தித்திக்கும்
திருமறை – ரமழான்
சிந்தனை:- 21.
பெற்றோரைப்
பேணுவோம்!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால்
20 –வது நோன்பை நோற்று, 21 – வது தராவீஹை
நிறைவு செய்து,
21 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும் நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும் பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் அல் அஹ்காஃப், முஹம்மத், அல் ஃபத்ஹ் ஆகிய சூராக்கள் நிறைவு
செய்யப்பட்டு, அல் ஹுஜ்ராத் அத்தியாயத்தின் 11 வசனங்கள் என 113 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்று தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அல் அஹ்காஃப், அத்தியாயத்தின் 15 – ம் வசனத்தில் அல்லாஹ் பெற்றோருக்கு நலன் நாடுதல் குறித்தும், அவர்களுக்கு
காலம் கடந்து துஆ செய்யும் மனித சமூகம் குறித்தும் பேசுகின்றான்.
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ
أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا
حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ
أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى
وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي
إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே
சுமந்து, சிரமத்துடனேயே
அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும்
முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த
அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும்
எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக! நிச்சயமாக நான்
உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நிச்சயமாக நான் முற்றிலும்
வழிப்பட்ட முஸ்லிம்களில் உள்ளவனாவேன் என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்”.
மனிதனுக்கு
நாற்பது வயதாகும் போது தான் மேற்கூறியவாறு துஆ செய்வான் என இந்த வசனம் கூறுகின்றது.
ஒரு மனிதனுக்கு நாற்பது வயது தாண்டிய பின்னர்தான் பெற்றோரின் பெருமை புரிகின்றது. மேலும், தமது பிள்ளைகள் தனக்கு மாறு செய்யும் போது தான் தாய், தந்தையின் மகத்துவம் தெரிகின்றது. தனது பிள்ளைகள் சீராக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏக்கமும் எழுகின்றது.
எனவே, நம் பெற்றோரின்
பெருமையைப் புரிந்து கொள்ள நாம் நாற்பது வயது வரை காத்திருக்கப் போகின்றோமா? அல்லது
நம்
பிள்ளைகளால் காயம்பட்ட பின்னர்தான் நம் பெற்றோருக்கு நாம்
கொடுத்த கஷ்டம் நமக்குப் புரியுமா?
எனவே, இந்த நிலை வருவதற்கு
முன்னரே நம்மை நாமே நாம் மாற்றிக் கொள்வோமா? இன்ஷா அல்லாஹ்…
ஏகத்துவத்திற்குப்
பிறகு அல்லாஹ் உயர்த்திக்கூறும் ஒரு உறவுமுறை உண்டென்றால் அது நம்மைப் பெற்றெடுத்த
பெற்றோருடனான உறவே ஆகும்.
وَاعْبُدُوا
اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
“மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள்! அவனோடு எதனையும்
இணையாக்காதீர்கள்! தாய்,
தந்தையரிடம் நல்ல விதமாக, அன்புடன் நடந்து கொள்ளுங்கள்!” ( அல்குர்ஆன்: 4:
36 )
وَقَضَى
رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
“உம் அதிபதியாகிய இறைவன்
அவனைத்தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாது எனவும், தாய்,
தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்
எனவும் விதித்துள்ளான்” ( அல்குர்ஆன்: 17:
23 )
لَمّا
سأَلَهُ بعضُ الصحابةِ رسولَ اللهِ صلى الله عليه وسلم: «منْ أَحَقُّ الناسِ
بِحُسْنِ صحابَتِي؟ قالَ
أمُّكَ. قالَ: ثمَّ مَنْ؟ قالَ: أمُّكَ. قالَ: ثمَّ
مَنْ؟ قالَ: أمُّكَ. قالَ
ثمَّ مَنْ؟ قالَ
أبوكَ
‘‘நபித்தோழர்களில் சிலர் நபி
{ஸல்}
அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, மக்களில் நான் அதிகம் அழகிய முறையில் தோழமை கொள்வதற்கு தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் ‘உமது தாய்’ என பதில் கூறினார்கள். அப்போது, அவர், ‘பிறகு யார்?’ என கேட்க.... ‘உமது தாய்’ என மாநபி {ஸல்}
கூற... மூன்றாவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்கவும் நபியவர்கள் ‘உமது தாய்’ என கூறினார்கள். நான்காவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்டபோது ‘உமது தந்தை’ என மாநபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள்’’.
( அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம் )
وى
مسلمٌ عن عبدالله بن عمرو بن العاص قال
أقبل رجلٌ إلى نبي الله صلى الله عليه وسلم فقال: أبايعك على
الهجرة والجهاد أبتغي الأجرَ من الله،قال: ((فهل مِن والديك أحَدٌ حيٌّ؟))، قال: نعم،بل
كلاهما،قال: ((فتبتغي الأجرَ من الله؟))، قال: نعم،قال: ((فارجع إلى والديك
فأحسِنْ صحبتَهما))؛ (مسلم - كتاب البر - حديث 6).
‘‘ஒரு மனிதர் நபி {ஸல்}
அவர்களிடம், ‘நான் இறையருளைப்
பெற ஆசைப்பட்டு நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வதையும், அறப்போர் புரிவதையும் தங்களிடம் உறுதிமொழி கொடுக்கிறேன்’ என்று கூறினார்.
இதை கேட்ட நபியவர்கள் ‘உனது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் இருவருமே உயிருடன் உள்ளார்கள்’ என்று அவர் கூறினார்.
அப்படியானால் இறையருளைத் தான் நீர் தேடுகின்றீரா?’ என நபி (ஸல்) அவர்கள் திரும்பவும் கேட்டார்கள். அப்போது, அவர் ‘ஆம்’ என்று பதில் கூறினார். அப்படியானால் ‘நீர் உமது பெற்றோரிடம் திரும்பிச் சென்று,
அவ்விருவரிடமும் அழகான முறையில் தோழமையுடன் நடந்து கொள்வீராக’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. ( அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம் )
روى
الشيخانِ عن عبدالله بن مسعودٍ رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه
وسلم قلت: يا رسول الله، أي العمل أفضل؟ قال: ((الصلاة على ميقاتها))،قلت: ثم أي؟
قال: ((ثم برُّ الوالدينِ))،قلت: ثم أي؟ قال: ((الجهاد في سبيل الله))؛ (البخاري
حديث 527
مسلم حديث 85).
இப்னுமஸ்ஊத் (ரலி)
அறிவிக்கின்றார்கள்: ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘செயலில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது” என பதில் கூறினார்கள். ‘அதற்கு அடுத்தது எது?’ என்று கேட்டேன். ”பெற்றோருக்கு நன்மை புரிவது” என்றார்கள். ‘அதன்பிறகு எது?’ என்று கேட்டேன். ”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது” என பதில் கூறினார்கள்’’.
( நூல்: முஸ்லிம், புகாரி )
அப்துல்லாஹ் இப்னு
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”ஒருமுறை அண்ணல் நபி {ஸல்}
அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் பெரும்
பாவமொன்றை செய்து விட்டேன். என் பாவத்திற்கு மன்னிப்புண்டா? என்று கேட்க, அதற்கு அண்ணல் நபி {ஸல்}
அவர்கள் அவரை நோக்கி… “உமது தாய் உயிருடன்
இருக்கின்றார்களா? என்று வினவினர். அதற்கவர் இல்லையென்று சொன்னார். பின்னர் மீண்டும் பெருமானார் {ஸல்}
அவர்கள் உமது தாயுடன் பிறந்த சகோதரி (சிறிய தாயார்) உயிருடன்
இருக்கின்றார்களா? என்று கேட்க, அதற்கவர், ஆம்! என்று சொல்ல… “அவ்வாறாயின் நீர் அவருடன் அழகிய முறையில் நடந்து கொள்வீராக!” என்று சொன்னார்கள். (
நூல்: திர்மிதீ )
பெற்றோர்கள் இணை வைப்போராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து வாழவேண்டும்….
عن
أَسْمَاءَ بنْتِ أبي بكْرٍ الصِّدِّيقِ رضي اللَّه عنهما قالت : قَدِمتْ عليَّ
أُمِّي وهِي مُشركة في عهْدِ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم
فَاسْتَفتَيْتُ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قلتُ : قَدِمتْ عَليَّ
أُمِّى وَهِى راغبةٌ ، أَفأَصِلُ أُمِّي ؟ قال : « نَعمْ صِلي أُمَّكِ » متفق عليه .
அஸ்மா பின்த் அபீ
பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ”என்னிடம் என்தாயார்
அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள்
இணை வைப்போராக இருந்தார்கள்.நான் அல்லாஹ்வின் தூதரிடம் '' என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ''ஆம், நீ உன்தாயின் உறவைப்பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்' ' என்று கூறினார்கள்.
( நூல் : புகாரி )
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ
لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ
مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
”தனது பெற்றோருக்கு
நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு
இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக்
கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது
பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்”.
( அல்குர்ஆன் 29 : 8 )
وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ
عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ
سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا
كُنْتُمْ تَعْمَلُونَ
”உனக்கு அறிவு இல்லாத
ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக்
கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில்
அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்”. ( அல்குர்ஆன்:30:
15 )
”ஸஅத் இப்னு அபீவக்காஸ்
(ரலி) அவர்களுடைய தாயார் அவர்கள் (ஸஃதாகிய) அவர் தன்னுடைய
மார்க்கமாகிய (இஸ்லாத்தை) மறுக்கின்றவரை அவரிடம் நான் ஒருபோதும் பேசமாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்தார். மேலும்,
அவர் (ஸஃத் (ரலி) அவர்களுக்கு ''அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய் நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்'' என்று கூறினார்.
இவ்வாறு அவர்
மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவருக்கு கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவர் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவராக ஆகிவிட்டார். அப்போதுதான் அல்லாஹ் ''தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.'' ( அல் குர்ஆன் 29 : 8) என்ற வசனத்தை அருளினான். ( அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃது (ரலி) நூல் முஸ்லிம் )
வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும் பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்ய
வேண்டிய உரிமைகளும்,
கடமைகளும்...
1. பிரார்த்தனை செய்தல்..
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا
وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
நூஹ்(அலை) அவர்கள் இறைவனிடம், “என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்தவனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக. இந்த
அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே (என்றும் பிரார்த்தித்தார்)”. ( அல்குர்ஆன் 71:28
).
رَبِّ ارْحَمْهُمَا كَمَا
رَبَّيَانِي صَغِيرًا
"சிறுவனாக
இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும்
அருள்புரிவாயாக!'' ( அல்குர்ஆன் 17 : 24 )
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ
الْحِسَابُ
”எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும்
விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!” ( அல்குர்ஆன் 14 : 41 )
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ
عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي
فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
"என் இறைவா!
எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி
செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும்
வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' ( அல்குர்ஆன் 46 : 15 )
2.
பெற்றோருக்கு உபகாரம் செய்தல்…
ஈஸா நபியவர்களைப்
பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
وَجَعَلَنِي
مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ
حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا
நான் எங்கே இருந்த
போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம்
தொழுமாறும்,
ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை
துர்பாக்கியசாலியாகவும்,
அடக்குமறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (அல்குர்ஆன்: 19:
31- 32)
وعن
عائشة
قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " دخلت الجنة
فسمعت فيها قراءة فقلت : من هذا ؟ قالوا : حارثة بن النعمان كذلكم البر كذلكم البر
" . وكان أبر الناس بأمه . رواه في " شرح السنة " . والبيهقي في
" شعب الإيمان "
وفي رواية : قال : " نمت فرأيتني في الجنة " بدل
" دخلت الجنة
நபி(ஸல்) கூறினார்கள். நான் கனவுலகில் சொர்க்கம் சென்றேன். அங்கு ஒருவர் குர்ஆன்
ஓதும் சப்தம் கேட்டு விசாரித்தேன். அப்போது வானவர்கள் என்னிடம் அவர் உங்கள்
தோழர் ஹாரிஸா(ரலி) என்றார்கள். இதனைத் தொடர்ந்து நபி (ஸல்) ஸஹாபாக்களிடம் பெற்றோருக்கு உபகாரம் செய்வதால் உங்களுக்கும் இது போன்ற அந்தஸ்து கிடைக்கும்
என்று கூறிவிட்டு ஹாரிஸா(ரலி) தன் தாயிக்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவராக இருந்தார் என்று கூறினார்கள். நூல்: பைஹகி.
இந்த நிகழ்வு நடைபெற்றபோது ஹாரிஸா(ரலி) உலகில்தான் இருந்தார்கள். உலகில் வாழும்போதே அவ்வாலிபருக்கு சொர்க்கத்தின் தொடர்பை தாயின் உபகாரம் பெற்றுக்கொடுத்தது.
3.
பெற்றோர்களை கண்ணியமான
இடத்தில் வைத்து அழகு பார்த்தல்…
وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا
யூசுப் (அலை) அவர்கள் தங்களது பெற்றோரை நீண்ட காலம்
பிரிந்திருந்தார்கள். பின்னர் அவர்களை சந்தித்தபோது தனது சிம்மாசனத்தில் அவர்கள்
இருவரையும் அமர வைத்து அழகு பார்த்த செய்தியை ‘தமது பெற்றோரை தமது சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும்
அவருக்கு பணிந்தனர்’
என்று இறைவன் திருக்குர்ஆனில் (12:100) எடுத்துக் காட்டுகிறான்.
إن أبا
هريرة كان يستخلفه مروان، و كان يكون بذي الحليفة، فكانت أمه فى بيت و هو في آخر، قال: فإذا أراد
أن يخرج وقف على بابها فقال: السلام عليك، يا أمتاه! و رحمة الله و بركاته، فتقول: وعليك يا
بني ورحمة الله وبركاته، فيقول: رحمك الله كما ربيتني صغيرا، فتقول
رحمك الله كما بررتني كبيرا ثم إذا أراد أن يدخل صنع مثله
الراوي أبو
مرة مولى أم هانئ المحدث الألباني صحيح الأدب المفرد
المصدر
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வரும்போதும், வீட்டுக்குள் நுழையும் போதும் தமது தாயாரின் வீட்டு வாசலில் நின்று, உம்மா என்றழைத்து தாயாருக்கு ஸலாம் சொல்வார்களாம். தாயாரிடம் இருந்து பதில்
ஸலாம் வந்ததும் தாயே! நான் சிறு குழந்தையாக இருந்த போது எம்மிடம் நீங்கள் காட்டிய
கருணையைப் போன்று அல்லாஹ் உங்களுக்கும் கருணை புரிவானாக! என்பார்களாம். அதற்கு
அவர்களின் தாயார் என்னை நீ வயது முதிர்ந்த இந்த பிராயத்தில் பராமரிப்பதும், நன்மை செய்வதுமாக இருப்பதற்கு உன் மீதும் அல்லாஹ் கருணை புரிவானாக!
என்பார்களாம்.
4. பெற்றோருக்காகச்
செலவிடுதல்...
يَسْـــَٔلُوْنَكَ
مَاذَا يُنْفِقُوْنَ
قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
தாம் எதைச் செலவிட
வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ”நல்லவற்றி ருந்து
நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும்,
அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும்
அல்லாஹ் அதை அறிந்தவன்”
எனக் கூறுவீராக! ( அல்குர்ஆன்
2:215
)
حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا حَبِيبٌ
الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ
أَنَّ
رَجُلاً أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ
لِى مَالاً وَوَلَدًا وَإِنَّ وَالِدِى يَجْتَاحُ مَالِى. قَالَ « أَنْتَ
وَمَالُكَ لِوَالِدِكَ إِنَّ أَوْلاَدَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ فَكُلُوا
مِنْ كَسْبِ أَوْلاَدِكُمْ
ஒரு மனிதர்
நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே,
எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளது. மேலும்
எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகிறது’ என்றார். அதற்கு
நபியவர்கள் ‘நீயும்,
உனது செல்வமும் உனது தந்தைக்கு உரியனவாகும். நீங்கள்
சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே
உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்’ என்றார்கள்”.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)
أَخْبَرَنَا
يُوسُفُ بْنُ عِيسَى ، قَالَ : أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى ، قَالَ :
حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ ، عَنْ جَامِعِ
بْنِ شَدَّادٍ ، عَنْ طَارِقٍ ، قَالَ
قَدِمْنَا
الْمَدِينَةَ فَإِذَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى الْمِنْبَرِ
يَخْطُبُ النَّاسَ وَهُوَ يَقُولُ : يَدُ الْمُعْطِي الْعُلْيَا ، وَابْدَأْ
بِمَنْ تَعُولُ : أُمَّكَ ، وَأَبَاكَ ، وَأُخْتَكَ وَأَخَاكَ ، ثُمَّ أَدْنَاكَ ،
أَدْنَاكَ مُخْتَصَرٌ
நபி (ஸல்) அவர்கள்
மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ”கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய
தாய், உன்னுடைய தந்தை,
உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு
உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்” என்று கூறினார்கள்.
( அறி : தாரிக் (ரலி), நூல் : நஸாயீ-2532 (2485) )
4. பெற்றோருக்காக தர்மம் செய்தல்...
كان
أبوحنيفة باراً بوالديه، وكان يدعو لهما ويستغفر لهما، ويتصدّق كل شهر بعشرين
ديناراً عن والديه
இமாம் அபூஹனீஃபா
(ரஹ்) அவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு மிகவும் உபகாரியாக வாழ்ந்தார்கள். மேலும், ஒவ்வொரு
மாதமும் 20 தீனார்களை தன் பெற்றோர்களுக்காக தர்மம் செய்வார்கள்.
عن ابن
عباس رضي الله عنهما
((أن سعد بن عبادة - أخا
بني ساعدة - توفيت أمه وهو غائب عنها، فقال: يا
رسول الله إن أمي توفيت، وأنا غائب عنها، فهل ينفعها إن تصدقت بشيء عنها؟ قال: ((نعم))، قال: فإني
أشهدك أن حائطي المخراف
صدقةٌ
عليها
“பனூ சாயிதா குலத்தைச்
சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த
போது அவர்களது தாயார் இறந்துவிட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , ''அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியூர் சென்றிருந்தபோது என்
தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால்
அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம் (பலனளிக்கும்)'' என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,'' என்று கூறினார்கள். ( அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி )
பெற்றோரின்
மகத்துவம் அறிவோம்! பெற்றோருக்கு உபகாரம் செய்வோம்!! பெற்றோரைப் பேணுவோம்!!!
No comments:
Post a Comment