Thursday, 18 August 2016

ஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை!!!



ஹஜ்….. தனித்துவங்கள் நிறைந்த ஓர் இறைக் கடமை!!!


 
الحمدُ للهِ وَلِيِّ كُلِّ نعمةٍ ، وَصَلَّى اللهُ عَلَى رَسُولِهِ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمةِ  ، وعَلَى آلِهِ وأصْحابِهِ خِيَارِ الأمَّةِ وسَلَّمَ تَسليماً كَثيراً

இந்த ஆண்டு இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக 1 லட்சத்து 20 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்கின்றார்கள்.

அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் இருந்து 21 ஆயிரத்து 820 பேரும், மத்திய பிரதேசத்தில் இருந்து 7 ஆயிரத்து 757 பேரும், தமிழகத்திலிருந்து 2 ஆயிரத்து 399 பேரும் ஹஜ்ஜுக்கு செல்கின்றார்கள்.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த 45 ஆயிரம் விண்ணப்பங்களை சேர்த்து சுமார் 4 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1 லட்சத்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ்ஜுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த தகவலை இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் சவுத்ரி மெகபூப் அலி கைசர் மும்பையில் பத்திரிக்கையாளர்களிடம் கடந்த 12/8/2016 தெரிவித்தார்.

( பார்க்க: 13/6/2016 தேதியில் ஆன்லைன் தினத்தந்தியில் வெளியான செய்தி )

இது தவிர்த்து தனியார் ஹஜ் சர்வீஸ் மூலமும் ஆயிரக்கணக்கானோர் ஹஜ்ஜுக்கு செல்கின்றனர்.

ஹஜ் என்பது மகத்தான ஓர் கடமையாகும். ஹஜ்ஜின் மாண்புகளும், சிறப்புகளும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது.

மற்ற நான்கு கடமைகளில் இருந்தும் வடிவத்தால், செயல் முறைகளால், நன்மைகளால், முற்றிலுமாக வேறுபட்ட ஓர் உன்னதமான கடமையாகும்.

தொழுகையைக் குறித்து அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது அதன் துவக்கத்திலேயே, அதை அறிமுகப்படுத்துகின்ற போதே அதனால் மனித சமூகத்திற்கு ஏற்படுகிற நன்மைகளையும் சேர்த்தே குறிப்பிடுவான்.

وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ

தொழுகையை நிலை நாட்டுங்கள்! நிச்சயமாக! தொழுகையாகிறது மானக்கேடான காரியங்களில் இருந்தும், வெறுக்கத்தக்க, அருவெறுப்பான செயல்களிலிருந்தும் தடுக்கிறது”. ( அல்குர்ஆன்: 29: 45 )

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ () الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ()

இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்! அவர்கள் யாரெனில், தங்களின் தொழுகைகளை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்”. (அல்குர்ஆன்:23,12 )

நோன்பைப் பற்றிக் குறிப்பிடும் போதும் அல்லாஹ் இதே நிலையைத் தான் கையாள்கின்றான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீது ஏனைய சமூக மக்களின் மீது கடமையாக்கப்பட்டது போன்று நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாற்றம் பெரும் பொருட்டு”. ( அல்குர்ஆன்: 2: 183 )

ஜகாத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இதே நிலையைத் தான் அல்லாஹ் கையாள்கின்றான்.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ

நபியே! நீர் அம்மக்களின் பொருளாதாரத்திலிருந்து ஜகாத்தாக பெற்றுக் கொண்டு, அதன் மூலம் அவர்களை பாவங்களை விட்டும் நீர் தூய்மையாக்கி, அவர்களையும், அவர்களின் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி, அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்வீராக!”                                 ( அல்குர்ஆன்: 9: 103 )

ஆனால், ஹஜ் கடமையைப் பற்றி குறிப்பிடும் போது அது பற்றிய துவக்கத்திலும், அறிமுகத்திலும் அல்லாஹ் ஹஜ் செய்வதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி குறிப்பிடாமல் அல்லாஹ் தன்னோடு இணைத்துக் கூறுவான்.

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்”. ( அல்குர்ஆன்: 2: 196 )

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

இன்னும், அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ்ஜு செய்வது, மனிதர்கள் மீது அதன் பால் சென்று வர சக்தி பெற்றவரின் மீது கடமையாகும்”. ( அல்குர்ஆன்: 3: 97 )

மேலும், தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற இபாதத்கள் கடமையாக்கப்படும் போது அதற்கான செயல் வடிவத்தோடு கடமையாக்கப்பட்டது. இன்னும், சொல்லப்போனால் இம்மூன்றும் முந்தைய சமூக மக்களில் சில சமூக மக்களுக்கு கடமையாக்கப்பட்டிருந்தது.

பனூ இஸ்ரவேலர்களுக்கு தொழுகையும், ஜகாத்தும் கடமையாக்கப்படிருந்தது. நபி ஈஸா {அலை} அவர்கள் அற்புதத்தின் வெளிப்பாடாக தொட்டில் குழந்தையாக பேசிய போது அப்பேச்சின் ஊடாக தொழுகையையும், ஜகாத்தையும் வாழும் காலமெல்லாம் அல்லாஹ் விதியாக்கி இருப்பதாகக் கூறுவார்கள்.

மேலும், நபி தாவூத் {அலை} அவர்கள் நோன்பு குறித்து நபி {ஸல்} அவர்கள் சிலாகித்துக் கூறுவார்கள். அத்தோடு அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கும் போது அது முன் சென்ற மக்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்தது என்று சேர்த்தே குறிப்பிடுவான்.

நபி {ஸல்} அவர்கள் மிஃராஜ் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட போது அத்துனை நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழவைத்து விட்டுச் சென்றார்கள்.

அல்லாஹ்வோடு உரையாடி விட்டு விடை பெற்று வருகிற போது தொழுகை கடமை எனும் கட்டளையோடு வந்தார்கள்.

தொழுகை கடமையாகும் முன்னரே அதன் செயல் வடிவத்தை அல்லாஹ் காண்பித்துக் கொடுத்தான்.

ஆனால், ஹஜ் என்ற வணக்கம் செயல் வடிவம் பெறுவதற்கு முன்பாகவே ஹஜ் பற்றிய அறிமுகத்தை அல்லாஹ் இப்ராஹீம் {அலை} அவர்களின் மூலமாக அறிவிப்புச் செய்ய வைத்தான்.

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

இன்னும், ஹஜ்ஜுக்காக மனிதர்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுப்பீராக! நடந்தவர்களாக அவர்கள் உம்மிடம் வருவார்கள். இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் அவர்கள் வருவார்கள். அவை வெகுதூரமான எல்லா வழிகளில் இருந்தும் அவர்களைக் கொண்டு வரும்”. ( அல்குர்ஆன்: 22: 27 )

இதையெல்லாம் விட ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ் எந்த நபியின் மூலமாக இந்த அறிவிப்பைச் செய்யச் சொன்னானோ, அவர்கள் வாழ்ந்து மரணித்து நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கைப் பிண்ணனியிலேயே ஹஜ்ஜின் வழிபாட்டு முறைகளை நபி {ஸல்} அவர்களின் உம்மத்தாகிய நமக்கு நபி {ஸல்} அவர்களின் மூலமாக கடமையாக்கினான்.

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடம் இன்று மகாமு இப்ராஹீம்தொழுமிடமாக.....

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானை கல்லெடுத்து விரட்டிய இடம், இன்று ரம்யுல் ஹிஜார்எனும் அமலாக.....

அன்று அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க வெறுமை நிறைந்த பாலையில் பாலகனோடு தங்குவதற்கு சம்மதித்து, பாலை வெயிலில் தண்ணீருக்காக அங்கும் இங்கும் ஓடிய அந்த செயல் இன்று “ஸயீ – தொங்கோட்டம்” எனும் அமலாக...

அன்று அல்லாஹவிற்காக தம் மகனை அர்ப்பணிக்கத்துணிந்த அந்த தீர செயல்
இன்று உள் ஹிய்யாஎனும் இபாதத்தாக.....

இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஹஜ் என்பது தனித்துவம் நிறைந்த ஓர் இறைக் கடமை என்பதை எளிதில் நம்மால் உணர முடிகின்றது.

தனித்துவம் நிறைந்த இந்த ஹஜ் எனும் உயரிய கடமையை நிறைவேற்றிட வேண்டுமானால் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தவ்ஃபீக்கருணை நம்மீது இருக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்கிற நல்ல நஸீபை, தவ்ஃபீக்கை நல்குவானாக! ஆமீன்!!

அல்லாஹ்வின் தவ்ஃபீக் நமக்கு கிடைக்க வேண்டுமானால் நம்மிடம் இரண்டு பண்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

1. ஆசை இருக்க வேண்டும். 2. அதை அடைந்து கொள்வதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.

பொதுவாக அல்லாஹ்வின் எந்த ஒரு நிஃமத்தை நாம் அனுபவிக்க வேண்டுமானாலும் இந்த இரண்டும் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக ஹஜ் செய்ய வேண்டும் என்கிற ஆசையும், அதை எப்படியாவது அடைந்திட வேண்டுமென்ற குறிக்கோளுடன் கூடிய துஆவும் அவசியம்.

நபி ஸுலைமான் {அலை} அவர்கள் பெரும் அரசராக ஆட்சி புரிவதற்கு அவர்களின் ஆசையும், அவர்களின் துஆவும் முக்கிய பங்கு வகித்ததாக குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுவான்.

“என்னுடைய இறைவனே! என்னை நீ மன்னிப்பாயாக! இன்னும், எனக்குப் பின்னால் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியமைப்பை எனக்கு நீ நன்கொடையாக வழங்குவாயாக! நிச்சயமாக, நீயே பெருங்கொடையாளனாக இருக்கின்றாய்!”.                                             ( அல்குர்ஆன்: 38: 35 )

அல்லாஹ்வின் தவ்ஃபீக் அளப்பெரும் நிஃமத்…

காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் ஹுதைபிய்யாவுக் ( ஹிஜ்ரி 6 ) குப் பின்னர் சத்திய தீனுல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றார்கள்.

ஹிஜ்ரி 8 இல் நடைபெற்ற மூத்தா யுத்தத்தில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அமுத வாயால் “அல்லாஹ்வின் வாள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு படைத்தளபதியாக களமிறக்கப்பட்டார்கள்.

ஹிஜ்ரி 21 வரையிலான அவர்களின் வாழ்க்கையில் எங்கேயும், எப்போதும் ஓய்வே இல்லாமல் அல்லாஹ்வின் சன்மார்க்கத்தை உலகெங்கும் கொண்டு செல்லும் புனிதப் பணியை மேற்கொண்டிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுர மை பரப்பளவு இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர்கள்.

மரணப் படுக்கையில் நிலைகுலைந்து கிடந்த தருணத்தில்... மரணம் அவரை நெருங்க ஆரம்பித்த அந்த வேளையில்..

அல்லாஹ்வின் வாள் என்ற சிறப்பு பெற்ற அந்த மாவீரர்,  தனது ஆசைகள் நிறைவேறாத நிலைகுறித்து,  குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தார்.

ولما حضرت خالد بن الوليد الوفاة قال: لقد شهدت مائة زحف أو زهاءها، وما في بدني موضع شبر إلا وفيه ضربة أو طعنة أو رمية، وها أنا أموت على فراشي كما يموت العير، فلا نامت أعين الجبناء، وما من عمل أرجى من " لا إله إلا الله " وأنا متترس بها.

நான் எத்தனை போர்களில் கலந்து கொண்டிருப்பேன். என் உடம்பில் வாட்களால் தாக்கப்படாத இடங்களே கிடையாது! அம்புகளால் துளைக்கப்படாத இடங்களே கிடையாது! ஈட்டிகளால் சிதைக்கப்படாத பகுதிகளே கிடையாது!

எந்த அளவுக்கெனில் எனது உடல் முழுவதிலும் இம்மூன்று ஆயுதங்களால் தாக்கப்பட்ட இடங்கள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும்!

அப்பொழுதெல்லாம் உயிர்தியாகியாக மாறி, சுவனத்துத் தோட்டங்களிலும், இறைவனுடைய அர்ஷிலும் பச்சைப் பறவையாகப் பறந்து திரியத் துடித்தேனே..! எனது உடலில் தான் எத்தனை எத்தனை தழும்புகள்..! இதில் ஒன்றாவது என்னை உயிர்த்தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே..! எனது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே..! என்று குமுறி வெளிப்படுத்திய வார்த்தைகள் தாம் இவை...

தொடர்ந்து அவரது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடிக் கொண்டே இருந்தது.

அவரது ஆசைகள் அவரைக் கரை சேர்க்கவில்லை. உயிர்த்தியாகி என்ற அந்தஸ்தை அடையும் பாக்கியமும் அவருக்குக் கிடைக்காமலேயே மரணத்தை அவர் தழுவிக் கொண்டார்.  ( நூல்: உஸ்துல் ஃகாபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}..)

ஆக அல்லாஹ்வின் தவ்ஃபீக் அளப்பெரும் ஒரு நிஃமத் ஆகும்.

முஸ்லிம் சமூகத்தில் இன்று வணக்க வழிபாடுகள் என்பது சடங்கு, சம்பிரதாய நோக்கத்தில் அணுகப்படுகின்ற அவல நிலையைப் பார்க்க முடிகின்றது.

இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமும், இபாதத்தும் தனித்துவங்கள் பல நிறைந்த கடமைகளாகும். அதனதன் தனித்துவங்களை அறிந்து முழு மன ஈடுபாட்டோடு உளத்தூய்மையோடு நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக, ஹஜ் என்பது தனித்துவங்களும், மாண்புகளும், மகத்துவங்களும் நிறைந்த ஓர் கடமையாகும்.

தவாஃப், இஹ்ராம், மகாம் இப்ராஹீம், ஹஜருல் அஸ்வத், கஅபா, அரஃபா, மினா, முஸ்தலிஃபா, ஷைத்தானுக்கு கல்லெறிதல், தல்பியா, என்ற இந்த ஒவ்வொன்றும் நீண்ட நெடும் தனித்துவம் நிறைந்த அமல்களாகும்.

இவைகளை முழுமையாக அறிந்து, உணர்வுப்பூர்வமாக, அனுபவித்து, ரசித்து செய்யும் போது அந்த ஹஜ் மக்பூல் மற்றும் மப்ரூர் ஹஜ்ஜாக வடிவம் பெற்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, ஹஜ்ஜின் தனித்துவங்கள் ஒவ்வொன்றையும் அல்லாஹ்வின், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வழிகாட்டலின் படி கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்!!!

தனித்துவங்களில் முதன்மையானது கஅபா!!!

புனித கஅபா – பைத்துல்லாஹ்…

இந்த பைத்துல்லாஹ் உலகம் உருவாக்கப்படுவதற்கு சுமார் 2000, ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட ஓர் இறையில்லம்.

இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் தம் மாணவர்களிடம் கூறிய போது உலகமே உருவாக்கப்படவில்லை. அந்த சூழ்நிலையில் கஅபா எப்படி இருந்திருக்க முடியும்? என்ற கேள்வி அவர்களுக்கு முன் எழுப்பப்பட்ட போது அவர்கள் இப்படி பதில் கூறினார்கள்.

அல்லாஹுத்தஆலா உலகை உருவாக்குவதற்கு முன்பு முழு உலகையும் தண்ணீரால் நிரப்பியிருந்தான். அல்லாஹ்வின் அர்ஷும் தண்ணீரின் மீதே அமைந்திருந்தது என்பது நபிமொழி.

அந்நேரத்தில் ஓர் இடத்தில் மட்டும் நுரை வட்டமாக இருந்தது. அந்த இடத்தில் இரு மலக்குகளை ஏற்படுத்தி தன்னை வணங்கி வரும்படி இறைவன் கட்டளை பிறப்பித்திருந்தான். அம்மலக்குகளும், சுமார் இரண்டாயிரம் வருடங்கள் அவ்விடத்திலேயே அமர்ந்து அல்லாஹ்வை வணங்கி வந்தனர்.

இறைவன், தன் வல்லமையை வெளிப்படுத்த எண்ணி இவ்வுலகை உருவாக்க நாடியபோது இந்த நுரை அமைந்த பகுதியிலிருந்துதான் உலகின் உருவாக்கத்தை இறைவன் ஏற்படுத்தினான்.

அந்த இடம் தான் புனித கஅபா இருக்கும் பகுதி. எனவேதான் பூமியின் மத்திய பகுதியில் கஅபா அமைந்துள்ளது. 

அதன்பிறகு சுவனத்திலிருந்து ஒரு கூடாரத்தை மலக்குமார்கள் கொண்டுவந்து அவ்விடத்தில் வைத்து இறை வணக்கத்தில் ஈடுபட்டனர்.

எப்பொழுது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்தார்களோ அப்பொழுது அவர்களுக்கு இக்கூடாரத்தை மலக்குமார்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதை தொடர்ந்து ஆதம் (அலை) அவர்களும் தனக்கு தோதுவாக அக்கூடாரத்தை மாற்றி அமைத்து இறைவணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பின் வாணிற்கு உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் அக்கூடாரத்தைச் சுற்றி அமைத்த சூழல் அப்படியே இருந்தது.

அதன்பிறகு ஆதம் (அலை ) அவர்களின் மகனார் ஷீத் (அலை ) அவர்கள் இந்த கஅ பாவில் சிறிது மாற்றம் செய்து கட்டி முடித்தார்கள். இவர்களின் வழித்தோன்றலில் நபி நூஹ் (அலை) அவர்கள் வந்தார்கள். இவர்களின் காலத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் அழிந்த போது இந்த கஅபாவின் அடிச்சுவடு மட்டுமே அப்படியேயிருந்தது.

இந்த அடையாளச் சுவடை வைத்துதான் நபி இப்ராஹீம் (அலை ) அவர்களுக்கு  கஅ பா வை கட்டுங்கள் என்ற கட்டளையை இறைவன் பிறப்பித்தான். இந்நிகழ்வு மட்டுமே அல்குர்ஆணின் 2:127 என்ற வசனத்தில்  தெளிவுபடுத்தப்படுகிறது.

எனவே உலக மக்களின் முழுப்பார்வையையும், தன் பக்கம் ஈர்த்த இந்த கஅபாவை நிர்மானித்தவர்களை வரிசையாக பார்ப்போம்.

முதலாவது! மலக்குகளின் மூலமாக  அமைக்கப்பட்டது .
இரண்டாவது ! நபி ஆதம் (அலை ) அவர்கள் .
மூன்றாவது ! நபி ஷீத் (அலை) அவர்கள் .
நான்காவது ! நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் .
ஐந்தாவது ! அமாலிக்கா என்ற சமூகத்தினர் .
ஆறாவது !ஜுரும் என்ற சமூகத்தினர் .
ஏழாவது! குஷை இப்னு கிலாப் அவர்கள் .
எட்டாவது ! குரைஷி கூட்டத்தினர் .
ஒன்பதாவது ! அப்துல்லா இப்னு  ஜுபைர் (ரலி ) அவர்கள் .
பத்தாவது ! ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்  என்பவர் .

குறைஷியர்கள்  காலத்தில்  கஅபா வின் சுவர்கள் பலகீனமானதால் அதை புதிதாக நிர்மாணம் செய்ய மக்களிடம் முழுக்க முழுக்க ஹலாலான நிதியை வசூல் செய்து இந்த  கஅபாவை நிர்மானித்தார்கள்.

ஆனால் அவர்கள் திரட்டிய நிதி முழு கஅபாவையும் நிர்மாணம் செய்ய போதுமானதாக இருக்கவில்லை. எனவே பகுதியை அப்படியே விட்டுவிட்டு மீதமானதை கட்டி முடித்துவிட்டார்கள்.

விடப்பட்ட பகுதிக்குத்தான் ஹதீம் என்று சொல்கிறோம் . இதுவும் கஅபாவின் ஒரு பகுதியாகவே கணிக்கப்படும். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில் நபி (ஸல் ) அவர்களின்  வயது முப்பத்தி ஐந்தாக இருந்தது .

பிறகு  அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்  (ரலி ) அவர்கள் மக்காவின் கவர்னராக இருந்தபோது புனித கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் ஏர்படுத்திய அமைப்பில் கஅபாவின்  எந்தபகுதியும் விடப்படாமல் முழுமையாக கட்டினார்கள் .

அதன் பிறகு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவர் மக்காவின்  கவர்னராக பொருப் பேற்றப்பின் குறைஷியர்கள் எவ்வமைப்பில் புனித கஅபாவை அமைத்தார்களோ அவ்வாறே இவரும் கஅபா வின் ஒரு பகுதியை விட்டுவிட்டு மீத முள்ளதை கட்டினார்கள் .

பனூ அப்பாஸிய்யாக்களின்  ஆட்சியாளர்  ஹாரூன்  ரஷீத் அவர்கள் இமாம் மாலிக்  (ரஹ் ) அவர்களிடம் தாங்கள்  அனுமதித்தால் இந்த கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்களும் , அதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்  (ரலி) அவர்களும் எந்த அமைப்பில் கட்டினார்களோ அதே அமைப்பில் நான் அமைக்கிறேன் என்று கோரிய போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தடுத்து விட்டார்கள்.

காரணம் அரசர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் . அதனால் கஅபாவின்  அமைப்பும் மாறிக்கொண்டே யிருக்கும். பிறகு அதன் புனிதத் தன்மையில்  குறைவு வந்து விடக்கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

                                    ( நன்றி: புகழின் புகலிடம் வலைப்பதிவு )

முதல் ஆலயம்....

னிதர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக முதலில் கட்டப்பட்ட இறையில்லம் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ ()

“அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ளதாகும்”.                                             ( அல்குர்ஆன்: 3: 96 )

 قَالَ : قُلْتُ : " يَا رَسُولَ اللَّهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ ؟ قَالَ : الْمَسْجِدُ الْحَرَامُ . قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ثُمَّ أَيُّ ؟ قَالَ : الْمَسْجِدُ الأَقْصَى . قَالَ : قُلْتُ : كَمْ بَيْنَهُمَا ؟ قَالَ : أَرْبَعُونَ سَنَةً ، وَأَيْنَمَا أَدْرَكْتَ الصَّلاةَ فَصَلِّ , فَإِنَّمَا هُوَ مَسْجِدُكَ " .

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று நபி {ஸல்} கூறினார்கள்.   ( நூல்: புகாரி )

முஸ்லிம்கள் முன்னோக்க வேண்டிய திசை….

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ ()

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம்”.                         ( அல்குர்ஆன்: 2: 150 )

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்).

நபி {ஸல்} அவர்கள் நேசித்த பூமி….

நபி {ஸல்} அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

روى الإمام أحمد والترمذي والنسائي وابن ماجه عن عبد الله بن عدي بن حمراء رضي الله عنه، والإمام أحمد والنسائي عن أبي هريرة، قال الحافظ وذكره وهم وإنما هو عن عبد الله بن عدي والحاكم عن ابن عباس.
أن رسول الله صلى الله عليه وسلم وقف على الْحَزْوَرَةِ فقال
والله إنك لخير أرض الله وأحب أرضٍ إليَّ ولولا أن أهلك أخرجوني منك ما خرجت منك
 ورواه الدارمي أيضاً، وابن عبد البر في التمهيد

அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''நபி {ஸல்} அவர்கள் ''கஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்!

என்னுடைய சமுதாயம் மட்டும் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

மக்காவை நோக்கி நபி {ஸல்} அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.

அபயம் அளிக்கும் பூமி....

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான்.

أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ()

”அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்”.                          ( அல்குர்ஆன்: 28: 57 )

وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا

“அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்”.            ( அல்குர்ஆன்: 3: 97 )

இப்ராஹீம் {அலை} அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.

عن عبد الله بن زيد رضى الله عنه، عن النبى صلى الله عليه وسلم
إن إبراهيم حرَّم مكة، ودعا لها، وحرمتُ المدينة كما حرَّم إبراهيم مكة، ودعوت لها فى مُدِّها وصاعِها مثل ما دعا إبراهيم عليه السلام لمكة
 متفق عليه

அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''இப்ராஹீம் {அலை} மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் {அலை} மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன்” என நபி {ஸல்} கூறினார்கள். ( புகாரி )

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு சொல்லிக்  காட்டுவான்.

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ

''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!''

                                                     ( அல்குர்ஆன்: 2: 126 )

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

அல்லாஹ்வுடைய நிரந்தர பாதுகாப்பில் கஅபா....

கஅபாவிற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.

அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

ألَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ () أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ () وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ () تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ () فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ ()

இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: ''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

( அல்குர்ஆன்: 105: 1-5 )

மேலும், கியாமத் நாள் நெருங்கும் போது மீண்டும் ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

وعن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم
 يغزو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم وآخرهم
قالت
 يا رسول الله، كيف يخسف بأولهم وآخرهم وفيهم أسواقهم ، ومن ليس منهم؟ قال
 يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم
  متفق عليه، هذا لفظ البخاري.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி {ஸல்} அவர்கள் கூறிய போது...

''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்களே? கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                          ( நூல்: புகாரி )

இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:

அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும்.

எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள்.

உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி {ஸல்} அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.                               ( நூல்: புகாரி )

பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை பெற்றுத் தரும் பூமி…

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِي جَعَلْنَاهُ لِلنَّاسِ سَوَاءً الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ ()

”(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.

                                                      ( அல்குர்ஆன்: 22: 25 )

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                       ( நூல்: புகாரி )

புண்ணியம் நிறைந்த பூமி...

புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி {ஸல்} அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.

 قَالَ
 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 " لا تُشَدُّ الرِّحَالُ إِلا إِلَى ثَلاثَةِ مَسَاجِدَ : الْمَسْجِدِ الْحَرَامِ , وَمَسْجِدِي هَذَا , وَالْمَسْجِدِ الأَقْصَى " .

அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )

அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் பூமி...

'கஅபா' வில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.

عن أبي الدرداء:قال عليه الصلاة والسلام
«فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة وفي مسجدي ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة
أخرجه البزار- البحر
 قال هذا إسناد حسن.
 وعن أبي الدرداء وجابر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال
 «فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة، وفي مسجدي هذا ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة
 أخرجه البيهقي في السنن الصغرى رقم (1821)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் நபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் ( புகாரி )

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி {ஸல்} கூறியுள்ளார்கள். ( நூல்: இப்னுமாஜா, அஹ்மத் )

وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل كل يوم على حجاج بيته الحرام عشرين ومائة رحمة ستين للطائفين وأربعين للمصلين وعشرين للناظرين". قال المنذري في الترغيب والترهيب رواه البيهقي بإسناد حسن

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பைத்துல்லாஹ்வை ஹஜ்ஜு செய்ய வருகை தந்திருக்கும் ஹாஜிகள் மீது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் 120 வகையான அருளை இறக்குகின்றான். கஅபாவை தவாஃப் செய்பவர்கள் மீது 60 ரஹ்மத்தும், கஅபாவில் தொழுபவர் மீது 40 வகை ரஹ்மத்தும், கஅபாவை பார்த்துக் கொண்டிருப்பவர் மீது 20 வகை ரஹ்மத்தையும் இறக்குகின்றான்.”


விதிவிலக்கான பூமி....

عقبة بن عامر رضي الله عنه قال
ثلاث ساعات نهانا رسول الله صلى الله عليه وسلم أن نصلي فيهن، أو أن نقبر فيهن موتانا: حين تطلع الشمس بازغة حتى ترتفع، وحين يقوم قائم الظهيرة، وحين تضيف الشمس للغروب حتى تغرب"،

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.

ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

وعن جبير بن مطعم قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا بني عبد مناف! لا تمنعوا أحداً طاف بهذا البيت وصلى أية ساعة شاء من ليل أو نهار
 وصححه الترمذي وابن حبان

ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்” என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.              ( திர்மிதீ )


தஜ்ஜாலின் தீங்கை விட்டும் பாதுகாப்பு பெற்ற பூமி....

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் அவனால் செல்ல முடியாது.
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال "ليس من بلد إلا سيطؤه الدجال إلا مكة والمدينة ليس له من نقابها نقب إلا عليه الملائكة صافين يحرسونها ثم ترجف المدينة بأهلها ثلاث رجفات فيخرج الله كل كافر ومنافق ".

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )

மறுமை நாள் அடையாளங்களில் ஒன்று கஅபா....

கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.

عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
<<ليحجن البيت وليعتمرن بعد خروج يأجوج ومأجوج>>

அபூஸயீத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.

'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி )

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

عَنْ ابْنَ عَبَّاسٍ ‏أَخْبَرَهُ ‏‏عَنْ النَّبِيِّ ‏‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏قَالَ ‏: ‏كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ أَسْوَدَ أَفْحَجَ يَنْقُضُهَا حَجَرًا حَجَرًا ‏. ‏يَعْنِي ‏‏الْكَعْبَةَ . رواه البخاري (1595) .

أفحج : قال ابن الأثير في النهاية (3/415) : الفحج تباعد ما بين الفخذين .

  ‏عَنْ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏قَالَ ‏: ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏يَقُولُ :‏ ‏يُخَرِّبُ ‏الْكَعْبَةَ ‏‏ذُوالسُّوَيْقَتَيْنِ ‏ ‏مِنْ ‏‏الْحَبَشَةِ ،‏‏ وَيَسْلُبُهَا حِلْيَتَهَا وَيُجَرِّدُهَا مِنْ كِسْوَتِهَا ، وَلَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ ‏أُصَيْلِعَ ‏، ‏أُفَيْدِعَ ‏‏يَضْرِبُ عَلَيْهَا ‏بِمِسْحَاتِهِ ‏‏وَمِعْوَلِهِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் இப்போதும் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

யாஅல்லாஹ்.... இவ்வளவு மகத்துவமும் மாண்புகளும் நிறைந்திருக்கின்ற பரிசுத்த உன் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிற, வலம் வந்து கொண்டே இருக்கிற பாக்கியத்தை எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பலமுறை தந்தருள் புரிவாயாக!!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
இன்ஷா அல்லாஹ்... தனித்துவங்கள் அடுத்த வாரமும் தொடரும்...

8 comments:

  1. மாஷா அல்லாஹ் எவ்வளவு பரகக்கத்தான தரமான தகவல்கள்
    ஜஸாகல்லாஹ்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Baarakallah அருமையிலும் அருமை அழகிழும் அழகு சிறப்பிலும் சிறப்பு

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் நல்ல தகவல்கள் சிறப்பான நடைமுறை

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ் நல்ல தகவல்கள் சிறப்பான நடைமுறை

    ReplyDelete
  6. Baarakallah அருமையிலும் அருமை அழகிழும் அழகு சிறப்பிலும் சிறப்பு

    ReplyDelete
  7. ஜஸாகல்லாஹ் இன்ஷா அல்லாஹ் வரும் வாரத்தில் தாங்கள் மக்கா, மதினா, ஜம் ஜம், போன்ற அத்தாச்சிகளின் சிறப்புகள் வெளியிட்டால் மிக உதவியாக இருக்கும் மேலும் குர்பானி சிறப்பு அதன் சட்டம்


    அல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்

    ReplyDelete
  8. ஹஜ் காலத்தில் உரையாற்ற பொருத்தமான விஷயங்களை உலமாக்களுக்கு அள்ளிக்கொடுத்து விட்டீர்கள். இது எங்களைப்போன்றஆலிம்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாகும். جزا كم الله خيرا

    ReplyDelete