வழி காட்டும் ஒளி விளக்கு!
ஏகனாம் அல்லாஹ்விற்கு கட்டுப்படுவது
எந்த அளவிற்கு கடமையாய் உள்ளதோ அதே அளவிற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சொல்,
செயல், அங்கீராரம் ஆகியவற்றிற்கும் கட்டுப்படுவது கட்டாயமே! என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
எந்த நேசம் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் சொல்லின் படி செயல் படத் தூண்டவில்லையோ அது வெறும் பொய்யும்,
புரட்டும் ஆகும்.
எந்த காதல் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் செயலின் படி வாழ்வதற்குக் கற்றுத்தர வில்லையோ அது வெறும் நயவஞ்சகமும்,
மோசடியும் கலந்த காதலாகும்.
எந்தப் பாசம் அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் அங்கீகாரத்தின் படி அணுகுவதற்குப் போதிக்கவில்லையோ அது வெறும்
முகஸ்துதியும், ஏமாற்றும் நிறைந்த பாசமாகும்.
எனவே, நாம் நபிகளாரின்
மீது கொண்டிருக்கின்ற அன்பும், பாசமும், நேசமும், காதலும் உண்மையென்றால் நம் வாழ்க்கையின்
அத்துனை துறைகளிலும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்மாதிரியை கொண்டு வருவது
தான், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மீது நாம் வைத்திருக்கும் எல்லையில்லாத அன்புக்கும்,
நேசத்திற்குமான அளவுகோலாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்களில் அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுபவர்களுக்கு திண்ணமாக!
அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஓர் அழகிய முன் மாதிரி இருக்கின்றது.”
(அல்குர்ஆன்: 33:21.)
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“புகழுக்கும், போற்றுதலுக்கும் பிறகு, அறிந்து கொள்ளுங்கள்!
நிச்சயமாக! “வார்த்தைகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் – கிதாபுல்லாஹ் – வார்த்தையாகும்.
வழிகாட்டலில் மிகச் சிறந்தது முஹம்மது {ஸல்} அவர்களின் வழிகாட்டலாகும். காரியங்களில்
மிகக் கெட்டது, {மார்க்கத்தில்} புதிது புதிதாக தோற்றுவிப்பதாகும். அனாச்சாரங்கள் அனைத்தும்
வழிகேடாகும்.” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்
1.வாழ்வின் அனைத்து நிலைகளிலும்
நபி {ஸல்} அவர்களுக்கு கட்டுப் படுவது “ஃபர்ளு” கட்டாயமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறை நம்பிக்கை கொண்டவர்களே!
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! மேலும், (கட்டளையைச்) செவியேற்ற
பின் அதைப் புறக்கணிக்காதீர்கள்”. (அல்குர்ஆன்:8:20)
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறைத்தூதர் எதை உங்களுக்குக்
கொடுக்கின்றாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ
அதனை விட்டும் விலகி இருங்கள்.”
(அல்குர்ஆன்:59:7)
அபூ ஹுரைரா {ரலி} அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:
“எனக்குக் கட்டுப்பட்டு
வாழ்பவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்பவரைப் போன்றவராவார். எனக்கு மாறு செய்து
வாழ்பவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து வாழ்பவரைப் போன்றவராவார்.” என அல்லாஹ்வின் தூதர்
{ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(நூல்:புகாரி,
ஹதீஸ் எண்:1835.)
2.அல்லாஹ்வின் நேசமும்,
மன்னிப்பும் கிடைத்திட…
அல்லாஹ் கூறுகின்றான்:
“ (நபியே! மக்களிடம்) நீங்கள்
கூறிவிடுங்கள்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்;
அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும், உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு
வழங்குபவனாகவும், பெருங் கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (நபியே! மக்களிடம்)
நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழுங்கள்.”
பிறகு அவர்கள் (உம்முடைய இந்த அழைப்பை) புறக்கணிப்பார்களாயின் திண்ணமாக அல்லாஹ் (தனக்கும்
தன் தூதருக்கும்) கீழ்ப் படிந்து வாழ மறுக்கின்றவர்களை நேசிக்க மாட்டான்.” (அல்குர்ஆன்:3:31,32.)
3.அல்லாஹ்வின் அருள் வளம்
கிடைத்திட….
அல்லாஹ் கூறுகின்றான்:
“ அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து
வாழுங்கள்.அதனால், நீங்கள் அருள் பாளிக்கப்படலாம்”.
(அல்குர்ஆன்:3:132.)
4. நல்லறங்கள் பாதுகாக்கப்
பட…..
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறை நம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும்,
உங்களின் நல்லறங்களை பாழ்படுத்தி விடாதீர்கள்.”
(அல்குர்ஆன்:47:33.)
5.உத்தரவாதமான வெற்றி கிடைத்திட….
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும் கீழ்ப்
படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து, அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார்களோ,
அவர்கள் தாம் வெற்றியாளர்களாவர்.”
(அல்குர்ஆன்:24:52.)
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர் அல்லாஹ்விற்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்
படிந்து வாழ்கின்றாரோ அவர் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார்.”
(அல்குர்ஆன்:33:71.)
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர்கள் அல்லாஹ்விற்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்
படிந்து வாழ்கின்றார்களோ அவர்களை – கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில்
அவன் நுழைய வைப்பான். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிலையாக வாழ்வார்கள். இதுவே மகத்தான
வெற்றியாகும்.”
(அல்குர்ஆன்:4:13.)
6.நல்லறங்களின் கூலி முழுமையாய்
கிடைத்திட….
அல்லாஹ் கூறுகின்றான்:
“ நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும்
கீழ்ப் படிந்து நடப்பீர்களாயின், அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எந்தக் குறையும்
வைக்க மாட்டான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும், அருள் புரிபவனாகவும்
இருக்கின்றான்.”
(அல்குர்ஆன்:49:14)
7.நல்லடியார்களின் தோழமையும்,
நட்பும் கிடைத்திட….
அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்
படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள்,
இறை வழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள், மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் {சுவனத்தில்}
வீற்றிருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்! இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்
உண்மையான பேருபகாரமாகும்.”
(அல்குர்ஆன்:4:70)
8.வழி கேடுகளிலிருந்து
பாதுகாப்பு கிடைத்திட…..
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்
{ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜின் போது, ஆற்றிய உரையில் கூறியதாவது: “உங்களின் இப்பூமியில்
ஷைத்தான், தான் வணங்கப்படுவதில் நம்பிக்கை இழந்து விட்டான். எனினும், இப்போது நீங்கள்
அந்த (ஷிர்க்கான) செயலைத் தவிர உங்களின் மற்ற செயல்களை அற்பமாகக் கருதுவதன் மூலமாக
அவனைப் பின் பற்றுவதிலே, அவன் மன நிறைவு அடைகின்றான். எனவே, (எந்நேரமும் ஷைத்தானிடமிருந்து)
எச்சரிக்கையாகவே இருங்கள்! மேலும், நீங்கள் எதைப் பற்றிப் பிடித்தால் ஒரு போதும் வழி
தவறவே மாட்டீர்களோ, அதை நான் உங்களிடையே விட்டுச் செல்கின்றேன். அது அல்லாஹ்வின் வேதமும்,
அவனது தூதரின் வழிமுறையுமே ஆகும்.”
(நூல்:முஸ்தத்ரக்
அல் ஹாக்கிம்)
அபூ ஹுரைரா {ரலி} அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:
“எவைகளின் அடிப்படையில் நீங்கள் செயல் பட்டால், வழி
தவறவே மாட்டீர்களோ அப்படிப் பட்ட இரு விஷயங்களை நான் உங்களிடம் விட்டுச் செல்கின்றேன்.
ஒன்று அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆன். மற்றொன்று (ஸுன்னா எனும்) எனது வழிமுறையாகும்.”
(நூல்: திர்மிதீ,
ஹதீஸ் எண்:3682.)
9.கருத்து வேறுபாடுகளின்
போது வெற்றி கிடைத்திட…..
இர்பாள் இப்னு ஸாரியா
{ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், எங்களுக்கு
தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்குப்
பின்னர் எங்களை முன்னோக்கி, மிகச் சிறந்ததோர் உரையை நிகழ்த்தினார்கள். அவ்வுரையின்
தாக்கத்தால், மக்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. இதயங்கள் அச்சத்தால்
நடுங்கியது. அப்பொழுது
ஒருவர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இன்று நீங்கள் ஆற்றிய உரை இறுதி உரையைப் போன்று
இருந்தது. எங்களிடமிருந்து எந்த விஷயத்திற்காக உறுதி மொழி வாங்குகின்றீர்கள்?” என்று
கேட்டார். அதற்கு
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! உங்கள் தலைமைக்கு
கட்டுப்படுங்கள்! அவர் கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ அடிமையாக இருந்தாலும் சரியே!
என்பதை உங்களுக்கு நான் வஸிய்யத் செய்கின்றேன்.
மேலும்,
எனக்குப் பின் உங்களில் உயிரோடு இருப்பவர்கள், சமுதாயத்தில் மிகுதியான கருத்து வேறுபாடுகளைக்
காண்பார்கள். அந்தச் சூழ்நிலை ஏற்படும் போது “எனது வழி முறையின் படி செயல்படுவதைக்
கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். மற்றும் நேர்வழி நின்ற குலஃபாவுர் ராஷிதீன்கள் வழிமுறையையும்
பற்றிப் பிடித்திட வேண்டும்.
இன்னும்
அதில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும். அத்தோடு மார்க்கத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படும்
நூதனங்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். மார்க்கத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படும்
எந்த ஒரு நூதனமும் வழிகேடாகும்.”
(நூல்:
அபூதாவூத்.)
10.காலமெல்லாம் நன்மைகள்
கிடைத்திட…..
கஸீர் இப்னு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு அவ்ஃபில்
முஸ்னீ {ரலி} அவர்கள், தமது தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
“மக்களிடம் இருந்து மறைந்து போன எனது வழிமுறை ஒன்றை
எவரொருவர் உயிர் பெறச் செய்து, அதை ஏனைய மக்களும் அதைக் கடைபிடிக்கும் படி செய்வாரேயானால்,
அவருக்கு அவ்வழிமுறையைக் கடைபிடிக்கும் அனைவரின் நன்மைகளைப் போன்ற நன்மையும் கிடைக்கும்.
அதே வேளை ஏனைய மக்களின் நன்மைகளில் சற்றும் குறைக்கப் பட மாட்டாது.” என மாநபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
(நூல்:திர்மிதீ,
ஹதீஸ் எண்:2677)
இதற்காக மட்டுமல்ல, இன்னும்
ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கின்றன அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வழி நடந்திட…அவர்களின்
வாழ்வெனும் ஒளியின் கீற்றினில் நடை போற்றிட….
நபித்தோழர்களின் வாழ்விலிருந்து…..
1.ஸவ்பான் {ரலி} அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் மீது எப்படி எல்லையில்லாத அன்பையும், நேசத்தையும் கொண்டிருந்தார்களோ அதே அளவிற்கு
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கையை, வார்த்தையை பின் பற்றுவதிலும் ஸவ்பான்
{ரலி} அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ”ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு
அமர்ந்திருக்கும் போது, “எவரொருவர் வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எவரிடத்திலும் எந்த
ஒன்றையும் யாசிக்க மாட்டேன் என பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ, அவருக்கு நான் அவரை சுவனத்தில்
கொண்டு சேர்க்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன்” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறியபோது,
அப்போது அந்த சபையில் அமர்ந்திருந்த ஸவ்பான் {ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என்
வாழ்க்கையில் எந்த தருணத்திலும், எவரிடத்திலும் எந்த ஒன்றையும் யாசிக்கவே மாட்டேன்
என நான் பொறுப்பு தருகின்றேன்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபுல் ஆலியா {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித வஃபாத்திற்குப் பிறகு ஸவ்பான் {ரலி} அவர்கள்
ஷாம் தேசத்திற்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கின்ற வரையிலும்
அவர்கள் யாரிடத்திலும் யாசிக்க வில்லை.”
(நூல்:அபூதாவூத், ஹதீஸ் எண்:1763, ஸியரு அஃலா மின்
நுபலா, பாகம்:3, பக்கம்:17.)
2.கஅப் இப்னு மாலிக் {ரலி}
அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் தனிப் பெரும் பாசத்திற்குரிய நபித்தோழர்களில் இவரும் ஒருவர். நபிகளார் காலத்து
கவிஞர்களில் இவரும் ஒருவர். தபூக் யுத்தத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல், கலந்து
கொள்ளாமல் இருந்து விட்டார்கள். இவரோடு
சேர்த்து இன்னும் இரண்டு நபித்தோழர்களும் ஹிலால் இப்னு உமைய்யா {ரலி}, முராரா இப்னு
ரபீஆ {ரலி} ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.
மாநபி {ஸல்} அவர்கள் இம்மூவரின் விஷயத்திலும்
அல்லாஹ்வின் உத்தரவு வரும் வரை இம்மூவரோடும் பேசக்கூடாது என முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டார்கள்.
இதன் பின்னர் நடந்தவைகளை
கஅப் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் வாயிலாகவே நாம் அறிந்து கொள்வோம். கஅப்
{ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பின் தங்கியவர்களில்
எங்கள் மூவரிடம் மட்டும் எவரும் பேசக்கூடாதென நபி {ஸல்} அவர்கள் தடை விதித்தார்கள்.
மக்கள் எங்களை விட்டும் ஒதுங்கிக்கொண்டார்கள்.
எங்களின் விஷயத்தில் மக்களின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. எனது மனதினில்
விரக்தி ஏற்பட்டு இந்தப் பூமியே என்னைப் பொறுத்தவரை அந்நிய பூமியாகத் தோன்றியது! நான்
முன்பு அறிந்திருந்த பூமி போன்று அது இல்லை! ஐம்பது இரவுகளாக இந்நிலையிலேயே நாங்கள்
இருந்தோம். என்னுடைய மற்ற
இரு தோழர்களோ வீட்டிலேயே அழுத வண்ணம் முடங்கிவிட்டார்கள். மூன்று பேரில் நான் மட்டுமே
வயதில் குறைந்தவன். ஆகையால், நான் வெளியில் செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்து
கொள்வேன். யாருமே என்னுடன் பேச மாட்டார்கள். நபி {ஸல்} அவர்கள்
தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும் போது, அவர்களின் முன் ஆஜராகி
ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கின்றார்களா? இல்லையா? என்று
எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே
நான் தொழுவேன். ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் தொழுகையில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நபிகளார் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களின் பக்கமாக
முன்னோக்கும் போதோ, என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இவ்வாறாக, சக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப்
புறக்கணிப்பு நீடிப்பதை நான் கடினமானதாக உணர்ந்த போது – ஒரு நாள் அப்படியே நான் வீதி
வழியே நடந்து சென்றேன். அப்போது அபூ கதாதா {ரலி} அவர்களின் வீட்டருகே
சென்று கொண்டிருந்தேன். அபூகதாதா {ரலி} அவர்களின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன்.
அவர்
என் சிறிய தந்தையின் மகனாவார்! மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் அவரே! அவருக்கு
நான் ஸலாம் சொன்னேன். அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! அவர் என் ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை. நான் அவரிடம் “அபூ கதாதாவே!
அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்கின்றேன்! நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்
நேசிக்கின்றேன்? என்பது உமக்குத் தெரியாதா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அமைதியாக
இருந்தார். மீண்டும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்டேன். அப்போதும் அமைதியாகவே
இருந்தார். மூன்றாவது முறையும் கேட்டபோது,
அவர் சொன்னார் “அல்லாஹ்வும், அவன் தூதரும் தான் நன்கறிந்தவர்கள்” என்று. இதைக் கேட்ட
மாத்திரத்தில் “என் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. பீறிட்டுவந்த அழுகையை அடக்கியவனாக
நான் அங்கிருந்து வந்த வழியே வெளியேறினேன். அப்படியே, மதீனாவின்
கடைவீதியில் நான் வந்து கொண்டிருந்த போது அங்கே ஒருவன் கஅப் இப்னு மாலிக்கைப் பற்றி
அறிவித்துக் கொடுப்பவர் எவரேனும் உள்ளனரா? என்று கேட்டுக் கொண்டிருந்தான். உடனே மக்கள்
என்பக்கம் சுட்டிக்காட்டி அவனுக்கு நான் தான் கஅப் என்பதை அறிவித்தனர். அருகில்
சென்று விசாரித்தேன். சிரியாவில் இருந்து வருவதாகவும், கஸ்ஸான் மன்னன் ஒரு கடிதம் தந்ததாகவும்
என்னிடம் கொடுத்தான். அதைப் படித்தேன். அதில்
எழுதி இருந்ததாவது: “கஸ்ஸான் மன்னனாகிய நான் எழுதுவது என்னவெனில், உம்முடைய தோழர் உம்மை
வெறுத்து ஒதுக்கி விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்துள்ளது. கேவலமும், உரிமையிழப்பும்
உடைய பூமியில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம். இங்கே வந்து விடும். உம்மை நாம்
சகல மரியாதையுடன் நடத்துவோம்.” என்றிருந்தது. அதைப் படித்த போது “இதுவும் ஒரு சோதனையே!”
என நான் என்னையே நொந்து கொண்டேன். பின்பு நான் அந்த கடிதத்தை நெருப்பில் எரித்துவிட்டேன்.
இவ்வாறாக,ஐம்பதில் நாற்பது நாட்கள் கழிந்து விட்ட போது, நபியவர்களிடம்
இருந்து ஒரு தூதுவர் என்னிடம் வந்தார். வந்தவர்
என்னிடம் “நீர் உம் மனைவியை விட்டும் பிரிந்திருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள்” என்று கூறினார். என்
மனைவியை மண விலக்கு செய்திட வேண்டுமா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்? என்று நான்
அவரிடம் கேட்டேன். அதற்கவர் “இல்லை.. உம் மனைவியை விட்டும் விலகியிரும்! நெருங்கக்
கூடாது” என்று தான் நபிகளார் கூறியதாக வந்தவர் கூறினார். இதே போன்ற
கட்டளையை என் மற்றைய இரு தோழர்களுக்கும் மாநபி {ஸல்} அவர்கள் அனுப்பி இருந்தார்கள்.
அவர் சென்றதும், நான் என் மனைவியிடம் “ நீ உன் பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுவிடு!
அல்லாஹ் என் விஷயத்தில் ஒரு தீர்வை வழங்கும் வரை அவர்களோடே தங்கியிரு… என்று கூறி அனுப்பி
வைத்தேன். இதே நிலையில் பத்து நாட்கள் கழிந்தது. எங்களோடு
எவரும் பேசக்கூடாது என்று தடை விதித்து ஐம்பது நாட்கள் நிறைவடைந்தது! பிறகு ஐம்பதாவது
நாள் அதிகாலையில் என் வீட்டின் முகட்டில் நான் ஃபஜ்ர் தொழுகையை தொழுது முடித்துவிட்டு,
(அல்லாஹ் எங்களைப் பற்றி குர்ஆனில் கூறியது போல்) இந்தப் பூமி உயிர் வாழ்வதற்கு கஷ்டமாகிவிட்டதே!
பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் குறுகிப் போய் விட்டதே! என மன வேதனையோடு இருக்கும்
போதே, ஸல்வு எனும் மலை மீதிலிருந்து ஓர் அறிவிப்பாளர் “ஓ!...! கஅப் இப்னு மாலிக்! நற்செய்தி
பெறுவீராக!” என்று நற்செய்தி கூறுவதை நான் கேட்டேன். அப்படியே
ஸஜ்தாவில் வீழ்ந்தேன். நம்முடைய துன்பமெல்லாம் நீங்கி விட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.
நபி {ஸல்} அவர்கள்
ஸுபுஹ் தொழுது முடித்த பிறகு, ”எங்களது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்
கொண்டு, எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்து விட்டான்” என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்துவிட
புறப்பட்டுவிட்டார்கள். எவரது
உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ, அவர் என்னிடம் வந்த போது அவரது நற்செய்திக்குப்
பரிசாக ”என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவருக்கு அணிவித்தேன்”. அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! அப்போது அதைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை. பின்பு நான் வேறு ஒருவரிடம்
ஆடைகளை இரவலாகப் பெற்று, அதை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைக் காண
புறப்பட்டு வந்தேன். வழியில் என்னைக் கண்ட
மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தித்து “உமது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்
கொண்டதற்காக உமக்கு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துக் கூறினர். மகிழ்ச்சி மழையில் நனைந்தவாறே நான் பள்ளிக்குள்
நுழைந்தேன். அங்கு பூமான் நபி {ஸல்}
அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது தல்ஹா பின் உபைதுல்லாஹ்
{ரலி} அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். எனக்கு கைலாகு கொடுத்து, எனக்கு வாழ்த்து
தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
அவரைத் தவிர முஹாஜிர்களில் வேறெவரும் எழுந்து வரவில்லை. {”தல்ஹா {ரலி} அவர்களின் இந்த உபகாரத்தை கஅப் {ரலி} உயிர்
உள்ளவரை மறக்கவே இல்லை.” என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கஅப் பின் மாலிக் {ரலி} அவர்களின்
மகனார் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.}
பின்னர்,
நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நான் ஸலாம் கூறினேன். அப்போது மாநபி {ஸல்}
அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
நபி {ஸல்} அவர்கள்
என்னைப் பார்த்து “” உம் அன்னை உம்மைப் பெற்றெடுத்த நாள் முதற்கொண்டு உமக்குக் கிடைக்கப்
பெறாத சிறந்த இந் நன்நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!” என்று கூறினார்கள்.
நான் ”இந்த வாழ்த்துச் செய்தி தாங்களிடம் நின்றும் உள்ளதா?
அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததா?” என கேட்டேன். அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் “இல்லை..
இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும்” என்றார்கள்.
நூல்:ரியாளுஸ் ஸாலிஹீன்,பாடம்:2, ஹதீஸ் எண்:21.
மேற்கூரிய வரலாற்றுச் செய்தியில்
நமக்கு மூன்று விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றது.
1.அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் பேசக் கூடாதென தடை விதித்ததும், தம்மோடு நேற்று வரை அளவளாவிய ஒருவரை, எதிரிகளை
தங்களது கவித் திறமையால் பந்தாடிய மிகச் சிறந்த ஒருவரை, பத்ர் மற்றும் அகபாக்களில்
கலந்து அல்லாஹ்வின் அருளுக்குச் சொந்தமானவர்களை, முற்றிலுமாக புறக்கணித்து விட அவர்களைத்
தூண்டியது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற
ஆவலினால் தானே!
2.அபூ கதாதா {ரலி} அவர்கள்
தங்களது இரத்த உறவுகளை அறுத்து எறிந்து விட்டு, முகத்தை திருப்பி அல்லாஹ்வும், அவன்
தூதருமே நன்கறிந்தவர்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறத் தூண்டியது அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற ஆசையினால் தானே!
3.அதையெல்லாம் விட ஏற்கனவே,
நாற்பது நாட்களாக எவருமே முகம் கொடுத்து பேசாமல் முற்றிலும் புறக்கணித்து விட்ட நிலை
ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் பக்கத்து
நாட்டு அரசன் கூட ஏளனமாக பார்க்கும் நிலை. இன்னொரு பக்கம் வாழும் பூமியே நெருக்கடியாக
மாறிவிட்டதைப் போல உணர்ந்த தருணம் அது..
அப்போது,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இருந்து வந்த கட்டளைக்கு கஅப் {ரலி} அவர்கள் இப்படிக்
கேட்டார்களே “என் மனைவியை விவாகரத்துச் செய்திடவா? அல்லது நான் எப்படி நடந்து கொள்ள
வேண்டுமேன மாநபி {ஸல்} அவர்கள் விரும்புகின்றார்கள் என்று…
ஆக மொத்தத்தில், அல்லாஹ்வின்
தூதர் {ஸல்} அவர்களின் வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் உயிரோட்டமாய் தங்களது வாழ்க்கையை
அமைத்துக் கொண்டவர்கள் அந்த உத்தமர்கள் நபித்தோழர்கள்.
நாமும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை நேசிப்பதாகச்
சொல்கின்றோம். புகழ் மாலையெல்லாம் பாடுகின்றோம். ஆனால், வழி காட்டும் ஒளி விளக்கான
அண்ணலாரின் அழகிய வாழ்க்கைப் பாதையில் பயணிக்கின்றோமா?...
3.அப்துல்லாஹ் இப்னு உமர்
{ரலி} அவர்கள்.
வரலாற்று ஆசிரியர்கள் அனைவருமே
இப்னு உமர் {ரலி} அவர்களை “ஸாஹிபுல் வரஃ” பேணுதல் நிறைந்தவர் என்றே அழைக்கின்றனர்.
காரணம், அவரின் அத்துணை செயல்களுக்குப் பின்னரும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின்
வாழ்க்கையும், வார்த்தையும் அணிவகுத்து நின்றது தான்.
அப்துல்லாஹ்
இப்னு உமர் {ரலி} அவர்களின் பணியாளரான நாஃபிவு {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
“ஒரு நாள் அப்துல்லாஹ்
இப்னு உமர் {ரலி} அவர்களுக்கு அருகில் இருந்த ஒருவர் தும்மி விட்டு “அல்ஹம்து லில்லாஹ்..
வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்..” என்று கூறினார்.
இதை கேட்ட இப்னு உமர் {ரலி} அவர்கள், நானும்
“அல்ஹம்து லில்லாஹ்.. வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்…” என்று கூறுவதை விரும்புகின்றேன்.
ஆனால்,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நமக்கு இப்படிக் கற்றுத் தரவில்லை.
மாறாக, இவ்வாறான சமயங்களில் நாம் “அல்ஹம்து
லில்லாஹி அலா குல்லி ஹால்..” என்றுரைக்குமாறே நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்”
என்று கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ,
ஹதீஸ் எண்:2738.)
4.அபூ பக்ர் {ரலி} அவர்கள்.
உர்வத் இப்னு ஸுபைர் {ரலி}
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அபூ பக்ர் {ரலி} அவர்கள் கூறுவார்கள்: “ நான் மாநபி
{ஸல்} அவர்களின் செயல்களில் எதையுமே சாதாரணமாகக் கருதி விட்டு விடுபவன் அல்ல. ஆனால்,
அதே சமயம் (என்னையுமறியாமல்) அவர்களின் சொல், செயல்களில் எந்த விஷயத்தையாவது விட்டு
விட்டால் வழி தவறி விடுவேனோ என நான் அஞ்சுகின்றேன்”
(நூல்: முஸ்னத் அபூ யஃலா,
பாகம்:1, பக்கம்:38)
5.இம்ரான் இப்னு ஹுஸைன்
{ரலி} அவர்கள்.
“ஒரு சமயம் இம்ரான் இப்னு
ஹுஸைன் {ரலி} அவர்கள் தமது நண்பர் புஷைர் இப்னு கஅப் {ரலி} அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த
போது “ நாணம் அனைத்தும் நன்மையாகும்” என்றோ, அல்லது “அனைத்து நாணமும் நன்மையாகும்”
என்றோ அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள்.
அப்போது, புஷைர் இப்னு கஅப் {ரலி}
அவர்கள் “ நாணம் அல்லாஹ்விடத்தில் கண்ணியமானதும், அருள் நிறைந்ததுமாகும் என்பது ஒரு
கருத்து; பலஹீனம் என்பது மற்றொரு கருத்து உண்டு” இதை ஏதோ ஒரு அறிஞர் கூறியதாகவோ, அல்லது
ஏதோ ஒரு நூலில் தாம் படித்ததாகவோ கூறினார்கள்.
உடனே இம்ரான் {ரலி} அவர்கள்,
தம் இரு விழிகள் சிவக்க கோபமடைந்து, “ நான் உமக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடமிருந்து
ஒரு சொல்லை அறிவிக்கும் போது நீர் அதில் முரண்படுகின்றீரா? எனக் கேட்டார்கள். அறிவிப்பாளர்
கூறுகின்றார்: ”இம்ரான் {ரலி} அவர்கள் மறுபடியும் தான் அறிவித்த ஹதீஸைத் திருப்பிச்
சொன்னார்கள். புஷைர் இப்னு கஅப் {ரலி} அவர்களும், தமது கூற்றை
விடாமல் கூறிக் கொண்டிருந்தார்கள்.
உடனே,
இம்ரான் {ரலி} அவர்கள் வெகுண்டெழுந்து, புஷைர் அவர்களைத் தண்டிக்க தயாராகிவிட்டார்கள்.
அப்போது,
அங்கிருந்த நாங்கள் அபா நஜீத் அவர்களே! புஷைரும் நம்மவரே! அவரை மன்னித்து விட்டு விடுங்கள்.
அவரது கூற்றில் இணை வைப்பாளர்களின் கூற்றோ, நயவஞ்சகர்களின் கூற்றோ ஒன்றும் இல்லை” என்றோம்.
(நூல் :ஃபத்ஹுல் முன்யிம்,
பாகம்:1, பக்கம்:139.)
ஆகவே, அல்லாஹ்வின் தூதரை
உயிருக்கு உயிராக நேசிப்பதோடு நின்று விடாமல், உயிர் போகும் நிலை வந்தாலும் மாநபி
{ஸல்} அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு பகுதியை விட்டும் விலகிச் செல்லாமல் வாழ்ந்திடுவோம்!
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் முன் மாதிரியான வாழ்வைக் கையில் எடுத்து, எல்லா மாதிரியானச் சூழ்நிலைகளையும்
எதிர் கொள்வோம்!
வாழ்வின் அத்துணைத் துறைகளிலும்,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் வகுத்துத் தந்த எல்லையில் நின்று மிளிர்ந்திடுவோம்!
வல்ல ரஹ்மான் வாழ்வின் இறுதி மூச்சு வரை வழிகாட்டும்
ஒளி விளக்காம் வள்ளல் ரஸூல் {ஸல்} அவர்களின் வார்த்தை மற்றும் வாழ்க்கை மற்றும் அங்கீகாரத்தின்
படி வாழ்வாங்கு வாழ்ந்திடும் அருட் பெரும் பாக்கியத்தை உங்களுக்கும், எனக்கும் தந்தருள்
புரிவானாக!
ஆமீன்!
வஸ்ஸலாம்!
நீங்கள் எழுதிய பத்துகளும் முத்துகள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteநீங்கள் எழுதிய பத்துகளும் முத்துகள். வாழ்த்துக்கள்!
ReplyDelete