Tuesday, 28 May 2019

ரமழான் சிந்தனை, தொடர் – 24 காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!!!


ரமழான் சிந்தனை, தொடர் – 24
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!!!



23 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 24 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அர் மும்தஹினா அத்தியாயம் முதல் அல் ஹாக்கா வரையிலான 10 அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் முனாஃபிக்கூன் அத்தியாயத்தின் 10 -ஆம் வசனம் ஓர் முஃமினின் வாழ்வில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

மௌத்துக்கு முன்னால் அல்லாஹ்வின் பாதையில் தான தர்மங்களை செய்து விட வேண்டும் என்கிற சிந்தனையை அல் முனாஃபிக்கூன் அத்தியாயத்தின் 10 –ஆம் இறைவசனத்தின் மூலம் அல்லாஹ் அறை கூவல் விடுக்கின்றான்.

ஏனெனில், மௌத்தின் போது தான் தான தர்மங்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும் என்று கூறுவதோடு, அப்போது அந்த ஆசைக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இருக்காது என்றும் எச்சரிக்கின்றான்.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், அந்த நேரத்தில் நல்வழியில் செலவு செய்யாதவர்என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!என்று கூறுவார்.

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும், கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை”.                               ( அல்குர்ஆன்: 63: 10 )

மறுமைக்காக முற்படுத்தும் மகத்தான சாதனமே தான தர்மம்

عن جرير بن عبد الله البجلي قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} النساء: 1 إِلَى آخِرِ الْآيَةِ،
{إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} النساء: 1 وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} الحشر: 18 «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ - حَتَّى قَالَ - وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “”(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு சபையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் ( கழுத்துகளில் ) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லது, அவர்களில் அனைவருமே முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

அவர்களது வறிய நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( ஒருவித பதட்டத்தோடு ) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லுமாறு உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.

அப்போது,  மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.

 பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச் செய்தான், ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான் என்கிற  (4 –ஆம் அத்தியாயத்தின் 1 –ஆவது ) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

பின்னர், ‘அல் ஹஷ்ர் அத்தியாயத்திலுள்ள இறைநம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக் கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனும் ( 59 –ஆம் அத்தியாயத்தின் 18 –ஆவது ) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது ( உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும் என்றும் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.

உடனே ( நபித்தோழர்கள் ) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉகோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை ( நிறைய பொருட்களைக் ) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது, பின்னர் தொடர்ந்து மக்கள் ( தங்களின் தர்மப் பொருட்களுடன் ) வந்துகொண்டிருந்தனர்.

இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று இலங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது.

அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டுஎன்று கூறினார்கள்.                                    ( நூல்: முஸ்லிம் )

வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய நபித்தோழர்கள்…

وروى عقيل عن ابن شهاب أن يتيماً خاصم أبا لبابة في نخلة فقضى بها رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة فبكى الغلام. فقال رسول الله صلى الله عليه وسلم لأبي لبابة أعطه نخلتك فقال لا فقال: " أعطه إياها ولك بها عذق في الجنة " . فقال لا. فسمع بذلك أبو الدحداح فقال لأبي لبابة: أتبيع عذقك ذلك بحديقتي هذه قال نعم فجاء أبو الدحداحة رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله، النخلة التي سألت لليتيم إن أعطيته إياها ألي بها عذق في الجنة؟ قال: نعم

ஒரு அநாதை வாலிபருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம் சம்பந்தமாக விசாரித்தார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.

இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.

அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.

அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள் அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்என்று தமது விருப்பத்தை விண்ணப்பித்தார்கள்.

ஆனால், அபூலுபாபா (ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.

நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.

இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்று மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள். அடுத்து அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள். 

இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்துஅல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.

அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!

ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும், முகமும் மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை தருகின்றேன்என்று கூறினார்கள்.

பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ثم قتل أبو الدحداحة شهيداً يوم أحد فقال رسول الله صلى الله عليه وسلم: " رب عذق مذلل لأبي الدحداحة في الجنة " .

வாய் மொழியாகச் சொன்ன அந்த உத்தரவாதத்தை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உஹத் யுத்தகளத்திலே வீரமரணம் அடைந்து ஷஹீதாகக் காட்சி தந்த அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களை ஆரத்தழுவி, தங்களது புனித மடியில் கிடத்தி விட்டுகனிகள் தரும் மதுரமான எத்தனையோ சோலைகள் சுவனத்தில் அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனஎன்று கூறி உறுதிபடுத்தினார்கள்.

                    ( நூல்:  الإستيعاب في معرفة الأصحاب,பாகம்:3, பக்கம்:102 )

கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திய மேன்மக்கள்…

وَقَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ  مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ
 كَانَ نَاسٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ يَعِيشُونَ لَا يَدْرُونَ مِنْ أَيْنَ كَانَ مَعَاشِهِمْ، فَلَمَّا مَاتَ عَلِىُّ بْنِ الْحُسَيْنِ فَقَدُوا ما كانُوا يُؤْتُونَ بِهِ بِاللَّيْلِ.

அலீ (ரலி) அவர்கள் மகனார் ஹுஸைன் (ரலி) அவர்களின் மகன் வழிப் பேரர் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 38 –இல் பிறந்தார்கள்.

மிகப்பெரும் கல்விமானாக வாழ்ந்தார்கள். அரபுலகத்தில் பிரபல்யமாக அறியப்பட்ட ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) இமாம் ஸுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோர் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களிடம் வந்து தங்களின் சந்தேகங்களுக்கான விளக்கங்களைப் பெற்றுச் செல்வார்கள்.

செல்வச் செழிப்பிலும் மிகச் சிறந்து விளங்கினார்கள். அதே அளவு கொடைத் தன்மையிலும் சிறந்து விளங்கினார்கள்.

ஹிஜ்ரி 94 முஹர்ரம் 25 –இல் வலீத் இப்னு அப்துல் மலிக் எனும் ஆட்சியாளரால் விஷம் வைத்து ஷஹீதாக்கப்படுகின்றார்கள்.

அவர்களின் உடலை குளிப்பாட்டும் போது அங்கிருந்தவர்கள் முதுகில் பெரிய, பெரிய சுமை தூக்கியதற்கான வடுக்களை பார்க்கின்றார்கள்.

அறியப்படும் செல்வந்தராக வாழ்ந்தவர்களின் முதுகில் ஏன் இவ்வளவு பெரிய வடுக்கள்? ஏன் அவர்கள் சுமை தூக்க வேண்டும்? என்கிற வினாக்கள் எழுப்பட்டு மதீனா நகரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.

அப்போது, தான் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களின் முதுகில் இருந்த வடுக்களுக்கான காரணங்கள் தெரிய வந்தது.

ஆம்! தினந்தோரும் இரவிலே மதீனாவின் தெருக்களில் அநாதைகள், ஏழைகள், ஆதரவற்றோர்கள், விதவைகள் ஆகியோரின் வீடுகளின் கதவுகளைத் தட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மூட்டையை கொண்டு கொடுப்பார்களாம்.

அந்த மூட்டையில் அவரவர்களின் தேவைக் கேற்ப சில போது உணவுப் பொருட்கள், விறகுக் கட்டைகள், திர்ஹம்கள், தீனார்கள், ஆடைகள் என இருக்குமாம்.

மதீனாவின் தெருக்களில் வசிப்போர் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும், யார் உதவி செய்கின்றார்கள் என்பதை உதவியைப் பெறுபவர்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும் முகத்தை மூடியவர்களாகச் சென்று கொடுப்பார்களாம்.

நீண்ட காலமாக உதவியைப் பெற்று வாழ்ந்தவர்களுக்கு அவர்களின் முதுகில் இருந்த வடுக்கள் தான் இது வரை யார் உதவி செய்தார் என்பதைக் காண்பித்துக் கொடுத்தது.

ஒருவர் பின் ஒருவராக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவர்களால் பயனடைந்தவர்கள் வந்து சொன்னதன் பின்னால் தான் அந்த வடுக்களுக்குப் பின்னால் இருந்த நெகிழ்வான வரலாறு உலகிற்கு தெரிய வந்தது.

                                                ( நூல்: இலலுஷ் ஷராயிஃ )

எனவே, வாழ்க்கை முடியும் முன் தான தர்மங்கள் செய்து ரப்பின் அன்பை பெறுவோம்!!!

வஸ்ஸலாம்!!!

1 comment: