தராவீஹ் சிந்தனை: 16. சிறந்த அமல் & சிறந்த காரியம்
தொடர்:- 6.
தர்மத்தில் தலையாய
தர்மம்!!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் உடைய மகத்தான கருணையால் 15 -ம் நோன்பை நிறைவு செய்து
விட்டு,
16 -ம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம்
அமர்ந்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
நபி (ஸல்) அவர்கள் சிறப்பு படுத்திக் கூறிய சில செயல்கள் மற்றும் சில காரியங்கள்
மற்றும் சில விஷயங்கள்
குறித்து நாம் பார்க்க வருகின்றோம்.
அந்த வகையில்
இன்றைய அமர்வில் "தர்மத்தில் தலையாய தர்மம் எது?" என்பது தொடர்பாக பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ
ஸஅத் பின் உப்பாதா
(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக
நான் தர்மம் செய்யலாமா?’
என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது
எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’
என விளக்கமளித்தார்கள்” (நூல்: அஹ்மது
நஸயீ-3666)
"நீரின்றி அமையாது
உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு" என்கிறது திருக்குறள்.
நீர் இல்லை
என்றால் உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால், நீரின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோமா என்பது நமக்கு நாமே கேட்டுக்
கொள்ள வேண்டிய கேள்வி. வரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லக் கூடிய மிகப்
பெரிய சொத்துகளில் ஒன்று நீர் வளம்.
கடும் தண்ணீர்ப்
பற்றாக்குறை உள்ள 17
நாடுகளில், இந்தியா 13வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையில், ஏனைய 16 நாடுகளைவிட இந்தியாவில் மூன்று மடங்குக்கும் அதிகம்
உலக மக்கள்
தொகையில் 25
விழுக்காட்டு மக்கள், கடும் தண்ணீர்ப்
பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்று, WRI எனப்படும்,
உலக வளங்கள் நிறுவனம் கூறியுள்ளது.
உலகில் 17 நாடுகளில் வாழ்கின்ற இம்மக்கள், தண்ணீர் தட்டுப்பாட்டால்
துன்புறும் நிலை,
தண்ணீர் முற்றிலும் கிடைக்காத நிலைக்கு இட்டுசெல்லக்கூடும்
என்று,
WRI நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடும் தண்ணீர்ப்
பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகள், வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகளுக்கென, 80 விழுக்காட்டிற்கும்
அதிகமான தண்ணீரை,
ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்தி வருகின்றன எனவும், அந்நிறுவனம் கூறியுள்ளது.
கத்தார், இஸ்ரேல்,
லெபனான், ஈரான், ஜோர்டன்,
லிபியா, குவைத், சவுதி அரேபியா,
எரிட்ரியா, ஐக்கிய அரபு அமீரகம், சான் மரினோ,
பக்ரைன், இந்தியா, பாகிஸ்தான்,
துர்க்மெனிஸ்தான், ஓமன், போட்ஸ்வானா என,
நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது, WRI நிறுவனம். ( நன்றி: வாடிகன் நியூஸ்.காம், 13/08/2019 )
உலகளாவிய நிதி
மையம் கடந்த வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையில், உலகில் நூறு பெரிய நகரங்கள் 2050ஆம் ஆண்டில் தண்ணீர்ப்
பற்றாக்குறையை எதிர்நோக்கும் என்று கூறியுள்ளது. இதில், 30 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
உலகில் தற்போது 25 விழுக்காட்டு மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர்.
2050ல் இது 51 விழுக்காடாக உயர வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. ( நன்றி:
தமிழ் முரசு.காம் 06/11/2020
)
இன்னும் 50 ஆண்டுகளில் சொல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்கிறார்
நற்துணை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜோதி ராஜா. இப்பொழுதே தண்ணீர் பஞ்சம்
தலைவிரித்து ஆடுகிறது என்று குறிப்பிட்ட அவர், பெட்ரோல் பங்க் போல, மக்கள் தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
"மக்கள் தொகை
அதிகரிக்க தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். ஓர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இந்த
உலகில் மக்கள் தொகை மூன்று மடங்குதான் அதிகரிக்கிறது, ஆனால் தண்ணீரின் தேவை ஆறுலிருந்து ஏழு மடங்கு வரை அதிகரிக்கிறது" என்கிறார்
எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர் நக்கீரன். ( நன்றி: பிபிசி தமிழ், 22/03/2018 )
சுற்றுச்சூழல்
ஆர்வலரும்,
அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியருமான
மு.ராஜேஷ் கூறியதாவது: 163
மில்லியன் இந்தியர்களுக்குச் சுத்தமான குடிநீர் இல்லை. 21 சதவீத நோய்கள் பாதுகாப்பற்ற குடிநீருடன் தொடர்புடையவை. கலப்பு நீர் மேலாண்மை
குறியீட்டு அறிக்கையின்படி 2030-ம் ஆண்டில் நாட்டின்
தண்ணீர் தேவை,
விநியோகத்தைவிட 2 மடங்கு அதிகமாக இருக்கும்
என்று கணிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும்
கிட்டத்தட்ட 2
லட்சம் பேர் மரணமடைகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட
ஆராய்ச்சியின்படி,
2030-ம் ஆண்டில், 40 சதவீத மக்கள்
குடிநீரைப் பெற போராட வேண்டி இருக்கும். நாட்டில் தற்போது உள்ள 84 சதவீத கிராமப் புறக் குடும்பங்களுக்கு குழாய் நீர் வசதி இல்லை. மேலும், வீட்டுக்கு அருகிலேயே சுத்தமான நீர் ஆதாரங்கள் இருந்தும் 88 சதவீத கிராமப்புறக் குடும்பங்களுக்கு குடிநீர் இல்லை. ( நன்றி: இந்து தமிழ்
திசை,
22/03/2024 )
எனவே, எதிர் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதான தர்மமாக தண்ணீர் தர்மமே இடம்
பெறும்.
அத்தகைய தலையாய
தண்ணீர் தர்மத்தின் சிறப்பு குறித்து ஒரு
பார்வையை இன்றைய அமர்வில் தராவீஹ் சிந்தனையாக பார்ப்போம்.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் முழுமையாக ஒதப்பட்ட அல் கஸஸ் அத்தியாயத்தின் வசனம் 23, 24-ல் மூஸா (அலை) அவர்கள் தண்ணீர் தேவையுள்ள ஒரு
குடும்பத்தின் பெண்களுக்கு தண்ணீர் தேவையை நிறைவேற்றி விட்டு தமது தேவையை
அல்லாஹ்விடம் முறையிட்டதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நினைவு படுத்துகின்றான்.
وَلَمَّا
وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ
وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ قَالَ مَا خَطْبُكُمَا
قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ وَاَبُوْنَا شَيْخٌ
كَبِيْرٌ
இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக்
கொண்டிருந்ததைக் கண்டார்;
அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள்
ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்)
அவர் கேட்டார்;
அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக்
விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது -
மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
فَسَقٰى
لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ
اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு
இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 23, 24 )
தொடர்ந்து பின்
வரும் வசனங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த சேவையின் காரணமாக மூஸா (அலை)
அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களின் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றினான்
என்ற தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் தர்மமும்.. பல்வேறு வகையான சிறப்புகளும், நன்மைகளும்...
قال الرسول -صلى الله عليه وسلم- في الحديث الشريف (أفضل الصدقة سقي المياه) رواه أحمد وأبو داود وبن ماجه.
தர்மத்தில்
மிகச்சிறந்த தர்மம் மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் வழங்குவதாகும்" என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
ا قال
رسول الله صلى الله عليه وسلم: ((بينا رجلا يمشي فاشتد عليه العطش فنزل بئرا فشرب
منها، ثم خرج فإذا هو بكلب يلهث، يأكل الثرى من العطش، فقال: لقد بلغ هذا مثل الذي
بلغ بي، فملأ خفه، ثم أمسكه بغيه، ثم رقي فسقى الكلب، فشكر الله له، فغفر له))،
قالوا: يا رسول الله، وإن لنا في البهائم أجرا؟! قال: “ في كل كبد رطبة أجر.
“ஒரு மனிதர் பாதையில்
கடந்து செல்லும்போது அவருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. அருகிலுள்ள ஒரு கிணற்றில்
இறங்கி அதன் நீரை பருகி விட்டு மேலே வந்தார். அப்போது, ஒரு நாய் தாகத்தால் ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதை காண்கிறார்.
அப்போது அவர்
"நமக்கு ஏற்பட்ட தாகத்தை போன்றே நாய்க்கும் தாகம் ஏற்பட்டிருப்பதாக தனக்குள்
பேசிக்கொள்கிறார். பிறகு கிணற்றில் இறங்கி தமது காலணியை கிணற்றில் முக்கி தண்ணீரை
நிரப்பி காலணியை தமது வாயால் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்து நாய்க்கு நீர்
புகட்டுகிறார். இதனைக் கண்ட இறைவன் அவருக்கு நன்றி பாராட்டி அவரின் பாவத்தை
மன்னித்தான்" என்று நபி ஸல் அவர்கள் சொன்ன போது, இதைக்கேட்ட நபித்தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே!
உயிரினங்கள் மீது கருணை காட்டுவதன் காரணமாகவும் நற்கூலி கிடைக்குமா?’ என வினவினார்கள்.
அப்போது, நபி (ஸல்) அவர்கள் "ஆம், ஒவ்வொரு ஈரல்குலை உள்ள
ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதாலும் நற்கூலி கிடைக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ( புகாரி )
وعن
جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من حفر ماء لم تشرب منه
كبد حرى من جن ولا إنس ولا طائر إلا آجره الله يوم القيامة “رواه البخاري.
ஜாபிர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து
ஜின் இனம்,
மனித இனம், பறவை இனம் போன்ற உயிரினம்
நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
عن أبي
هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم [ ليس صدقة أعظم أجراً من ماء ]
حسنه الألباني في صحيح الترغيب والترهيب.
தண்ணீரை தர்மமாக
மக்களுக்கு வழங்குவதன் மூலம் கிடைக்கும் கூலியைப் போன்று வேறெந்த தர்மத்திற்கும்
கூலி வழங்கப்படுவதில்லை " என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல் தர்ஙீப்
அத் தர்ஹீப் )
قال صلى
الله عليه وسلم:"أَيُّمَا مُسْلِمٍ سَقَى مُسْلِمًا عَلَى ظَمَأ سَقَاهُ
اللَّهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ" أخرجه الترمذي
"எந்த முஸ்லிம் சக
முஸ்லிம் ஒருவருக்கு தாகத்தின் போது தண்ணீர் வழங்குவாரோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
அவருக்கு ரஹீக்குல் மக்தூமில் இருந்து நாளை மறுமையில் அல்லாஹ் நீர்
புகட்டுவான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
وعن
البراء بن عازب رضي الله عنه قال :جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم
فقال: يا رسول الله، علمني عملا يدخلني الجنة. قال :«أعتق النسمة وفك الرقبة، فإن
لم تطق ذلك
فأطعم
الجائع واسق الظمآن
பர்ரா இப்னு ஆஸிப்
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு கிராமவாசி
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே!
சுவனத்தில் நுழையச் செய்திடும் ஓர் அமலை எனக்கு அறிவித்துத் தாருங்கள்!” என்றார்.
அப்போது, நபி {ஸல்}
அவர்கள் ”அடிமையை விடுவிப்பீராக! ஆபத்தில்
மாட்டிக் கொண்டிருப்போரை காப்பாற்றுவாயாக! அல்லது அகதிகளை ஆதரிப்பீராக! இவற்றைச்
செய்திட உம்மால் இயலவில்லை எனில் பசித்தவருக்கு உணவளிப்பீராக! அல்லது
தாகித்தவருக்கு தண்ணீர் வழங்குவீராக!” என்று கூறினார்கள். ( நூல்:இப்னு
ஹிப்பான் )
ذكر
البيهقي رحمه الله قصة الحاكم أبي عبد الله أنه قصد أحد الأئمة ليطلب منه الدعاء
له في مجلسه يوم الجمعة للشفاء من قرحة أصابت وجهه. فدعا له وأكثر الناس التأمين،
فلما كانت الجمعة الأخرى، جاءت امرأة قالت أنها عادت إلى بيتها واجتهدت في الدعاء
للحاكم أبي عبد الله في تلك الليلة، فرأت في منامها رسول الله صلى الله عليه وسلم
كأنه يقول لها: قولوا لأبي عبد الله يوسع الماء على المسلمين. فما كان من الحاكم
أبي عبد الله إلا أن أمر بسقاية الماء، وأخذ الناس في الماء فما مر عليه أسبوع حتى
ظهر الشفاء وزالت تلك القروح وعاد وجهه إلى أحسن ما كان.
இமாம் பைஹகீ (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்:- "பிரபல ஹதீஸ் கலை வல்லுனரான இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்களின் முகத்தில் ஒரு காயம் இருந்தது.
ஏறக்குறைய ஒரு
ஆண்டு காலமாக அந்த காயத்தின் காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள்.
எனவே, அவர்கள் ஜும்ஆ தொழுகைக்கு
மக்கள் திரளாக வரும் பள்ளிவாசல் ஒன்றிற்கு வருகை தந்து
அங்குள்ள இமாமிடம் தமது முகத்தில் ஏற்பட்டுள்ள காயம் பரிபூரணமாக குணமாக துஆச்
செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
அது போலவே இமாம்
அவர்களும் துஆச் செய்ய திரளாக வந்திருந்த மக்கள் அந்த துஆவிற்கு ஆமீன்
சொன்னார்கள்.
இமாம் ஹாகிம்
(ரஹ்) மறு வார ஜும்ஆவிற்கும் இது போன்றே துஆச் செய்ய கோரிக்கை வைக்க அந்த
பள்ளிவாசலுக்கு வருகை தந்தார்கள்.
அந்த பகுதியில்
உள்ள ஒரு பெண் அந்த பள்ளிவாசலின் வழியாக வரும் போது இமாம் ஹாகிம் (ரஹ்)
அவர்களுக்கு துஆச் செய்ததை அறிந்து கொண்டு வீட்டிற்கு வந்து இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்களின் ஷிஃபாவிற்காக நீண்ட நேரம் துஆச்
செய்தார்கள்.
இரவில் தஹஜ்ஜத்
தொழுகைக்குப் பிறகும் துஆச் செய்தார்கள். பின்னர் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கி
விட்டார்கள்.
கனவிலே பெருமானார்
(ஸல்) அவர்களை அந்த பெண்மணி கண்டார்கள்.
கனவில் வந்த
பெருமானார் (ஸல்) அவர்கள் "அபூ அப்துல்லாஹ் விடம் சென்று சொல்லுங்கள்"
முஸ்லிம்களுக்கு தண்ணீரை விசாலமாக்கி தரச் சொல்லுங்கள்" என்று.
நடந்த சம்பவங்களை
இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்களிடம் வந்து அந்த பெண்மணி கூறியதும், “இமாம் ஹாகிம் (ரஹ்) முஸ்லிம்களின் வீடுகளின் வாசலுக்கு முன் நீர் தொட்டியை
அமைத்து கொடுத்தார்கள்.
அதிலிருந்து
மக்களும்,
அங்கு வந்து செல்வோரும் நீரைப் பருகினார்கள். இதன் காரணமாக
அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே முகத்தில் இருந்த காயம் குணமாகி முழுமையான நிவாரணம்
கிடைத்தது.
جاء في
( سير أعلام النبلاء ، 8 / 407
)
أن
رجلاً سأل عبد الله بن المبارك عن قرحة خرجت في ركبته منذ سبع سنين وقد عالجها
بأنواع العلاج .... فقال له ابن المبارك :( اذهب واحفر بئراً في مكان يحتاج الناس
فيه إلى الماء فإني أرجو أن تنبع هناك عين ) ففعل الرجل ذلك فشفاه الله تعالى.
இப்னு ஷகீக்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒரு மனிதர், ஹள்ரத் இப்னு முபாரக்
(ரஹ்) அவர்களிடம் வந்து,
“எனது முட்டுக்காலில் ஒரு காயம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு
நான் பல மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து ஆலோசனைகளை கேட்டு, மருந்திட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகியும் அது குணமாகவில்லை” என்றார். அதற்கு ஹள்ரத் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அவரைப் பார்த்து “நீங்கள் மக்களுக்கு நீர் தேவைப்படும் இடத்தில் ஒரு கிணற்றை ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு ஏற்பாடு செய்தால் உனது மூட்டுவலி குணமாகும்” என்றார்கள். அவரும் அவ்வாறே செய்தார். அவரின் மூட்டுவலியும் குணமாகியது (
நூல்: பைஹகி )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனது தூதர் முஹம்மது {ஸல்} அவர்கள்
ஆர்வமூட்டி தூண்டியிருக்கின்ற அத்துனை வடிவத்திலான தர்மங்களையும் பேரார்வத்தோடு
செய்யும் மேன்மக்களாக நம் ஒவ்வொருவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment