Thursday, 31 March 2022

ரமழானை நேர்த்தியாக்குவோம்! ரமழானை அழகாக்குவோம்!!!

 

ரமழானை நேர்த்தியாக்குவோம்!

 ரமழானை அழகாக்குவோம்!!!

 


 

ஒரு முஃமின் மூன்று காரணங்களுக்காக எந்தவொரு அமலையும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்ய வேண்டும்.

1.   வழிபாடுகளும்.. இறைக்கடமைகளும்

ஏனெனில், வழிபாடுகளும், இறைக்கடமைகளும் அதைச் செய்கின்ற அடியானுக்கு ஈருலகிலும் மகத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக இறை மறையில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ

ஆணாகினும், பெண்ணாகினும் எவர் இறை நம்பிக்கைக் கொண்டிருக்கும் நிலையில் நற்செயலை செய்கின்றாரோ நிச்சயமாக நாம் இந்த உலகில் அழகான வாழ்வை வாழச்செய்வோம். இன்னும் மறுமையில், அவர்களுடைய கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் அழகானதாக நிச்சயமாக நாம் கொடுப்போம்”. ( அல்குர்ஆன்: 16: 97 )

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا

நிச்சயமாக, எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு உலகில் சக மனிதர்களின் உள்ளங்களில் நேசத்தை ரஹ்மான் ஏற்படுத்துவான்”. ( அல்குர்ஆன்: 19: 96 )

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا

நிச்சயமாக, எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சுவனச்சோலை தங்குமிடமாக ஆகிவிட்டது. அவர்கள் அவற்றில் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள். அங்கிருந்து திரும்புவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்”. ( அல்குர்ஆன்: 19: 107, 108 )

2.   அல்லாஹ்வும், அவன் தூதர் {ஸல்} அவர்களும் அமல்களில் நேர்த்தியையும், அழகையும் விரும்புகின்றார்கள்.

عن عائشة رضي الله تعالى عنها قالت

قال رسول الله صلى الله عليه وسلم 

 إن الله يحب إذا عمل أحدكم عملاً أن يتقنه " الصحيحة

நிச்சயமாக! அல்லாஹ் உங்களில் ஒருவர் அமல் செய்தால் மிக நேர்த்தியாகவும், ஒழுங்கு முறைகளோடும் செய்யப்படுவதையே விரும்புகின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்து வஸ்துக்களின் மீது அழகுற இருக்க வேண்டும் என்பதை விதியாக்கிவிட்டான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஆகவே, தான் உங்களில் ஒருவர் உளூ செய்தால் அழகான முறையில் உளூ செய்யட்டும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

3.   அல்லாஹ்வும், அவன் தூதர் {ஸல்} அவர்களும், இறைநம்பிக்கையாளர்களும் நம் நல்லறங்களை பார்ப்பார்கள்.

وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

நபியே! நீங்கள் அறிவித்து விடுங்கள்! “நீங்கள் நற்செயல்கள் செய்து கொண்டே இருங்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறைநம்பிக்கையாளர்களும் உங்களுடைய செயலை பார்ப்பார்கள். மேலும், மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறியக்கூடியவனின் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள். அப்பொழுது நீங்கள் உலகில் செய்த அனைத்து ( நல்ல, தீய ) செயல்களையும் அவன் அறிவிப்பான்”. ( அல்குர்ஆன்: 9: 105 )

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்களில் சிலர் உலகில் அடியான் செய்து கொண்டிருக்கும் அமலை அல்லாஹ் நாளை தீர்ப்பு நாளில் பார்ப்பான், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், இறைநம்பிக்கையாளர்களும் பார்ப்பார்கள் என்று கூறுகின்றார்கள்.

சில அறிஞர்கள் பின் வரும் நபிமொழிகளை அடிப்படையாக வைத்துஉலகில் நாம் செய்யும் அனைத்து அமல்களும் அல்லாஹ்வின் கவனத்திற்கும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கவனத்திற்கும் எடுத்துக் காட்டப்படுகின்றதுஎன்று கூறுகின்றார்கள்.

மேலும், நாம் வெளிப்படையாக செய்கிற நல்லறங்களை வைத்து தான் உலகில் வாழும் சக முஸ்லிம்களும் நம்மை நல்லோர் எனவும் அழக்கின்றனர் என்கின்றார்கள்.

قال صلى الله عليه وسلم

 تعرض الأعمال يوم الاثنين والخميس، فأحب أن يعرض عملي وأنا صائم

 رواه الترمذي وغيره.

அபுஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா )

عَنْ أبي ذَرٍّ – رضي اللهُ عنه - قال: قال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: «عُرِضتْ عليَّ أعمالُ أمَّتِي، حسَنُها وسَيِّئُها، فوجدتُ في محاسنِ أعمالِها الأذَى يُماطُ عنِ الطَّريقِ، ووجَدتُ في مساوِئ أعمالِها النُّخاعَةَ تكونُ في المسْجِدِ لا تُدْفَنُ» رواه مسلم.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் பாதையை விட்டும் மக்களுக்கு நோவினை தரும் பொருட்களை அகற்றியதையே அதிகாமக் கண்டேன். மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதைக் கண்டேன்” ( நூல்: முஸ்லிம் )

நாம் செய்கின்ற எல்லா அமல்களும் ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழன் நாட்களில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படும் அந்த நேரத்தில் நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன் என்று நபியவர்கள் ஆசைப்பட்டார்கள் என்பதை சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமை நாட்கள் வந்து விட்டால் இன்று எனது அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படுகிறது என்ற சிந்தனை நம்மில் ஒவ்வொருவருக்கும் தானாக வர வேண்டும். வருவது மட்டுமல்ல நான் இந்த இடைப்பட்ட நாட்களில் எந்த அளவிற்கு அமல்கள் செய்துள்ளேன் என்பதை மீட்டிப் பார்த்து நம்மை அமல்கள் பக்கம் ஆர்வமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும்  குறிப்பிட்ட இந்த நாட்களில் எனது அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா என்ற கவலையோடு அந்த நாட்களை நாம் கழிக்க வேண்டும்.

ஆகவே தான் நாம் செய்கிற எந்த ஒரு அமலையும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்ய வேண்டும்.

நோன்பின் மாண்புகளும்... நேர்த்தியாக செயல்படுவதன் அவசியமும்..

அந்த வகையில் உயர்வான ஒரு மாதத்தில், உயர்ந்த இறையச்சத்தைப் பெற்றுத் தருகிற, அல்லாஹ் விரும்புகிற, அவனே கூலி வழங்குவதாகச் சொல்கின்ற, அதன் பரிசாக சுவனத்தின் ரய்யான் வாசலைப் பரிசாகத் தரப்படும் என்கிற சோபனத்தைப் பெற்றுத் தருகிற நிகரில்லாத வணக்கமாகிய நோன்பை எவ்வளவு நேர்த்தியாக, அழகாக நோற்க வேண்டும்.

ஒரு செயலை நியதிப்படிச் செய்வது என்பது வேறு. நேர்த்தியாகவும், அழகாகவும் செய்வதென்பது வேறு.

நாம் பல பணிகளை நாளும் நியதிப்படிச் சரியாகச் செய்து விடுகின்றோம். ஆனால், நேர்த்தியாகச் செய்கின்றோமா? அழகு பட செய்கின்றோமா? என்றால் அங்கே பலருக்கு சொல்வதற்கு விடை இருக்காது.

படிப்பது, பேசுவது, பழகுவது, உரையாடுவது, உண்பது, உடுத்துவது, விளையாடுவது, உறங்குவது, வியாபாரம் செய்வது, என எதைச் செய்தாலும் அவற்றில் ஒரு நிறைவு ஏற்பட்டால் தான் அச்செயல் சரியாக அமைந்தது என்று கூற முடியும். இந்த நிறைவு என்ற உணர்வு எப்போது ஏற்படுகின்றதோ அப்போது தான் நாம் அந்த செயலை நேர்த்தியாக செய்திருக்கின்றோம் என்று அர்த்தம் ஆகும்.

வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்கள், எதிர்வினைச் சிந்தனைகள் ஆகியவற்றை நேர்த்தியாகச் செய்யப்பட்ட செயல்கள் திசைமாற்றம் செய்து மனதுக்கு அமைதியைத் தந்து விடும் என்கின்றனர் மருத்துவர்களும், உள்வியலாளர்களும்.

ஒரு செயலை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற சட்டதிட்டங்கள், வரைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கும் அந்த செயலை அந்த சட்டதிட்டங்களின் படி வரைமுறைகளைப் பேணி மனம் பொருந்திச் செய்வதே நேர்த்தியாகச் செய்வது என்று பொருளாகும்.

வாழ்க்கையில் மிகச் சாதாரணமான செயலையே நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் இருக்கும் போது, நேர்த்தியாகச் செய்வதால் ஏற்படும் பலன்கள் உயர்வாக கூறப்பட்டிருக்கும் போது ஒரு இறைநம்பிக்கையாளன் தன் வாழ்க்கையில் தன் செயலையும், இறைவனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளையும், கடமைகளையும் எவ்வளவு நேர்த்தியாக அமைத்துக் கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றான் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்ட, வழிபாடுகளில் தொழுகைக்குப் பின்னர் இரண்டாவதாக கடமையாக்கப்பட்ட நோன்பு எனும் உயரிய அமலை நோற்பதற்காகக் காத்திருக்கும் இந்த தருணத்தில் “நோன்பின் மாண்புகளை அறிந்து, நோன்பின் சட்டதிட்டங்களைப் புரிந்து, நேர்த்தியாக, அழகாக நாம் நோன்பு நோற்க முயற்சி செய்வோம். முதலில் நாம் நோன்பின் மாண்புகளை சுறுக்கமாகக் காண்போம்.

01.நோன்பிற்கு நிகரான எந்த வணக்கமும் இல்லை.

 قال أبو أمامة الباهلي رضي الله عنه: "قلتُ يا رسولَ اللَّهِ مرني بعملٍ، قالَ عليكَ بالصَّومِ فإنَّهُ لا عدلَ لَه قلتُ يا رسولَ اللَّهِ مرني بعملٍ قالَ عليكَ بالصَّومِ فإنَّهُ لا عدلَ لَه"

அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் ஏவியுள்ள, பயனுள்ள ஓர் அமலை எனக்கு அறிவித்து தாருங்கள்என கேட்டேன். அதற்கு நபியவர்கள் நோன்பு நோற்பீராக! அதற்கு நிகராக எந்த வணக்கமும் இல்லைஎன்று கூறினார்கள். (ஆதாரம் - நஸாயி 4-165, அஹ்மத் 5-249, பைஹகீ 4-301). 

02. அல்லாஹ்வே நேரடியாக கூலி வழங்குகிறான். 

قال النبي صلى الله عليه وسلم:  : « كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به » [رواه الإمام البخاري 

அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள், “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! (ஆதாரம் - புஹாரி - 1904, முஸ்லிம் - 1151). 

03. நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் ஷபாஅத் செய்யக் கூடியது. 

قال النبي صلى الله عليه وسلم: (الصيامُ والقُرآنُ يَشفَعانِ للعَبدِ؛ يقولُ الصيامُ: ربِّ، إنِّي منَعْتُه الطعامَ والشَّهَواتِ بالنَّهارِ فشَفِّعْني فيه، ويقولُ القُرآنُ: منَعْتُه النومَ باللَّيلِ فيُشَفَّعانِ)

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள். நோன்பும், அல்குர்ஆனும் அல்லாஹ்விடத்தில் அடியார்களுக்காக ஷபாஅத் செய்யும். நோன்பு கூறும் இறைவா! பகல் வேளைகளில் அடியானின் உணவுகளையும், இச்சைகளையும் நான் தடுத்தேன். ஆகவே அதற்காக வேண்டி சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக! அதே போன்று அல்குர்ஆனும், “இரவிலே அவனது தூக்கத்தை தடுத்தேன். எனக்காக வேண்டி ஷபாஅதை ஏற்றுக் கொள்வாயாக!எனக் கூறும். அவை இரண்டினதும் ஷபாஅத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ( நூல்:- அஹ்மத் - 6626, தபரானி - 14-72, ஹாகிம் - 2036). 

04. பாவமன்னிப்பையும், மகத்தான கூலியையும் பெற்றுத் தரும் வணக்கம். 

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்து கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூறுபவர்களான பெண்களும்_(ஆகிய) இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்)கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.” (அல்குர்ஆன் - 33-35). 

05. நோன்பானது பாவங்களுக்கும், தவறுகளுக்கும் பரிகாரமாகும். 

قال رسول الله صلّى الله عليه وسلّم: "فِتْنَةُ الرَّجُلِ في أهْلِهِ ومَالِهِ وجَارِهِ، تُكَفِّرُهَا الصَّلَاةُ والصِّيَامُ والصَّدَقَةُ"

நபியவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் - ஒரு மனிதன் தன் குடும்பத்தினரிடமும் தன் சொத்துக்களிலும் தன் குழந்தைகளிடமும் தன் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும்” ( நூல்:- புஹாரி - 525,3587, முஸ்லிம் - 144). 

06. நோன்பு நரகில் இருந்தும், பாவங்களில் இருந்தும் பாதுகாக்கும் ஓர் கேடயமாகும்.

قال رسول الله صلّى الله عليه وسلّم: "الصيامُ جُنَّةٌ وحِصْنٌ حصينٌ مِنَ النارِ".

நபியவர்கள் கூறினார்கள்- நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்”. ( நூல்: புஹாரி - 1894, முஸ்லிம் - 1151) 

وقد قال ابن العربي رحمه الله: "إِنَّمَا كَانَ الصَّوْمُ جُنَّةً مِنَ النَّارِ لِأَنَّهُ إِمْسَاكٌ عَنِ الشَّهَوَاتِ وَالنَّارُ مَحْفُوفَةٌ بِالشَّهَوَاتِ فَالْحَاصِلُ أَنَّهُ إِذَا كَفَّ نَفْسَهُ عَنِ الشَّهَوَاتِ فِي الدُّنْيَا كَانَ ذَلِكَ سَاتِرًا لَهُ مِنَ النارفي الْآخِرَةِ

நோன்பு கேடயம் என்பதன் அர்த்தம் யாதெனில், யார் அல்லாஹ்வுக்காக நோன்பிருப்பதன் மூலம் இவ்வுலகில் தமது இச்சைகளை கட்டுப்படுத்தி தனது உள்ளத்தை கட்டுப்படுத்துகிறாரோ, அவரை அந்நோன்பானது நரகில் நுழையவிடாமல் தடுக்கும். (பார்க்க - பத்ஹூல் பாரி - 4-104). 

07. நோன்பு சுவனத்திற்குள் நுழைவிக்கும் காரணியாகும். 

قال رسول الله صلّى الله عليه وسلّم: "فِي الجَنَّةِ ثَمَانِيَةُ أبْوَابٍ، فِيهَا بَابٌ يُسَمَّى الرَّيَّانَ، لا يَدْخُلُهُ إلَّا الصَّائِمُونَ".

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் :சொர்க்கத்தில் ரய்யான்என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ ( நூல்:- புஹாரி - 1896, முஸ்லிம் - 1152) 

08. நோன்பு இரண்டு சந்தோஷத்தை தருகின்றது. 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் :நோன்பாளிக்கு இரண்டு (இடங்களில்) சந்தோசமடைகின்றான். அவை நோன்பு திறக்கும் போதும், மறுமையில் அல்லாஹ்வை காணும் போதும் (ஆகும்). ( நூல்: (புஹாரி - 1954, முஸ்லிம் - 1151) 

09. நோன்பாளியின் வாயிலி்ருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாசத்தைப் போன்றது. 

நபி {ஸல்) அவர்கள் கூறினார்கள் :முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். ( நூல்:  புஹாரி 1904, முஸ்லிம் 1151) 

10. நோன்பானது குரோதம் பொறாமை போன்ற தீய பண்புகளை போக்குகின்றது. 

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள், ‘பொறுமையின் மாதத்தில் (ரமழான் மாதத்தில்) நோற்கும் நோன்பும், ஒவ்வொரு மாதமும் நோற்கும் மூன்று நோன்புகளும் உள்ளத்திலிருந்து பொறாமை (வஞ்சகம், வீண் சந்தேகம்) என்பவற்றை போக்குகின்றன. ( நூல்:- அஹ்மத் - 23070, முஸ்னத் இப்னு அபீ ஷைபா - 37790) 

நேர்த்தியாக்கப்பட வேண்டிய ஸஹரும்.. இஃப்தாரும்..

நோன்பு நோற்பதற்காக துவங்கும் நேரமும், நோன்பு திறப்பதற்காக தயாராகும் நேரமும் ஒரு முஃமினுக்கு மிகவும் முக்கியயத்துவம் வாய்ந்தவையாகும்.

ஆனால் இந்த இரண்டு நேரங்களையுமே இந்த உம்மத் பாழாக்குகின்றது. ஸஹர் நேரத்தில் உணவு தயாரிப்பதிலும், தொலைக்காட்சிகளில் தொலைந்து போவதிலும், இஃப்தார் நேரத்தில் கடை வீதிகளில் உலவுவதிலும், வீணான வேலைகளில் ஈடுபடுவதிலும், மீண்டும் உணவு தயாரிப்பதிலும் ஈடுபட்டு நாசமாக்குகின்றது.

ஸஹர் நேரம் என்பது இஸ்லாமியர்களுக்கு இறைவன் தந்த மாபெரும் அருட்கொடை அதில் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்புமிக்கது. எனவே, ஸஹர் நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.

ஸஹர் நேரத்தில் நமக்கு மூன்று விஷயங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டவும் பட்டுள்ளது.

1.   இஸ்திக்ஃபார் செய்வது.

الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ

“இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் பொறுமையாளர்கள், உண்மையாளர்கள், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவர்கள், தங்கள் செல்வத்தை அல்லாஹ்வின் வழியில் செலவிடுபவர்கள். இரவில் கடைசி நேரமான ஸஹர் நேரத்தில் எழுந்து அல்லாஹ்வை வணங்கி, வழிபட்டு அவனிடம் பாவமன்னிப்பும் தேடுபவர்கள் ஆவார்கள்”. ( அல்குர்ஆன்: 3: 17 )

كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ (17) وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

 “இரவில் குறைந்த அளவே தூங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். மேலும், இரவில் கடைசி நேரமான ஸஹர் நேரத்தில் எழுந்து அல்லாஹ்வை வணங்கி, வழிபட்டு அவனிடம் பாவமன்னிப்பும் தேடுபவர்களாக இருப்பார்கள்”. ( அல்குர்ஆன்:51: 17, 18 )

2.   வணக்கத்தில் ஈடுபடுவது..

فعن أبي هُرَيرةَ - رضي الله عنه - قال: قال رسولُ الله - صلَّى الله عليه وسلَّم -: ((أفضلُ الصيام بعدَ رمضان شهر الله المُحرَّم، وأفضلُ الصلاةِ بعدَ الفريضة صلاةُ اللَّيْل)؛ رواه مسلم

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ரமழானுடைய நோன்புக்குப் பின்னால் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் (ஆஷூரா) நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின்னால் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்”. என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                           ( நூல்:முஸ்லிம் )

 

وعن سَهْل بن سعد - رضي الله عنه - قال جاءَ جبريلُ إلى النبيِّ  - صلَّى الله عليه وسلَّم - فقال يا مُحمَّد، عِشْ ما شِئتَ فإنَّك ميِّت، واعملْ ما شئتَ فإنَّك مَجْزيٌّ به، وأحْبِبْ مَن شئتَ فإنَّك مُفارقُه، واعلمْ أنَّ شرفَ المؤمن قيامُ الليل، وعِزَّه استغناؤُه عن الناس))؛

(4278) “الترغيب والترهيب وحسَّن إسنادَه المنذريُّ في

 رواه الطبراني

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வருகை தந்து....

முஹம்மது {ஸல்} அவர்களே! நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள்.

நீங்கள் விரும்பியவாறு அமல் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் அமல் செய்த அள்விற்கு அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள்.

நீங்கள் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களின் மீது நேசம் கொள்ளுங்கள்! ஏனெனில், ஒரு நாள் நிச்சயம் அவர்களை விட்டும் நீங்கள் பிரிந்து விடுவீர்கள்.

முஹம்மத் {ஸல்} அவர்களே! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! ஓர் இறை நம்பிக்கையாளனின் சிறப்பு என்பது இரவிலே நின்று வணங்குவதின் மூலம் தான் கிடைக்கிறது. ஓர் இறைநம்பிக்கையாளனின் கண்ணியம் என்பது பிற மனிதர்களிடம் இருந்தும் தேவையற்றவனாக வாழ்ந்திடும் போது தான் வழங்கப்படுகின்றது”. என்று கூறியதாக, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.  ( நூல்: தபரானீ, அத் தர்ஃகீப் வத் தர்ஹீப் )

3.   ஸஹர் உணவு உண்பது..

       عن العرباض بن سارية قال : سمعت رسول الله صلى الله عليه و سلم وهو يدعو إلى السحور فيشهر رمضان وقال هلموا إلى الغداء المبارك  

ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அருள் நிறைந்த ஸஹ்ரே வருக! வருக! என்று வரவேற்பார்கள். {அல் இர்ஃபால் பின் சாரியா (ரலி) நஸாயி}. அல்ஹம்துலில்லாஹ் ஸஹ்ரை நாமும் வரவேற்போம் இறைவனின் அருளை பெறுவோம்

عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ .

 {  يَرْحَمُ اللَّهُ الْمُتَسَحِّرِين }

நபி {ஸல்} அவர்கள் அருளியதாக இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹு தஆலாவும், அவனின் மலக்குகளும் ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்.(தபரானி)

ஸஹர் என்பது ஸுப்ஹுக்குச் சமீபத்தில் உள்ள நேரத்தில் சாப்பிடும் உணவு.அதாவது ஃபஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்க்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ فَلَا تَدَعُوهُ وَلَوْ أَنْ يَجْرَعَأَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ

ஸஹர் செய்வதில் பரகத் இருக்கின்றது எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடறு தண்ணீரையாவது குடியுங்கள் நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்று நபிகளார் (ஸல்)அவர்கள் சொன்னதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)

فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر

நமக்கும் (யூதர் , கிறிஸ்தவர்களான) வேதக்காரர்களுக்கும் இடயே நோன்பு நோற்பதில் வித்தியாசம் ஸஹர் சாப்பிடுவதுதான். என்றும்

 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَة

நீங்கள் ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது என்றும் நபிகளார் (ஸல்) கூறியுள்ளார்கள்.(முஸ்லீம்-புஹாரி)

ஸஹரும் இஃப்தாரும் இன்றி தொடர் நோன்பு நோற்பது…

ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றவரல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

ஸஹர் சாப்பிடும் போது உடன் யாரையாவது இணைத்துக் கொள்வது..

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் நேரத்தில், 'அனஸே! நான் நோன்பு இருப்பதற்கு ஏதேனும் கொடுங்கள்' என்று கேட்டார்கள். பிலால் (ரலி) அவர்களின் பாங்குக்குப் பிறகு நான் பேரீத்தம்பழங்களையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவர்களுக்கு கொடுத்தேன். 'அனஸே! என்னோடு உணவு அருந்த யாரையேனும் பாருங்களேன்;' என்று நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள். நான் ஜைது பின் தாபித் (ரலி) அவர்களை கூப்பிட்டேன், அவரும் வந்தார், நான் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியைக் குடித்து விட்டேன், அதைக் கொண்டே நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நானும் நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார்கள். எங்களோடு ஸஹர் செய்த பிறகு இரண்டு ரக்அத் தொழுதார்கள், பிறகு தொழுகைக்கு சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: நஸயீ 2169)

இஃப்தார்…

இஃப்தாருடைய நேரம் என்பது அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்கும், நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதற்கும் அனுமதியும், வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளது.

 'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

       '....நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்' என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956)

'பகல் பின்னோக்கிச் சென்று, இரவு முன்னோக்கி வந்து சூரியனும் மறைந்து விட்டால் நீ நோன்பு திறப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), திர்மிதி 634)

சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.

2. விரைவாக நோன்பு திறப்பது:

'விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

மற்றொரு அறிவிப்பில், 'யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்' என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா 1698)

நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.

3. நோன்பு திறக்கும் உணவு:

وعن سَلْمان بن عامر يبلغ به النَّبي صلى الله عليه وآله وسلم قال: ((إذا أفطر أحدُكم فليُفطِر على تمر؛ فإنه بركة، فإن لم يجد تمرًا فالماء؛ فإنه طهور

 'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)

4.   துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரம்:

وروى الترمذي بسند حسن أنه صلى الله عليه وسلم قال: "ثلاثة لا تُرد دعوتهم: الصائم حتى يُفطر، والإمام العادل، والمظلوم".

'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். ...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

நோன்பாளி தனது நோன்பை திறக்குமுன் செய்யப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இதன் விளக்கம்.

5.   நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு:

عن زيد بن خالد الجهني قال : قال صلى الله عليه وسلم :  مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا 

'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735)

நோன்பிற்கான நன்மையை இரட்டிப்பாக்கிக் கொள்ள மற்றவரை நோன்பு திறக்கச் செய்வது ஓர் அரிய வாய்ப்பாகும்.

7. நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி:

6.     لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி )

ஸஹருக்கும் இஃப்தாருக்கும் இடையேயான நேரம்...?

ஸஹருக்கும் இஃப்தாருக்கும் இடையே உள்ள நேரத்தையும், இஃப்தாருக்கு பிந்தைய நேரத்தையும் குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், உபரியான தொழுகைகளை தொழுதல், தானதர்மம் செய்தல், மனித நேயப்பணிகளில் ஈடுபடுதல், உழைத்தல், தராவீஹ் தொழுதல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும்.

உறங்குதல், அரட்டை அடித்தல், விளையாடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடாமல் நோன்பின் மாண்புகளை சிதைக்காமல் பேணுதலோடு நோன்பை நேர்த்தியாகவும், அழகாகவும் நோற்க வேண்டும்.

நேர்த்தியும் அழகும் ஏன் அவசியமாகிறது?

 

وعنه أيضاً أن رسول الله صلى الله عليه وسلم قال: "رب صائم حظه من صيامه الجوع والعطش ورب قائم حظه من قيامه السهر" .

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எத்தனையோ நோன்பாளிகள் வெறும் தாகம், பசியோடு மட்டும் உள்ளனர். அவர்கள் நோன்பின் நன்மையை அடைந்து கொள்வதில்லை  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: நஸயி ).

عن أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم، قال: " الصيام جنة فلا يرفث ولا يجهل، وإن امرؤ قاتله أو شاتمه فليقل: إني صائم مرتين " «والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك»«يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي، وأنا أجزي به والحسنة بعشر أمثالها  

'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினான்.

எனவே, நோன்பின் மாண்புகளை அறிந்து, சட்டதிட்டங்களை விளங்கி, நேர்த்தியாகவும், அழகாகவும் நோன்புகளை நோற்று மகத்தான அல்லாஹ்வின் மாண்புயர் கூலியையும், மேலான ஜன்னத்தையும், ரய்யானின் வழியாக சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் பெறுவோம்!!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் பூரண உடல் ஆரோக்கியத்தோடு 30 நோன்புகளையும் நோற்று, நோன்பு நேரத்தில் எல்லா வணக்க வழிபாடுகளையும் இன்பத்தோடு மன நிறைவோடு நிறைவேற்றிட அருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!! வஸ்ஸலாம்!!

 

5 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் தேவையான நேரத்தில் மிக நேர்த்தியான கட்டுரை

    அல்லாஹ் தங்களுக்கு நிறைவான கூலியை தருவானாக

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்
    மிக அருமையான தொகுப்பு

    ReplyDelete
  3. بارك الله فيك يا أخي الكريم

    ReplyDelete
  4. கட்டுரையை நியதிப்படி தராமல் நேர்த்திப்படி தந்தமைக்கு மிக்க நன்றி உஸ்மானியாரே.

    ReplyDelete
  5. உள்ளம் போற்றும்
    உஸ்மானியாரின்
    உன்னதக் கட்டுரையை
    இன்ஷாஅல்லாஹ்
    இஸ்லாமிய அறிவகம்
    முழுவடிவில்
    கொண்டு செல்லும்.

    தொடரட்டும்
    உஸ்மானியாரின்
    உயர் சேவைகள்!

    -
    மிஸ்கீன்.

    ReplyDelete