மன்னிப்பும், நரக விடுதலையும் சுவனத்தின்
திறவுகோல்களாகும்!!
அல்லாஹ்வின்
அளவிலா கருணையினால் ரமலான் மாதத்தின் மத்திய பகுதியின் மக்ஃபிரத்துடைய கடைசி
நாட்களைஅடைந்திருக்கிறோம். இறுதிப் பகுதியான நரக விடுதலையின் நாட்களுக்காக
காத்திருக்கின்றோம்!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அவனால் மன்னிக்கப்பட்ட அடியார்களில் நம்மை சேர்த்தருள்வானாக! நரகின்
வேதனையில் இருந்து நம்மை பாதுகாப்பானாக! நம்மை விடுதலை செய்வானாக!
இனி எஞ்சியுள்ள
நாட்களையும் பூரண உடல் சுகத்துடனும், நிறைவான அமலுடனும் கழிக்க
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தௌவ்ஃபீக் செய்வானாக!ஆமீன்!
நம்முடைய மறுமை
வாழ்வில் நமக்கான பிரத்யேகமான இரண்டு அம்சங்கள் உண்டு. 1. சுவனம். 2.
சுவனத்தில் அல்லாஹ்வின் சந்திப்பு.
இந்த இரண்டும்
நமக்கு இலகுவாக கிடைக்க வேண்டுமானால் அதற்கு நமக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய
மகத்தான மன்னிப்பும்,
நரகத்தில் இருந்து விடுதலையும் வேண்டும்.
இறைவனிடத்தில்
இருந்து இந்த இரண்டையும் பெற வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
அதற்காக உலகத்தில்
வாழும் காலத்தில் நாம் பெரும் கருணையாளனான அல்லாஹ்வின் மன்னிப்பை பெற விரைந்து செயல்
பட வேண்டும். நரகத்தில் வீழ்வதில் இருந்து நம்மையும் நமது குடும்பத்தாரையும்
பாதுகாக்கும் வண்ணம் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
وَسَارِعُوْۤا
اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ
اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
இன்னும் நீங்கள்
உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும்
விரைந்து செல்லுங்கள்;
அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது;
அது பயபக்தி உடையோருக்காகவே தயார் செய்து
வைக்கப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன்: 3: 133 )
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا
النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ
اللَّـهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
முஃமின்களே!
உங்களையும்,
உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்;
அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்;
அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். ( அல்குர்ஆன்: 66: 6 )
நரகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள பின் வரும் இறைவசனமும்
நபி மொழியும்
போதுமானதாகும்.
تَلْفَحُ
وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كٰلِحُوْنَ
اَلَمْ
تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ
قَالُوْا
رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ
(நரக) நெருப்பு அவர்களுடைய
முகங்களை கரிக்கும்;
இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம்
விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
“என்னுடைய வசனங்கள்
உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப்
பொய்ப்பிக்கலானீர்கள்”
(என்று கூறப்படும்)
“எங்கள் இறைவனே! எங்களை
எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய
கூட்டத்தினர் ஆகிவிட்டோம்”
என்று அவர்கள் கூறுவார்கள்.
رَبَّنَاۤ
اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ
قَالَ اخْسَــٴُــوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ
”எங்கள் இறைவனே! நீ எங்களை
இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய)
முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)(அதற்கவன்) ”அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!”
என்று கூறுவான். ( அல்குர்ஆன் : 23: 104-108 )
عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه
وسلم: «يقول الله تبارك وتعالى لأهون أهل النار عذابًا لو كانت لك الدنيا وما
فيها، أكنت مفتديًا بها؟ فيقول: نعم فيقول أردت منك أهون من هذا، » (رواه البخاري
ومسلم).
நாளை மறுமையில்
நரகவாதிகளிலிருந்து ஒருவரை கொண்டு வரப்பட்டு, இந்த பூமியிலுள்ளவைகள்
உனக்காக இருந்து (நரகத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்காக) அதை நீ அற்பணமாக கொடுப்பாயா? என்று கேட்கப்படும்,
அதற்கு அவன் ஆம் எனக்கூறுவான். அப்போது அல்லாஹ் "நான்
உன்னிடமிருந்து இதை விட இலகுவானதையே விரும்பினேன்" எனக்கூறுவான். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
நரகத்தை எப்படி அஞ்சாமல் இருக்க முடியும்?
وكان
ميسرة يقول إذا أوى إلى فراشه: "ليت أمي لم تلدني، فقالت له أمه حين سمعته
مرة من المرات: يا ميسرة! إن الله قد أحسن إليك، هداك إلى الإسلام؟ قال: أجل. ولكن
الله تعالى بيَّن الله لنا أنا واردون على النار، ولم يبين لنا أنا صادرون منها"
قال
الله عزوجل:- وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا
مَّقْضِيًّا (سورة مريم)
மைஸிரா (ரலி)
அவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் போதெல்லாம் "என் தாய் என்னை
பெற்றெடுக்காமல் இருந்திருக்க வேண்டுமே! என்று கூறுவார்களாம்.
இதை தொடர்ந்து பல
நாட்களாக கேட்டு வந்த அவர்களின் தாயார் ஒரு நாள், மகனே! அல்லாஹ் உனக்கு அழகான வாழ்வை தந்திருக்கிறானே! .
ஹிதாயத்தின் வாசலை திறந்து உன்னை நேர்வழியில் நடத்திக் கொண்டு இருக்கிறானே!" என்று கூறியபோது,
அதற்கு மைஸிரா (ரலி) தாயே! உண்மைதான்.ஆனால்
அல்லாஹ் நரகத்தை கடந்து தான் சுவனம் செல்ல வேண்டும் கூறுகிறானே? அதை நான் கடந்து (சுவனம் சென்று) விடுவேனா? அதை நினைத்தால் எனக்கு
பயமாக உள்ளது என்று கூறி விட்டு மர்யம் அத்தியாயத்தின் 71 -வது வசனத்தை ஓதினார்கள்.
وَإِن
مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
"மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின்
முடிவான தீர்மானமாகும். ( அல்குர்ஆன்: 19: 71 )
روى
الإمام أحمد أن رَسُول اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجِبْرِيلَ عَلَيْهِ
السَّلاَمُ : " مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكاً قَطُّ ؟ قَالَ : مَا
ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ
நபி ஸல் அவர்கள், மிஃராஜ் பயணத்தின் போது கண்ட காட்சி ஒன்றைக் கூறி ஜிப்ரயீல் (அலை) விளக்கம்
ஜிப்ரயீலே! ஏன் மீக்காயீல் (அலை) அவர்கள் சிரிக்கவே இல்லை? என்று கேட்டார்கள். அப்போது, "நரகம்
படைக்கப்பட்டதிலிருந்து மீக்காயீல் (அலை) அவர்கள் சிரிக்கவே இல்லை என்று ஜிப்ரயீல் (அலை)
அவர்கள் பதில் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )
ஓய்வும் கிடையாது, விடுமுறையும் கிடையாது..
وَقَالَ
الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ
عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ رُسُلُكُمْ
بِالْبَيِّنٰتِ ؕ قَالُوْا بَلٰى ؕ قَالُوْا فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓـؤُا
الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ
“உங்கள் இறைவனிடம்
பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்” என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள். “உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் “ஆம்’
என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே
பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை)
மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும். ( அல்குர்ஆன்: 40: 49, 50)
وَنَادَوْا
يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ
மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்”
என்று அழைத்து, உமது இறைவன் எங்களை
முடித்து விடட்டுமே!”
என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். ( அல்குர்ஆன்: 43: 77 )
வாழ்வும் இல்லை, மரணமும் இல்லை…
اِنَّهٗ
مَنْ يَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَۚ لَا يَمُوْتُ فِيْهَا
وَ لَا يَحْيٰى
தனது இறைவனிடம்
குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும்
மாட்டான். ( அல்குர்ஆன்: 20:
74 )
الَّذِىْ
يَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ
அவனே பெரும்
நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். (
அல்குர்ஆன்: 87:
12,13 )
எந்த ஈடும் கொடுத்து ஈடேற்றம் பெற முடியாது!
يَوَدُّ
الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ
وَ
صَاحِبَتِهٖ وَاَخِيْهِ وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِ
وَمَنْ
فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ يُنْجِيْهِ كَلَّا اِنَّهَا لَظٰىۙ
அவர்கள் நேருக்கு
நேர் காண்பார்கள்,
(ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்,தன் மனைவியையும்,
தன் சகோதரனையும், அவனை அரவணைத்துக்
கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும், இன்னும் பூமியிலுள்ள
அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). அவ்வாறு
(ஆவது) இல்லை;
ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும்
நெருப்பாகும். ( அல்குர்ஆன்: 70: 11 - 15 )
நரகம் யாருக்காக?
நாம் மிக இலகுவாக
கூறுவது நரகம் இறை நிராகரிப்பாளர்களுக்கானது. அவர்களுக்காகவே அது
படைக்கப்பட்டுள்ளது என்று.
وَاتَّقُوا
النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَۚ
தவிர (நரக)
நெருப்பிற்கு அஞ்சுங்கள்,
அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது. (
அல்குர்ஆன்: 3:
131 )
ஷைத்தானுக்காகவும், ஷைத்தானைப் பின் பற்றுபவர்களுக்காகவும் நரகத்தைப் படைத்துள்ளான் என்று.
لَاَمْلَئَنَّ
جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِيْنَ
“நிச்சயமாக, உன்னைக் கொண்டும்,
அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும்
நரகத்தை நான் நிரப்புவேன்”
(என்றான்) ( அல்குர்ஆன்: 38: 85 )
ஆம்! இதற்கு நாம்
மேலும் பல்வேறு வசனங்களை எளிதாக மேற்கோள் காட்டி விடுகிறோம்.
تَكَادُ
تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا
أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ ,قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا
وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ
كَبِيرٍ, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي
أَصْحَابِ السَّعِيرِ , فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ
السَّعِيرِ
அ(ந்த நரகமான)து
(நிராகரிப்பாளர்கள் மீதுள்ள) கோபத்தால் (தனித் தனியாக பிரிந்து) தெரித்துவிட
நெருங்கிவிடும். அதில் (பாவிகளின்) ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன்
காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள். ,
அவர்கள்
கூறுவார்கள்: “ஏன் வரவில்லை,
திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!)
நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை என்று நாங்கள் கூறினோம்.”, இன்னும்,
அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் செவி ஏற்பவர்களாக; அல்லது,
சிந்தித்து புரிபவர்களாக இருந்திருந்தால் (இன்று)
நரகவாசிகளில் ஆகி இருக்க மாட்டோம்.” ஆக, அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, நரகவாசிகளுக்குக் கேடுதான்!
( அல்குர்ஆன்: 67 : 8, 9, 10, 11 )
ஆனால் உண்மை
நிலவரம் அதுவல்ல. இதே அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் ஈமான் கொண்டு பாவம் செய்த அடியார்களும்
நரகத்தில் வேதனை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
1.
அறவே தொழாதவர்களும், தொழுகையைப் பேணித்
தொழாதவர்களும்....
தொழுகை விஷயத்தில்
மிகவும் அலட்சியமாக இருந்தவர்கள் நரகத்தில் வேதனை செய்யப்படுவார்கள் என்று
அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது.
فَخَلَفَ
مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ
يَلْقَوْنَ غَيًّا
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான
மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள்
(நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். ( அல்குர்ஆன்: 19: 59 )
عَنِ
الْمُجْرِمِيْنَۙ مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ
قَالُوْا
لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ وَلَمْ نَكُ نُطْعِمُ
الْمِسْكِيْنَۙ
குற்றவாளிகளைக்
குறித்து-“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. “அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ( அல்குர்ஆன்: 74: 41 - 44 )
2.
ஜகாத் வழங்க மறுத்தவர்களுக்கு...
وَالَّذِيْنَ
يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِ
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ
இன்னும் எவர்கள்
பொன்னையும்,
வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின்
பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!)
அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
يَّوْمَ
يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ
وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا
مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ
(நபியே! அவர்களுக்கு நீர்
அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக
நெருப்பிலிட்டுக் காய்ச்சி,
அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து
வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
(
அல்குர்ஆன்: 9: 34, 35 )
3.
பதிவேடுகள் முழுக்க பாவங்களால் நிரப்பப்பட்டவர்களுக்கு....
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى
لَمْ أُوتَ كِتَٰبِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَٰلَيْتَهَا كَانَتِ
ٱلْقَاضِيَةَ مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ خُذُوهُ
فَغُلُّوهُ ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِى سِلْسِلَةٍۢ ذَرْعُهَا سَبْعُونَ
ذِرَاعًۭا فَٱسْلُكُوهُ
ஆனால் எவனுடைய
பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
அன்றியும்,
என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
(நான் இறந்த போதே) இது
முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? என் செல்வம் எனக்குப்
பயன்படவில்லையே!
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).
(அப்போது) அவனைப்
பிடித்து,
பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள். பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர், எழுபது முழ நீளமுள்ள
சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).( அல்குர்ஆன்: 69:
25 - 32 )
4.
நரகத்தின் முதல் தீர்ப்பு வழங்கப்படும் மூன்று மனிதர்கள் யார்?
حَدَّثَنَا
يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِىُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ
حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ حَدَّثَنِى يُونُسُ بْنُ يُوسُفَ عَنْ سُلَيْمَانَ بْنِ
يَسَارٍ قَالَ تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِى هُرَيْرَةَ فَقَالَ لَهُ نَاتِلُ
أَهْلِ الشَّامِ أَيُّهَا الشَّيْخُ حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ
اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله
عليه وسلم- يَقُولُ « إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ
عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا
قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ. قَالَ
كَذَبْتَ وَلَكِنَّكَ قَاتَلْتَ لأَنْ يُقَالَ جَرِىءٌ. فَقَدْ قِيلَ. ثُمَّ
أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِىَ فِى النَّارِ وَرَجُلٌ
تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ
نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ تَعَلَّمْتُ الْعِلْمَ
وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ. قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ
تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ. وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ
قَارِئٌ. فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِىَ
فِى النَّارِ. وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ
الْمَالِ كُلِّهِ فَأُتِىَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا
عَمِلْتَ فِيهَا قَالَ مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا
إِلاَّ أَنْفَقْتُ فِيهَا لَكَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ
هُوَ جَوَادٌ. فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ
أُلْقِىَ فِى النَّارِ ».
இறுதித் தீர்ப்பு
நாளில், மக்களில் முதன் முதலில் (இறைவழியில் உயிர் துறந்த) ஷஹீதுக்கே தீர்ப்பு
வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ்
அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள்
தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் "நான்
கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான்.
அதற்கு அந்த மனிதர்,
"நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று
கூறப்படுவதற்காகவே போரிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது'' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர்
முகங்குப்புற விழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.
பின்னர்
(இஸ்லாமிய) அறிவைக் கற்று,
அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து
நிறுத்தப்படுவார்.தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் அல்லாஹ் சொல்லிக்
காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம்
வல்ல அல்லாஹ் அவரிடம் "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர் "நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக்
கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி
வந்தேன்''
என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய்
சொல்கிறாய்,
அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே
இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக் கூடியவர்கள் என்று (மக்களால்)
பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்)
பேசப்பட்டு விட்டது''
என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை
அம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.
அதன் பின்னர்
செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத்
தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும்
அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர் "நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட
வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய். வாரி வாரி
வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு
செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது'' எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை
முகங்குப்புற விழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
5. வாழும் காலத்தில் மக்களால் தீய பண்புகளால் வாழ்வை அமைத்துக்
கொண்டவர்....
حَدَّثَنَا
آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ:
سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: مَرُّوا
بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ» ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا
شَرًّا، فَقَالَ: «وَجَبَتْ» فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ
عَنْهُ: مَا وَجَبَتْ؟ قَالَ: «هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا، فَوَجَبَتْ
لَهُ الجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا، فَوَجَبَتْ لَهُ النَّارُ،
أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ»
ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப்
பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது''
என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து
சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
"உறுதியாகி விட்டது'' எனக் கூறினார்கள்.
உமர் (ரலி) "எது உறுதியாகி விட்டது?'' எனக் கேட்டதும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் விஷயத்தில் நல்லதைக்
கூறிப் புகழ்ந்தீர்கள்;
எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில்
தீயதைக் கூறினீர்கள்;
எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில்
அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
( நூல்: புகாரி )
அல்குர்ஆனில்
இருந்தும் நபிமொழிகளில் இருந்தும் ஏராளமான சான்றுகளை நாம் பட்டியல் இடலாம்.
ஆனாலும்,
நமது அலட்சியமான சிந்தனையில் இருந்து, ஆபத்தான எண்ணங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள இவைகள் போதுமானதாகும்.
நரக விடுதலையின் முதல் படி பிரார்த்தனையே!
وَمِنْهُمْ
مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
இன்னும் அவர்களில்
சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத்
தந்தருள்வாயாக;
மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
اُولٰٓٮِٕكَ
لَهُمْ نَصِيْبٌ مِّمَّا كَسَبُوْا وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ
இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள்
சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். ( அல்குர்ஆன்: 2: 201, 202 )
மறுமையில் இறைவன்
வாரி வாரி வழங்கும் நற்பேறுகள் அனைத்தையும் பெறுவதற்கு தகுதியானவர்களின் பண்பே நரக
விடுதலையை பிரதானமாகக் கேட்பவர்களே!
இபாதுர் ரஹ்மான் என்று அல்லாஹ் அடையாளப்படுத்தி சிறப்பு படுத்தும்
மேன்மக்களின் பண்பும் நரக விடுதலையை வேண்டுவதே!
وَالَّذِيْنَ
يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ اِنَّ عَذَابَهَا
كَانَ غَرَامًا
“எங்கள் இறைவனே!
எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
اِنَّهَا
سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا
நிச்சயமாக அது
வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
(
அல்குர்ஆன்: 25: 65, 66 )
பிரார்த்தனை செய்பவருக்கு நரகமே அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்யும்!!
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : "
مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثًا قَالَتِ الْجَنَّةُ : اللَّهُمَّ
أَدْخِلْهُ الْجَنَّةَ ، وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ مِنَ النَّارِ ثَلاَثاً
قَالَتِ النَّارُ : اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ " [ رواه أحمد وابن
ماجة بإسناد صحيح
யார் அல்லாஹ்விடம்
மூன்று தடவை சுவனத்தைக் கேட்பாரோ, அல்லாஹ்விடம் "யா
அல்லாஹ்! அந்த அடியாரை நீ சுவனத்தில் நுழைத்துவிடு! என்று சுவனம் அவருக்காக துஆச்
செய்யும்.
மேலும், மூன்று தடவை எவர் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுவாரோ, அல்லாஹ்விடம் "யா அல்லாஹ் அந்த அடியாரை நரகை விட்டும் பாதுகாப்பாயாக! என நரகம் அவருக்காக துஆச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (
நூல்: அஹ்மத் )
இந்த பிரார்த்தனை
உலகோடு முடிந்து விடுமா என்றால், இல்லை. நாளை மறுமையிலும்
மேன்மக்களான நல்லோர்கள் அல்லாஹ்விடம் நரகத்தின் தீங்கிலிந்து காத்திடுமாறு
முறையிடுவார்கள்.
أخرج ابن المبارك وابن أبي شيبة وأحمد في الزهد وعبد بن حميد وابن
المنذر وابن أبي حاتم، عن كعب قال: كنت عند عمر بن الخطاب رضي الله عنه فقال:
خوفنا يا كعب، فقلت: يا أمير المؤمنين، أوليس فيكم كتاب الله وحكمة رسوله؟ قال:
بلى، ولكن خوفنا، قلت: يا أمير المؤمنين، لو وافيت القيامة بعمل سبعين نبياً
لازدريت عملك مما ترى. قال: زدنا. قلت: يا أمير المؤمنين، لو فتح من جهنم قدر منخر
ثور بالمشرق ورجل بالمغرب، لغلا دماغه حتى يسيل من حرّها. قال: زدنا. قلت: يا أمير
المؤمنين، إن جهنم لتزفر زفرة يوم القيامة، لا يبقى ملك مقرب ولا نبي مرسل إلا خر
جاثياً على ركبتيه، حتى أن إبراهيم خليله ليخرّ جاثياً على ركبتيه، فيقول: ربّ
نفسي... نفسي... لا أسألك اليوم إلا نفسي فأطرق عمر ملياً. قلت: يا أمير المؤمنين،
أوليس تجدون هذا في كتاب الله؟ قال: كيف؟ قلت: قول الله في هذه الآية { يوم تأتي
كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون
}.
கஅப் (ரலி)
அவர்கள் கூறினார்கள்: உமர் ரலி அவர்களின் சபையில் இருக்கும் போது, கஅப் (ரலி) அவர்களே! எங்களுக்கு பயத்தை உண்டு பண்ணுகிற உபதேசம்
செய்யுங்களேன்"! என்று சொன்னார்கள்.
அப்போது, நான் "அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களுக்கு குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் நபி மொழியும் ஏற்படுத்தும் பய உணர்வு போதாதா? என்று கேட்டேன்.
அதற்கு, இன்னும் அதிகமாக பய உணர்வை ஏற்படுத்தும் நல்லதொரு உபதேசத்தை செய்வீராக!' என்று கூறினார்கள்.
இன்னும் அதிகமாக
சொல்லுங்கள்! என்று உமர் (ரலி) அவர்கள் கூறிய போது, கஅப் (ரலி) அவர்கள்
"கிழக்கு திசையில் இருக்கும் நரகம் இலேசாக திறக்கப்பட்டால்
அதன் உஷ்ணத்தின் காரணமாக மேற்கில் இருக்கும் மனிதனின் மூளை உருகி வழிந்தோடும்! என்றார்கள்.
அப்போது, உமர் (ரலி) அவர்கள்,
கஅபே! இன்னும் சொல்லுங்கள்! என்று கூறியபோது, நரகம் நாளை மறுமையில் இலேசாக கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது, இறைவனுக்கு நெருக்கமான மலக்கும், இறைத்தூதர்களான
ரஸூல்மார்களும் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்து விடுவார்கள்.
பின்னர், அல்லாஹ்விடம் இந்த நரகத்தின் தீங்குகளை விட்டும் தம்மை காப்பற்றச்சொல்லி
வேண்டுவார்கள். எந்தளவுக்கு என்றால் இப்ராஹீம் (அலை)
அவர்களும் மண்டியிட்டு உட்கார்ந்து அல்லாஹ்வே! நரகத்தின் தீங்கை விட்டும் என்னைக்
காப்பாற்று!" என்றும்,
இந்த நாளில் என் நிலையைத் தவிர வேறெந்த விஷயங்களை நான்
கேட்க முடியும் என்று கூறுவார்கள். இதை கஅப் (ரலி) அவர்கள் கூறியபோது உமர் (ரலி)
அவர்கள் தன் தலையை தொங்கவிட்டுக் கொண்டு நீண்ட நேரம் இருந்தார்கள்.
அப்போது, கஅப் (ரலி) அவர்கள் இது குறித்து அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனில்
நினைவூட்டப்பட்டுள்ளதை நீங்கள் அறிய வில்லையா?" என்று கேட்டு விட்டு,
ஆலு இம்ரான் அத்தியாயத்தின் 30 - வது வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا
عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَّمَا عَمِلَتْ مِنْ سُوْٓءٍ تَوَدُّ لَوْ
اَنَّ بَيْنَهَا وَبَيْنَهٗۤ اَمَدًاۢ بَعِيْدًا
وَيُحَذِّرُكُمُ
اللّٰهُ نَفْسَهٗ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்;
இன்னும், தான் செய்த தீமைகளும்
அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று
விரும்பும்;
அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை
எச்சரிக்கின்றான்;
இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக
இருக்கின்றான். ( நூல்: தஃப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூர் )
ஆகவே, கடைசி பத்து
நாட்களில், குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில், அதிலும் குறிப்பாக லைலத்துல் கத்ர்
இரவில் நரக விடுதலை வேண்டி அதிகமதிகம் பிரார்த்தனை செய்வோம்!
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமக்கும், நமது குடும்பத்தார்கள் அனைவருக்கும் நரக விடுதலையைத் தந்து
சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பேற்றை வழங்கி, அவனைப் பார்த்து ஆனந்தப்படும்
பாக்கியத்தை வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!
நரக பயத்தை கண் முன் காட்டி விட்டீர் தோழரே!
ReplyDeleteஅதை விட்டும் நம் அனைவர்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக
اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا
وقنا عذاب النار 🤲
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
ReplyDelete