ரசித்து வாழ வேண்டும்!
உலகில் யாரும் ஏழு முறை
பிறக்கப் போவதில்லை.
பிறப்பும் ஒரு முறை தான்,
இறப்பும் ஒரு முறை தான்.
இருக்கின்ற அந்த ஒரு வாழ்க்கையையும்
இன்பமயமாய், இனிமை நிறைந்ததாய் அமைத்திட வேண்டுமானால் தான் வாழ்கிற அந்த வாழ்க்கையை
ரசித்து வாழுமாறு இஸ்லாம் இயம்புகிறது.
தன்னைச் சுற்றியுள்ள அனைத்து
விஷயங்களும் ரசனை மிக்கதாய் அமைந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்ற மனிதனால், தன்
வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் ரசனை மிக்கதாய் அமைத்துக் கொள்ள முடியாமல் போனது ஆச்சர்யமே!
இறை நெருக்கத்தை பெற்றுத்
தருகிற ஆன்மீக வாழ்வாகட்டும், தன் வாழ்வின் தேடல்களை பூர்த்தியாக்கும் உலகியல் வாழ்வாகட்டும்,
அதன் அத்தனை நிலைகளிலும் ரசித்து, ரசித்து ஈடுபடுகின்ற ஒரு இறை நம்பிக்கையாளனால் மட்டுமே,வாழ்வின்
எந்தச் சூழ்நிலையிலும் இன்பமயமாய்,இனிமை நிறைந்ததாய் வாழ்ந்திட இயலும் என்று இஸ்லாம்
இயம்புகிறது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“ பெண்கள், பிள்ளைகள், தங்கம்
மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால் நடைகள் மற்றும்
வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது ஆசை கொள்வது (ரசனை கொள்வது) மனிதர்களுக்கு அழகாக்கப்
பட்டுள்ளது. இவை அனைத்தும் இவ்வுலகின் வாழ்க்கைக் குரிய சாதனங்கள் ஆகும். திண்ணமாக,
அழகிய அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.”
{அல்குர்ஆன்,3:14.}
“”ஆர்தர் ஆஷ் உலகில் பிரபலமான
டென்னிஸ் வீரர். அமெரிக்காவில் அவரின் பெயரில் ஒரு பெரிய ஸ்டேடியமே இருக்கிறது.
விம்பிள்டனில் சாம்பியன்
பட்டம் பெற்றவர். தன் வாழ்வின் இறுதியில் புற்று நோயால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தார்.
மரணப் படுக்கையில் இருந்த
அவரை பிரபல பத்திரிக்கையின் நிருபர்கள் பேட்டி எடுத்தனர்.
பேட்டி எடுத்த அத்துனை
நிருபர்களின் கேள்வியும் இப்படி அமைந்திருந்தது “புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்
நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்” என்று.
அவர்களிடம் ஆர்தர் ஆஷ்
சொன்னது என்ன தெரியுமா? “ இந்த உலகில் எத்தனையோ லட்சக்கணக்கானவர்கள் டென்னிஸ் விளையாட்டில்
ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் சுமார் 5 லட்சம் பேர் தான் நன்றாக ஆடக்கூடியவர்கள் என்று
டென்னிஸ் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், விம்பிள்டன் போட்டிகளில்
விளையாட வெறும் 128 பேர் தான் தகுதி பெறுகிறார்கள். முதல் சுற்று, இரண்டாம், மூன்றாம்
என்று பல சுற்றுகளில் விளையாடி விட்டு நான்கே நான்கு பேர்கள்தான் இறுதிப் போட்டி வரை
வருகிறார்கள்.
அதிலும் இறுதிப் போட்டியில்
மோதுவது இரண்டு பேர் மட்டுமே. அதிலும் ஒருவர் தோற்று, மற்றவர் வென்று அவரே சாம்பியன்
பட்டம் பெறுகிறார்.
அப்படி இறுதிப் போட்டியில்
வென்று சாம்பியன் பட்டம் பெற்றவன் நான். போட்டி முடிவில் வெற்றி வீரனாய் நான்
ஒருவன் மட்டுமே வெற்றிக் கோப்பையை உயர்த்திப் பிடித்தபடி நின்றபோது “இத்தனைக் கோடிப்
பேர்களில் என்னை மட்டும் ஏன் வெற்றி வீரனாய் நிற்க வைத்தாய் இறைவா! என்று கடவுளைக்
கேட்கவில்லை நான். அதனால் இத்தனைக் கோடி மக்களில் நான் மட்டும் ஏன் புற்று நோயால் சாக
வேண்டும் என்றும் கடவுளைக் கேட்க நான் விரும்ப வில்லை!” என்றார் ஆர்தர் ஆஷ்!
நன்றி: தினமணி கதிர்,
1.12.2013.,பக்கம்:21.
எந்த அளவு வாழ்க்கையை ரசித்து
வாழ்ந்திருந்தால் இப்படியொரு வார்த்தைகளை உதிர்த்திருக்க முடியும் என்று தான் தீர்மானிக்க
முடிகிறது.
வணக்க வழிபாட்டில்…
”மாநபி {ஸல்} அவர்களின் வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருந்தது? என்பதை
விசாரித்து அறிந்து கொள்வதற்காக மூன்று பேர் நபி {ஸல்} அவர்களின் தூய மனைவியர்களிடம்
வந்தனர்.
நபி {ஸல்} அவர்களின் வணக்க
வழிபாடுகள் பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் (நினைத்ததை விட) நபி {ஸல்}
அவர்களின் வணக்க வழிபாடுகள் குறைவாக இருப்பதாகக் கருதினார்கள். “
நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் எங்கே? நாம் எங்கே? அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து
விட்டான். (எனவே அவர்கள் குறைந்த அளவு வணக்கம் செய்வது போதுமானதாகும்)” என்று மூவரும்
தமக்குள் கூறிக்கொண்டனர்.
அம்மூவரில் ஒருவர் “நான்
என்றென்றும் இரவில் தொழுது கொண்டிருப்பேன்” எனக் கூறினார். இன்னொருவர்,
“நான் பெண்களை விட்டு அறவே விலகியிருக்கப் போகிறேன்; திருமணமே செய்யப் போவதில்லை” என்றார். மூன்றாமவர்,
“நான் ஒரு நாள் விடாது நோன்பு நோற்பேன்” என்று கூறினார். சிறிது
நேரத்தில் அங்கு வந்த நபி {ஸல்} அவர்கள், அம்மூவரிடமும் சென்று “இப்படி, இப்படியெல்லாம்
பேசிக் கொண்டவர்கள் நீங்கள் தாமா? அறிந்து கொள்ளுங்கள்! நான் உங்களை விட இறைவனை அதிகம் அஞ்சுபவன். அப்படி இருந்தும் நான் (சில நாட்கள்)
நோன்பு நோற்கிறேன். (சில நாட்கள்) நோன்பு நோற்காமலும் இருக்கின்றேன். (சிறிது நேரம்)
தொழுகின்றேன். மேலும், (சிறிது நேரம்) உறங்கவும் செய்கின்றேன். பெண்களை மணமுடித்து
வாழ்கின்றேன். எனவே, எனது வழிமுறையைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர்” என்று
கூறினார்கள். நூல்: புகாரி, ஹதீஸ் எண்:5063
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது ”ஸல்மான் {ரலி} அவர்களையும், அபுத்தர்தா
{ரலி} அவர்களையும் சகோதரர்களாக இணைத்து விட்டார்கள். ஸல்மான் {ரலி} அவர்கள், ஷாம்-க்கு வந்தார்களென்றால்
அபுத்தர்தா {ரலி} அவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடிவிட்டு
தான் மற்ற தம் காரியங்களில் ஈடுபடுவார்கள். அபூ
ஜுஹைஃபா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
”ஒரு நாள் ஸல்மான் {ரலி} அவர்கள் அபுத்தர்தா {ரலி} அவர்களைச் சந்திக்க அவர்களின்
வீட்டிற்கு வந்த போது, அபுத்தர்தா வீட்டில் இல்லை. அவர்களின் மனைவி உம்முத்தர்தா {ரலி}
அவர்கள் தான் வரவேற்றார்கள். அவர்களின் வார்த்தைகளில் இருந்த உபசரிப்பு முகத்தில்
பிரதிபலிக்கவில்லை. பழைய ஆடைகளை உடுத்தியிருந்தார்கள். (தலைமுடி கலைந்திருந்தது.ஏனோ,
எதையோ பரிகொடுத்தவரைப் போன்று காணப் பட்டார்கள்.)
ஸல்மான் {ரலி} அவர்கள்
“உம்முத்தர்தா அவர்களே! முகத்தில் ஏதோ கவலை
தெரிகிறதே? சகோதரர் அபுத்தர்தாவோடு ஏதாவது பிணக்கு ஏற்பட்டு விட்டதா? இல்லை வேறேதாவது
காரணமா? என்று, கவலையோடு விசாரித்தார்கள். அதற்கு
உம்முத்தர்தா {ரலி} அவர்கள் “உங்களது சகோதரர் அபுத்தர்தா அவர்களுக்கு உலக (இல்லற) வாழ்வில்
அதிக நாட்டமில்லை போலும்” என்று தமது நிலைமைக்கான காரணத்தைக் கூறினார்கள்.
சொல்லிக் முடிக்கும் போதே
அபுத்தர்தா {ரலி} அவர்கள் வீட்டிற்குள் நுழைகிறார்கள். அங்கே ஸல்மான் {ரலி} அவர்களைக் கண்டதும் ஆரத்தழுவி
நலம் விசாரித்துவிட்டு, தமது மனைவியிடம் ஸல்மான் அவர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு
கூறினார்கள். சிறிது நேரத்தில்
உணவு கொண்டு வரப்பட்டது. ஸல்மான் {ரலி} அவர்கள் சாப்பிட அமர்ந்ததும், தம்மோடு சாப்பிட
அமருமாறு அபுத்தர்தா {ரலி} அவர்களை அழைத்தார்கள். ஆனால், தாம் நஃபிலான நோன்பு வைத்திருப்பதாகச் சொல்லி
சாப்பிட மறுத்து விட்டார்கள். உடனே, ஸல்மான்
{ரலி} அவர்கள் நோன்பை முறித்து விட்டு என்னோடு சாப்பிட அமரவில்லையானால் அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! நானும் சாப்பிடப் போவதில்லை என்று கூறினார்கள். உடனே அபுத்தர்தா {ரலி}
அவர்கள், ஸல்மான் {ரலி} அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்கள். இரவு
நேரம் வந்தது, ஸல்மான் {ரலி} அவர்கள் தூங்கச் சென்றார்கள். ஆனால், அபுத்தர்தா {ரலி}
அவர்கள் தொழுகைக்குத் தயாரானார்கள். இதைக் கண்ட ஸல்மான்
{ரலி} அவர்கள், உறங்குவீராக! என்றார்கள். அபுத்தர்தா {ரலி} அவர்கள் உறங்கினார்கள்.
சிறிது நேரத்தில், மீண்டும் அபுத்தர்தா {ரலி} அவர்கள் தொழத் தயாரானார்கள். இதனைக் கண்ட
ஸல்மான் {ரலி} அவர்கள், மீண்டும் உறங்குவீராக! என்றார்கள். உறங்கிப் போனார்கள் அபுத்தர்தா
{ரலி} அவர்கள். இரவின் கடைசி நேரத்தில்
அபுத்தர்தா {ரலி} அவர்களை எழுப்பிய ஸல்மான் {ரலி} அவர்கள், இப்போது வணங்குவீராக! என்று
சொல்லி விட்டு… “அபுத்தர்தாவே! நிச்சயமாக உம்
இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள்
இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய
கடமைகளை நீர் சரியாக நிறைவேற்றுவீராக!” என்று கூறினார்கள். பின்னர் இருவரும் இரவுத்
தொழுகையை நிறைவேற்றினர். பின்னர்
சுபுஹ் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் பள்ளிக்குச் சென்றனர். தொழுகை முடிந்ததும்
மாநபி {ஸல்} அவர்களிடம் நடந்த சம்பவத்தை அபுத்தர்தா [ரலி} அவர்கள் கூறினார்கள். அப்படியே அமைதியாக கேட்டுக்
கொண்டிருந்த நபிகளார் {ஸல்} “ஸல்மான் உண்மையையே கூறினார்” என்று கூறினார்கள்.
நூல்: தமிழ் புகாரி, ஹதீஸ் எண்:1968, இஸ்தீஆப்,
1/337,338.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்
இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் குறித்து, மாநபி {ஸல்} அவர்களிடம், குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லை
என்று புகார் கூறப்பட்டது. உடனே,
மாநபி {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் {ரலி} அவர்களைச் சந்தித்து “ உம்மைப் பற்றி இவ்வாறெல்லாம்
கூறப்படுகின்றதே உண்மைதானா? என்று கேட்டு விட்டு, “
இனி இவ்வாறு நடந்து கொள்ளாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டு
விடும்! சிறிது நேரம் தொழுவீராக! மேலும், சிறிது நேரம் உறங்குவீராக! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய
கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன;
உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உமது மனைவிக்குச் செய்ய
வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன! என்று அறிவுரை வழங்கினார்கள்.”
நூல்: தமிழ் புகாரி, ஹதீஸ் எண்:1975.
மேற்கூறிய இரு நிகழ்வுகளிலும்
“இறைவனை மறக்கடிக்கின்ற இல்லறமும், இல்லறத்தை புறக்கணிக்கின்ற இறை வழிபாடும்” வாழ்வியலின்
யதார்த்தமான ரசிப்புத் தன்மையிலிருந்து விலகச் செய்து விடும்” என்பதையே அண்ணல் நபி
{ஸல்} அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
மாயையில் உழலும் மக்கள்
இன்றைய சமூகத்தில் பெரும்பாலானவர்கள்
ரசித்து வாழ்வதின் பொருளை தவறாக விளங்கி வைத்துள்ளனர். ஏனெனில், வாழ்க்கை என்பது உலகில்
வளமாகவும், நலமாகவும் வாழ்வதற்குத் தான் என விளங்கி வைத்துள்ளனர். அல்லாஹ்வும் அதை
சிலாகித்து அல் குர்ஆனில் விமர்சித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“ஒரு நாள் காரூண் தன்னுடைய முழு அலங்கார மிடுக்குடன்
தன் சமூகத்தார் முன்னிலையில் வந்தான். உலக வாழ்வின் வளத்தை விரும்புவோராய் இருந்த மக்கள்
“ஆஹா! காரூணுக்கு வழங்கப் பட்டிருப்பதைப் போன்று நமக்கும் கிடைத்திட வேண்டுமே! அவன்
மகத்தான பாக்கியசாலிதான்!” என்று கூறினார்கள்.
இறுதியில், அவன் மற்றும்
அவனுடைய செல்வங்கள் அனைத்தையும் அல்லாஹ் பூமியில்
புதைத்து விட்ட போது,
மீண்டும்
அதே மக்கள் “அந்தோ! நாங்கள் மறந்து விட்டிருந்தோம், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில்
தான் நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகின்றான்; மேலும், தான் நாடுவோர்க்கு
அளவோடு கொடுக்கின்றான் என்பதை! அல்லாஹ் மட்டும் எங்களுக்கு உபகாரம் செய்திராவிட்டால்,
எங்களையும் பூமியில் புதைத்திருப்பான்.
அந்தோ! ”நிராகரிப்பாளர்கள்
வெற்றியடைய மாட்டார்கள்” என்பது எங்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டதே! என்று கூறினார்கள்.
அல் குர்ஆன்:28: 82 முதல் 89 வரை.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பனூ
இஸ்ரவேலர்களின் காலத்தில் ஒரு பெண்மணி தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தன் குழந்தைக்கு
பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தெருவில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த
நேரத்தில் ஒருவர் நல்ல திடகாத்திரமான தோற்றத்துடனும், வசீகரிக்கச் செய்யும் அழகுடனும்
தன் குதிரையின் மீது சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்துப்
பிரமித்துப் போன அப் பெண்மணி தன் குழந்தையும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று மனம்
விரும்பியவளாய் இப்படி பிரார்த்தித்தாள்: “இறைவா என் குழந்தையை இவரைப் போன்று வளரச்
செய்வாயாக!” அச் சமயம் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆம்,
பிறந்து சில நாட்களே ஆன அந்தக் குழந்தை தன் தலையை தூக்கி அந்த மனிதரைப் பார்த்துவிட்டு
“ இறைவா! என்னை அவரைப் போன்று ஆக்கி விடாதே! என்று கூறியது. குழந்தை பேசியதைக் கேட்டு
திகைத்துப் போய் விட்டாள் அந்தத் தாய். குழந்தை
மீண்டும் பால் குடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில்,தெருவோரத்தில் மக்கள் கூட்டம்
கூட்டமாய் யாரையோ துரத்திக் கொண்டு வருவது தெரியவே, உற்றுப் பார்த்தாள். அங்கே மக்கள் ஒரு அடிமைப் பெண்ணை
திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் விரட்டி வந்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட
அப் பெண்மணி இப்படிப் பிரார்த்தித்தாள்: “
இறைவா! என் குழந்தையை இவளைப் போன்று ஆக்கி விடாதே!” மீண்டும் அக் குழந்தை தலையை தூக்கி
அப் பெண்மணியைப் பார்த்து விட்டு “ இறைவா! என்னை இவளைப் போன்று ஆக்குவாயாக! என்று கூறியது.
ஏன் இவ்வாறு பேசினாய்? என அக் குழந்தையைப் பார்த்து அந்தத்
தாய் கேட்டாள். அதற்கு அந்தக் குழந்தை
“குதிரையில் சென்ற மனிதன் இறைவனுக்கு மாறு செய்பனும், திமிர்பிடித்தவனும் ஆவான். அந்த
அடிமைப் பெண் பரிசுத்தமானவளும், நிரபராதியுமாவாள்.
ஆனால், களவும் விபச்சாரக் குற்றச்சாட்டும்
கூறி அவளை அம் மக்கள் துன்புறுத்தினார்கள்.” என்று கூறியது.
நூல்: தமிழ் புகாரி, ஹதீஸ் எண்:
3436,3466.
(இந்த
ஹதீஸ் அபூ ஹூரைரா {ரலி} அவர்கள் வாயிலாக பல் வேறு அறிவிப்புகளின் மூலமாக அறிவிக்கப்
பட்டுள்ளது.)
பத்ர்
தந்த வெற்றியின் புத்துணர்வோடு, மீண்டும் எதிர்க்கத் துணிந்து விட்ட மக்கா குறைஷியர்களை
வேரருக்கக் கிளம்பினார்கள் ஸஹாபாப் பெருமக்கள் உஹதை நோக்கி… ஆனால்,
நபித்தோழர்கள் எதிர்பார்த்துச் சென்றது வேறு. உஹது யுத்தத்தில் நடந்தது வேறு. ஆம், தோல்வியோடும், 70 தோழர்கள் ஷஹீதாக்கப்பட்டும்,
மிகப் பெரிய சேதாரத்தோடும் முஸ்லிம்கள் மதீனா திரும்பினர். எனினும், நபித்தோழர்களால் அந்தத் தோல்வியிலிருந்து
மீள முடியவில்லை. நபித்தோழர்களின் மனதில் ஆறாத ரணமாக, ஆழமான வடுவாக மாறிவிட்டிருந்தது. இந்த நிலையில் வல்லோனாம் அல்லாஹ்
“ நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறை நம்பிக்கையுடையோராயின்,
நீங்களே மேலோங்குவீர்கள். (இப்பொழுது)
உங்களுக்கு காயம் (தோல்வி) ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் (உங்கள்) எதிரணியினருக்கும்
இதே போன்ற காயம் (தோல்வி) ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்களாகும்.
இவ்வாறே மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்.” {அல்குர்ஆன்:3:139,140} எனும்
இறை வசனத்தை இறக்கியருளி, வாழ்க்கை யென்றால் வெற்றி, தோல்வி என்பது சகஜம். அவைகளை ரசித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர
அதையே நினைத்துக் கொண்டு துவண்டு போய் விடக்கூடாது என்பதை நினைவு படுத்தினான்.
மேற்கூறிய
இரு நிகழ்வுகளிலும்… காரூணின் சமூக மக்களின் ஏக்கமாகட்டும், பனீ இஸ்ராயீலிய பெண்ணின்
பிரார்த்தனையாக இருக்கட்டும், இவைகளின் மூலம் ஓர் உண்மை நமக்கு உணர்த்தப் படுகிறது.
அது இது தான் “பெரும்பாலான மக்கள்
வெறும் வெளித்தோற்றத்தைக் கண்டு மாயையில் வீழ்ந்து, தாங்கள் வாழ்க்கையின் இனிமையை சுவைத்து
விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.” ஆனால், யதார்த்தத்தில்
இத்தகைய மனோ நிலையில் உள்ளவர்களால் தங்களது வாழ்க்கைப் பயணத்தை இன்பமயமானதாகவும், இனிமை
நிறைந்ததாகவும் அமைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில்,
அவர்களிடம் தங்களுக்கான வாழ்க்கையை ரசனையோடு அமைத்துக் கொள்கின்ற பக்குவம் கிடைக்கப்
பெறவில்லை.
அண்ணலார் வகுத்த எல்லை…
இன்பமும் துன்பமும், வெற்றியும் தோல்வியும், ஆன்மீகமும்
உலகியலும், சமமாய் தெரிந்திட வேண்டுமானால், நன்மையாய் அமைந்திட வேண்டுமானால், வாழ்க்கையை
ரசித்திடும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அந்த ஆற்றலை அடைந்திட வேண்டுமானால்
அதற்கான வழிகளை தெரிந்திட வேண்டும். அந்த வழிகளை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்
அழகாக வகுத்துத் தந்துள்ளார்கள்.
ஸுஹைப் இப்னு ஸினான் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி {ஸல்} அவர்கள் நவின்றார்கள்:
“ ஓர் இறை நம்பிக்கையாளனின்
நிலை குறித்து நான் ஆச்சர்யம் அடைகின்றேன்! அவன் எந்த நிலையிலிருந்தாலும் அதனால் அவன்
நன்மைகளையே குவிக்கின்றான். இந்த
நற்பேறு இறை நம்பிக்பிக்கையாளனைத் தவிர வேறெவருக்கும் கிடைப்பதில்லை. அவன் வறுமை, நோய்,
துன்பம் ஆகிய நிலைகளில் இருந்தால் பொருமையைக் கையாள்கிறான். செல்வச் செழிப்பான நிலையில்
இருக்கும் போது நன்றி செலுத்துகின்றான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான
காரணங்களாய் அமைகின்றன.”
நூல்:ரியாளுஸ்
ஸாலிஹீன்,பாடம்:3,ஹதீஸ் எண்:27.
இப்படிச் செய்வதற்கு எப்படி
மனம் வந்தது?
ஸயீத் இப்னு ஆமிர் {ரலி}
அவர்கள் நபித்தோழர்களில் தங்களுக்கென ஓர் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றவர்கள். உமர்
{ரலி} அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிம்ஸ் மாகாணத்தின் கவர்னராக உமர் {ரலி} அவர்களால்
நியமிக்கப்பட்டார்கள். ஹிம்ஸ் மாகாண மக்களால் பெரிதும் புகழப்படும் அளவிற்கு
தம் பணியை செவ்வனே செய்து வந்தார்கள். ஒரு சமயம் மதீனா வந்திருந்த ஹிம்ஸ் மாகாண பிரதிநிதி
களிடம் உமர் {ரலி} அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். உரையாடல்
நிறைவு பெறும் போது உமர் {ரலி} அவர்கள் “ உங்கள் பகுதியில் வாழும் ஏழைகளின் பட்டியலைத்
தொகுத்துத் தந்தால் அவர்களின் துயர் தீர்த்திட பைத்துல் மாலிலிருந்து பொருளாதார உதவிகளைச்
செய்திடலாம்” என்றார்கள். உடனடியாக
அங்கே சுறுசுறுப்புடன் இயங்கிய பிரதிநிதிகள் பெயர் பட்டியலைத் தொகுத்து உமர் {ரலி}
அவர்களிடம் வழங்கினார்கள்.
பட்டியலின் முதற் பெயராக ஸயீத் இப்னு ஆமிர் என்று
இருந்தது. இதைப் பார்த்த உமர் {ரலி} அவர்கள், இது யார்? என்று கேட்டார்கள். அதற்கு
எங்களின் கவர்னர் ஸயீத் {ரலி} அவர்கள் தான் என்று பிரதிநிதிகள் கூறினர். ”அப்படியா? உங்களின் அமீர் ஏழையாகவா உள்ளார்?” என்று
கலீஃபா கேட்டார்கள். ஆம், ”அவர் வீட்டில் பெரும் பாலும் உணவு தயாரிக்கும் வழக்கமே கிடையாது. என்று பிரதிநிதிகள்
பதில் கூறினார்கள். உருக்கு
உள்ளம் கொண்ட உமர் உருகிப் போனார்கள். அப்படியானால், இந்தாருங்கள் 1000 தீனார் இதைக்
கொண்டு அவரிடம் கொடுத்து, அமீருல் முஃமினீன் அவர்களின் ஸலாத்தை சொல்லி விட்டு, நிம்மதியாய்
வாழுமாறு கூறியதாக சொல்லி விடுங்கள் என்று கூறி 1000 திர்ஹம் நிரப்பிய பணப்பொதியை பிரதிநிதிகளிடம்
கொடுத்து அனுப்பினார்கள்.
ஹிம்ஸ் வந்தவுடன் பிரதிநிதிகள் நேராக ஸயீத் {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தனர். ஸயீத்
{ரலி} அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களைக் கூறி விட்டு, அமீருல் முஃமீனீன் அவர்களின்
ஸலாத்தைக் கூறி விட்டு, பணப் பொதியை ஸயீத் {ரலி} அவர்களிடம் நீட்டினார்கள். அதைப்
பார்த்ததும் ஸயீத் {ரலி} அவர்கள் பதறித் துடித்தவர்களாக, “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி
ராஜிவூன்…” என்று கூறினார்கள். உள்ளே இருந்து ஓடி வந்த {இந்த
சம்பாஷனைகளை யெல்லாம் தெரிந்திடாத} அவர்களின் மனைவி “அமீருல் முஃமினீன் இறந்து போய்
விட்டார்களா? என்று கேட்டார்கள். இல்லை,இல்லை
என்று பதில் கூறினார்கள். ”அப்படியானால், முஸ்லிம்களுக்கு ஏதேனும் துன்பம் நிகழ்ந்து
விட்டதா?” என்று கேட்டார்கள். இல்லை, அதை விட பெரும் துன்பம் நிகழ்ந்து விட்டது
என்றார்கள்” ஸயீத் {ரலி} அவர்கள். அப்படி என்ன தான் நிகழ்ந்து விட்டது நீங்கள் இன்னா
லில்லாஹ்.. கூறும் அளவிற்கு? என்று ஸயீத் {ரலி} அவர்களின் மனைவி கேட்டார்கள். அதற்கு
ஸயீத் அவர்கள் ”நம் மறுமயை வெறுமையாக்கிட,
ஃபித்னா நம் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டது.” என்றார்கள். அப்படியானால், ”அந்த ஃபித்னாவிலிருந்து
நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.” என்றார்கள் அவர்களின் மனைவி. அதற்கு ஸயீத் அவர்கள் “நான் ஒதுங்கிக்
கொள்ள உன் உதவி தேவை, நீ எனக்கு துணை நிற்பாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களின் மனைவி நிச்சயம் நான் துணை நிற்பேன்.”
என்றார்கள். இந்த உறுதி மொழியை வாங்கியதும், கலீஃபா அவர்களிடமிருந்து வந்த பண முடிப்பைப்
பற்றிக் கூறினார்கள். பின்பு அந்த
பிரதிநிதிகளின் முன்னிலையிலேயே 1000 தீனார்களையும் ஏழைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து
விட்டார்கள்.”ஆளுநர் ஸயீத் {ரலி} அவர்கள்.
நூல்:ரிஜாலுன்
ஹவ்லர் ரசூல் {ஸல்}, பக்கம்: 151,152,153. அல் இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:315.
& ஹயாத்துஸ் ஸஹாபா.
பொருளாதாரத்தின் தேவை இருந்தும் கூட, பட்டினிப்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தும் கூட ஸயீத் {ரலி} அவர்களால்
“இப்படிச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது?” எனும் வினா நமக்கு எழுகிறது. அதற்கான
பதில் இது தான் “ வாழ்க்கையை ரசித்து உணர்பவர்களால் மட்டுமே இப்படிச் செய்ய இயலும்.
அதுவும், இப்படிச் செய்வதற்கு ஸயீத் {ரலி} அவர்களால் மட்டுமே முடியும் எனும் புகழாரத்திற்கு
அவர்களின் வாழ்க்கை நம்மை அழைத்துச் செல்கிறது.
எனவே, யாதார்த்தமான உலக வாழ்வின் மாயையில் இருந்து
விலகி, உண்மையான வாழ்வின் இன்பத்தையும், இனிமையயும் உணரச் செய்கிற ஆற்றல் கொண்ட ஓர்
அற்புதமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுப்போம்.
எல்லா நிலைகளிலும் ”ரசித்து வாழும் அற்புதமான நிலையை”
எய்தப் பெறுவோம்.
ரசித்தேன், ரசித்தேன், ஒருபடி தேன் குடித்தேன்!
ReplyDeleteஅருமையான அற்புதமான கட்டுரை. அல்லாஹ் உங்களுடைய கல்வியில் பரகத் செய்வானாக..
ReplyDeleteஅருமையான அற்புதமான கட்டுரை. அல்லாஹ் உங்களுடைய கல்வியில் பரகத் செய்வானாக..
ReplyDeleteRasitten...ungal katturaiyai. Barakkallah....
ReplyDelete