ரமழான் சிந்தனை, தொடர் -7
தீமையை எதிர்த்து போரிடு!!!
இன்றைய மனித
சமூகத்தில் தீமைகள் மலிந்து, நன்மைகள் அருகிப் போய்
விட்டது.
அவை உலக
சமுதாயத்தில் பல்வேறு வகையான மாற்றங்களையும், தாக்கங்களையும்
ஏற்படுத்தியிருக் கின்றதென்றால் மிகையான ஒன்றல்ல.
இது
வீட்டிலிருந்து துவங்கி நாடாளும் ஆட்சியாளர்களின் அவை வரையிலும் விரவிக்
கிடக்கின்றது.
மனித வாழ்வின்
அத்தனை தளங்களிலும் புயலென வீசிக் கொண்டிருக்கின்றது. இது குறித்து மனித சமூகமும்
பலவாராகச் சிந்தித்துக் கொண்டும் இருக்கின்றது.
காலத்தின் போக்கில் வாழ்ந்துவிட்டுப் போவோம், தீமைகளை எதிர்த்துப்
போராடுவதால்
எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை என்கிற மனோநிலையில்
சிலரும்..
நாம் மட்டும்
நல்லவர்களாக வாழ்ந்துவிட்டுப் போவோம், மற்றவர்களைச்
சீர்திருத்தி எந்தப் பலனும் இல்லை என்கிற எண்ணவோட்டத்தில் சிலரும்,
நாம் எப்படி நல்லவர்களாக,
வாய்மையாளர்களாக, நேர்மை யாளர்களாக, ஒழுக்கமானவர்களாக வாழ்கின்றோமோ, அது போன்று சமூகத்தின் நிலையையும் சீர்படுத்த வேண்டும்.
தீமைகளை எதிர்த்துப் போராடவேண்டும், அத்தோடு நின்று விடாமல்
தீமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு போராளி வர்க்கத்தை
உருவாக்க வேண்டும் என்கிற ரீதியில் மிகச் சிலரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
நிச்சயமாக
இம்மூன்று வகை சிந்தனை கொண்ட மனிதர்களில் ஒருவராகத்தான் நம்மில் ஒவ்வொருவரும்
இருக்க முடியும்.
தீமைகளை
எதிர்த்துப் போராடுவதால் பயன் ஏதும் பெறுகிறோமா?, தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுபவர் யார்? எனும்
கேள்விக் கணைகளோடு இன்று ஓதப்பட்ட வசனங்களின் ஊடாக குர்ஆன்
கூறும் ஓர் வரலாற்றை வாசித்துப் பார்ப்போம்.
وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ
إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ
شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ لَا تَأْتِيهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا
يَفْسُقُونَ (163)
“கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப்பற்றி இவர்களிடம் நீர் கேட்டுப்பாரும்! அங்கு வாழ்ந்த மக்கள் சனிக் கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை இவர்களுக்கு நினைவூட்டுவீராக! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல்மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அம்மீன்கள் அவ்வாறு
வருவதில்லை. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ
مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى
رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ (164) فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ
أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا
بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ (165) فَلَمَّا عَتَوْا عَنْ مَا
نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (166)
மேலும், இவர்களுக்கு
நினைவூட்டுங்கள்! அவர்களில் ஒரு பிரிவினர், (இன்னொரு பிரிவினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ, மேலும், கடுமையான தண்டனைக்கு ஆளாக்க இருக்கின்றானோ, அந்த மக்களுக்கு ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்? என்று
கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும்
என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும்,
இதன் மூலம் இவர்கள் இறைவனின் வரம்புகளை மீறுவதிலிருந்து
தவிர்ந்து
கொள்ளக்கூடும்.” என்று பதில் கூறினார்கள்.
இறுதியில், அவர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து செயல்பட்ட
போது, தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அக்கிரமம் செய்து கொண்டிருந்த அனைவரையும் நாம் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்.
பிறகு, எதைச் செய்யக்கூடாது என தடுக்கப்பட்டார்களோ, அவற்றையே வரம்புமீறி செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம். ( அல்குர்ஆன்: 7:
163 – 166 )
மேற்கூறிய
வரலாற்றிலிருந்து நமக்கான படிப்பினை இது தான். அந்த ஊரில் மூவகை சிந்தனை கொண்ட
மக்கள் இருந்தனர்.
1.
துணிந்து இறைக்கட்டளைக்கு மாறு செய்து வந்தவர்கள்.
2. தான் மட்டும் நேர்மையோடு
வாழ்ந்து,
நேர்மையற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோரை தடுக்காமல், தடுப்பவர்களைப் பார்த்து “இவர்களுக்கு அறிவுரை கூறி என்ன ஆகப்போகிறது? என்று கூறிக் கொண்டிருந்தவர்கள்.
3. இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்யும் அம்மக்களின் செய்கைகளைக் கண்டு மனம் பொருக்கமுடியாமல், எப்படியாவது அவர்களை திருத்தி நல்வழிப்படுத்திவிடலாம் என தீர்மானம் எடுத்து போராடியவர்கள்.
3. இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்யும் அம்மக்களின் செய்கைகளைக் கண்டு மனம் பொருக்கமுடியாமல், எப்படியாவது அவர்களை திருத்தி நல்வழிப்படுத்திவிடலாம் என தீர்மானம் எடுத்து போராடியவர்கள்.
மேலும், முடிந்தவரை இம்மக்களிடம் காணப்படும் தீமைக்கு
எதிராகப் போராடுவோம். அம்மக்கள் நல்வழி அடையவில்லை என்றால் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் “எங்கள் இறைவா! எங்கள்
மீது எந்தக்
குற்றமுமில்லை” என ஆதாரத்தை சமர்பிக்கும்
முகமாக, நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியில் தம்மை தீவிரமாக
ஈடுபடுத்தியவர்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் அந்த ஊரின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கிய போது, தீமைக்கு
எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அல்லாஹ்
காப்பாற்றினான்.
மற்றவர்களை அல்லாஹ் கடும் வேதனை கொடுத்து தண்டித்தான்.
எனவே, தீமைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் தான் ஓர் இறை நம்பிக்கையாளன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அது தான் ஈருலகிலும் அவனை வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் செல்லும்.
தன்னை அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளும் போது, அவன் யாருக்கும்
அஞ்சத்தேவையில்லை.
யாருடைய சூழ்ச்சியும் அவனை ஒன்றும் செய்திடாது. ஏனெனில்,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا
يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا
فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (105)
அல்லாஹ் கூறுகின்றான்: “இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது.” ( அல்குர்ஆன்: 5:
105 )
உள் வீட்டு விவாகாரம் முதற்கொண்டு உலகளாவிய விவகாரங்கள் வரை முஸ்லிம் சமூகம்
அடையும் தோல்விகளுக்கு முஸ்லிம் சமூகம் பல பதிலை வைத்திருக்கின்றது. உண்மையில் அது மட்டும் தான் காரணமா? என்றால் இல்லை.
தீமைகளை
தடுக்காததும் ஒரு காரணம்....
قال النبي صلى الله عليه وسلم
إن الناس إذا رأوا المنكر
فلم يغيروه أوشك أن يعمهم الله بعقابه
أخرجه الإمام أحمد رحمه الله بإسناد صحيح عن الصديق
رضي الله عنه
அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மக்கள்
செய்யும் பாவமான செயல்களை தடுக்கவில்லையானால் அல்லாஹ் தண்டனையை எல்லோருக்கும்
பொதுவாக்கி விடுவான்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அஹ்மத் )
حدثنا هاشم بن القاسم ، حدثنا زهير - يعني ابن معاوية - حدثنا إسماعيل
بن أبي خالد ، حدثنا قيس قال : قام أبو بكر ، - رضي الله عنه - ، فحمد الله وأثنى
عليه ، وقال : أيها الناس ، إنكم تقرؤون هذه الآية : ( يا أيها الذين آمنوا عليكم
أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ) إلى آخر الآية ، وإنكم
تضعونها على غير موضعها ،
وإني سمعت رسول الله - صلى الله عليه وسلم - قال
: " إن الناس إذا رأوا المنكر ولا يغيرونه أوشك الله ، عز وجل ، أن يعمهم
بعقابه
அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தும் போது “மக்களே! நீங்கள் “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்!
நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும்
செய்திடாது” எனும் ( அல்குர்ஆன்: 5: 105 ) இந்த வசனத்தை ஓதுகின்றீர்கள். ஆனால், அதற்கு தவறான
பொருளை அறிவிக்கின்றீர்கள்.
மக்கள் தீய செயல்கள் நடப்பதைக் கண்ணால் கண்ட பின்பும் அதைத் தடுக்க
முயற்சிப்பதில்லை. அநியாயக்காரன், அநீதி இழைப்பதைக் கண்டும் அவன் கரத்தைப் பிடித்து அதைத்
தடுப்பதில்லை என்றால் இத்தகைய நிலையில் அல்லாஹ் வேதனை தரும் தண்டனையை நல்லவர்,
கெட்டவர் அனைவரின் மீதும் விரைவில் இறக்கி விடுவான்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நற்செயல்கள் புரியுமாறு ஏவி, தீய செயல்களைத் தடுத்து
நிறுத்துவது உங்கள் மீது கடமையாகும்.
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில், அல்லாஹ்
உங்களில் மிகவும் கீழ்த்தரமான, கேடுகெட்ட நபர்களை உங்களுக்கு
ஆட்சியாளர்களாக ஆக்கிவிடுவான்.
அவர்கள் உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுப்பார்கள். துன்பங்களைத்
தருவார்கள். பின்னர், உங்களில் நல்லவர்கள் அக்கேடு கெட்டவர்களின் தீங்கிலிருந்து
பாதுகாத்திடுமாறு இறைவனிடம் பிரார்த்திப்பார்கள். ஆனால், அந்த
பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிக்க மாட்டான்” என மாநபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என
கூறினார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ )
சமூக
நீரோட்டத்தில் கலந்து தீமைக்கு எதிராக களம் காண்போம்..
அல்லாஹ்வின் வார்த்தையான அல்குர்ஆனும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களின் வார்த்தை, மற்றும் வாழ்க்கையான
ஸுன்னாவும் உலக முடிவு நாள் வரையிலான அனைத்து காலத்திலும் செயல்படுத்துவதற்கான
தெளிவான வாழ்க்கை வழிகாட்டியாகும்.
ஆனால், சில நபிமொழிகளை இந்த முஸ்லிம் உம்மத் குறுகிய வட்டத்தில் இருந்து கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவைகள் பரந்து விரிந்த
பல அம்சங்களைக் கொண்டிருப்பதாக அமைந்திருக்கின்றது.
உதாரணத்திற்கு...
1. தீமையைக் கரம்
கொண்டு தடுத்தல்...
عن أبي سعيد الخدري رضي
الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده ،
فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمان
அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்கவும், அடுத்து நாவால் தடுக்கவும், இவை இரண்டும் இயலா விட்டால் மனதளவில்
வெறுத்து விடட்டும்”, இது ஈமானின் பலஹீனமான நிலையாகும்” என்று நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்
)
இன்று உலகெங்கிலும் தீமைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. எங்கு
நோக்கினும் கொலை,
கொள்ளை, திருட்டு, போன்ற கொடிய
குற்றங்கள் புரிவோர் பெருகி விட்டனர்.
அதிலும்,
குறிப்பாக இந்தியாவில் 2011 –இல் மட்டும் 34,305 கொலைக் குற்றங்கள் உட்பட 62.5
லட்சம்
குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன.
ஆனால், எத்தனையோ சட்டங்கள் இருந்தும் குற்றங்களை குறைக்க முடியவில்லை.
குற்றவாளிகளை தண்டிக்க முடிவதில்லை. மட்டுப்படுத்த முடியவில்லை.
நன்மையை ஏவி,
தீமையைத் தடுக்க வேண்டும் என அல்லாஹ்வால் ஆணையிடப்பட்ட ஓர் சமூகம் இந்த நிலையைக்
கண்டு நபிகளார் {ஸல்} அவர்கள் கூறிய
மூன்றாம் நிலையிலேயே நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
தீமைகளை தடுக்கும் முதல் இரண்டு நிலைகளில் முஸ்லிம் சமூகம் இருக்குமானால்
உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக குற்றங்களை குறைத்து, குற்றவாளிகளுக்கு சரியான
தண்டனைகளை வழங்கி, குற்றங்கள் நிகழா வண்ணம் தடுக்க முடியும்.
ஆம்! கையால் தடுப்பது அல்லது நாவால் தடுப்பது இவ்விரண்டிற்கும் பொருள் தருகிற
ஹதீஸ் விரிவுரையாளர்கள் இவ்வாறு விளக்கம் தருகின்றார்கள்.
التغيير باليد للقادر عليه
إنكار المنكر بيده كولي الأمر ومن ينوب عنه ممن أعطي صلاحية لذلك،
அதாவது, அதற்கான முழு ஆற்றலையும் ஓர் முஸ்லிம் பெற்றவனாக இருக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி, நிர்வாகம் ( காவல்துறை மற்றும் சட்டத்துறை, நீதித்துறை
) ஆகியவற்றில் இல்லாததே இந்த ஹதீஸை அமல் செய்ய முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2013 –ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி இந்திய அளவில்
16 லட்சத்து 60 ஆயிரத்து 151 பேர்கள் காவல்துறையில் பணிபுரிகின்றனர். இதில்
முஸ்லிம்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேர். இது மொத்த சதவீதத்தில் 6 ஆகும்.
தமிழகத்தில் 0.76 சதவீத எண்ணிக்கையில் முஸ்லிம்கள் காவல்துறையில் இருக்கின்றனர்.
நீதித்துறையைப் பொறுத்த வரையில் இந்திய அளவில் 7.8 சதவிகித அளவில் தான் முஸ்லிம்களின் பங்களிப்பு
இருக்கிறது.
காவல்துறை அதிகாரி எனும் அதிகார வரம்பில் ஓர் முஸ்லிம் இருக்கும் பட்சத்தில், தைரியமாக குற்றவாளிகளை
கையால் அதிகாரத்தால் தடுக்க முடியும்.
நீதித்துறையின் அதிகார வரம்பை ஓர் முஸ்லிம் அடைந்திருக்கும் பட்சத்தில் வாயால்
தடுக்க முடியும். அதாவது, நீதிபதி எனும் இடத்தில் இருந்து இந்திய அரசுக்கு இஸ்லாமியச் சட்டங்களை
பரிந்துரைக்க ஓர் வாய்ப்பும், வழக்கறிஞர் எனும் இடத்தில்
இருந்து நேர்மையோடும், வாய்மையோடும் வாதாடி குற்றவாளிகளுக்கு
தகுந்த தண்டனையும் பெற்றுத்தர இயலும். மேலும், இந்தியாவில்
மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இயலும்.
மேலும், குர்ஆன், ஸுன்னாவைப் பின் பற்றிய பாக்கியம்
கிடைப்பதோடு நிறைவான பொருளாதார வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதில், இன்னொரு நன்மையையும் தன் சமூகத்திற்கு செய்ய இயலும். அதாவது இன்று
மேற்கூறிய இரு துறைகளாலும் முஸ்லிம் சமூகம் மிகப் பெரிய அளவிலான இன்னல்களைச்
சந்தித்து வருகின்றது.
இந்தியாவில் மொத்தம் உள்ள சிறைச்சாலைகளின் எண்ணிக்கை 1382. மொத்த கைதிகளின் எண்ணிக்கை
3,72,296. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21% ஆகும்.
இந்த 21 % முஸ்லிம் கைதிகள் காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்கள். நாளை
நீதிமன்றங்களின் நீதிபதிகள் யாரை வேண்டுமானாலும் எந்த நிரபராதிகளை வேண்டுமானாலும்
இவர்கள் சதிகாரர்கள் என்று கூறலாம். மரண தண்டனை தீர்ப்பு
வழங்கலாம்.
இன்று சட்டக்கல்வி விஷயத்தில் நம் சமூகத்தின் எண்ணம் தவறாக
இருக்கின்றது. பிராமணர்கள் அதிகம் பேர்
சட்டக்கல்வி
பயின்று பல உயர்நீதி மன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றங்களில் நீதிபதியாக அமர்ந்து நமது இறையில்லம் தொடர்பான வழக்கில் நமக்கு எதிராக
தீர்ப்புச் செய்து கொண்டிருக்கின்றனர்.
சிறைச்சாலைகளில்
உள்ள 21 சதவிகித முஸ்லிம்களில் மிகுதியானோர் அப்பாவிகள் என்று சொல்லித் தெரிய
வேண்டியதில்லை.
அப்பாவியான இவ்விளைஞர்களுக்காக
வாதாடி உண்மையை இவ்வுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்கள் அப்பாவிகள்
என்று நிருபிப்பதற்கு கூட போதிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் இல்லை.
எனவே, தற்போதைய இளைய தலைமுறையினர்க்கு சட்டம், ஒழுங்கு
(காவல்துறை) மற்றும் நீதித்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டக்கல்வி
மற்றும் ஐபிஎஸ் பயில ஊக்குவித்தும், சட்டம் பயின்றவர்கள், நீதிபதித் தேர்வுகளில் கலந்துக்கொள்ள வழிகாட்டுவதும் இன்றைய இஸ்லாமிய
சமூகத்தின் தலையாய கடமையாகும்.
அதிகாரத்தின் துணை கொண்டு தீமையான
கொள்கையை களைதல்…
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். காதிஸிய்யா யுத்தத்திற்காக காலித் பின் வலீத்
(ரலி) அவர்களின் தலைமையில் ஓர் படையை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.
காதிஸிய்யா போர் கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த போர் ஆகும். இதற்குப் பிறகு ஈராக் பகுதி முழுவதும் இஸ்லாமிய நிழலின் கீழ் வந்தது.
படை சென்ற பின்னர் ஒரு நாள் நகர் வலம் வந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் காதில் பேரிடியாய் வந்து
விழுந்தது அந்த வார்த்தைகள்.
ஏகத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் உரசிப்பார்ப்பதாய்
உணர்ந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.
ஆம்! மக்கள்
“காலித் இப்னு
வலீத் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுச்
சென்றிருக்கும் முஸ்லிம் படை நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்பும்” என்று பேசிக்கொண்டனர்.
”உடனடியாக அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையில் ஒரு கடிதத்தைக்
கொடுத்தனுப்பி இதை கொண்டு காதிஸிய்யாவிற்குச் செல்லுங்கள். அனைத்துப்படை வீரர்களுக்கு மத்தியில் இதைப்படித்துக் காட்டச் சொல்லுங்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைவீரர்களின் ஊடாகச் சென்ற அபூ உபைதா (ரலி) அவர்கள் தளபதி காலித் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஆட்சித்தலைவர் சொன்ன
விபரத்தைச் சொன்னார்கள்.
காலித் இப்னு வலீத் (ரலி) கடிதத்தைப் பிரித்தார்கள். படித்தார்கள். அதில் இடம் பெற்றிருந்த வாசகம் இதோ “ஆட்சித்தலைவர் உமர் அவர்களிடமிருந்து தளபதி மற்றும் படைவீரர்களுக்கு அஸ்ஸலாமு
அலைக்கும்…. இதோ இந்த நிமிடத்திலிருந்து காலித் (ரலி) படைத்தளபதி பொறுப்பிலிருந்து
நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அபூ உபைதா (ரலி) நியமிக்கப்படுகின்றார். இது அமீருல் முஃமினீன் அவர்களின் உத்தரவு!
உடனடியாக முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்பட்டனர்.
அதே படையில் ஒரு
வீரராக காலித் (ரலி) அவர்கள் பங்கு பெற்றார்கள்.
அபூ உபைதா (ரலி) அவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை
வெற்றியோடு மதீனா திரும்பியது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால்
“ஸைஃபுல்லாஹ்” என்று கண்ணியப்படுத்தப்பட்டுள்ளேன். ஆகவே, என்னை நீக்கம் செய்தது செல்லாது என்றோ, தனியாய் பிரிந்து சென்று வேறு அணியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பேன் என்றோ காலித்
அவர்கள் சூளுரைக்கவில்லை.
மாறாக, அதே யுத்தகளத்தில் சாதாரண ஒரு படை
வீரராகவே களம் கண்டார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.
பின்னாளில், ஒரு நாள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த
போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கலீஃபா அவர்களே! ”நான் எந்த ஒரு யுத்தகளத்திலும் இஸ்லாமிய யுத்த விதிகளை மீறியது கிடையாது. எந்த ஒரு மோசடியும் செய்தது கிடையாது. என் தலைமைப்பதவியை தவறாக
பயன்படுத்தியதும் கிடையாது. எல்லா நிலையிலும் நான் ஓர் உண்மை இறை
விசுவாசியாகவே நடந்து கொண்டிருக்கின்றேன்.
பின்னர் ஏன் நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள்
“என்னுடைய
தனிப்பெரும் நேசத்திற்கும், பாசத்திற்கும் உடையவர்கள் நீங்கள். எப்போதும் உங்கள் மீது நான் தனிப்பெரும் கண்ணியம் வைத்துள்ளேன். உங்களை மோசடியாளனாகவோ அல்லது வேறு எந்த சிந்தனைகொண்டவனாகவோ காணவில்லை.
மாறாக! அல்லாஹ்வை மட்டுமே நினைத்த இதயங்கள்! அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி கெஞ்சிய நாவுகள்! இப்பொது அதை உதறிவிட்டு காலித் போனால் வெற்றி,
அவர் தலைமை தான்
வெற்றிக்குரிய தலைமை என்று அல்லாஹ்வை மறந்து பேச எத்தனித்து விட்டனர்.
வேறு வழியில்லை உம்மை பதவியிலிருந்து இறக்கினால் தான் இம்மக்களுக்கு
அல்லாஹ்வின் உதவி ஞாபகம் வரும் என்பதற்காகத் தான் உம்மை பதவி நீக்கம் செய்தேன்” என்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்…. என்று கூறி முக மலர்ச்சியுடன்
அங்கிருந்து விடை பெற்றுச்சென்றார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.
(நூல்: குலஃபாவுர்ரஸூல் {ஸல்}, பக்கம்:186-187)
ஆகவே, தீமைக்கு எதிரான போராட்டத்தை தம் வீட்டிலிருந்தே, தம் குடும்பத்திலிருந்தே துவங்கிட வேண்டும்.
இறை நம்பிக்கையின்
ஒரு சிறு அணுவளவையேனும் தன்னுள் கொண்ட மனிதன் தீமைக்கு எதிராக போராட முன் வர
வேண்டும்.
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக, சடங்கு
சம்பிரதாயங்களுக்கு எதிராக, வரதட்சணை,
வட்டி, அநாச்சாரங்கள் போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி, அல்லாஹ் சொல்வது போன்ற “நடுநிலைச் சமுதாயமாக”
மாற்றிட முஸ்லிம் உம்மத் பொறுப்பேற்றிட வேண்டும்.
அல்லாஹ் தீமைக்கு
எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடும் மேன்மக்களாக நம் எல்லோரையும்
ஆக்கியருள்வானாக!
தீமைக்கு எதிரான போராட்டத்தில்
நம்மை ஈடுபடுத்தி, இஸ்லாத்தின்
வளர்ச்சிக்கும்,
ஏகத்துவ எழுச்சிக்கும் உதவியாளர்களாய் வாழ்ந்திடும்
நற்பேற்றினை தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment