பேரிடர்களின் போது நாம் கவனிக்க வேண்டிய
9 விஷயங்கள்!!!
திருநெல்வேலி, தூத்துக்குடி,
தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்ததும், அதை தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்பை சந்தித்துள்ளதும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளதும் நாம் அறிந்த ஒன்றாகும்.
கடந்த வாரம்
தமிழகத்தின் தலைநகர் கண்ட பேரிடரில் இருந்து மீளாத நிலையில் தற்போது தென்
மாவட்டங்களின் பேரிடர் நம்மை கலக்கமடையச் செய்திருக்கின்றன.
குறிப்பாக
தூத்துக்குடி மாவட்டத்தில் 40 லட்சம் மக்களும்
பேரிடரில் நேரடியாக ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மத்திய
அரசுக்கு கூடுதல் நிதி கேட்டு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில்
ஒரு முஸ்லிமாக,
ஒரு மனிதனாக நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?.
இஸ்லாம் கூறும்
நற்பண்புகளுள் சக மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும்.
சக மனிதர்கள் நம்
உறவினர்களாக இருக்கலாம் அல்லது அண்டை வீட்டினராக இருக்கலாம், அல்லது நம்முடன் பணி புரிபவர்களாக இருக்கலாம். இன்னும் நம்முடன் பயணம்
செய்பவர்களாகவோ,
அல்லது வழிப்போக்கர்களாகவோ இருக்கலாம். நமக்கு
தெரியாதவர்களாக கூட இருக்கலாம், யாராக இருந்தாலும்
அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இன்பமும்
துன்பமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. வாழ்நாள் முழுவதும்
ஒருவர் இன்பமாகவே வாழ்ந்தார் என்று எந்த வரலாறு கிடையாது.
வாழ்நாள் முழுவதும் ஒருவர் துன்பத்துடனே வாழ்ந்தார் என்று
எந்த சரித்திரமும் கிடையாது.
மனித வாழ்வென்பது
ஒரு புத்தகத்தைப் போன்றது. ஒரு பக்கம் துன்பமும், மறுபக்கம் இன்பமும் நிறைந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது.
கண்களின் இமை போன்றது. எப்போதுமே மனிதனுக்கு இன்பம்-துன்பம் என்ற இரு பக்கங்கள் உண்டு.
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
‘நிச்சயமாக துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது’.
( அல்குர்ஆன்: 94: 5 )
துன்பத்தில், சிரமத்தில்,
ஒருவர் ஒரு இழப்பை சந்திக்கின்றார் என்றால் ஒரு
இறைநம்பிக்கையாளனாக நமக்கு பல்வேறு பொறுப்புகளும், கடமைகளும் இருப்பதாக இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.
முதலில்
துன்பத்தில் சிக்கியவருக்கு அவரின் மனம் இலகுவாகும் பொருட்டு ஆறுதல் கூறும் படி
இஸ்லாம் தூண்டுகிறது.
1. ஆறுதல் கூறுவது..
உஸாமா இப்னு ஜைத்
(ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது
அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரலி) அவர்களுடைய) தூதுவர் அங்கு
வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ ஸைனபிடம் சென்று,
“அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன்
கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை
உண்டு. ஆகவே,
(அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக
இருக்கச் சொல்”
என்று சொல்லி அனுப்பினார்கள். (நூல்: புகாரி)
ஒருவர்
துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக்
கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி).
இறைநம்பிக்கையாளர்
துன்பத்தில் சிக்கிய தமது சகோதரருக்குப் பொறுமையும், ஆறுதலும் கூறி அவரைத் தேற்றினால், அவருக்கு மறுமைநாளில்
இறைவன் சங்கை எனும் ஆடையை அணிவிப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸம் (ரலி), நூல்: இப்னுமாஜா)
2. மீண்டு வர வழிகாட்டுவது...
روى أن
النبي – صلى الله عليه وسلم – دخل ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له
أبو أمامة ، فقال : يا أبا أمامة ما لي أراك جالساً في المسجد في غير وقت الصلاة ؟
فقال : هموم لزمتني وديون يا رسول الله ، قال : أفلا أعلمك كلاماً إذا أنت قلته
أذهب الله عز وجل همك وقضى عنك دينك ؟ قال : قلت : بلى يا رسول الله ، قال :
" قل إذا أصبحت وإذا أمسيت : اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من
العجز والكسل وأعوذ بك من الجبن والبخل ، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال
" ، قال : ففعلت ذلك ، فأذهب الله عز وجل همي وقضى عني ديني ، ومنها ما رواه
أحمد والترمذي وصححه الحاكم وحسنه الألباني
ஒரு முறை நபி {ஸல்}
அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது அபூ உமாமா
ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டார்கள். அப்போது அவரை நோக்கி: “தொழுகையுடைய நேரமல்லாத ஒரு நேரத்தில் உங்களைப் பள்ளிவாசலில்
உட்கார்ந்திருக்கக் காண்கிறேனே!?” என ஆச்சரியத்துடன் வினவினார்கள்.
அதற்கவர் “என்னைப் பீடித்த துயரமும் கடன்களும் தான் காரணம் அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார். அப்போது, நபி ( ஸல்) அவர்கள்: “நீ மொழிந்தால்
அல்லாஹுத்தஆலா உன்னுடைய துயரத்தைப் போக்கக்கூடியதும்
உன்னுடைய கடனை நிறைவேற்றி வைக்கக்கூடியதுமான ஒரு வார்த்தையை நான்
உனக்குக் கற்றுத்தரட்டுமா?” என வினவினார்கள்.
அதற்கு அபூஉமாமா ரலியல்லாஹு அன்ஹு “ஆம். அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளிக்க, பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
“நீ காலைப் பொழுதையும் மாலைப் பொழுதையும் அடைந்தால் பின்வருமாறு அல்லாஹ்விடம்
பிரார்த்திப்பீராக!
اللهُمَّ
إنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ وَأعوْذُ بِكَ مِنَ العَجْزِ
وَالكَسَل وَأعوذ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ وَأعوذ بك مِنْ غَلَبَةِ الدَّيْنِ
وَقَهْرِ الرِّجَال
அபூ உமாமா (ரலி)
கூறுகின்றார்கள்: நான் நபியவர்கள் கற்றுத்தந்த இவ்வார்த்தைகளை ஓதிவந்தேன். அல்லாஹ் என்றுடைய துயரத்தைப் போக்கி என்னுடைய கடனையும் நிறைவேற்றி வைத்தான்.” ( நூல்: அபூதாவுத் )
3. துன்பத்திற்கான அடிப்படையை கூறுதல்.
وَاضْرِبْ لَهُمْ مَثَلًا رَجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا
جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا
زَرْعًا (32) كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِنْهُ
شَيْئًا وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا (33) وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ
لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا
(34)
وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ
تَبِيدَ هَذِهِ أَبَدًا (35) وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ
رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا مُنْقَلَبًا (36) قَالَ لَهُ
صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ
مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا (37) لَكِنَّا هُوَ اللَّهُ رَبِّي وَلَا
أُشْرِكُ بِرَبِّي أَحَدًا (38) وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا
شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِنْ تَرَنِ أَنَا أَقَلَّ مِنْكَ
مَالًا وَوَلَدًا (39) فَعَسَى رَبِّي أَنْ يُؤْتِيَنِ خَيْرًا مِنْ جَنَّتِكَ
وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِنَ السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا
(40) أَوْ يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيعَ لَهُ طَلَبًا (41)
وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَى مَا أَنْفَقَ فِيهَا
وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي
أَحَدًا (42) وَلَمْ تَكُنْ لَهُ فِئَةٌ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا
كَانَ مُنْتَصِرًا (43) هُنَالِكَ الْوَلَايَةُ لِلَّهِ الْحَقِّ هُوَ خَيْرٌ
ثَوَابًا وَخَيْرٌ عُقْبًا (44)
அல் – கஹ்ஃப் அத்தியாயத்தின் 32
– வது வசனம் முதல் 44 –ஆம் வசனம் வரை அல்லாஹ் இரு நண்பர்களின் வாழ்வில் நடந்த உரையாடலை இந்த உம்மத்திற்கு
பாடமாக, உதாரணமாக எடுத்துச் சொல்லுமாறு நபி {ஸல்} அவர்களுக்கு பணிக்கின்றான்.
பெரும்
துன்பத்தைச் சந்தித்த தம் நண்பரிடம் இறைவனை மறந்து, இறுமாப்புடன் நாம் நடந்து கொள்ளும் போது சோதனையும், துன்பமும் நம்மை வந்தடையும் என்று நயமுடன் எடுத்துக் கூறியதாக அல்குர்ஆனில்
அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
4. துன்பத்தைச் சந்தித்தவரை மீட்டெடுக்குமாறு பிறரிடம் வலியுறுத்துவது.
இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டதற்காக நாளொன்றுக்கு ஒரு தண்டனை எனும் விதமாக புதுப்புது தண்டனைகளை, சித்ரவதைகளை பிலால் (ரலி) அவர்களின் மீது உமைய்யா இப்னு கலஃப் கட்டவிழ்த்து விட்டிருந்தான்.
أن
النبي صلى الله عليه وسلم قال عندما بلغه ما يلقى بلال من التعذيب: ((لو كان عندنا
شيء، لابتعنا بلالاً))،.
أن أبا بكر اشترى بلالاً وهو مدفون في الحجارة بخمس أواقٍ
ذهبًا، فقالوا: لو أبيت إلا أوقية واحدة لبعناكه، فقال أبو بكر: لو أبيتم إلا مائة
أوقيه لأخذته
அப்படியாக நாட்கள்
கடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் பெருமானார் {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் பிலால் போன்று இஸ்லாத்திற்காக சித்ரவதைகளை தாங்கிக்
கொண்டிருப்பபவர்களை நம்மிடம் பணம் மட்டும் இருந்தால் எவ்விலை கொடுத்தாவது அவர்களை
விலை கொடுத்து வாங்கி விடலாம்” என கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் பிலால்
(ரலி) அவர்களை உமைய்யா சித்ரவதை செய்து கொண்டிருக்கும் போது அங்கு சென்ற அபூபக்ர்
(ரலி) அவர்கள் “என் இறைவன் அல்லாஹ்! என்று சொல்லும் ஒரே காரணத்திற்காகவா இந்த அடிமையைத்
துன்புறுத்துகிறீர்கள்? கொலை செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றீர்கள்? அவருக்கான விலையைச் சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
உமைய்யா, அபூபக்ர் (ரலி) அவர்களை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு
விலையைச் சொன்னான். பேரம் பேசாமல், கேட்ட தொகையை மறுக்காமல் உடனே அத்தொகையைக் கொடுத்து பிலாலை வாங்கினார் அபூபக்ர் (ரலி)
அவர்கள்.
ஐந்தோ அல்லது. ஏழோ அல்லது நாற்பதோ அவாஃகின் தங்கம்
விலையாகக் கொடுத்தார் என்று பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.
பிலாலை அழைத்துக் கொண்டு, வா போவோம்’ என்று நடக்க ஆரம்பித்த அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அதிகமான விலை கொடுத்து ஏமாறி விட்டீரே. இதை விட மிகக் குறைவான ( ஒரே ஒரு
காசுக்குக் ) விலைக்குக் கேட்டிருந்தாலும் பிலாலைத் தந்திருப்பேனே?” என ஏளனமாகக் கேட்டான் உமைய்யா.
“நீதான் ஏமாறி விட்டாய்
உமைய்யா. இதைவிட அதிகமான விலையை நீ கேட்டிருந்தாலும் கொடுப்பதற்கு நான் தயாராகவே
இருந்தேன்”
இன்னொரு அறிவிப்பில் நூறு அவாக் தங்கம் கேட்டிருந்தாலும் அவருக்காக நான் கொடுத்திருப்பேன்” என்று பதில் அளித்து
அங்கிருந்து பிலால் (ரலி) அவர்களுடன் விடை பெற்றார் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
தம்மோடு அழைத்து
வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்று பிலாலைத் தம்
அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை. மாறாக, பெருமானார் {ஸல்}
அவர்களின் சமூகத்திற்கு அழைத்து வந்து அல்லாஹ்வின் தூதரே! “அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவனாக நான் பிலாலை விடுதலை செய்கின்றேன்” என்று அந்த நொடிப்பொழுதே விடுதலை அளித்துவிட்டார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
அவர்கள் அளித்த
அந்த விடுதலையை அடி, உதையிலிருந்து விடுதலை என்று வெறுமெனே சொல்லிவிட முடியாது. மாறாக, மகத்தான,
மாபெரும் விடுதலை என்று தான் சொல்ல வேண்டும். ( நூல்:
உஸ்துல் ஃகாபா,
ரிஜாலுன் வ நிஸாவுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்},
ஸியரு அஃலா மின் நுபலா )
5. முன்மாதிரியாக உதவி செய்வது..
قال
الإمام أحمد : حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة ، عن عون بن أبي جحيفة ، عن المنذر
بن جرير ، عن أبيه قال : كنا عند رسول الله - صلى الله عليه وسلم - في صدر النهار
، قال : فجاءه قوم حفاة عراة مجتابي النمار - أو العباء - متقلدي السيوف ، عامتهم
من مضر ، بل كلهم من مضر فتغير وجه رسول الله - صلى الله عليه وسلم - لما رأى بهم
من الفاقة ، قال : فدخل ثم خرج ، فأمر بلالا فأذن وأقام الصلاة ، فصلى ثم خطب ،
فقال : ( يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ) إلى آخر
الآية : ( إن الله كان عليكم رقيبا ) [ النساء : 1 ] . وقرأ الآية
التي في الحشر : ( ولتنظر نفس ما قدمت لغد ) تصدق رجل من ديناره ، من
درهمه ، من ثوبه ، من صاع بره ، من صاع تمره - حتى قال - : ولو بشق
تمرة " . قال : فجاء رجل من الأنصار بصرة كادت كفه تعجز عنها ، بل قد
عجزت ، ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب ، حتى رأيت رسول الله - صلى
الله عليه وسلم - يتهلل وجهه كأنه مذهبة ، فقال رسول الله - صلى الله عليه وسلم -
: " من سن في الإسلام سنة حسنة ، فله أجرها وأجر من عمل بها بعده ، من
غير أن ينقص من أجورهم شيء ، ومن سن في الإسلام سنة سيئة ، كان عليه وزرها ووزر من
عمل بها من غير أن ينقص من أوزارهم شيء
" .
ஒரு நாள் முற்பகல்
வேளையில் மதீனாவின் மஸ்ஜித் நபவீயில் மாநபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களோடு
அமர்ந்திருந்த தருணம் அது.
மக்காவில்
அடர்த்தியாக வசித்து வரும் "முளர்" கோத்திரம் முளர் கோத்திரத்தின்
தலைவர் உட்பட அனைத்து ஆண்களும்
மாநபி (ஸல்) அவர்களைக் காண சமூகம் தந்திருந்தனர்.
மாநபி (ஸல்)
அவர்கள்,
அந்த கோத்திரத்தாரின் நிலை கண்டு, அவர்களின் ஆடைகளின் கோலம் கண்டு, அவர்களின் தேகத்தின்
மாற்றம் கண்டு கண் கலங்கினார்கள்.
எப்படி
வாழ்ந்தவர்கள் இவர்கள்! இப்போதோ! வறுமையின் கோரப்பிடியில் சிக்கி எலும்பும்
தோலுமாக,
பராரிகளைப் போல, பார்க்கவே பரிதாபமாக
பொலிவுடன் காட்சியளிக்கும் பெருமானாரின் (ஸல்) முகம், புன்முறுவல் பூத்துக் குலுங்கும் பெருமானாரின் (ஸல்) வதனம் சிவக்கத்துவங்கியது, முகம் மாறியது,
பிலால் (ரலி)
அவர்களை அழைத்து பாங்கு சொல்லுமாறு கூறி, மதிய நேரத்து ளுஹர்
தொழுகையை நடத்தி முடித்து அருகில் இருந்த மிம்பர் மேடை மீதேறி
இறையச்சத்தை நினைவூட்டி, மறுமைநாளை கண்முன் கொண்டு
வந்து,
வறுமையில் வாடி நிற்கும், வசதி வாய்ப்பில் திளைத்து இப்போது விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்
"முளர்" கோத்திரத்தாருக்கு உதவிட, கை கொடுத்து தூக்கி விட
வேண்டும் என்று தம் முன்னால் அமர்ந்திருக்கும் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.
ஒருவர் பின்
ஒருவராக சென்று தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து கொண்டிருந்த வேளையில் ஒரு
நபித்தோழர் தம் இரு கரங்களிலும்
உணவுப் பொருட்கள், துணிமணிகள், வெள்ளிக்காசுகள் அடங்கிய இரு பை நிறைய தூக்க முடியாமல் தூக்கியவாறு கொண்டு
வந்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இவரைக் கண்டு
இன்னும் சில நபித்தோழர்கள் இது போன்று கொண்டு வரத் துவங்கவே மஸ்ஜித் நபவீயில்
முளர் கோத்திரத்தார்களுக்கான நிவாரணப் பொருட்கள் இரு பெரும் குவியலாக மாறிப்
போயிருந்தது.
ஒரு நபித்தோழர்
இரு பை நிறைய கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்த பிறகே அங்கு இருந்த மற்றவர்களும்
நிறைய கொடுக்கலாயினர்.
இந்தக் காட்சியை கண்ட மாத்திரத்திலேயே மாநபி (ஸல்)
அவர்களின் முகம் அப்படியே "தங்கம் ஜொலிப்பது போல் ஜொலித்தது"
இதை உற்றுக்
கவனித்த கருணையே உருவான காத்தமுன் நபி (ஸல்) அவர்கள் அப்போது தான் அங்கு கூடி
இருந்த அந்த நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒட்டுமொத்த இந்த உம்மத்துக்குமான ஒரு
உத்தரவை பிறப்பித்தார்கள்.
قَالَ
رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ
سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ
غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ،
"யார் இஸ்லாத்தில்
ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப்
பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது
நன்மையில் எதுவும் குறைந்து விடாது".
இத்தனைக்கும்
இந்த"முளர்" கோத்திரத்தார்கள் முஸ்லிம்கள் இல்லை.
அப்போது வரை இஸ்லாத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கும்
எதிரிகளில் முன்வரிசையில் நிற்பவர்கள். பத்ர், உஹதில் முஹம்மது (ஸல்)
அவர்களையும்,
நபித்தோழர்களையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்று சபதம்
பூண்டிருந்தவர்கள்.
ஆனால், அந்த
கோத்திரத்தார்களுக்கு உதவ வேண்டும் என்று தம் சமூகத்திற்கு கோரிக்கை வைக்க நபி
(ஸல்) அவர்கள் தயங்கவில்லை.
நாம் கவனிக்க
வேண்டிய இன்னொரு முக்கியமான ஒரு அம்சமும் இந்த நிகழ்வில் இருக்கிறது.
யார் ஓர் அழகிய
நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி
செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு, அதற்காக அவர்களது
நன்மையில் எதுவும் குறைந்து விடாது". என்று கூற வில்லை.
மாறாக, "இஸ்லாத்தில்" ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ" என்று
கூறியிருக்கின்றார்கள்.
6. மனித நேய மாண்புகளின் விழுமியங்களுடன் நடந்து கொள்ள வேண்டும்.
وذكر أهل التاريخ أنه في عهد الخليفة أبي بكر الصديق - رضي الله عنه -
أصاب الناس جفاف وجوع شديدان، فلمّا ضاق بهم الأمر ذهبوا إلى الخليفة أبي بكر -
رضي الله عنه - وقالوا: يا خليفة رسول الله، إنّ السّماء لم تمطر، والأرض لم تنبت، وقد
أدرك الناس الهلاك فماذا نفعل؟ قال أبو بكر - رضي الله عنه -: انصرفوا، واصبروا،
فإني أرجو ألاّ يأتي المساء حتّى يفرج الله عنكم. وفي آخر النهار جاء الخبر بأنّ
قافلة جمالٍ لعثمان بن عفّان - رضي الله عنه - قد أتت من الشّام إلى المدينة.
فلمّا وصلت خرج النّاس يستقبلونها، فإذا هي ألف جمل محملة سمناً وزيتاً ودقيقاً،
وتوقّفت عند باب عثمان - رضي الله عنه - فلمّا أنزلت أحمالها في داره جاء التجار.
قال لهم عثمان - رضي الله عنه - ماذا تريدون؟ أجاب التجار: إنّك تعلم ما نريد،
بعنا من هذا الذي وصل إليك فإنّك تعرف حاجة النّاس إليه. قال عثمان: كم أربح على
الثّمن الذي اشتريت به؟ قالوا: الدّرهم درهمين. قال: أعطاني غيركم زيادة على
هذا. قالوا: أربعة! قال عثمان - رضي الله عنه -: أعطاني غيركم أكثر. قال
التّجار: نربحك خمسة. قال عثمان: أعطاني غيركم أكثر. فقالوا: ليس في المدينة تجار
غيرنا، ولم يسبقنا أحد إليك، فمن الذي أعطاك أكثر مما أعطينا؟! قال عثمان - رضي
الله عنه -:إن الله قد أعطاني بكل درهم عشرة، الحسنة بعشرة أمثالها، فهل عندكم
زيادة؟ قالوا: لا. قال عثمان: فإني أشهد الله أني جعلت ما جاءت به هذه الجمال صدقة
للمساكين وفقراء المسلمين. ثم أخذ عثمان بن عفان يوزّع بضاعته، فما بقي من فقراء
المدينة واحد إلاّ أخذ ما يكفيه ويكفي أهله.
அபூபக்ர் (ரலி)
அவர்களின் ஆட்சிக்காலம்,
பஞ்சம் எனும் பேரிடர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை
பெரிதும் பாதிக்கப்பட்டது.
கடும் பஞ்சத்தால்
மக்கள் உண்ண உண்வின்றி,
குடிக்க நீரின்றி கடும் சோதனைக்கு உள்ளாகினர். அனுதினமும்
ஆட்சியாளரின் வீட்டு வாசலின் முன்பாக ஆயிரமாயிரம் மக்கள் வருவதும், போவதுமாக தங்களின் சிரமங்களை முறையிட்டவர்களாக இருந்ததை தவிர்க்க முடியவில்லை.
“அல்லாஹ்வால் எங்களுக்கு
நியமிக்கப்பட்டிருக்கிற ஆட்சியாளரே! வானம் பொய்த்து விட்டது! பூமி மலடாகி காய்ந்து
விட்டது! நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள்
என்ன செய்வது?”
என்று கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி கேட்டனர்.
கண்ணீர் மல்க, கலீஃபா அபூபக்ர் (ரலி) கூறினார்கள் “மக்களே! உங்களின்
இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள்! பொறுமை காத்திடுங்கள்! அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் உங்களின் கஷ்டங்களை எல்லாம் மிக விரைவில் நீக்கி, சுகத்தோடு வாழ வைப்பான்” என ஆதரவு வைக்கின்றேன்” என்று.
இப்படியாக நாட்கள்
பல உருண்டோடியது. திடீரென ஒரு நாள் மதீனா நகரெங்கும் புளுதிப் படலம், மக்கள் என்னவோ ஏதோவென்று பதறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி மதீனாவின்
முக்கிய வீதியில் ஒன்று கூடி தூரத்தில் தெரிந்த புளுதி கொஞ்சம், கொஞ்சமாக மதீனா நகரை நெருங்கி வருவது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்
கொண்டனர்.
இப்போது புளுதி
சிறிது விலகி ஓர் ஒட்டகக் கூட்டம் தங்களின் அருகே வருவதை உணர்ந்தனர்.அவர்களின்
முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! அந்த ஒட்டகக் கூட்டத்தினரைக் கண்டு…
ஆம்! அந்த
ஒட்டகக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்களின் வியாபாரக் கூட்டம். கடந்த சில
மாதங்களுக்கு முன்பாக ஷாமுக்கு சென்றிருந்த வியாபாரக் கூட்டம். பெருமளவு
தானியங்களோடும்,
ஜைத்தூன் எண்ணெய் பீப்பாய்களோடும், கொழுப்புகளோடும் ஆயிரம் ஒட்டகைகளில் வந்து உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டின்
முன்பாக நின்றது.
வரலாற்று
ஆசிரியர்கள் இப்படிக் கூட கூறுவார்கள் “முதல் ஒட்டகம் உஸ்மான்
(ரலி) அவர்களின் வீட்டின் முன் நின்றது என்றால் ஆயிரமாவது கடைசி ஒட்டகம் ஷாமின்
எல்லையில் நின்றது”
என்று.
இந்தச் செய்தியைக்
கேள்விப்பட்ட மதீனா மற்றும் அதன் சுற்று வட்டார வியாபாரிகள் அனைவரும் உஸ்மான்
(ரலி) அவர்களின் வீட்டின் முன்பாக கூடிவிட்டனர்.
உஸ்மான் (ரலி)
அவர்கள் வியாபாரிகளின் முற்றுகையையும், மக்களின் முகத்தில்
தெரிந்த சோக ரேகைகளின் பிண்ணனியையும் ஒரே நேரத்தில் புரிந்து கொண்டார்கள்.
ஏனெனில், வருகிற வழியிலேயே மதீனாவில் நிகழ்கிற பேரிடர், அதனால் ஏற்பட்டிருக்கிற பசி, பஞ்சம் ஆகியவற்றைக்
கேட்டு தெரிந்து வைத்திருந்தார்கள்.
உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளின் சார்பாக
ஒருவர் முன் வந்து “மக்களின் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே, மொத்த சரக்குகளையும் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகளாகிய எங்களிடமே
நீங்கள் விலைக்கு தர வேண்டும். வெளியூர் வியாபாரிகளுக்கு நீங்கள் விற்பனை செய்யக்
கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.
அது கேட்ட உஸ்மான்
(ரலி) அவர்கள் “என்னிடம் இருந்து நீங்கள் வாங்கும் பொருளுக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “ஒரு திர்ஹம் மதிப்புள்ள பொருளுக்கு இரண்டு திர்ஹம்கள் தருகின்றோம்” என்றார்கள். அதற்கு,
உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட
கூடுதலாக தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “இரண்டுக்கு மூன்று திர்ஹம்” என்றார்கள். அதற்கு , உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக
தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “மூன்றுக்கு நான்கு திர்ஹம்” என்றார்கள். அப்போதும்
முன்பு போன்றே உஸ்மான் (ரலி) அவர்கள் கூற, இப்போது வியாபாரிகள்
கடைசியாக நான்குக்கு ஐந்து திர்ஹம் தருகின்றோம்” என்றார்கள்.
அதற்கு, உஸ்மான் (ரலி) அவர்கள் “வெறொருவர் உங்களை விட கூடுதலாக
தருகின்றேன் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட வியாபாரிகள் “எங்களுக்குத் தெரிந்து உள்ளூரின்,சுற்றுபுறத்தின் அனைத்து வியாபாரிகளும் இங்கே தான் குழுமியிருக்கின்றோம்.
அத்தோடு இதுவரை உங்களிடம் தான் நாங்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருக்கின்றோம், எங்களை விட கூடுதல் விலைக்கு, கூடுதல் லாபத்திற்கு
வியாபாரம் பேசிய அந்த வியாபாரி யார்? இப்பொழுதே எங்களுக்குத்
தெரிய வேண்டும்?
என்று கேட்டனர்.
அது கேட்ட உஸ்மான்
(ரலி) அப்படியே மௌனித்து நிற்கின்றார்கள். மக்கள் ஏக்கத்தோடு நிற்கின்றார்கள்.
வியாபாரிகள் புருவத்தை உயர்த்தி யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு நின்று
கொண்டிருக்கின்றார்கள்.
நீண்ட
மௌனத்திற்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்விடம் நான்
வியாபாரம் பேசியுள்ளேன்”
அவன் தான் உங்களை விட அதிக விலைக்கு, லாபத்திற்கு வியாபாரம் பேசிய வியாபாரியாவான்” என்று கூறி மௌனத்தைக் கலைத்தார்கள்.
“அல்லாஹ் ஒவ்வொரு
திர்ஹத்திற்கும் பத்து திர்ஹம் தருவதாக திருக் குர்ஆன் மூலம்
வாக்களித்திருக்கின்றான். “எவர் அழகிய ஒன்றை நம்மிடம் கொண்டு வருகின்றாரோ அது போன்று அவருக்கு பத்து
நன்மைகளை வழங்குவோம்”
அல்அன்ஆம் அத்தியாயத்தின் 160 –ஆவது வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, இதை விட கூடுதலாக நீங்கள்
யாரும் தருவீர்களா?
இறைவனை விட கூடுதலாக வழங்க யாருக்குத் தான் இயலும்? என்று கேட்டார்கள்.
அதற்கு, வியாபாரிகள் “எங்களால் ஒருபோதும் அப்படித் தர இயலாது” என்று கூறினார்கள்.
அப்போது, உஸ்மான் (ரலி) அவர்கள் “என் ஒட்டகைகள் ஆயிரமும் சுமந்து வந்த
அத்துனை பொருட்களையும் வறட்சியாலும், பசி பஞ்சத்தாலும் வாடி
வதங்கிக் கொண்டிருக்கிற இந்த மக்களுக்கும், ஏழைகளுக்கும்
வழங்குகின்றேன்! அல்லாஹ்வே இதற்கு உன்னையே சாட்சியாகவும் ஆக்குகின்றேன்” என்று கூறினார்கள்.
மதீனாவில் இருக்கிற
எல்லா குடும்பத்தினர்களும் அவரவர்களின் தேவைக்கு ஏற்ப அதில் இருந்து எடுத்துக்
கொண்டார்கள். இறுதியில் எதுவும் மிஞ்சவில்லை”. ( நூல்: ஃபிக்ஹுத் தாஜிருல்
முஸ்லிம் )
7. நலம் நாடுவதன் அடிப்படை நோக்கம்...
قال
رسـول الله صلى الله عليه وسلم
(( ارحموا عزيز قوم ذلّ ، وغنياً افتقر ، وعالماً
ضاع بين جهّال ))
[ ذكر هذه ابن هشام في سيرته ، والطبري
في تاريخه ]
ஒரு நாள் நபி
(ஸல்) அவர்கள்
சுற்றியிருந்த தோழர்களை நோக்கி “கண்ணியமானவர்கள் இழிவடைந்த நிலையில் இருப்பதைக் கண்டாலோ, வசதி படைத்தவர்கள் வறுமையில் மாட்டிக் கொண்டாலோ, அறிவுபடைத்தவர்கள்
முட்டாள்களிடத்தில் சிக்கிக் கொண்டாலோ உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள்” என கூறினார்கள். ( நூல்: இப்னு ஹிஷாம், அத்தாரிக் லித் தபரீ )
8. அடிப்படை தேவைகளை நிறைவு செய்வது...
நாம் மட்டும் உண்டு கழித்து சுகபோகத்தில் வாழக்கூடிய சுய நலத்தை இஸ்லாம்
நமக்குக் கற்றுத் தரவில்லை. மாறாக, பசித்தோருக்கு
உணவளிக்குமாறு தூண்டுகிறது.
இது குறித்து
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது,
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم
أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى
مَنْ عَرَفْتَ ، وَمَنْ لَمْ تَعْرِفْ
ஒரு மனிதர் நபி
(ஸல்) அவர்களிடம்,
“இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும்
நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ( நூல்: புகாரி )
தம்மிடம் உணவளிக்க
ஏதும் இல்லாதிருந்த போதும் கூட பிறரிடம் எடுத்துக் கூறி மற்றவர்களின் பசி போக்க அதிக
முனைப்பு காட்டினார்கள் மாநபி (ஸல்) அவர்கள். இதனைப் பின்வரும் செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
عَنْ
أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ
رَجُلاً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ
مَا مَعَنَا إِلاَّ الْمَاءُ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ
يَضُمُّ ، أَوْ يُضِيفُ هَذَا فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ أَنَا فَانْطَلَقَ
بِهِ إِلَى امْرَأَتِهِ فَقَالَ أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللهِ صلى الله عليه
وسلم فَقَالَتْ مَا عِنْدَنَا إِلاَّ قُوتُ صِبْيَانِي فَقَالَ هَيِّئِي
طَعَامَكِوَأَصْبِحِي سِرَاجَكِ وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً
فَهَيَّأَتْ طَعَامَهَا وَأَصْبَحَتْ سِرَاجَهَا وَنَوَّمَتْ صِبْيَانَهَا ثُمَّ
قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا
يَأْكُلاَنِ فَبَاتَا طَاوِيَيْنِ فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللهِ
صلى الله عليه وسلم فَقَالَ ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ ، أَوْ عَجِبَ – مِنْ
فَعَالِكُمَا فَأَنْزَلَ اللَّهُ : {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ
كَانَ بِهِمْ خَصَاصَةٌ ، وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ
الْمُفْلِحُونَ
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்
(விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம்
மனைவிமார்களிடம் சொல்லி அனுப்பினார்கள்.
அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இவரை (தம்முடன் உணவில்)
சேர்த்துக் கொள்பவர் யார்?”…
அல்லது “இவருக்கு விருந்தளிப்பவர் யார்?”… என்று கேட்டார்கள்.
அப்போது அன்சாரிகளில்
ஒருவர்,
“நான் (விருந்தளிக்கிறேன்)” என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று சொன்னார்.
அதற்கு அவருடைய
மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை
செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச்
செய்து விடு”
என்று சொன்னார்.
அவ்வாறே அவருடைய
மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத்
தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல்
நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின்
மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.
பிறகு இருவரும்
(உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்)
சிரித்துக் கொண்டான் …அல்லது வியப்படைந்தான்”
என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே
அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ
அவர்கள் தாம் வெற்றியாளர்கள்” என்னும் ( அல்குர்ஆன்: 59: 9 ) ஆவது வசனத்தை அருளினான். ( நூல்: புகாரி )
பசித்தவருக்கு உணவளிப்பதை இஸ்லாம் எந்தளவு ஊக்குவிக்கிறது என்றால்?
ஒருவர்
தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹ்விடத்தில்
உண்மையான தவ்பா செய்வதுடன்,
சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.
குற்றப்பரிகாரம்
(கஃப்ஃபாரா) என்பது,
பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும்.
மேலும், இஸ்லாம் சில கட்டாய கடமைகளில் தவறிழைப்பவர்களுக்கு பரிகாரமாக "ஏழைகளுக்கு
உணவளிப்பதை" கட்டாயமாக்கி இருக்கிறது.
குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை
போக்குவதால்,
அதற்கு குற்றப்பரிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1. ரமளான் மாத நோன்பை நோற்ற நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டவரின் பரிகாரம்
ரமளான் நோன்பை நோற்ற
நிலையில் தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் பின்வரும் பரிகாரங்களில் ஒன்றை
முறைப்படி கொடுக்க வேண்டும்.
1) ஒரு அடிமையை உரிமை
இட வேண்டும்,
அதற்கு முடியாவிட்டால்.
2) இரண்டு மாதங்கள்
தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியா விட்டால்
3) அறுபது ஏழைகளுக்கு
உணவளிக்க வேண்டும்.
2) சத்தியத்தை முறித்தவருக்குரிய பரிகாரம்
சத்தியத்தை முறித்தவர் பின்வரும் மூன்று பரிகாரங்களில்
விரும்பிய ஒன்றை நிறை வேற்ற வேண்டும்.
1) பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது,
அல்லது
2) பத்து ஏழைகளுக்கு உடை வாங்கி கொடுப்பது, அல்லது
3) ஒரு அடிமையை உரிமை
விடுவது.
குறிப்பு: இம்மூன்றில் ஒன்றையாவது ஒருவருக்கு நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் மூன்று நோன்பு நோற்க வேண்டும்.
لَا
يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا
عَقَّدتُّمُ الْأَيْمَانَ ۖ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ
أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ
ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ
أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ ۚ كَذَٰلِكَ
يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
உங்கள் சத்தியங்களில்
வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் எனினும் (ஏதாவது ஒன்றை)
உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது; உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு
பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க
வேண்டும்,
அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிறாவிட்டால் (அவர்) மூன்று நாட்கள்
நோன்பு நோற்க வேண்டும்;
நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின்
பரிகாரமாகும்;
உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை –
உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். ( அல்குர்ஆன்: 5: 89 )
3) நேர்ச்சைக்குரிய பரிகாரம்
யாராவது ஒருவர் குறிப்பிடாத
நேர்ச்சை செய்தால்,
அல்லது நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அல்லது அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அவர்கள்
சத்தியத்தை முறித்தவருக்குரிய பரிகாரத்தை வழங்க வேண்டும். பின்வரும் ஹதீஸ் அதை தெளிவு
படுத்துகின்றது.
روى
الترمذي عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم :"كفارة النذر
إذا لم يسم كفارة يمين" وقال هذا حديث حسن صحيح غريب.
وكفارة اليمين: عتق رقبة أو إطعام عشرة مساكين، أو كسوتهم. فمن لم يجد شيئا من ذلك صام ثلاثة أيام
யாராவது ஒருவர்
பெயர் குறிப்பிடாத நேர்ச்சை செய்தால், அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். அல்லது நேர்ச்சை செய்து அதை
நிறைவேற்ற முடியவில்லையென்றால், அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். அல்லது அல்லாஹ்விற்கு மாறு செய்யும்
விஷயத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். யார் தன் சக்திக்குட்பட்ட நேர்ச்சை
செய்கின்றாரோ அவர் அதை நிறைவேற்றட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:
முஸ்லிம்)
4) ளிஹார் செய்தவருக்குரிய பரிகாரம்
அறியாமை காலத்தில்
தன் மனைவியை தலாக் இடுவதற்கு பயன் படுத்தும் வார்த்தைகளில் ஒன்றுதான் ளிஹார்
என்பது. அதாவது ஒருவர் தன் மனைவியை பார்த்து நீ என் தாயின் முதுகைப் போல் என்று
கூறினால்,
அந்தப் பெண் தலாக் இடப்பட்டவளாக கருதப்படுவாள். அதாவது என்
தாய் எனக்கு ஹராம் என்பது போல், நீயும் என்மீது ஹராம்
என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும். நம்மில் யாராவது அப்படி கூறினால், அது தலாக்காக கணக்கிடப்பபடமாட்டாது, ஆனால் அவ்வாறு கூறியவர்
அதற்குரிய பரிகாரத்தை செலுத்தாத வரை அந்த மனைவியிடம் உடல் உறவு கொள்வது ஹராமாகும்.
பின்வரும்
பரிகாரங்களை முறைப்படி நிறைவேற்ற வேண்டும்:
1. அடிமையை உரிமை
இடுதல், அதற்கு முடியாதவர்
2. இரண்டு மாதங்கள்
தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியாதவர்
3. அறுபது ஏழைகளுக்கு
உணவளிக்க வேண்டும்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا
قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا ذَلِكُمْ تُوعَظُونَ
بِهِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (3) فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ
شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا فَمَنْ لَمْ يَسْتَطِعْ
فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ
وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ
மேலும் எவர் தம்
மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி
(மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை
ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே
நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ்,
நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
ஆனால் (அடிமையை
விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக
நோன்பு நோற்க வேண்டும்;
எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக
(இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும்,
காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. ( அல்குர்ஆன்:
58: 3,4
)
9. படிப்பினைகள் பெற வேண்டும்...
பேரிடர்கள் என்பதை
இயற்கைச் சீற்றங்களாகவும்,
கால இயக்கங்களில் ஏற்படுகிற மாற்றங்களாகவும் மட்டுமே மனித
சமூகம் பார்த்துக் கொண்டு வருகிறது.
ஆனால், இஸ்லாமோ இப்படி அபத்தமான சாயங்கள் பூசப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில், உலகில் ஏற்படும் எந்த ஒரு
அசைவானாலும் அது தானாக ஏற்படுவதில்லை.
படைத்த இறைவனாகிய
அல்லாஹ் தான் அண்ட சராசரங்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்று
உறுதியிட்டுக் கூறுகின்றது.
மேலும், அந்த அல்லாஹ் தான் இத்தகைய வெள்ளப் பெருக்குகளையும், புயல் காற்றுகளையும், பூகம்பங்களையும், நிலநடுக்கங்களையும், சுனாமிகளையும் ஏற்படுத்துகின்றான்.
உலகில் முதன்
முதலாக ஏற்பட்ட மிகப்பெரும் பேரிடராக நபி நூஹ் (அலை) அவர்களின்
காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தை தற்காலப் பாஷையில் சொல்வதானால் சுனாமியை அல்குர்ஆன் ஹூத் அத்தியாயத்தில் 36 முதல் 49 வரையிலான வசனங்களில் குறிப்பிடுகின்றது.
இந்த மானுட சமூகம்
தீய வழிகளிலிருந்து விலகி நேர்வழியில் தொடர்ந்து பயணிக்க
வேண்டும், பாவங்களில் இருந்து தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், இறைவன் வகுத்த வரம்புகளில், எல்லைகளில் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பன போன்ற பல பாடங்களையும், படிப்பினைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான பேரிடர்களையும், பேரிழப்புக்களையும் அல்லாஹ் ஏற்படுத்துகின்றான்.
أَأَمِنْتُمْ
مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ () أَمْ
أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا
فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ
()
“வானத்திலிருப்பவன்
உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும், அப்போது உடனே பூமி அதிரத் தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது
குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? இவைகள் வந்து விட்டால்
பிறகு உங்களுக்கு தெரிந்து விடும் எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!” ( அல்குர்ஆன்: 67:16,17 )
ظَهَرَ
الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ
لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ ()
“மனிதர்களின் கரங்கள்
செய்த தீய வினைகளினால் அம்மனிதர்கள் படிப்பினைப் பெற்று
திருந்தி திரும்ப வேண்டும் என்பதற்காக அத்தீய வினைகள் சிலதின் பிரதிபலனை தண்டனையை
அவர்களுக்கு அல்லாஹ் உணரச்செய்வதற்காக கடலிலும், கரையிலும் பெரும் ஆபத்துக்களை
விளைவிக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 30:41)
وَلَنُذِيقَنَّهُمْ
مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ)
“மேலும், அந்த நாளில் பெரும் வேதனை வரும் முன் இவ்வுலகில் ஏதேனும் ஒரு சிறு வேதனையை
சுவைக்கக் கொடுப்போம். இவர்கள் தங்களது பாவமான போக்கை விட்டு விலகி விடக்கூடும்
என்பதற்காக!.”
( அல்குர்ஆன்: 32:
21 )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேரிடர்களில் சிக்கித் தவிக்கும்
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக!
மிகச் சிறந்த வாழ்க்கையை வழங்கியருள்வானாக! இது போன்ற அழிவுகளை தரும் பேரிடர்களில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தார்களையும், தமிழக, இந்திய முழு உலக மக்களையும் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த பேரிடர் காலங்களுக்கு தேவையான நல்ல ஆலோசனைகளை நலமுடன் எடுத்து தந்தீர் பாரக்கல்லாஹ்..
Deleteمن سن في الاسلام سنه حسنه
ReplyDeleteஹை லைட்
ஐ லைக்
மாஷா அல்லாஹ் தக்க தருணத்தில் அமைந்த அருமையான தலைப்பு ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்
ReplyDelete