தராவீஹ் சிந்தனை:- 6. உங்களில் சிறந்தவர்
தொடர்:- 5.
மக்களுக்கு பயன் தருபவரே மனிதர்களில் சிறந்தவர்!!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் உடைய மகத்தான கருணையால் ஐந்தாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, ஆறாவது நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம்.
பெருமானார் {ஸல்}
அவர்கள் பல சந்தர்ப்பங்களில் “ஃகியாருக்கும்,
ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் (
மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு
சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.
அப்படி பெருமானார்
(ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக்கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப்
பேசியும் கேட்டும் வருகின்றோம்.
அந்த வரிசையில்
இன்றைய அமர்வில் மக்களுக்கு பயன் தரும் வகையில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்
குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.
روى أبو هريرة
رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه قال: «المؤمن يألف ويؤلف، ولا خير
فيمن لا يألف ولا يؤلف، وخير الناس أنفعهم للناس»،
அபூ ஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
இறைநம்பிக்கயாளன் நேசிப்பான், நேசிக்கப்படுவான். பிறரை நேசிக்காத, பிறரால் நேசிக்கப்படாத இறைநம்பிக்கையாளனிடம்
எந்த சிறப்பும் இல்லை. "மேலும், மக்களில் சிறந்தவர்
மக்களுக்கு மிகவும் பயன் தருபவர் தான்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (
நூல்: இப்னு ஹிப்பான் )
இறைநம்பிக்கையாளன் ஒருவனின்
வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகும். அவன் தனக்கும், தன் குடும்பத்திற்கும், தன்
மனைவி, மக்களுக்கும் பயன் தருபவனாக வாழ வேண்டும். தன் ஊருக்கும், சமூகத்திற்கும், சமுதயாத்திற்கும்
பயன் தருபவனாக வாழ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தன் மரணத்திற்குப் பின்னால் இருக்கின்ற
மண்ணறை மற்றும் மறுமை வாழ்விற்கு பயன் தருகிற வாழ்வை இந்த உலகில் வாழ வேண்டும்.
இத்தகைய வாழ்வை வாழுமாறு இஸ்லாம்
வலியுறுத்துகின்றது. சுய நலம் பெருகிப் போய் இருக்கின்ற இந்த காலத்தில் பெருமானார்
{ஸல்} அவர்களின் இந்த நபி மொழி மிகவும் கவனிக்கத்தக்கவையாகும்.
ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும்
பயன் தருபவனாக வாழ்பவனே உங்களில் மிகச் சிறந்தவர் என்றால் எவ்வளவு பெரிய பொறுப்பை இஸ்லாம்
ஒரு இறைநம்பிக்கையாளனை நம்பி ஒப்படைக்கின்றது.
எனவே, வாழ்க்கையில் நம்மால்
இயன்ற அளவு சக மனிதர்களுக்கு பயன் தருகிற வகையில் ஏதாவது நற்கருமங்களை அவ்வப்போது செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
தங்களால் எது முடியுமோ, தங்களிடம் எந்த ஆற்றல் உள்ளனவோ அதன் மூலம் மக்களுக்கு பயன் தரவேண்டும்.
1. யூசுஃப் (அலை) அவர்கள் வாழ்விலிருந்து....
وَدَخَلَ
مَعَهُ السِّجْنَ فَتَيٰنِ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَعْصِرُ
خَمْرًا وَقَالَ الْاٰخَرُ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِىْ خُبْزًا
تَاْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَاْوِيْلِهٖ اِنَّا نَرٰٮكَ مِنَ
الْمُحْسِنِيْنَ
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில்
புகுந்தனர்; அவ்விருவரில்
ஒருவன், “நான்
திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து
பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்”
என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!)
எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை
செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்”
(என்று கூறினார்கள்).
( அல்குர்ஆன்:
12: 36 )
يٰصَاحِبَىِ
السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًا وَاَمَّا الْاٰخَرُ
فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ
فِيْهِ تَسْتَفْتِيٰنِؕ
“சிறையிலிருக்கும்
என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு
திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்;
மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு,
அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்)
விதிக்கப்பட்டுவிட்டது” (என்று
யூஸுஃப் கூறினார்). ( அல்குர்ஆன்: 12:
41 )
யூசுஃப் (அலை) அவர்களின் விளக்கத்தின்
மூலம் அரசவையில் பணி செய்த அந்த இளைஞர் சில காலம் கழித்து நாட்டு அரசரின் கனவை
தூக்கி கொண்டு விளக்கம் கேட்க வந்த போது,
எவ்வித நிபந்தனையும் இன்றி அதற்கான விளக்கத்தை சொன்னதோடு நின்று விடாமல்
அதற்கான திட்டங்களையும் அமைத்து அந்த நாட்டையும் அந்த நாட்டின் மக்களையும்
பஞ்சத்தின் மூலம் ஏற்படும் பேரழிவில் இருந்து பாதுகாத்தார்கள் யூசுஃப் (அலை)
அவர்கள்.
قَالَ
تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًاۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ
سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ
“நீங்கள் தொடர்ந்து ஏழு
ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
ثُمَّ
يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ
اِلَّا قَلِيْلًا مِّمَّا تُحْصِنُوْنَ
“பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில்
சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
ثُمَّ
يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ
يَعْصِرُوْنَ
பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல
மழை பெய்யும்;
அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள்
பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார். (
அல்குர்ஆன்: 12:
47 - 49 )
2. நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்விலிருந்து....
وَلَمَّا
وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ
وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ قَالَ مَا خَطْبُكُمَا
قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ وَاَبُوْنَا شَيْخٌ
كَبِيْرٌ
இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக்
கொண்டிருந்ததைக் கண்டார்;
அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள்
ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்)
அவர் கேட்டார்;
அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக்
விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது -
மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
فَسَقٰى
لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ
اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு
இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 23, 24 )
3. துல்கர்னைன் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து...
قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَـنَا وَبَيْنَهُمْ سَدًّا
அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது
- குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும்,
அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித்
தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
قَالَ
مَا مَكَّنِّىْ فِيْهِ رَبِّىْ خَيْرٌ فَاَعِيْنُوْنِىْ بِقُوَّةٍ اَجْعَلْ
بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا
அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க
இருப்பதைவிட) மேலானது;
ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு
எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.
اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا
”நீங்கள் இரும்புப்
பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு
அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்;
அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”
(என்றார்).
فَمَا
اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا
எனவே, (யஃஜூஜ்,
மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
قَالَ
هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ
وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا
“இது என் இறைவனிடமிருந்துள்ள
ஒரு கிருபையே ஆகும்,
ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார் (
அல்குர்ஆன்: 18: 94 - 98 )
தனி மனிதன் ஆனால், பயன் பெறுவதோ பல்லுயிர்
சமூகம்....
இந்தப் பூமியைக்
காப்பாற்ற ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி திரும்பத்
திரும்பக் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கான பதிலை ஜாதவ் பயேங் என்ற
மனிதர் அற்புதமாக உருவாக்கி காட்டியிருக்கிறார்.
கடந்த 35 ஆண்டுகளாக 1,360
ஏக்கர் / 550 ஹெக்டேர் பரப்புள்ள ஒரு
மணல்திட்டு காடாகச் செழித்து வளரத் தன் வாழ்க்கையையே கொடுத்துள்ளார் ஜாதவ் பயேங்.
ஆற்றிடையே மணல்திட்டின் மீது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் காடு இதுதான்.
அசாம் மாநிலத்தைச்
சேர்ந்த கிராமவாசியான ஜாதவ் பயேங்கை அங்குள்ள மக்கள் ' மொலாய் '
என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979-ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன.
வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன.
மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது ஜாதவ்
பயேங்க்கு அப்போது 16
வயது.
பின்னர் இது
தொடர்பாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில்
மரங்கள் எதுவும் வளராது. மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம். முடிந்தால் முயற்சி
செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒருவரும் உதவி செய்யாத போது ஜாதவ்
பயேங் தனி நபராக செயலில் இறங்கி இருக்கிறார்.
1980-ஆம் ஆண்டில்
அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்பு' திட்டத்தின்படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும்
இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. பணி முடிந்ததும் மற்றவர்கள்
சென்றுவிட,
மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே
ஜாதவ் பயேங் தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர். அதன் பின் அந்த பக்கம் யாரும்
எட்டிக் கூட பார்க்கவில்லை.
200 ஹெக்டேர் பரப்பில்
மூங்கில் மட்டும் வளர்த்து வந்த ஜாதவ் பயேங், பிற மரங்களையும் வளர்க்க
முயற்சி எடுத்துள்ளார். ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது
கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். வெகு விரைவில்
மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த
மணல்திட்டில் தாவரங்களும் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் செழிக்க ஆரம்பித்தன.
இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 35 வருடங்கள் ஜாதவ்
பயேங் செய்தார். இப்படி 2008-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும்,
அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
உள்ளூர்வாசிகள் இந்தக் காட்டை மொலாய் காதூனி - அதாவது மொலாயின் காடுகள் என்று
சரியாகவே அழைக்கிறார்கள். மொலாய் தான் ஜாதவ் பயேங்கின் செல்லப் பெயர்.
2008-ஆம் ஆண்டு. ஜிட்டு
கலிட்டா என்கிற வனவிலங்கு ஆர்வலர், கோகிலமுக் தீவில் பெரிய
வனப்பகுதி இருப்பதாகக் கேள்விப்பட்டு, நம்பவே முடியாமல் தீவில்
வந்து இறங்கினார். சில மைல்களுக்கு எதுவும் பசுமையாகத் தெரியவில்லை. பின்னர்
தூரத்தில் மரங்கள் புலப்பட்டன. நடக்க நடக்க மாபெரும் வனப்பகுதி கண்கொள்ளாமல்
விரிந்துகொண்டே சென்றது. விதவிதமான பறவைகள், பிற உயிரினங்கள். ஜிட்டு, அதிர்ச்சியுடன் நிற்க,
சற்று தள்ளி ஒரு மனிதர் தென்பட்டார். அவர் தான் ஜாதவ்
பயேங். ஜாதவின் குடிலில் அவரோடு பேசப் பேச, ஜிட்டுவால் ஆச்சர்யத்தை
அடக்க முடியவில்லை. தான் பல நூறு ஏக்கர் பரப்பளவில் காடு உருவாக்கிய கதையை
ஜிட்டுவிடம் ஜாதவ் பயேங் சொன்னார். அந்தப் பகுதி மக்கள், ஜாதவின் செல்லப்பெயரை வைத்தே 'மொலாய் காடுகள்’ என அதை அழைப்பதையும் புரிந்துகொண்டார்.
ஊர் திரும்பிய
ஜிட்டு, மொலாய் காடுகள் குறித்து கட்டுரை எழுதி, அசாமிய தினசரி பத்திரிகை
ஒன்றில் கொடுத்தார். எடிட்டர் செய்தியை நம்பாமல், 'கதை எல்லாம் நாங்க போடுவது இல்லை’ என மறுத்தார். அந்தச்
சமயத்தில்தான் 2008-ஆம் ஆண்டு தற்செயலாக 115
யானைகள் மொலாய் காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை
துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும்
அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம்
என்று வியந்திருக்கின்றனர். மொலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து தகவல்
முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
2012-ஆம் ஆண்டில்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு பாராட்டு விழாவுக்குப்
பிறகே, ஜாதவ் பயேங்கின் பிரம்ம பிரயத்தன சாதனை உலகின் கண்களில் பட ஆரம்பித்தது. 'இந்தியாவின் காட்டு மனிதன்' என்ற பட்டம் அப்போது
வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள்
பட்டியலில் ஜாதவ் பயேங்குக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. (
நன்றி: தமிழ் சஞ்சிகை.காம் - 01/12/2018 )
உபரியான ஹஜ்ஜை விட ஹராமிலிருந்து காப்பாற்றுவது
சிறந்தது..
كان
عبدالله بن المبارك
يحج عاماً ويغزو في سبيل الله
عاماً آخر، وفي العام الذي أراد فيه الحج.. خرج
ليلة ليودع أصحابه قبل سفره..
وفي الطريق وجد منظراً ارتعدت له أوصاله. واهتزت
له أعصابه
وجد سيدة في الظلام تنحني على كومة أوساخ وتلتقط منها
دجاجة ميتة.. تضعها تحت ذراعها.. وتنطلق في الخفاء.. فنادى عليها وقال لها: ماذا
تفعلين يا أمة الله؟
فقالت له: يا عبد الله – اترك الخلق للخالق فلله تعالى
في خلقه شؤون، فقال لها ابن المبارك: ناشدتك الله أن تخبريني بأمرك.. فقالت المرأة له: أما وقد
أقسمت عليّ بالله.. فلأخبرنَّك
فأجابته دموعها قبل كلماتها : إن الله قد أحل لنا
الميتة..أنا أرملة فقيرة وأم لأربع بنات غيب راعيهم الموت واشتدت بنا الحال ونفد
مني المال وطرقت أبواب الناس فلم أجد للناس قلوبا رحيمة فخرجت ألتمس عشاء لبناتي
اللاتي أحرق لهيب الجوع أكبادهن فرزقني الله هذه الميتة .. أفمجادلني أنت فيها؟
وهنا تفيض عينا ابن المبارك من الدمع وقال لها: خذي هذه
الأمانة وأعطاها المال كله الذي كان ينوي به الحج.. وأخذتها أم اليتامى، ورجعت
شاكرة إلى بناتها
وعاد ابن المبارك إلى بيته، وخرج الحجاج من بلده فأدوا
فريضة الحج، ثم عادوا، وكلهم شكر لعبد الله ابن المبارك على الخدمات التي قدمها
لهم في الحج.
يقولون: رحمك الله يا ابن المبارك ما جلسنا مجلسا إلا
أعطيتنا مما أعطاك الله من العلم ولا رأينا خيرا منك في تعبدك لربك في الحج هذا
العام
فعجب ابن المبارك من قولهم، واحتار في أمره وأمرهم، فهو
لم يفارق البلد، ولكنه لايريد أن يفصح عن سره
وفي المنام يرى رجلا يشرق النور من وجهه يقول له: السلام
عليك يا عبدالله ألست تدري من أنا؟ أنا محمد رسول الله أنا حبيبك في الدنيا وشفيعك
في الآخرة جزاك الله عن أمتي خيرا
يا عبد الله بن المبارك، لقد أكرمك الله كما أكرمت أم
اليتامى.. وسترك كما سترت اليتامى، إن الله – سبحانه وتعالى – خلق ملكاً على
صورتك.. كان ينتقل مع أهل بلدتك في مناسك الحج.. وإن الله تعالى كتب لكل حاج ثواب
حجة وكتب لك أنت ثواب سبعين حجة.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில்
மிகப்பெரிய வல்லுநர். ஒரே நேரத்தில் அவருடைய வகுப்பிலே ஆயிரக்கணக்கான மாணவர்கள்
ஹதீஸ் பாடம் பயில அமர்ந்திருப்பார்கள்.
ஒரு ஆண்டு ஹஜ் மற்றும் நபிகளாரை ஜியாரத் செய்யவும் அடுத்த
ஆண்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்காக செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறெ அந்த ஆண்டு ஹஜ் செய்ய முடிவெடுத்து, தம் தோழர்களோடு பயணம் செய்ய ஆயத்தமானார்கள்.
பயணம் செய்வதற்காக ஒரு வாகனத்தை வாங்க சந்தைக்கு
வருகின்றார்கள். வழியில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி) அவர்கள் கண்ட காட்சி
அவர்களின் இதயத்தை ரணமாக்கி, இரு விழிகளில் இருந்தும்
கண்ணீரை வரவழைத்து விட்டது.
அங்கே ஒரு பெண்மணி செத்துப் போன ஒரு வாத்து, அல்லது கோழியின் இறக்கைகளை உறித்துக் கொண்டும், அதன் இறைச்சியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் போட்டுக்
கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
அப்பெண்மணியின் அருகே சென்ற இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள்
அப்பெண்மனியை நோக்கி “ஓ அல்லாஹ்வின் அடிமையே! என்ன காரியம் செய்து கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு, அப்பெண்மணி ”படைத்தவனுக்கும்,
படைக்கப்பட்ட ஒரு படைப்புக்கும் தொடர்பான விவகாரம் இது!
இதில் தலையிட உமக்கு அதிகாரமில்லை, உம் வேலையைப் பார்த்து
விட்டுச் செல்லும்!”
என்றார்.
அதற்கு, அப்துல்லாஹ் (ரஹ்)
அவர்கள் “அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன்! உம்மைப் பற்றி எமக்கு நீங்கள் அவசியம்
சொல்ல வேண்டும்”
என்றார்கள்.
அப்பெண்மணி வாயைத் திறந்து வார்த்தைகளைக் கொட்டும் முன்பாக, அவர்களின் கண்கள் கண்ணீரை கொண்டு வந்து கொட்டியது.
தழுதழுத்த குரலில் அப்பெண்மணி “அல்லாஹ் என் போன்ற ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு இந்த செத்துப்போன பிராணிகளை ஹலாலாக
ஆக்கியிருக்கின்றான்.
நானோ கணவன் இல்லாத விதவைப்பெண், அங்கே என் வீட்டிலோ என்னுடைய நான்கு பெண்மக்களும் உண்ண உணவில்லாமல் பசியால்
குடல் வெந்து துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நானும், என்னைச் சுற்றியிருக்கிற
மனிதர்கள் அனைவரிடத்திலும் உதவி கேட்டு மன்றாடி விட்டேன். ஒருவரின் இதயத்தில் கூட
இரக்கம் சுரக்கவில்லையே!?”
ஏதோ,
அல்லாஹ்வாவது எங்களின் இந்த பரிதாப நிலை கண்டு, அருள் புரிந்து இந்த செத்தப் பிராணியை தந்திருக்கின்றான்.
ஆனால், நீரோ இப்போது என்னிடம்
வந்து தர்க்கித்துக் கொண்டிருக்கின்றீர்” என்று கூறினாள்.
இதைக் கேட்டதும் தான் தாமதம் அப்துல்லாஹ் இப்னு முபாரக்
(ரஹ்) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.
ஒரு வழியாக, நிதானித்து விட்டு தம்
கையிலிருந்த பணப்பையை அந்தப் பெண்மணியிடத்திலே கொடுத்து விட்டு உடனடியாக திரும்பி
விட்டார்கள்.
அப்பெண்மணியோ நன்றிப் பெருக்கோடும், மகிழ்ச்சியோடும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் செல்லும் திசை நோக்கி அவர்களின்
உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை எதிர் பார்த்துக்
காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் குழு நீண்ட நேரமாகியும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள்
வராததால் வழியில் வந்து சேர்ந்து கொள்வார் எனக் கருதி ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச்
சென்று விட்டனர்.
ஹஜ்ஜுடைய காலம் முடிந்து ஹஜ்ஜுக்குச் சென்ற அவர்களின்
நண்பர்கள் ஊர் திரும்பினர்.
வீட்டில் இருந்த அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைச்
சந்தித்த நண்பர்கள் ஒவ்வொருவரும் “அப்துல்லாஹ்வே! அல்லாஹ்
உமக்கு அருள் புரியட்டும்! உம்முடைய வழிகாட்டலால் தான் நாங்கள் எங்களின் ஹஜ்ஜை மிக
எளிமையாக அமைத்துக் கொள்ள முடிந்தது.
கஅபாவில் வைத்து நீர் எங்களோடு நடந்து கொண்ட அந்த அழகிய
பண்பாடுகள் இருக்கிறதே இப்போது நாங்கள் நினைத்தாலும் ஒரு வித சிலிர்ப்பு
ஏற்படுகிறது.
அல்லாஹ் உமக்கு வழங்கிய கல்வியறிவைக் கொண்டு எங்களின்
எல்லோருடைய ஹஜ்ஜையும் மிகச் சரியாக அமைத்துக் கொள்ள உதவி புரிந்தீர்!
அதே நேரத்தில், ஹஜ்ஜுடைய காலத்தில் நீர்
உம்முடைய ரப்பை வணங்கிய அந்த முறை, வணக்க வழிபாட்டில்
காட்டிய ஈடுபாடு,
ஹஜ்ஜுடைய கிரியைகளில் நீர் செலுத்திய கவனத்தைப் போன்று
வேறெவரும் செலுத்தியதை நாங்கள் பார்த்ததில்லை.
மொத்தத்தில் உம்மைப் போன்று ஓர் சிறந்த மனிதரை இந்த
உலகத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை!” என்று கூறி நன்றி
சொல்லிக் கொண்டனர்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கு ஒரே குழப்பமாக
இருந்தது. என்ன இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? நான் எங்கே ஹஜ்ஜுக்கு
சென்றேன்?
வந்தார்கள், வாழ்த்தினார்கள், நன்றி கூறினார்கள் என்ன நடக்கிறது?” என்று தமக்குத்
தாமே பேசிக் கொண்டார்கள்.
அன்றைய இரவு
கனவில் பெருமானார் {ஸல்}
அவர்களைக் கனவில் காணும் அரும்பாக்கியத்தை, பெரும்பேற்றை பெற்றார்கள் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள்.
கனவில் வந்த பெருமானார் {ஸல்}
அவர்கள் “அப்துல்லாஹ்வே உமக்கு அல்லாஹ்வின்
புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! நான் யார் என்று நீர் அறிவீரா? நான் தான் முஹம்மது {ஸல்}
இந்த உலகத்தில் நீர் நேசிக்கின்ற, நாளை மறுமையில் உமக்கு பரிந்துரை செய்யவிருக்கின்ற உம்முடைய நபி!
ஆரம்பமாக, என் உம்மத்தினரின்
சார்பாக உமக்கு அல்லாஹ் நல்ல நலவுகளைத் தர வேண்டுமென நான் துஆ செய்கிறேன்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களே! நீர் ஓர் ஆதரவற்ற
குடும்பத்திற்கு சந்தோஷத்தை வழங்கியது போன்று அல்லாஹ் உமக்கும் சந்தோஷத்தை
வழங்குவான்! நீர் அவர்களின் நிலையைக் கண்டு, அவர்களுக்கு உதவியதை
மறைத்தது போன்று அல்லாஹ் நாளை மறுமையில் உம்முடைய குறைகளையும் மறைப்பான்!
நீர் செய்த காரியம் அல்லாஹ்வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதன் பலனாக அல்லாஹ் உம்முடைய தோற்றத்தில் ஒரு வானவரை அனுப்பி, உமக்குப் பகரமாக ஹஜ் கிரியைகளைச் செய்ய வைத்தான்.
மேலும், உம் ஊரிலிருந்து “ஹஜ் செய்யும் ஒவ்வொரு ஹாஜிக்கும் ஒரு ஹஜ்ஜுடைய ஸவாபை அல்லாஹ் வழங்கினான்.
ஆனால், உமக்கோ சென்ற அத்துணை பேர்களின் ஹஜ்ஜுடைய கூலியை வழங்கி உம்மை கௌரவித்து இருக்கின்றான்.
மேலும், நீர் ஒரு முஸ்லிமின்
வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, தவறான பாதையில் செல்ல
இருந்த ஒரு முஸ்லின் குடும்பத்தை நேர்வழியின் பால் திருப்பி விட்டதால் அல்லாஹ் உமக்கு எழுபது ஹஜ் செய்த நன்மையை சன்மானமாக வழங்கி
கௌரவிக்கின்றான்!”
என்று கூறினார்கள். ( நூல்: அல் பிதாயா வந்
நிஹாயா லி இமாமி இப்னு கஸீர், பாகம்:13, பக்கம்:611
)
ஒரு உயிருக்காக பரிதவித்த எத்தனையோ உயிர்கள்,,,
أتى
شابّان إلى عمر وكان في المجلس، وهما يقودان رجلاً من البادية فأوقفوه أمام عمر بن
الخطاب قال عمر: ما هذا، قالوا: يا أمير المؤمنين، هذا قتل أبانا، قال: أقتلت
أباهم؟ قال: نعم قتلته، قال كيف قتلتَه؟
قال دخل بجمله في أرضي، فزجرته، فلم ينزجر، فأرسلت عليه حجراً، وقع على رأسه فمات.
قال عمر: القصاص.. قرار لم يكتب. وحكم سديد لا يحتاج مناقشة
உமர் (ரலி) அவர்கள்
ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு இரண்டு வாலிபர்கள்
நடுத்தர வயதுடைய ஒரு கிராமவாசியை கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர்.
உமர் (ரலி)
அவர்கள் இவர் யார்?
என்று கேட்க, இரு வாலிபர்களும் இவர்
எங்கள் தந்தையைக் கொன்றுவிட்டார் என்றனர்.
அந்தக் கிராமவாசியிடம்
இவ்விரு இளைஞர்களும் சொல்வது உண்மைதானா? என்று கேட்க, அந்த கிராமவாசி “ஆம்”
என்று பதில் கூறினார்.
எப்படிக் கொலை
செய்தீர்?
ஏன் கொலை செய்தீர்? என்று கேட்டார்கள்
அமீருல் முஃமினீன் அவர்கள்.
அவர், நான் தூரமான இன்ன பகுதியில் இருந்து ஒட்டகங்களை மேய்ச்சலுக்காக கொண்டு
வந்திருக்கின்றேன். நான் கொண்டு வந்திருக்கும் ஒரு ஒட்டகம் இவ்விரு வாலிபரின்
தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து மேய்ந்திருக்கின்றது. நான் அதை
கவனிக்கவில்லை.
பின்னர், நான் கவனித்ததும் அதை அங்கிருந்து விரட்ட எத்தனித்தேன். அதே நேரத்தில் இவ்விரு
இளைஞர்களின் தந்தையும் விரட்டினார். அது நகர மறுக்கவே பெரிய கல்லொன்றை எடுத்து
ஒட்டகத்தின் மீது வீசினார். அந்த இடத்திலேயே அது இறந்து போனது.
அவர் ஒட்டகத்தின்
மீது எறிந்த அதே கல்லை எடுத்து அவர் மீது நான் எறிந்தேன். அது அவரின் தலையில்
பட்டு அவரும் அதே இடத்தில் இறந்து போனார்” என்றார்.
பெரிய அளவிலான
விசாரணைக்கு ஏதும் சந்தர்ப்பம் கிடைக்காததால், குற்றவாளியும் தன்
குற்றத்தை ஒத்துக் கொண்டதால் உமர் (ரலி) அவர்கள் குற்றம் செய்த அவருக்கு மரண
தண்டனை என தீர்ப்பு வழங்கினார்கள்.
قال
الرجل: يا أمير المؤمنين: أسألك بالذي قامت به السماوات والأرض، أن تتركني ليلة؛
لأذهب إلى زوجتي وأطفالي في البادية، فأُخبِرُهم بأنك سوف تقتلني، ثم أعود إليك،
والله ليس لهم عائل إلا الله ثم أنا، قال عمر: من يكفلك أن تذهب إلى البادية، ثم
تعود إليَّ، فسكت الناس جميعاً..
இந்த தீர்ப்பைக்
கேட்ட அந்த கிராமவாசி: ”அமீருல் முஃமினீன் அவர்களே! எந்த பூமியும், வானமும் எந்த இறிவனின்
ஆற்றலால் நிலை கொண்டிருக்கின்றதோ அந்த இறைவனை முன்னிருத்தி நான் உங்களிடம்
கேட்கின்றேன்.
எனக்கு ஒரேயொரு
நாள் அவகாசம் கொடுங்கள்! நான் என் மனைவி, மக்களை சந்தித்து விட்டு
வருகின்றேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! அல்லாஹ்விற்கு பிறகு
அவர்களுக்கு என்னைத்தவிர வேறு யாரும் இல்லை!
நான் அவர்களிடம்
சென்று அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான இதர அம்சங்களை செய்து விட்டு, நடந்த நிகழ்வுகளையும் கூறி நான் ஒரு மரண தண்டனை குற்றவாளி என்பதையும் எடுத்துக்
கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்று மீண்டும் இங்கு வந்து விடுகிறேன். அதன்
பின்னர் எனக்கு தண்டனையை வழங்குங்கள்!” என்றார்.
,
நீர் ஒரு மரண தண்டனைக் குற்றவாளி, நீர் ஊர் சென்று திரும்பும் வரை உம் சார்பாக எவராவது பொறுப்பேற்றுக் கொண்டால்
உம்மை நான் அனுப்பி வைக்கின்றேன். நீரும் சென்று விட்டு வரலாம்! என்றார்கள்.
إنهم لا
يعرفون اسمه، ولا خيمته، ولا داره، ولا قومه، فكيف يكفلونه، وهي كفالة ليست على
عشرة دنانير، ولا على أرض، ولا على ناقة، إنها كفالة على الرقبة أن تُقطع بالسيف.
ومن يعترض على عمر في تطبيق شرع الله؟ ومن يشفع عنده؟ ومن يمكن أن يُفكر في وساطة
لديه؟ فسكت الصحابة،
சபை முழுவதும்
நீண்ட மவுனம் நிலவியது. அவரும் சபை முழுவதிலும் ஒரு பார்வை பார்த்தார். எவராவது நமக்கு பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டாரா? நம் அருமைக் குழந்தைகளையும், மனைவியையும் மரணிப்பதற்கு
முன் ஒரு முறை பார்த்து விட்டு வந்து விடலாமே! எனும் ஏக்கம் அந்தப் பார்வையில்
தெரிந்தது.
சபையினரின் அமைதிக்கும் ஓர் அர்த்தம் இருந்தது. முன் பின்
அறியாதவர்,
அவரின் பெயரோ, ஊரோ, கோத்திரமோ எதுவும் அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை இது ஒரு புறம்.
இவருக்குப் பதிலாக
பொறுப்பேற்க இருப்பது ஒன்றும் தீனாரோ அல்லது திர்ஹம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவே!
சென்றவர் திரும்ப வராவிட்டால் போவது உயிர் அல்லவா?
وعمر
مُتأثر، لأنه وقع في حيرة، هل يُقدم فيقتل هذا الرجل، وأطفاله يموتون جوعاً هناك،
أو يتركه فيذهب بلا كفالة، فيضيع دم المقتول؟
سكت الناس، ونكّس عمر رأسه، والتفت إلى الشابين، أتعفوان عنه؟ قالا: لا، من قتل
أبانا لا بد أن يُقتل يا أمير المؤمنين، قال عمر: من يكفل هذا أيها الناس، فقام
أبو ذر الغفاريّ بشيبته وزهده، وصدقه، قال: يا أمير المؤمنين، أنا أكفله،
உமர் (ரலி)
அவர்களுக்கு,
அந்த கிராமவாசியின் தவிப்பும் ஏக்கமும் நன்கு புலப்பட்டது.
என்ற போதிலும் இறைஷரீஅத் சம்தப்பட்ட விஷயம் அல்லவா? ஆதலால் தலை மீது கைவைத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்கள்.
இரண்டு இளைஞர்களையும் நோக்கி “இளைஞர்களே! இவரை மன்னிக்க முன்வருகின்றீர்களா? என்று கேட்டார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள்.
”எங்கள் தந்தையைக்
கொன்றவனை நாங்கள் மன்னிக்க விரும்பவில்லை, மரண தண்டனையை
நிறைவேற்றியே ஆகவேண்டும்”
என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.
சுற்றியிருந்த
சபையினரை நோக்கிய உமர் (ரலி) அவர்கள் “இவருக்கு யாராவது
பொறுப்பேற்கின்றீர்களா?”
என்று கேட்டார்கள்.
அந்த அவையில்
நிலவிய நிசப்தத்தை கலைத்தது அந்தக் குரல். ஆம்! ”நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்! அமீருல் முஃமினீன் அவர்களே!” என்று ஒலித்தது அந்தக் குரல்.
குரலுக்குச்
சொந்தக்காரர் வேறு யாருமல்ல! அஞ்சாநெஞ்சர் என்று அறியப்படுகிற அபூதர் அல் ஃகிஃபாரி
(ரலி) அவர்கள்.
قال
عمر: هو قَتْل، قال: ولو كان قتلاً، قال: أتعرفه؟ قال: ما أعرفه، قال: كيف تكفله؟
قال: رأيت فيه سِمات المؤمنين، فعلمت أنه لم يكذب، وسيأتي إن شاء الله، قال عمر:
يا أبا ذرّ، أتظن أنه لو تأخر بعد ثلاث أني تاركك! قال: الله المستعان يا أمير
المؤمنين، فذهب الرجل، وأعطاه عمر ثلاث ليالٍ؛ يُهيئ فيها نفسه، ويُودع أطفاله
وأهله، وينظر في أمرهم بعده، ثم يأتي، ليقتص منه لأنه قتل
அமீருல் முஃமினீன்
அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை நோக்கி “அபூதர் அவர்களே! நீங்கள்
கொலைப்பழிக்கு பகரம் ஏற்றிருக்கின்றீர்கள் தெரியுமா உங்களுக்கு?” என்று வினவ,
ஆம் நன்றாகத்தெரியும்!” என்று பதில் கூறினார்கள்.
அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்ற உமர் (ரலி) அவர்களின் வினாவிற்கு, “இல்லை, தெரியாது”
என்று பதிலளித்தார்கள் அபூதர் (ரலி) அவர்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “பின்னர் எந்த அடிப்படையில் நீர் பொறுப்பேற்றுக் கொண்டீர்? என்று வினவியதற்கு,
“ அமீருல் முஃமினீன் அவர்களே! அவரின் முகத்திலே நான்
இறைநம்பிக்கையாளர்களின் ஒளியைப் பார்த்தேன்! அவர் பொய் பேசமாட்டார், இன்ஷாஅல்லாஹ் சொன்னது போன்று ஊர் சென்று திரும்பி வருவார் என்று நான்
விளங்கிக் கொண்டேன்”
என்று அபூதர் (ரலி) பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் “அவர் வரவில்லையென்றால்
உம்மை விட்டு விடுவேன் என்று மட்டும் கருதி விடாதீர்கள்! இறைச்சட்டத்தின் முன்
அனைவரும் எனக்கு சமமே!”
என்று கூறினார்கள். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் எனக்கு பேருதவி செய்வான் அமீருல் முஃமினீன் அவர்களே! என்றார்கள்.
உமர் (ரலி)
அவர்கள் மூன்று நாள் அவகாசம் கொடுத்து மூன்றாம் நாள் சூரியன் அஸ்தமிக்கும்
நேரத்திற்குள் நீர் ஊர் சென்று மதீனாவிற்கு வந்து விடவேண்டும் என்று அந்த
கிராமவாசியிடம் சொல்லி ஊர் சென்று வர அனுமதி கொடுத்தார்கள்.
وبعد
ثلاث ليالٍ لم ينس عمر الموعد، يَعُدّ الأيام عداً، وفي العصر نادى في المدينة:
الصلاة جامعة، فجاء الشابان، واجتمع الناس، وأتى أبو ذر، وجلس أمام عمر، قال عمر:
أين الرجل؟ قال: ما أدري يا أمير المؤمنين، وتلفَّت أبو ذر إلى الشمس، وكأنها تمر
سريعة على غير عادتها،
وقبل
الغروب بلحظات، وإذا بالرجل يأتي، فكبّر عمر، وكبّر المسلمون معه،
அமீருல் முஃமினீன்
அவர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாள் அஸர் தொழுகையின் நேரம்
வந்தது. தொழுகைக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டு, இகாமத்தும்
கொடுக்கப்பட்டு தொழுகை முடிந்தும் விட்டது. ஆனால், இப்போது வரை அந்த கிராமவாசி மதீனாவுக்கு வரவில்லை.
தொழுகை முடிந்தது.
வாதிகளான இரு வாலிபர்களும்,
அமீருல் முஃமினீன் அவர்களும் மற்றும் எல்லோரும் அங்கே கூடி
மஸ்ஜிதுன் நபவியை ஒட்டியிருக்கிற பாதையை பார்த்தபடியே அமர்ந்திருக்கின்றார்கள்.
சற்று நேரத்தில்
அபூதர் (ரலி) அங்கே வந்தார்கள். முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் அபூதர் (ரலி)
அவர்கள் உமர் (ரலி) அவர்களின் முன் வந்து அமர்ந்தார்கள்.
அபூதர் (ரலி)
அவர்களே! நீங்கள் பொறுப்பெடுத்த அம்மனிதரை எங்கே? என்று கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.
சூரியனை
திரும்பிப் பார்த்தவாறே,
இன்றைக்கு மட்டும் எப்படி வழக்கத்திற்கு மாறாக இந்தச்
சூரியன் விரைவாக மறையப்போகிறது என்று நினைத்தவர்களாக அமீருல் முஃமினீன் அவர்களே!
உங்களைப் போன்று தான் நானும் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!” என்றார்கள்.
சூரியன்
அஸ்தமிக்கும் சற்றும் முன்பாக, மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி
ஓர் உருவம் விரைந்து வருவதை மாநபியின் மஸ்ஜிதில் எதிர்பார்த்து குழுமியிருந்த
அனைவரும் கண்டனர்.
அருகில் வர வர
அனைவரின் முகத்திலும் அப்படியொரு ஆனந்தம், மகிழ்ச்சி, அபூதர் (ரலி) பிழைத்துக் கொண்டார் என்பதற்காக அல்ல. எந்த காரணத்தைக் காட்டி
அபூதர் (ரலி) அவருக்காக பொறுப்பேற்றாரோ அதை அவர் உண்மை படுத்தி விட்டார்
என்பதற்காக.
மாநபி மஸ்ஜிதின்
முன்பிருந்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று முழங்க, சுற்றியிருந்தவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் விண்ணுயர தக்பீர் முழக்கத்தை
எழுப்பினர்.
فقال
عمر: أيها الرجل أما إنك لو بقيت في باديتك، ما شعرنا بك، وما عرفنا مكانك، قال يا
أمير المؤمنين، والله ما عليَّ منك ولكن عليَّ من الذي يعلم السرَّ وأخفى! ها أنا
يا أمير المؤمنين، تركت أطفالي كفراخ الطير، لا ماء ولا شجر في البادية، وجئتُ
لأُقتل، فوقف عمر وقال للشابين: ماذا تريان؟ قالا وهما يبكيان: عفونا عنه يا أمير
المؤمنين لصدقه، قال عمر: الله أكبر، ودموعه تسيل على لحيته
ஆச்சர்யம் விலகாத
பார்வையோடு நோக்கிய உமர் (ரலி) அவர்கள் “ஓ! கிராமவாசியே! நீர்
நினைத்திருந்தால் உம் ஊரிலேயே தங்கியிருக்கலாம், உம் ஊரையோ,
உம் வீட்டையோ தெரிந்து கொள்ளாத எங்களை நீர் ஏமாற்றி
இருக்கலாம்! ஆனாலும்,
சொன்ன நேரத்தில் நீர் வந்து எங்களை ஆச்சர்யப்படுத்தி
விட்டீர்! ஆனந்தப்படுத்தி விட்டீர்!” என்று கூறினார்கள்.
அமீருல் முஃமினீன்
அவர்களே! உங்களுக்கும் எனக்குமான விஷயம் அல்லவே இது? எனக்கும் இரகசியத்தையும், பரகசியத்தையும் அறிந்து
கொள்கிற எல்லாம் வல்ல இறைவனோடல்லவா தொடர்புள்ள ஓர் விஷயம் இது!” எப்படி ஏமாற்ற முடியும் என்று கூறினார்.
அமீருல் முஃமினீன்
அவர்களே! இப்போது தான் முஹம்மது நபி ஸல் அவர்கள் இந்த உலகை விட்டு
விடைபெற்றார்கள். அவர்கள் விடைபெற்ற கொஞ்ச நாட்களிலேயே அவருடைய உம்மத்
"வாக்குறுதிக்கு மாறு செய்கிறதே" என்று சமூகம் பழித்து இழித்து கூறி
விடக்கூடாது என்பதற்காக நான் திரும்பி வந்து விட்டேன்.
அமீருல் முஃமினீன்
அவர்களே! தண்ணீரும்,
மரமும் இல்லாத ஓர் ஊரிலே எப்படி தவித்துக் கொண்டிருக்கும்
ஓர் பறவை தன் குஞ்சுகளுக்கு தன் இறகால் அரவணைத்து இரக்கம் காட்டுமோ அது போன்று
அரவணைத்து அன்பு காட்டி. என் குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கின்றேன்
என்றார்.
இப்போது நான்
எனக்கான தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள்!” என்று அந்தக் கிராமவாசி கூறினார்.
கண்களில் நீர்
ததும்பி வழிந்தோடிய நிலையில் இருந்த உமர் (ரலி) அவர்கள் வாதிகளான இரு
இளைஞர்களையும் நோக்கி “இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன? கேட்க, பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் விம்மியவர்களாக “அமீருல் முஃமினீன் அவர்களே! நாங்கள் மன்னித்து விட்டோம்!”
இப்போது தான்
முஹம்மது நபி ஸல் அவர்கள் இந்த உலகை விட்டு விடைபெற்றார்கள். அவர்கள் விடைபெற்ற
கொஞ்ச நாட்களிலேயே அவருடைய உம்மத்திடம் "மன்னிக்கும் மனோபாவம் இல்லாமல் போய்
விட்டதே" என்று சமூகம் பழித்து இழித்து கூறி விடக்கூடாது என்பதற்காக நாங்கள்
மன்னித்து விட்டோம்" என்று கூறினார்கள்.
இது கேட்ட உமர்
(ரலி) அவர்கள் “அல்லாஹு அக்பர்”
என்று கூறினார்கள். அவர்களின் கண்களில் இருந்து நீர் தாடியை
நனைத்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.
{ இந்தச் சம்பவம் எந்தவொரு
வரலாற்று நூலிலும் இடம் பெறவில்லை. எனினும் உமர் (ரலி) அபூதர் (ரலி) மற்றும்
நபித்தோழர்கள் ஆகியோரின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் எவ்வித இழப்பையும், ஏற்படுத்தாததோடு மார்க்க அம்சங்களில் எந்த ஒன்றோடும் முரண்படாததால் இந்தச்
செய்தியை ஒரு வரலாற்று நிகழ்வாக பார்ப்பதில் எவ்வித குற்றமும் இல்லை என சமகாலத்து
அறிஞர்கள் ஆய்வு செய்து சான்றளிக்கின்றார்கள்.}
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மக்களுக்கு பயன் தரும் வாழ்க்கையை
வாழ தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன் !! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment