Tuesday, 19 March 2024

நற்குணங்களால் அழகு படுத்துவோம்!!!

 

தராவீஹ் சிந்தனை:- 9. உங்களில் சிறந்தவர் தொடர்:- 8.

நற்குணங்களால் அழகு படுத்துவோம்!!!



அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய மகத்தான கருணையால் எட்டாவது நோன்பை நிறைவு செய்து விட்டு, ஒன்பதாம் நாள் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து நாம் அமர்ந்திருக்கின்றோம். 

பெருமானார் {ஸல்} அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஃகியாருக்கும், ஃகைருக்கும் ( உங்களில் மிகச் சிறந்தவர் ) ஃகைருன் நாஸ் ( மனிதர்களில் மிகச் சிறந்தவர் ) என்ற அடைமொழியோடு சில நல்ல பண்புகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பட்டியலிட்டார்கள்.

அப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் பட்டியலிட்டுக் கூறிய சில நல்ல பண்புகளை இந்த ரமழானில் நாம் தொடராகப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

எட்டாவதாக இன்றைய அமர்வில் எந்த நற்குணங்களால் உங்களில் மிளிர்கிறவரே உங்களில் சிறந்தவர் என்ற நபிமொழி குறித்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏شَقِيقٌ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏قَالَ كُنَّا جُلُوسًا مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏يُحَدِّثُنَا ‏ ‏إِذْ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَإِنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا ‏

நபி (ஸல்) அவர்கள் தீமையைச் செய்பவர்களாகவோ, சொல்பவர்களாகவோ தீமையை நாடக்கூடியவர்களாகவோ இருந்ததில்லை. உங்களில் மிகச் சிறந்தவர்கள், அழகான குணமுடையவர்களே! என்று சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம்)

ஹுஸ்னுல் குலுக்நற்குணம் என்றால் என்ன? என்பதற்கு அப்துல்லாஹ் பின் முபாரக்(ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்ததாக இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நற்குணம் என்பது, முகமலர்ச்சி, நன்மைகளை பரவச் செய்தல், பிறரை நோவினை செய்வதை தவிர்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளாகும். (ரியாளுஸ் ஸாலிஹீன்) 

நற்குணத்திற்கு இஸ்லாத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மனிதர்களை அதிகம் சுவர்க்கத்தில் நுழைவிக்கக்கூடியது நற்குணமாகும்.

மறுமையின் தராசியில் அதிகம் எடையையும், இரவெல்லாம் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பவரின் அந்தஸ்தின் அளவைக்கூட அது பெற்றுத்தந்து விடுகின்றது. 

இப்படிப்பட்ட சிறப்புமிக்க நற்பண்புகளை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

وعن عائشة رضي الله عنها قالت : ما كان أحد أحسن خلقاً من رسول الله صلى الله عليه وسلم ما دعاه أحد من أصحابه ولا من أهل بيته إلا قال : لبيك، فلذلك أنزل الله عز وجل : وإنك لعلى خلق عظيم.

நபி {ஸல்} அவர்களை விட நற்குணத்தால் சிறந்த  மனிதர் எவருமில்லை. நபி ஸல் அவர்களை தமது தோழர்களிலோ, தமது குடும்பத்தார்களிலோ யாராவது அழைத்தால் இதோ! இருக்கிறேன். என்று உடனே பதிலளிப்பார்கள். ஆகவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்கலம் சூராவின் (68) நபியே! நீர் மேலான நற்குணத்தின் மீது அமையப் பெற்றுள்ளீர்கள்! 4- ம் வசனத்தை இறக்கியருளினான்.

நன்னடத்தையும், நற்குணமும் இல்லாமல் எவ்வளவு உயர்ந்த தத்துவங்களைச் சொன்னாலும் அது மக்களிடையே எடுபடாது மேலும், பயன்பாடுகளையும் தராது. ஆகவே தான் பெருமானார் ஸல் அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மாநபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முந்தைய வாழ்வை அல்லாஹ் ஆதாரமாக்கினான்.

قُل لَّوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُم بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ

உங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேனே (ஆகவே நான் கூறுவது உண்மைதான் என்பதை) விளங்க மாட்டீர்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக! ( அல்-குர்ஆன் 10: 16 )

நபித்துவத்திற்கு முந்தைய நபியின் வாழ்வில் நற்குணங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. ஆகவே தான் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைக் கொண்டு அந்த மக்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

நற்குணத்தை வலியுறுத்திய நபி (ஸல்) அவர்கள் அதற்கு இலக்கணமாகவும் அழகிய முன்மாதிரியாகவும் வாழ்ந்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

எல்லா காலத்திலும், எல்லா மக்களிடமும், எல்லா நிலையிலும் அவர்கள் நற்குணத்தின் நாயகராகத் திகழ்ந்தார்கள்.

அல்லாஹ் விரும்பும் நற்குணம்....

حدثنا أبو منصور محمد بن القاسم العتكي ، 

ثنا أبو عبد الله محمد بن أحمد بن أنس القرشي ،

ثنا عبد الله بن بكر السهمي ، أنبأ عباد بن شيبة الحبطي ، عن سعيد بن أنس ، عن أنس بن مالك رضي الله عنه ، قال : بينا رسول الله صلى الله عليه وسلم جالس إذ رأيناه ضحك حتى بدت ثناياه ، فقال له عمر : ما أضحكك يا رسول الله بأبي أنت وأمي ؟ قال : « رجلان من أمتي جثيا بين يدي رب العزة ، فقال أحدهما : يا رب خذ لي مظلمتي من أخي ، فقال الله تبارك وتعالى للطالب : فكيف تصنع بأخيك ولم يبق من حسناته شيء ؟ قال : يا رب فليحمل من أوزاري » قال : وفاضت عينا رسول الله صلى الله عليه وسلم بالبكاء ، ثم قال : « إن ذاك اليوم عظيم يحتاج الناس أن يحمل عنهم من أوزارهم ، فقال الله تعالى للطالب : » ارفع بصرك فانظر في الجنان فرفع رأسه ، فقال : يا رب أرى مدائن من ذهب وقصورا من ذهب مكللة باللؤلؤ لأي نبي هذا أو لأي صديق هذا أو لأي شهيد هذا ؟ قال : هذا لمن أعطى الثمن ، قال : يا رب ومن يملك ذلك ؟ قال : أنت تملكه ، قال : بماذا ؟ قال : بعفوك عن أخيك ، قال : يا رب فإني قد عفوت عنه ، قال الله عز وجل : فخذ بيد أخيك فأدخله الجنة « فقال رسول الله صلى الله عليه وسلم عند ذلك : » اتقوا الله وأصلحوا ذات بينكم فإن الله تعالى يصلح بين المسلمين « » أخرجه الحاكم. وقال هذا حديث صحيح الإسناد ولم يخرجاه.

அபூ உமாமா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை எங்களிடையே அமர்ந்திருந்த நபிகளார் {ஸல்} அவர்கள் திடீரென புன்முறுவல் பூத்தார்கள்.

அண்ணலாரின் முன்பற்கள் தெரியுமளவிற்கு புன்முறுவல் பூத்தார்கள். ஒன்றிரண்டு தடவை இது போல் மாநபி புன்னகைத்து பார்த்திருந்த நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய தாய்-தந்தையர் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். எதற்காக தாங்கள் புன்னகைத்தீர்கள்என்று வினவினார்கள்.

சபையிலிருந்த உமர் {ரலி} அவர்களும் என்னுடைய தாயும்-தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். தங்களுடைய சிரிப்பிற்கு காரணம் என்ன அல்லாஹ்வின் தூதரே!?” என வினவினார்கள்.

அதற்கு அண்ணலார் என்னுடைய உம்மத்தைச் சார்ந்த இரண்டு அடியார்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு முன்னால் தங்களுடைய வழக்கை முறையிட்டவாறு அமர்ந்திருக்கின்றார்கள்.

ஒருவர், இன்னொருவர் மீது இறைவா! இவர் என் மீது அநீதம் இழைத்திருக்கிறார். அதற்கான ஈட்டை வாங்கிக் கொடுஎன் முறையிடுகிறார்.

அவரிடம் இருந்து எதை நான் ஈடாக உனக்கு பெற்றுத்தருவது? அவரிடம் தான் நன்மைகள் ஒன்றும் இல்லையே! அப்படி இருந்தால் அல்லவா, நான் அவரிடம் இருந்து உமக்கு பெற்றுத்தர முடியும்என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆனால், அந்த அடியானோ அப்படியென்றால் என்னுடைய குற்றங்களை எடுத்து அவரிடம் சேர்த்து விடுஎன்று முறையிடுகின்றான்.

இதைச் சொல்லும் போதே சுந்தர நபியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அந் நாள் மிகவும் மோசமான நாளாகும். எப்படியாவது, ஏதாவது ஒரு வழியில் தன் பாவச் சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்கமுடியாதா? என ஒவ்வொரு மனிதனும் அலைபாய்வான்என்று கூறினார்கள்.

அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருக்கும் அந்த அடியானைப் பார்த்து, ஓ அடியானே! உன்னுடைய பார்வையை கொஞ்சம் மேலே உயத்திப் பார்என்று அல்லாஹ் கூறினான். அவர் அங்கே முத்துக்களாலும், மாணிக்க கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட சுவனத்து மாளிகையை காண்கிறார்.

அங்கே எல்லா வகையான அருட் கொடைகளும் கொட்டிக் கிடப்பதை கண்டு விட்டு, ஆச்சர்ய மேலிட இறைவா! இது யாருடைய மாளிகை? எனக் கேட்டார்.

இதன் விலையை யார் தருகிறாரோ அவருக்கே இது சொந்தம்என அல்லாஹ் கூறினான்.

இதனுடைய விலையை யாரால் தான் கொடுக்க முடியும்? இதனை வாங்கிட யாரிடம் தான் செல்வம் கொட்டிக்கிடக்கின்றது? என அந்த அடியான் அல்லாஹ்விடம் சொன்னான்.     

அதற்கு அல்லாஹ் உன்னால் கூட அதை விலை கொடுத்து வாங்க முடியும் என்றான்.

 நானா? என்னிடம் எங்கே இருக்கின்றது அவ்வளவு பொன்னும் பொருளும்? என்றான் அந்த அடியான். அப்போது அல்லாஹ் நீ இந்த அடியானை மன்னித்து விட்டால் இந்த மாளிகையை உனக்கு தருகிறேன்என்றான். அப்படியானால் இதோ, இப்போதே நான் அவரை மன்னித்து விடுகிறேன்என்றான் அந்த அடியான்.

அல்லாஹ் தன் கருணையால் அவ்விருவரையுமே சொர்க்கத்தில் நுழையச் செய்தான்என தங்களின் புன்முறுவலுக்கான காரணத்தைக் கூறினார்கள். ( நூல்: ஹாகிம் )

பிறரின் மனதில் கவலையை ஏற்படுத்தும் ஒன்றை கூட விரும்பாத

நபி (ஸல்) நற்குணம்..

عن الصعب بن جثَّامة رضي الله عنه قال: أهديتُ رسولَ الله صلى الله عليه وسلم حمارًا وحشيًّا، فردَّه عليَّ، فلما رأى ما في وجهي قال: ((إنَّا لم نرُدَّه عليك إلا أنَّا حُرُمٌ))؛ متفق عليه.

ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக அளித்தேன், அதை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள் அப்பொழுது என் முகத்திலுள்ள (வருத்தத்தை பார்த்து ஹஜ்ஜிற்காக) நாம் இஹ்ராம் கட்டி இருப்பதால், இதை (வேட்டையாடப்பட்ட காட்டு கழுதையை) ஏற்றுக் கொள்ளாமல் நாம் உம்மிடம் திருப்பிக் கொடுக்கிறோம் என அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

أتى أعرابي إلى النبي، صلى الله عليه وسلم، فأخذ بردائه فجذبه جذبة شديدة، قال أنس رضي الله عنه حتى نظرت إلى صفحة عنق رسول الله، وقد أثرت فيه حاشية الرداء من شدة جبذته، ثم قال: يا محمد مُر لي من مال الله الذي عندك، فالتفت إليه، صلى الله عليه وسلم، فضحك وأمر له بعطاء، وفي رواية أن الأعرابي قال للنبي: «أَعْطِنِي مِنْ مَالِ اللهِ الَّذِي عِنْدَكَ، فإنك لا تعطي من مالك ولا مال أبيك، فَالْتَفَتَ إِلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَحِكَ، ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ».

ஒரு சமயம் ஒருவர் நபி(ஸல்) அவர்களது பிடரி சிவக்க மேலாடையை பிடித்து இழுத்து 'முஹம்மதே! எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களை தருவீராக. உமது செல்வத்திருந்தோ உமது தகப்பனார் செல்வத்திருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று கூறினார். அப்போது இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை தரமாட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியும் மூன்று முறையும் விடமாட்டேன் என்று சொன்னவருக்கு அந்நிலையிலேயே அவர் கேட்டபடி பொருட்களை தர ஆணையிடுகிறார்கள். மக்கள் ஆவேசப்பட்டு அந்த மனிதரை நோக்கி விரைந்த போது அனைவரையும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். ( நூல்: நஸயீ, அபூதாவூத் )

நற்குணம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதையும் நபித்தோழர்கள் அதை எவ்வளவு விரும்பினார்கள் என்பதை பின் வரும் சம்பவத்தில் மூலம் பார்க்கலாம்.

وعن أم الدرداء قالت : قام أبو الدرداء ليلة يصلي فجعل يبكي ويقول : اللهم أحسنت خُلقي فحسن خلقي، حتى أصبح، قلت : يا أبا الدرداء، ما كان دعاؤك منذ الليلة إلا في حسن الخلق؟ فقال : يا أم الدرداء، إن العبد المسلم يحسن خلقه، حتى يدخله حسن خلقه الجنة، ويسيء خلقه، حتى يدخله سوء خلقه النار، والعبد المسلم يغفر له وهو نائم، قلت : يا أبا الدرداء، كيف يغفر له وهو نائم قال: يقوم أخوه من الليل فيجتهد فيدعو الله عز وجل فيستجيب له، ويدعو لأخيه فيستجيب له فيه

உம்முத்தர்தா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: (என் கணவர்) அபுத்தர்தா (ரழி) அவர்கள் இரவில் தொழும்போது அழ ஆரம்பித்தவர்களாக இறைவா என்னுடைய தோற்றத்தை நீ அழகாக்கி விட்டாய். ஆகவே என்னுடைய குணத்தையும் அழகாக்குவாயாகஎன்று காலை நேரம் வரும் வரை கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அப்போது நான் அபுத்தர்தாவே இரவு முழுக்க குறுகிய நற் குணம் பற்றியே நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்களே?” என்று கேட்டேன். அப்போது அபுத்தர்தா(ரழி) அவர்கள் உம்முத்தர்தாவே ஒரு முஸ்லிமான அடியானின் நற்குணம் அழகியதாக இருப்பின் அவனுடைய அழகிய நற்குணத்தால் சுவர்க்கத்தில் அவனை அது புகுத்திவிடும். அவனின் குணம் தீயதாக இருப்பின் அவனுடைய தீய குணம் அவனை நரகில் புகுத்திவிடும்.

ஒரு முஸ்லிமான அடியான் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் அவனுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படும்என்று கூறினார்கள். அபுத்தர்தாவே ஒருவன் தூங்கிக் கொண்டிருக்க அவனுக்கு எவ்வாறு பாவ மன்னிப்பு வழங்கப்படும்என்று நான் கேட்டேன். அவனுடைய சகோதரன் இரவில் நின்று வணங்கி தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறான் அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறான்.

 

மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறான். அவன் விஷயத்திலேயும் அவனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்கிறான். என்று அபுத்தர்தா (ரழி) கூறினார்கள். நூல்: அல்அதபுல் முஃப்ரத் 290)

நற்குணத்திற்கு நபித்தோழர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் குணங்களை நற்குணங்களால் அழகு படுத்துவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment