Thursday, 16 December 2021

கவலைப்படாதீர்கள்! கலங்காதீர்கள்!! கருணையாளன் மீட்டெடுக்கும் வரை காத்திருங்கள்!!!

 

கவலைப்படாதீர்கள்! கலங்காதீர்கள்!!

கருணையாளன் மீட்டெடுக்கும் வரை காத்திருங்கள்!!!

 




உலகில் சில விஷயங்கள் உண்டு. அதன் மூலம் மனிதனுடைய உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும். இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றது. அதன் மூலம் மனிதனுடைய மனதுக்கு, ஆன்மாவுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

ஒரே நேரத்தில் மனிதனுக்கு உடல் ரீதியாகவும், ஆன்மாமனது ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல், செயல்பட விடாமல் முடக்கிடு விடும் ஆற்றல் இந்த உலகத்தில் ஒன்றிற்கு உண்டென்றால் அதுகவலைஎன்பதாகத்தான் இருக்கும்.

கவலை இந்த உலகத்தில் எல்லோருக்கும் வரும். எல்லா பருவத்தினருக்கும் வரும். பால்குடி மறக்கடிக்கப்படும் குழந்தைப் பருவத்தில் துவங்கும் இந்த கவலை ஸக்ராத்தின் விளிம்பு வரை தொடர்வதாக இறைவன் குறிப்பிடுகின்றான் 

நல்லோர்கள், தீயோர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி இது அனைவரையும் ஆரத்தழுவிச் செல்லும். நபிமார்களான அல்லாஹ்வின் தூதர்கள் கூட இதற்கு விதி விலக்கானவர்களில்லை என குர்ஆனும் ஸுன்னாவும் சான்றுரைக்கின்றது.

நமது உயிரினும் மேலான நபி {ஸல்} அவர்கள் வாழ்வில் கூடஆமுல் ஹுஸ்ன்கவலையாண்டு என ஒரு ஆண்டுக்கு பெயர் வைத்து அழைக்கும் அளவுக்கு கவலை ஆட்கொண்டிருந்தது என்பதை வரலாற்றின் மூலம் அறிய முடிகின்றது.

பயம், சந்த்ப்ப்ஷம், இழப்பு, இறப்பு, கடன், சுமை, தேவை, சூழ்நிலை, நெருக்கடி, ஆனந்தம், எதிர்பார்ப்பு, வரவு, செலவு என கவலையை ஏற்படுத்தும் காரணிகளின் பட்டியல் மிக நீண்டதாகும்.

ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் உலக வாழ்வென்றாலே கவலை இருக்கும். உலகத்தில் வாழும் யாரும் கவலை இல்லாதவர்களாக இருக்க மாட்டார்கள்.

கவலையே இல்லாத நிலையை ஒரு முஃமின் அடைய விரும்பினால் அவன் சுவனவாசியாக ஆக வேண்டும். ஏனெனில், சுவனத்தில் தான் கவலையே இருக்காது என அல்லாஹ் வாக்குறுதி அளித்திருக்கின்றான்.

وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ (32) جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ (33) وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ 

அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும். அத்தகையவர்கள் நிலையான சுவனங்களில் நுழைந்திடுவார்கள். அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அவர்கள் பட்டாடையும் அணிந்து இருப்பார்கள். மேலும், “எங்களை விட்டு எல்லாக்கவலையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! நிச்சயமாக, எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்என்றும் அவர்கள் கூறுவார்கள். ( அல்குர்ஆன்: 35: 33, 34 )

எனவே, ஒரு முஃமின் கவலை ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமிய வழிகாட்டலை நாம் இந்த வார ஜும்ஆ உரையில் பேசவும், கேட்கவும் இருக்கின்றோம்.

அதற்கும் முன்பாக வாழ்க்கையின் இரண்டு அடிப்படைகளை ஆழமாக மனதிலே வதிய வைத்துக் கொள்ள வேண்டிய கடமையும், கடப்பாடும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களை அணுகாது! அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்என்று நபியே! நீர் அம்மக்களிடம் கூறுவீராக! மேலும், முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!”.                                   ( அல்குர்ஆன்: 9: 51 )

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ

அல்லாஹ் எந்த ஓர் ஆன்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே! அது சம்பாதித்த தீமையும் அதற்கே!”.                              ( அல்குர்ஆன்: 2: 286 )

 

கவலைகளின் போது

 

1.வார்த்தையில் கவனம் வேண்டும்

فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ

இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியங்கள் பல வழங்கி அவனைச் சோதிக்கும் போது அவன்என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தி உள்ளான்என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய வாழ்வாதாரத்தைக் குறைத்து அவனை சோதிக்கும் போது அவன்என் இறைவன் என்னைச் சிறுமை படுத்தி விட்டான்எனக்கூறுகின்றான்.                             ( அல்குர்ஆன்: 89: 15, 16 )

 

2.துவக்கத்திலேயே அல்லாஹ்வைச் சார்ந்திட வேண்டும்

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் பெருமானார் {ஸல்} அவர்களோடு ஸவ்ர் குகையில் தஞ்சம் அடைந்திருந்த போது குகைக்கு வெளியே எதிரிகள் நடமாடுவதைக் கண்டு கவலையுற்றார்கள். அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள்

إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

கவலைப்படாதீர்! நிச்சயமாக, அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்” ( அல் குர்ஆன்: 9: 40 ) என்று கூறினார்கள். அதன் பிறகு நடைபெற்ற வியப்பிற்குரிய நிகழ்வுகளை வரலாறு வாகாய் நமக்கு பதிவு செய்துள்ளதை நாமறிவோம்.

 

உமைய்யா பின் அப்துல்லா பின் அம்ர் பின் மக்சூம் என்ற தந்தை, மற்றும் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா என்ற தாய்க்கும் மகளாக மக்காவில் கி.பி.596ல் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் பிறந்தார்கள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஹிந்த். இவரது பெற்றோர் பொது நலச் சேவைகள் மற்றும் தான தர்மங்களின் மூலமாக அரபுலகில் மிகவும் பிரபலமாக மதிக்கப் பட்டவர்களாவார்கள்.

 

இவர் தந்தையுடன் பயணம் செய்யக் கூடியவர்கள் தங்களது தேவைக்காவென எந்தப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தன்னுடன் வரக் கூடியவர்கள் அனைவரும் தனது விருந்தாளிகள் என மதிப்பளித்து, உணவிலிருந்து அத்தனைச் செலவுகளையும் அவரே பொறுப் பேற்றுச் செலவு செய்யக் கூடிய தனவந்தராக உம்மு ஸலமாவின் தந்தை திகழ்ந்தார். எனவே, தனது தந்தையைப் போலவே உம்மு ஸலமா அவர்களும் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவராகவும், இன்னும் தான தர்மங்களில் அதிகம் ஈடுபடக்கூடியவராகவும் திகழ்ந்தார்கள்.

        

மக்காவில் அன்றையதினம் வாழ்ந்த குறிப்பிடத்தக்க செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான மக்சூம் குலத்திலிருந்து வந்த அபூ ஸலமா என்றழைக்கப்படக்கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி (ரழி) என்பவர். இவர் நபி (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். மேலும் நபி (ஸல்)அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆன அபூ ஸலமா அவர்களைக் கைப்பிடித்து, மணமகளாக மக்சூம் கோத்திரத்தாரின் இல்லத்திற்கு சென்ற உம்மு ஸலமா அவர்கள், அங்கும் தனது பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நங்கையாகத் திகழ ஆரம்பித்தார்கள்.

 

இவர்களுக்கு ஸலமா என்ற முதல் குழந்தை பிறந்தது. இந்த பிள்ளையின் தந்தை என்பதற்க்கு அபூ ஸலமா என்றும், இந்த பிள்ளையின் தாய் என்பதற்க்கு உம்மு ஸலமா என்றும் பெயரை  மரியாதைக்கு மக்கள் அழைத்து, அதுவே நிரந்தரமாக அழைக்கப்படுகிறது.

 

மேலும் இவர்களுக்கு உமர், ஜைனப் மற்றும் ருக்கையா என மொத்தம் நான்கு குழந்தைகள். இஸ்லாமிய அழைப்பை ஏற்று கொண்டு விசுவாசிகள் ஆன முதல் பத்து பேரில் இத்தம்பதியினரும்  இருந்தார்கள்.

 

சந்தோஷமான அபூ ஸலமா தம்பதியினர் வாழ்வில் இஸ்லாத்தைத் அவர்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்பு, தலைகீழாக மட்டுமல்ல, அடியோடு அந்தச் சூழ்நிலைகள் மாற்றம் பெற ஆரம்பித்தன. முழு கோத்திரத்தாரும் இவர்களுக்கு எதிராகப் புயலெனக் கிளர்ந்தார்கள். பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் இன்பங் காண்பதே பிழைப்பாகக் கொண்டு திரியும், வலீத் பின் முகீரா போன்றவர்கள் இவர்களுக்கு தினம் தினம் புதுப்புதுப் பிரச்னைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக, மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை, சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

 

அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில்  இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் அபூ ஸலமாவும், உம்மு ஸலமாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு நபிமொழி அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட சம்பவத்தின் பின்னணி தான் அபீசீனியாவிலிருந்து இடையிலேயே மக்காவிற்கு அவர்களைத் திரும்ப வரத் தூண்டியது.

 

ஒருமுறை நவி(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை கஅபாவில் ஓதிக் கொண்டிருந்த பொழுது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறை நிராகரிப்பாளர்கள் அனைவரும் தங்களை அறியாமலேயே, நிலத்தில் சிரம் தாழ்த்தினார் (சுஜுது செய்தார்)கள். இந்தச் சம்பவம் தான் பெரிதாக்கப் பட்டு, புரளியாக அபீசீனியாவிற்குச் சென்று, குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்ற செய்தியாகப் போய்ச் சேர்ந்தது. இந்தச் செய்தியை உண்மை என நம்பித் தான் அவர்கள் நாடு திரும்பினார்கள்.

 

முஸ்லிம்களுக் கெதிரான குறைஷிகளின் கொடுமைகள் குறையவில்லை யாதலால், முஸ்லிம்கள் மீண்டும் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தனர். அதேகால கட்டத்தில் அகபாவில் உடன்படிக்கை எடுத்துக் கொண்ட மதீனத்து முஸ்லிம்கள், இப்பொழுது மக்காவில் உள்ள முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருமாறு அழைத்தார்கள், நபி(ஸல்) அவர்களும் அவர்களது அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அபீசீனியாவை விடுத்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு பணித்தார்கள்.

அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி பயணமாகத் தொடங்கினார். இதனை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தார்கள் ஓட்டகத்தை மறித்து, அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு செல்ல விரும்புகின்றீர்களோ அங்கு நீங்கள் போய்க் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ எங்களைச் சேர்ந்தவள், எனவே, அவரை நீங்கள் இங்கு விட்டு விட்டுத் தான் போகவேண்டும். நேற்றைக்கு அபிசீனியாவிற்கு கூட்டிக் கொண்டு போனீர்! இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், அவளை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தத் தெரியாத உமக்கு எதற்கு மனைவி என்று அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.

 

 உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப் பட்ட அபூ ஸலமா குடும்பத்தினர் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட முடியாது, அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந் தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார். ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது மூன்று பிரிவாக பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும் நிஜமா! என்று கண் கலங்கிய உம்மு ஸலமா (ரழி) அவர்கள், பிரிவுத் துயரால் வாடி நின்றார்கள். ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.

 

ஒருநாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, உம்மு ஸலமாவே..!உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்றுகேட்டார். நடந்த அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார். அந்த மனிதர் உம்மு ஸலமா (ரழி) மற்றும் அபூ ஸலமா (ரழி) ஆகியோர்களின் உறவினர்களிடம் போய் பேசி குழந்தைகளுடன் மதீனாவுக்குச் செல்வதற்கும் அவர்கள் அனுமதி  வாங்கி தந்தார். ஆனால் அவருடன் மதீனா வருவதற்கு யாரும் தயாராக இல்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன்னந் தனியாகவே தனது பிள்ளைகளுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் மதீனாவில் ஒன்றிணைந்தார்கள், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.

 

அபூ ஸலமா (ரழி) ஏற்கனவே பத்ருப் போரில் கலந்து கொண்டு, சிறப்புப் பெற்றிருந்தார்கள், அதனைப் போலவே உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார். ஆனால் இந்தப் உஹதுப்; போரில் அபூ உஸமாஜஸ்மி என்பவர் எறிந்த கத்தி ஒன்று மிக ஆழமான காயத்தை அபூ ஸலமா (ரழி)அவர்களுக்கு ஏற்படுத்தியது, அதன் மூலம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். மாதக் கணக்கில் அதற்கான மருத்துவம் செய்தும் பலனளிக்கவில்லை. மேற்புறத்தில் ஆறிய புண், உள்பகுதியில் சீழ் வைத்தது வெளியில் தெரியவில்லை.

 

உஹதுப் போர் முடிந்து சற்று இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், பனூ அஸத் குலத்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள், பனூ அஸத் குலத்தவர்களுக்கு எதிராகப்புறப்பட்ட படைக்குத் தலைமைத் தளபதியாக அபூ ஸலமா (ரழி) அவர்களை நியமித்தார்கள். இப்பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்களது தலைமையில் 150 பேர் கொண்ட இஸ்லாமியப்படை கிளம்பியது. பனூ அஸத் குலத்தவர்களது எல்லைக் கோட்டுக்கருகே வந்த இஸ்லாமியப் படை சற்றும் தாமதிக்காது தங்களது தாக்குதலைத் தொடுத்தார்கள். இறுதியில் பனூ அஸத் கோத்திரத்தாரை வேரறுத்து வெற்றி வாகை சூடினார்கள்.

 

இறைத் திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அபூ ஸலமா (ரழி) அவர்கள் போரிட்டார்கள். அவர்களது வாள் அனைத்துப் பக்கமும் சுழன்று, எதிரிகளை நிலை குலைய வைத்தது. இறுதியில், முஸ்லிம்களின் வீரத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று ஓடினார்கள் பனூ அஸத் குலத்தவர்கள். இப்பொழுது ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் இருந்து ரணம், வலியாக மாறி, அந்தஇடத்தில் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. மதீனா திரும்பிய அபூ ஸலமா (ரழி) அவர்களின் காயத்தைப் பார்த்த உம்மு ஸலமா (ரழி) மிகுந்த மன வேதனை அடைந்தார்கள்.

 

அபூ ஸலமா (ரழி) அவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது, நபி(ஸல்) அவர்கள் அபூ ஸலமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த நபி(ஸல்) அவர்கள், அபூ ஸலமா (ரழி) அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரழி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா (ரழி) அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

 

அபூ ஸலமா(ரழி) அவர்களை மரணம் வந்தடைந்தது. நபி(ஸல்)அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா(ரழி) அவர்களின் கண்களை மூடினார்கள். உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ما مِن مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ، فيَقولُ ما أمَرَهُ اللَّهُ: {إنَّا لِلَّهِ وإنَّا إلَيْهِ راجِعُونَ}،[البقرة:156] اللَّهُمَّ أْجُرْنِي في مُصِيبَتِي، وأَخْلِفْ لي خَيْرًا مِنْها، إلَّا أخْلَفَ اللَّهُ له خَيْرًا مِنْها، قالَتْ: فَلَمَّا ماتَ أبو سَلَمَةَ، قُلتُ: أيُّ المُسْلِمِينَ خَيْرٌ مِن أبِي سَلَمَةَ؟ أوَّلُ بَيْتٍ هاجَرَ إلى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، ثُمَّ إنِّي قُلتُها، فأخْلَفَ اللَّهُ لي رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ 

 

நபி(ஸல்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கேட்டார்கள்.

 

அப்போது மாநபி {ஸல்} அவர்கள் “எந்தவொரு அடியானுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு அவர் “நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள், மேலும் அவன் பக்கமே நாம் செல்ல இருக்கின்றோம். என் இறைவா! என்னுடைய இந்த சோதனையில் நீ எனக்கு சிறந்த பிரதிபலனை வழங்குவாயாக! என்னுடைய இந்த நிலையை விட சிறந்த பகரத்தை வழங்குவாயாக!” என்று பீரார்த்திப்பாரானால் அல்லாஹ் அவருக்கு சிறந்த பிரதிபலனை வழங்காமல் இருப்பதில்லை” என்ற பிரார்த்தனையை நபி(ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் எனக்குள் கூறிக் கொண்டேன். என் கணவர் அபூஸலமாவை விட சிறந்த முஸ்லிம் யார் இருக்க முடியும்” என்று. ஆனால், அபூஸலமாவை விட மிகச் சிறந்த அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது {ஸல்} அவர்களையே வாழ்க்கைத்துணையாக எனக்கு தந்தான். என்று உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள். ( நூல்:அல் இஸாபா, அல் இஸ்தீஆப், ஸியரு அஃலா மின் நுபலா )

 

3.கவலையை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலையக்கூடாது...

وَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَاأَسَفَى عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ (84) قَالُوا تَاللَّهِ تَفْتَأُ تَذْكُرُ يُوسُفَ حَتَّى تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ الْهَالِكِينَ (85) قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

“யூஸுஃபைப் பற்றி எனக்கு ஏற்பட்ட துக்கமே! என்று யஅகூப் கூறினார். யூஸுஃபைப் பிரிந்த கவலையால் அவருடைய இரண்டு கண்களும் பூஞ்சை அடைந்து வெளுத்து விட்டன. பிறகு அவர் தன் கவலையை விழுங்கி அடக்கிக் கொண்டார். இதைகண்ணுற்ற அவருடைய மக்கள் தந்தையே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து, களைத்து மடிந்து போகும் வரை அவர் நினைவை விட்டும் நீங்கள் நீங்க மாட்டீர்கள்” என்று கூறினர்.

 

அதற்கு யஅகூப் கூறினார்: “என்னுடைய சஞ்சலத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன். அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிகின்றேன்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 84 – 86 )

 

4.அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

فقام رسول الله- صلى الله عليه وسلم - فاستعذر يومئذٍ من عبد الله بن أبي بن سلول، قالت: فقال رسول الله - صلى الله عليه وسلم - وهو على المنبر: يا معشر المسلمين من يعذرني من رجل قد بلغني أذاه في أهل بيتي، فوا الله ما علمت على أهلي إلا خيراً، ولقد ذكروا رجلاً ما علمت عليه إلا خيراً، وما كان يدخل على أهلي إلا معي؟ فقام سعد بن معاذ الأنصاري فقال: يا رسول الله أنا أعذرك منه، إن كان من الأوس ضربت عنقه، وإن كان من إخواننا من الخزرج أمرتنا ففعلنا أمرك، قالت: فقام سعد بن عبادة -وهو سيد الخزرج وكان قبل ذلك رجلاً صالحاً ولكن احتملته الحمية- فقال لسعد: كذبت لعمر الله لا تقتله، ولا تقدر على قتله، فقام أسيد بن حضير- وهو ابن عم سعد- فقال لسعد بن عبادة: كذبت لعمر الله، لنقتلنه فإنك منافق تجادل عن المنافقين، فتثاور الحيان الأوس، والخزرج حتى هموا أن يقتتلوا ورسول الله - صلى الله عليه وسلم - قائم على المنبر فلم يزل رسول الله- صلى الله عليه وسلم -يخفضهم حتى سكتوا وسكت. قالت فمكثت يومي ذلك لا يرقأ لي دمع، ولا أكتحل بنوم قالت: فأصبح أبواي عندي وقد بكيت ليلتين ويوماً لا أكتحل بنوم، ولا يرقأ لي دمع، يظنان أن البكاء فالق كبدي، قالت: فبينما هما جالسان عندي وأنا أبكي فاستأذنت عليَّ امرأة من الأنصار فأذنت لها فجلست تبكي معي، قالت: فبينا نحن على ذلك دخل علينا رسول الله ثم جلس، قالت: ولم يجلس عندي منذ قيل ما قيل قبلها، وقد لبث شهراً لا يُوحى إليه في شأني، قالت فتشهد رسول الله- صلى الله عليه وسلم - حين جلس، ثم قال: (( أما بعد يا عائشة فإنه قد بلغني عنك كذا وكذا، فإن كنت بريئة فسيبرئك الله، وإن كنت ألممت بذنبٍ فاستغفري الله وتوبي إليه، فإن العبد إذا اعترف بذنبه ثم تاب إلى الله تاب الله عليه))، قالت: فلما قضى رسول الله- صلى الله عليه وسلم - مقالته قلص دمعي، حتى ما أحس منه قطرة، فقلت لأبي: أجب رسول الله - صلى الله عليه وسلم - فيما قال، قال: والله ما أدري ما أقول لرسول الله - صلى الله عليه وسلم -، فقلت لأمي: أجيبي رسول الله - صلى الله عليه وسلم -، قالت: ما أدري ما أقول لرسول الله - صلى الله عليه وسلم - قالت: فقلت -وأنا جارية حديثة السن لا أقرأ كثيراً من القرآن-: إني والله لقد علمت لقد سمعتم هذا الحديث حتى استقر في أنفسكم، وصدقتم به فلئن قلت لكم إني بريئة والله يعلم أني بريئة لا تصدقونني بذلك، ولئن اعترفت لكم بأمر والله يعلم أني منه بريئة لتصدقني، والله ما أجد لكم مثلاً إلا قول أبي يوسف قال: ( فصبر جميل والله المستعان على ما تصفون) قالت: ثم تحولت فاضطجعت على فراشي قالت: وأنا حينئذٍ أعلم أني بريئة وأن الله مبرئي ببراءتي، ولكن والله ما كنت أظن أن الله منزل في شأني وحياً يُتلى، ولشأني في نفسي كان أحقر من أن يتكلم الله فيَّ بأمر يُتلى، ولكن كنت أرجو أن يرى رسول الله - صلى الله عليه وسلم- في النوم رؤيا يبرئني الله بها، قالت فوا الله ما رام رسول الله - صلى الله عليه وسلم - ولا خرج أحد من أهل البيت حتى أنزل عليه، فأخذه ما كان يأخذه من البرحاء حتى أنه ليتحدر منه مثل الجمان من العرق وهو في يوم شاتٍ من ثقل القول الذي ينزل عليه، قالت فلما سُري عن رسول الله - صلى الله عليه وسلم - سُري عنه وهو يضحك، فكانت أول كلمة تكلم بها: يا عائشة أما الله - عز وجل - فقد برأك، فقالت أمي: قُومي إليه قالت فقلت: والله لا أقوم إليه ولا أحمد إلا الله - عز وجل - وأنزل الله ((إن الذين جاؤوا بالإفك عصبة منكم لا تحسبوه....) الآية العشر الآيات كلها

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தூய துணைவியர்களில் ஒருவரான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்பட்ட காலத்தில் மாநபி {ஸல்} அவர்களும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் மிகவும் கவலையுற்றிருந்தனர்.

 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு தமக்கு உதவும்படி தோழர்களிடம் கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் வதந்தி கிளப்பி எனக்கு மன வேதனை அளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன்.  அவர்கள் ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால் அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன்.  என்னோடு தான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை)'' என்று கூறினார்கள்.

 

உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அவனைத் தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகின்றேன். அவன் எங்கள் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனா யிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகின்றோம்.  எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். நாங்கள் தங்களது உத்தரவை நிறைவேற்றுகின்றோம்'' என்று கூறினார்கள்.

 

உடனே, கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவரான ஸஅத் பின் உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்களின் தாயார் இவரது குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார்.  இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார்.  ஆயினும் குலமாச்சரியம் அவரை உசுப்பி விடவே ஸஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லி விட்டீர்.  அவனை நீர் கொல்ல மாட்டீர்.  அது உம்மால் முடியாது.  அவன் உமது குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப் படுவதை நீர் விரும்ப மாட்டீர்'' என்று கூறினார். உடனே, ஸஅத் பின் முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து, ஸஅத் பின் உபாதா அவர்களிடம், "நீர் தாம் தவறாகப் பேசினீர்.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம்.  நீர் ஒரு நயவஞ்சகர்.  அதனால் தான் நயவஞ்சகர் சார்பாக வாதிடுகின்றீர்'' என்று கூறினார்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டனர்.  நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி, அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப் படுத்தினார்கள்.  பிறகு தாமும் மௌனமாகி விட்டார்கள்.

 

அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன்.  என் கண்ணீரும் நிற்கவில்லை. என்னை உறக்கமும் தழுவவில்லை.  காலையானதும் என் தாய், தந்தையர் என் அருகேயிருந்தனர்.  நானோ, இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுக்க, என் ஈரல் பிளந்துவிடுமோ என்று எண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன்.  என் கண்ணீரும் நிற்கவில்லை.  என்னை உறக்கமும் தழுவவில்லை. 

 

என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்த போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள்.  நான் அவளுக்கு அனுமதி அளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ஸலாம் கூறி அமர்ந்து கொண்டார்கள்.  என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை.  ஒரு மாத காலம் என் விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப் படாமலேயே இருந்து வந்தார்கள்.

 

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்து விட்டு, "நிற்க! ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான்.  நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி, அவன் பக்கம் திரும்பி விடு, ஏனெனில் அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்பு கோரினால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்'' என்று கூறினார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது.  அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் உணரவில்லை.  நான் என் தந்தை அபூபக்ர் (ரலி) யிடம், "அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று கூறினேன்.  அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை''  என்று கூறினார்கள்.

 

நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், "அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று கூறினேன்.  அதற்கு என் தாயார், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள்.

 

அதற்கு நான், "நானோ வயது குறைந்த இளம் பெண் ஆவேன்.  குர்ஆனிலிருந்து நிறையத் தெரியா தவளும் ஆவேன்.  இந்நிலையில் அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக் கிறீர்கள்.  அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். 

 

ஆகவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை.  நான் குற்றம் ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் - நான் குற்றமற்றவள் என்று  அல்லாஹ்வுக்குத் தெரியும் - (நான் சொல்வதை உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக!  எனக்கும் உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை நபி யஃகூப் (அலை) அவர்களையே உவமையாகக் கருதுகின்றேன்.  (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது.  நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்பு கோர வேண்டும் (அல்குர்ஆன் 12:18)'' என்று கூறினேன்.

 

நான் அப்போது குற்றமற்றவள் என அல்லாஹ் அறிவான் (அந்த அல்லாஹ்) நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் வேறு பக்கமாகத் திரும்பி படுத்துக் கொண்டேன்.

 

அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வஹீ - வேத வெளிப்பாட்டை (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.  அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது.  மாறாக, என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள்' என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை.  வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை.  அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப் படத் தொடங்கி விட்டன.  உடனே (வஹீ வரும் நேரத்தில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது.  அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

 

அவர்கள் மீது அருளப்பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் இந்தச் சிரம நிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, "ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்'' என்று கூறினார்கள்.

 

உடனே என் தாயார், "அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்'' என்று என்னிடம் கூறினார்கள்.  அதற்கு நான், "மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன்.  அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து அவனுக்கே நன்றி செலுத்துவேன்'' என்று கூறினேன்.

 

அப்போது அல்லாஹ், "(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (அல்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான்.  என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ் இதை அருளினான்.                                                   ( நூல்: புகாரி 2661 )

 

5.எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்…

أفضل العبادة انتظار الفرج من الله

 

பெருமானார் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “வழிபாடுகளில் மிகச் சிறந்தது கவலைகளில் இருந்து வெளியேருவதை எதிர்பார்த்து காத்திருப்பதாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தனிப் பெரும் பாசத்திற்குரிய நபித்தோழர்களில் இவரும் ஒருவர். நபிகளார் காலத்து கவிஞர்களில் இவரும் ஒருவர். தபூக் யுத்தத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல், கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார்கள்.                            

 

இவரோடு சேர்த்து இன்னும் இரண்டு நபித்தோழர்களும் ஹிலால் இப்னு உமைய்யா {ரலி}, முராரா இப்னு ரபீஆ {ரலி} ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.                                              

 

மாநபி {ஸல்} அவர்கள் இம்மூவரின் விஷயத்திலும் அல்லாஹ்வின் உத்தரவு வரும் வரை இம்மூவரோடும் பேசக்கூடாது என முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டார்கள்.                           

 

 இதன் பின்னர் நடந்தவைகளை கஅப் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் வாயிலாகவே நாம் அறிந்து கொள்வோம்.                 

 

கஅப் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பின் தங்கியவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் எவரும் பேசக்கூடாதென நபி {ஸல்} அவர்கள் தடை விதித்தார்கள்.             

 

மக்கள் எங்களை விட்டும் ஒதுங்கிக்கொண்டார்கள். எங்களின் விஷயத்தில் மக்களின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. எனது மனதினில் விரக்தி ஏற்பட்டு இந்தப் பூமியே என்னைப் பொறுத்தவரை அந்நிய பூமியாகத் தோன்றியது! நான் முன்பு அறிந்திருந்த பூமி போன்று அது இல்லை! ஐம்பது இரவுகளாக இந்நிலையிலேயே நாங்கள் இருந்தோம்.                       

 

என்னுடைய மற்ற இரு தோழர்களோ வீட்டிலேயே அழுத வண்ணம் முடங்கிவிட்டார்கள். மூன்று பேரில் நான் மட்டுமே வயதில் குறைந்தவன். ஆகையால், நான் வெளியில் செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்து கொள்வேன். யாருமே என்னுடன் பேச மாட்டார்கள்.                                       

 

நபி {ஸல்} அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும் போது, அவர்களின் முன் ஆஜராகி ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கின்றார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்.                                                                                                                               

 

பிறகு, அவர்களுக்கு அருகிலேயே நான் தொழுவேன். ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நபிகளார் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களின் பக்கமாக முன்னோக்கும் போதோ, என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.                   

 

இவ்வாறாக, சக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு நீடிப்பதை நான் கடினமானதாக உணர்ந்த போது ஒரு நாள் அப்படியே நான் வீதி வழியே நடந்து சென்றேன்.                           

 

அப்போது அபூ கதாதா {ரலி} அவர்களின் வீட்டருகே சென்று கொண்டிருந்தேன். அபூகதாதா {ரலி} அவர்களின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன்.                                    

 

 அவர் என் சிறிய தந்தையின் மகனாவார்! மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் அவரே! அவருக்கு நான் ஸலாம் சொன்னேன்.                                                    

 

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என் ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை. நான் அவரிடம் அபூ கதாதாவே! அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்கின்றேன்! நான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கின்றேன்? என்பது உமக்குத் தெரியாதா?” என்று நான் கேட்டேன்.                                   

 

அதற்கு அவர் அமைதியாக இருந்தார். மீண்டும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்டேன். அப்போதும் அமைதியாகவே இருந்தார்.                                                          

மூன்றாவது முறையும் கேட்டபோது, அவர் சொன்னார் அல்லாஹ்வும், அவன் தூதரும் தான் நன்கறிந்தவர்கள்என்று. இதைக் கேட்ட மாத்திரத்தில் என் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. பீறிட்டுவந்த அழுகையை அடக்கியவனாக நான் அங்கிருந்து வந்த வழியே வெளியேறினேன்.                                               

 

அப்படியே, மதீனாவின் கடைவீதியில் நான் வந்து கொண்டிருந்த போது அங்கே ஒருவன் கஅப் இப்னு மாலிக்கைப் பற்றி அறிவித்துக் கொடுப்பவர் எவரேனும் உள்ளனரா? என்று கேட்டுக் கொண்டிருந்தான். உடனே மக்கள் என்பக்கம் சுட்டிக்காட்டி அவனுக்கு நான் தான் கஅப் என்பதை அறிவித்தனர்.                                                

 

 அருகில் சென்று விசாரித்தேன். சிரியாவில் இருந்து வருவதாகவும், கஸ்ஸான் மன்னன் ஒரு கடிதம் தந்ததாகவும் என்னிடம் கொடுத்தான். அதைப் படித்தேன்.                           

 

 அதில் எழுதி இருந்ததாவது: கஸ்ஸான் மன்னனாகிய நான் எழுதுவது என்னவெனில், உம்முடைய தோழர் உம்மை வெறுத்து ஒதுக்கி விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்துள்ளது. கேவலமும், உரிமையிழப்பும் உடைய பூமியில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம்.                                          

 

இங்கே வந்து விடும். உம்மை நாம் சகல மரியாதையுடன் நடத்துவோம்.என்றிருந்தது. அதைப் படித்த போது இதுவும் ஒரு சோதனையே!என நான் என்னையே நொந்து கொண்டேன். பின்பு நான் அந்த கடிதத்தை நெருப்பில் எரித்துவிட்டேன்.                         

 

இவ்வாறாக,ஐம்பதில் நாற்பது நாட்கள் கழிந்து விட்ட போது, நபியவர்களிடம் இருந்து ஒரு தூதுவர் என்னிடம் வந்தார்.              

 

வந்தவர் என்னிடம் நீர் உம் மனைவியை விட்டும் பிரிந்திருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்என்று கூறினார்.                             

 

 என் மனைவியை மண விலக்கு செய்திட வேண்டுமா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்? என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கவர் இல்லை.. உம் மனைவியை விட்டும் விலகியிரும்! நெருங்கக் கூடாதுஎன்று தான் நபிகளார் கூறியதாக வந்தவர் கூறினார்.                                                            

 

இதே போன்ற கட்டளையை என் மற்றைய இரு தோழர்களுக்கும் மாநபி {ஸல்} அவர்கள் அனுப்பி இருந்தார்கள். அவர் சென்றதும், நான் என் மனைவியிடம் நீ உன் பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுவிடு! அல்லாஹ் என் விஷயத்தில் ஒரு தீர்வை வழங்கும் வரை அவர்களோடே தங்கியிருஎன்று கூறி அனுப்பி வைத்தேன். இதே நிலையில் பத்து நாட்கள் கழிந்தது.                          

ثُمَّ صَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ صباحَ خمْسينَ لَيْلَةً عَلَى ظهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا، فَبينَا أَنَا جَالسٌ عَلَى الْحال الَّتي ذكَر اللَّهُ تعالَى مِنَّا، قَدْ ضَاقَتْ عَلَيَّ نَفْسِى وَضَاقَتْ عَليَّ الأَرضُ بمَا رَحُبَتْ، سَمعْتُ صَوْتَ صَارِخٍ أوفَى عَلَى سَلْعٍ يَقُولُ بأَعْلَى صَوْتِهِ: يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ، فخرَرْتُ سَاجِداً، وَعَرَفْتُ أَنَّهُ قَدْ جَاءَ فَرَجٌ فَآذَنَ رسولُ الله ﷺ النَّاس بِتوْبَةِ الله عَزَّ وَجَلَّ عَلَيْنَا حِين صَلَّى صَلاة الْفجْرِ فذهَبَ النَّاسُ يُبَشِّرُوننا، فذهَبَ قِبَلَ صَاحِبَيَّ مُبَشِّرُونَ، وَرَكَضَ رَجُلٌ إِليَّ فرَساً وَسَعَى ساعٍ مِنْ أَسْلَمَ قِبَلِي وَأَوْفَى عَلَى الْجَبلِ، وكَان الصَّوْتُ أَسْرَعَ مِنَ الْفَرَسِ، فلمَّا جَاءَنِي الَّذي سمِعْتُ صوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَيَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ ببشارَته واللَّه مَا أَمْلِكُ غَيْرَهُمَا يوْمَئذٍ، وَاسْتَعَرْتُ ثَوْبَيْنِ فَلَبسْتُهُمَا وانْطَلَقتُ أَتَأَمَّمُ رسولَ الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَتَلَقَّانِي النَّاسُ فَوْجاً فَوْجاً يُهَنِّئُونني بِالتَّوْبَةِ وَيَقُولُون لِي: لِتَهْنِكَ تَوْبَةُ الله عَلَيْكَ، حتَّى دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رسولُ الله ﷺ جَالِسٌ حَوْلَهُ النَّاسُ، فَقَامَ طلْحَةُ بْنُ عُبَيْداللهِ رضي الله عنه يُهَرْوِل حَتَّى صَافَحَنِي وهَنَّأَنِي، واللَّه مَا قَامَ رَجُلٌ مِنَ الْمُهاجِرِينَ غَيْرُهُ، فَكَان كَعْبٌ لاَ يَنْساهَا لِطَلحَة.
قَالَ كَعْبٌ: فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ الله ﷺ، قَالَ: وَهوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُور "أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ، مُذْ ولَدَتْكَ أُمُّكَ" فقُلْتُ: أمِنْ عِنْدِكَ يَا رَسُول اللَّهِ أَم مِنْ عِنْد الله؟ قَالَ

 لاَ بَلْ مِنْ عِنْد الله

எங்களோடு எவரும் பேசக்கூடாது என்று தடை விதித்து ஐம்பது நாட்கள் நிறைவடைந்தது! பிறகு ஐம்பதாவது நாள் அதிகாலையில் என் வீட்டின் முகட்டில் நான் ஃபஜ்ர் தொழுகையை தொழுது முடித்துவிட்டு, (அல்லாஹ் எங்களைப் பற்றி குர்ஆனில் கூறியது போல்) இந்தப் பூமி உயிர் வாழ்வதற்கு கஷ்டமாகிவிட்டதே! பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் குறுகிப் போய் விட்டதே! என மன வேதனையோடு இருக்கும் போதே, ஸல்வு எனும் மலை மீதிலிருந்து ஓர் அறிவிப்பாளர் ஓ!...! கஅப் இப்னு மாலிக்! நற்செய்தி பெறுவீராக!என்று நற்செய்தி கூறுவதை நான் கேட்டேன்.                                   

 

அப்படியே ஸஜ்தாவில் வீழ்ந்தேன். நம்முடைய துன்பமெல்லாம் நீங்கி விட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.                            

 

நபி {ஸல்} அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்த பிறகு, ”எங்களது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு, எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்து விட்டான்என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.                                        

 

 உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்துவிட புறப்பட்டுவிட்டார்கள்.                                       

 

எவரது உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ, அவர் என்னிடம் வந்த போது அவரது நற்செய்திக்குப் பரிசாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவருக்கு அணிவித்தேன்”. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்போது அதைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை.                         

 

பின்பு நான் வேறு ஒருவரிடம் ஆடைகளை இரவலாகப் பெற்று, அதை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களைக் காண புறப்பட்டு வந்தேன்.                                             

 

வழியில் என்னைக் கண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தித்து உமது பாவ மன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு வாழ்த்துக்கள்என்று வாழ்த்துக் கூறினர்.           மகிழ்ச்சி மழையில் நனைந்தவாறே நான் பள்ளிக்குள் நுழைந்தேன்.                                                   

 

அங்கு பூமான் நபி {ஸல்} அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர்.              

அப்போது தல்ஹா பின் உபைதுல்லாஹ் {ரலி} அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். எனக்கு கைலாகு கொடுத்து, எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.                                                                                                                       

 

 அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரைத் தவிர முஹாஜிர்களில் வேறெவரும் எழுந்து வரவில்லை.                  

 

 {”தல்ஹா {ரலி} அவர்களின் இந்த உபகாரத்தை கஅப் {ரலி} உயிர் உள்ளவரை மறக்கவே இல்லை.என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் கஅப் பின் மாலிக் {ரலி} அவர்களின் மகனார் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.}                                    

 

பின்னர், நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நான் ஸலாம் கூறினேன். அப்போது மாநபி {ஸல்} அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.                               

 

நபி {ஸல்} அவர்கள் என்னைப் பார்த்து “” உம் அன்னை உம்மைப் பெற்றெடுத்த நாள் முதற்கொண்டு உமக்குக் கிடைக்கப் பெறாத சிறந்த இந் நன்நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!என்று கூறினார்கள்.                                                        

 

 நான்  இந்த வாழ்த்துச் செய்தி தாங்களிடம் நின்றும் உள்ளதா? அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததா?” என கேட்டேன். அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் இல்லை.. இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும்என்றார்கள். (  நூல்: ரியாளுஸ் ஸாலிஹீன், பாடம்:2, ஹதீஸ் எண்: 21 )

 

6. விதியைப் பொருந்திக் கொள்ள வேண்டும்…

لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

“உங்களை விட்டும் தவறிவிட்ட ஒன்றைக் குறித்து நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும், அல்லாஹ்வாகிய அவன் உங்களுக்கு வழங்கியவற்றின் மீது நீங்கள் வரம்புமீறி மகிழ்ச்சி கொள்ளாதிருக்கும் பொருட்டே இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கின்றான். அல்லாஹ் ஆணவங்கொண்டு பெருமையடித்திடும் எவரையும் ஒரு போதும் நேசிக்க மாட்டான்”.                  ( அல்குர்ஆன்: 57: 23 )

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் கவலைகள் அனைத்தையும் நீக்கி, நிம்மதியைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

      

 

6 comments:

  1. மிக அருமையான கட்டுரை ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  2. ஒரு இறைநம்பிக்கையாளன் மனஉறுதி குலைந்துவிடாமல் வாழ உறுதுணையாக இருப்பது அல்லாஹ்வின் வார்த்தைகளும் தூதரின் வழிகாட்டுதலும் சஹாபாக்களின் வாழ்வும்தான் என்பதனை அழகிய முறையில் வரலாற்று பிண்ணனியில் விளக்கியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

    ReplyDelete
  3. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமையான கட்டுரை

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் உஸ்தாத்.
    தங்களது ஆக்கங்களை நவீன காலத்திற்கேற்ப மெருகேற்றி அழகூட்டி வழங்கியுள்ளீர்கள். ஜஸாகுமுல்லாஹ் உஸ்தாத்.
    தங்களது மாணவன். : திருப்பூர் முஜீப்.

    ReplyDelete