நற்குணங்களை உருவாக்குவோம்!
எந்த மனிதனிடத்தில் நற்குணங்கள் குறைவாக இருக்குமோ,
அவன் தன்னைச் சுற்றி வாழ்பவர்களின் உரிமைகளை வழங்கும் விஷயத்தில் தவறிழைத்து விடுகின்றான்.
எந்த மனிதனிடத்தில் நற்குணங்கள் அறவே இல்லையோ,
அவன் தன்னைச் சுற்றி வாழ்பவர்களோடு இணைந்து வாழும் நற்பேற்றை இழந்து விடுகின்றான்.
எந்த மனிதனிடத்தில் நற்குணங்கள் பொற்குவியல் போல் கொட்டிக் கிடக்கின்றதோ, அவனிடமிருந்து ஒட்டு மொத்த மனித சமூகமும்,
தங்களுக்கான உரிமைகளைப் பெற்று சுபிட்சமாக வாழும்.
நாம் வாழும் இந்த நவீன யுகத்தில் உலகின் பல்வேறு பட்ட மக்களும்,
தங்களுக்கான உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டுமென போராடி வருவதை காணமுடிகிறது.
அந்த வகையில் டிசம்பர்
10 சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப் படுவதை அறிகின்றோம்.
முற்றிலுமாக நற்குணங்களை இழந்து தவிக்கும் மனித சமூகத்தில் உரிமைகளை எதிர்பார்ப்பது அறிவீனமாகும்.
ஏனெனில்,
இஸ்லாம் நற்குணங்கள் உள்ளவர்களால் மட்டும் தான் பிறரின் உரிமைகளை வழங்கி வாழ முடியும் என்று உறுதிபடக் கூறுகின்றது.
ஹர்மலா
{ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அண்ணல் நபி {ஸல்} அவர்களிடத்தில் “ நான் எவ்வாறு என் செயல் பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என தாங்கள் போதிக்கின்றீர்கள்?” என்று கேட்டேன்.
அதற்கு அண்ணலார் {ஸல்} அவர்கள் “ நன்மையின் பால் செயல்படு;
தீமையை விட்டும் விலகிக் கொள்!
மேலும், ஓர் சபையிலிருந்து நீ எழுந்து சென்ற பின்னால் மக்கள் உன்னை நற்குணங்களால் நினைவு கூற வேண்டும் என்று நீ விரும்பினால் உனக்குள் நீ நற்குணத்தை வளர்த்துக் கொள்.
மக்கள் நீ இல்லாத போது உன்னைக் குறித்து எந்த விஷயங்களைச் சொல்வதை நீ வெறுக்கின் றாயோ அந்த விஷயங்களை தவிர்த்துக் கொள்.
என்று கூறினார்கள்.
நூல்:
புகாரி
எப்போது பிறரின் உரிமைகளை ஒரு மனிதன் வழங்காமல் இருப்பானோ,
அப்போது தான் மக்கள் அவன் குறித்து சபைகளிலும், காணும் இடங்களிலும் அவன் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொள்வார்கள். எனவே தான் மாநபி
{ஸல்} அவர்கள் நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுமாறு அந்த நபித் தோழரிடம் போதித்தார்கள்.
எனவே,
குணப் பஞ்சம் தலை விரித்தாடும் ஒரு சமூகத்தில் உரிமைகள் பேணப்படுவதென்பது கேள்விக் குறியான ஒரு விஷயம் தான்.
உயர்தர மாளிகை
அபூ உமாமா
{ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு முறை எங்களிடையே அமர்ந்திருந்த நபிகளார்
{ஸல்} அவர்கள் திடீரென புன்முறுவல் பூத்தார்கள். அண்ணலாரின் முன்பற்கள் தெரியுமளவிற்கு புன்முறுவல் பூத்தார்கள். ஒன்றிரண்டு தடவை இது போல் மாநபி புன்னகைத்து பார்த்திருந்த நபித்தோழர்கள் ”அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய தாய்-தந்தையர் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். எதற்காக தாங்கள் புன்னகைத்தீர்கள்” என்று வினவினார்கள். சபையிலிருந்த உமர் {ரலி} அவர்களும் “என்னுடைய தாயும்-தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
தங்களுடைய சிரிப்பிற்கு காரணம் என்ன அல்லாஹ்வின் தூதரே!?”
என வினவினார்கள். அதற்கு அண்ணலார் “ என்னுடைய உம்மத்தைச் சார்ந்த இரண்டு அடியார்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு முன்னால் தங்களுடைய வழக்கை முறையிட்டவாறு அமர்ந்திருக்கின்றார்கள். ஒருவர், இன்னொருவர் மீது “இறைவா!
இவர் என் மீது அநீதம் இழைத்திருக்கிறார். அதற்கான ஈட்டை வாங்கிக் கொடு”
என் முறையிடுகிறார். அவரிடம் இருந்து எதை நான் ஈடாக உனக்கு பெற்றுத்தருவது? அவரிடம் தான் நன்மைகள் ஒன்றும் இல்லையே!
அப்படி இருந்தால் அல்லவா, நான் அவரிடம் இருந்து உமக்கு பெற்றுத்தர முடியும்”
என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால், அந்த அடியானோ “அப்படியென்றால் என்னுடைய குற்றங்களை எடுத்து அவரிடம் சேர்த்து விடு”
என்று முறையிடுகின்றான். இதைச் சொல்லும் போதே சுந்தர நபியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“அந் நாள் மிகவும் மோசமான நாளாகும்.
எப்படியாவது, ஏதாவது ஒரு வழியில் தன் பாவச் சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்கமுடியாதா? என ஒவ்வொரு மனிதனும் அலைபாய்வான்” என்று கூறினார்கள். அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருக்கும் அந்த அடியானைப் பார்த்து,
ஓ அடியானே! உன்னுடைய பார்வையை கொஞ்சம் மேலே உயத்திப் பார்”
என்று அல்லாஹ் கூறினான்.
அவர் அங்கே முத்துக்களாலும், மாணிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட சுவனத்து மாளிகையை காண்கிறார். அங்கே எல்லா வகையான அருட் கொடைகளும் கொட்டிக் கிடப்பதை கண்டு விட்டு,
ஆச்சர்ய மேலிட இறைவா!
இது யாருடைய மாளிகை?
எனக் கேட்டார். ”இதன் விலையை யார் தருகிறாரோ அவருக்கே இது சொந்தம்”
என அல்லாஹ் கூறினான்.
இதனுடைய விலையை யாரால் தான் கொடுக்க முடியும்?
இதனை வாங்கிட யாரிடம் தான் செல்வம் கொட்டிக்கிடக்கின்றது? என அந்த அடியான் அல்லாஹ்விடம் சொன்னான். அதற்கு அல்லாஹ் உன்னால் கூட அதை விலை கொடுத்து வாங்க முடியும் என்றான். நானா? என்னிடம் எங்கே இருக்கின்றது அவ்வளவு பொன்னும் பொருளும்?
என்றான் அந்த அடியான்.
அப்போது அல்லாஹ் “ நீ இந்த அடியானை மன்னித்து விட்டால் இந்த மாளிகையை உனக்கு தருகிறேன்”
என்றான். ”அப்படியானால் இதோ,
இப்போதே நான் அவரை மன்னித்து விடுகிறேன்” என்றான் அந்த அடியான்.
அல்லாஹ் தன் கருணையால் அவ்விருவரையுமே சொர்க்கத்தில் நுழையச் செய்தான்”
என தங்களின் புன்முறுவலுக்கான காரணத்தைக் கூறினார்கள்.
நூல்: அல்-உஸுஸில் அஃக்லாக்கியா, பக்கம்:162.
உலகில் வாழும் காலத்தில் நற்குணங்களோடும், பிறரின் உரிமைகளை வழங்கியு வந்த ஒருவனால் மட்டுமே மறுமை யிலும் நற்பண்புகளோடு நடந்து கொள்ள முடியும் என்பதை மேற்கூரிய சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
குணப் பஞ்சம்
ஒரு தொழிலாளி முதலாளியின் மீதும்,
குடிமக்கள் ஆட்சியாளர் மீதும், கணவன் மனைவி மீதும்,
மனைவி கணவன் மீதும்,
பெற்றோர் பிள்ளைகள் மீதும், பிள்ளைகள் பெற்றோர் மீதும்,
மாணவர்கள் ஆசிரியர் மீதும்,
அண்டை வீட்டான் சக அண்டை வீட்டான் மீதும்,
உரிமை மீறல் பிரச்சனைகளை கொண்டு வருவதின் காரணம் இவர்கள் ஒவ்வொரு வரிடத்திலும் குணப் பஞ்சம் பீடித்துள்ளது. எப்போது இவர்கள் குணப் பஞ்சத்திற்கு விடை கொடுத்து,
நற்குணங்களை உருவாக்கிக் கொள்கின்றார்களோ, அங்கே உரிமை மீறல் குறித்தான எந்தக் குரலும் ஒலிக்கப் போவதில்லை.
மாணவன் மீதான உரிமையின் எல்லை
அபூ உமாமா அல் பாஹிலீ
{ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபிகளாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஒரு இளைஞர் வந்தார்.
வந்தவர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் “எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி வேண்டும் என்றார்.
கேள்வி கேட்ட அந்த இளைஞரை நபித்தோழர்கள் விரட்டியடிக்க முனைந்த போது மாநபி
{ஸல்} அவர்கள் ஒன்றும் செய்திடாதீர்கள் என சைகை மூலம் காட்டினார்கள். பிறகு தன் பக்கம் வருமாறு அழைத்தார்கள். அருகே வந்ததும்
“உன் தாய் விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த இளைஞர் ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.”
என்றார். அப்படித்தான் மக்களில் எவரும் தன் தாய் விபச்சாரம் செய்வதை விரும்பமாட்டார்கள் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். “உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” என மாநபி
{ஸல்} அவர்கள் வினவினார்கள். அதற்கு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அந்த இளைஞர்
“இல்லை, இல்லை ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்’
என்றார். “அப்படித்தான் மக்களும் தங்கள் சகோதரி விபச்சாரம் செய்வதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். மீண்டும் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?”,உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” என கேட்க,
அடுக்கடுக்கான அண்ணலாரின் கேள்விக் கணைகளுக்கு முன்னால்,
வெட்கத்தால் தலைகுனிந்தவராக, இல்லை,
இல்லை அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்”
என்றார் அந்த இளைஞர்.இறுதியாக அவருக்கு உபதேசம் செய்யும் முகமாக நபி {ஸல்} அவர்கள் “உன் மனம் எதை விரும்புகிறதோ, அதையே பிறருக்கும் விரும்பு.
உன் மனம் எதை வெறுக்கின்றதோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக” என்று கூறினார்கள். தன் தவறை உணர்ந்து கொண்ட அந்த இளைஞர் அண்ணலாரிடம் மிகப் பணிவுடன்
“அல்லாஹ்வின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற எனக்காக அல்லாஹ்விடம் இறைஞ்ச மாட்டீர்களா? எனக் கேட்டார்.
அவரை அருகில் அழைத்த அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தமக்கருகே அமர வைத்து,
தம் கையை அவரின் நெஞ்சத்தின் மீது வைத்து இறைவா!
இவரின் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவாயாக! இறைவா!
இவரின் பாவங்களை பொறுத்தருள்வாயாக! அல்லாஹ்வே!
இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக! என்று துஆ செய்தார்கள்.” அந்த இளைஞர் சபையிலிருந்து விடை பெற்றுச் செல்லும் போது
“ இந்தச் சபையில் நான் நுழையும் போது விபச்சாரம் தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது.
ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டது” என்று சொல்லியவாறே சென்றார்.
இந்த சம்பவத்தை அறிவிக்கும் அபூ உமாமா அல் பாஹிலீ
{ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பிறகு அந்த இளைஞரின் வாழ்வில் எப்போதும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.
நூல்:ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அஸ்-ஸஹீஹா லில் அல்பானீ,
பாகம்:1, பக்கம்:370. அஹ்மத்,பாகம்:5,பக்கம்:256,257.
மாநபி
{ஸல்} அவர்கள் கேள்வியைக் கேட்ட உடன் விபச்சாரம் குறித்த இறை வசனத்தை ஓதிக் காட்ட வில்லை.
விபச்சாரம் குறித்த தண்டனையைக் கூறிடும் இறை வசனங்களை ஓதிக் காண்பிக்க வில்லை.
அப்படி அண்ணலார் ஓதியிருந்தாலும் பாதகமொன்றும் ஏற்படப் போவதில்லை.
மாறாக, அந்த இளைஞருக்கு நற்குணங்களின் அவசியத்தையும், தீய குணங்களை தூக்கியெறிய வேண்டியதின் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்கள். அத்தோடு நின்று விடாமல் ஒரு மாணவனை சீர் திருத்தும் பணியில் ஓர் ஆசிரியரின் உரிமையின் எல்கை எது என்பதையும் இந்த உம்மத்திற்கு உணர்த்தியுள்ளார்கள்.
அண்டை அயலாரின் உரிமைகள்
இப்னு அபூ ஜஹ்ம் என்பவருக்கு கடுமையான பண நெருக்கடி ஆதலால் தாம் குடியிருக்கும் வீட்டை விற்க முன் வந்தார்.
ஆச்சர்யம் என்னவென்றால் அவர் வீட்டிற்கு ஒரு லட்சம் திர்ஹமை விலையாக நிர்ணயம் செய்தது தான்.
வீடு கேட்டு வந்த எல்லோரும் விலையை கேட்டு விட்டு
,இந்த வீட்டிற்கு 100 திர்ஹமே அதிகம். இதிலும்
1’00000 திர்ஹமா?”
என திகைத்துப் போயினர். அப்படி என்ன தான் அந்த வீட்டில் இருக்கிறது என அனைவரும் வினவிய போது அபூ ஜஹ்ம் கூறினார்
“என் பக்கத்து வீட்டில் ஸயீத் இப்னுல் ஆஸ் [ரலி} என்ற பெருந்தன்மையான மனிதர் குடியிருக்கிறார். அவரின் குண நலன்களை நீங்கள் அறிவீர்களேயானால் நான் நிர்ணயித்த விலை சரிதான் என்று ஒத்துக் கொள்வீர்கள். “அவருக்கு நான் தீங்கு பல செய்திருக்கின்றேன். ஆனால்,
எனக்கு ஒரு போதும் அவர் தீங்கிழைத்ததில்லை. மாறாக,
எனக்கு உபகாரம் செய்திருக்கிறார். நான் அவரிடம் பல முறை மடத்தனமாக நடந்திருக்கின்றேன். ஆனால்,
அவர் என்னுடன் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்கின்றார். நான் ஊரில் இருந்தால் என்னோடு நேசம் பாராட்டுவார். நான் வெளியூர் சென்று விட்டால்,
நான் திரும்பி வரும் வரை என் வீட்டையும், என் வீட்டாரையும் பாதுகாத்துக் கொள்வார்.
என் தேவையை அவராகவே முன் வந்து நிறைவேற்றித் தருவார்.
எனக்கு ஏதாவது துன்பம் நேரிட்டால், துவண்டு போய் விடுவார்.
அதைக் களைவதில் மும்முரமாக ஈடுபடுவார். என்ன செய்ய என் போதாத காலம் எனக்கு பண நெருக்கடி மட்டும் இல்லை என்றால் ஒரு போதும் அவரை விட்டும் பிரியமாட்டேன்” என்றார்.
இந்த சம்பவங்களைக் கேள்வி பட்ட ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் “உமக்கு பக்கத்து வீட்டுக் காரனாய் இருக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நீயே என் பக்கத்து வீட்டாளனாய் இரு.ஒரு லட்சம் திர்ஹத்தை நானே தருகின்றேன் என்று கூறி ஒரு லட்சம் திர்ஹத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள் ஸயீத் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள்.
நூல்: வஃப்யாத்துல் அஃயான், பாகம்:2,
பக்கம்;535.
எவ்வளவு நற்குணங்கள் குடிகொண்டிருந்தால் ஸயீத் அவர்களால் இப்படி தன் அண்டை வீட்டாரின் உரிமைகளை மிகச் சரியாக வழங்கியிருக்க முடியும்.
எனவே,
சக மனிதனின் உரிமைகள் பேணப் பட வேண்டுமானால் நற்குணங்களால் ஒருவர் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
குணப் பஞ்சத்திற்கு விடை கொடுப்போம்! நற்குணங்களை உருவாக்குவோம்! மனித உரிமைகளை வழங்கி மனித நேயம் காப்போம்!
குறிப்பு:
மனித உரிமைகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு நமது
“பேறு பெற்ற மனித சமூகம்”
என்ற தலைப்பில் தேடவும்.
கடந்த இரு வாரங்களாக குறித்த நேரத்தில் நம்மால் பதிவுகளை தர இயலாமல் போனதற்காக உலமா சமூகம் எம்மை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
இப்னு அபூ ஜஹ்ம் // சம்பவம் ஹைலெட் !
ReplyDeleteபாரா ,பாரா வாக பிரித்தால் படிப்பதற்கு ஏதுவாய் இருக்கும் !
மனதில் பதியமிட வாய்ப்பாய் அமையும் !
அடுத்தடுத்த பதிவுகளில் சீர் செய்யுங்கள் ! வாழ்த்துக்கள் ! வளர ! மேலும் தொடர !
miga arumai
ReplyDelete