Thursday, 9 May 2024

தாய் சுவனம் என்றால் தந்தை சுவனத்தின் மத்திய வாசல்!!

 

தாய் சுவனம் என்றால் தந்தை சுவனத்தின் மத்திய வாசல்!!


கோடை விடுமுறை இது தான் நமது பிள்ளைகள் நம்மோடு அதிக நேரங்களை செலவிடுகிற தருணம்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டு நம்முடைய வீடுகளிலேயே நம்மைச் சுற்றியே அவர்கள் பொழுதை கழிக்கும் தருணம்.

மக்தப் மதரஸாக்களில் கூட கோடை கால தீனிய்யாத் வகுப்புகள் மூலம் மிகச் சுருக்கமாக தீனுடைய விளக்கங்களை நம் ஆலிம்கள் அவர்களுக்கு கவனப்படுத்துகிற தருணம்.

இந்த தருணத்தை நாம் வீணாக்கி விடக்கூடாது. மாறி வரும் கால சூழலில் பெற்றோர்கள் மீதான கவனமும் மரியாதையும் குன்றிப் போய் பெற்றோர்களை சுமையாக, பாரமாக கருதும் ஒரு சமூகம் நம்மிடையே மெல்ல உருவாகி வருகிறது.

முன்பெல்லாம் இரவு நேரத்தில் பெற்றோர்களை பிள்ளைகள் தேடிய காலம் போய் நடு இரவு வரை பிள்ளைகளை பெற்றோர்கள் தேடும் காலம் வந்து விட்டது.

பெற்றோர்களின் உபதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு, அறிவுரைகள் மறுக்கப்பட்டு, அவர்களின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு பெற்றோர்களே வேண்டாம் என்று கூறி உதறிவிட்டு தனிக்குடித்தனம் போகும் சூழல் வெகுவாக உருவாகி விட்ட இந்த சூழலில் பெற்றோர்கள் குறித்தான, பெற்றோர்களின் கண்ணியம் குறித்தான இஸ்லாமிய மார்க்கத்தின் ஆழிய கருத்துக்களை அவர்களுக்கு நாம் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்என்று கூறுவான். ( அல்குர்ஆன்: 46: 15 )

 

وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَ اِلَىَّ الْمَصِيْرُ‏

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” ( அல்குர்ஆன்: 31: 14 )

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا 

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 4: 36 )

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا‌ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِىْ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன். ( அல்குர்ஆன்: 29: 8 )

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

رَّبُّكُمْ اَعْلَمُ بِمَا فِىْ نُفُوْسِكُمْ‌ؕ اِنْ تَكُوْنُوْا صٰلِحِيْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِيْنَ غَفُوْرًا

 (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 17: 23 - 27 )

யஹ்யா (அலை) அவர்களைப்பற்றி குறிப்பிடும் போது...

وَّبَرًّۢا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا‏

மேலும், தம் பெற்றோருக்கு நலவுகள் செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை. ( அல்குர்ஆன்: 19: 14 )

ஈஸா (அலை) அவர்களைப்பற்றி குறிப்பிடும் போது...

وَّبَرًّۢابِوَالِدَتِىْ

 وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا‏

என் தாயாருக்கு நலவுகள் செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை". ( அல்குர்ஆன்: 19: 32 )

பெற்றோர்களுக்கு நாம் ஏன் உபகாரம் செய்ய வேண்டும்?

பெற்றோர்களோடு நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூன்று அடிப்படை கடமைகளையும், பல்வேறு கட்டளைகளையும் அல்குர்ஆன் மூலமாகவும், நமது நபி (ஸல்) அவர்களின் தூய வார்த்தைகள் மற்றும் வாழ்க்கையின் மூலமாகவும் வழிகாட்டி இருக்கின்றான்.

அடிப்படை கடமைகள் மூன்று.

1. பேருபகாரத்தோடு, நேயத்தோடு நடந்து கொள்வது. (இஹ்ஸான் - ஹுஸ்னன்)

2.: வாழும் காலமெல்லாம் நன்றியுணர்வுடன் வாழ்வது. (ஷூக்ர்)

3. பணிவிடைகள் மற்றும் நற்பண்களுடன் நடந்து கொள்வது. (பர்ர்)

இதற்கான பிரதான காரணங்களையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பட்டியல் போடுகிறான்.

 

1. வயிற்றில் கருவாக, குழந்தையாக சுமப்பது.

2. குழந்தையைப் பெற்றெடுப்பது.

3. தாய்ப்பால் கொடுப்பது.

4. தாய்ப்பாலை மறக்கடிக்கச் செய்வது.

கருவை சுமக்கும் போது ஒரு தாய்...

நல்ல ஆரோக்கியமான ஒரு பெண் 40 வாரங்கள் வரை அல்லது 280 நாட்கள் கருவை தன் வயிற்றில் சுமக்கின்றாள். 

கருவை வயிற்றில் சுமக்கும் இந்த காலத்தில் ஒரு பெண் நடப்பதற்கு, உட்காருவதற்கு, நிற்பதற்கு, தூங்குவதற்கு, தூக்கத்தில் வலது இடது புறம் திரும்புவதற்கு, உண்பதற்கு, குடிப்பதற்கு, சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கு என சாதாரணமாக இது வரை தாம் செய்த அனைத்து காரியங்களையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

வயிற்றில் தாம் சுமக்கும் குழந்தைக்கு எதுவும் ஆகி விடுமோ என பயந்து பயந்து செய்ய வேண்டும்.

கருவை சுமக்கும் காலத்தில் ஒரு பெண் பெரிய போராட்டம் ஒன்றையே நடத்தி விடுகிறார்.

குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஒரு தாய்...

பிரசவ காலம் என்பது குழந்தையின் பிறப்பை குறிக்க கூடிய செயல். சில பெண்களுக்கு ஒரு மணி நேரத்தில் பிரசவம் ஆக கூடும். சில பெண்களுக்கு சில மணி நேரங்கள் வரை ஆகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஒரு நாள் வரை கூட ஆகலாம். முதல் பிரசவமாக இருக்கும் பெண்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரையும் ஆகலாம். முதல் முறை கருத்தரிக்கும் பெண்களின் பிரசவக்காலம் சற்று நீண்ட நேரம் இருக்க கூடும்.

பிரசவத்தின் முதல் அடையாளம் "பிரசவ வலி". பொதுவாக, வலியின் அளவு 'டெல்என்று குறிக்கப்படும். 

ஒரு மனிதனால் அதிகபட்சமாகத் தாங்கக்கூடிய வலியின் அளவு, 45 டெல். ஆனால், ஒவ்வொரு பெண்ணும் தன் பிரசவத்தின்போது, 57 டெல் வலியைக் கடக்கிறாள். இது, 20 எலும்புகள் ஒரே நேரத்தில் ஒருசேர முறியும்போது ஏற்படும் வலிக்கு இணையானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் ஜினான் நகரில் இருக்கும் ஐமா மருத்துவமனை ஆண்களுக்கும் பேறுகால வலியை உண்டாக்கி, அவர்களையெல்லாம் பெண் வலியைப் புரியவைக்க வேண்டும் என்று 'பிரசவ வலி உணர் முகாம்' (Pain Experience Camp) ஒன்றை கடந்த 2014 டிசம்பரில் துவக்கியது.

மருத்துவமனையில், காட்டன் பேடுகள் பொருத்தப்பட்ட மின் சாதனம், ஆண்களின் அடிவயிற்றில் வைக்கப்பட்டு, எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு, செயற்கை வலி உண்டாக்கப்படுகிறது. ஒன்றிலிருந்து பத்து வரையுள்ள லெவல்களில், ஒவ்வொரு லெவலாக அதிகரிக்க அதிகரிக்க, வலியின் அளவும், ஆண்களின் அலறலும் அதிகரிக்கிறது. பல ஆண்கள் லெவல் மூன்றிலேயே நர்ஸிடம் ஷாக்கை நிறுத்தும்படி கெஞ்ச ஆரம்பிக்க, லெவல் ஐந்து வரை தாக்குப் பிடிக்கும் சிலர் அதற்கு மேல் திணறித் தெறித்து ஓடுகிறார்கள். வெகு சிலர், லெவல் 10 வரை சென்றடைந்து, வெளிறிய முகத்துடன், நடுங்கும் உடலுடன் படுக்கையில் இருந்து எழுகிறார்கள்.

''பெண்கள் எதிர்கொள்ளும் பேறுகால சிரமங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகச் சாதாரணமே! ஆனாலும், இதற்கு உட்படுத்தப்படும் ஆண்கள், இந்த வலியின் மூலமாகவே பேறுகால வலியின் ஒப்பீடற்ற வேதனையைப் புரிந்துகொள்வார்கள்; அம்மாவாகப் போகும் தங்கள் மனைவியின் சிரமங்களை மனதார உணர்வார்கள்; குழந்தை பிறப்பிலும் வளர்ப்பிலும் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்'' என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். ( நன்றி: விகடன். 10/03/2015 )

தாய்ப்பால் கொடுக்கும் போது ஒரு பெண்...

தாய்ப்பால் சுரப்பு என்பது மனத்துடன் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு பெண் தாய்மையில் பூரிக்கும்போது, பால் சுரப்புக்கான ஹார்மோன் அவருக்குத் தூண்டப்பட்டு, குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கிறது. எனவே, முதலில் ஒரு பெண் மனதளவில் தயாராக வேண்டும். அதுவும், பிரசவத்துக்குப் பின்னான முதல் ஒரு மணி நேரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

ஏனெனில்,  முதல் ஒரு மணி நேரத்தில், பால் கொடுக்கும் எண்ணம் அந்தத் தாய்க்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவே பால் சுரக்கும்.

காரணம் இயல்பாகவே, பிறந்து முதல் ஒரு மணி நேரத்துக்கு, குழந்தையிடம் தாய்ப்பாலுக்கான தேடல் அளவுக்கதிகமாக இருக்கும்.

ஒரு தாயிடம் அந்த எண்ணம் குறைவாக இருக்கும்பட்சத்தில், பால் சுரப்பும் குறைவாகத்தான் இருக்கும். அதேபோல, பால் கொடுக்கும்போது தாய் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணரும்போது, அவருக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். ( நன்றி: விகடன். 05/09/2019 )

எனவே, ஒரு பெண் தாயாக ஆனதோடு மாத்திரம் மதிப்பு பெறுவதில்லை. மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் போது தான் தாய்மையின் உண்மையான மதிப்பை உணர்கிறார்.

தாய்ப்பால் மறக்கடிக்கும் முனைப்பில் ஒரு தாய்...

பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். இதில் இருக்கும் சத்துக்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் அவசியமானவை.

தாயின் ஆரோக்கியம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

இணை உணவுகள் கொடுக்க ஆரம்பித்தப் பின்பு, படிப்படியாக தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தலாம். சில தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்த முடியாமல் கடும்  சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

மறக்கடிக்க பல்வேறு பிரச்சினைகளை, போராட்டங்களை எதிர் கொள்கின்றார்கள்.

 

மேலும், தாய்ப்பாலை மறக்கடிக்க முயலும்  தாய்க்கு மார்பில் பால் கட்டுதல், பால் கசிதல், மார்பகத் தசை இறுகுதல், வலி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் உடல் ரீதியான இந்த பிரச்சினைகளை எல்லாம் எதிர் கொண்டே ஒரு தாய் பால் மறக்கடிக்கச் செய்கிறாள். ( நன்றி: தினத்தந்தி, 02/10/2022 )

ஆகவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பிரதான மூன்று கடமைகளை சொல்லிய பிறகு அதற்கான காரணங்களாக இந்த நான்கு அம்சங்களை குறிப்பிடுகின்றான்.

ஆகவே, இன்றைய நவீன காலத்தில் நாம் நமது குழந்தைகளின் கவனத்திற்கு இந்த அம்சங்களை அறியத் தந்து பெற்றோர்கள் விஷயத்தில் அல்லாஹ் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறான் என்பதை உணர்த்த கடமைப் பட்டிருக்கின்றோம்.

கடமைகளின் பட்டியல்...

1. தகாத, ஆகாத வார்த்தைகள் சொல்லக் கூடாது.

2. விரட்டி விடக் கூடாது.

3. கண்ணியமான முறையில் பேச வேண்டும்.

4. மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

5. பெற்றோர்கள் வாழும் போதும், பெற்றோர்களின் மறைவுக்குப் பின்னரும் துஆ செய்வது.

6. அனைத்து காலத்திலும் அனைத்து காரியத்திலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

7. அவர்கள் விட்டுச் சென்ற உறவுகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

8. அவர்களின் வஸிய்யத்தை, கடனை, பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒருர் வருகிறார்.

ஈரானில் உள்ள ஒரு நகரம், ஹுராசானிலிருந்து நான் என் தாயை சுமந்து வந்திருக்கிறேன்.

ஹஜ் செய்வதற்காக. எங்கிருந்து சுமக்கிறார்? ஈரானிலிருந்து சுமந்து வருகிறார். ஏறக்குறைய 2500 கிலோ மீட்டர்களுக்கு மேல் தூரம். இருக்கும். .

அங்கிருந்து தன் தாயை தூக்கி தன் முதுகில் சுமந்து ஒருவர் வந்திருக்கிறார். எதற்காக? அவர்களுக்கும் ஹஜ்ஜின் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக

அப்துல்லாஹ் இப்னு உமரிடத்தில் சொல்கின்றார். என் தாயை முதுகில் சுமந்தவனாக தவாஃப் செய்தேன், என் தாயை முதுகில் சுமந்தவனாக சயீ செய்தேன், முதுகில் சுமந்தவனாக மினா அழைத்துச் சென்றேன், பிறகு அரஃபா, பிறகு முஸ்தலிஃபா, பிறகு மக்கா என அனைத்து கடமைகளையும் என் தாயை முதுகில் சுமந்தவனாகச் செய்தேன்.

பிறகு கேட்கிறார்; என் தாய்க்குள்ள கடமையை நான் செய்துவிட்டேனா? என்று.

அப்போது, இப்னு உமர் (ரலி) சொன்னார்கள்:- இல்லை. நீ சிறு பிராயத்தில் இருக்கும் போது, அந்த தாய் உன்னை பார்த்து ஒருமுறையாவது புன்முறுவலாக சிரித்திருப்பார் அல்லவா? மனமாற உன்னை பார்த்து மகிழ்ந்திருப்பார் அல்லவா? அதற்கு கூட நீ இன்னும் நன்றி செலுத்தவில்லை” என்று.

 

பெற்றோருக்கு முன்னால் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்,அதட்டி பேசாதீர்கள்,கண்ணியமாக பேசுங்கள்,பணிவோடு நடந்து கொள்ளுங்கள் என்று.அல்லாஹ் கூறுகின்றானே அதற்கு என்ன பொருள் தெரியுமா? எந்த விஷயங்களை எல்லாம், அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான் என்று குர்ஆனின் விரிவுரையாளர்கள் இப்னு அப்பாஸ் சொல்கிறார்.

உங்கள் பெற்றோருக்கு முன்னால் உங்கள் ஆடைகளை உதறாதீர்கள். அப்படி உதறும் போது ஏற்படுகிற காற்றினாலோ அல்லது அந்த ஆடையில் பட்டு இருக்கக்கூடிய தூசியினால் அவர்கள் சிரமப்பட்டால் அதுவும் அவர்களுக்கு நீங்கள் செய்கிற நோவினை,குறைபாடு என்று இப்னு அப்பாஸ் அவர்கள் விளக்கம் சொல்கின்றார்கள். ( சாதுல் மஸீர் 1/92 – அல்குர்ஆன்: 2: 83 )

மேலும் சொல்கின்றார்கள், அவர்களை அதட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா, அவர்களுக்கு முன்னால் கத்திப்பேசாதீர்கள்,சத்தத்தை உயர்த்திப் பேசாதீர்கள்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடத்தில் கேட்கப்படுகின்றது.

பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றால் என்ன? என்பதாக.

أن تبذل لهما ما ملكت ، وأن تطيعهما في ما أمراك به ، إلا أن تكون معصية

நீ உன் கை வசம் என்ன வைத்திருக்கிறாயோ, அனைத்தையும் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். பாவமற்ற காரியங்களில் அவர்கள் கூறும் விஷயத்திற்கு நீ கீழ்படிந்து  நடக்கவேண்டும்”. நூல் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், எண் : 9288.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இருவரை பார்க்கிறார்கள்.அவர்களை பார்த்ததற்கு பிறகு, இவர் யார்? என்று கேட்கிறார். அப்போது, இரண்டாமவர் சொல்கிறார், இவர் என்னுடைய தந்தை என்பதாக. உன் தந்தையா! அவரை பெயர் கூறி நீ அழைக்காதே! அவர் நடந்தால் அவருக்கு முன்னால் நீ நடக்காதே! ஓர் இடத்திற்கு நீங்கள் சென்றால் அவர் உட்கார்வதற்க்கு முன்னால் நீ உட்காராதே! ( நூல்: அத்துர்ருல் மன்சூர் 6/253, அல்குர்ஆன்: 17:23,34 )

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடத்தில் அவர் மாணவர் ஒருவர்.என் பெற்றோர் தப்பு செய்கிறார்கள் நான் என்ன செய்வது?

இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) சொல்கிறார்கள்.

கண்ணியமாகச் சொல், நீ சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் சரி,இல்லை உன் பேச்சு பிடிக்கவில்லை, அவர்கள் முகம் திருப்புகிறார்களா? அவர்கள் அதை வெறுத்தால் நீ அவர்களை அப்படியே விட்டு விடுவீராக”. ( நூல்: உஸ்னதுல் இப்னு ஜஅத் 2608 )

சயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் பல நூறு சஹாபாக்களிடத்தில் கல்வி படித்த மிகப்பெரிய தாபியீ அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது,

பெற்றோருக்கு முன்னால் முற்றிலும் பணிந்து விடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே இதற்கு விளக்கம் என்ன? என்று, அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்; “ஒரு அடிமை தவறு செய்து விட்டான்,தன் எஜமானனுக்கு குற்றம் இழைத்துவிட்டான், அந்த எஜமானன் மிகக் கோபக்காரன்,மிகக் கண்டிப்புடையவன், அந்த எஜமானனுக்கு முன்னால் குற்றம் செய்த அடிமை எப்படி பயந்து பணிவோடு இருப்பானோ அப்படி பணிவோடு நீங்கள் நிர்ப்பதைத்தான் அல்லாஹ் இங்கு சொல்கின்றான், பெற்றோர்களுக்கு முன்னால் பணிந்து விடுங்கள் என்று.”.

أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ

முஆத் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்:- அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எனக்கு வஸிய்யத் -அறிவுரை கூறினார்கள்;- “உன் பெற்றோருக்கு நீ மாறு செய்யாதே! அவர்கள் உன் குடும்பத்தை விட்டும் உன் சொத்தை விட்டும் உன்னை வெளியே செல் என்று சொன்னாலும் சரியே”. அறிவிப்பாளர் : முஆத் (ரலி), நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21060.

அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்றார்கள். ஒருவர் ரஸூலுல்லாஹ் {ஸல்} அவர்களிடத்தில் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் ஜிஹாதுக்கு வந்திருக்கிறேன் என்று. அதற்கு, நபி {ஸல்} கேட்டார்கள்,

أَحَيٌّ وَالِدَاكَ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா? என்று. ஆம் அல்லாஹ்வின் தூதரே” என்றார் அவர். அப்போது நபி {ஸல்} அவர்கள் அந்த இருவரிடத்தில் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து ஜிஹாதுடைய  நன்மையை தேடுவீராக!” என்று கூறினார்கள்..அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : புகாரி, எண் : 2782.

இன்னொரு அறிவிப்பில்... அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு மனிதர் வந்து கூறினார்.

أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ أَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ فَهَلْ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَيٌّ قَالَ نَعَمْ بَلْ كِلَاهُمَا قَالَ فَتَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ نَعَمْ قَالَ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا

அல்லாஹ்வின் தூதரே! நான் ஹிஜ்ராவிற்காக உங்களிடத்தில் பைஅத் செய்கிறேன். இனி என் தாய் நாட்டிற்கு நான் திரும்பமாட்டேன். அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரா செய்து வந்துவிட்டேன்.

ஆனால், அந்த நபித்தோழர் கூறுகிறார், என் தந்தை என் தாயை அழும் நிலையில் நான் விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஒரே மகனார் அவர்கள், இந்த மகனின் பக்கம் தேவையுடையவராக இருக்கிறார்கள்.

எங்களை விட்டு விட்டுச் சென்றுவிட்டால் எங்க நிலைமை என்னவாகும் என்று அழைக்கிறார்கள். அவர்கள் அழுத நிலையில் நான் விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} சொன்னார்கள்.

நீ மதினாவில் தங்காதே, உன் பெற்றோர் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று விடு”.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர்இப்னுல் ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம்,எண் : 4624

இமாம் அபூதாவூத் பதிவுசெய்கிறார். நீ அவர்களிடத்தில் சென்று அவர்களுக்கு சிரிப்பை கொடு,அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடு. எப்படி நீ அழ வைத்தாயோ, அவர்களை சிரிக்கவை! என்று சொன்னார்கள்.

 அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோருடைய பொருத்ததில் இருக்கின்றது.

அபூ ஸயீது அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹ் {ஸல்} இடத்தில் எமன் நாட்டிலிருந்து வருகிறார்.

هَاجَرَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْيَمَنِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَجَرْتَ الشِّرْكَ وَلَكِنَّهُ الْجِهَادُ هَلْ بِالْيَمَنِ أَبَوَاكَ قَالَ نَعَمْ قَالَ أَذِنَا لَكَ قَالَ لَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْجِعْ إِلَى أَبَوَيْكَ فَاسْتَأْذِنْهُمَا فَإِنْ فَعَلَا وَإِلَّا فَبِرَّهُمَا

நபி {ஸல்} அவர்களிடத்தில் சொல்கிறார்; ”அல்லாஹ்வின் தூதரே! என் முழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்து வந்து விட்டேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள், ஷிர்க்கை விட்டு விட்டீரா? அதற்கவர், விட்டு விட்டேன் என்றார். ஜிஹாத் பாக்கியிருக்கிறது, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது,

உம்மிடம் கேட்கிறேன், இதை விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

எமன் நாட்டில் உம் பெற்றோர் இருவரும் உயிரோடு இருக்கிறார்களா?.அவர் கூறினார்; அல்லாஹ்வின் தூதரே! இருவரும் உயிரோடு இருக்கிறார்கள்.

நீ ஜிஹாதிற்கு வந்திருக்கிறாயே, உம் பெற்றோர் இடத்தில் அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறாயா! என்று கேட்டார்கள்.

அப்போது அந்த நபித்தோழர் கூறுகிறார், அல்லாஹ்வின் தூதரே! நான் அனுமதி கேட்கவில்லை, ஜிஹாதின் மேல் உள்ள பிரியத்தால் நான் அனுமதி இல்லாமல் ஓடி வந்துவிட்டேன் என்று.

அப்போது நபி {ஸல்} சொன்னார்கள், உம் பெற்றோரிடத்தில் செல்வாயாக, அவர்களிடத்தில் அனுமதி கேட்பாயாக. அவர்கள் அனுமதி கொடுத்தால் நீ என்னிடம் வருவாயாக!. அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால்,அவர்களிடத்தில் இருந்து அவர்களுக்கு நன்மை செய்வீராக.! அறிவிப்பாளர் : அபூ ஸயீது அல்குத்ரி (ரலி) நூல் : முஸ்னத் அஹ்மது,எண் : 11296.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)  நபி {ஸல்} அவர்களிடத்தில் கேட்கிறார்கள்;

أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ الصَّلَاةُ عَلَى مِيقَاتِهَا قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ

அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் மிக விருப்பமான அமல் எது என்று? நபி {ஸல்} சொன்னார்கள்; தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது.

தொடர்ந்து, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது கேட்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! பிறகு என்ன? என்பதாக.

நபி {ஸல்} அவர்கள் சொன்னார்கள், பெற்றோருக்கு நன்மை செய்வது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதுரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 496,2574.

சுகமான வாழ்க்கை, நீண்ட ஆயுள் வாழ, நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?

அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

« من بر والديه طوبى له زاد الله في عمره »

முஆத் இப்னு ஜபல் (ரலி) அறிவிக்கிறார்கள்:- யார் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்கிறானோ, நன்மை செய்கிறானோ, அவனுக்கு நற்செய்தி சொர்க்கம் கிடைக்கட்டுமாக! அல்லாஹ் அவனுடைய வாழ்க்கையை அதிகப்படுத்தட்டுமாக.

அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் (ரலி) நூல் : ஹாகீம்,எண் : 7366.

مَنْ أَحَبَّ أَنْ يُمَدَّ لَهُ فِي عُمْرِهِ وَأَنْ يُزَادَ لَهُ فِي رِزْقِهِ فَلْيَبَرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ

யார் தனக்கு நீண்ட வாழ்க்கை வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ,மேலும், தனது வாழ்வாதாரம் விரிவாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றாரோ,செல்வம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைபடுகின்றாரோ,தனது உணவு விஸ்தீரணமாக வேண்டும் என்று ஆசை படுகின்றாரோ அவர் தன் பெற்றோருக்கு கருணை காட்டட்டும். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12922.

5 comments:

  1. அருமை அருமை மாஷா அல்லாஹ் காலத்திற்கு போதுமான அருமையான குறிப்பு தகவல் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு இரு உலகிலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. رضا الرب في رضا الوالدين
    பெற்றோரின் பொருத்தமே இறையின் பொருத்தம்!

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத். பெற்றோர்களுக்கான சேவை குறித்த பயான் குறிப்புகளை முற்றிலும் புதிய கோணத்தில் வழங்கியுள்ளீர்கள்.
    جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖

    ReplyDelete