அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தார். அப்போது,  நபியவர்கள்: நீ மொழிந்தால் அல்லாஹுத்தஆலா உன்னுடைய துயரத்தைப் போக்கக்கூடியதும் உன்னுடைய கடனை நிறைவேற்றி வைக்கக்கூடியதுமான ஒரு  வார்த்தையை நான் உனக்குக் கற்றுத்தரட்டுமா?” என வினவினார்கள்.

அதற்கு அபூஉமாமா ரலியல்லாஹு அன்ஹு ஆம். அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளிக்க, பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

நீ காலைப் பொழுதையும் மாலைப் பொழுதையும் அடைந்தால் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பீராக!

اللهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ وَأعوْذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَل وَأعوذ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ وَأعوذ بك مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال

அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபியவர்கள் கற்றுத்தந்த இவ்வார்த்தைகளை ஓதிவந்தேன். அல்லாஹ் என்றுடைய துயரத்தைப் போக்கி என்னுடைய கடனையும்  நிறைவேற்றி வைத்தான்" என்று கூறினார்கள்.  ( நூல்: அபூதாவுத் )

பொய் பேசவும், வாக்குக்கு மாறு செய்ய தூண்டும் ஆற்றல் கொண்டது கடன்....

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِى أَخِى عَنْ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِى عَتِيقٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ أَنَّ عَائِشَةَ - رضى الله عنها - أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ يَدْعُو فِى الصَّلاَةِ وَيَقُولُ « اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ » . فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ الْمَغْرَمِ قَالَ « إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ »

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்என்று கூறுவார்கள்.

இதைச் செவியுற்ற ஒருவர் நபி {ஸல்} அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து அதற்கு மாறு செய்கின்றான்என்று பதில் கூறினார்கள்.   ( புகாரி )

அழகிய முறையில் திருப்பி செலுத்துதல்:- 1.

قال الإمام أحمد: حدثنا يونس بن محمد، حدثنا ليث، عن جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هُرْمُز، عن أبي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم أنه ذكر "أن رجلا من بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يُسْلفه ألف دينار، فقال: ائتني بشهداء أشهدهم. قال: كفى بالله شهيدًا. قال: ائتني بكفيل. قال: كفى بالله كفيلا. قال: صدقت. فدفعها إليه إلى أجل مسمى، فخرج في البحر فقضى حاجته، ثم التمس مركبًا يقدم عليه للأجل الذي أجله، فلم يجد مركبًا، فأخذ خشبة فنقرها فأدخل فيها ألف دينار وصحيفة معها إلى صاحبها، ثم زَجج موضعها، ثم أتى بها البحر، ثم قال: اللهم إنك قد علمت أني استسلفت فلانًا ألف دينار، فسألني كفيلا فقلت: كفى بالله كفيلا. فرضي بذلك، وسألني شهيدًا، فقلت: كفى بالله شهيدًا. فرضي بذلك، وإني قد جَهِدْتُ أن أجد مركبًا أبعث بها إليه بالذي أعطاني فلم أجد مركبًا، وإني اسْتَوْدعْتُكَها. فرمى بها في البحر حتى ولجت فيه، ثم انصرف، وهو في ذلك يطلب مركبًا إلى بلده، فخرج الرجل الذي كان أسلفه ينظر لعل مركبًا تجيئه بماله، فإذا بالخشبة التي فيها المال، فأخذها لأهله حطبًا فلما كسرها وجد المال والصحيفة، ثم قدم الرجل الذي كان تَسَلف منه، فأتاه بألف دينار وقال: والله ما زلت جاهدًا في طلب مركب لآتيك بمالك فما وجدت مركبًا قبل الذي أتيت فيه. قال: هل كنت بعثت إلي بشيء؟ قال: ألم أخبرك أني لم أجد مركبًا قبل هذا الذي جئت فيه؟ قال: فإن الله قد أدى عنك الذي بعثت به في الخشبة، فانصرف بألفك راشدًا".
وهذا إسناد صحيح  وقد رواه البخاري في سبعة مواضع من طرق صحيحة

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், நாங்கள் அவர்களோடு அமர்ந்திருந்த சபையில் எங்களிடம் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர், ”என்னிடம் சாட்சிகளை அழைத்து வாரும்! அவர்களைச் சாட்சியாக வைத்து உமக்கு கடன் தருகின்றேன்என்றார்.

கடன் கேட்டவர் சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்என்றார். அப்படியானால், “ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டு வாரும்! அவரை ஜாமீனாக வைத்து உமக்கு கடன் தருகின்றேன்என்றார் கடன் கேட்கப்பட்டவர்.

அதற்கு, கடன் கேட்டவர் பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்என்றார். அப்போது, கடன் கேட்கப்பட்டவர் நீர் கூறுவதும் ஒரு வகையில் உண்மை தான்!என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவரிடம் ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்.

கடன் வாங்கியவர் கடல் வழிப் பயணம் புறப்பட்டு, தம் காரியங்களை முடித்து விட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகன வசதியைத் தேடினார். ஆனால், அவருக்கு எந்த வாகனமும் கிடைக்க வில்லை.

அப்போது, அவர் ஒரு மரக்கட்டையை விலைக்கு வாங்கி, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும், கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார்.

பின்னர், கடற்கரையோரமாக அந்த மரக்கட்டையை கொண்டு வந்து, வானை நோக்கி கையை உயர்த்தி….

இறைவா! இன்ன மனிதரிடம் நான் ஆயிரம் பொற்காசுகளைக் கடனாகக் கேட்டேன். அவர் பிணையாளி வேண்டுமென்றார். நானோ அல்லாஹ்வே நீயே போதுமானவன்!என்றேன். அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக் கொண்டார்.

என்னிடம் சாட்சிகளைக் கொண்டு வருமாறு கோரினார். நானோ அல்லாஹ்வே நீயே சாட்சிக்குப் போதுமானவன்!என்றேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார்.

அவர் கூறிய தவணை முடிவடையும் முன்பாக அவருக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்து விடும் முயற்சியில் இறங்கி, வாகனத்திற்கு ஏற்பாடு செய்தேன்! அல்லாஹ்வே! ஒரு வாகனமும் எனக்கு கிடைக்கவில்லை. இதையெல்லாம் நீ நன்கறிவாய்!

எனவே, இதோ அவருக்குரிய பொற்காசுகள் நிரப்பிய மரக்கட்டையை இந்த கடலில் வீசுகின்றேன்! இதை உரியவரிடத்தில் சேர்க்கும் பொறுப்பையும் உன்னிடத்தில் ஒப்படைக்கின்றேன்என்று பிரார்த்து விட்டு அதைக் கடலில் வீசினார். அது கடலின் நடுப்பகுதிக்கு சென்றதும் திரும்பி விட்டார். அத்துடன் தமது ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார்.

இதனிடையே, கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரின் வருகையை எதிர் பார்த்த வண்ணம் இருந்தார். ஒன்று அவர் வருவார், அல்லது நமது செல்வத்துடன் வாகனம் எதுவும் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார்.

அப்போது, ஒரு ஓரத்தில் ஒரு மரக்கட்டை கிடப்பதைக் கண்டார். தமது குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்கிற நோக்கத்தில் அதை எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார்.

அதைப் பிளந்து பார்த்த போது, “ஆயிரம் பொற்காசுகளையும் கடிதத்தையும் கண்டார்.

சிறிது நாட்கள் கழித்து, கடன் வாங்கியவர் கடன் கொடுத்த அம்மனிதரைச் சந்திக்க வந்தார். வந்தவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது பணத்தை உமக்கு தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது, தான் வாகனம் கிடைத்து உம்மிடம் வந்திருக்கின்றேன். இதோ! உமக்கு தருவதற்காக ஆயிரம் பொற்காசுகளை கொண்டு வந்திருக்கின்றேன்என்று பொற்காசுகள் பொதியப்பட்ட கைப்பையை கடன் கொடுத்தவரிடம் காட்டினார்.

அதற்கு கடன் கொடுத்தவர் எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?” என்று கேட்டார். அப்போது, கடன் வாங்கியவர் வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்திருக்கின்றேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!என்றார்.

அதற்கு கடன் கொடுத்தவர் நீர் மரத்தில் வைத்து எனக்கு அனுப்பியதை உமது சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்த்து விட்டான். எனவே, நீர் கொண்டு வந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு சரியான வழியில் உமது ஊருக்குச் செல்வீராக! என்றார்.     ( நூல்: முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர், புகாரி )

அழகிய முறையில் திருப்பி செலுத்துதல்:- 2.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِنٌّ مِنَ الإِبِلِ، فَجَاءَهُ يَتَقَاضَاهُ، فَقَالَ: أَعْطُوهُ فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلَّا سِنًّا فَوْقَهَا، فَقَالَ:  أَعْطُوهُ فَقَالَ: أَوْفَيْتَنِي أَوْفَى اللَّهُ بِكَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கின்றது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள். ( நூல் : புகாரி )

அழகிய முறையில் திருப்பி செலுத்துதல்:- 3.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ  جَابِرٌ : فَقُلْتُ: نَعَمْ، قَالَ:  مَا شَأْنُكَ؟  قُلْتُ: أَبْطَأَ عَلَيَّ جَمَلِي وَأَعْيَا، فَتَخَلَّفْتُ، فَنَزَلَ يَحْجُنُهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ:  ارْكَبْ ، فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:  تَزَوَّجْتَ  قُلْتُ: نَعَمْ، قَالَ:  بِكْرًا أَمْ ثَيِّبًا  قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ:  أَفَلاَ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ  قُلْتُ: إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ، وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ:  أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ، فَالكَيْسَ الكَيْسَ ، ثُمَّ قَالَ:  أَتَبِيعُ جَمَلَكَ  قُلْتُ: نَعَمْ، فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى المَسْجِدِ فَوَجَدْتُهُ عَلَى بَابِ المَسْجِدِ، قَالَ:  آلْآنَ قَدِمْتَ  قُلْتُ: نَعَمْ، قَالَ:  فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ، فَصَلِّ رَكْعَتَيْنِ ، فَدَخَلْتُ فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلًا أَنْ يَزِنَ لَهُ أُوقِيَّةً، فَوَزَنَ لِي بِلاَلٌ، فَأَرْجَحَ لِي فِي المِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ، فَقَالَ:  ادْعُ لِي جَابِرًا  قُلْتُ: الآنَ يَرُدُّ عَلَيَّ الجَمَلَ، وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، قَالَ:  خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன். அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன் என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள்.

நான் (வாகனத்தில்) ஏறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள். நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன் என்றேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப்போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா? என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள்.

நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடைபோட்டு சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனதிற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதை விட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள். ( நூல் : புகாரி )

இன்னொரு அறிவிப்பில்...

حَدَّثَنَا ثَابِتٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،  أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، فَقَضَانِي وَزَادَنِي

பள்ளிவாசலில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள். ( நூல் : புகாரி )

அழகிய முறையில் கடனை திருப்பி செலுத்தும் ஆற்றலை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment