அருள்மறைச்சாரல் – தராவீஹ் சிந்தனை:-3.
தூய்மையான சந்ததிகளை (பரம்பரையை) கட்டமைப்போம்!!!
அல்ஹம்துலில்லாஹ்!!
3 –வது தராவீஹ் தொழுகையை சிறப்பாக நிறைவு செய்து விட்டு நாம் ஆசையோடு
நேற்றிருக்கும் 3-வது நோன்பை நிறைவு செய்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல்
செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் ஆலு இம்ரான் சூராவின் 14 –வது வசனத்தில் இருந்து 11/4 ஜுஸ்வு
ஓதப்பட்டிருக்கின்றது. ஆலு இம்ரான் சூரா நிறைவு செய்யப்பட்டு, 186 வசனங்கள்
ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஆலு இம்ரான்
சூராவின் 38–ஆவது வசனம் ஒரு இறைநம்பிக்கையாளன் தமது சந்ததிகள் விஷயத்தில் எந்த
மாதிரியான ஆசையை ரப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து அல்லாஹ்
குறிப்பிட்டுப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ
لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
ஜகரிய்யா தம்
இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்: இறைவனே, உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக.
நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்”. (திருக்குர்ஆன் 3:38)
முன்மாதிரி கட்டமைப்பாளர்…
நபி இப்ராஹீம் (அலை)
அவர்களது வரலாறு குறிப்பிட்டுக் காட்டும் நுட்பமான நுணுக்கமான மிகப் பெரும் பாடம்
இதுதான். மிகவும் தூய்மையான ஒரு பரம்பரையை கட்டமைக்க - உருவாக்க அவர்கள்
அரும்பாடுபட்டார்கள்.
வாய்ப்புகள்
கிடைக்கும் போதெல்லாம் வல்லோன் அல்லாஹ்விடம் அந்த சிந்தனையை வெளிப்படுத்திக்
கொண்டே இருந்தார்கள்.
முதல் வாய்ப்பாக
அமைந்த மனித சஞ்சாரமற்ற பாலை வனத்தில் தனது மனைவியையும் பச்சிளம் பாலகனையும் இறைக்
கட்டளையின் காரணமாக விட்டு வருகின்ற போது இப்ராஹிம் (அலை) வெளிப்படுத்திய
வார்த்தைகளை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي
زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ
أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ
لَعَلَّهُمْ يَشْكُرُونَ
“இறைவா எனது பரம்பரையை உனது மாளிகைக்கு அருகில் பயிர்ப் பச்சைகள் எதுவுமற்ற
பாலைவனத்தில் குடியமர்த்தியுள்ளேன். இறைவா! அவர்களை தொழுகையை நிலைநாட்டக்
கூடியவர்களாக ஆக்கிவிடு. அவர்களின் பால் பேரார்வம் கொள்ளும் விதமாக மக்களின்
உள்ளங்களை ஆக்கிவிடு. அதன் கனிவர்க்கங்களிலிருந்து அவர்கள் நன்றி செலுத்தும்
பொருட்டு அவர்களுக்கு ஆகாரம் அளித்துவிடு” ( அல்குர்ஆன்: 14: 37 )
இரண்டாம் வாய்ப்பு
அமைந்த போது
தன் உள்ளக்கிடக்கையை இப்படி வெளிப்படுத்தினார்கள் என்று
அல்குர்ஆன் சான்றுரைக்கின்றது.
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا
يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
இப்ராஹீமின் ரப்பு
இப்ராஹீமை பல சோதனைகளைக் கொண்டு சோதித்தான். பின்னர் இப்ராஹீமே உம்மை மக்களுக்கு
இமாமாக ஆக்குகிறேன் என்று கூறியபோது தனது பரம்பரையிலிருந்தும் அப்படி (இமாம்களை)
ஆக்கி விடு என்று பிரார்த்தித்தார். ( அல்குர்ஆன்: 2: 124 ).
மூன்றாம் வாய்ப்பு
அமைந்த போது முன்பை விட மகத்தான ஆசையை வெளிப்படுத்தினார்கள்.
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً
مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ
التَّوَّابُ الرَّحِيمُ (128) رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ
يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ
وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
எங்கள் இறைவா!
எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை
உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு
முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை
ஏற்பவன் ;
நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும்
பிரார்த்தனை செய்தார்கள்).
எங்கள் இறைவா! என்
சந்ததியினரான அவர்களில் இருந்தே அவர்களுக்கு ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர் உனது
திருவசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்
கற்றுக் கொடுத்து இன்னும் அவர்களைத் தூமையாக்குவார். நிச்சயமாக! நீயே
மிகைத்தோனும், ஞானம் நிறைந்தோனுமாக இருக்கின்றாய்”. (
அல்குர்ஆன்:2: 128, 129 )
தனக்காகவும் தனது
சுய நலன்களுக்காக மட்டும் வாழாமல் இன்னும் பல வருடங்கள் கழித்து வரவுள்ள தனது
தலைமுறையின்,
சமூகத்தின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து
சிந்தித்தார்கள். அதற்காக தன்னையே அர்ப்பணித்தார்கள்.
إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا وَلَمْ
يَكُ مِنَ الْمُشْرِكِينَ
எனவேதான் நபி
இப்ராஹீமை (அலை அவர்களை) ப் பார்த்து அல்குர்ஆன் “நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகின்ற ஹனீஃபாக ஒரு தனி சமூகமாக
இருந்தார். அவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கவில்லை” (அல்குர்ஆன்: 16: :127)
என்று உயர்த்திக் கூறுகின்றது.
இந்த வசனத்தை விளக்குகின்ற ஷஹீத் செய்யிது குத்துப் (ரஹ்) அவர்கள் “அல்லாஹ் நபி இப்ராஹீமை
நேர்வழிக்கும் கட்டுப்பாட்டுக்கும் நன்றி தெரிவிப்பதற்கும் அல்லாஹ்வை மட்டுமே
சார்ந்திருப்பதற்கும் முன்மாதிரியாக குறிப்பிடுகிறான்” என்கின்றார்கள்.
மேலும், அவரை
தனிப்பெரும் சமூகமாக குறிப்பிடுகின்றான். ஒரு தனிச் சமூகம் பெற்றிருந்த அனைத்து
நலவுகளையும் அவர் பெற்றிருந்தார் என்று குறிப்பிடுகிறான். தனி மனிதனாக இருந்து ஒரு
சமூகத்தைப்பிரதிபலித்தார்.
மேலும், அவரது சிந்தனையின்,
ஆசையின் விளைவாக அவரது பரம்பரையில் அதிகமான இறை தூதர்களை
அல்லாஹ் அனுப்பினான்.
கடைசியாக நபிமார்களின்
முத்திரையாக நபி முஹம்மத் {ஸல்} அவர்களை
அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
நபி இப்ராஹீமின்
இன்னொரு தலைமுறைக்காக வேண்டிய பிரார்த்தனை நிறைவேற பல ஆயிரம் வருடங்கள்
சென்றுள்ளதை ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (
தஃப்ஸீர் ஃபீ ளிழாலில் குர்ஆன் )
வெறும் விருப்பமாக
இல்லாமல் மிகச் சிறந்த அடிப்படையில் தங்களது சந்ததிகளை இறைவனுக்கு உகந்தவர்களாக
உருவாக்கினார்கள்.
இப்ராஹீம் (அலை)
தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்தக் காரணத்தினால் தான்
அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي
الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا
تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
அவருடன் உழைக்கும்
நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான்
உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக்
கூறு” என்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால்
என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே
நாம் கூலி வழங்குவோம்”
என்று அவரை அழைத்துக் கூறினோம். ( அல்குர்ஆன்: 37: 102 )
தூய்மையான பரம்பரையை உருவாக..
நல்லொழுக்கமும்.. கல்வியும் அவசியம்..
عن أيوب بن موسى بن عمرو بن سعيد بن العاص، عن أبيه عن جده أن
رسول الله -صلى الله عليه وسلم- قال: ( ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن )
رواه الترمذي.
தந்தை தன்
தனயனுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் நல்லொழுக்கக் கல்வியை விட வேறு எந்த சிறந்த
அன்பளிப்பையும் வழங்கிட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அய்யூப்பின் மூஸா (ரலி), திர்மிதி)
عن أبي سعيد وابنِ عباسٍ قالا: قال رسول الله صلى الله عليه
وسلم: ((مَن وُلِد له ولدٌ، فليحسن اسمَه وأدبَه، فإذا بلغ فليزوِّجه، فإنْ بلَغ
ولم يزوِّجه فأصاب إثمًا، فإنَّما إثمُه على أبيه
எவருக்கு குழந்தை
பிறக்கிறதோ அவர்,
அந்த குழந்தைக்கு அழகான பெயர் சூட்டி, ஒழுக்கமும் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், பருவ வயதை அடைந்து விட்டால், அவனுக்கு அவர்
திருமணத்தையும் நடத்திவைக்க வேண்டும். இவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்தக்குழந்தை
கேட்டில் விழும்போது,
அதன் பாவம் குழந்தையின் தந்தையின் மீதும் சரிசமமாக போய்
சேரும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு
அப்பாஸ் (ரலி),
நூல்: பைஹகீ)
தன்னிறைவு பெற்றவர்களாக வாழச் செய்வது அவசியம்..
குழந்தைகளின்
வருங்கால வாழ்க்கைக்காக செல்வங்களை சேமித்து வைப்பது சிறந்த செயலாகும். இவ்வாறு
செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
நீங்கள் உங்கள்
வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத்
தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்” என சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
( நூல் : புகாரி (3936)
)
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தம் சின்னஞ் சிறிய பிள்ளைகளுக்குச்
செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர்
மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன்
வாழச் செய்கிறான்”
என்றும் கூறினார்கள் என ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
( நூல் : முஸ்லிம் (1817)
)
தீனின் மாண்புகளையும், நபி {ஸல்} அவர்களின் கண்ணியத்தையும்,
ஷரீஆவின் கோட்பாடுகளையும் பேணிப்பாதுகாக்கின்றவர்களாக உருவாக்குவது அவசியம்..
தபூக் யுத்தத்தின் போது மாநபியை இழிவாகப் பேசிய
தமது ( ஜுலாஸ் இப்னு ஸுவைபித் (ரலி) ) தந்தையைக் கண்டித்த உமைர் இப்னு ஸஅத் (ரலி) அவர்களைப்
போன்றும், பத்ர் யுத்தத்தில் அபூஜஹ்லை கொன்று குவித்த முஆத் (ரலி), முஅவ்வித் (ரலி)
போன்றும், ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபின் கொடுங்கோன்மைக்கு முன்பாக கஅபாவின் மாண்புகளைக் காப்பாற்ற
நெஞ்சுயர்த்தி நின்று தனியொரு நபராக போராடி உயிர் நீத்த ஷஹீத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்
(ரலி) போன்றும், பொய்யன் முஸைலமாவின் முன்பாக மாநபி {ஸல்} அவர்களின் கடிதத்தைக் கொடுத்து,
உயிருள்ளவரை பெருமானார் {ஸல்} அவர்களை உதாசீனப்படுத்த மாட்டேன் என உரத்துக் கூறி ஷஹாதா
உயிர் நீத்த ஹபீப் இப்னு ஜைத் (ரலி) போன்றும், குழப்பமான காலங்களில் வாழ்ந்த போதும்
ஷரீஆவின் கோட்பாடுகளை பேணி வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) போன்றும் நம் சந்ததிகள்
உருவாகுவார்கள் என்றால் நிச்சயமாக தூய்மையான பரம்பரை இந்த உலகில் கட்டமைக்கப்படும்.
எனவே, தலைமுறைகளைத் தாண்டியும் நின்றிலங்குகின்ற
பரைம்பரையை கட்டமைப்போம்! அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment