Thursday, 15 February 2024

நமது நபி {ஸல்} அவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்போம்!!

 

நமது நபி {ஸல்} அவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்போம்!!



இன்று நம் சமூகத்தில் பல்வேறு வகையான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.

முன்பெல்லாம் சிறார்களும் இளைஞர்களும், பெண்களும் தான் இந்த கலாச்சார நாற்றங்களை சந்தனமாக அள்ளி பூசிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், தற்போது சமூகத்தில் அனைவராலும் இந்த கலாச்சார நாற்றங்கள் ஆரத் தழுவப்பட்டு இஸ்லாமிய வாழ்வு எது? பிற மத கலாச்சாரம் எது? என்று பிரித்தறிய முடியாத சூழல் நிலவுவதையும்,  வேதனையோடு கடந்து போவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்கிற மனோநிலைக்கு நம்மில் பலரும் வந்து விட்டதை நாம் பார்த்து வருகின்றோம்.

இன்று பிற மத கலாச்சாரங்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் பலர் அவர்கள் அறியாமலேயே இஸ்லாமிய மார்க்கத்தையும், நமக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்கிய கலாச்சாரத்தையும் பிற மத கலாச்சாரங்களை விட குறைவாக மதிப்பிடுகின்றார்கள். (நவூது பில்லாஹ்...)

இஸ்லாமிய மார்க்கமே உயர்வான மார்க்கம்!

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம் சமூகம் எந்த விஷயத்திலும் பிற மத கொள்கைகளிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் அறவே இல்லை என்பதே உண்மையாகும். 

எந்தத் தருணத்திலும் பிறமத மக்கள் செய்யும் செயல்களை காப்பியடித்துச் செய்ய வேண்டிய அவசியம் முஸ்லிம் சமூகத்திற்கு கிஞ்சிற்றும் இல்லவே இல்லை என்பதைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌  اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

(ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். ( அல்குர்ஆன்: 05: 03 )

அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் வேண்டாம்! 

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

فَاِنْ زَلَـلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ‏

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 02: 208, 209 )

عن جابر : ( أن عمر بن الخطاب رضي الله عنهما أتى رسول الله ( صلى الله عليه و آله وسلم ) بنسخة من التوراة فقال يا رسول الله هذه نسخة من التوراة فسكت فجعل يقرأ و وجه رسول الله يتغير فقال أبو بكر ثكلتك الثواكل ما ترى ما بوجه رسول الله ( صلى الله عليه و آله وسلم ) فنظر عمر إلى وجه رسول الله ( صلى الله عليه و آله وسلم ) فقال أعوذ بالله من غضب الله وغضب رسوله ( صلى الله عليه و آله وسلم ) رضينا بالله رباً وبالإسلام ديناً وبمحمد نبياً فقال رسول الله ( صلى الله عليه و آله وسلم ) : " والذي نفس محمد بيده لو بدا لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل ولو كان حياً وأدرك نبوتي لاتبعني ) رواه الدارمي ).

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் தவ்ராத்தின் ஒரு பிரதியைக் கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதோ இது தவ்ராத்தின் பிரதியாகும் எனக் கூறினார்கள்.   அப்போது நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.   உமர் (ரலி) அப்பிரதியை வாசிக்கலானார்கள்.   அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறத் தொடங்கியது.   உடனே அபூபக்கர் (ரலி), உமரே! உனக்கு நாசமுண்டாகட்டும் அல்லாஹ்வின் தூதரின் முகத்தை நீர் பார்க்கவில்லையா எனக் கூறினார்கள்.   உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தை பார்த்த உமர்(ரலி), அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கோபத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்.   அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண்டேன் எனக் கூறினார்கள். 

அப்போது நபி (ஸல்) அவர்கள்,  முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மூஸா (அலை) உங்களுக்கு மத்தியில் வந்தால், என்னை ஏற்று பின்பற்றுவதை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால் வழிகெட்டு விடுவீர்கள். 

மூஸா (அலை) உயிருடன் இருந்து என் நபித்துவத்தை அடைந்து கொண்டால் அவரும் என்னையே பின்பற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்: தாரமி 449. 

நபி (ஸல்) அவர்களின் தூய கலாச்சாரத்தின் தேவை ஏன்?.. 

ஹிஜ்ரத்துக்கு பிந்தைய மதீனா வாழ்க்கை என்பது இந்த உம்மத்தின் மேன்மக்களான நபித்தோழர்களுக்கு  கிடைத்த மகத்தான வாழ்க்கையாகும்.

இஸ்லாமிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் உணர்ந்து, ரசித்து, இன்பத்தோடு செய்யவும் காலத்தால்

பின்னால் வந்த நமக்கும் கூட இஸ்லாமிய வாழ்வின் மகத்துவத்தை உணர்த்தவும் முடிந்தது என்றால் அது மிகையாகாது.

அந்த அளவுக்கு மாநபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய வாழ்வின் மாண்புகளை எடுத்துக் கூறியும், வாழ்ந்து காட்டியும் அந்த மேன்மக்களை நெறிப்படுத்தினார்கள்.

இஸ்லாம் மதீனாவைத் தாண்டி பல்வேறு பகுதிகளின் மக்களின் மனங்களை வென்று அந்த மக்களை இஸ்லாமிய வட்டத்திற்குள் இணைத்த போது முன்பைவிட இஸ்லாமிய வாழ்வின் மாண்புகளை அந்த மக்களுக்கு வலியுறுத்த வேண்டிய அவசியம் மாநபி ஸல் அவர்களுக்கு ஏற்பட்டது.

ஏனெனில், வெவ்வேறு மதம், வெவ்வேறு பண்பாடு, வெவ்வேறு சடங்கு, வெவ்வேறு சம்பிரதாயம், வெவ்வேறு கலாச்சாரம் என்று வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களை இஸ்லாமிய வாழ்வியலோடு இரண்டற கலந்து இரத்த நாளங்கள் முழுவதிலும் இஸ்லாமிய ஒளியை முழு வீச்சில் பாய்ச்சிட மாநபி (ஸல்) அவர்கள்  முனைப்புடன் செயல்பட்டார்கள்.

அதில் ஒன்று தான் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் "குத்பா - பிரச்சங்கம்" செய்வது.

எந்த அளவுக்கு எனில் மண்ணறையில் ஒருவரை அடக்கம் செய்ய காத்திருக்கும் அந்த குறைந்த நேரத்தில் கூட இந்த உம்மத்தை நல் வழிப்படுத்தும் செய்திகளை மாநபி (ஸல்) அவர்கள் கூறிட மறந்து விட வில்லை.

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, இறையச்சத்தை கொண்டு வஸிய்யத் செய்து விட்டு, அந்த பிரசங்கத்தின் முகவுரையிலேயே இஸ்லாத்தின் அடித்தளத்தையும், இஸ்லாமிய வாழ்வின் மகத்துவத்தையும், ஒரு முஸ்லிம் உடைய கடமையுணர்வு எவ்வளவு தூரம் விழிப்புணர்வுடன் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதையும் மறக்காமல் ஒவ்வொரு பிரசங்கத்திலும் குறிப்பிடுவார்கள்.

அந்த முகவுரை இது தான்:- 

فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

"மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! மனிதர்கள் கூறக்கூடிய வார்த்தைகளில்  மிகச் சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆன் ஆகும்.

மேலும் (கலாச்சாரங்களில்) வாழ்க்கை முறைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய கலாச்சாரம் ஆகும். 

காரியங்களில் மிக மோசமானதும் மிக தீமையானதும், மனிதர்கள் எதை  தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப புதிது புதிதாக உருவாக்கிக் கொள்கிறார்களோ ஒவ்வொரு புதிய காரியங்கள் ஆகும்.

புதிதாக உருவாக்கப்படக்கூடிய புதிய காரியங்கள் அனைத்தும் பித்அத் - நூதனமான காரியங்கள் ஆகும். நூதனமான காரியங்கள் அனைத்தும் வழிகேடுகள் ஆகும். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்:1435

இன்று எந்த அளவுக்கு இந்த சமூகம் பிற மத மக்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றுகின்றார்கள் என்றால்?...

ஆடைகள் அணிவதில் மேற்கத்திய (கிறித்தவ) நாடுகளின் கலாச்சாரம், தலைமுடி அலங்காரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் (கிறித்தவ) கலாச்சாரம், திருமண வைபவங்களில் ஆடல் பாடல் (இந்திய இந்து மக்களின்) கலாச்சாரம் என்று நிறையவே மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இந்த உம்மத் நேர்வழியில் இருந்தும் பிறழ்ந்து கொண்டு இருக்கிறது.

ஒரு புறம் இறைச்சி விஷயத்தில் ஃபாசிஸ அரசுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டு இன்னொரு புறம் KFC, Mc Donald என்றும், சாலையோர, நகரின் பிரதான ஹோட்டல் என்றும் (இறைச்சி ஹலாலா? ஹராமா? பாராமல்) உணவு கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

இரவு முழுவதும் டிவி, சினிமா, கேம், கடற்கரை, பைக் என கண் விழித்து விட்டு அதிகாலையில் உறங்கி சுபுஹ் தொழுகையை தவற விட்டு தாமதமாக எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே  பகல் நேரத்தில் உலவிக் கொள்ளும் கலாச்சாரம்.

சுவனத்தின் உறவுகளாக இஸ்லாம் மேம்படுத்தி கூறியிருக்கும் திருமண உறவை குலா, தலாக் என படக் படக்கென்று அறுத்து எறிந்து மொட்டையாக ஊர் சுற்றும் கலாச்சாரம்.

இத்தா எனும் ஷரீஆவின் கேடயத்தை மிக இலகுவான காரியங்களை எல்லாம் பெரிய காரணமாக காட்டி உடைத்தெறியும் கலாச்சாரம்.

தாய் தந்தை உறவை, சகோதர சகோதரி உறவை வெட்டி, அக்கம் பக்கத்து வீட்டை பகைத்து, உறவுகளை தூரத்தில் நகர்த்தி, மஹல்லா வாழ்வை தூக்கி எறிந்து விட்டு பள்ளிவாசல், மதரஸா என்று எதுவுமே இல்லாத பகுதிகளில் குடியேறி வாழும் தனிமை கலாச்சாரம்.

இயக்கம், கட்சி, அமைப்பு என்று ஆளுக்கொரு பக்கம், ஆண்டுக்கொரு கொள்கை என்று பிரிவினை கலாச்சாரம். 

இப்படி, இன்று நம் சமூகம் ஒரு நூறை நெருங்கிய கலாச்சார, நாகரீக நாற்றங்களை சந்தனமாக அள்ளி பூசிக் கொண்டு, ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தமாக இருப்பதாக நம்பிக் கொண்டு இருக்கிறது.

இந்த எச்சரிக்கையை கவனிக்க!!

لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ»، قُلْنَا يَا رَسُولَ اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قَالَ: «فَمَنْ»

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ( நூல்: புகாரி-3456 )

عن أبي وَاقِدٍ الليْثِي: خَرجنَا مع رسول الله صلى الله عليه وسلم إلى حُنينٍ، ونحنُ حُدثاءُ عهدٍ بكُفرٍ، وللمشركينَ سِدْرةٌ يَعكُِفُونَ عندها، وَيَنوُطونَ بها أَسلحًتهُم يُقال لها: ذَاتُ أنواطٍ فقلنا: يا رسول الله، اجعل لنَا ذاتَ أنواطٍ كما لهُم ذاتُ أنواطٍ: فقال رسول الله صلى الله عليه وسلم: «الله أكبرُ إنها السُّنَنُ، قُلتم: والذي نفسي بيدهِ كما قالت بَنُو إسرائيلَ لموسى: (اجْعَل لَّنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ) [الأعراف الآية 138]، «لتَرْكَبُنَّ سَنَنَ من كان قبلكم» رواه الترمذي وصححه

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத்என்று அதற்குச் சொல்லப்படும்.

நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத்என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள்.

(அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூவாகித் அல்லைசி (ரலி), ( நூல்: திர்மிதீ )

இந்த உம்மத்தை நபி (ஸல்) அவர்கள் பிற மத கலாச்சாரங்களுக்கு ஒத்துப் போவதில் இருந்து வணக்க வழிபாடுகள், குடும்ப வாழ்க்கை, தனி நபர் செயல்பாடு என அத்தனை வடிவங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கின்றார்கள்.

இது தொடர்பான பல்வேறு செய்திகள் நபிமொழி கிரந்தங்களில் பரவி விரவிக் கிடக்கின்றன.

வணக்க வழிபாடுகளில்..

عَنْ بن عمر رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا اليَهُودَ وَالنَّصَارَى فَأُمِرَ بِلاَلٌ: أَنْ يَشْفَعَ  الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ

(இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒருநாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், “கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்'' என்று கூறினர். வேறு சிலர், “யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள்'' என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்!'' என்று கூறினார்கள். ( நூல்: புகாரி 604 )

நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்துவ கலாச்சார அடிப்படையில் எந்த ஒரு வணக்க வழிபாட்டையும், தான் கொண்டு வந்த மார்க்கத்தில் வணக்கமாகத் தொடர்வதைக் காண சகிக்காதவர்களாக இருந்தார்கள்.

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَرْتَفِعَ ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ

சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி-583 , 3273

இந்த நேரங்களில் இறை மறுப்பாளர்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம்-1511 (1373) வது ஹதீஸில் இருக்கிறது.

தனி மனித செயல்பாடுகள் சம்பந்தமான காரியங்களிலும் முஸ்லிம்கள் பிற மத மக்களை விட்டும் தனித்துவமாகத் திகழும் வகையில் மாநபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ

இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளர விடுங்கள். மீசைகளை ஒட்ட நறுக்குங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி-5892 , முஸ்லிம்-434 

 

جُزُّوا الشَّوَارِبَ، وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ

மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். நெருப்பு வணங்கிகளுக்கு (மஜூசிகளுக்கு) மாறு செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்-435 )

إِنَّ اليَهُودَ، وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி-3462 , 5899

நபி {ஸல்} அவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் புறப்படுவோம்!!

பின் வரும் மகத்தான மூன்று நபித்தோழர்களின் மனோநிலையை நாம் கொண்டிருந்தோமேயானால் எந்த நாகரீகத்தின் பக்கமும் சாய்ந்து விட மாட்டோம்.  எந்த கலாச்சாரமும் நம் மனங்களுக்கு மகிழ்வைத் தந்திடாது.

1. என் மார்க்கத்தின் வாழ்வு மூலமே எனக்கு கண்ணியம்!

أخرج الحاكم في "المستدرك" (1/61 ـ 62)عن طارق بن شهاب قال:خرج عمر بن الخطاب إلى الشام، ومعنا أبو عبيدة بن الجراح، فأتوا على مخاضة وعمر على ناقة، فنزل عنها وخلع خفيه فوضعهما على عاتقه، وأخذ بزمام ناقته فخاض بها المخاضة، فقال أبو عبيدة: يا أمير المؤمنين، أأنت تفعل هذا؟! تخلع خفيك وتضعهما على عاتقيك، وتأخذ بزمام ناقتك وتخوض بها المخاضة؟! ما يسرني أن أهل البلد استشرفوك! فقال عمر: أوه لو يقل ذا غيرك يا أبا عبيدة جعلته نكالاً لأمة محمد!
إنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام، فمهما نطلب العز بغير ما أعزنا الله به أذلنا الله.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் சிரியாவுக்கு புறப்பட்டார்கள். அவர்களுடன் அபூ உபைதா (ரலி) அவர்களும் சென்றார்கள்.

செல்லும் வழியில் ஒரு நீர் தடாகத்தை கடந்து செல்ல வேண்டியதிருந்தது.அப்போது ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி, தங்களின் இரு காலுறையையும் கழட்டி தங்களின் தோழ்புஜத்தில் வைத்துக்  கொண்டு,ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினார்கள்.

இந்த காட்சியை பார்த்த அபூஉபைதா ரலி அவர்கள் "முஃமின்களின் தலைவரே! நீங்களா இவ்வாறு செய்கிறீர்கள்?நீங்கள் ஏன் ஒட்டகத்திலி ருந்து இறங்கினீர்?அது உங்களின் கண்ணியத்திற்கு சரியில்லையே என்றார். மேலும்,  நாட்டு மக்களெல்லாம் உங்களை காண ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில் உங்களை கண்டால் அவர்கள் உங்களை என்ன நினைப்பார்கள்?" என்றார்கள்.

அதைச் செவியேற்ற கலீஃசா உமர் (ரலி) அவர்கள்-கடும் கோபமுற்று உம்மை தவிர வேறுயாரும் இதை சொல்லியிருந்தால் கடுமையாக தண்டித்திருப்பேன்.

நாம் இழிவாக இருந்தோம், அல்லாஹ் இஸ்லாத்தைக் கொண்டு நம்மை கண்ணியப்படுத்திவிட்டான்.எனவே அல்லாஹ் கண்ணியம் செய்த இஸ்லாத்தை தவிர்த்து வேறு வழியில் கண்ணியத்தை தேடினால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை அதன் மூலம்  இழிவு படுத்தி விடுவான்"  என்று கூறினார்கள்.

2. என் நபியின் கலாச்சாரத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

قال ابن ماجه في السنن (٣٢٧٨): حدثنا سويد بن سعيد قال: حدثنا يزيد بن زريع، عن يونس، عن الحسن، عن معقل بن يسار قال: بينما هو اي ابو عبيدة الجراح يتغدى، إذ سقطت منه لقمة، فتناولها، فأماط، ما كان فيها من أذى، فأكلها، فتغامز به الدهاقين، فقيل: أصلح الله الأمير، إن هؤلاء الدهاقين يتغامزون من أخذك اللقمة وبين يديك هذا الطعام، قال: إني لم أكن لأدع ما سمعت من رسول الله صلى الله عليه وسلم لهذه الأعاجم، إنا كنا يؤمر أحدنا إذا سقطت لقمته أن يأخذها فيميط ما كان فيها من أذى ويأكلها ولا يدعها للشيطان، انتهى. قال البوصيري في مصباح الزجاجة في زوائد ابن ماجه (٤/١٢)

மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் கூறினார்கள்:- பாரசீகத்தை வெற்றி கொண்ட படையின் தளபதியான ஹுதைபா இப்னு யமான் (ரலி) அவர்கள் ஒருமுறை அந்நாட்டுத் தலைவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ரொட்டித் துண்டு கீழே விழுந்து விட்டது. அன்னார் உடனே அதை எடுத்து சுத்தம் செய்து சாப்பிட்டார்கள். இதை பார்த்த அச்சபையிலிருந்த ஒருவர்,
"
இந்நாட்டில் இவ்வாறு செய்வது கண்ணியக்குறைவாக கருதப்படும், மேலும் இப்பேரவையில் உள்ளவர்கள் தங்களை இழிவாக கருதுவார்கள்" என்று கூறினார்.

அதற்கு ஹுதைபா (ரலி) அவர்கள், "உண்ணும் போது தவறி விழுந்த உணவுப்பொருளை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும் என்பது எங்களின் நேசர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் வழிமுறையா (கலாச்சாரமா)  கும்.                 

நான் (அண்ணலாரின் சுன்னத்துக்களை (கலாச்சாரத்தை) கேவலமாகக் கருதும்) இத்தகைய மடையர்களுக்காக என்னுடைய நேசர் நபியவர்களின் சுன்னத்தை (கலாச்சாரத்தை) விட்டுவிடுவேனா?  (அண்ணலாரின் சுன்னத்தை  கலாச்சாரத்தை நான் ஒருபோதும் விடமாட்டேன்)" என்று கூறினார்கள்.   ( நூல்:- இப்னு மாஜா )

3. நான் உயிருடன் இருக்கும் வரை..

மாநபி {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் இரண்டாம் பொற்காலம் உருவானது. இரண்டாம் பொற்காலத்தின் முஸ்லிம் உம்மத்தின் முதல் கலீஃபாவாக பொறுப்பேற்றார்கள் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள்.

மிகச் சரியாக இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் எட்டு நாட்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக மிளிர்ந்தார்கள்.

இந்த காலகட்டத்தில் அடுக்கடுக்கான பல மாற்றங்களை சவால்களை சந்தித்தார்கள்.

அதை எதிர் கொள்ளும் முகமாக முதன் முதலாக அவர்களின் வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தை...

أَيَنقص الدين وأنا حي؟!  

"நான் உயிருடன் இருக்கும் போது இந்த தீனில் குறைவு ஏற்பட்டு விடுமா? நான் உயிருடன் இருக்கும் போது இந்த தீனில் குறைவு ஏற்பட்டு விட அனுமதித்து விடுவேனா?!" என்பது தான்.


فلما بويع لأبي بكر رضي الله تعالى عنه بالخلافة أمر بريدة أن يذهب باللواء إلى بيت أسامة وأن يمضي أسامة لما أمر به.
فلما مات صلى الله عليه وسلم ارتدت العرب، أي فإنه لما اشتهرت وفاة النبي صلى الله عليه وسلم، ظهر النفاق، وقويت نفوس أهل النصرانية واليهودية، وصارت المسلمون كالغنم المطيرة في الليلة الشاتية، وارتدت طوائف من العرب وقالوا نصلي ولا ندفع الزكاة وعند ذلك كلم أبو بكر رضي الله تعالى عنه في منع أسامة من السفر: أي قالوا له كيف يتوجه هذا الجيش إلى الروم وقد ارتدت العرب حول المدينة؟ فأبى أي وقال: والله الذي لا إله إلا هو لو جرت الكلاب بأرجل أزواج رسول الله صلى الله عليه وسلم ما أرد جيشا وجهه رسول الله صلى الله عليه وسلم، ولا حللت لواء عقده. وفي لفظ: والله لأن تخطفني الطير أحب إلي من أن أبدأ بشيء قبل أمر رسول الله صلى الله عليه وسلم...

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்து, முதல் உத்தரவாக, உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ரோமர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்யப்பட்ட படை கிளம்பட்டும், அந்தப் படையுடன் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவரும் மதீனாவில் தங்கக் கூடாது, அந்தப் படையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜுர்ஃப் என்ற இடத்தில் போய் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

மிகச்சரியாக, மாநபி {ஸல்} அவர்கள் இறந்து 19 நாட்கள் கழித்து, ரபீஉல் ஆகிர் மாதம் இறுதியில் படை கிளம்பியது. ஹிஜ்ரி 8 ம் ஆண்டு, மாநபி {ஸல்} அவர்கள் உயிருடன் இருந்த அந்த காலகட்டத்தில், முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வந்த ரோமப்படைகளை, முஅத்தா என்ற இடத்தில் வைத்து எதிர்ப்பதற்காக உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைத் தயார் செய்தார்கள். இதில் மதீனாவைச் சேர்ந்த 700 இளைஞர்கள் இருந்தார்கள். 

மாநபி {ஸல்} அவர்கள் உடல் நலம் குன்றியதன் காரணமாக, இந்தப் படை மதீனாவை விட்டும் இன்னும் கிளம்பாத நிலையில் இருந்தது.

மாநபி {ஸல்} இப்பூவுலகை விட்டு மறைந்ததன் பின்பு, மதீனாவின் சமூகச் சூழ்நிலை பாதிக்கப்பட்டது, மக்களின் மனங்களில் அமைதியிழந்து காணப்பட்டது, புதிதாக பொய்த் தூதர்கள் பலர் தோன்ற ஆரம்பித்தார்கள். இதனை மூலதனமாக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவர்களும், யூதர்களும் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில், அபூ மஸ்ஊத் (ரலி) போன்ற பெரிய  நபித்தோழர்கள்,  உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் மதீனாவின் தற்போதைய சூழ்நிலையில்  மதீனாவை விட்டும் ஒரு படை  வெளிக்கிளம்பிச் செல்ல வேண்டுமா? அதுவும் கடுங்குளிர் நிலவுகிற நேரத்தில், ஆட்டு இடையனைத் தொலைத்த ஆட்டு மந்தை போல, முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. சுற்றிலும்  அந்த  ஆட்டை பலி கொள்ளக் காத்திருக்கும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படையெடுப்பு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

ஆனால்; அபூபக்ர் (ரலி) அவர்களோ, இது என்னுடைய உத்தரவல்லவே?,  இது  மாநபி {ஸல்} அவர்கள் உயிர் வாழ்கிற காலத்தில் இட்ட உத்தரவல்லவா?! என்று கேட்டுவிட்டு,. என்னுடைய உயிர்  எவன் கை வசம் இருக்கின்றதோ, அவன்  மீது சத்தியமாக..! இந்த உத்தரவில்  நான் எந்த மாற்றத்தையும் செய்ய  மாட்டேன்.  படை புறப்படுவது  உறுதி! 

உங்களுடைய இந்த கருத்தில் நான் உடன்படுவதை விட, ஒரு ஓநாய் என்னைக்  கவர்ந்து சென்று விடுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன், நான் இந்த மதீனாவில்  தன்னந்தனியாக தனித்து விடப்படினும்  சரியே..! என்று  கூறினார்கள்.

ذكر بعضهم أن أسامة رضي الله تعالى عنه وقف بالناس عند الخندق وقال لسيدنا عمر: ارجع إلى خليفة رسول الله صلى الله عليه وسلم فاستأذنه أن يأذن لي أن أرجع بالناس، فإن معي وجوه الناس ولا آمن على خليفة رسول الله صلى الله عليه وسلم وثقله وأثقال المسلمين أن يتخطفهم المشركون، وقالت له الأنصار رضي الله تعالى عنهم: فإن أبي أبو بكر إلا أن يمضي: أي الجيش فأبلغه منا السلام، واطلب إليه أن يولي أمرنا رجلا أقدم سنا من أسامة، فقدم عمر على أبي بكر رضي الله تعالى عنهما وأخبره بما قال أسامة

، فقال أبو بكر: والله لو تخطفني الذئاب والكلاب لم أرد قضاء قضى به رسول الله صلى الله عليه وسلم. قال عمر رضي الله تعالى عنه: فإن الأنصار أمروني أن أبلغك أنهم يطلبون أن تولي أمرهم رجلا أقدم سنا من أسامة،

படையினர் அனைவரும்  ஜுர்ஃப் என்ற இடத்தில் கூடி  முகாமிட்டிருந்த அந்த  நேரத்தில், உமர் (ரலி) அவர்கள் மூலமாக ஒரு கடிதத்தை உஸாமா (ரலி) அவர்கள் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

கடிதத்தில்.. கலீஃபா அவர்களே..! நமது படை கிளம்பியவுடன், இங்கே இருக்கிற குழப்பக்காரர்கள் கலீஃபாவான உங்களையும், மாநபி {ஸல்} வாழ்ந்த  இந்த புண்ணிய பூமியையும், மக்களையும் சூழ்ந்து தாக்கி விடுவார்களோ என அஞ்சுகின்றேன்!  எனவே, நீங்கள் அனுமதித்தால் நான் மதீனாவில் இருந்து விடுகின்றேன்  என்று குறிப்பிடிருந்தார்கள்..

உஸாமா (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கலீஃபா அவர்கள், படை புறப்படுவது உறுதி அதில் எந்த மாற்றமும் இல்லை என்று  கூறினார்கள்.

இந்த நேரத்தில் உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாக, அவரை விட வயதில் மூத்த அனுபவமிக்க ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமிக்கலாமே என்று அங்கு கூடியிருந்த அன்ஸார்கள் இந்த ஆலோசனையை உமர் (ரலி)  அவர்களின் முன்பாக வைத்தார்கள்.  இதனை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நீங்களே! தெரிவித்து விடுங்கள் என்றும் கூறினார்கள்.

அதன் பின் உமர் (ரலி) அவர்கள் அன்ஸார்கள் கூறிய ஆலோசனையை கலீஃபா அவர்களிடம் முன் வைத்தபொழுது, இதனைக் கேட்ட கலீஃபா அபூபக்ர் (ரலி)  அவர்கள் சினமுற்றவர்களாக..,

உங்கள் மீது அழிவு உண்டாகட்டும்! மாநபி {ஸல்} அவர்கள் நியமித்த ஒருவரை என்னைக் கொண்டு நீக்க முனைகின்றீர்களா?  என்று கேட்டு விட்டு, கலீஃபா  அபூபக்ர் (ரலி) அவர்கள் படையினரை வழியனுப்பி வைப்பதற்காக ஜுர்ஃப் என்ற இடத்திற்கே வந்தார்கள். தளபதி இருக்கும் இடத்தை நோக்கி நடக்கலானார்கள்.

سيدنا أبو بكر رضي الله تعالى عنه بعد أن سار إلى جنبه ساعة ماشيا، وأسامة راكب، وعبد الرحمن بن عوف يقود براحلة الصديق، فقال أسامة: يا خليفة رسول الله إما أن تركب وإما أن أنزل، فقال: والله لست بنازل، ولست براكب ثم قال له الصديق، رضي الله تعالى عنه: أستودع الله دينك وأمانتك وخواتيم عملك

அப்போது, படைத் தளபதியான உஸாமா (ரலி) அவர்கள் குதிரையில் அமர்ந்து வருகின்றார்கள். கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்துவர, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீது அமராமல் அதனை நடத்திக் கூட்டி வருகின்றார்கள்.

இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்கள், உங்களது குதிரையை நீங்கள் ஓட்டி வாருங்கள் அல்லது என்னை நடந்து வர அனுமதியுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :  நான் குதிரையில் ஏறியும் வர மாட்டேன், உங்களை இறங்கி நடக்கவும் அனுமதிக்க  மாட்டேன்என்று கூறி விட்டு, அல்லாஹ்வின் பாதையில் போரடக் கிளம்பியவரின் பாதங்களில் படக் கூடிய தூசி பட்டதனால் என்னுடைய அந்தஸ்து என்ன குறைந்தா போய்விடும்? என்று கேட்டு விட்டு..

அல்லாஹ்வின் பாதையில் சேவை செய்யக்கூடிய ஒருவரின் அந்தஸ்தை அல்லாஹ் 700 மடங்காக உயர்த்துகின்றான், இன்னும் 700 பாவங்களை மன்னிக்கின்றான், 700 நன்மைகளை அவன் கணக்கில் எழுதி விடுகின்றான்என்று கூறினார்கள்.

பின்பு, படையினரின் பக்கம் திரும்பி அபுபக்கர் (ரலி) அவர்கள் வீரர்களே..! உங்களுக்கு நான் பத்து கட்டளைகளை இடுகின்றேன். அவற்றை மனதினுள் பதித்துக் கொள்ளுங்கள்..! மோசடியில் ஈடுபடாதீர்கள், உங்களில் தலைவருக்குக் கட்டுப்பட மறுக்காதீர்கள், உடலை அங்கவீனப்படுத்தாதீர்கள். வயதானவர்களையும், பெண்களையும் அல்லது குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள்.

ஈச்ச மரங்களை வெட்டவோ அல்லது எரிக்கவோ அல்லது கனிதரக் கூடிய மரங்களை வெட்டவோ செய்யாதீர்கள். உணவுக்காக அன்றி ஆடு, மாடு அல்லது ஒட்டகங்களை வெட்டிக் கொல்லாதீர்கள். மடங்களில் தங்கி தங்களது இறுதிக்காலத்தைக் கழிக்கக்கூடிய மக்களை ஒன்றும் செய்யாதீர்கள், அவர்களை அவர்களது வழியிலேயே விட்டு விடுங்கள். நீங்கள் செல்லும் பாதைகளில் விதவிதமான பாத்திரங்களில் உணவு கொண்டு வரக் கூடிய மக்களைக் காண்பீர்கள். அவைகளை நீங்கள் உண்ண ஆரம்பிக்கும் பொழுது, இறைவனது திருப்பெயரை மொழிந்து கொள்ளுங்கள்.

இன்னும் உச்சந்தலையில் சிரைத்து, அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் முடிகளை வளர விட்டு சடை போலத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பீர்கள். அவர்களை உங்களது வாளால் தாக்குங்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு முன்னேறுங்கள். எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக இன்னும் கொடிய நோயிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பானாக..! என்று கூறி  படையை வழியனுப்பி வைத்தார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

இன்று உலகின் கோடான கோடி பிற மத மக்கள் இந்த மார்க்கத்தின் தூய நடைமுறைகளை, நபி {ஸல்} அவர்களின் கலாச்சாரங்களைப் பின் பற்றும் போது,  தூய மார்க்கத்தையும், அழகிய முன்மாதிரியான கலாச்சாரங்களையும் வாழ்வியலாகக் கொண்ட மாநபி {ஸல்} அவர்களின் வழி நடக்க வேண்டிய இந்த உம்மத் நாகரீகத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் “நாற்றங்களை சந்தனமாக பூசித் திரிவது ஏனோ?”!

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. வாவ் வாரே வா! அருமை...

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete