Tuesday, 4 June 2019

ஈதுல் ஃபித்ர் – ஈகைத் திருநாள் சிந்தனை, 2019 வாழ வைத்து வாழ்வோம்!!!


ஈதுல் ஃபித்ர்ஈகைத் திருநாள் சிந்தனை, 2019
வாழ வைத்து வாழ்வோம்!!!


 உலகில் பல்வேறு சமயங்கள், அந்த சமயங்களைத் தழுவியவர்களுக்கெனெ பண்டிகைத் தினங்கள்.

அந்த தினங்களில் கோலாகல கொண்டாட்டங்கள், விருந்து வைபவங்கள், வாண வேடிக்கைகள் என அந்தந்த சமய மக்களால் கொண்டாடப்படுகின்றது.

இஸ்லாம் படைத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட, மனித சமூகத்திற்காக இறைவனால் வழங்கப்பட்டிருக்கிற உயர்வான மார்க்கம்.

இந்த மார்க்கத்தைத் தழுவியவர்களான முஸ்லிம் சமூகம், இவர்களுக்கென இரு பண்டிகை தினங்கள்.

ஒன்று, ஈதுல் ஃபித்ர்ஈகைத்திருநாள், 30 நாட்கள் நோன்பு நோற்று, வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு, இறையச்சத்தைப் பெற காத்து, தவமிருக்கும் ஓர் சமூகத்தை மகிழ்ச்சி படுத்த, புத்துணர்ச்சியூட்ட வழங்கப்பட்டிருக்கும் மகத்தான பண்டிகை நாள்.

இன்னொன்று, ஈதுல் அள்ஹாதியாகத் திருநாள், இறை ஆலயமாம் கஅபாவை ஹஜ் செய்வதன் மூலமும், முன்மாதிரி முதல் முஸ்லிம் இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தும் இறை திருமுன் எல்லாவற்றையும் அர்ப்பணிக்க காத்து நிற்கும் ஓர் சமூகத்தை சந்தோஷப் படுத்திட, அர்ப்பணிக்கத் தூண்டிட எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கிற மகோன்னதமான பண்டிகைத் திருநாள்.

இந்த இரு பண்டிகை நாட்களும் படைத்த இறைவனோடும், படைப்புகளோடும்
 நெருக்கத்தை, தொடர்பை வலுப்படுத்த வழங்கப்பட்டிருக்கும் மகத்தான நாட்களாகும்.

இதில் நாம் ஈதுல் ஃபித்ர்ஈகைத் திருநாளில் அவனுக்கு பிடித்தமான அவனுடைய ஆலயத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவு படுத்தி ஈகைத் திருநாள் நமக்குச் சொல்ல வருகிற சிந்தனையைப் பெற அமர்ந்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நாள் போன்ற மகிழ்ச்சியும், ஈகையும் நிறைந்த பல ஈதுத் திருநாட்களைத் தந்து ஈகையோடும், பிறருக்கு ஈந்தளிக்கிற நற்பேற்றோடும் வாழ்கிற நல்ல நஸீபை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! நம்மையும், நம் மனைவி, மக்கள் நம் குடும்பத்தார்கள் அனைவரையும் தீனுக்காக கபூல் செய்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

ஈகை இந்த உலகில் நம்மோடு இணைந்து வாழும் சக படைப்புகளோடும், சக மனிதர்களோடும், சக முஸ்லிகளோடும் கடைபிடிக்கப்பட வேண்டும் என இஸ்லாம் தூண்டுகின்றது.

ஈகையை, பிறருக்கு ஈந்தளித்து வாழ்வதன் முக்கியத்துவத்தை இஸ்லாம் இந்த உலகில் கூறியது போன்று வேறெந்த சமயங்களும், சித்தாந்தங்களும் ஒரு போதும் கூறியது கிடையாது.

ஈகை நம்மை உணரவும், நல்ல மனிதனாக, மனிதரில் புனிதனாகவும் மாற்றச் செய்கிற மகத்தான சாதனமாகும்.

நாம் வாழ்வதோடல்லாமல் சக மனிதர்களையும், சக உயிரினங்களையும், வாழ வழியின்றி விக்கித்து நிற்கின்ற சக ஏழை முஸ்லிம்களையும் வாழ வைப்பதே ஈகையின், ஈகைத் திருநாளை நமக்கு அளித்த இறைவனின் நோக்கமாகும்.

எனவே, இந்த ஈகைத் திருநாளில் வாழ வைத்து வாழ்வோம்என சபதமேற்போம்!

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1) فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (2) وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (3)

மறுமையில் நற்கூலி - தண்டனை கொடுக்கப்படுவதை பொய்யென்று சொல்பவனை (நபியே) நீர் பார்த்திருக்கிறீரா?அவன் தான் அநாதையை விரட்டுகின்றான்; மேலும், வறியவரின் நிலை கண்டு உணவளிக்கும் படி (யாரையும்) அவன் தூண்டுவதில்லை.                                  ( அல்குர் ஆன் 107: 1-3 )

உலக சமயங்களில் இஸ்லாம் மாத்திரமே வறிய ஒருவரின் நிலை கண்டு அவர் துயர் துடைக்க தூண்டாதவரைக் கூட குற்றவாளி எனக் கூறுகிறது எனில், சமூக தேவையில் ஒரு முஸ்லிம் எத்தகைய பண்புகளோடு நடந்து கொள்ள வெண்டும் என இஸ்லாம் விரும்புகிறது என்பதை மேற்கூறிய இறை வசனம் உணர்த்துகிறது.


அந்த நபித்தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது எல்லையில்லா அன்பும், காதலும் கொண்டவர்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகைக்காக எழும் முன்பாக அவர் எழுவார்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுய தேவைக்கான மற்றும் உளூவிற்கான நீரை தயாராக வைத்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு முன்பாக ஒவ்வொரு நாளும் காத்து நிற்பார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுந்து வந்து அவரிடம் இருந்து நீரை வாங்கி சுய தேவைகளை நிறைவேற்றி, உளூ செய்து தொழச் சென்று விடுவார்கள்.

அன்று வழக்கத்துக்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு பனிக்காற்று ஜில்லென்று வீசிக்கொண்டிருக்கின்றது.

குளிர் காற்றை உள்வாங்கியவர்களாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டு கதவை திறக்கின்றார்கள். வெளியே, நடுங்கியவாறு நின்று கொண்டிருக்கின்றார் அந்த நபித்தோழர்.

கடுமையான குளிர், குளிர் காற்று, பனிப்பொழிவு இவைகளுக்கு மத்தியில் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு வந்து பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரங்களில் கொடுத்தார் அவர்.

இதுநாள் வரை அவர் செய்த உபகாரங்களையெல்லாம் விட அன்று, அப்பொழுது அவர் செய்த அந்த உபகாரம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மகிழ்ச்சியுறச் செய்தது.

இப்படியும் சொல்லலாம், பனிக்காற்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலை குளிரச் செய்தது என்றால், அவர் செய்த அந்த உபகாரம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனதை குளிரச் செய்தது.

தொழுது முடித்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நபித்தோழருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

அந்த நபித்தோழர் அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்தவர், தம் சமூக மக்களோடு தூரத்து பகுதியில் இருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட அன்பினாலும், காதலினாலும் தம் சமூகத்தாரோடு மீண்டும் தம் பகுதிக்குச் சென்று விடாமல் மதீனாவிலேயே மஸ்ஜிதுன் நபவீயின் ஒரு ஓரத்திலே தம் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டவர்.

அவருக்கென்று தாய் வழியிலோ, தந்தை வழியிலோ எவ்வித உறவுகளும் கிடையாது. மதீனா அன்ஸாரிகளுக்கும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் பணிவிடை செய்து கிடைக்கிற உணவை உண்டும் மஸ்ஜிதுன் நபவீயில் உறங்கியும் வாழ்வைக் கழித்து வந்தார்.

சுருங்கச் சொன்னால், மஸ்ஜிதுன் நபவீயை முகவரியாகவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், நபியவர்களின் குடும்பத்தாரையும், தனது குடும்பமாகவும், ஸஹாபாக்களை உறவினர்களாகவும், திண்ணைத் தோழர்களை நண்பர்களாகவும், எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த அவர் தான் ரபீஅத்துல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு உதவிட வேண்டும் என எண்ணினார்கள்.

عن رَبِيعَة بْن كَعْبٍ الْأَسْلَمِيُّ رضي الله عنه قَالَ : " كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ ، فَقَالَ لِي : سَلْ ، فَقُلْتُ : أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ ، قَالَ : أَوْ غَيْرَ ذَلِكَ ، قُلْتُ : هُوَ ذَاكَ ، قَالَ : فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ ) رواه مسلم في " صحيحه " (489) .
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீஆ அவர்களை தமக்கு அருகே வருமாறு அழைத்தார்கள்.

வந்தவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகே வந்து நின்றார்.

ரபீஆவே உமக்கு என்ன வேண்டும் கேள்? என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கின்றார்கள். ரபீஆவிடம் இருந்து மௌனமே பதிலாக வந்தது.

ரபீஆ உமக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்பீராக? இரண்டாவதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, முன்பு போல் மௌனமாக நின்றார் ரபீஆ.

ரபீஆ உமக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் நீர் எம்மிடம் கேட்பீராக? இது மூன்றாவது முறை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து, இப்போது மெல்ல வாய் திறந்த ரபீஆ பணிவான குரலில் அல்லாஹ்வின் தூதரே! உங்களோடு சுவனத்தில் இணைந்து வாழும் நற்பேறு வேண்டும்? எனக்கு நீங்கள் வழங்குவீர்களா?” என்று கேட்டார்.

ரபீஆவே! ஸுஜூத் செய்வதை( தொழுகையை ) நிலையாக கடைபிடித்து வருவீராக! உமக்கு சுவனத்திலும் எம்மோடு இணைந்திருக்கும் நற்பேறு கிடைக்கும் என சோபனம் சொன்னார்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

வாழ்க்கைச் சூழலில் தான் அவர் ஏழையாகவே வாழ்ந்திருக்கின்றாரே தவிர, உள்ளத்தளவில் உயர்ந்து நின்றார் ரபீஆ அல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நிகழ்வின் பின்னர் ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தினார்கள்.

عن ربيعة بن كعب الأسلمي ـ رضي الله عنه ـ قال
  كنت أخدم رسول الله ـ صلى الله عليه وسلم ـ، فقال لي: يا ربيعة ألا تزوج؟، قال: قلت: والله، يا رسول الله، ما أريد أن أتزوج، ما عندي ما يقيم المرأة، وما أحب أن يشغلني عنك شيء، فأعرض عني، فخدمته ما خدمته، ثم قال لي الثانية: يا ربيعة، ألا تزوج؟، فقلت: ما أريد أن أتزوج، ما عندي ما يقيم المرأة، وما أحب أن يشغلني عنك شيء، فأعرض عني، ثم رجعت إلى نفسي، فقلت: والله، لرسول الله ـ صلى الله عليه وسلم ـ بما يصلحني في الدنيا والآخرة أعلم مني، والله، لئن قال: تزوج، لأقولن: نعم يا رسول الله، مرني بما شئت .
قال: فقال: يا ربيعة، ألا تزوج؟، فقلت: بلى، مرني بما شئت، قال: انطلق إلى آل فلان، حي من الأنصار، وكان فيهم تراخ عن النبي ـ صلى الله عليه وسلم ـ، فقل لهم: إن رسول الله ـ صلى الله عليه وسلم ـ أرسلني إليكم، يأمركم أن تزوجوني فلانة، لامرأة منهم، فذهبت، فقلت لهم: إن رسول الله ـ صلى الله عليه وسلم ـ أرسلني إليكم، يأمركم أن تزوجوني فلانة، فقالوا: مرحبا برسول الله، وبرسول رسول الله ـ صلى الله عليه وسلم ـ، والله، لا يرجع رسولُ رسولَ الله ـ صلى الله عليه وسلم ـ إلا بحاجته، فزوجوني وألطفوني، وما سألوني البينة .
فرجعت إلى رسول الله ـ صلى الله عليه وسلم ـ حزيناً، فقال لي: ما لك يا ربيعة؟، فقلت: يا رسول الله، أتيت قوما كراما، فزوجوني وأكرموني وألطفوني، وما سألوني بينة، وليس عندي صداق، فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: يا بريدة الأسلمي، اجمعوا له وزن نواة من ذهب، قال: فجمعوا لي وزن نواة من ذهب، فأخذت ما جمعوا لي، فأتيت به النبي ـ صلى الله عليه وسلم ـ فقال: اذهب بهذا إليهم، فقل: هذا صداقها، فأتيتهم، فقلت: هذا صداقها، فرضوه وقبلوه، وقالوا: كثير طيب .
قال: ثم رجعت إلى النبي ـ صلى الله عليه وسلم ـ حزيناً، فقال: يا ربيعة، ما لك حزين؟، فقلت: يا رسول الله، ما رأيت قوما أكرم منهم، رضوا بما آتيتهم، وأحسنوا، وقالوا: كثيراً طيباً، وليس عندي ما أولم، قال: يا بريدة، اجمعوا له شاة، قال: فجمعوا لي كبشا عظيما سمينا، فقال لي رسول الله ـ صلى الله عليه وسلم ـ: اذهب إلى عائشة، فقل لها: فلتبعث بالمكتل الذي فيه الطعام، قال: فأتيتها، فقلت لها ما أمرني به رسول الله ـ صلى الله عليه وسلم ـ، فقالت: هذا المكتل فيه تسع آصع شعير، لا والله، إن أصبح لنا طعام غيره، خذه، فأخذته، فأتيت به النبي ـ صلى الله عليه وسلم ـ وأخبرته بما قالت عائشة، فقال: اذهب بهذا إليهم، فقل: ليصبح هذا عندكم خبزاً، فذهبت إليهم، وذهبت بالكبش، ومعي أناس من أسلم، فقال: ليصبح هذا عندكم خبزا، وهذا طبيخا، فقالوا: أما الخبز فسنكفيكموه، وأما الكبش فاكفونا أنتم، فأخذنا الكبش، أنا وأناس من أسلم، فذبحناه وسلخناه وطبخناه، فأصبح عندنا خبز ولحم، فأولمت، ودعوت رسول الله ـ صلى الله عليه وسلم ـ فَأَجَابَنِي  ) رواه أحمد .

ஒரு நாள் ரபீஆவை அருகே அழைத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன ரபீஆ திருமணம் செய்து கொள்ளவில்லையா?எனக் கேட்டார்கள். மௌனத்தை பதிலாகத் தந்தார் ரபீஆ.

இன்னொரு நாள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதே கேள்வியை கேட்கிறார்கள். சிரிப்பையும், ஏக்கப்பார்வையையும் பதிலாக தந்து விட்டு செல்கிறார்கள் ரபீஆ.

மூன்றாவது முறையாக மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதே கேள்வியை கேட்டபோது, இம்முறை ரபீஆ (ரலி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மஸ்ஜிதுந் நபவீயின் திண்ணையில் படுத்துறங்கும் இந்த ஏழைக்கு யார் பெண் தருவார்? எனக் கேட்டார்.

உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வீட்டின் முகவரியை கொடுத்து அந்த வீட்டில் உள்ளவரிடம் நான் உனக்கு பெண் கேட்டதாகச் சொல்லவும் எனக் கூறி அனுப்பினார்கள்.

அந்த முகவரியில் உள்ளவரிடம் சென்று மாநபியின் விருப்பத்தை தெரியப்படுத்திய போது, முதலில் யோசித்த அக்குடும்பத்தினர் பெண் கேட்டு அனுப்பியதும், பெண் கொடுக்குமாறும் கூறுவதும் அல்லாஹ்வின் தூதரல்லவா? எனவே ரபீஆவிற்கு பெண் கொடுக்க முன் வந்தனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டு தனது அடுத்த கவலையை தெரிவித்தார் ரபிஆ (ரலி) ஆம்! பெண் தயார். ஆனால், மஹர் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையே என்றார்.

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புரைதத்துல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு என்கிற நபித்தோழரை அழைத்து மஹர் வழங்க ஏதாவது ஏற்பாடு செய்வீராக! என்று கட்டளை பிறப்பித்தார்கள். பேரீத்தங் கொட்டை அளவிலான தங்கத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டு வந்தார்.

அடுத்து, வலீமா கொடுக்க வேண்டுமே? என்ன செய்ய என்றார். மீண்டும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புரைதத்துல் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து வலீமா விருந்து கொடுக்க ஏதாவது ஏற்பாடு செய்வீராக! என்று கட்டளை பிறப்பித்தார்கள். சிறிது நேரத்தில் கொழுத்த ஆட்டை ஏற்பாடு செய்து கொண்டு வந்தார்.

அடுத்து, குடும்பம் நடத்த வீடு வேண்டுமே, என்ன செய்வேன்! அல்லாஹ்வின் தூதரே! என்றார். மாநபி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டகுமுஸ்ல் ஒரு சிறு நிலம் இருந்தது.அதை ரபீஆவிடம் தந்தார்கள்.

பின்பு, ரபீஆவின் தூரத்து உறவினர்களையும், நபித்தோழர்களையும் ரபீஆவிற்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்கள். பேரீத்தங்கூரை வேயப்பட்டு வீடு தயார் ஆனது.

அடுத்து வீட்டுக்கு தேவையான சில பாத்திரங்கள், சில மளிகை சாதனங்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களும், நபித்தோழர்களும் ரபீஆ அவர்களுக்கு ஒரு நிரந்தர முகவரியை ஏற்படுத்தி கொடுத்தனர்.

இறுதியாக, அபூபக்ர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணத்திற்கு பின் உண்டான வாழ்க்கை வசதிகளுக்காக தங்களின் விவசாய நிலத்தில் சிறு பகுதியை விவசாயம் செய்வதற்காக ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கினார்கள்.               ( நூல்: இஸ்தீஆப்: பாகம்:1 பக்கம்: 270 )

மதீனாவில் நேற்று வரை அவருக்கென்று யாரும் இல்லை. எதுவுல் இல்லை. ஆனால், இப்போது அவருக்கென்று ஒரு மனைவி, அவரின் சுக, துக்கத்தில் பங்கெடுக்க அவருக்கென்று ஒரு குடும்பம், அவருக்கென்று வீடு, வாசல், சொத்து இப்போது ரபீஅத்துல் அஸ்லமீ சமூகத்தில் மதிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான மனிதர் ஆவார்.

நாம் வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல, நம்மால் இந்த உலகில் ஒருவராவது வாழ வேண்டும்.

நீங்கள் தனி நபராக இதைச் செய்ய வேண்டும் என்றில்லை, ஒரு குடும்பமாக, ஒரு அமைப்பாக, ஒரு குழுவாக இந்த மகத்தான சேவையைச் செய்யலாம்.

இன்றைய நம் சமூக முற்றத்தில் இப்படியான எத்தனையோ ரபீஆக்கள் உலவிக் கொண்டுதானிருக்கிறனர்.

வாருங்கள் வாழ்க்கை கொடுப்போம்! வாழ வைத்து வாழ்வாங்கு வாழ்வோம்!! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த ஈகைத் திருநாளில் நம் அனைவருக்கும் சக மனிதர்களோடும், சக முஸ்லிம்களோடும், சக உயிரினங்களோடும் ஈகையோடும், நேயத்தோடும் காலமெல்லாம் வாழ்கிற நல்ல நஸீபை தந்தருள்வானாக!!

ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

மஸாபீஹுல் மிஹ்ராபின் வருகையாளர்களான அனைத்து உலமாக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஈதுல் ஃபித்ர் – ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

6 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் அருமை ஒரு வரலாற்றை நினைவு படுத்தி நல்ல கருத்தை தந்து ஆலிம் அவர்களுக்கு அல்நிலாஹ்றை நிறைவான நற்கூலியை வழங்குவானாக. ஆமீன்

    ReplyDelete
  2. ALHAMTHULILLAH MASHAA ALLAH BARAKKALLAH

    ReplyDelete
  3. ماشاء الله بارك الله في علمكم

    ReplyDelete