மன்னிக்க முடியாத
மாபாதகச் செயல் தீவிரவாதம்!!!
காஷ்மீர்
முழுவதுமே அழகு நிறைந்த பகுதிகள் தான். ஏரிகள், பைன் மரங்கள், காடுகள்,
பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஆப்பிள் உள்ளிட்ட
கனிவர்க்கங்களின் தோட்டங்கள், மலை முகடுகளை தொட்டுச்
செல்லும் மேகங்கள்,
உடலைத் தழுவி, மனதை வருடிச் செல்லும்
குளிர்ந்த காற்று என இயற்கை காட்சிகளின் அணிவகுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு அழகிய
பகுதி.
காஷ்மீரின்
பெகல்காம் பள்ளத்தாக்கு அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை காட்சிகள் நிறைந்த
பள்ளத்தாக்கு.
பைசரன் சுற்றுலா
தளம் அழகே இது தானா?
என வியப்பை ஏற்படுத்தும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த
சுற்றுலா தளம்.
கடந்த 2023ஆம் ஆண்டில் 20
மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு
வருகை தந்ததாக இந்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கோவிட்
காலகட்டத்திற்கு முந்தைய நிலைமையைவிட 20 சதவீதம் அதிகம்.
அந்த அளவுக்கு
மனதை கவரும் *பைசரன் பள்ளத்தாக்கு நேற்றும் முந்தைய நாளும் சைரன் பொருத்தப்பட்ட
ஆம்புலன்ஸ் சப்தத்தால்* அல்லோல கல்லோலப்பட்டு கிடக்கிறது.
பஹல்காம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சர்ச்சைக்குரிய காஷ்மீர்
பிராந்தியத்தைப் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பைசரன் பகல்காமில் இருந்து ஐந்து கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர்
மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 22, 2025) பகல் 02:30
மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகள் உட்பட 26
பேர் பலியாகினர். 15 க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவர்.
இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள்,
சமூக அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் வணிக
சங்கங்கள் இணைந்து
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இந்த கொடூர
தாக்குதலை கண்டித்து,
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நேற்று (ஏப்ரல் 23, 2025) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 35 ஆண்டுகளில் முதல்
முறையாக இது போன்ற ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் முன்னணி பத்திரிகைகள் தங்கள் முன்பக்கங்களை முழுவதுமாக கருப்பு
நிறத்தில் அச்சிட்டு,
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு
செய்துள்ளன. கிரேட்டர் காஷ்மீர், ரைசிங் காஷ்மீர், காஷ்மீர் உஸ்மா,
ஆப்தாப், மற்றும் டைமீல் இர்ஷாத்
உள்ளிட்ட ஆங்கில மற்றும் உருது மொழி பத்திரிகைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.
இந்த பத்திரிகைகளின் முன்பக்கத்தில் வெள்ளை அல்லது சிவப்பு
நிறத்தில் தலைப்புகள் மட்டும் அச்சிடப்பட்டு, இந்த தாக்குதலால் ஏற்பட்ட
துயரத்தை வெளிப்படுத்தியுள்ளன.
மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷா இந்த தாக்குதல் குறித்து உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தை
நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் விமான நிலையத்தில்
அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த
தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர்
புதின், ஐக்கிய அரபு அமீரகம்,
ஈரான், சவூதி அரேபியா, ஆகிய நாடுகளின் அதிபர்களும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு
சுற்றுலா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த தாக்குதலுக்கு இரங்கல்
தெரிவித்துள்ளார். ( நன்றி: ஒன் இந்தியா, பிபிசி தமிழ், 23/04/2025 )
பயங்கரவாதிகள்
இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம், பைசரன் புல்வெளி ஒரு மலைப்பகுதியாகவும், வாகனங்கள் செல்ல முடியாத
இடமாகவும் இருப்பது. இதனால், உடனடியாக உதவி வருவது
கடினம் என்பதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
தாக்குதல்
நடத்தியது யார்?
பாகிஸ்தான்
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான
ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு
பொறுப்பு ஏற்றுள்ளது.
பஹல்காம்
தாக்குதலில் 4
முதல் 6 பயங்கரவாதிகள்
ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஹபீஸ் சயீத்
தொடர்புடைய இயக்கம்தான் தாக்குதலை செய்துள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் பல்வேறு ஊடுருவல் முயற்சிகள் மற்றும் தாக்குதல்கள்: சயீத்தின்
சித்தாந்த வழிகாட்டுதலின் கீழ் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்கள் சிறிதும்
பெரிதுமாக எல்லையில் நடந்து வருகின்றன.
இந்த ஒற்றை
தீவிரவாதி இந்தியாவில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துவிட்டான்.
இவன் சார்பாக இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இங்கே பார்க்கலாம்.
1)
. 2008 மும்பை தாக்குதல்கள் (26/11)
தேதி: நவம்பர் 26-29, 2008
இடம்: மும்பை, மகாராஷ்டிரா
உயிரிழப்புகள்: 170க்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.
மும்பையில் உள்ள
தாஜ் ஹோட்டல்,
ஓபராய் ட்ரைடென்ட், சிஎஸ்டி ரயில் நிலையம், லியோபோல்ட் கஃபே மற்றும் சாபாத் ஹவுஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களை 10 லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்கினர். ஹபீஸ் சயீத் இந்த நடவடிக்கையின் பின்னணியில்
உள்ள கருத்தியல் மூளையாகக் கருதப்படுகிறார், இருப்பினும் அவர்
நேரடியான ஈடுபாட்டை மறுத்தார். சயீத் உட்பட லஷ்கர் மற்றும் அதன் தலைமையை இணைக்கும்
வலுவான ஆதாரங்களை இந்தியாவும் சர்வதேச நிறுவனங்களும் விசாரணையில் பின்னர்
கண்டறிந்தன.
2) 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்புகள்
தேதி: ஜூலை 11, 2006
இடம்: மும்பை புறநகர் ரயில்வே நெட்வொர்க்
உயிரிழப்புகள்: 200க்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 700க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.
பீக் ஹவர்ஸில் ஏழு
ரயில்களில் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்ட. இந்திய அரசாங்கம் லஷ்கர்
அமைப்பின் ஈடுபாட்டை சந்தேகித்தாலும், இந்தியன் முஜாஹிதீன்
உட்பட பல குழுக்களும் இதில் குற்றம் சாட்டப்பட்டன. லஷ்கர்தான் பின்னர் இதற்கு பின்
இருக்கலாம் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. அப்போது சயீத் மீண்டும்
விசாரணை வளையத்திற்குள் வந்தான்.
3) . 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்
தேதி: டிசம்பர் 13, 2001
இடம்: இந்திய நாடாளுமன்றம், புது தில்லி
பலி: 9 பேர் பலி, பலர் காயம்
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய இரண்டும் குற்றம் சாட்டப்பட்டாலும், ஹபீஸ் சயீத்தின் சித்தாந்தத் தலைமையின் கீழ், லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிட்டத்தட்ட போரைத் தூண்டியது. ( நன்றி:
ஒன் இந்தியா,
23/04/2025 )
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
காஷ்மீரில் பல
தசாப்தங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் சுற்றுலாப்
பயணிகள் மீதான தாக்குதல்கள் அரிதானவை.
"சமீபத்திய
ஆண்டுகளில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப்
பெரியது" என்று ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறினார்.
சமீபத்திய
ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.
"கடந்த 2004, 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 7,217 பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை,
இந்த எண்ணிக்கை 2,242 ஆகக்
குறைந்துள்ளது" என்று கடந்த மார்ச் மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா
குறிப்பிட்டிருந்தார். ( நன்றி: பிபிசி தமிழ், 24/04/2025 )
இந்திய அரசு, காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக AFSPA (Armed Forces Special Powers Act) சட்டத்தை பயன்படுத்துகிறது.
இந்த சட்டம்
நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் தான் இந்த ஈவிரக்கமற்ற தாக்குதல்
நடந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370) ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய இராணுவம்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. 2020 ஆம் ஆண்டு,
டோடா மாவட்டம் மற்றும் திரால் பகுதிகள் பயங்கரவாதிகள்
இல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த சமீபத்திய தாக்குதல், பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதை
காட்டுகிறது. ( நன்றி: ஒன் இந்தியா, 23/04/2025 )
மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லிம்கள்....
இந்த தாக்குதலில்
கர்நாடகத்தின் ஷிவமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் ராய் என்பவர் அவரது மனைவி பல்லவி
மற்றும் மகனின் கண் முன்னே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம்
குறித்து பேட்டியளித்துள்ள பல்லவி, தங்களையும் கொலை செய்யக்
கோரி பயங்கரவாதிகளிடம் நானும் எனது மகனும் கோரினோம். ஆனால், அவர்கள் உங்களைக் கொல்ல மாட்டேன், மோடியிடம் போய் இதைச்
சொல் என்று அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள்
குறித்து பேசிய பல்லவி,
சம்பவத்தின்போது அந்த இடத்தில் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும் தாக்குதல் நடந்தபோது, இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றும்
தெரிவித்துள்ளார்.
மேலும், “தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினரும் ராணுவமும் வருவதற்கு
முன்னதாகவே அப்பகுதி மக்கள் வந்து உதவினர். வாகனங்கள் மூலம் மீட்புப் பணிகள்
மேற்கொள்ள முடியாத காரணத்தால், அவர்களின் குதிரைகளை
சம்பவ இடத்துக்கு கொண்டுவந்தனர்.
மூன்று இளைஞர்கள்
பிஸ்மில்லா,
பிஸ்மில்லா என்று கூறியபடியே எங்களைக் காப்பாற்றினார்கள்.
அவர்கள் அந்த சூழலில் எனது சகோதரர்களைப் போன்றே தெரிந்தார்கள்.
பின்னர் சம்பவ
இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் வந்த பிறகு, மீட்புப் பணிகளுக்காக
ஹெலிகாப்டர் உதவியை கோரினர்” என்று பல்லவி
தெரிவித்துள்ளார். ( நன்றி: தினமணி, 23/04/2025 )
உயிரைக் காப்பாற்ற போராடி உயிர் நீத்த தியாகி..
சுற்றுலா பயணிகளை
குதிரையில் அழைத்துச் சென்ற சையது ஆதில் ஹுஸைன் என்ற இளைஞர் நான்கு சுற்றுலாப்
பயணிகளை தீவிரவாதிகள் சிறைவைத்திருந்த காட்சியைப் பார்த்து விட்டு, அவர்களை ஒன்றும் செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு தீவிர வாதி
கையில் வைத்திருந்த ஏகே 47
ரக துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், தீவிரவாதியோ சட்டென அந்த துப்பாக்கியால் சையது ஆதில் ஹுசைனை சுட்டுக் கொன்று
விட்டான். சிறை வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை உயிருடன் மீட்கும் போராட்டத்தில் வீர
மரணம் அடைந்தார் அந்த குதிரை ஓட்டி. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவரை மன்னித்து அருள்
புரிவானாக!
முன்னுக்குப் பின் முரணாக வரும் தகவல்கள்....
ஆரம்பத்தில்
இந்துவா எனக் கேட்டு சுட்டதாகவும், பேண்ட்டை கழற்றிப்
பார்த்து சுட்டதாகவும் மீடியா மூலம் பரப்பப்பட்டது.
ஆனால், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியோ தீவிரவாதிகள்
எங்கிருந்து சுட்டார்கள் என்றே தெரியவில்லை என்று வருகிறது.
இன்னொரு, வீடியோவோ பாதிக்கப்பட்ட கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் "இந்துவா என்று
பார்த்து சுட்டதாக சொல்" என்று காஷ்மீரின் ஒரு பாஜக நிர்வாகி மிரட்டி சொல்ல
வைப்பதை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான்
பாதுகாப்பு துறையோ எங்களுக்கு சம்பநதமில்லை என்கிறது. குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்
இ தொய்பா அமைப்பின் பொறுப்பு தாரியோ எனக்கு இதில் தொடர்பே இல்லை என்று கதறி கதறி
கண்ணீர் வடிக்கின்றார்.
எது எப்படியோ
நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் விசாரணை அமைப்புக்கள் பகல்காம் தீவிரவாத
தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஈவிரக்கமற்ற
முறையில் மாபாதகச் செயலில் ஈடுபட்ட அந்த மாபாவிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்.
இதன் பிண்ணனியில்
இருப்பவர்களை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இது தான் உண்மையான நீதி
விசாரணை அமைப்பின் பொறுப்பாகும்.
இந்த நிலை மாற வேண்டும்....
இஸ்லாம் ‘தீவிரவாதத்தை”
ஆதாரிக்கிறதா..? அல்லது நிராகரிக்கிறதா? என்பதைப் பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை சகோதர சமயத்தவருக்கும், நம்மிலே பலருக்கும் புரிய வைப்பது நமது கடமையாகும்.
Terrorism என்றால் ”the
systematic use of terror especially as a means of coercion” என்கிறது வெப்ஸ்டர் அகராதி. அதாவது ”முறைப்படி திட்டமிட்டு
பேரச்சம்,
பீதி போன்றவற்றை, குறிப்பாய் பலவந்தமாய்
ஏற்படுத்துவது”.
இன்று தீவிரவாதம்
பயங்கரவாதம் என்றாலே அது இஸ்லாத்தோடும், முஸ்லிம் சமூகத்தோடுமே
இணைத்துப் பேசப்படுகிறது.
தனியொரு முஸ்லிமோ, ஒரு முஸ்லிம் குழுவோ இப்படியான செயலில் ஈடுபடுவதை வைத்து எப்படி அழகிய ஒரு
மார்க்கத்தோடும்,
உலகளவில் பெரிய அளவிலான பற்றாளர்களைக் கொண்டுள்ள ஒரு
சமூகத்தோடும் முடிச்சு போட்டு பேச முடிகிறது?.
ஆங்கிலத்தில் “Double Standard” என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு என்று பொருள் கொள்ளலாம். Terrorism, terrorist,
– தீவிரவாதம், தீவிரவாதி – எனும் சொற்களுக்கும் இந்த ”Double Standard” -க்கும் அதென்னவோ
அப்படியொரு ஒற்றுமை உண்டு.
இந்தத் ”தீ”ச்சொற்களுக்கான மொழியாக்கமே உலகம் முழுக்க தனியொரு விதிக்கு உட்பட்டு, அது தான் நியதி என்று நிலைத்தும் விட்டது.
ஆம்! தீவிரவாதம்
என்றாலே இஸ்லாம். தீவிரவாதி என்றால் முஸ்லிம்.
ஒன்று மட்டும்
புரியவில்லை. இலங்கையில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளை
போராளிகள் என்கிறார்கள். தம் சொந்த மக்களுக்காக ஃபலஸ்தீனிலே போராடி வரும் ஹமாஸை
தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்கள்.
ஒவ்வொரு
சமுதாயத்திலும் சில ‘தறுதலைகள்’
இருப்பது போல் முஸ்லிம் சமுதாயத்திலும் சில தறுதலைகள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
அறிவிழந்த அந்த
தறுதலைகள் தறிகெட்டு செய்யும் தவறை ஒட்டு மொத்த சமுதாயத் தவறாக வர்ணிப்பது, சிலர் செய்யும் வன்முறைச் செயல்களை “இஸ்லாமிய வன்முறை, தீவிரவாதம்”
என்று மத முத்திரை குத்துவதும், வன்முறைச் செயல்களை வெறுக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களை
துன்பத்திற்குள்ளாக்குவதும் எந்த விதத்தில் நியாயம்?.
தீவிர போக்குக்கு இஸ்லாத்தில் இடமில்லை....
இஸ்லாம் கொள்கை & நம்பிக்கை,
வணக்கங்கள், நடைமுறை, சட்ட திட்டங்கள் போன்றவற்றில் நடுநிலையான, நிதானமான தன்மையையே
கையாளும்படி தூண்டுகிறது.
இதுவே, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட நேரான வழி (ஸிராத் அல்-முஸ்தகீம்) என
அழைக்கப்படுகின்றது.
இறைவனின்
கோபத்துக்கு உள்ளானவர்களும், வழி தவறிச் சென்றவர்களும்
பின்பற்றக்கூடிய எல்லா வழிகளிலிருந்தும் தனியாகப் பிரிந்து காணும் வழியாகும் இது,
மிதவாதம், நடுநிலை,
நிதானம் என்பன இஸ்லாத்தின் பொதுவான பண்புகளாக மட்டுமின்றி, அடிப்படை அம்சங்களாகவே அமைந்துள்ளன.
كَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى
النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا
(நம்பிக்கையாளர்களே!)
அவ்வாறே,
(ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை
ஆக்கினோம். ஆகவே,
நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சிகளாக இருங்கள்.
(நம்முடைய) தூதர்,
உங்களுக்கு சாட்சியாக இருப்பார்." ( அல் குர்ஆன்: 2: 143 )
மித மிஞ்சிய தன்மையும்.... அதன் ஆபத்தும்....
முஸ்லிம்கள்
நடுநிலையைக் கையாள வேண்டியதை வலியுறுத்துவதோடு, மிதமிஞ்சிய தன்மை
(குலுவ்),
ஆர்வமிகுதியுடைமை (தனதூஉ), வைராக்கியமிக்குடைமை (தஷ்தீத்), போன்ற தீவிரப் போக்கான
அம்சங்கள் அனைத்தையும் நிராகரித்து எதிர்த்து நிற்பதையும் நாம் காணலாம்.
இஸ்லாமிய
மூலாதாரங்களான அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் நாம் ஆய்வுக் கண்ணோட்டம் கொண்டு உற்று
நோக்கினால் "மிதமிஞ்சிய தன்மையை" இஸ்லாம் கண்டனம் செய்வதையும், அது குறித்து நம்மை எச்சரிப்பதையும் கவனிக்கலாம். அஹ்மது, அந்-நஸயீ,
இப்னு மாஜா ஆகியோர் தமது சுனனில் அறிவித்துள்ள பின் வரும்
ஹதீஸ் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்:
قال
النبي ﷺ: إياكم والغلو في الدين؛ فإنما أهلك من كان قبلكم الغلو في الدين
"மார்க்கத்தில்
மிதமிஞ்சிய தன்மை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு முன் சென்ற மக்கள், அவ்வாறான மிதமிஞ்சிய தன்மை காரணமாக அழிவுக்குள்ளானார்கள்."
يَاأَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ
வேதத்தையுடையவர்களே!
உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள்." (அல் குர்ஆன் 4: 171)
قال ﷺ:
هلك المتنطعون! هلك المتنطعون! هلك المتنطعون قالها ثلاثًا
"மிதமிஞ்சிய
நுணுக்கத்துடன் செயல்பட்டோர் அனைவரும் அழிவுக்கு ஆளானார்கள்." இறைத்தூதர் (ஸல்) இதனை மூன்று முறை கூறினார்கள்.
இங்கு
குறிக்கப்பட்டோர் தமது சொல்லிலும் செயலிலும் வரம்பு மீறி, மிதமிஞ்சிய தன்மையினராக இருப்போரே என இமாம் நவவி கூறுகிறார்.
நாம் கண்ட இரண்டு
ஹதீஸ்களும் மிதமிஞ்சிய தன்மை, அதிக ஆர்வம் என்பனவற்றின்
விளைவு, இம்மை,
மறுமை இரண்டிலுமான நட்டமே என்பதை அறிவுறுத்துகின்றன.
"இறைத்தூதர்
அவர்கள் கூறினார்கள்: பெரும் சுமைகளை உங்கள் மீது ஏற்றிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களுக்கு முன் சென்ற மக்கள் தம்மீது அதிக
சுமைகளை ஏற்றிக் கொண்டமையால் அழிந்து போனார்கள். அவர்களது எச்சங்கள்
மதாலயங்களிலும் ஆசிரமங்களிலும் காணக்கிடக்கின்றன.
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் மார்க்கத்தில் தீவிரத்தன்மையை கடைப்பிடிப்பதிலிருந்து தம்மைத் தவிர்தே
வந்துள்ளனர். அத்தோடு தமது தோழர்களுள், இஸ்லாத்தின் நடுநிலையை
மிஞ்சிய வகையில் அளவுக்கு மீறிய வழிபாடுகளில் ஈடுபட்டோரையும் துறவு மனப்பான்மையில்
விருப்புற்றிருந்தோரையும் கண்டித்துள்ளார்கள்.
இறைத்தூதர்
அவர்கள் தமது நெருங்கிய தோழர்களில் ஒருவரான முஆத் (ரழி) மீது கோபம் கொண்டார்கள்.
ஒரு நாள் தொழுகையை முன் நின்று நடத்திய முஆத், அளவுக்கு அதிகமாக
தொழுகையை நீட்டிச் சென்றார். அவரின் பின்னால் நின்று தொழுத ஒருவர் பொறுமையிழந்து
இறைத்தூதர் அவர்களிடம் முறையிட்டார். இறைத்தூதர் அவர்கள் முஆதை அழைத்து
فَقَالَ:
يَا مُعَاذُ، أَفَتَّانٌ أَنْتَ؟ ا
"முஆதே! மக்களை
நீர் பரீட்சைக்கு உள்ளாக்குகின்றீரா?" என மூன்று முறை வினவினார்கள் (புகாரி).
மற்றொரு
சந்தர்ப்பத்தில் அவர்கள் அசாதாரண கோபத்துடன் ஓர் இமாமை நோக்கி
وروى
مسلم عن أبي مسعود الأنصاري قال: قال رجل: يا رسول الله! لا أكاد أدرك الصلاة مما
يطول بنا فلان، فما رأيت النبي -صلى الله عليه وسلم- في موعظة أشد غضبا من يومئذ،
فقال: (أيها الناس! إنكم منفرون، فمن صلى بالناس فليخفف، فإن فيهم المريض والضعيف
وذا الحاجة}.
"உங்களில் சிலர், மக்கள் நல்ல கருமங்களை வெறுக்கும்படி செய்கிறீர்கள். எனவே உங்களில் யாரேனும்
தொழுகையை முன் நின்று நடத்தும்போது அதனைச் சுருக்கி விரைவு படுத்துங்கள். ஏனெனில், அவர்களுள் முதியோரும்,
பலமில்லாதோரும், அவசரத் தேவைகள்
கொண்டோரும் இருப்பர்.
(புகாரி). என அறிவுறுத்தினார்கள்.
மேலும், யெமன் தேசத்துக்கு முஆத்(ரழி), அபுமூஸா (ரழி) ஆகியோரை
அனுப்பும் போது இறைத்தூதர் அவர்கள் கூறிய அறிவுரையும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
في صحيح
مسلم عن أبي موسى الأشعري أن النبي -صلى الله عليه وسلم- بعثه ومعاذا إلى اليمن،
فقال: «يسِّرا ولا تعسِّرا، وبشِّرا ولا تنفِّرا، وتطاوعا ولا تختلفا»
"(மார்க்க
விவகாரங்களை) மக்களுக்கு இலகுவாக்கி வையுங்கள்; அவர்களைச் சிரமங்களுக்கு
உள்ளாக்காதீர்கள்,
ஒருவரோடு ஒருவர் பணிவுடன் இருந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குள் முரண்படாதீர்கள்.
ஒரு முஸ்லிம் வாழ வேண்டிய வாழ்வு எது?
நல் வாழ்வையே
விரும்புவதும்,
வேண்டுவதும் ஒரு முஸ்லிமின் பண்பாய் அமைய வேண்டும் என்று
இஸ்லாம் வலியுறுத்துகிறது.
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே!
எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக!" (அல் குர்ஆன் 2:201)
பின்வரும்
ஹதீஸிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:
وعن أبي
هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقول: اللَّهُمَّ
أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ
الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ
الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ
كُلِّ شَرٍّ.. مسلم.
"யா அல்லாஹ்! எனது
நடவடிக்கைகளின் அரணாக விளங்கும் எனது மார்க்கத்தை நீ எனக்குச் சரிவர நிறுவித்
தருவாயாக! எனது வாழ்க்கை தரிபட்டுள்ள இவ்வுலகத்தின் விவகாரங்களை எனக்கு
நேர்படுத்தித் தருவாயாக! எனது மறுமை வாழ்வு தரிபட்டிருக்கும் மறுமையையும் எனக்கு
நீ நேர்படுத்தித் தருவாயாக! எல்லாவிதமான தீங்குகளை விட்டும் என்னைப் பாதுகாத்து, நன்மைகளைப் பெருக்குவதற்குரிய ஒரு களமாக என் வாழ்வையும், அமைதியை விளைவிப்பதாக என் மரணத்தையும் ஆக்கி அருள்வாயாக! ( நூல்: முஸ்லிம் )
ஒரு முஸ்லிம் சக மனிதனோடு வாழ வேண்டிய வாழ்வு எது?
مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ
قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ
النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
"நிச்சயமாக எவன்
ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த்
தடுப்பதற்காகவோ) அன்றி,
மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும்
கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன்
மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்”.. (அல்குர்ஆன் 5:32)
இந்த வசனத்தை ஒரு
முறைக்குப் பலமுறைப் படித்துப் பாருங்கள். எந்த விளக்கவுரையும் தேவையில்லாத
அளவிற்குத் தெளிவாக –
வெளிப்படையாகவே ஒரு முஸ்லிமின் சக மனிதனுடனான வாழ்வு எப்படி
இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்து இயம்புகிறது. தீவிரப் போக்கு– வன்முறை போன்ற செயல்களுக்கு சாவு மணி அடிக்கிறது.
தனியொரு மனிதனை
எவன் கொன்றானோ அவன் முழு மனித இனத்தையே கொலை செய்து விட்டான் – அதாவது மனிதத்தையே அழித்து விட்டான். அவன் மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவன்
என்று ஒதுக்கி விடுகிறது.
எவனொருவன் தனி
மனிதனை வாழ வைக்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போலாவான்
அதாவது மனித இனத்தை –
மனிதத்தைக் காப்பாற்றி விட்டான். இதைத்தான் இஸ்லாம்
வரவேற்கிறது. இந்த வசனம் நேரடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப்
பேசுகிறதே அன்றி விசுவாசம் கொண்டவர்கள் - முஸ்லிம், விசுவாசம் கொள்ளாதவர்கள் என பிரித்துச் சொல்லவில்லை.
”ஒரு சாராரின் மீது
நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட
வேண்டாம்”.
என்று தீவிரப் போக்கையும், மித மிஞ்சிய நடத்தையையும் தடுக்கிறது இஸ்லாம்.
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى
الْإِثْمِ وَالْعُدْوَانِ
”நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.
பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்”. ( அல்குர்ஆன்: 5:
2 )
يَاأَيُّهَا الَّذِينَ
آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ
شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا
இறைநம்பிக்கையாளர்களே!… ”எந்தவொரு
கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்”. ( அல்குர்ஆன்: 5: 8 )
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ
شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ
وَالْأَقْرَبِينَ
இறைநம்பிக்கையாளர்களே!
”நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக
இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்”. ( அல்குர்ஆன்: 4: 135 )
மனிதனின் நீதி
பெறும் உரிமையை எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள். இந்த உரிமை மிக
முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் மதிப்பும் மிக்கதாகும். இம்மாபெரும் உரிமையை
மனிதனுக்கு ‘மனிதன்’
என்ற அந்தஸ்திலேயே இஸ்லாம் வழங்குகிறதே அன்றி முஸ்லிம்
முஸ்லிம் அல்லாதவர் என்ற கண்ணோட்டத்தில் அல்ல.
இந்தச் சமூகம் எப்படி வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது?....
இஸ்லாம் அமைதியையும் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற, பின்பற்றுமாறு கூறுகின்ற மார்க்கமாகும்.
எனவே இஸ்லாமானது தீவிரவாதத்தை ஆதரிப்பதுமில்லை அவற்றை ஊக்கப்படுத்துவதுமில்லை.
ஏனெனில், அல்லாஹ்வும்
சாந்தி சமாதானத்தின் பக்கமே மனித சமூகத்தை அழைக்கின்றான்.
وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ
”அல்லாஹ் அமைதி இல்லத்தின்
பக்கம் அழைக்கிறான்” ( அல் குர்ஆன்:10: 25 )
இந்த அழைப்பை ஏற்று இஸ்லாம் எனும் அமைதி
இல்லத்தில் நுழைந்தவர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் எப்படி வார்த்தெடுத்தார்கள் என்றால் இஸ்லாமிய வரலாற்றை
வாசித்து உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்களின்
மறைவுக்குப் பின்னரும் சரி இஸ்லாம் கூறுகிற சாந்தியையும், சமாதானத்தையும்
நிலைநாட்டி அனைத்து தரப்பு மக்களுக்கும் அச்சமற்று வாழும் ஓர் உன்னத நிலையைக்
கொடுத்தார்கள்.
ومَن ينظر بعمق في تاريخ الإسلام ودعوته وانتشاره:
يجد أن البلاد التي فتحها المسلمون، لم ينتشر فيها الإسلام إلا بعد مدة من الزمن
وانظر إلى بلد كمصر، وقد فُتحت في عهد أمير المؤمنين
الفاروق عمر بن الخطاب، ولكن ظلَّ الناس على دينهم النصراني عشرات السنين، لا يدخل
فيه إلا الواحد بعد الواحد
கலாநிதி யூஸுஃப் அல் கர்ளாவி அவர்கள்
குறிப்பிடும் போது “இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது ”முஸ்லிம்கள்
வெற்றி கொண்ட நாடுகளில் கூட மிக நீண்ட காலத்திற்குப் பின்னரே இஸ்லாம் அங்கு
பரவியது என்றும், மிஸ்ர் போன்ற நாடுகள் உமர்
ரலி அவர்களின் ஆட்சியில் வெற்றிக்கொள்ளப்பட்டாலும் அங்குள்ள மக்கள் பல வருடங்கள்
தங்களின் கிருஸ்துவத்தில் தான் தொடர்ந்து இருந்தனர்.இஸ்லாத்தின் நேர்மையான
சமத்துவமான சட்டங்களுமே அங்குள்ள மக்கள் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தை தழுவ
காரணமாக அமைந்தது”
என்று.
எப்படிப்பட்ட முஸ்லிம் சமூகம் இது! தீவிரவாதச்
செயல்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்களா?
قال
رسول الله : الإيمان بضع وسبعون شعبة ، أفضلها
قول :
لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق )
رواه
مسلم .
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும்
அதிகமான' அல்லது "அறுபதுக்கும்
அதிகமான' கிளைகள் கொண்டதாகும்.
அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும்.
அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து
அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )
قال
رسول الله : لقد رأيت رجلاً يتقلب في الجنة
في شجرة
قطعها من ظهر طريق كانت تؤذي
المسلمين
) رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: ”ஒரு மனிதர் ஒரு சாலையில்
நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு
அதை அகற்றி (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ்
அங்கீகரித்து அவருக்கு ( அவர் செய்த பாவங்களிலிருந்து ) மன்னிப்பு வழங்கி, சுவனத்தை
நல்கினான்”. ( நூல்: புகாரி )
ஒரு முஸ்லிமின் செயல்பாடு
பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை
மேற்கண்ட இரு நபிமொழிகளின் வாயிலாக
நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற
பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை
என்றும்,
இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு
இறைவன் மன்னிப்பை பரிசாக
வழங்குகின்றான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு பாதையில் முஸ்லிம்கள்
மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள்.
அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, காயப்படுத்தி விடுகிற கல், முள் போன்றவற்றைக் கூட
பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் முக்கியமான அம்சம், இறைவனின்
மன்னிப்பைப் பெற்றுத் தரும் உவப்பான செயல் என்று கூறுகின்ற இஸ்லாம் ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை
வைக்கச் சொல்லுமா? துப்பாக்கியால் மக்களை நோக்கி கண்மூடித் தனமாக சுடச் சொல்லுமா?
பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை
வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் ஒன்று கூடுகின்ற
வணிக வளாகங்களிலும், சுற்றுலாத் தளங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற
பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை
நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு, துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்பவனுக்கு
இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை
வழங்குவான்?
நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில்
மாற்றுக் கருத்தில்லை. இது தான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடும் கூட.
நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும்
கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப்
பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள். ( நூல்: புகாரி )
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதில் ”முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதியில் இதைக் கூறுவதால்
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குத் துன்பம் தரக் கூடாது என்ற கருத்தை
கூறுகின்றார்கள்.
ஆனால், அதே நேரத்தில் பிற
மதத்தவருடன் கலந்து வாழ்கின்ற பகுதிகளில் யாருக்கும்
துன்பம் தரக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார்கள்.
"முஃமின் - இறை நம்பிக்கையாளர்
யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார்
விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்” என்று மாநபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதி )
இந்த அளவுக்கு இஸ்லாம் மிகத்
தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல்
அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள்
கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.
அவர்களுக்கும், இஸ்லாத்திற்கும்,
திருக்குர்ஆனுக்கும், மாநபி {ஸல்} அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித
தொடர்பும் இல்லை.
ஆகவே,முஸ்லிம்கள் யாவரும் அன்பையும், சாந்தியையும், சமாதானத்தையும், கருணையையும், மன்னித்தலையும் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மார்க்கத்தைப் பின்பற்றி வருபவர்கள் ஆவார்கள் என்றும்,
இன்று ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.
தனிப்பட்ட வகையில் ஒரு முஸ்லிம் தீவிரவாதத்துடன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வாரேயானால், அவர் இஸ்லாத்தின் பார்வையில், இஸ்லாமியச் சட்டங்களைப் புறந்தள்ளிய குற்றத்திற்கும், அதை மீறிய குற்றத்திற்கும் ஆளான குற்றவாளியாவார் என்றும் பிற மதத்தவர்களுக்கும், விமர்சிப்பவர்களுக்கும் எடுத்துக்கூறுவோம். இன்ஷா அல்லாஹ்….
விளக்கத்தை கொடுப்பதற்கு
அல்லாஹ் போதுமானவன்!!!