Thursday, 5 December 2013

பாபரி மஸ்ஜிதும்,போராடும் முஸ்லிம் சமூகமும்!



இந்த தேசத்தின் உயர்வுக்கும், விடுதலைக்கும் உயிராலும், உடலாலும்,உணர்வுகளாலும் மாபெரும் அர்ப்பணிப்பை பங்களிப்பை அளித்த ஓர் ஒப்பற்ற சமூகமான முஸ்லிம் சமூகம் இன்று சமநீதி கேட்டு நீதிமன்ற வாயிற்படிகளில் காத்து நிற்கின்ற அவலங்களை உலக சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும்                    1) லிபர்ட்டிசுதந்திரம், 2) ஜஸ்டிஸ்சமநீதி, 3) பிரதர்கூட்சகோதரத்துவம், 4) ஈகுவாலிட்டிசமஉரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் தரப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை பொருத்தவரையில் இந்நான்கு உரிமைகளும் இந்த தேசத்தால் ஏட்டளவில் மட்டுமே உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதே தவிர நடைமுறையில் இல்லை.
நம்முடைய இறையில்லமான பாபர் மஸ்ஜிதை இழந்து இன்றோடு 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரை நீதி கிடைத்தபாடில்லை. இடித்தவர்களும் தண்டிக்கப்படவில்லை.
லிபர்ட்டி
இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பினும் குடிமக்களின் மத உணர்வுகளை மதித்து அவர்கள் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் உரிமை உண்டு என இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான ஷரத்துக்களின் வழியாக உரிமை வழங்கி யுள்ளது. எனவே ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற அவனுக்கு சர்வ சுதந்திர உரிமை உண்டு. மேலும், ஒருவனுக்கு மற்றவனது மதத்தை பழிக்கவோ, அவமதிக்கவோ உரிமை கிடையாது. அப்படி ஒருவன் அதைச் செய்தான் என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி தண்டிப்பதற்குரிய குற்றங்களாகும். மதம் சம்பந்தமான குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமானது தனது 295 முதல் 298 வரையிலான 5 சட்டப்பிரிவுகளின் வாயிலாக விளக்குகிறது. அந்த 5 சட்டப்பிரிவுகளையும் பின்வரும் மூன்று தலைப்புகளின் கீழ்வகைப்படுத்துகிறது.
(offences relating to religions) மதம் சம்பந்தமான குற்றங்கள்     1. வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருள்களின் புனிதத்தன்மைக் கெடுத்தல். (defilement of places of worship or objects of veneration)  பிரிவுகள் 295 மற்றும் 297.            2.மத உணர்வுகளை அவமதித்தல், (outraging the religious feelings) பிரிவுகள் 295-a மற்றும் 298.                            3.மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல், (disturbing religious assemblies) பிரிவு 296.
             நூல்:இந்திய தண்டனைச் சட்டம், பக்கம்:370,371.
ஆனால்,முஸ்லிம் சமூகம் சுதந்திர இந்தியாவிலிருந்தே மதரீதியான பாகுபாட்டுடனே நடத்தப்பட்டு வருகிறார்கள். உதாரணமாக, பொதுசிவில் சட்டம், மதமாற்றதடைச் சட்டம் என முஸ்லிம்களின் மத உரிமையை, சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு ஓராயிரம் நிபந்தனைகளை கடந்தாக வேண்டியுள்ளது. எனவே மதரீதியான சுதந்திரத்தைப் பொருத்தவரையில் அது வெறும் உத்தரவாக மட்டுமே உள்ளதே தவிர உத்தரவாதமாக இல்லை`
ஜஸ்டிஸ்
பன்நெடுங்காலமாகவே இந்திய தேசத்தின் நீதித்துறையின் செயல்பாடு கவலை அளிப்பதாகவே அமைந்துள்ளது. சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிரான நிலைப்பாடு,வழக்குகளின் முடிவில் வழங்கப்படும் தண்டனை,என அத்தனையும் முஸ்லிம்களின் நலனுக்கு எதிராகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
நீதி வழங்கும் நீதிபதிகள் சட்டப்புத்தகத்தை பார்த்தும், சாட்சிகளை விசாரித்தும்,ஆய்வுசெய்தும் தீர்ப்பளிக்கின்றார்களா? இல்லை மனம் போன போக்கில் தீர்ப்பளிக்கிறார்களா? என்பதை முஸ்லிம்களுக்கெதிரான வழக்குகளில் அவர்கள் அளித்த தீர்ப்புகளே சான்றுபகர்கின்றன.
தீர்ப்பு 1
1986-ல் பாபர் மசூதி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பைசலாபாத் நீதிபதி கே.எம்.பாண்டே பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் 1991-ல் வெளியிட்ட தம் சுயசரிதையில் தான் எந்த அடிப்படையில் அந்த தீர்ப்பை வழங்கினேன் என்று குறிப்பிடும் போதுபூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று , எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக்குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பைத் தெரிந்துகொள்ள நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத்,அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அதைத்தொடக்கூட இல்லை. மாலை 4.40-க்கு நான் தீர்ப்பை படித்தவுடன் அந்தக்குரங்கு அங்கிருந்து சென்றுவிட்டது. பின்னர் எனது பாதுகாப்பிற்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர்.பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அந்தக்குரங்கு. எனக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.
                     நூல்: புதிய கலாச்சாரம், டிசம்பர் 2010
செப்டம்பர்,30,2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தரம் வீர் சர்மா, எஸ்.யூ.கான், சுதிர் அகர்வால் ஆகியோர் அளித்த அயோக்கியத்தனமான தீர்ப்பின் பிண்ண்ணியிலும் அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும். எனினும்,குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா?மூன்றா? என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுய சரிதை எழுதும் போதுதான் நமக்குத் தெரிய வரும்.
தீர்ப்பு 2
அப்சல் குருவின் தூக்கு தண்டனை, இதில் ஆயிரமாயிரம் கேள்விக் கணைகள் தொக்கி நிற்கின்றன.                  ஜீ நியூஸ் நிறுவனம் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு அப்சல் குரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்த திரைப்படம் ஒன்றை எடுத்தது. திரைப்படத்தின் பெயர்டிசம்பர் 13” வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது  இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லோருக்கும் தூக்குதண்டனை தீர்ப்பாக வழங்கப்படுகின்றது.           அந்த திரைப்படத்தில் தூக்கு தண்டனையே கீழ் நீதிமன்றத்தால் தீர்ப்பாக வழங்கப்பட்டது.    இப்படித்தான் தீர்ப்பு இருக்க வேண்டுமென திரைப்படம் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களைத் தந்தது. மேலும்,அது தான் மக்கள் எதிர் பார்க்கும் தீர்ப்பு என்றது திரைப்படம். இப்படி படம் எடுத்தது தவறு, அதை திரையிட்டது தவறு, உடனே தடைசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு டெல்லி நீதி மன்றத்தில் முறையிட்டனர். டெல்லி நீதிமன்றம் திரைப்படத்தை தடை செய்தது. படம் எடுத்தவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கெல்லாம் ஆளாகமாட்டார்கள் எனக்கூறி  தடையை அகற்றியது. திரைப்படம் தங்கு தடையின்றி ஓடியது. இறுதியில் திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனையே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது.                 ஆனாலும் அவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கீழ் நீதிமன்ற நீதிபதி திங்காரா கங்காரா என்பவரால் வழங்கப்பட்ட இந்த மொத்தத் தீர்ப்பும் பின்னாளில் உயர் நீதிமன்றத்தால் பல திருத்தங்களுக்கும், தலைகீழ் மாற்றங்களுக்கும் உள்ளாகியது. திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் நாடாளுமன்ற தாக்குதலின் மூளை என குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலை பேரா. எஸ்..ஆர்.ஜீலானி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பெற்றது.         ஆனால், உயர் நீதிமன்றம்  அவரை விடுவித்தது. உச்ச நீதிமன்றத்தின் அநீதியும் அந்த திரைப்படத்தின் தாக்கமும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நந்திதா ஹாக்ஸர் என்ற மூத்த வழக்கறிஞர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
The supreme court however vacatet the stay on grounds that judges could not be influenced. It failed to appreciate how such film are responsible for creating a climate of fear and mistrust. Today even post acquittal geelani cannot get a house on rent. His children find it har to lead a normal life.(source:13 december a reader with on introduction by arunthathi rai page no:9) “அதாவது உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்கிற்று. நீதிபதிகள் ஊடகங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள் என காரணம் சொன்னது. அது போன்ற திரைப்படங்கள் மக்களிடையே அச்சத்தையும், அவ நம்பிக்கை யையும் ஏற்படுத்துவதில் பொறுப்பு வகிக்கின்றன என்பதை கண்டு கொள்ள உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது. இப்போது ஜீலானி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை மக்கள் மத்தியில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். அவருக்கு ஒரு வாடகை வீடு கூட கிடைப்பதில்லை. அவருடைய குழந்தைகளும் ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திட முடிவதில்லை.
                                   நூல்: ரீடர் , பக்கம்:9
தீர்ப்பு 3
1997,தில்லி, ரோஸ்டக், சோனிபட்,காஸியாபாத், ஆகிய பகுதிகளில் 20 நாட்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் 18 வயது ஆமிர் கைது செய்யப்பட்டார். 14 ஆண்டுகள் கழித்து அவர் நிரபராதி என நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட மூன்றே ஆண்டுகளில் அவரின் தந்தை அவமானம் தாங்காமல் இறந்துபோனார். அவரின் தாயார் பக்கவாதத்தில் முடங்கிப்போனார். ஆமிரின் உலகமே நொருங்கிப் போனது. இதற்கான நிவாரணத்தை தருவது யார்?
ஒன்று குரங்கைப்பார்த்தோ,அல்லது சினிமாவைப் பார்த்தோ தீர்ப்பு சொல்வார்கள். அல்லது அநியாயமாகவோ தீர்ப்பு வழங்குவார்கள்.
ஆக மொத்தத்தில் சமநீதி என்பது முஸ்லிம்களைப் பொருத்தவரையில் இந்த தேசத்தில் கானல் நீர் போன்றது.
பிரதர்கூட்
ஒருகாலம் இருந்தது அப்போது என் சகோதர சமுதாயம் எம்மை மாமன் மச்சானாகவும், அண்ணண் தம்பிகளாகவும் பாவித்து வந்தது, ஆனால், எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் இங்கே வாழ முடிகிறது. என் சகோதரன் ஜீலானி முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடுகேட்டு வீதி வீதியாய் அலைகிறான். எங்கே சென்றது சகோதரத்துவம்?
கோவை கலவரம்,மும்பை கலவரம், குஜராத் கலவரம், சூரத் கலவரம், முஸாஃபர் நகர் கலவரம் என அத்தனை கலவரங்களிலும் முஸ்லிம்களின் சொத்தை சூறையாடியது, முஸ்லிம்களை கொன்று குவித்தது, முஸ்லிம் பெண்களின் கற்பைச் சீரழித்தது என எல்லாம் அருகே வசித்த, நெருங்கிப் பழகிய, உறவு கொண்டாடியவர்கள் தானே! எங்கே சென்றது சகோதரத்துவம்? நம்பியவர்கள் தானே மோசம் செய்தார்கள்.
ஈகுவாலிட்டி
முஸ்லிம் சமூகம் இந்த தேசத்தில் பெற்றிருக்கிற உரிமையின் லட்சணத்தை நீதியரசர் ராஜீந்தர சஜ்ஜார் தமது அறிக்கையில்பிற்படுத்தப்பட்ட மக்கள் அடைந்திருக்கின்ற வளர்சியைக் கூட இந்த முஸ்லிம் சமூகம் பெறவில்லை என தோலுரித்துக்காட்டினார். அத்தோடு நின்று விடாமல் இந்த தேசம் முஸ்லிம் சமூகத்தை சிறைகளில் நிரப்பி வருவதை கவலையோடு இந்த தேசத்தில் 13 சதவீதம் வாழும் சிறுபான்மைமுஸ்லிம் சமூகம், சிறை எண்ணிக்கையில் 21 சதவீதமாக உயர்ந்து நிற்பது வேதனையான விஷயம்என்று தெரிவித்திருந்தார். இந்தியாவில் மொத்தம் உள்ள சிறைச்சாலைகளின் எண்ணிக்கை 1382. மொத்த கைதிகளின் எண்ணிக்கை 3,72,296. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21% ஆகும்.
முஸ்லிம்களை சிறைக்கு அனுப்புவதில் மதவாத பிஜேபி அரசு, மதசார்பற்ற காங்கிரஸ் அரசு என்ற வேறுபாடு இல்லைநெடுங்காலம் இடது சாரிகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் கூட கிட்டத்தட்ட சிறை கைதிகளின் எண்ணிக்கையில் சரிபாதி முஸ்லிம்கள் தான். கடந்த ஆண்டு இந்தியா டுடே பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் முடிவில்இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவித்தது.
                     நூல்:இந்தியா டுடே டிசம்பர் 26, 2012
ஆனால்,1992 பாபர் மசூதியை இடித்தவர்கள், அதன் தொடர்ச்சியாக நாட்டில் கலவரங்களை தூண்டியவர்கள் என இன்று வரை காவல்துறையால் கைது செய்யப்படவில்லை. நாட்டில் கவுரவுமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது.
இது வரை இந்த தேசத்தில் நடைபெற்ற அத்தனை கலவரங்களிலும் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்துக் கூறிய ஸ்ரீ கிருஷ்ணா விசாரணைக் கமிஷன், கோபால் கமிஷன், மிஷ்ரா கமிஷன், லிபர்ஹான் கமிஷன், சச்சார் கமிஷன், என அத்தனை கமிஷன்களும் கொடுத்த அறிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தில் தான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கின்றன. இந்நாட்டில் நடை பெற்ற நடைபெறுகின்ற எந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னாலும் முஸ்லிம்கள் தாமாக முன் வந்து பங்கு பெற வில்லை. என்பது தான் அனைத்து கமிஷன்களின் அறிக்கை யிலும் இடம் பெற்றிருக்கிறது.
              நூல்: சண்டே இந்தியன், அக்டோபர், 3, 2011.
  நல்ல நேரம் சங்கர ராமன் கொலை இப்போது நடைபெற வில்லை. இல்லையென்றால் இதிலும் பிலால் மாலிக்கிற்கும், பன்னா இஸ்மாயீலுக்கும், போலீஸ் ஃபக்ருத்தீனுக்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறை களங்கம் கற்பித்திருக்கும்.
ஜே.டி எஸ்.-(ஜாமிஆ ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம்) –யின் தலைவர் மணீஷா ஷேத்தி என்பவர் கூறும் போது, ”சிறுபான்மையினரைக் காக்கும் வகையில் சீர்திருத்தம் வராவிட்டால் சிறைகளில் அவர்களது எண்ணிக்கை பெருகும்உண்மைதான் சட்டங்களில் மாத்திரமல்ல இந்திய தேசத்தின் அரசியல் தலைவர்களின் நடவடிக்கையிலும் சீர் திருத்தம் வரும்.
முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்?
இந்திய தேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இந்த நிலைப்பாட்டில் முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் என்ன?
1.விழிப்புணர்வோடு செயல் பட வேண்டும்.     2.விவேகத்தோடு செயல் பட வேண்டும்.                3.ஒரே தலைமையின் கீழ் ஒன்று பட்டு செயல் பட வேண்டும். 4.இறைவனின் மீது நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
எல்லாம் சரி, இது இந்திய தேசமல்லவா? இங்கே எப்படி இது சாத்தியமாகும்.
நமக்கெல்லாம் தெரிந்த சரித்திரம் தான் மக்காவில் காஃபிர்களின் தொல்லை தாங்க முடியாமல் அபீ சீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்ற முஸ்லிம்களை அங்கேயும் சென்று துரத்திவிட மக்காவின் தலைவர்கள் அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ, அம்ருப்னுல் ஆஸ் என்ற இருவரையும் அனுப்பி வைத்தனர்அது முஸ்லிம் நாடும் இல்லை. ஆகவே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க வில்லை நம் முன்னோர்களான ஸஹாபாக்கள். ஜஅஃபர் பின் அபீ தாலிப் {ரலி} தலைமையில் நஜ்ஜாஷி மன்னரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்புகளையும், தாங்கள் அந்த மார்க்கத்தால் அடைந்த கீர்த்தியையும் எடுத்துச் சொல்லி நீதி வழங்குமாறு வேண்டி நின்றார்கள். இறுதியில் நஜ்ஜாஷி மன்னரால் பாதுகாப்பும் வாழும் உரிமையும் அடைந்தார்கள்.
மேற்கூறிய சரித்திரத்தில் பிரச்சனைகளின் போது ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து,ஒருங்கிணைந்து தங்களின் விழிப்புணர்வையும்,விவேகத்தையும் காட்டினார்கள். பிரச்சனைகளில் இருந்து மீளவும் செய்தார்கள்.
பைத்துல் முகத்தஸை சிலுவை போராட்ட வீரர்களிடமிருந்து மீட்டெடுத்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி {ரஹ்} அவர்களின் விவேகத்தையும், இறை நம்பிக்கையையும் இந்த சமூகம் கையாள வேண்டும்.
யர்மூக் யுத்தத்தில் 3 லட்சம் எதிரிகளை விரண்டோடச் செய்த காலித் பின் வலீத் {ரலி} அவர்களின் வீரத்தையும் இந்த சமூகம் கையாள வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இறை நம்பிக்கை கொண்ட எந்த ஒரு சமூகத்திற்கும் அல்லாஹ் வெற்றியை பரிசாக அளிக்காமல் இருந்ததில்லை என்கிற நம்பிக்கை யோடு கீழ் காணும் 2-ம் அத்தியாயத்தின் 249-ம் வசனத்தைஎத்தனையோ சின்னஞ்சிறு கூட்டம் அல்லாஹ்வின் உதவி கொண்டு பெரும் பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கிறது.” ஓதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீழ்த்திடலாம் என்று நினைக்கிற அனைவரிடமும் உரக்கச் சொல்வோம். எங்களை ஒரு போதும் வீழ்த்திட முடியாது. ஏனெனில் நாங்கள் அல்லாஹ்வின் கூட்டம்.
யானைப் படைகளை அபாபீல் எனும் சிறிய பறவையைக் கொண்டு அழித்த அல்லாஹ் பாபரி மஸ்ஜிதை இடித்த கயவர்களை, ஃபாஸிஸ பயங்கரவாதிகளை அழித்திட மீண்டும் ஒரு அபாபீல் கூட்டத்தை அனுப்புவான்` நம்பிக்கையுடன் முஸ்லிம் சமூகம்!
                    வஸ்ஸலாம்!

                                               




  

2 comments:

  1. மெளலானா! பல வழிகளில் முயற்சித்து இருக்கிறீர்கள்! அல்ஹம்து லில்லாஹ்!

    ReplyDelete
  2. Alhamdulillah.... மற்றொரு முறை அபாபில் பறவைகள் வராது ...நாம் தான் காத்துகொள்ளவேண்டும்

    ReplyDelete