Thursday, 15 May 2014

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

    நடப்பதெல்லாம் நன்மைக்கே!






 மனித வாழ்வு என்பது வெற்றி தோல்விகள், இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள் என பல்வேறு கட்டங்களையும், மாற்றங்களையும் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளது.

ஓர் இறை நம்பிக்கையாளனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி நடக்கிற இந்த மாற்றங்கள் எதுவும் அவனது வாழ்வில் எவ்வித சலனங்களையும், சஞ்சலங்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது.

அவனது மறுமை வாழ்வை அசைத்துப் பார்ப்பதாய் அமைந்து விடக்கூடாது.

அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்தாலும் சரி, குடும்ப வாழ்வில் நிகழ்ந்தாலும் சரி, சமூக மற்றும் சமுதாய வாழ்வில் நிகழ்ந்தாலும் சரியே!

அவனைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் ஈருலகத்திற்கும் சாதகமான  அம்சங்களாக மாற்றிட பழகிக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. வலியுறுத்தவும் செய்கின்றது.

அப்படி அவன் வாழ்வை அமைத்துக் கொள்கிற போது ஆச்சர்யங்களும் அற்புதங்களும் நிறைந்த மகத்தான இறை நம்பிக்கையாளன் என்பதாக வர்ணிக்கவும் செய்கின்றது.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய ஜனநாயகத்தின் 16- வது பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வரத்துவங்கியிருக்கின்றது.

அடுத்து யார் அந்த அரியணையில் அமரப்போகிறார்?, அப்படி வந்து விட்டால் ராமர் கோவில் கட்டப்படுமா? மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படுமா?, பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுமா? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் இந்திய, தமிழக முஸ்லிம்களின் மனதில் ஓடிக் கொண்டிருக்கிற இந்த வேளையில் நமக்கான இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன?

1.யார் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்திட இயலாது என்கிற மனோதிடம் இருக்க வேண்டும்.

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

அல்லாஹ் கூறுகின்றான்:  (நபியே) நீர் அவர்களை அழைத்து அறிவித்து விடுவீராக! ”(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் எங்களை வந்து அணுகாது. அவன் தான் எங்களின் பாதுகாவலன். மேலும், இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருக்க வேண்டும்.”

2.ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவதும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் என  நம்ப வேண்டும்.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “ நபியே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியை கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்கு கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நலவுகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன.”

3.நாம் விரும்புகின்றவற்றில் உள்ள நன்மை தீமைகளை நாம் அறிய மாட்டோம் என ஒப்புக் கொள்ள வேண்டும்.

وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும், ஒரு விஷயம் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.”

தனிப்பட்ட வாழ்வில்

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ».


சுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்பிற்குரியது! அவன் எந்த நிலையிலிருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான். இந்த நற்பேறு இறை நம்பிக்கையாளனைத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பதில்லை. அவன் வறுமை, நோய், துன்பம், சோதனை ஆகிய நிலைகளின் போது பொறுமையைக் கைகொள்கிறான். மகிழ்ச்சியான தருணங்களில், அவன் விரும்பியவை நடக்கிற போது இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாக அமைகின்றனஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                       [நூல்: முஸ்லிம்]

குடும்ப வாழ்வில்

وَحَدَّثَنِى إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِىُّ حَدَّثَنَا عِيسَى - يَعْنِى ابْنَ يُونُسَ - حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِى أَنَسٍ عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِىَ مِنْهَا آخَرَ ». أَوْ قَالَ « غَيْرَهُ ».

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையுடைய கணவன் தன் இறை நம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய குணத்தில் ஏதேனும் ஒரு குணம் அவனுக்கு பிடிக்க வில்லையென்றால், அவளுடைய வேறு குணங்கள் அவனுக்கு மன நிறைவு அளிக்கக் கூடும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                        (நூல்: முஸ்லிம்)

சமுதாய வாழ்வில்

إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறை நம்பிக்கை கொண்டோராயின், நீங்களே மேலோங்குவீர்கள். (இப்போது) உங்களுக்கு (தோல்வி) காயம் ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற (தோல்வி) காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்களாகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்.”

உஹத் யுத்த களத்தில் தோல்வியை சந்தித்த முஸ்லிம் அணியினருக்கு அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கியருளினான்.

ஆகவே வாழ்வில் எது நடந்தாலும் அது நன்மைக்காகத் தான் நடக்கின்றது என்று நாம் விளங்கிக் கொண்டு, நம் வாழ்வை தொடர்ந்து நல் வழியிலே அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய தேசத்தின் 16 – வது பிரதமர் யாராக இருந்தாலும், அவர் ஆட்சியமைப்பின் கீழ் செயல் படுகிற அரசு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லது செய்கிற வரை அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும், அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதும் நம்முடைய தார்மீக கடமையாகும்.

எப்போது அநீதியும், அக்கிரமும் தலைவிரித்தாடுமோ அப்போது அவர்களுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும் தீமைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பதும் கட்டாயக் கடமையாகும்.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

அல்லாஹ் கூறுகின்றான்: “எந்தக் காரியம் நல்லதாகவும், இறையச்சத்திற்குரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால், எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள்! மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.”

 கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக மேன்மக்களின் நிலைப்பாடு..
இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் அவர்களின் ஆட்சி குறித்து வினவப்பட்ட போது

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வேண்டுமென்றே அல்லாஹ் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை உங்கள் மீது திணிக்கவில்லை. நீங்கள் செய்த செயல்களின் தண்டனையாகத்தான் இவருடைய ஆட்சி வந்திருக்கின்றது.

ஆகையால், இந்த தண்டனையை வாட்களைக் கொண்டு எதிர் கொள்வதை விட நிலைகுலையாமை அமைதி, பொறுமை ஆகியவற்றைக் கொண்டு எதிர்த்து நில்லுங்கள். அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அழுது கதறி புலம்பி மன்னிப்பை கேட்டுக் கொள்ளுங்கள்.” என்று பதில் கூறினார்கள்.

                                               (நூல்: தபகாத் இப்னு ஸஅத்)

 நற்பேறு பெற்ற நான்கு இமாம்களும் அவர்கள் வாழும் காலங்களில் அநியாயமும் அக்கிரமும் செய்து கொண்டிருந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை கையாண்டு இருக்கிறார்கள் எனவும், தீவிரமான போராட்டங்களுக்கு வித்திட்டு இருக்கின்றார்கள் எனவும் வரலாறு சான்று பகர்கின்றன.

கொடுங்கோன்மையின் உச்சத்திற்கே சென்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த முதலாம் அப்பாஸிய கலீஃபா அபூ முஸ்லிம் குராஸானி அவர்களுக்கு எதிராக எத்தகைய முடிவைக் கையாள்வது என இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் வந்து கேட்ட போது அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன என்பதை இமாம் அவ்ஸாயி (ரஹ்) அவர்களும், அபூ பக்கர் அல் ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்களும் பின் வருமாறு கூறினார்கள்.

ஆரம்பத்தில் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் வாளோடு வந்து விட்டார்கள். (அதாவது தீயவர்களுக்கு எதிராக களமிறங்கி போராட வேண்டும் எனக் கூறத்தொடங்கி விட்டார்கள்.)

             (நூல்:அஹ்காமுல் குர்ஆன் அல் ஜஸ்ஸாஸ், பாகம்:1, பக்கம்:81)

(நன்றி: செய்யத் அப்துர்ரஹ்மான் உமரீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தஇஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்பாகம் – 2)

இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் எதிராகவே குரல் எழுப்பலாம் எனும் போது நம் நாட்டு ஆட்சியாளர்கள் விஷயத்தில் சொல்லவும் வேண்டுமா?
ஆட்சியாளர்களின் நிலை அன்றும் இன்றும்

மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுகிற எம்.பி க்களுக்கு I.I.T அல்லது I.T.M பட்டதாரிகளுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், எவ்விதப் பொறுப்புமின்றி இதை அவர்கள் அனுபவித்து வருவதாக பொருளாதார நிபுணர் K.N. மெமானி குற்றம் சாட்டுகின்றார்.

L.K.G படிக்கும் குழந்தைகளுக்கு கூட நாள் தோறும் வருகைப் பதிவேடு உண்டு. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வந்தாலே போதுமானது.

நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 545. மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

ஓர் உறுப்பினருக்கு வருடம் ஒன்றுக்கு 32 லட்சம் வீதம் 5 வருடங்களுக்கு 1.60 கோடி ரூபாய் செலவாகின்றது.

மொத்தம் 545 உறுப்பினர்களுக்கு 5 வருடங்களுக்கும் அரசு செலவிடுகின்ற மொத்தத் தொகை 872 கோடி ரூபாய்.

இவர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெருகின்ற தேர்தல் செலவுகள் பல கோடிகளைத் தொடுகின்றது. நடந்து முடிந்த 16 – வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவு 30,000 கோடி.

இதில் பெரிய கொடுமை என்ன வென்றால் இந்திய தேசத்தின் ஒவ்வொரு வாக்காளனும் ஒரு புள்ளி விவரப்படி ஓட்டுப் போட 400 முதல் 500 ரூபாய் வரை செலவு செய்கின்றான்.

அந்த முப்பதாயிரம் கோடி ரூபாயும் மக்களின் வரிப்பணம் தானே. ஒரு மதிப்பீட்டின் படி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு மணித்துளிக்கும் 25 லட்சம் ரூபாய் செலவாகின்றது. ஒரு நாளைக்கு ஒன்றே கால் கோடி ரூபாய் செலவாகின்றது.

இது தவிர்த்து ஓர் அரசு செய்கிற மக்கள் நலத்திட்டங்கள் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுவதற்காக MEDIA – ஊடகங்களுக்கு ஓர் ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாயை அரசு விளம்பரத்திற்காக மட்டுமே செலவு செய்கின்றது. (இதில் எந்த ஒரு விளம்பரமும் இஸ்லாமிய ஊடகத்திற்கு தரப்படுவதில்லை என்பது வேறு விஷயம்)

மேலும், இன்னொரு புள்ளி விவரப்படி ஒவ்வொறு நாடாளுமன்ற உறுப்பினரும் தினசரிப்படி, மாதச் சம்பளம் பிற பணச்சலுகைகள், வசதிகள் என ஏராளமாக பெறுகின்றார்கள்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஓர் ஆண்டிற்கு 1.44 லட்சம் சம்பளம்பிரதி மாத அலுவலகச் செலவு 14,000 ரூபாய்தினசரி படியாக 500 ரூபாய், பயணப்படியாக ஒரு கிலோ மீட்டருக்கு 8.00 ரூபாய் வீதம் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு உறுப்பினர் 2000 கிலோ மீட்டர் பயணிப்பதாக கணக்கிட்டால் 16,000 ரூபாய், ஒரு முறை டெல்லி சென்று வர 48,000 ரூபாய், என பல லட்சங்களை சம்பாதிக்கின்றார்.

சலுகைகளாக, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது கணவன் அல்லது மனைவி, மக்கள் அல்லது துணைவருடன் இந்திய தேசத்தின் எந்த ஒரு பகுதிக்கும் ரயிலில் குளிரூட்டப்பட்ட (AC 1 CLASS) முதல் வகுப்பில் இலவசப் பயணம் செய்யலாம்.

ஒரு உறுப்பினர் நாடு முழுவதும் தனது துணைவருடன் விமானத்தில் 40 முறை சொகுசு பயண வகுப்பில் (Business Class) இலவசப் பயணம் செய்யலாம். (அதற்கும் தினசரிப்படி வழங்கப்படும்.)

ஒரு உறுப்பினர் 2 லட்சம் ரூபாய் பெறுமான 50,000 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம், தண்ணீர் பெறுகின்றார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மூன்று தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டு ஆண்டிற்கு 170000 அழைப்புக்கள் உள்ளூர் தொலைப்பேசி மூலம் வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் குளிரூட்டப்பட்ட அனைத்து நவீன வசதிகளைக் கொண்ட அதாவது குளிர் சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் விலையுயர்ந்த கட்டில் மற்றும் மெத்தைகள் கொண்ட படுக்கைகள் கொண்ட சொகுசு பங்களா இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ வசதியும் உண்டு.

ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் போதும் ஆயுள் முழுவதும் ஓய்வூதியமும் கிடைக்கும்.

இவற்றையெல்லாம் விட, சாதாரண குடிமக்களுக்கு இல்லாத வானளாவிய பேச்சு, கருத்துச் சுதந்திரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. நாடாளுமன்ற அவைக்குள் பேசப்படும் பேச்சிலோ, வாக்களிக்கும் விதத்திலோ எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது.

(நூல்: வழக்குரைஞர் இரா. சி. தங்கசாமி அவர்கள் எழுதியசட்டங்களும்மோசடிகளும்எனும் நூல், பக்கம்: 29,30)

ஆனால், இத்தனை சுக போகங்களையும், சலுகைகளையும் ஏக போகமாக அனுபவித்து விட்டு வாக்களித்த மக்களுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்கிற மக்கள் பிரதிநிதிகளாக, ஊழல் பேர்வழிகளாக, கருப்புப் பண முதலைகளாகத் தான் நாட்டின் பல எம்.பி க்கள் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள்.

உலகத்திலேயே ஜனநாயகத்தில் பற்றுள்ள எந்த நாட்டிலும் இங்கிருப்பதைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணமும் கொடுத்து எல்லாச் சலுகைகளையும் கொடுத்து மக்கள் பிரதிநிதிகளாக வலம் வரச் செய்யும் அவலம் இல்லை.

இந்த தேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. குற்றவியல் செயல்கள் தாறுமாறாக நடந்து கொண்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கம் அடைந்திருக்கின்றன. சிறுபான்மை சமூக மக்களின் நலன் கேள்விக் குறியாக உள்ளன. இது போன்று இன்னும் ஏராளமான பிரச்சனைகள் இந்தப் பிரதிநிதிகள் அங்கே எதை கிழித்துக் கொண்டிருக்கின்றார்கள்?

பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிற மக்கள் விரோத மசோதாக்கள் பல நிறைவேற்றப்படுகிற போது பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதே கிடையாது.

 உதாரணமாக, ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்ட நாசகாரச் சட்டம் தான் தடா சட்டம் (இன்றும் ஏராளமான முஸ்லிம்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டு சிறைகளில் கிடக்கின்றனர்) அந்த மசோதாவை தாக்கல் செய்த போது வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே விவாதம் செய்யப்பட்டு, சட்டம் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்படுகிற போது அவையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 18.

                                        (நூல்: சட்டங்களும்மோசடிகளும்)

முன்மாதிரி மக்கள் பிரதிநிதிகள் அன்று

உமைர் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மீதும், சத்திய சன்மார்க்கத்தின் மீதும் சிறு பிராயம் முதலே அளப்பெறும் காதல் கொண்டிருந்தவர்கள் உமைர் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள்.

உலக பற்றற்ற வாழ்விற்கு முன்னுதாரனமாய் விளங்கிய முக்கியமான மூன்று நபித்தோழர்களில் இவர்களும் ஒருவர். (அபூ தர்தா (ரலி) அவர்கள், ஸத்தாத் இப்னு அவ்ஸ் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள், உமைர் இப்னு ஸஅத் (ரலி) )

ஏக காலத்தில் வாழ்ந்த எல்லா நபித்தோழர்களாலும் மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தப்பட்டார்கள்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் சிரியா வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது இவர்களின் பங்களிப்பு மிகுதமாகவே இருந்தது. வெற்றி கொண்ட படையினரில் முக்கியமானவராக உமைர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

ஆரம்பத்தில் சிரியாவினுடைய ஒரு பகுதியான ஹிம்ஸ் மாகாணத்திற்கு அபூ உபைதா (ரலி) அவர்களும், அவர்களின் மறைவுக்குப் பின்னர் இயாள் இப்னு அனம் (ரலி) அவர்களும், அவர்களுக்குப் பின்னர் ஸயீத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களும் ஆளுநராக பணியாற்றினார்கள்.

ஹிம்ஸ் பகுதியிலிருந்து ஸயீத் (ரலி) அவர்கள் பதவியைத் துறந்து வந்ததும் உமர் (ரலி) அவர்களின் கட்டாயத்தின் பேரிலும், வற்புறுத்தலின் பேரிலும் உமைர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ்ஸின் ஆளுநராய் பதவியேற்றுக் கொண்டார்கள்.

வியக்கத்தக்க வகையில் தமது பதவியைப் பயன்படுத்தி மக்கள் மெச்சும் வகையில் பல மக்கள் திட்டங்களை உருவாக்கி செயலாற்றினார்கள்.

உமைர் (ரலி) அவர்கள் ஆளுநராக பதவியேற்று உரை நிகழ்த்துகிற போது குறிப்பிட்ட சில அம்சங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களாக இலங்கிக் கொண்டிருக்கின்றன.


ولقد رسم وهو أمير على حمص واجبات الحاكم المسلم في كلمات طالما كان يصدح بها في حشود المسلمين من فوق المنبر.
وها هي ذي:
" ألا ان الاسلام حائط منيع، وباب وثيق
فحائط الاسلام العدل.. وبابه الحق..
فاذا نقض الحائط، وحطّم الباب، استفتح الاسلام.
ولا يزال الاسلام منيعا ما اشتدّ السلطان
وليست شدّة السلطان قتلا بالسيف، ولا ضربا بالسوط..
ولكن قضاء بالحق، وأخذا بالعدل"..!!

ஜனங்களே! இஸ்லாம் என்பது பலமான கோட்டையையும், உறுதியான வாயில்களையும் கொண்டது. இஸ்லாமின் கோட்டை என்பது நீதியாகும். அதன் வாயில்கள் உரிமைகளாகும்.  
கோட்டை தகர்க்கப்பட்டு வாயில்கள் உடைக்கப்பட்டால் இந்த மார்க்கம் வெற்றி கொள்ளப்பட்டு விடும். மக்களின் பிரதிநிதிகளான அதிகாரிகள் உறுதியாக இருக்கும் வரை இஸ்லாம் பாதுகாப்பாக இருக்கும். அதிகாரிகளின் உறுதி என்பது வாளால் வெட்டுவதோ, கசையால் அடிப்பதோ கிடையாது.

மாறாக, நீதியை நிலைநாட்டுவதும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் தான் இருக்கின்றது.”

                         (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:383)

இந்த உரையின் மூலம் மக்கள் மத்தியில் நீதி வழங்குதல் மற்றும் ஒவ்வொருவரின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியவைகள் விஷயத்தில் தான் மிக உறுதியாக இருப்பதாகவும் தமது அதிகாரத்தை அதற்காகவே பயன்படுத்துவதாகவும் தெளிவுபடுத்தினார்கள்.

மக்களின் விவகாரங்களில் மிகவும் பொறுப்புணர்வோடும், நளினத்தோடும் நடந்து கொண்டார்கள்.

அரசு முறை பயணமாக ஒரு தடவை ஃபலஸ்தீனுக்கு உமைர் (ரலி) அவர்கள் செல்கிற போது அங்கே சில மக்கள் வெயிலில் நிறுத்த வைக்கப்பட்டிப்பதைக் காண்கிறார்கள்.

அதிகாரிகளிடம் ஏன் இப்படி இவர்கள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என வினவியதற்கு, அதிகாரிகள்இம் மக்கள் அரசுக்கு வரி செலுத்தாதவர்கள்என்று கூறினார்கள்.
அது கேட்ட உமைர் (ரலி) அவர்கள் ஆவேசமடைந்தவர்களாகஇவர்கள் வரி செலுத்த இயலாதவர்களாக இருந்தால் இவர்களை சக்திக்கு மீறி கட்டாயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை. அதற்காக, இவர்களின் மீதான வரியை செல்வந்தர்கள் மீது சுமத்துவதும் சரியில்லை. ஆகவே, வரி கொடுக்க முடியாத மக்களை இது போன்று இனி ஒரு போதும் தண்டிக்க வேண்டாம் என்று கூறி, அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்கள்.

وفي حمص مضى عليه عام كامل، لم يصل الى المدينة منه خراج..
بل ولم يبلغ أمير المؤمنين رضي الله عنه منه كتاب..
ونادى أمير المؤمنين كاتبه وقال له:
" اكتب الى عمير ليأتي الينا"..
وهنا أستأذنكم في أن أنقل صورة اللقاء بين عمر وعمير، كما هي في كتابي بين يدي عمر.
" ذات يوم شهدت شوارع المدينة رجلا أشعث أغبر، تغشاه وعثاء السفر، يكاذ يقتلع خطاه من الأرض اقتلاعا، من طول ما لاقى من عناء، وما بذل من جهد..
على كتفه اليمنى جراب وقصعة..
وعلى كتفه اليسرى قربة صغيرة فيها ماء..!
وانه ليتوكأ على عصا، لا يؤدها حمله الضامر الوهنان..!!
ودلف الى مجلس عمر فى خطى وئيدة..
السلام عليك يا امير المؤمنين..
ويرد عمر السلام، ثم يسأله، وقد آلمه ما رآه عليه من جهد واعياء:
ما شأنك يا عمير..؟؟
شأني ما ترى.. ألست تراني صحيح البدن، طاهر الدم، معي الدنيا أجرّها بقرنيها..؟؟!!
قال عمر: وما معك..؟
قال عمير: معي جرابي أحمل فيه زادي..
وقصعتي آكل فيها.. واداوتي أحمل فيها وضوئي وشرابي.. وعصاي أتوكأ عليها، وأجاهد بها عدوّا ان عرض.. فوالله ما الدنيا الا تبع لمتاعي..!!
قال عمر: أجئت ماشيا..
عمير: نعم..
عمر: أولم تجد من يعطيك دابة تركبها..؟
عمير: انهم لم يفعلوا.. واني لم أسألهم..
عمر: فماذا عملت فيما عهدنا اليك به...؟
عمير: أتيت البلد الذي يعثتني اليه، فجمعت صلحاء أهله، ووليتهم جباية فيئهم وأموالهم، حتى اذا جمعوها وضعوها في مواضعها.. ولو بقي لك منها شيء لأتيتك به..!!
عمر: فما جئتنا بشيء..؟
عمير: لا..
فصاح عمر وهو منبهر سعيد:
جدّدوا لعمير عهدا..
وأجابه عمير في استغناء عظيم:
تلك أيام قد خلت.. لا عملت لك، ولا لأحد بعدك"..!!


கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகியும் உமைர் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் இருந்து எந்த விதமான தொடர்பும் இல்லாத நிலை கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு வெறுமையை ஏற்படுத்தவே கடிதம் ஒன்றை எழுதினார்கள்.

அதில், ”இந்தக் கடிதம் உங்களின் கையில் கிடைத்ததும் ஹிம்ஸை விட்டு விட்டு உடனடியாக உங்களிடம் இருப்பவற்றை எடுத்துக் கொண்டு மதீனா நோக்கி புறப்பட்டு வரவேண்டும்! இது ஆட்சியாளர் உமரின் உத்தரவு!” என்று எழுதி இருந்தார்கள்.

கடிதத்தைப் பிரித்து படித்த உமைர் (ரலி) அவர்கள், உடனடியாக மதீனா நோக்கி பயணமானார்கள்.

அமீருல் முஃமினீன் அவர்களின் அமைதியை திருப்பியது அந்த ஸலாம்

السلام عليك يا امير المؤمنين..
ஸலாம் வந்த திசை நோக்கி திரும்புகின்றார்கள்.

அங்கே, புழுதி படிந்த ஆடைகளுடன், பாலைவன மணற்காற்று அள்ளி வீசிய மண் சுவடுகளை தேகம் எங்கும் தாங்கியவர்களாக, சோர்ந்து போய் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்கள் உமைர் (ரலி) அவர்கள்.

பதில் ஸலாம் உரைத்த உமர் (ரலி) அவர்கள், தங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இந்த நிலையில் வந்திருக்கின்றீர்கள்என்று வினவினார்கள்.
ஒன்றும் நேர்ந்து விட வில்லை அமீருல் முஃமினீன் அவர்களே! நான்
 உடல் நலத்துடன் நன்றாகவே இருக்கின்றேன். இதோ என்னுடன் என் முழு உலகத்தையும் கொண்டு வந்திருக்கின்றேன்.

உமர்(ரலி) : ”என்ன கொண்டு வந்து இருக்கின்றீர்கள்?”

உமைர் (ரலி) : ”இதோ நான் சாப்பிட பயன்படுத்தும் தட்டு, நீரருந்த, உளூ செய்ய பயன் படுத்தும் பாத்திரம், ஓய்வு எடுப்பதற்கும் எதிரிகளிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ள நான் பயன் படுத்துகின்ற கம்பு இவைகள் தான் என்னுடைய உலகம். இதை விட வேறெந்த தேவையும் இந்த உமைருக்கு இவ்வையகத்தில் இல்லை.”

உமர் (ரலி) : ”நீங்கள் நடந்தா வந்தீர்கள்?”

உமைர் (ரலி) : ”ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே!”

உமர் (ரலி) : ”ஏன் நீங்கள் நடந்து வர வேண்டும்? அரசுக்கு சொந்தமான ஒட்டகைகளை ஏற்பாடு செய்து அம்மக்கள் தரவில்லையா?”

உமைர் (ரலி) : ”அம்மக்கள் எனக்காக ஏற்பாடு செய்யவும் இல்லை! ஏற்பாடு செய்து தருமாறு நான் கோரவுமில்லை.”

உமர் (ரலி) : ”உம்முடைய பணிகளை முறையாக செய்தீர்களா?”

உமைர் (ரலி) : ”ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே! நீதியோடும் நெறியோடும் அவர்களின் விவகாரங்களில் நடந்து கொண்டேன். அம்மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரிகள் ஜகாத் பொருட்களை அவர்களிலேயுள்ள வறியவர்களுக்கு நான் கொடுத்து விடுகின்றேன்.”

பாருங்கள் இப்போதும் கூட நான் மட்டும் தான் இங்கு வந்திருக்கின்றேன். முன்னரே நான் காட்டிய இவைகள் தான் என்னுடைய சொத்துக்கள். ஒரு சல்லிக் காசு கூட அவர்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்டு வரவில்லை.”

ஆச்சர்ய மேலீட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்த உமர் (ரலி) அவர்கள்இன்னும் சில காலத்திற்கு நீங்களே ஹிம்ஸ் பகுதியின் கவர்னராக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்என்றார்கள்.

அதற்கு, உமைர் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள்நடந்து முடிந்தவைகளை குறித்து நான் ஆனந்தப்பட்டதும் இல்லை! கவலைப்பட்டதும் இல்லை!
இனி ஒரு போதும் உங்களுக்காக நான் பணி செய்யப்போவது இல்லை. வேறு யாருக்காகவும் நான் இப்பணியை மேற்கொள்ளப் போவதும் இல்லைஎன்று கூறி மறுத்து விட்டார்கள்.

                        (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:   )

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் நெருக்கத்தைப் பெற்ற நபித்தோழர்களில் மிக உயர்வான இடத்தைப் பெற்றவர்களில் இவர்களுக்கு தனி இடம் உண்டு.

பல்வேறு சிறப்புக்களுக்கும், பேறுகளுக்கும் சொந்தக்காரர்கள் முஆத் (ரலி) அவர்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களுக்கு வல்ல அல்லாஹ் மகத்தான பல நற்பேறுகளை வழங்கியிருந்தான். அவர்களுக்கு வழங்கப்பட்ட பேறுகள் குறித்து வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் வனப்பாகவே சான்றுரைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் யமனுக்கு ஆளுநராக, இஸ்லாமிய அழைப்பாளராகச் சென்ற அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் மதீனாவிற்கு வந்திருந்தார்கள்.

ஒரு முறை ஹஜ் செய்வதற்காக முஆத் (ரலி) அவர்கள் கஅபாவிற்கு வருகை புரிந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் ஹஜ் செய்ய வந்திருந்தார்கள். முஆத் (ரலி) அவர்களைச் சுற்றி ஏராளமான அடிமைகள் நின்று கொண்டிருந்ததைக் கண்ட ஸித்தீக் (ரலி) அவர்கள்இவர்கள் எல்லாம் யார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு முஆத் (ரலி) அவர்கள்அபூபக்ர் அவர்களே! உங்கள் முன் நிற்கின்ற இந்த அடிமைகள் என்ன்னுடைய அயராத உழைப்பினால் எனக்கு கிடைத்த சொத்தாகும்என்று கூறினார்கள்.

அது கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்முஆத் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்பேறுகள் குறித்து நான் மிகவும் அகமகிழ்வு கொள்கின்றேன்என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்கள்.


فَقَدِمَ عَلَى أَبِي بَكْرٍ، فَقَالَ لَهُ عُمَرُ:
هَلْ لَكَ يَا مُعَاذُ أَنْ تُطِيْعَنِي؟ تَدْفَعُ هَذَا المَالَ إِلَى أَبِي بَكْرٍ، فَإِنْ أَعْطَاكَهُ فَاقْبَلْهُ.
فَقَالَ: لاَ أَدْفَعُهُ إِلَيْهِ، وَإِنَّمَا بَعَثَنِي نَبِيُّ اللهِ لِيَجْبُرَنِي.
فَانْطَلَقَ عُمَرُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: خُذْ مِنْهُ، وَدَعْ لَهُ.
قَالَ: مَا كُنْتُ لأَفْعَلَ، وَإِنَّمَا بَعَثَهُ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- لِيَجْبُرَهُ.
فَلَمَّا أَصْبَحَ مُعَاذٌ، انْطَلَقَ إِلَى عُمَرَ، فَقَالَ:
مَا أَرَانِي إِلاَّ فَاعِلَ الَّذِي قُلْتَ، لَقَدْ رَأَيْتُنِي البَارِحَةَ - أَظُنُّهُ قَالَ - أُجَرُّ إِلَى النَّارِ، وَأَنْتَ آخِذٌ بِحُجْزَتِي.
فَانْطَلَقَ إِلَى أَبِي بَكْرٍ بِكُلِّ مَا جَاءَ بِهِ، حَتَّى جَاءهُ بِسَوْطِهِ.


وفي خلافة أبي بكر رجع معاذ من اليمن، وكان عمر قد علم أن معاذا أثرى.. فاقترح على الخليفة أبي بكر أن يشاطره ثروته وماله..!
ولم ينتظر عمر، بل نهض مسرعا الى دار معاذ وألقى عليه مقالته..

كان معاذ ظاهر الكف، طاهر الذمة، ولئن كان قد أثري، فانه لم يكتسب اثما، ولم يقترف شبهة، ومن ثم فقد رفض عرض عمر، وناقشه رأيه..
وتركه عمر وانصرف..
وفي الغداة، كان معاذ يطوي الأرض حثيثا شطر دار عمر..
ولا يكاد يلقاه.. حتى يعنقه ودموعه تسبق كلماته وتقول:
" لقد رأيت الليلة في منامي أني أخوض حومة ماء، أخشى على نفسي الغرق.. حتى جئت وخلصتني يا عمر"..
وذهبا معا الى أبي بكر.. وطلب اليه معاذ أن يشاطره ماله، فقال أبو بكر:" لا آخذ منك شيئا"..
فنظر عمر الى معاذ وقال:" الآن حلّ وطاب"..
ما كان أبو بكر الورع ليترك لمعاذ درهما واحدا، لو علم أنه أخذه بغير حق..
وما كان عمر متجنيا على معاذ بتهمة أو ظن..
وانما هو عصر المثل كان يزخر بقوم يتسابقون الى ذرى الكمال الميسور، فمنهم الطائر المحلق، ومنهم المهرول، ومنهم المقتصد.. ولكنهم جميعا في قافلة الخير سائرون.

மதீனாவில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்ட போது, ஒரு மாலைப் பொழுதில் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒரு யோசனை எம்மிடம் உண்டு. வேண்டுமானால் முஆத் (ரலி) அவர்களை அழைத்து அவர்கள் யமனில் சம்பாதித்த அவரின் தேவைக்குப் போக மீதமிருக்கிற அனைத்து சொத்துக்களையும் அரசுக்கு ஒப்படைக்கு மாறு சொல்லுங்கள். நீங்கள் ஆட்சியாளர் தானே! அவர் தந்தார் என்றால் இந்த நிலை கொஞ்சம் மாறிவிடும் அல்லவா?” என்று கூறினார்கள்.

அது கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்அவர்களாக விரும்பி எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்! மாறாக, அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி நான் பெற்றுக் கொள்ளமாட்டேன்.” என்றும், மேலும், முஆத் அவர்களை நபி {ஸல்} அவர்கள் யமனுக்கு அனுப்பும் போதே பொருளீட்டுவதற்கும் சம்பாத்யம் செய்வதற்கும் அனுமதி அளித்திருந்தார்கள்என்று கூறி மறுத்து விட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்ததும், முஆத் (ரலி) அவர்களை நேரிடையாகச் சந்தித்து மதீனாவின் நிலையை எடுத்துக் கூறி தமது அபிப்பிராயத்தைக் கூறினார்கள்.

முஆத் (ரலி) அவர்கள் மறுத்து விடுகின்றார்கள். முஆத் (ரலி) மறுத்ததும் அங்கிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயத்தை நிராகரித்த முஆத் (ரலி) அவர்கள் நீண்ட நேரம் யோசித்தார்கள். சட்டென அவருக்கு பழைய கனவொன்று மின்னல் கீற்று போல் பளிச்சிட்டு மறைந்தது. மீண்டும் அதிகம் உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயம் குறித்து சிந்தித்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

ஒருவாராக உமர் (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நடந்தார்கள். அந்த நடையில் அவர்கள் எடுத்த முடிவின் வேகம் தென்பட்டது.

வீட்டின் கதவை தட்டி உமர் (ரலி) அவர்களை வெளியே அழைத்த முஆத் (ரலி) அவர்கள் “உமர் அவர்களே! நான் உங்களுடைய ஆலோசனையையும், அபிப்பிராயத்தையும் ஏற்கின்றேன்”

என்னுடைய இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று என்னிடம் நீங்கள் அவசியம் கேட்கத்தான் வேண்டும்?” என்றார் முஆத் (ரலி) அவர்கள்.

உம்முடைய மன மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று உமர் (ரலி) அவர்கள் வினவியதற்கு…

“ஒரு முறை நான் கனவொன்று கண்டேன். அதில் ஆழமான நீர்ச்சுழலில் நான் சிக்கிக்கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கப்போகிறேன் எனும் அச்சம் மனதை ஆட்கொண்ட போது, நீங்கள் தான் வந்து கரம் கொடுத்து என் கரம் பிடித்து காப்பாற்றினீர்கள்” என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்னர், உமர் அவர்களையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று தமது பொருளாதாரம் முழுவதையும் கொடுத்து விட்டு, அமீருல் முஃமினீன் அவர்களே! இதோ இங்கிருப்பவைகள் மட்டும் தான் நான் சம்பாதித்தது! அதை நான் அல்லாஹ்விற்காக தந்துவிட்டேன்” என்று கூறி சென்று விட்டார்கள்.

(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:139, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்:1)

மேற்கூறிய இரண்டு நபித்தோழர்களின் அரசியல் வாழ்வும் அப்பழுக்கற்ற தூய்மையானதாகவும், மக்களின் விவகாரத்திலும் அரசின் விஷயத்திலும் அவர்கள் கொண்டிருந்த பேணுதல் சுகபோகங்களை, சலுகைகளை அனுபவிக்காதிருத்தல் போன்றவையை வெளிக்காட்டுபவையாக இருப்பதை உணரமுடிகின்றது.

நாம் வாழ்கிற காலமோ, நம்மை ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களோ நல்லோர்களாக இல்லை என்ற போதிலும் இது போன்ற தருணங்களில் இந்த வரலாற்றுச் செய்திகளை சகோதர மத நண்பர்களின் காதுகளுக்கு எத்திடச் செய்வது நம்முடைய தலையாய கடமை அன்றோ!

நம்மைச் சுற்றி நடக்கின்ற எல்லாமும் நன்மை அடிப்படையில் தான் நடக்கின்றன என்கிற நல்ல சிந்தனையை நம் உள்ளத்திற்கு உணர்த்துவோம்!

அல்லாஹ் கொடுங்கோலர்கள், அக்கிரமக்காரர்கள் ஆகியோரின் ஆட்சியிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும், தீங்கிலிருந்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் காப்பாற்றுவானாக! ஆமீன்! ஆமீன்!

                        வஸ்ஸலாம்!!











4 comments:

  1. கலத்திற்கு ஏற்ப அற்புதமான படைப்பு . என் மனம் கவர்ந்த படைப்பும் கூட

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ் .ஹஜ்ரத் அவர்களுக்கு கல்வியில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  3. அல்ஹம்து லில்லாஹ் .ஹஜ்ரத் அவர்களுக்கு கல்வியில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete