Thursday, 2 January 2020

இந்த உம்மத்தின் இரு கண்கள்!!!


இந்த உம்மத்தின் இரு கண்கள்!!!



கடந்த 29/12/2019 சனிக்கிழமையன்று தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் சமுதாயத்தின் முதுகெலும்புகளான உலமாக்களுக்கும், சமுதாயத்தின் அஸ்திவாரங்களான உமராக்களுக்கும் திண்டுக்கல் மாநகரில் ஒரு நாள் மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்

உலமாக்களுக்கும், உமராக்களுக்களுக்கும் தனித்தனி அமர்வுகளாக நடத்தப்பட்ட இம்மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களும், உமராக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

தேசத்தில் பல்வேறு பிரச்சனைகளை முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இம்மாநாடு நடைபெற்றது கவனிக்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.

உமராக்களுக்கான அமர்வில் சமகாலத்தின் முஸ்லிம் சமூகத்தின் தேவைகள், அதில் ஜமாஅத்துகளின் பங்களிப்புகள் எதிர்காலத்தின் திட்டங்கள் அதற்கான ஏற்பாடுகள் என பல்வேறு தலைப்புகளில் தலைசிறந்த உலமாக்களால் சிறப்பு சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.

இறுதியில் உமராக்களுக்கான மாநாட்டு செய்தியாகநிர்வாகத்தின் செயல்பாடுகள் என்பது பள்ளிவாசல் பாராமரிப்பு என்பதோடு நின்று விடாமல், மஹல்லாவின் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கானதாக இருக்க வேண்டும் என்றும், மஹல்லா முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் உயர்வு தாழ்வு குறித்து நாளை மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்கிற உணர்வோடு செயல்பட வேண்டும் என்றும், மஹல்லாவில் நிர்வாக ரீதியாக ஏற்படுகிற பிரச்சனைகளின் போது சகோதரத்துவ சிந்தனையோடு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்றும்வலியுறுத்தி சொல்லப்பட்டது.

உலமாக்களுக்கான அமர்வில் சமகாலத்தின் முஸ்லிம் உம்மத்தின் தேவைகள், அதில் உலமாக்களின் பங்களிப்புகள் எதிர்காலத்தின் செயல் திட்டங்கள் அதற்கான முன்னேற்பாடுகள் என பல்வேறு தலைப்புகளில் தலைசிறந்த உலமாக்களால் சிறப்பு சொற்பொழிவுகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

இறுதியில் உமலமாக்களுக்கான மாநாட்டு செய்தியாகஇமாமத் பணியின் செயல்பாடுகள் என்பது மிஹ்ராபோடு நின்று விடாமல் மஹல்லா பெண்களின் மார்க்க கல்வி, மார்க்க அறிவுத்தேடல் குறித்தும், மஹல்லா இளைஞர்களின் மார்க்கப் பற்று, மார்க்க விளக்க ஞானம் குறித்தும், மஹல்லா சிறார்களின் ஆரம்ப இஸ்லாமிய அறிவு, குர்ஆன் ஓதுதல் குறித்தும் புதிய, புதிய முறைகளில் திட்டங்களை செயல்படுத்த தகுந்த ஆலோசனைகளை நிர்வாகத்தின், உமராக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது.

மிஹ்ராபில் நின்று ஆற்றுகிற உரை மஹல்லாவாசிகளை எக்காரணத்தைக் கொண்டும், எக்காலத்திலும் பிரிவினைகளையும், வெறுப்புக்களையும் விதைத்து விடாமல் இருக்கும் படி அமைத்துக் கொள்வது, பல்வேறு கருத்துக்களை கொண்ட அனைவரையும் அரவணைக்கும் படியும் அமைத்துக் கொண்டு மஹல்லாவாசிகளை நன்மையான காரியங்களில் முனைப்போடு ஈடுபடுகிற வகையில் அழகிய முறையில் வழிநடத்த வேண்டும் என்றும்வலியுறுத்தி சொல்லப்பட்டது.

மாநாட்டின் நிறைவாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் இயற்றப்பட்டு தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், மௌலானா, அல்ஹாஜ் காஜா முயீனுத்தீன் பாகவி ஹள்ரத் அவர்களால் தக்பீர் முழக்கத்துடன் பிரகடனப்படுத்தப் பட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த மாநாட்டையும், அந்த மாநாட்டில் பங்கெடுத்தவர்களையும் கபூல் செய்தருள்வானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

உலமாக்கள் & உமராக்கள்

ஒரு மனிதனுக்கு இரு கண்கள் எவ்வளவு முக்கியமோ, ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் எவ்வளவு முக்கியமோ அது போன்றே ஒரு சமூகத்திற்கு அறிவு படைத்த உலமாக்களின் வழிகாட்டுதலும், அதிகாரம் படைத்த தலைமையும் மிக முக்கியமாகும்.

அறிவு படைத்த உலமாக்களின் வழிகாட்டுதலை கொண்டிருக்கிற ஒரு சமூகம் அதிகாரம் படைத்த தலைமையை பெற்றிருக்கவில்லையென்றாலும், அதிகாரம் படைத்த தலைமையைப் பெற்றிருக்கிற ஒரு சமூகம் அறிவு படைத்த உலமாக்களின் வழிகாட்டுதலை கொண்டிருக்கவில்லையென்றாலும் அந்த சமூகம் அடைகிற இழப்புகள் என்பது ஈடுசெய்ய முடியாதவையாகும்.

முஸ்லிம் உம்மத்  இந்த இரண்டு அம்சங்களையும் வலிமையோடு வைத்திருந்த காலத்தில் இந்த உலகத்திற்கே வழிகாட்டியாய், பேரொளியாய் இலங்கியது என்கிற வரலாற்றை வாகாய் பதிவு செய்திருந்தது.

உலமாக்கள் & உமராக்கள் எனும் இரு கண்கள்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப் படியுங்கள்”.                                                  ( அல்குர்ஆன்: 4: 59 )

فسر الإمام الشافعي أولي الأمر بأنهم العلماء والأمراء ، العلماء يعلمون الأمر والأمراء ينفذون الأمر .

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற பெரும்பாலான அறிஞர் பெருமக்களும் குறிப்பாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும்உலுல் அம்ர்என்கிற வார்த்தைக்குஆலிம்கள், தலைவர்கள்என்றே பொருள் கொள்கின்றார்கள்.

" صنفان من أمتي إذا صلحوا صلح الناس ، وإذا فسدوا فسد الناس ، الأمراء والعلماء " وفي رواية ثانية : " صنفان من أمتي إذا صلحوا صلحت الأمة ، الأمراء والفقهاء " .
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “என் உம்மத்தில் இரண்டு வகையினர் இருக்கின்றார்கள். அவர்கள் நன்றாக இருந்தால் என் உம்மத் நன்றாகி விடுவார்கள். அவர்கள் கெட்டுப்போனால் என் உம்மத்தும் கெட்டுப் போய் விடுவார்கள், அவர்கள் தான்அதிகாரம் படைத்த தலைவர்கள், அறிவு படைத்த ஆலிம்கள்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( குறிப்பு: இமாம் அபூ நயீம் (ரஹ்) அவர்கள் ஹுல்யத்துல் அவ்லியா எனும் நூலில் பதிவு செய்திருக்கிற இந்த நபிமொழியை இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்க்கலானீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் தொடரில் இடம் பெற்றுள்ள ஒரு ராவீயை அடிப்படையாகக் கொண்டுளயீஃப்தரத்திலானது என்று கூறுகின்றார்கள்.

في سنن أبي داوود عن عائشة قالت: قال رسول الله صلى الله عليه وسلم:« إذا أراد الله بالأمير خيرا جعل له وزير صدق إن نسى ذكره وإن ذكر أعانه وإذا أراد الله به غير ذلك جعل له وزير سوء إن نسى لم يذكره وإن ذكر لم يعنه ».قال النووي :رواه أَبُو داود بإسنادٍ جيدٍ عَلَى شرط مسلم .
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் ஒரு தலைவருக்கு நலவை நாடிவிட்டான் என்றால் அவருக்கு நெருக்கமானவராக ஒரு உண்மையாளரை ஆக்கிவிடுவான். அந்த தலைவர் சமூகத்தின் மீதான கடமைகளை மறந்து விடும் போது அவருக்கு நினைவூட்டுவார். அந்த தலைவர் ஏதேனும் ஒரு காரியத்தில் உதவிடுமாறு கோரினால் (ஓடோடிச் சென்று) உதவிடுவார். இதே போன்று அல்லாஹ் ஒரு தலைவருக்கு கெடுதியை நாடிவிட்டான் என்றால் அவருக்கு கெட்டவன் ஒருவனை நெருக்கமானவராக ஆக்கிவிடுவான். அந்த தலைவர் சமூகக் கடமைகளை மறந்து செயல்படும் போது நினைவு படுத்தவும் மாட்டான். உதவி நாடி நின்றால் உதவியும் புரிய மாட்டான்என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                         ( நூல்: அபூதாவூத் )

இந்த ஹதீஸிற்கு விரிவுரை தரும் அறிஞர் பெருமக்கள்ஒரு தலைவர் எப்போதும் ஆலிமின் நெருக்கத்திலும், தொடர்பிலும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் சமூகத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றிட உதவியாக அந்த ஆலிம் இருப்பார் என்றும், ஆலிமை விட்டும் ஒரு தலைவர் விலகிச் சென்று விடுகிறார் என்றால் சமூகத்தில் நல்ல விளைவுகளை காண முடியாமல் போய்விடும் என்று விளக்கம் தருகின்றனர்.

பிரித்துப்பார்க்க முடியாத இரண்டு பக்கங்கள்

அறிவு படைத்தவர்களின் வழிகாட்டுதலும், அதிகாரம் படைத்தவர்களின் தலைமையும் பிரித்துப் பார்க்கவே முடியாத மகத்தான இரு அம்சங்கள் என அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எடுத்தியம்புகின்றான்.

பனூஇஸ்ரவேலர்களின் பல்வேறு காலகட்ட வரலாற்று நிகழ்வுகளை கோடிட்டு காட்டும் அல்லாஹ் அல்பகரா அத்தியாயத்தின் 246 –ஆவது வசனம் முதல் 252 –ஆவது வசனம் வரை பனூஇஸ்ரவேலர்களின் சோதனையான காலமொன்றையும், அதில் இருந்து அந்த சமூகம் மீண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி வாகை சூடியதை நினைவு படுத்துகின்றான்.

ஜாலூத் என்கிற என்கிற அரசன் பெரும்பான்மை சமூகத்தின் பிரதிநிதியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து கொண்டிருந்த பனூஇஸ்ரவேலர்களின் மீது எண்ணிலடங்கா கொடுமைகளை இழைத்துக் கொண்டிருந்தான்.

இந்த நேரத்தில் நபி ஸம்வீல் {அலை} என்கிற அறிவு படைத்த வழிகாட்டுதலையும், தாலூத் என்கிற அதிகாரம் படைத்த தலைமையையும் பெற்றிருந்த சிறுபான்மை சமூகமான பனூஇஸ்ரவேலர்கள் ஜாலூத்தைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றதாக அல்லாஹ்வே சிலாகித்துக் கூறுகின்றான்.

எத்தனையோ சின்னஞ்சிறு கூட்டம் அல்லாஹ்வின் உதவி கொண்டு பெரும் பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கின்றது”.           ( அல்குர்ஆன்: 2: 249 )

அறிவும், அதிகாரமும்

அதிகாரமும், அறிவும் பல நேரங்களில் ஒன்று இன்னொன்றைச் சார்ந்தே இருக்கும் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

யாரும் எளிதில் நுழைய முடியாத அரண்மனை. அதுவும் நாடாளும் அரசியின் அறை. கதவுகள் உடைக்கப்படவில்லை. ஜன்னல்கள் திறக்கப்படவில்லை. எந்தக் காவலாளியும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.

ஆனாலும், சீலிடப்பட்ட ஒரு கடிதம் தன் அறையில் தமக்கு முன்பாக இருப்பதை பார்த்த அந்த அரசி திடுக்கிட்டே போகின்றார்.

தனக்கும், தன் நாட்டிற்கும் ஏதோ ஆபத்து உருவாகியுள்ளதாக தன் உள்ளுணர்வு தூண்டிய போது உடனடியாக அந்த அரசி நிதானத்திற்கு வந்து அடுத்த கட்ட நகர்விற்கு வந்தார்.

ஆம்! ஸபா நாட்டு அரசி தம் அரசவையின் அறிவுஜீவிகளான மந்திரிப் பிரதானிகளை உடனடியாக ஒன்று கூடுமாறு ஆணையிட்டார்.

அதன் பின்னர் நடந்தவைகளை அல்லாஹ்வே அந்நம்லு அத்தியாயம் 29 முதல் 35 வரையிலான வசனங்களின் ஊடாக கூறுகின்றான்.

அதிகாரம் படைத்த தலைமை பல நேரங்களில் அறிவு பெற்ற உலமாக்களின் வழிகாட்டுதலை சார்ந்து நிற்கும். அப்படி நிற்கிற போது மிகச்சரியான வழிகாட்டலை உலமாக்கள் வழங்கினார்கள் என்றால் அந்தச் சமூகம் மிகப்பெரிய பலனைப் பெரும்.

பத்ர் மற்றும் அஹ்ஸாப் இந்த இரண்டு யுத்தங்களும் முஸ்லிம் சமூகத்திற்கு நெருக்கடியான காலகட்டத்தில் நடைபெற்ற யுத்தமாகும்.

பத்ர் யுத்தத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அஹ்ஸாப் யுத்தத்தில் எதிரிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு முஸ்லிம்களை அழித்தொழிக்க துணிந்தது.

உலகின் எல்லா அறிவுகளையும் பெற்றிருந்த மாநபி {ஸல்} அவர்கள், இந்த உம்மத்தை அழகிய வழிகாட்டலோடு அழைத்துச் சென்ற அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அதிகாரம் படைத்த முஹாஜிர்களின், அன்ஸாரிகளின் தலைமையை அணுகி எதிரிகளை எவ்வாறு எதிர் கொள்வது என ஆலோசனைக் கேட்டார்கள்.

இறுதியில் அல்லாஹ் இரண்டு யுத்தங்களிலும் மகத்தான வெற்றியை வழங்கினான் என்பது வரலாறு.

ஆகவே, உலமாக்களும் உமராக்களும் எங்கே இணைந்து இரண்டறக்கலந்து மஹல்லாவை, ஜமாஅத்தை, சமூகத்தை வலிமை படுத்தி வழிநடத்துகின்றார்களோ உண்மையில், அந்த மஹல்லா, அந்த ஜமாஅத், அந்த சமூகம் அசைக்க முடியாத, எந்த தீய சக்தியாலும் பிரிக்க முடியாத சமூகமாக திகழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் மூலம் உணர முடிகின்றது.

பல ஜமாஅத் இருக்கக் கூடாதா? பல தலைவர்கள் இருக்கக் கூடாதா?

ஏன்? முஸ்லிம் சமூகத்தை பல தலைவர்கள் வழி நடத்துகின்றார்கள்? ஏன்? ஊருக்கு ஒரு ஜமாஅத் இருக்கின்றது? ( இது இயக்கங்கள் பற்றியது அல்ல. மாறாக மஹல்லா ஜமாஅத் பற்றியது ) இன்று நம்மிடையே எழுப்பப்படும் மிகப்பெரிய கேள்வியே இது தான். மாநபி {ஸல்} அவர்கள் அன்ஸாரிகளை அங்கீகரித்து அவர்களுக்கென ஒரு தலைவரை நியமித்தது போன்று அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கிளையாருக்கும் தலைவரை நியமித்தார்கள்.

மாநபி {ஸல்} அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வருகை தந்த அனைத்துக் கோத்திரத்தார்களுக்கும் அவரவர்களின் கோத்திரத்தார்களில் இருந்தே தலைவரை நியமித்ததும் உண்டு.

ஃப்த்ஹ் மக்காவின் போது மக்காவின் வீதிகளில் அணிவகுத்துச் சென்ற ஒவ்வோர் கோத்திரத்தார்களின் கையிலும் ஒரு கொடியை கொடுத்து, ஒரு தலைவரின் கீழ் அவர்களை அணிவகுத்துச் செல்லச் சொன்னார்கள்.
மேலும், எந்த பகுதிக்கு இஸ்லாம் சென்றாலும், அங்கே இமாமத் பணிக்கு ஒருவரையும், வழி நடத்த தலைமையாக ஒருவரையும் மாநபி {ஸல்} அனுப்பி வைப்பார்கள்.

ஸகீஃப் கோத்திரத்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் வைத்த கோரிக்கையான “எங்களில் ஒருவரையே எங்களுக்கு தலைவராக” நியமிக்க வேண்டும் என்பதை மாநபி {ஸல்} அவர்கள் அங்கீரித்தார்கள்.
எனவே, அந்தந்த பகுதி மக்களுக்கு அந்தந்த பகுதியைச் சார்ந்தவர்களே தலைவராக இருப்பதை மாநபி {ஸல்} அவர்கள் தடுக்கவில்லை. எனினும், மார்க்க விவகாரங்களில், சமூக விவகாரங்களில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து ஷூராவின் அடிப்படையில் சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்று பணித்திருக்கின்றார்கள்.
وبعد توزيع الغنائم أقبل وفد هوازن مسلماً، وهم أربعة عشر رجلاً ورأسهم زهير ابن صُرَد، وفيهم أبو بُرْقَان عم رسول اللّه صلى الله عليه وسلم من الرضاعة، فأسلموا وبايعوا ثم قالوا‏:‏ يا رسول اللّه، إن فيمن أصبتم الأمهات والأخوات، والعمات والخالات، وهن مخازي الأقوام‏:‏
فامنن علينا رسول اللّه في كـرم ** فإنـك المرء نرجـوه وننتظر
امنن على نسوة قد كنت ترضعها ** إذ فوك تملؤه من محضها الدرر
وذلك في أبيات‏.‏ فقال‏:‏ ‏(‏إن معي من ترون، وإن أحب الحديث إلى أصدقه، فأبناؤكم ونساؤكم أحب إليكم أم أموالكم‏؟‏‏)‏ قالوا‏:‏ ما كنا نعدل بالأحساب شيئاً‏.‏ فقال‏:‏ ‏(‏إذا صليت الغداة ـ أي صلاة الظهر ـ فقوموا فقولوا‏:‏ إنا نستشفع برسول اللّه صلى الله عليه وسلم إلى المؤمنين، ونستشفع بالمؤمنين إلى رسول اللّه صلى الله عليه وسلم أن يرد إلينا سبينا‏)‏، فلما صلي الغداة قاموا فقالوا ذلك‏.‏ فقال رسول اللّه صلى الله عليه وسلم‏:‏ ‏(‏أما ما كان لي ولبني عبد المطلب فهو لكم، وسأسأل لكم الناس‏)‏، فقال المهاجرون والأنصار‏:‏ ما كان لنا فهو لرسول اللّه صلى الله عليه وسلم‏.‏ فقال الأقْرَع بن حابس‏:‏ أما أنا وبنو تميم فلا‏.‏ وقال عُيَيْنَة بن حِصْن‏:‏ أما أنا وبنو فَزَارَة فلا‏.‏وقال العباس بن مِرْدَاس‏:‏ أما أنا وبنو سُلَيْم فلا‏.‏ فقالت بنو سليم‏:‏ ما كان لنا فهو لرسول اللّه صلى الله عليه وسلم‏.‏ فقال العباس بن مرداس‏:‏ وهنتموني‏.‏
فقال رسول اللّه صلى الله عليه وسلم‏:‏ ‏(‏إن هؤلاء القوم قد جاءوا مسلمين، وقد كنت استأنيت سَبْيَهُمْ، وقد خيرتهم فلم يعدلوا بالأبناء والنساء شيئاً، فمن كان عنده منهن شيء فطابت نفسه بأن يرده فسبيل ذلك، ومن أحب أن يستمسك بحقه فليرد عليهم، وله بكل فريضة ست فرائض من أول ما يفيء اللّه علينا‏)‏، فقال الناس‏:‏ قد طيبنا لرسول اللّه صلى الله عليه وسلم‏.‏ فقال‏:‏ ‏(‏إنا لا نعرف من رضي منكم ممن لم يرض، فارجعوا حتى يرفع إلينا عُرَفَاؤكم أمركم‏)‏، فردوا عليهم نساءهم وأبناءهم، لم يتخلف منهم أحد غير عيينة بن حصن، فإنه أبي أن يرد عجوزاً صارت في يديه منهم، ثم ردها بعد ذلك، وكسا رسول اللّه صلى الله عليه وسلم السبي قبطية
ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் புளுங்கிக்கொண்டிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் முன்னிலை வகிக்க இன்னும் சிலரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.

இறுதியில், நபிகளாரின் தலைமையில் சென்ற முஸ்லிம்கள் மாபெரும் வெற்றிவாகை சூடினார்கள்.

ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில் பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ஹவாஸின் கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.

இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த் என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும் இடத்தில் இருக்கும் போது வந்தனர்.

அந்தக் குழுவில் நபி {ஸல்} நபி {ஸல்} அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.

நபிகளாரிடம் அவர்கள் பைஅத் செய்த பின்னர் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.

ஆகவே, எங்களின் போர்க் கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.

எனவே, நான் என் தனிப்பட்ட முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று நாங்கள் அல்லாஹ்வின் தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகின்றோம்என்று கூறுங்கள்என கூறி அனுப்பி வைத்தார்கள்.

ஹவாஸின் குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.

இவர்களில் (நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.

 அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக் கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

பின்பு, எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து விடுகின்றேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்! நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்என்றார்கள்.

ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் (ரலி) அவர்கள் நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள்.

இது போன்றே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி) அவர்கள் நானும் பனூ ஸுலைம் கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள் இடைமறித்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்என்றனர்.

மீண்டும் அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா பங்கீட்டை தாமதம் செய்தேன்.

நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் எங்களின் குடும்பம் தான் வேண்டும்என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக அவர்கள் எதையும் கருதவில்லை.

எனவே, யார் கைதிகளை எவ்வித பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக அல்லாஹ்வின் தூதரே! எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர் யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.

உங்களின் தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!என்று கூறி அமர்ந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

(நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:241,242.  ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்...)

மாற்றுக் கருத்து கூறிய போதும் ஆத்திரப்படாமல் நிலைமைகளை விளக்கிக் கூறி அதன் பிறகு அந்தக் கருத்துக்கு மக்கள் இசைந்து கைதிகளை விடுவிக்க முன் வந்த போது இது தான் தருணம் உடனடியாக செயல் படுத்தி விடுவோம் என்று கருதாமல் நீங்கள் திரும்பிச் சென்று உங்களின் கருத்துக்களை உங்களின் தலைவர்களிடம் தெரிவியுங்கள் என்று கூறியதன் மூலம் சமூகத்தை வழி நடத்திட பல தலைவர்கள் இருப்பது தவறல்ல என்பதை இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது.

பேரொளியாய் இலங்கும் வரலாறு...

நபி (ஸல்) அவர்களின் வஃபாத்திற்குப்பிறகு நான்கு கலீஃபாக்களும், ஹிஜ்ரி 100ல் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களும் வேறு சில ஆட்சியாளர்களும், தலைவர்களும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக மிக தாராளாமாக அர்பணித்ததை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது.

பின்னர் ஹிஜ்ரி 100ல் உமர் தனது இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மீண்டும் இஸ்லாமிய வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் தம்மை ஈடுபடுத்தினார்கள். அதன் பிறகு வளர்ச்சி, வீழ்ச்சி என்று மாறி மாறி இஸ்லாம் வரலாற்றில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 99 (கி.பி. 718 முதல்) ஹிஜிரி 101 (கி.பி. 720 வரை) 2 ஆண்டுகள் 5 மாதங்கள் வரை.

அதன் பிறகு 25 வருடங்கள் 10 மாதங்கள் இஸ்லாமிய உலகம் இருண்டுதான் காணப்பட்டது.

ஹிஜிரி 132 கி.பி. 750 முதல் ஹிஜிரி 641 கி.பி. 1243 வரை, 524 ஆண்டுகள் அப்பாஸியாக்களின் ஆட்சிக்காலம் இஸ்லாமிய உலகின் பொன்னான ஆட்சிக்காலம் எனலாம்.

இன்று உலகில் அறியப்படும், போற்றப்படும் கல்வி - விஞ்ஞானம்- மருத்துவம் அனைத்திலும் முஸ்லிம்கள் முன்னோடிகளாய், கண்டுபிடிப்பாளர்களாய் ஜொலித்த காலமும் அதுதான்.
     
அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல் ரஷீதுடைய மகன் கலீஃபா அல் மாமூன் என்பவர்தான் முதன் முறையாக இந்தியா, சீனா, கிரேக்க மொழியிலுள்ள தத்துவம், அறிவியல் மற்றும் தர்க்க கலைச் சார்ந்த எண்ணற்ற நூல்களை அரபியில் மொழியாக்கம் செய்தார்.

இதற்காகபைத்துல் ஹிகமாஎனும் ஞான பீடத்தை கி.பி. 830ல் திறந்து வைத்தார். இதில் ஒரு பெரும் நூலமும் ஒரு ஆராய்ச்சிக்கூடமும், ஒரு மொழியாக்கத்துறையும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
     
அப்பாஸிய கலீஃபாக்கள் தங்களது பொருளாதாரத்தில் பெருமளவை இஸ்லாம் இகமெங்கும் அறிவு சுடரொளியை பரப்பிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செலவிட்டார்கள்.
     
கிட்டத்தட்ட 524 ஆண்டுகள் 5 நூற்றாண்டுகள் இஸ்லாமிய கல்வி, விஞ்ஞான சமூகம் உலகை வழிநடத்திச் சென்றது அறிவியல் முன்னோடிகளான முஸ்லிம் அறிஞர்களின் சமூகம்.

1.      ஜாபிர் பின் ஹைய்யான் (கி.பி. 5-15ம் நூற்றாண்டின் இராசயனவியலில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் பலதை உலகிற்கு அடையாளப்படுத்தினார்கள்.இரசானவியல் சம்பந்தமாக 50க்கும் மேற்பட்ட நூற்களையும் எழுதியுள்ளார்.
2.      முஹம்மத் பின் மூஸா அல்குவாரிஸ்மி (கி.பி. 840) கணிதவியலிலும்
3.      அலீ இப்னு சீனா (கி.பி. 980-1030) மருத்துவத்துறையிலும்
4.      முஹம்மத் பின் ஸகாரிய்யா அல் ராஸீ (கி.பி. 864-930) மருத்துவம், கணிதம், வானவியல், தத்துவம், இரசானவியல் ஆகிய துறைகளிலும்
5.      அபூ அப்துல்லாஹ் அல் பத்தானி (கி.பி. 868-929) வானவியல், வான சாஸ்திரம் ஆகிய துறைகளிலும்
6.      அபூபக்ர் அல் ராஸீ (கி.பி. 865-925) அம்மை நோய் தடுப்பூசி, இரத்தக்குழாய், இதயம் சம்பந்தமான துறைகளிலும்
7.      யாகூப் இப்னு இஷாக் அல் சிந்தி (கி.பி. 800) புவியியல், மருத்துவம், தத்துவம், வானவியல், கணிதம் ஆகிய துறைகளிலும்
8.      ஸாபித் பின் குந்தா (கி.பி. 836-901) பொறியாளர், வானவியல் ஆகிய துறைகளிலும்
9.      அலீ இப்னு ரப்பான் அல் தாபரீ (கி.பி. 838-870) கலைக் களஞ்சியத்துறையிலும்
10. அபூ அல் நஸ்ர் அல் பாராபீ (கி.பி. 870-950) சமூகவியல், அளவையியல், மெய்யியல் ஆகிய துறைகளிலும்
11. அபுல் ஹஸன் அலீ அல் பஸ்ஊதி (கி.பி.957) புவியியல், வரலாறு, நிலவியல் ஆகிய துறைகளிலும்
12. அபுல் ஹஸன் அல் மாவர்ரீ (கி.பி. 972-1058) சட்டத்துறை, நீதித்துறை, அரசியல் ஆகிய துறைகளிலும்
13. அபுல் காஸிம் அல் ஸஹராஷு (கி.பி. 936-1013) அறுவை சிகிச்சை அது சம்பந்தமான கருவிகள் கண்டுபிப்பு ஆகிய துறைகளிலும்.
14. அபூ மர்வான் இப்னு ஸுஹர் (கி.பி. 1091-1161) விஞ்ஞானம், மருத்துவம், நுண்ணுயிர் ஆகிய துறைகளிலும்
15. அபூரைஹான் அல்பிரூனி (கி.பி.973-1048) நுண் பொருளாய்வியல், புவியியல், கணிதவியல், வரைபடவியல் ஆகிய துறைகளிலும் இன்னும் ஏராளமான அறிவியல் துறை பலதில் இஸ்லாமிய அறிஞர் மேதைகள் பலர் சாதனையாளர்களாகவும், கண்டுப்பிடிப்பாளர்களாகவும், நிபுணர்களாகவும் திகழ்ந்த அந்த பொற்காலம் அப்பாஸியக் கலீஃபாக்கள் ஆட்சிபுரிந்த காலம்.
     
இஸ்லாம் உலகில் பெருமையோடு பயணிக்க அப்பாஸிய ஆட்சியாளர்களின் தலைமையும், அறிவு படைத்த உலமாக்களின் அங்கீகாரமும் வழிகாட்டலும் பிண்ணனி வகித்ததை வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. ( நூல்: ஓர் உலகளாவிய வரலாறு பக்கம் 103-106, 353-359 )

அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் செல்ஜூக்கிய மன்னர் நிஜாமுல் முல்க் அவர்களுடன் இணைந்து ஜாமிஆ நிஜாமிய்யா பல்கலைகழகம் ஒன்றை உருவாக்கினார்கள். இதன் மூலம் உலகை ஆளுமை செய்கிற பல துறைகளின் இஸ்லாமிய கல்வியாளர்கள் உருவாகி இவ்வுலகை வழிநடத்தினார்கள். இதற்கு 400 ஆண்டுகளுக்கு பின்தான் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது.

ஒரு புறம் அறிவினிற் சிறந்த சமூகத்திற்கு வித்திட்ட இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் இன்னொரு புறம் சமூக ஒற்றுமைக்கும் வித்திட்டார்கள்.

ஹிஜ்ரி மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த இந்த உம்மத் மிகப் பெரிய அளவிலான பிரச்சனைகளைச் சந்தித்தது. உள்கட்டமைப்பு மிகவும் சிதைந்து, மக்கள் தங்களின் மனோஇச்சையின் படி வாழத்துவங்கி, முன்னோர்களான உலமா சமூகம் அரும்பாடு பட்டு கட்டமைத்த, பாதுகாத்த ஃபிக்ஹை சீரழித்தனர்.

அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கின்ற ஓர் அறிவிப்பில்….

أما بعد القرن الرابع فقد تغيرت الحال ولندع حجة الإسلام الغزالي (توفي: 505هـ ) يصف لنا ذلك حيث يقول: "اعلم أن الخلافة بعد رسول الله صلى الله عليه وسلم تولاها الخلفاء الراشدون المهديون، وكانوا أئمة علماء بالله تعالى، فقهاء في أحكامه، وكانوا مشتغلين بالفتاوى في الأقضية، فكانوا لا يستعينون بالفقهاء إلاّ نادراً في وقائع لا يستغني فيها عن المشاورة، فتفرغ العلماء لعلم الآخرة، وتجردوا لها وكانوا يتدافعون الفتاوى وما يتعلق بأحكام الخلق من الدنيا، وأقبلوا على الله تعالى بكنه اجتهادهم كما نقل من سيرهم، فلما أفضت الخلافة من بعدهم (أي الخلفاء) إلى قوم تولوها بغير استحقاق ولا استقلال بعلم الفتاوى والأحكام اضطروا إلى الاستعانة بالفقهاء، وإلى استصحابهم في جميع أحوالهم لاستفتائهم في مجاري أحكامهم،

وقد يسال أحدهم عن الوضوء من لمس المرأة، ومس الذكر فيقول: لا ينتقض به الوضوء عند أبي حنيفة.
وإذا سئل عن لعب الشطرنج وأكل لحوم الخيل قال: حلال عند الشافعي .
وإذا سئل عن تعذيب المتهم، أو مجاوزة الحد في التعزيرات قال: أجاز ذلك مالك .

وإذا أراد أن يحتال لأحد في بيع وقف إذا تخرب وتعطلت منفعته، ولم يكن لمتوليه ما يعمره به أفتاه بجواز ذلك على مذهب أحمد؛ حتى أصبحت أوقاف المسلمين تتحول من الوقف إلى الملك الخاص في كل مجموعة من السنين(161).
وهكذا ضاعت مقاصد الشرع بضياع تقوى الله، وأهملت قواعده الكلية، حتى بلغ الأمر بسفهاء الشعراء وغواتهم ومجّانهم حد التندر بأحكام الله كأن يقول أبو نواس:
أباح العراقي النبيـذ وشربه وقال حرامان المدامة والسكر
وقال الحجازي الشرابان واحد فحلت لنا من بين قوليهما الخمر
سآخذ من قوليهما طرفيهما وأشربها لأفارق الوازر الوزر

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் தங்களின் மனோ இச்சையின் அடிப்படையில் வாழத்துவங்கினர். முன்னோர்களான நபித்தோழர்களின் காலத்திலும், தாபியீன்கள் காலத்திலும், தபவுத்தாபியீன்கள், இமாம்கள் காலத்திலும் பின்பற்றப்படாத பல நடைமுறைகளைப் பின்பற்றினர்.

அதற்காக முன்னோர்களின் ஃபத்வாக்களை தர்க்க ரீதியில் அணுகினர்.


பெண்ணை தொட்டால் உளூ முறியுமா? ஒரு ஆண் தன் மர்ம உறுப்பைத் தொட்டால் உளூ முறியுமா? என்று கேட்டால் இமாம் ஷாஃபிஇ முறியும் என்கிறார். இமாம் அபூஹனீஃபா முறியாது என்கிறார் எனவே அபூஹனீஃபாவைப் பின் பற்றுவோம்.

சதுரங்கம் விளையாடலாமா? ஆம்! இமாம் ஷாஃபிஇ கூடும் என்கிறார். எனவே விளையாடலாம். குதிரை இறைச்சி சாப்பிடலாமா? ஆம்! இமாம் ஷாஃபிஇ கூடும் என்கிறார். எனவே சாப்பிடலாம்.

சந்தேகத்திற்குரிய நபரை அடிக்கலாமா? ஆம்! இமாம் மாலிக் கூடும் என்கிறார். எனவே அடிக்கலாம்.

இராக் வாசிகள் போதை தரும் குடிபானங்களைச் சாப்பிடக் கூடாது. நபீத் எனும் பழச்சாற்றை சாப்பிடலாம் என்றனர்.

ஹிஜாஸ் வாசிகள் மதுவைத்தவிர மற்றெல்லாவற்றையும் சாப்பிடலாம் என்றனர்.

மக்களைத் திருப்தி படுத்தவும், ஆட்சியாளர்களின் அன்பைப் பெறுவதற்கும் சட்டமியற்றும் ஃபுகஹாக்கள் உருவானார்கள்.

இப்படியே குழப்பங்களும் பிரச்சனைகளும் முற்றி அழகிய தோற்றத்திலிருந்த ஃபிக்ஹை அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர்.

أما الذين تأصلت مذاهبهم وبقيت إلى يومنا هذا، ولا يزال لها الكثير من المقلدين في ديار الإسلام كلها، ولا يزال فقههم وأصوله مدار التفقه والفتوى - عند الجمهور- أولئك هم الأئمة الربعة: أبو حنيفة، ومالك، والشافعي، وأحمد.

அல்லாஹ் அந்த காலத்திலும் வாழ்ந்த சில நல்லுள்ளம் கொண்ட உலமாக்களின் இதயத்தில் சில உதிப்புகளை வழங்கினான்.

அவர்கள் மீண்டும் இந்த உம்மத்தைப் புணரமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தினர்.

அவர்கள் மக்கள் முன் ஒருமித்த ஓர் தீர்மானத்தை முன் வைத்தனர். இனிமேல் அவரவர் விருப்பம் போல் ஃபிக்ஹைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

நான்கு இமாம்களோடு நின்று விடுவோம். அவரவர்கள் அவரவர்களின் இமாம்களோடு நின்று விடுவோம்.

அந்த மேன்மக்களின் பெரும் முயற்சியால் விளைந்த மாபெரும் நன்மையே இன்று அவனியில் நான்கு மத்ஹபுகளின் தோற்றமும் வளர்ச்சியும்.

சிதறிப் போயிருந்த மக்களையும், கருத்து வேறுபாடுகளால் காணாமல் போயிருந்த நல்ல பண்புகளையும் இன்று வரை நிலைத்திருக்க வைத்திருக்கும் மத்ஹப் எனும் அழகிய வழிமுறை உருவாக மிகப் பெரிய முயற்சி செய்து அந்த காலத்து ஆலிம்களை ஒன்றிணைத்து உம்மத்தை மகத்தான வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றதில் மாபெரும் பங்களிப்பு அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களுக்கும், நிஜாமுல் முல்க் எனும் அதிகாரம் படைத்த தலைமைக்குமே சாரும்!

இப்படியாக, வரலாறு நெடுகிலும் இந்த உம்மத் சந்தித்த பிரச்சனைகள் அதிலிருந்து இந்த உம்மத்தை மீட்டெடுத்து நிம்மதியோடும், எழுச்சியோடும், வெற்றியோடும் நடைபோட வைத்தவர்கள் உலமா பெருமக்களும் அவர்களின் காலத்தைய தலைமையும், ஒன்றினைந்து நின்ற உம்மத்தும் தான் என்பதை உணர முடியும்.

எனவே, தற்போதைய ஒன்றிணைந்த இந்த செயல்பாடு இனிவரும் காலங்களிலும் அது நீடிக்க வேண்டும்.

மஹல்லா ஜமாஅத் அமைப்புகளும், இயக்கத்தின் தலைவர்களும் இந்த உம்மாவின் பொதுவான பிரச்சனைகளின் போது உலமா சமூகத்தை அணுகி உலமாக்களின் வழிகாட்டலோடு அதற்கான தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இன்று ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையை, உலமாக்கள் மற்றும் உமராக்களின் முயற்சியை, கபூல் செய்தருள்வானாக!

5 comments:

  1. Alhamdulillah arumayana padivu jazakallah

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
    தங்களின் பணி அளப்பரியது நிறைவான நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவானாக
    Background theme கொஞ்சம் dork ஆ வைத்தால் படிப்பதற்கு இடையூரில்லாமல் இருக்கும்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்!
    வரலாற்றுக்குறிப்புகள்.
    புள்ளி விவரங்கள் என்று மிகுந்த சிரமத்திற்கு தங்களை ஆட்படுத்தி உலமாக்களுக்கு ஜும்ஆ குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள் ஹஜ்ரத்!
    جزاكم الله خير الجزاء يا استاذ திருப்பூர்

    ReplyDelete