Thursday, 12 May 2022

குடும்ப அமைப்பு குறித்த இஸ்லாமிய வழிகாட்டல்!!

 

குடும்ப அமைப்பு குறித்த இஸ்லாமிய வழிகாட்டல்!!


கூட்டமாக வாழும் எல்லா உயிரினங்களும் குடும்பமாக வாழ்வதில்லை. ஆனால் உலகில் குடும்பமாக வாழும் பாக்கியம் பெற்ற ஒரே இனம் அது மனித இனம் தான் என்றால் அது மிகையல்ல.

எனவே குடும்ப அமைப்பை நாம் சர்வ சாதாரணமாக எண்ணி விட இயலாது.

இறைவன் நமக்களித்துள்ள எண்ணற்ற அருட்கொடைகளில் குடும்ப அமைப்பும் ஒன்றாகும்.

மேற்கத்திய கலாச்சார மோகத்தால் இந்த மனித சமூகம் இழந்து நிற்கிற மகத்தான பல பண்பாடுகளில் குடும்ப அமைப்பும் ஒன்றாகும்.

அதை இன்றைய சர்வதேச உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. ஆம்! ஆதலால் தான் 1993 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 15 -ம் தேதியை "குடும்ப தினம்" ஆக அறிவித்தது ஐ.நா,.

அன்றைய தினத்தில் "குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் குறித்து" மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் குடும்ப உறவுகளின் மகிமையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் ஐ.நா., வேண்டுகோள் விடுத்தது.

இன்று அது கொண்டாடடப்படும் தினங்களில் ஒன்றாக இடம் பெயர்ந்து விட்டது.

குடும்ப தினம் கொண்டாடப்படும் இந்த உலகில் தான் குடும்ப வன்முறை சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. 

குடும்ப தினம் கொண்டாடப்படும் இந்த உலகில் தான் "முதியோர் இல்லங்கள்" புற்றீசல் போல் எங்கும் வியாபித்து நிற்கிறது.

குடும்பம் என்றால் என்ன?

குடு + இன்பம் = குடும்பம். இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. 

இன்பத்திலும், துன்பத்திலும் நம் உடன் இருப்பவை குடும்பம் தான். 

குடும்பங்களே நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கின்றன. குடும்பங்களே வாழ்விற்கு அர்த்தங்களைத் தருகின்றன. மனிதன் தொடர்ந்து இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப அமைப்பு தான். தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருப்பதும் அவை தான்.

ஆத்ம உணர்வையும், நல்ல பண்புகளையும் தருவது குடும்பங்கள் தான்.  குடும்பங்கள் தரும் ஆறுதலையும், ஆதரவையும் வேறு எவராலும் தர முடியாது. தடம் மாறிப் போகாமலும், தடுமாறிப் போகாமலும் இருப்பதற்கான பின்னணி குடும்பங்கள் தான். 

மே 15 சர்வதேச குடும்ப தினம். கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை அருமையை உணர்த்தும் வகையில் சர்வதேச குடும்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து... தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்... இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. இதைக் கவனத்தில் கொண்டுதான் ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வீடு என்பது தங்குமிடம் என்ற அளவில் மட்டும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம், ஆனால் சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புதமான அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் குடும்ப அமைப்பு என்பதையும், அமைதி தவழுமிடம், மகிழ்ச்சி பொங்குமிடம் என்று நாம் அறியாமலிருக்கிறோம்!

குடும்ப வாழ்வு ஒரு இபாதத் வணக்கம்...

இஸ்லாம் குடும்பம் என்ற அமைப்பை உறுதியான அடித்தளங்களின் கீழ் அமைத்துத் தருகின்றது. இஸ்லாம் ஏற்படுத்தித்தரும் குடும்ப அமைப்பு நிலைத்து நின்று, குடும்ப உறுப்பினர்களுக்கு நிலையான பாதுகாப்பை வழங்கும்.

இஸ்லாத்தின் குடும்ப வாழ்க்கையின் அடிப்படையாக அமைவது இரத்த பந்தங்களினால் ஏற்படும் பிணைப்பும், திருமணங்களின் மூலம் ஏற்படும் உறவுகளுமாகும்.

குடும்பம்என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள், அல்லது பால்குடி உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக் குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல் என ஒரு குடும்பம் சுமூகமாக வாழ்ந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும்.


(الخلق عيال الله، فأحبهم إلى الله أنفعهم لعياله)

أخرجه السيوطي في الجامع الصغير برقم 115، بلفظ

 وقال النبي صلى الله عليه وسلم: «كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَعُولُ».

படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும். மனிதர்கள் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவர். குடும்பத்தார்களுக்கு மிகவும் பயனளிப்பவராக இருப்பவரே! என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஒரு மனிதன் பாவி என்பதற்கு தன் குடும்பத்தை கவனிக்காமல் இருந்து கொண்டு, குடும்ப உறவுகளை பாழ்படுத்தும் இந்த செயலே போதுமானதானதாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குடும்ப வாழ்வை இஸ்லாம் உலகில் தோன்றிய எல்லா நபிமார்களின் சுன்னா என்று அறிமுகப்படுத்துகிறது.

நபியே உங்களுக்கு முன்னரும் பல தூதுவர்களை நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் சந்ததிகளையும் நாம் வழங்கியிருந்தோம்.” (அல்குர்ஆன்: 13: 38)

இங்கு குடும்பம் என்பது எல்லா நபிமார்களின் வாழ்க்கை முறையாக இருந்தது என்பது வலியுறுத்தப்பட்டது போல் அந்த வாழ்வு முறை அல்லாஹ்வின் ஏற்பாடு, அவன் அளித்த ஒரு அருள் என்பதையும் உணர்த்தி செல்வதை காணலாம்.

நபி {ஸல்} அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். திருணம் எனது சுன்னாவாகும். எனது சுன்னாவை நிறைவேற்றாதவன், என்னைச் சார்ந்தவனல்ல” (ஸஹீஹ் ஜாமிஃ). இந்த ஹதீஸ் குடும்ப வாழ்வு நபியவர்களது சுன்னா என்பதையும் அதனை தவிர்த்து வாழ்வது இந்த உம்மத்தின் இயல்பு அல்ல என்பதையும் குறிப்பிடுகிறது. அந்தவகையில் திருமணம் அல்லது குடும்ப வாழ்வு என்பது தூதுவர்களின் வாழ்க்கை முறை என்ற வகையில் அது ஒரு வணக்கமாக மாறுகிறது.

பெண்களை விட்டுவிட்டு ஆண்களைத் தீண்டும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்திருந்த ஒரு சமூகத்திற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவர் லூத் (அலை) அவர்கள். இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு. அல்லாஹ்விடம் அவர் தொடர்ந்து இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றார்: என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!” (அல்குர்ஆன்: 26:169)

தமது குடும்பத்தினரை அந்த கேடுகெட்ட இழி செயலில் இருந்து காப்பாறுமாறு அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தனை புரிகின்றார் எனில் தமது குடும்பம் குறித்து அவர் எந்த அளவு கவலை கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது.

மூஸா (அலை) அவர்களுக்கு தூதுத்துவம் வழங்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர் விடுத்த முதல் வேண்டுகோள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக; அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக! மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக!” ( அல்குர்ஆன்: 20: 29-32 )

மூஸா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவரைப் பாதுகாப்பதற்கும், தயார்படுத்துவதற்கும் அவரது தாயாரும் சகோதரியும் அளித்த பங்களிப்புகள் குறித்து திருக்குர்ஆனின் 28 வது அத்தியாயம் (வசனங்கள் 10-13) விரிவாக விளக்குகிறது.

குடும்ப வாழ்வின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் நன்மைகள் கிடைக்கின்றன என்பதாகும். இது அல்குர்ஆனும் சுன்னாவும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்திய ஒரு உண்மையாகும்.

குடும்ப வாழ்வின் மிகப் பிரதானமான செயற்பாடுகள் அனைத்தும் நன்மைகளை அள்ளி வழங்கும் செயல்கள் என்றே அல்குர்ஆனும் சுன்னாவும் அறிமுகம் செய்கின்றன.

குடும்பத்திற்காக செலவு செய்தல் குறித்து நபியவர்கள் கூறியுள்ளதைப் பாருங்கள். அல்லாஹ்வின் பாதையில் ஒரு தீனாரை செலவு செய்கிறாய், ஒரு அடிமையை விடுதலை செய்வதற்காக ஒரு தீனாரை செலவு செய்கிறாய், உனது குடும்பத்திற்காக ஒரு தீனாரை செலவு செய்கிறாய். இவற்றில் மிகப் பெரிய நன்மையை பெற்றுத் தருவது உனது குடும்பத்திற்காக செலவு செய்த ஒரு தீனாராகும்என்றார்கள். (முஸ்லிம்)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை சற்று கவனித்துப் பாருங்கள். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொன்றும் மிகப்பெரும் நிதியை வேண்டி நிற்கும் விவகாரங்கள். ஒன்று இஸ்லாமிய தஃவா, இரண்டு மனித உரிமைகள் விவகாரம். உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மிகப்பெரிய விவகாரங்கள் இவை. இவற்றை விடவும் குடும்பத்திற்காக செலவு செய்தல் அதிக நன்மைகளை பெற்றுத் தரக் கூடியதாகும்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ﴾ [التحريم: 6].

அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”. (அல்குர்ஆன் 66:6)

குடும்ப உறவுகள் எது? யார்? யார்?

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, சகோதரனின் மக்கள், சகோதரியின் மக்கள், தாயின் சகோதரன், தாயின் சகோதரி அவர்களின் மக்கள், தந்தையின் சகோதரன், தந்தையின் சகோதரி மற்றும் மனைவி மக்கள், மனைவியின் மூலம் உருவான உறவுகள் பால்குடியின் மூலம் ஏற்பட்ட சகோதர, சகோதரி உறவு. அல்குர்ஆனின் முறையே 4: 11, 12 மற்றும் 23, மற்றும் 24: 31 மற்றும் 61 ஆகிய வசனங்களிலும், 25: 54 –ம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இந்த உறவுகளில் தாய் தந்தை முதலிடம், அதன் பிறகு சகோதர சகோதரிகள், அதன் பிறகு மனைவி மக்கள், அதன் பிறகு தந்தை வழி உறவுகள், அதன் பிறகு தாய் வழி உறவுகள், அதன் பிறகு சகோதரன் சகோதரி வழி உறவுகள், அதன் பிறகு மனைவி வழி உறவுகள், அதன் பிறகு இன்ன பிற உறவுகள், அதன் பிறகு தூரத்து உறவுகள், அதன் பிறகு கிளை உறவுகள் என பல்வேறு உறவு முறைகளும், அவர்களின் மீதான கடமைகளும், உரிமைகளும் ஸுன்னாவின் மூலம் வழிகாட்டப்பட்டுள்ளன.

இவர்களில் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டிய உரிமைகளும், கடமைகளும் வேறுபடும்.

உதாரணமாக, தாய் தந்தையரின் கடமைகளோடும், உரிமையோடும் நிகரான ஒரு உரிமையோ கடமையோ எவருக்கும் தந்திட இயலாது.

அக்காள் – தம்பி, அண்ணன் – தங்கை இடையேயான உறவு…

இன்று சமுதாயத்தில் மிகப் பெரிய அளவிலான சிக்கலான உறவாக, விரைவில் வீழ்த்தப்படும் ஒரு உறவாக, பாரிய விரிசலை சந்தித்திருக்கும் ஒரு உறவாக கருதப்படும், விமர்சிக்கப்படும், விவாதப் பொருளாக மாறியிருக்கும் ஒரு உறவு  சகோதரன் – சகோதரி இடையேயான உறவு தான். அக்காள் – தம்பி, அண்ணன் – தங்கை இடையேயான உறவு தான்.

திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வில் ஒரு ஆண் சந்திக்கும் முதல் முறிவே தன் சகோதரிகளுடனான (அக்காள் – தங்கை) உறவு முறித்தல் தான்.

உண்மையில் மேற்கூறிய உறவு அனைத்து சமூக மக்களிடையேயும் போற்றுதலுக்குரிய உறவாக இருப்பதைப் போன்றே இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் நெகிழ்வையும், ஆச்சர்யத்தையும் தருவதாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.

அண்ணன் தங்கையுடனான பாசப்பிணைப்பு…

روى البخاري عن معقل بن يسار قال: زوجت أختاً لي من رجل، فطلقها، حتى إذا انقضت عدتها جاء يخطبها، فقلت له: "زوجتك وفرشتك وأكرمتك، فطلقتها، ثم جئت تخطبها؟ لا والله، لا تعود إليك أبدًا"، وكان رجلاً لا بأس به، وكانت المرأة تريد أن ترجع إليه، فأنزل الله هذه الآية: {فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ} [البقرة:232] فقلت: "الآن أفعل يا رسول الله"، قال: فزوجها إياه (رواه البخاري).

என் சகோதரியை என் சிறிய தந்தையின் மகனான  ஜமீல் இப்னு அப்துல்லாஹ் (ரலி) என்பவருக்கு மணமுடித்து வைத்தேன். சில காலம் அவளுடன் வாழ்க்கை நடத்தி விட்டு அவளை (ரஜ்யீ) தலாக் கூறி விட்டார். ஆனால், அவளை இடையிலேயே மீட்டிக் கொள்ளாததால் இத்தாக் காலம் கடந்து விட்டது. பின்னர், அவர் தமது செய்கையின் மீது வருந்தி என் சகோதரியிடம் சென்று அவளையே மணந்து கொள்வதாகக் கூறியதை என் சகோதரி ஏற்றுக் கொண்டதால் மீண்டும் ஒருவரை ஒருவர் விரும்பினர். அவளைப் புதிதாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

நான் அவரிடம் “நான் அவளை முன்னரே உனக்கு திருமணம் செய்து வைத்தேன். உன்னை சங்கை செய்தேன். ஆனால், அவளை நீ விவாக விலக்கு செய்து விட்டு மீண்டும் மணப்பேச்சு பேசிக் கொண்டு வருகின்றாயா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி அவள் உனக்கு மனைவியாக வரமாட்டாள் என கண்டிப்புடன் கூறி விட்டேன். அவர் நல்ல மனிதர் தான். என் சகோதரியும் மீண்டும் அவரை கணவராக அடைய விரும்புகின்றாள். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அப்போது அல்லாஹ் இந்த இறைவசனத்தை இறக்கியருளினான். அப்போது நபி {ஸல்} அவர்கள் “அவருக்கே மணமுடித்துக் கொடு என்றார்கள். நானும் எனது சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்து விட்டு என் சகோதரியை முந்தைய கணவருக்கே அவள் விருப்பப்படி திருமணம் செய்து கொடுத்தேன்” என மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ مَالِكٍ، ثنا الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ، ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، ح، وَحَدَّثَنَا حَبِيبُ بْنُ الْحَسَنِ، ثنا أَبُو مُسْلِمٍ الْكَشِّيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَنْصَارِيُّ، قَالَا: ثنا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ النَّضْرِ، عَمَّتِهِ لَطَمَتْ جَارِيَةً، فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَعَرَضُوا عَلَيْهِمُ الْأَرْشَ فَأَبَوْا، فَطَلَبُوا الْعَفْوَ فَأَبَوْا، فَأَتَوَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُمْ بِالْقِصَاصِ، فَجَاءَ أَخُوهَا أَنَسُ بْنُ النَّضْرِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَيُكْسَرُ سِنُّ الرُّبَيِّعِ؟ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَا تُكْسَرُ سِنُّهَا، قَالَ: «يَا أَنَسُ، كِتَابُ اللهِ الْقِصَاصُ» فَعَفَى الْقَوْمُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ»

ஒருமுறை ருபைஉ பின்த் அந்-நள்ருக்கும் அன்ஸார் குலத்தைச் சேர்ந்த ஒரு பணிப் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிரச்சினை முற்றிப் போனது. ருபைய்யி, அப்பணிப் பெண்ணைத் தாக்கியதில் அப்பெண்ணின் முன்வரிசைப் பல் ஒன்று உடைந்துவிட்டது. அப்போது ருபைஉ (ரலி) அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள். நஷ்ட ஈடு வழங்க முன்வந்தார்கள். ஆனால், அவர்கள் மறுத்து விட்டனர். பின்னர் பணிப் பெண்ணின் குடும்பத்தினர் பல்லையும் வழக்கையும் நபியவர்களிடம் கொண்டு வந்தனர்.

கிஸாஸ்! பல்லுக்குப் பல்என்று தீர்ப்பளித்தார்கள் நபியவர்கள். ருபைஉ (ரலி) குடும்பத்தினருக்கு அதிர்ச்சி! ருபைய்யியின் சகோதர் அனஸ் இப்னு நள்ரு (ரலி) “அல்லாஹ்வின்மீது ஆணையாக! அப்படியெல்லாம் நடக்கக் கூடாதுஎன்று தம் கவலையைத் தெரிவித்தார். ஆனால் நபியவர்கள், “அல்லாஹ்வின் கட்டளை இதுஎன்று அறிவித்துவிட்டார்கள். உயர்ந்தோன், தாழ்ந்தோன், செல்வாக்கு, குலப்பெருமை எதுவும் இறைவனின் சட்டத்தில் குறுக்கிட முடியாது எனும் திட்டவட்டமான அறிவிப்பு.

நியாயம் கிடைத்த திருப்தியில், இரக்க மேலீட்டால் அப்பணிப் பெண்ணின் குடும்பத்தினர் நபியவர்களிடம் வந்து தாங்கள் ருபைய்யி பின்த் அந்-நள்ரை மன்னித்துவிடுவதாகக் கூற, தண்டனை கைவிடப்பட்டது.

நபியவர்கள், “அல்லாஹ்வின் அடியார்கள் சிலர் உள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அவர்கள் சில விஷயங்களைக் கூறினால், அருளாளனான அல்லாஹ் அதை அவர்களுக்காகக் கண்ணியப்படுத்துகிறான். அதை நடத்திக் கொடுக்கின்றான். அவர்களுள் ஒருவர் அனஸ் இப்னு நள்ருஎன்று தெரிவித்தார்கள். 

தங்கைகளுக்காக தன் உணர்ச்சியை தியாகம் செய்த வாலிபர்…

غزوت مع رسول الله صلى الله عليه وسلم فقال لي: «ما تزوجت يا جابر.. أبكراً أم ثيبًا؟» فقلت له: "تزوجت ثيبًا"، قال: «أفلا تزوجت بكراً تلاعبك وتلاعبها؟» فقلت له: "يا رسول الله، توفي والدي -أو استشهد- ولي أخوات صغار، فكرهت أن أتزوج إليهن مثلهن، فلا تؤدبهن ولا تقوم عليهن، فتزوجت ثيبًا لتقوم عليهن وتؤدبهن" (رواه مسلم). وعند البخاري أن جابرًا قال: هلك أبي وترك سبع بنات أو تسع بنات، فتزوجت امرأة ثيباً، فقال لي رسول الله صلى الله عليه وسلم: «تزوجت يا جابر؟» فقلت: "نعم"، فقال: «بكراً أم ثيبًا؟» قلت: بل ثيبًا، قال: «فهلا جارية تلاعبها وتلاعبك، وتضاحكها وتضاحكك؟» قال: فقلت له: إن عبدالله -أي أبوه- هلك وترك بنات، وإني كرهت أن أجيئهن بمثلهن، فتزوجت امرأة تقوم عليهن وتصلحهن فقال: «بارك الله لك»، أو قال: «خيرًا» (رواه البخاري).


தாதுர் ரிகாஃ எனும் யுத்தம் முடிந்து காலையில் இஸ்லாமியப் படையினர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) வின் பேரீத்த மரங்களுக்கு நீர் சுமக்கும் ஒட்டகம் மிகவும் களைப்படைந்து நடக்க முடியாமல் அனைவருக்கும் கடைசியாக வந்து கொண்டிருந்தது. 

 

நபி (ஸல்): யாரது? ஜாபிரா?

 

ஜாபிர் (ரலி): ஆமாம். நான்தான், யா ரசூலல்லாஹ்!

 

நபி (ஸல்): உன் ஒட்டகத்திற்கு என்ன ஆயிற்று?

 

ஜாபிர் (ரலி) : அது களைப்படைந்து விட்டது. ஆதலால், நான் பின் தங்கி விட்டேன், யா ரசூலல்லாஹ்.

 

(அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சற்றுப் பின்தங்கி அந்த ஒட்டகையை அதட்டி அதற்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே, அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகத்தை எல்லாம் முந்திக் கொண்டு ஓடத் துவங்கியது)

 

நபி (ஸல்): ஜாபிர். நீ திருமணம் முடித்து விட்டாயா?

 

ஜாபிர் (ரலி): ஆமாம். அல்லாஹ்வின் தூதரே. நான் புது மாப்பிள்ளை!

 

நபி (ஸல்) : அட. அப்படியா! யாரை மணமுடித்தாய்? கன்னிப் பெண்ணையா?

 

ஜாபிர் (ரலி): இல்லை. வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான், அல்லாஹ்வின் தூதரே!

 

நபி (ஸல்): நீ கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கூடிக் குலாவி மகிழ்ந்து விளையாடலாமே? (எனச் சிரித்துக் கொண்டே கேட்டார்கள்)

 

ஜாபிர் (ரலி): அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயதுடைய தங்கைகள் ஏழு பேர் இருக்கும் நிலையில் என் தந்தை உஹத் போரில் ஷஹீதாகிவிட்டார்கள். எனவே, என் தங்கைகளுக்கு ஒழுக்கமும் கல்வியும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களை நல்ல முறையில் தலைவாரிப் பராமரித்து வருவதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன்.

நபி (ஸல்): மிக்க நல்ல காரியம்தான் செய்திருக்கின்றாய்” அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

இன்றைய சூழலிலும் நிறைய சகோதர சகோதரிகள் இப்படி பாசப்பிணைப்புடன் இருந்தாலும் வாழ்வின் இறுதி வரை அது நீடிப்பதில்லை.

எனவே, குடும்ப அமைப்பை சிதைவுறாமல் பேணிப் பாதுகாப்போம்!

3 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அருமையான பதிவு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், கருத்துகள் நிறைந்த பதிவு.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை

    ReplyDelete