Thursday 5 September 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முன்பதிவு செய்பவாகளுக்கே முன்னுரிமை! சுவனத்தில்....

இன்று நாம் முன்பதிவு செய்யாமல், முந்திச் செல்லாமல் உலகில் எந்த ஒன்றும் மக்களுக்கு கிடைப்பதில்லை. கல்விக்கூடத்தில் (தன் பிள்ளைகளின் படிப்பிற்காக...)வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ..... மருத்துவ சிகிச்சையில்..... தொலைதூர பிரயாணத்தில்... ரேஷன் கடைகளில் ...... என்று, இன்னும் மனித சமூகம் பயனடைகிற எத்தனையோ காரியத்தில்....
முந்திச் செல்லவில்லையென்றால்?
முன்பதிவு செய்யவில்லையென்றால்?
எதுவும் கை கூடுவதில்லை!
கையூட்டு கொடுத்தும், சிபாரிசுக்கு ஆள்பிடித்தும் ஒன்றும் ஆவதில்லை!
சில சவுகர்யங்களும், சுகங்களும் அற்ப ஆதாயமும், சலுகைகளும் கிடைக்கும் இவைகளுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் முன்னேற்பாடுகளும் தான் எத்தனை? ஆனால்,
 தரம்! உயர்தரம்! நிரந்தரம்!!!
           என அனைத்து தரச்சான்றுகளும் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மகோன்னதமான ஓர் இடத்திற்கு
           முன்பதிவுசெய்பவாகள் எத்தனை பேர்?
     படைத்த இறைவனால் நிச்சயம் கிடைக்கும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்ட இடத்தை அடைய முந்திச் செல்பவர்கள் எத்தனை பேர்?
     நல்ல விசாலமான, காற்றோட்டம் நிறைந்த, சகல வசதிகளையும், சவுகர்யங்களயும் சலுகைகளையும், சுகபோகங்களையும், என்றென்றும் நிரந்தரமாய், படைத்தோனின் தரிசனத்தோடு, தீர்க்க தரிசிகளின் அரவணைப்போடு இறைநேசர்களின் சந்திப்போடு ஏராளமான அந்தஸ்துகளை, ஆயிரமாயிரம் உயர் பதிவிகளை தன்னகத்தே கொண்ட உயர்வான அந்த இடத்தை அடைய முன்பதிவு செய்பவர்கள் எத்தனை பேர்?
     ஆம்!            அந்த இடமான சுவனத்திற்கு, மேலான
                ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிற்கு தாமதமின்றி
                முன்பதிவு செய்வோம்,
                குறைவானர்களே அனுமதிக்கப்படும்
                மேலான அந்த இடத்தை அடைய
                முந்திச்சென்று முன்னுரிமை பெறுவோம்!
               
சுவனமும், சுவனத்தின் இன்பமும்!
அல்லாஹ் கூறுகின்றான்!
     இறையச்சமுடையோருக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அதன் மகத்துவம் இதுவே - அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குறையாத பாலாறுகளும் குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொணடிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு அனைத்து விதமான கனிவர்க்கங்களும் கிடைக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும்.
அல்குர்ஆன்: 47:15
மேலும், சுவனம் சம்பந்தமாக அல்லாஹ் குர்ஆனில் பல வசனங்கள் மூலம் விரிவாகப் பேசுகிறான்.
பார்க்க: அல்குர்ஆன் : 2:25, 9:20-22, 11:108, 13:24
                     15:45-48, 16:30,31,  18:31, 20:75,76
                     25 75,76 (இன்னும் 50-க்கும் மேற்பட்ட வசனங்கள் உண்டு)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் காணாத, எந்தக்காதும் கேட்காத, எவருடைய உள்ளத்திலும் தோன்றாத அருட்கொடைகளை என் நல்லடியார்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன்”. நீங்கள் விரும்பினால் குர்ஆனில் பின்வரும் (32:17-ம்) வசனத்தை நல்லடியார்களுக்காக எத்தனைக் கண்குளிர் இன்பங்களை மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்
சுவனத்தில் ஒரு சாட்டை வைக்கின்ற சிறிதளவு இடம் கூட உலகம் மற்றும் உலகின பொருட்களை விடச் சிறந்த்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     இன்பங்கள், ஆபாசங்கள் ஆகியவற்றால் நரகம் சூழப்பட்டிருக்கிறது
     கஷ்டங்கள், துன்பத் துயரங்கள் ஆகியவற்றால் சுவனம் சூழப்பட்டிருக்கிறது.
(நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நரக நெருப்பை விட பயங்கரமான ஒன்றைப் பார்த்ததில்லை ஆனால், அதனைவிட்டு வருண்டோட வேண்டிய்வன் உறங்கிக் கொண்டிருக்கிறான். நான் சுவனத்தை விட உயர்ந்த ஒன்றைப் பார்த்ததில்லை ஆனால், அதனை விரும்பக்கூடியவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்”.
(நூல்: திர்மிதி)
சுவனம் யாருக்கு?
அல்லாஹ் கேட்கின்றான்:-
     உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடை)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்துவிடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய எதவி எப்பொழுதுவரும்?என்று (புலம்பிக்) கேட்கும்வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். – இதோ அல்லாஹ்வுடைய உதவி மிக அண்மையில் இருக்கிறது. (என ஆறுதல் கூறப்பட்டது)
(அல்குர்ஆன்: 2:214)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சந்தேகமின்றி உண்மை சொல்வது நம்மையின் பால் வழிநத்துகிறது, நன்மை சுவனம் வரை சேர்த்துவிடுகிறது.                           (நூல் :முஸ்லிம்)
பொறுமை, நிலைகுலையாமை, உண்மை பேசுதல் நல் அமல்கள், நேர்மை, நற்குணங்கள் போன்ற ஏராளமான தகுதிகளை கொண்டோர்கள் சுவனம் செல்ல முடியும் – என்கிற நற்செய்தியோடு, நபிகளாரே சில தகுதியுடையோருக்கு சுவனத்தைப் பெற்றுத்தருகிற ஏராளமான நபிமொழிகளைக் காணமுடிகிறது எனினும் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டு காட்டுகிறோம். மேலும், நல் அமல்கள், இறைவழிபாடுகள் மட்டுமே ஒரு மனிதனை சுவனத்தில் கொண்டு சோத்துவிடாது. அல்லாஹ்வின் அருட்பார்வையும் இருந்தால் தான் சுவனம் செல்ல முடியும் என்ற பொருள்பட நபிமொழிகளும் காணப்படுகிறது ஏனெனில் காலமெல்லாம் விபச்சாரம் செய்த ஒரு பெண்மணி ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டியதால் அல்லாஹ் சுவனத்தை கொடுத்ததாக ஹதீஸில் காணமுடிகிறது.
எனவே, அவைகளோடு அதிகம் அல்லாஹ்வின் அருள்மீது ஆதரவுவைத்து அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.
நபித் தோழர்கள் சுவனத்தை அடைய செய்த கடும் முயற்சிகள் வரலாற்றுப்பதிவுகளில் பரவலாக காணமுடிகிறது. அவற்றில் ஒருசிலதை மட்டும் இங்கு காண்போம்.

ஆசையே மூலதனம்
நபி (ஸல்) அவர்கள் தமது விண்ணுலக பயணத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை நபித்தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் சிறு கூட்டமும், மற்றா இறைத்தூதருடன் சில பேரும், இன்னொரு இறைத்தூதருடன் பத்து பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்து சென்றனர். ஒரு இறைத்தூதர் மட்டும் தனியே சென்றார் அப்போது ஒரு மிகப்பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் ஜிப்ரிலே! இவர்கள் என் சமுதாயத்தினரா? என்று கேட்டேன். ஜிப்ரீல், இல்லை என்று கூறி மாறாக அடிவானத்தை பாருங்கள் என்றார், உடனே நான் பார்த்தேன். அங்கே மிகப்பெரும் மக்கள் திறள் இருக்கக்கண்டேன். இவர்கள் தாம் உங்கள் சமுதாயத்தார் இவர்களின் முன்ன்னியில் இருக்கும் எழுபதாயிரம் பேருக்கும் விசாரணையுமில்லை வேதனையுமில்லைஎன்று கூறினார். நான் ஏன்? என்று கேட்டேன். அதங்கு ஜிப்ரீல் (அல்)இவர்கள் நோய்க்காக சூடிட்டுக்கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பறவை சகுனம் பார்க்காதவர்களாகவும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள் என்று கூறினார்கள்.
உடனே உக்காஷா எனும் நபித்தோழர் எழுந்து நபி (ஸல்) அவர்களிடன் அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார்.
நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள். பிறகு இன்னொருவர் எழுந்து அவர் கூறியது போன்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்என்று சொன்னார்கள்
(நூல்: புகாரி)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:-
உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும் உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் எளிதில் கூவனம் புகுந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டீர்களா?
(அல்-குர்ஆன்: 2:214)
Basic Eligibility (அடிப்படைத் தகுதி)
அல்லாஹ் கூறுகின்றான்:
கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்பார்கள்! மேலும் அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும் இதுவே மாபெரும் வெற்றியாகும்!...
(அல்-குர்ஆன்:9:72)
கத்தாபின் மகனே, முஃமின்கள் மட்டும் தான் சொர்க்கத்தில் நுழைவார் என்று மக்களிடம் சென்று அறிவிப்புச் செய்வீராக என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.               (நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதியாக அறிந்த நிலையில் எவர் மரணமடைகிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார்என்று நபி (ஸ்ல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Other Eligibility (இன்ன பிற தகுதிகள்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கிறேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் – பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்குச் சுவனத்தின் நடவில் ஒரு வீட்டைப் (பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கிறேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர பொறுப்பேற்கிறேன்.”          
(நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தனது இரு தாடைகளுக்கும், இரு தொடைகளுக்கும் இடையே உள்ள உறுப்புகளுக்கு (நாவு, மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகிக்காமலிருக்க) பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சுவனம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.                                               (நூல் : புகாரி)
விரும்பி வீரமரணமடைதல்
பத்ர் – யுத்த களத்தில் எதிரிகளை நோக்கி மாநபியும் மாநபித் தோழர்களுகம் அணிவகுத்து நின்றிருந்த நேரம் அது.
நபித்தோழர்களை ஆர்வமூட்டும் விதமாக நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்: சுவனத்தின் பக்கம் முன்னேறிச் செல்லுங்கள், உமைர் பின் ஹுமாம் (ரலி) என்னும் நபித்தோழர்  என்றார் என்ன சொல்கிறீர் எனக் கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.
அல்லாஹ்வின் தூதரே! சுவன வாசிகளில் ஒருவனாக நான் ஆக ஆதரவைக்கிறேன் என்றார் உமைர் (ரலி)
ஆம்! நீர் சுவன வாசிகளில் ஒருவர் தான் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். உடனே தான் வைத்திருந்த பேரித்தம்பழ பையை கையில் ஏந்தியவாறு இதைச் சாப்பிடுகிற நேரத்தை இந்த உலக வாழ்க்கையின் நேரமாக எண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு யுத்த களத்தில் புகுந்து கடுமையாக போரிட்டு வீரமரணமடைந்தார்கள்.
(நூல் : முஸ்லிம்)
உஹத் – யுத்த களம் முஸ்லிம்கள் தோற்றுவிட்டார்கள் என்கிற செய்தி காட்டுத்தீயாய் மதீனாவை சுற்றிக் கொண்டிருந்த்து. கடமையான குளிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த ஹன்ளலா (ரலி) யின் காதில் இடியாய் விழுந்த்து. வாளேந்தி உஹதை முன்னோக்கிச் சென்றார் களம் புகுந்து வேட்டையாடி இறுதியில் வீரமரணம் அடைந்தார்.
நபியவர்கள் நபித் தோழர்களிடம் மலக்குமார்கள் அவரை குளிப்பாட்டக் கண்டேன் என்றார்கள்.
(நூல்: இஸ்தீஆப் , பக்கம் :165-1)
உஹத் – யுத்த களத்திற்கான அழைப்பு
தந்தை அப்துல்லாஹ் (ரலி) மகன் ஜாபிர் (ரலி)யிடம் நான் கலந்து கொள்கிறேன் என்றார்
மகன்: வயதான நேரத்தில் கலந்து என்ன செய்யப் போகிறீர்கள் நான் இளைஞன்
     ஆகவே நான் கலந்து எனது இளமையை நிரூபிக்கிறேன்.
தந்தை: இனி இதுபோன்றதொரு வாய்ப்பு எனக்கு அமையுமா? என்பது சந்தேகமே
      எனவே, எனக்கு வழிவிடு
மகன்: எனக்கு விட்டு கொடுங்கள்
தந்தை: சுவனத்தை தவிர வேறு ஏதாவது கூலியாக கிடைக்கு மென்றிருந்தால்
       உனக்கு நான் விட்டுக் கொடுத்திடுவேன். ஆகவே, வழிவிடு – என்றார்

உரையாடல் முற்றுப் பெறாமல் நடந்து கொண்டிருக்கவே சீட்டுக்குலுக்கி போடும் முடிவுக்கு வந்தனா. சீட்டுக் குலுக்கலில் அப்துல்லாஹ் (ரலி)யின் பெயர் வரவே கலந்து கொண்டார், விரும்பியது போன்றே வீரமரணம் அடைந்தார்.

தந்தையை இழந்த தனயனின் முகம் வாடியிருந்த்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்: ஜாபிர் (ரலி)யை அருகே அழைத்து ஆறுதல் கூறினார்கள். உனது தந்தையிடம் அல்லாஹ் திரையின்றி பேசினான் உமது தந்தையிடம் அல்லாஹ் விரும்பியதைக் கேளுங்கள் தருகிறேன் என்றான். உமது தந்தை அல்லாஹ்விடன் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்து உமது பாதையில் போராடி மீண்டும் வீரமரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். அதற்கு அல்லாஹ் எனது நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றான். – என்ற இந்த உரையாடலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                      (நூல்: இஜ்தீஆப், பாகம்: 2)

ஏன் முனபதிவு செய்ய வேண்டும்?
அப்துல்லாஹ் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     சொர்க்க வாசலில் இறுதியாக சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதை நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சுவனத்தில் நுழைந்து கொள்என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பிவந்து என் இறைவா! அது நிரம்பியிருக்க்க் கண்டேன்என்று கூறுவார். மீண்டும் அல்லாஹ் முன்புபோல் கூறுவான். மீண்டும் முன்பு போல அவரும் கூறுவார். மூன்றாம் முறையும் அல்லாஹ் முன்பு போல கூறுவான். திரும்பி வந்த அம்மனிதர் அல்லாஹ்விடம் முறையிடுவார் அதற்கு அல்லாஹ் நீ சுவனத்தில் நுழைந்து கொள் ஏனெனில் உலகம் மற்றும் அதைப் போன்ற பத்துமடங்கு அல்லது உலகத்தைப் போன்ற பத்து மடங்கு இடம் உனக்கு உண்டுஎன்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்னை நகைக்கின்றாயா? என்று கேட்பார். இதைக்கூறிய போது நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சுவன வாசிகளில் குறைந்த அந்தஸ்தில் உடையவர் ஆவார்.- என கூறப்பட்டுள்ளது.
(நூல்: புகாரி)

ஸஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்க வாசிகளில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள் மேல் அறைகளில் உள்ளவர்களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள்.
(நூல்: புகாரி)

எனவே குறைந்த அந்தஸ்தை உடையவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் வெகுமதி இதுவென்றால் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களின் நிலை எப்படி இருக்கும் அல்லாஹ் சுவனத்தில் நுழையும் நற்பாக்கியத்தையும், உயர் பதவிகளையும் தருவானாக!

ஆகவே! சுவனத்திற்கு முன்பதிவு செய்வோம்!
           முந்திச்சென்று உயர்பதவிகளை அடைவோம்!
எல்லாம் வல்ல ரஹமான்  இந்நற்பேற்றை
           நம் அனைவருக்கும் தந்தருள் பாளிப்பானாக!
ஆமீன்!

வஸ்ஸலாம்

தொகுப்பு


N.S.M.பஷீர் அஹ்மத் உஸ்மானி

No comments:

Post a Comment