Thursday, 7 November 2013

ஹிஜ்ரத் இஸ்லாமிய மயமாதலின் ஓர் இனிய உதயம்!

ஹிஜ்ரத் இஸ்லாமிய மயமாதலின் ஓர் இனிய உதயம்!

உலகில் எந்த ஒன்றின் வளர்ச்சியாக இருந்தாலும் அதன் பின்னணி மிகவும் சோகமயமாகவும், இழப்புகள் நிறைந்த்தாகவுமே காணப்படும்.
அது தனி மனிதனின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, குடும்பம், நிர்வாகம், வியாபாரம், ஊர், நாடு என அனைத்திற்கும் பொதுவானதே.
அந்த பொதுவான அந்த விதி இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் பொருந்திப் போவதை யாராலும் மறுக்க முடியாது.
ஆம், பாசிஸ பயங்கரவாதிகளும், அவர்களின் சூழ்ச்சிகளும், நிறைந்த இந்த இந்திய தேசத்தில், எந்த மூலையில் வேண்டுமனாலும் நம்மால் ஒரு இஸ்லாமியனாக நெஞ்சை நிமிர்த்தி செயல்பட முடியும் (ஒரு சில அசௌகர்யங்கள் இருந்தாலும் சரியே) சூழல் உள்ளதை அனுபவித்து வருகிறோம்.

சமீபத்தில் 10 மாதங்களுக்கு முன்னால்,
பாராளுமன்றத்தில் “வந்தே மாதரம்பாடல் ஒலிக்கப்பட்டது.
அவையில் இருந்த உறுப்பினர்களும், பிரதமர், சபாநாயகர்,  உட்பட எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்,
ஆனால், ஒருவர் மட்டும் வெளி நடப்பு செய்கிறார்,
அதைக் கண்ணுற்ற சபாநாயகர் கண்டிக்கின்றார்,
அவை மரபை, ஒழுங்கை மீறியதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவையிலேயே அறிவிக்கின்றார்

வெளிநடப்பு செயத அந்த நபர் வேறு யாருமில்லை.
சமாஜ் வாதி கட்சியின் M.P. ஷஃபீக்குர்ரஹ்மான் என்கிற இஸ்லாமிய கிழச் சிங்கம்.

வெளியே வந்த அவரிடம்  மீடியாக்கள் கேள்வி கேட்ட துளைத்தன.
ஆவேசப்படாமல், அமைதியாக அதே நேரத்தில் ஆணித்தனமாக இப்படிப் பதில் கூறினார்:
“வந்தே மாதரம் ஒன்றும் தேசிய கீதமல்ல
எழுந்து நின்று மரியாதை செய்வதற்கு.

வந்தே மாதரம் பாடலில் ஏக இறைவனாம்
அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் அநேக வாசகங்கள்
இடம் பெற்றிருக்கின்றன.

இறைவனை உண்மையாய் விசுவாசிக்கும் எந்த முஸ்லிமும்
அதை படிக்க மாட்டான்,
நானும் படிக்க மாட்டேன்.
     எந்த நடவடிக்கைக்கும் நான் அஞ்ச மாட்டேன்

பாராளுமன்ற வளாகத்தில் கூடி நின்ற அத்தனை ஊடகவியளாளர்களுக்கும் மத்தியில் சொன்னது இன்றளவும் அவர் M.P. யாகத்தான் இருக்கின்றார்.

கேட் ஸ்டீவன்ஸ், பிரபல பாப் பாடகர்,
பாப் இசையில் அத்தனை ரகங்களிலும் பாடி அசத்தியவர்,
மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிகராக கோடான கோடி ரசிகள்களுக்கு சொந்தக்காரர்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டார்.
தான் இனி பாடப் போவதில்லை என அறிவிப்புச் செய்தான். மேற்குலகமும், ரசிகர்களும் ஸ்தம்பித்து போயினர்.
அந்த ஆண்டினுடைய சிறந்த இசை ஆல்பத்துக்கான விருதை தட்டிச் சென்றது அவரின் இசை ஆல்பம்.
விழா அமைப்பாளர்கள் அணுகினர், இஸ்லாம் தடுத்திருந்த ஒன்றை நான் செய்துவிட்டேன், அதற்கான பாராட்டும், பதக்கமும் நான் பெறத் தகுதியானவனாக தற்போது நான் இல்லை.
எனவே, விருதும் வேண்டாம், பாராட்டும் வேண்டாம்! என்றார் அவர்.
மீண்டும் பல்வேறு முயற்சிகளுக்குப்பின்னர் விழா அமைப்பாளர்கள் அணுகினர்.
விருதையோ, பாராட்டையோ நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டாம்இ
ஆனால், நீண்ட நாட்களாக உங்களை காணாது தவிக்கும் உங்களின் ரசிகர்களின் முன் ஒருமுறை, சில நிமிடமாவது தோன்றிவிட்டுச் சென்றுவிடுங்கள்.
ஆமோதித்தார் அவர்.
குறிப்பிட்ட அந்த நாளில் விழா லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
விழாவின் நிறைவு நேரத்தில்
கேட் ஸ்டீவன்ஸ் (என்ற) யூசுப் இஸ்லாம் உங்கள் முன் தோன்றுவார் எனும் அறிவிப்பு வெளியானது.

நிரம்பியிருந்த மக்கள் வெள்ளம் கரகோஷத்தால் கலகலத்த்து.

கரகோஷம் அடங்க நீண்ட நேரம் ஆனது.
மேடையில் தோன்றினார் கேட் ஸ்டீவன்ஸ்.
யூசுப் இஸ்லாமாக....

அத்துனை ரசிகர்களும் தாங்கள் பாடிய ஏதாவது ஒரு பாடலை பாடுமாறு விரும்பி விண்ணப்பித்தனர்.
மறுத்தார்.
என் மார்க்கம் அதை ஒப்புக்கொள்ளவில்லை என உறுதி படக் கூறினார்.

நீண்ட நேரம் நீடித்த்து ரசிகர்களின் வற்புறுத்தலும், யூசுப் இஸ்லாமின் மறுப்பும்,

இறுதியாக, மைக் முன்வந்து நின்றார்,
இதுவரை ரகிசர்கள் கேட்டிராத புதுமையான, இனிமையான ஒன்றை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
அரங்கம் முழுவதிலும் அத்துனை ஓர் அமைதி,
சிறு சப்தமோ, சலசலப்போ கூட ஏற்படவில்லை.
ஆம், மைக்முன் வந்து நின்றதும், ஸலாம் கூறினார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்... என்று ஆரம்பித்தார், அர் ரஹ்மான் அல்லமல் குர்ஆன்.
என்று முழுவதுமாக அர்ரஹ்மான் அத்தியாயத்தை ஓதி விட்டு மேடையிலிருந்து கீழிறங்கினார்.
இந்திய தேசத்தில் மட்டுமல்ல உலக அரங்கிலும் கூட இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில்
துணிச்சலாக நம்மால் நம் மார்க்கத்தை பின்பற்ற முடிகிறது. ஒரு முஸ்லிமாக அடையாளப் படுத்த முடிகிறது.
இன்றைக்கு உலகில் நடமாகும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் என்று பெருமிதத்தோடு  சொல்லமுடிகிறது.

உலகில் இஸ்லாம் இன்று அதிக நாடுகளில் மிக வேகமாக (இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மன்) பரவிக்கொண்டு இருக்கிறது.
என்று பெருமித்த் தோடு நாம் பேசிக் கொண்டு இருக்கின்றோம். இன்னும் சில காலத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகிவிடும் என்றும் இஸ்லாமிய எழுச்சியை மகிழ்வோடு வரவேற்றுக் காத்துகிடக்கும் நமக்கு இதில் துளி அளவுகூட எந்தப் பங்கும் இல்லை.
ஆம்! இன்றைய இந்த “இஸ்லாமிய மயமாதலின்உதயத்தைப் பெற்றுத் தந்தவர்கள்ஹிஜ்ரத்எனும் பெறும் சாதனையைச் செய்த நபிகளாகும், முஹாஜிர்கள் எனும் மேன்மக்களும் தான்.

இஸ்லாமும் குறைஷித் தலைவர்களும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ அழைப்பை எத்திவைத்த ஆரம்ப காலம் விரல் விட்டு எண்ணிடும் அளவிற்கே முஸ்லிம்கள் இருந்தனர்.
மெல்ல, மெல்ல பிரச்சாரம் விரிவடைந்த்து பெரிய குடும்பத்து மனிதர்களும் இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.
பெரிய மனிதர்களிடத்தில் அடிமை பட்டுக்கிடந்த பிலால், கப்பாப், சிஹைப் போன்ற ஏழை அடிமைகளும் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இன்னும் சற்று விரிவடைந்து வெளியூர்களிலிருந்து வியாபார விஷயமாக வரும் வியாபார பெருமக்களும்,
மக்காவை ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களும், இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.
இந்த “ஏகத்துவக் கொள்கையை இத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
-எனும் முனைப்பில் 25 பேர் கொண்ட மக்கத்து பெரும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில், இப்படியே முஹம்மதை விட்டுவிட்டால் நம் மக்களையும், குடும்பத்தாரையும் நம்மை விட்டு பிரித்துவிடுவார்.
நம்மிடமிருந்து அதிகாரத்தையும், அந்தஸ்தையும் பறித்துவிடுவார்.
எனவே, அவரது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். அவரைப்பற்றி மக்களிடையே அவதூறான செய்திகளை பரப்ப வேண்டும்.
அவர் ஓதிக் காட்டுகிற இறை வசனங்களை பொய் படுத்த வேண்டும்.
-எனும் தீர்மானத்தை முதன் முதலாக நிறைவேற்றினர். அதை மிகத் தீவிரமாக கடை பிடிக்கவும் ஆரம்பித்தனர்.
ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த அவர்கள் அனைவரும், அபூதாலிபிடம் சென்று “உமது சகோதரன் மகன் முஹம்மத் எமது கடவுளர்களை ஏசுகிறார், எனது கொள்கைகளை விமர்சிக்கின்றார், எங்கள் மக்களை மடமைத்தனத்தின் பால் அழைத்துச் செல்கிறார், எமது மூதாதையர்களை வழிகேடர்கள் என்கிறார்.
இதை நீங்கள் தடுத்து நிறுத்துங்கள், அல்லது அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று முறையிட்டனர். அதற்கு அபூதாலிப் குறைஷித் தலைவர்களிடம் மென்மையான குறையிலும், அழகான முறையிலும் பதில் கூறிஅனுப்பி வைத்தார்கள்.
இரண்டாம் முறையாக சில மாதங்கள் கழித்து குறைஷித் தலைவர்கள் அபூதாலிபைச் சந்தித்து
“அபூதாலிபே! உங்களை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். ஆதலால் தான் முன்பொருமுறை உம்மிடம் வந்து உமது சகோதரன் மகன் குறித்து எச்சரித்துச் சென்றோம்.
ஆனால், முஹம்மத் தன் போக்கை மாற்றிக் கொள்பவராய் இல்லை.
இனிமேலும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். அவர் தமது கொள்கையையும், பிரச்சாரத்தையும் விட்டுவிடவில்லையென்றால் உங்களையும் அவரையும் நாங்கள் சும்மா விட மாட்டோம், போர் செய்வோம்
இது தான் எங்களது இறுதி எச்சரிக்கையாகும் என்று உரத்த் குரலில் சொல்லி விட்டு வந்தனர்.
இதன் பின்னர், அபூ தாலிப், நபி (ஸல்) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை விளக்கி கூறி என்னால் இயன்றவரை உமக்கு உறுதுணையாய் இருப்பேன் அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாதுஎன்று கூறினார்கள்.
அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதாலிப் அவர்களிடம் இருந்து வந்த இந்த பதிலைக் கண்டு “எதிரிகள் புதுயுக்தியை கையாள முயற்சிக்கின்றனர்என்பதை விளங்கிக் கொண்டு பெரிய தந்தையே!
என் வலக்கரத்தில் சூரியனையும், என் இடக் கரத்தில் சந்திரனையும் வைத்தாலும், என்னுடைய இந்த கொள்கையையும், பிரச்சாரத்தையும் ஒரு போதும் விடப்போவதில்லை!
அல்லாஹ் இந்த மார்க்கத்தை எழுச்சியடைச் செய்யும்வரை, அல்லது நான் உயிரை விடும்வரை இதை விடப் போவதில்லை! என்று கூறிவிட்டு, மாநபி (ஸல்) அவர்கள் அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள்.
திரும்பிச் சென்ற நபியவர்களை அபூதாலிப் அழைத்து என் சகோதர்ர் மகனே! நீ விரும்பிய படி வாழ்ந்துகொள்!
அல்லாஹ்வின் மீது ஆணை!
எந்த நிலையிலும் யாரிடமும் உம்மை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்:54,55,56
எப்படியாவது அபூதாலிபை வைத்து நபி (ஸல்) அவர்களை மடக்கிவிடலாம் என்று மூன்றாவது முறையாக ஒரு புது விதமான திட்டத்தோடு அபூதாலிபை சந்திக்க வந்தனர்.
அபூதாலிபே! இதோ வலீதின் மகன் அமாரா! குறைஷியர்களிலேயே அழகும், வீரமும் நிறைந்த வாலிபர். இவரை உமது மகனாக வைத்துக் கொள்ளுங்கள். “உமது மார்க்கத்தையும், உமது மூதாதையர் மார்க்கத்தையும் குறைகூறி, உமது கூட்டத்தாரிடையே பிளவை உமது அறிஞர்களை மடையர்களாக மாற்றிவரும், உமது சகோதரன் மகனை எம்மிடம் ஒப்படைத்து விடுங்கள் முஹம்மதிற்கு பதிலாக அமாராவை வைத்துக் கொள்ளுங்கள். அமாராவிடம் சகல உரிமைகளையும் கையாளுங்கள். உமது சகோதரன் மகனை நாங்கள் கொன்று விடுகிறோம் என்றனர்.
அதற்கு அபூதாலிப் கடுமையான சினத்துடன் “உங்களின் இந்த செயல் மிகவும் மோசமானது.
உங்கள் மகனை என்னிடம் ஒப்படைப்பீர்கள், அவரை நான் வளர்க்க வேண்டும்.
என் சகோதரன் மகனை உங்களிடம் ஒப்படைப்பேன். நீங்கள் கொலை செய்வீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒரு போதும் நடக்காது!
அங்கு நின்று கொண்டிருந்த முத்இம் இப்னு அதீ என்பவர் அபூதாலிபிடம் வந்து மத்தியஸ்தம் செய்தார்.
அபூ தாலிபே! உமது கூட்டத்தினர் எளிய நீதமான தீர்வை உன் முன் வைத்து, உமக்கேற்பட்டுள்ள சிக்கலில் இருந்து உம்மை மீட்ட முயற்சி மேற்கொள்கின்றனர், ஆனால். எதற்கும் நீர் இசைந்து கொடுக்க தயாராக இல்லையே! என்றார்.
அதற்கு அபூதாலிப் “இதுவா நீதம்? முத்இமே!
அல்லாஹ்வின் மீது ஆணை! அவர்கள் நீதம் காட்டவில்லை, மாறாக, எனக்கெதிராக நீதான் இவர்களைத் தூண்டிவிடுகிறாய்! அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றாய்! உன்னால் முடிந்த்தை நீ செய்துகொள்!
என்று கோபமாகக் கூறினார்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்:55,57
தோல்வியும் – மிரட்டலும்
அபூ தாலிபை வைத்து காரியம் சாதித்து விடலாம் என நினைத்தவர்கள் இந்த சம்பவத்திற்கு பின் மாற்று வழியை கையாள திட்டமிட்டனர். அதன் முதற்கட்டமாக முஸ்லிம்களை துன்புறுத்த துவங்கினர். முஸ்லிமானோர் வணிகர்களாக இருந்தால் கொடுக்கல் வாங்களை நிறுத்திவிடுவோம் என மிரட்டினர்.
ஏழைகளாகவும், பலகீனமானவர்களாகவும் இருந்தால் அடித்து துன்புறுத்தினர்.
பிலால், அம்மார், யாஸிர், கப்பாப் போன்றோரின் வாழ்க்கை அதற்கு முன்மாதிரியாகும்.
ஆனாலும் முஸ்லிம்களின் இதயம் மார்க்கத்தில் இன்னும் வலுப்பெற்றது.
மூர்க்கத்தனமாக துன்புறுத்தினார்கள்.
மாநபியை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டார்கள்.
ஆனால், தோல்விக்கு மேல் தேல்வி தான் அவர்களுக்கு கிடைத்தது.

முஸ்லிம்களின் மீதான துன்புறுத்தல் ஒரு கட்டத்தில் எல்லை மீறவே மாநபி (ஸல்) அவர்கள் தமது அழைப்புப் பணயை இரகசியமாகவும், முஸ்லிம்களை பாதுகாக்கவும் முடிவுசெய்து அர்கம் இப்னு அபுல் அர்கம் அல் மகஜூமீ என்பவரின் வீட்டை தேர்வு செய்து அங்கே ஒன்று கூடச் செய்தார்கள். சில முஸ்லிம்களை ஹபஷாவிற்கு தஞ்சம் புக வைக்க முடிவு செய்தார்கள். பின்னர் கொஞ்சம் மாற்றம் நிலவியது, சில பலன்களும் கிடைத்தது.

இதனிடையே ஹம்ஸா அவர்களும் உமர் அவர்களும் இஸ்லாத்தை தழுவினர்.
ஹம்ஸா (ரலி) அவர்கள், இஸ்லாத்தை தழுவிய பின் முஸ்லிம்களின் மீதான மதிப்பு உயர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின் முஸ்லிம்களின் பலம் கூடியது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
ஒரு நாள் உமரிடம் உங்களுக்கு ஃபாருக் என்ற பெயர் வரக் காரணம் என்ன? என்று கேட்டேன்.
அதற்கவர் “எனக்கு மூன்று நாள்களுக்கு முன் ஹம்ஸா முஸ்லிமானார்,
பிறகு நான் முஸ்லிமானேன்.
நான் முஸ்லிமான போது அல்லாஹ்வின் தூதரே!
நாம் உயிர் வாழ்ந்தாலும் இறந்தாலும் உண்மையில் தானே இருக்கின்றோம்! ஆம்! என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். நீங்களும் அப்படித்தானே! எனறு பதில் கூறினார்கள். அப்படியென்றால், ஏன் மறைவாக செயல்பட வேண்டும் உங்களை சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையக செயல்பட்டே ஆகவேண்டும்என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக பிரித்து ஓர் அணியல் நானும், இன்னொரு அணியில் ஹம்ஜாவும் இருநதுகொண்டு நபியவர்களை இரு அணிகளுக்கும் மத்தியில் ஆக்கிக் கொண்டோம்.
திருகையிலிருந்து மாவுத் துகள்கள் மறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன.
அதே வேகத்தில் நாங்கள் கஃபாவில் நுழைந்தோம். என்னையும், ஹம்ஸாவையும் ஒருசேர கண்ட குறைஷியர்களுக்கு ஏற்பட்ட கலக்கம் வாழ்க்கையில் அதுவரை ஏற்பட்டிருக்காது. இந்த காட்சியைக் கண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அன்று தான் அல் ஃபாரூக் எனப் பெயரிட்டார்கள்.
நூல்: மனாகிப் உமர், தாரீக் உமர்
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“உமர் முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் கூட தொழமுடியாதவர்களாகவே இருந்தோம். உமர் முஸ்லிமானதற்கு பிறகே கஅபாவில் தொழுதோம். அங்கே அமர்ந்து பேசினோம். நாங்கள் பலமிக்கவர்களாகவும் மாறினோம்
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம்:72

ஒத்திகையும், பேருதவியும்
ஆரம்பமாக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் தலைமையில் 12 ஆண்கள் நான் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை ஹபஷாவை நோக்கி நபித்துவத்தின் 5-ம் ஆண்டு ரஜப் மாத்த்தில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
இதற்கான கட்டளையும் அல்லாஹ்வின் மூலமே பெறப்பட்டது தான்.
“இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு மறுமையில் நன்மை தான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக, பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே வழங்கப்படும்.
அல்-குர் ஆன்: 39:10
இந்த இறைவசனம் இறக்கப்பட்டதின் பிண்ண்ணியில் தான் மாநபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முடிவை எடுத்தார்கள்.
இப்பயணத்தில்
                உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) தங்களது மனைவி ருகைய்யா (ரலி)
அவர்களுடனும்,
அபூஹூதைஃபா இப்னு உத்பா (ரலி) தங்களது மனைவி ஸஹ்லா  பின்த் சுஹைல் (ரலி) அவர்களுடனும்,
அபூஸல்மா இப்னு அப்துல் அஸத் (ரலி) தங்களது மனைவி உம்மு ஸல்மா பின்த் அபீ உமைய்யா (ரலி) அவர்களுடனும்,
ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) தங்களது மனைவி லைலாபின்த் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களுடனும்,
ஹிஜ்ரத் மேற்கொண்டனர்.

இஸ்லாமிய வரலாற்றில் நபி இப்ராஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின்னும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த குடும்பத்தினர் எனும் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றனர்.

அதிலும் குறிப்பாக “உஸ்மான் (ரலி) அவர்களின் தம்பதியினர் தான் நபி இப்ராஹீம் (அலை) நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப்பின் ஹிஜ்ரத் செய்த முதல் குடும்பத்தினர் ஆவார்கள்”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம்:67, 68
ஜாதுல் மஆத்
அங்கே முஸ்லிம்கள் நிம்மதியாய் வாழ்வதை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக 82 ஆண்கள் 18 அல்லது 19 பெண்கள் அடங்கிய இன்னொரு குழுவை அனுப்பிவைத்தார்கள்.
இம்முறை ஹபஷாவிற்கு சென்ற சிலர் தங்களது மனைவி, மக்கள் என குடும்பமாக வெளியேறினர்.
அங்கேயும் சென்று, முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடாமல் முயற்சி மேற்கொண்டனர்.
அல்லாஹ் மக்கத்து இணை வைப்பாளர்களுக்கு இம்முறையும் தோல்வியையே கொடுத்தான்.
ஹபஷா – அபீசீனிய மன்னர் ஆதரவுடன் முஸ்லிம்கள் பயமின்றி வாழ் முடிந்த்து.

இறுதி வடிவம்
பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்து, பொன்னும், பொருளம் அள்ளித்தருகின்றோம். ஆட்சி, அதிகாரத்தை விட்டுத் தருகின்றோம், அழகு மங்கையை மணமுடித்து தருகின்றோம் என்று கெஞ்சினர்.
மாநபி (ஸல்) விரட்டிவிட்டார்கள்.

இப்போது, நபி (ஸல்) அவர்களை நெருங்காதவாறு பனூஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும், அரண் போல் காத்து நின்றனர்.
மாநபி (ஸல்) அவர்களையோ, மாநபித் தோழர்களையோ அவர்களால் நெருங்கக் கூட முடியவில்லை.
இந்நிலையில், நபி (ஸல்) அவர்களை சந்திக்க கஅபாவில் அத்துணை கொடியவர்களும் ஒன்று சேர்ந்து வந்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள், அம்மக்கள் ஈமான் கொண்டுவிடமாட்டார்களா? எனும் ஆசையோடு அவர்கள் முன் வந்து அமர்ந்தார்.
அஸ்வத் இப்னு அல் முத்தலிப் என்பவனும், வலீத் பின் முகீரா என்பவனும் ஆரம்பித்தனர்.

முஹம்மதே! இனி நமக்குள் பகைமை வேண்டாம், இனி நாம் கூட்டாக – சேர்ந்து வாழ்ந்திடுவோம். நாங்கள் வணங்குவதை நீங்கள் வணங்குங்கள்; நீங்கள் வணங்குவதை நாங்கள் வணங்குகின்றோம்!
என்று கூறினார்கள்.
இவர்களனின் வாதத்திற்கு மறுப்பாக அல்லாஹ் அல் குர் ஆனில் 109-வது அத்தியாயத்தையே இறக்கியருளினான்.
நூல்: ரஹீக் அல் மக்தூம்)
எப்படியாவது நபி (ஸல்) அவர்களின் அழைப்புப்பணியை முடக்கி விட வேண்டும் என்று எண்ணிதான், ஒருமுறை வன்மை என்றால் மறுமுறை மென்மை. ஒரு முறை எச்சரிக்கை என்றால் மறுமுறை வன்முறை ஒரு முறை சமரசம் என்றால் மறுமுறை கொலை முயற்சி என்று வளைந்து நெளிந்து பல தந்திரங்களை கையாண்டு பார்த்தனர். அனைத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு பெரும் குழப்பத்தில் தத்தளித்தனர்.

மாபாதக முடிவும், இறை நெருக்கத்தின் துவக்கமும்
ஹாஷிம், முத்தலிப் ஆகிய இரு கிளையார்களும் நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் மும்முரமாய் இருப்பதால், மற்ற அனைத்து கிளையார்களையும் ஒன்றிணைத்து மாநபி (ஸல்) அவர்களுக்கும், பலூ ஹாஷிம், முத்தலிப் கிளையாருக்கும் எதிரான மாபாதக தீர்மானமொன்றை கையில் எடுத்தனர்.
அவர்களை ஊர் விலக்கம் செய்வது, அவர்களுடனான அத்தனை உறவுகளையும் அறுத்து எறிவது, முஹம்மதை நம்மிடம் ஒப்படைக்கும்வரை இது தொடரும் எனவும், இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் எழுதி கஅபாவில் தொங்கவிட்டனர்.
எந்த ஒரு நபியின் சமுதாயமும் செய்யத் துணியாத மாபெரும் பாவச் செயலை அக் காபிர்கள் மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் – தீர்மானம் நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் பிறையன்று நடந்தேறியது.
கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் “அபூ தாலிப் பள்ளத்தாக்கில்முடங்கிக் கிடந்தனர்.
ஒரு சிலரின் பெரும் முயற்சிக்குப் பிறகு இதுவும் தோற்றுப் போனது.
ஜூஹைர் இப்னு அபூ உமைய்யா
ஹிஷாம் இப்னு அம்ர்
முத்கிம் இப்னு அதீ
அபுல் புக்தரீ
ஸம்ஆ ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து மக்கத்து தலைவர்களிடம் கடுமையாக சண்டை போட்டு, தொங்கவிடப் பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தனர்.

மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கின்றார்கள். முன்பு போலவே அழைப்புப் பணியை தொடர்கின்றார்கள்.

இதன் பின்னர், தாயிஃப், அடுத்து, கோத்திரத்தார்களிடையே அழைப்புப்பணி, ஹஜ்ஜிக்கு வருகிற மதீனாவாசிகளிடம் அழைப்புப்பணி, என்று ஏகத்துவத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே சென்றது.
இதற்கிடையில், அபூதாலிப், கதீஜா ஆகியோரின் மரணம், மிஃராஜ், என மநாபி (ஸல்) அவர்களின் நிலமை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

மதீனா வாசிகள் மனமுவந்து செய்த இரண்டு அகபாக்கள் – ஒப்பந்தங்கள் இன்னும் சற்று பின்னடைவை மக்கத்து தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.
இப்போது நபித்தோழர்கள் மதீனாவை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இதுமேலும் பின்னடைவை தந்தபோது மதீனத்து தலைவர்களை சந்தித்து தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்.
மதீனத்து தலைவர்கள் மாநபி (ஸல்) அவர்களுக்கு உதவி புரிவதற்கும் தேவை பட்டால் மதீனாவில் அடைக்கலம் தருவோம் என்பதில் சற்றும் பின் வாங்க மாட்டோம் என்று உறுதியாய் சொல்லி விட்டனர்.
ஏமாற்றத்துடன் திரும்பிய அவர்கள் தங்களின் ஆலோசனை மன்றமான தாருந் நத்வா வில் அத்துனை பெருந்தலைவர்களும் ஒன்று கூட வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

நபித்துவத்தின் 14-ம் ஆண்டு அந்த கூட்டம் நடைபெற்றது. அதில பல தலைவர்களும் ஆலோசனைகளை அள்ளி வீசினார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது.
இறுதியாக, அபூஜஹீல் நான் ஒரு ஆலோசனையைக் கூறுகிறேன்.
“நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் குடும்பத்தில் சிறந்த நல்ல வீரமிக்க ஒரு வாலிபரை தேர்வுசெய்து ஒவ்வொரு வாலிபனுக்கும் கூர்மையான ஒரு வாளை கொடுத்து விடுவோம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து முஹம்மதை கொன்று விடுவார்கள். அரபுலகத்தின் அனைத்து கோத்திரத்தின் மீது அவர்களால் நம்மை ஒன்றும் செய்திட இயலாது. ஈட்டுத் தொகையை கொடுத்து நாம் தப்பிற்று விடலாம் நாமும் நிம்மதியாக இருக்கலாம் என்று சொன்னான். இதை அத்தனை தலைவர்களும் ஆமோதித்து அதற்கு தயாரானார்கள்.
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம் 81 முதல் 101வரை)
ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியப் படுத்தினான். மேலும், இன்று இரவே மதீனாவிற்கு சென்று விடுமாறும் அல்லாஹ் ஏவியதாக ஜிப்ரீல் (அலை) கூறினார்கள்.
அன்று இரவோடு இரவாக தம் படுக்கையில் அலீ (ரலி) அவர்களை படுக்க வைத்து விட்டு நபி (ஸல்) அவர்கள் அவர்களை தம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்ய புறப்பட்டனர்.
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம் 102.
ஆம்! அந்த புறப்பாடு தான் இன்றைய இஸ்லாமிய மயமாதலின் இனிய உதயம்!
உயிருக்கு பயந்து வெளியேறிய பயணம் அல்ல அது!
இந்த உம்மத்தை உயிர்ப்போடும், உயிரோட்டத்தோடும்
நடமாடச் செய்திட துவங்கிய சரித்திர பயணம்!
ஆம்! சகோதரர்களே! நமக்கு எல்லா வகையிலும், இஸ்லாமிய மார்க்க சுதந்திரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான்
தங்களின் முழு சுதந்திரத்தையும், முழு வாழ்வையும், அனைத்து சுக போகங்களையும், சொந்த பந்தங்களையும், அல்லாஹ்விற்காக அப்படி அப்படியே விட்டு விட்டு, அர்ப்பணிப்பு எண்ணத்துடன் மேற்கொண்ட ஹிஜ்ரத் – எனும் இஸ்லாமிய எழுச்சிக்கான இதயப்பூர்வமான இனிய பயணம் தான் அது.
இன்றைய நமது வளர்ச்சியிலும், சுதந்திரத்திலும் அதன் தாக்கம் நிறைந்திருக்க வேண்டும்.

பின்நாளில் முஸ்லிம்களின் நினைவில் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இஸ்லாமிய ஆண்டிற்கு ஹிஜ்ரி என பெயரிடப்பட்டது.
ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே அது உமர் (ரலி) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் எவ்வாறு மார்க்கத்திற்காக தங்களின் சொத்துக்களையும், நாடுகளையும் துறந்து, இறைவனின் பொருத்த்த்தைப் பெற்றார்களோ அதைப்போல் ஒவ்வொரு முஸ்லிமும் தியாக உணர்வை ஒவ்வோர் ஆண்டும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதை ஹிஜ்ரி நமக்கு ஞாபகமூட்டுகிறது. ஆனால், இன்றைய ஹிஜ்ரியை ஞாபகமூட்ட வேண்டிய நிலையில் சமுதாயம் இருக்கிறது.

ஹிஜ்ரத் என்பது மறுமலர்ச்சிக்கான, உலக இஸ்லாமிய
மயமாதலுக்கான ஓர் புதிய பாதை!
தன் வரலாறை மறந்த எந்த சமூகமும் நிலைபெற்றதில்லை
என்பதை மனதில் பதியவைப்போம்!

இன்றைய நம்முடைய வளர்ச்சி, வளம்! செழுமை ஆகிய அனைத்தின் பிண்ணணியிலும் சத்திய ஸஹாபாக்களின் தியாகமும்.. அன்றைய ஹிஜ்ரத்தும்
ஒளிர்ந்து கொண்டும் அழகாய் மிளிர்ந்து கொண்டும்
இருக்கிறது என்ற பேருண்மையை விளங்கிக் கொள்வோம்!
அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக!
இறைவனுக்காக, சத்திய தீனுல் இஸ்லாத்திற்காக
தியாகம் செய்யத்துணியும் நல் உள்ளங்களை
அல்லாஹ் நமக்கு வழங்குவானாக! ஆமீன்.



3 comments:

  1. assalamu alaikum brother ungaludaiya kadduraigal anaithum nalla erugu alhamthu lillah melum sirabaga eruga allah thavfeeq seivanaga aameen

    ReplyDelete
  2. மொவ்ளானா! இந்த பயானைப் படித்த பிறகு உங்களோடு ஹிஜ்ரத் புறப்பட தயாராகி விட்டேன். அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்.. அருமை.. பாரகல்லாஹீ பீகும்

    ReplyDelete