அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-9
ஒதுங்கி இருப்பது
பாவமாகும்!!
அல்ஹம்துலில்லாஹ்!!
நாம் நோற்ற 8 –வது நோன்பை சிறப்பாக நிறைவு செய்து, 9 – வது நாள் தராவீஹ் தொழுகையை
தொழுது விட்டு இறைமறையின் வசனத்தின் விளக்கத்தைப் பெறும் பொருட்டு
அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அமர்வை அருள் செய்யப்பட்ட
அமர்வாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! நம் அமர்வை பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட
அமர்வாக ஆக்கியருள்வானாக!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற
நாட்களின் நோன்புகளையும்,
வணக்க, வழிபாடுகளையும் எவ்வித
தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும்
நல்குவானாக!
ஆமீன்!!
நேற்றைய நாளின்
தராவீஹ் தொழுகையோடு 10 ஜுஸ்வுகள் நிறைவு செய்யப்பட்டு இருக்கின்றது. 7
அத்தியாயங்களும் 93 வசனங்களுமாக மொத்தம் 1321 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் அத்தவ்பா அத்தியாயத்தின் சில
வசங்களும், சூரா யூனுஸ் முழுமையாக ஓதி நிறைவு செய்யப்பட்டு, சூரா ஹூதின் 49
வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்று ஓதப்பட்ட
அத்தவ்பா அத்தியாயத்தின் 120 வது வசனத்தில் சமூகத்தின் பிரச்சினைகளின் போது ஒதுங்கி
இருப்பதன் நஷ்டம் குறித்து அல்லாஹ் ஆதங்கத்துடன் கூறுகின்றான்.
தபூக்
யுத்தத்திற்கு வராமல் ஊரிலேயே தங்கி விட்டவர்களின் நிலைமை, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார நெருக்கடி, அவர்களின் மன்னிப்பு என பேசி வந்த இறைவன் தொடர்ந்து அவர்களின் செயல் குறித்து
ஆதங்கத்துடன் பதிவு செய்வதை அவ்வளவு எளிதாக ஒரு முஃமின் கடந்து போய்விட முடியாது.
مَا
كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ
يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ
نَّـفْسِهٖ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا
مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ
الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ
عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின்
தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல;
ஏனென்றால்
அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு
செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
وَلَا
يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا
اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ,
(எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான். ( அல்குர்ஆன்: 9: 120 )
சமூகத்திற்கு
பேராபத்து சூழ்ந்திருக்கும் வேளையில் சமூகத்தைவிட்டு ஒதுங்கியும் விலகியும்
வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.
இந்த
சமூகத்தில்தான் நாம் பிறந்துள்ளோம். எனவே இந்த சமூகத்தின் நெருக்கடியைத் தடுத்து
நிறுத்த வேண்டியதும் நமது கடமையே அன்றி வேறெவர் மீதும் இல்லை.
இதற்காக இறைவன் எப்போதும் வானவர்களையும், அபாபீல்களையும் அனுப்பிக் கொண்டே இருக்க மாட்டான்.
ஆகவேதான்
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம்களின்
விவகாரங்களில் இருந்து விலகி, கலைப்படாமல் வாழ்பவர்
முஸ்லிமே இல்லை" என்று.
عن أبي
ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال
من لم
يهتم بأمر المسلمين فليس منهم
أخرجه
الطبراني في "المعجم الأوسط" (1/29)
“முஸ்லிம் சமூகத்தின்
விவகாரங்களில் யார் ஒதுங்கி இருக்கின்றார்களோ, கவலைப் படாமல்
இருக்கின்றார்களோ அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்லர்” என நபி {ஸல்}
அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: தப்ரானீ )
இன்னும் சிலர்
ஒதுங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இதைச் செய்யாததால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று கூறுவர். இதுவும் தவிர்க்கப்பட
வேண்டிய ஒன்றாகும்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ
الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ
بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي
فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ
فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
صحيح
مسلم) 142/13)
பலசாலியான இறை
நம்பிக்கையாளன் பலவீனமான இறை நம்பிக்கையாளனை விட சிறந்தவன், அல்லாஹ்விடம் நேசத்திற்குரியன். (இருப்பினும்) அனைவரிலும் நன்மை உண்டு. உனக்கு
பயன் தரும் விஷயத்தில் நீ ஆசைகொள். (அதற்காக) அல்லாஹ்விடம் உதவி தேடிக் கொள்.
மனவலிமையை இழக்காதே! ஏதாவது உனக்கு நேர்ந்து விட்டால் நான் இவ்வாறு இவ்வாறு
செய்திருந்தால் என்ன என்று பேசிக் கொள்ளாதே! மாறாக, அல்லாஹ்வின் (கத்ர்) முன்னேற்பாடு அவன் விரும்பியதை செய்பவன் என்று கூறிக்
கொள். ஏனெனில் அப்படி,
இப்படி செய்தால் என்பது ஷைத்தானின் செயற்பாட்டை
திறந்துவிடும் என நபி (ஸல்) அவர்ள் கூறினார்கள் (முஸ்லிம்)
நெருக்கடியான
காலகட்டங்களில் தனியாகவோ,
குழுவாகவோ செயல் பட்டு மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும்
பயன் தரும் வகையில் நாம் இருக்க வேண்டும்.
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانْفِرُوا ثُبَاتٍ أَوِ انْفِرُوا
جَمِيعًا
النساء
: 71
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து
கொள்ளுங்கள். (எச்சரிக்கையாக இருங்கள்), பிரிந்தவர்களாகவோ, சேர்ந்தோ போருக்குப் புறப்படுங்கள். (அந்நிஸா: 71)
நெருக்கடியான
காலகட்டங்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை எச்சரிக்கின்ற வசனமாக
இவ்வசனம் அமைந்துள்ளது.
ادْخُلُوا
مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا
يَشْعُرُونَ (18)
நபி ஸுலைமான் (அலை) அவர்களும் அவருடைய படைகளும் எறும்புகள் வசிக்கும் பள்ளத்தக்கின் அருகில் வந்த
பொழுது (தலைமை வகிக்கும்) ஒர் எறும்பு மற்ற எறும்புகளை நோக்கி, ”நீங்கள் உங்களுடைய வீடுகளுக்குள் (புதர்களுக்குள்) புகுந்து கொள்ளுங்கள்! ஸுலைமானும்
அவருடைய படையினரும் தங்களையும் அறியாமல் உங்களை மிதித்து விட வேண்டாம்” என்று கூறியது. (அல்குர்ஆன்:27: 18)
மேலே சொன்ன இறைவசனத்தில்
ஒரு எறும்பு எப்படி தனது சமூகத்தை நபி சுலைமான் (அலை) அவர்களிடமிருந்தும்,
அவர்களின் படையினரிடமும் இருந்து காப்பற்ற
தனது சமூகத்தைப் பார்த்து இவ்வாறு சொன்னதோ அது போன்று தன் சமூகத்திற்கு ஏற்படும் நெருக்கடியான
நேரத்தில் ஒதுங்கி இருக்காமல் தன்னால் ஆன பங்களிப்பை, ஒத்துழைப்பை நல்குவது
ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். அதே நேரம் எனக்கென்னா என்று ஒதுங்கி இருப்பது
பாவமாகும்.
இதனால் தான் தன் சமூகம்
யாராலும் நசுக்கப்பட்டு விடக்கூடாது என்ற சமூக உணர்வு கொண்ட எறும்பு கூட
அல்லாஹ்வால் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளதோடு, இந்த வசனம் இடம் பெற்றுள்ள இந்த
மொத்த அத்தியாயத்திற்கே எறும்பு என்று தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த உம்மத்திற்கு
ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
அப்படியான எல்லா
கால கட்டங்களிலும் மேன்மக்களில் பலர் அரும்பாடு பட்டு மிகச் சிறப்பான பங்களிப்பை
வழங்கியுள்ளார்கள் என்று வரலாறு சொல்கிறது.
இஸ்லாமிய
வரலாற்றில் இறைதூதர் {ஸல்} அவர்களின் காலத்திலிருந்தே மகத்தான பங்களிப்புகள்
ஆரம்பமாகியது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் மிக அதிகமானோர் இளைஞர்களாக
இருந்தனர். மிக முக்கிய கட்டங்களின் போது அந்த இளைஞர்கள் எவ்வாறு
பங்களிப்பு செய்தார்கள் என்பதை
கீழே இரண்டு நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.
மக்காவில் இஸ்லாம்
பரவ ஆரம்பித்த தருணம் அது. மக்காவில் முஸ்லிம்கள் ஒன்று கூட ஒரு இடம்
தேவைப்பட்டது. அப்போது தம் வீட்டைக் கொடுத்துதவியவர் அர்க்கம் இப்னு அபில்அர்க்கம்
(ரழி) என்ற 16
வயது மட்டுமே நிரம்பிய இளைஞர்.
மாநபி {ஸல்}
அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற சந்தர்ப்பத்தில் நிராகரிப்பாளர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வீட்டை சூழ்ந்திருந்த
போது அவர்களது படுக்கையில் படுத்தவர் அலி (ரழி) என்ற இளைஞரே. அது அவரது
மரணப்படுக்கையாகக் கூட அமைந்திருக்க முடியும்.
இந்த இரண்டு
இளைஞர்களின் மகத்தான பங்களிப்பு தான் இஸ்லாம் இன்று தழைத்தோங்க அடிப்படையாய்
அமைந்தது.
அபூபக்ர் (ரலி)
ஆட்சி காலத்தில் யமாமா யுத்தத்தில்
குர்ஆனை மனனம் செய்திருந்த
70 ஹாஃபிழ்களின் வீர மரணம்
நபித்தோழர்களுக்கு இடையே
மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.
இப்படியே ஹாஃபிழ்களின்
மரணம் தொடருமேயானால் இந்த
உம்மத்திற்கு பெருமானார் {ஸல்}
பேரொளியாக விட்டுச் சென்றிருக்கிற
குர்ஆன், ஸுன்னா என்கிற
இரண்டில் ஒன்றான குர்ஆன்
உடைய நிலைமை என்னவாகும்
என்பதே அந்த அச்சத்திற்கு
மூல காரணம் ஆகும்.
எனவே, அவர்களுடைய
இந்த அச்சம் அவ்வப்போது
நிகழ்கிற சந்திப்பின் ஊடாக
பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
இறுதியாக ஆட்சியாளர்
அபூபக்ர் (ரலி) அவர்களின்
கவனத்திற்கு உமர் (ரலி)
அவர்களின் மூலமாக கொண்டு
செல்லப்பட்டது.
ஜைத் பின் ஸாபித்(ரலி)
அவர்கள் கூறுகிறார்கள்: “யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர் (ரலி) என்னை
கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற
போது அவர்களோடு உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என
உமர்
என்னிடம் வந்து கூறினார்.
அதற்கு நான்
உமரிடம்,
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர்,
அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின்
கருத்தை
நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலை ஜைத் இப்னு ஸாபித் (ரலி)
அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்].
ஜைத் (ரலி)
தொடர்ந்து
கூறுகிறார்கள்: அபூபக்ர் தொடர்ந்து என்னைப்பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர் மாநபி {ஸல்} அவர்களுக்கு
வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள் உங்களை நாங்கள் சந்தேகிக்கவில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள்.
அல்லாஹ்வின் மீது
சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர்,
உமர் இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை
நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி அபூபக்ர் என்னிடம்
திரும்பத்திரும்ப
பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ஆகியோரின் மனதில்
எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ
அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.
அதன் பின் குர்ஆனை
பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன்
அபூபக்ர் அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. ( நூல்: புகாரி, 4986 )
அன்று அபூபக்ர்
(ரலி)
அவர்கள் உமர் (ரலி)
அவர்களின் மூலமாக வந்த
இந்த உம்மத்தின் கவலையை,
பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்து
தீர்வை நோக்கி நகர்ந்து
உடனடியாக செயல் பட்டிருக்காவிட்டால் இன்று உலகின்
200 கோடிக்கும் மேலான மக்களின்
நாவுகளிலும், இதயங்களிலும் இறைவனின்
வார்த்தையான குர்ஆன் இடம்
பெற்றிருக்காது. அன்றைக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் “ஒதுங்கி இருந்தால்?”..
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அல்லவா?..
எனவே, இந்த சமூகத்தின் தேவைகளின் போது, எதிர் கொள்ளும்
நெருக்கடிகளின் போது ஒதுங்கிக் கொள்ளாமல் நம்மால் ஆன பங்களிப்பை செய்வோம். சமூகத்தின்
உயர்வுக்கு காரணமாய் ஆவோம்!!
மாஷா அல்லாஹ் சிறந்த பதிவு
ReplyDelete