Thursday, 5 January 2017

இறைநேசச் செல்வர்கள்!!! நாம் அறிந்ததும்…. அறியாததும்….இறைநேசச் செல்வர்கள்!!!
நாம் அறிந்ததும்…. அறியாததும்….இன்றைய தமிழக முஸ்லிம் சமூகத்தின் முற்றத்தில் ஆட்சேபனைகள், முரண்பாடுகள், விமர்சனங்கள் என ஏராளமான பிரச்சனைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

இஸ்லாத்தை நோக்கி, முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் விமர்சனக் கனைகளில் பெரும்பாலானவைகள் வெளியில் ( மாற்றுக் கொள்கை கொண்டவர்களிடம் ) இருந்து வீசப்பட்டவைகள் அல்ல.

மாறாக, உள்ளுக்குள் இருந்தே சில அதிமேதாவித்தனமான அபத்தமான வாதங்களாலும், சில முற்போக்கு சிந்தனை கொண்ட அறிவு ஜீவிகளாலும் வீசப்பட்டவைகள் ஆகும்.

சுருங்கக்கூற வேண்டுமானால் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தே எறியப்பட்ட கூர்மையான கருங்கற்களாகும்.

சமீபத்திய 30 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம் சமூகத்தின் பலம் குன்றிப் போகவும், பல்வேறு பிரிவுகளாக, இயக்கங்களாக பிரிந்து போகவும் இந்த கூர்மையான கருங்கற்களே அடிப்படைக் காரணம் என்று உறுதியாகக் கூறலாம்.

அதிலும் குறிப்பாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அஸ்திவாரத்தையே உரசிப்பார்க்கும், அதன் வலுவான தூண்களையே நகர்த்திப் பார்க்கும் வேலைகளிலும் அவ்வப்போது சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படியான உரசலில், நகர்த்தலில் மிக முக்கியமான ஒன்று இறைநேசர்கள் எனும் வலிமார்கள் மீதான முரண்பாடுகள், ஆட்சேபனைகள், விமர்சனங்கள் என்றால் அது மிகையும் அல்ல.

எந்த அளவுக்கெனில், காஃபிர்கள், முஷ்ரிக்குகள் நிற்க வைத்து இறைவனுக்கு ஷிர்க் இணை கற்பிக்கின்றனர். இவர்கள் ( அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் ) படுக்க வைத்து ஷிர்க் இணை கற்பிக்கின்றனர் என்று அபத்தமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

வாருங்கள்! இறைநேசச்செல்வர்கள் குறித்தான இஸ்லாமிய வழிகாட்டலை பார்த்து விட்டு வருவோம்!!


إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் நேசர்களாக இருக்கமுடியாது. எனினும், மக்களில் பெரும் பாலானோர் ( இதனை ) புரியாமல் இருக்கிறார்கள் .                                                                              ( அல்குர்ஆன்: 8:34 )


இறைவனும், இறை உதவியும் எங்கே?

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ ()

நபியே! உம்மிடத்தில் என்னைப் பற்றி என் அடியார்கள் இறைவன் எங்கிருக்கின்றான்? என்று கேட்டால், இதோ! மிகச் சமீபமாக நான் இருப்பதாக நீர் கூறிவிடுங்கள்! என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்! (என்பதைத் தெரிவித்து விடுங்கள்!)

                                                      ( அல்குர்ஆன்: 2: 186 )
مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ ()

“அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? என்று அம்மக்கள் கேட்டனர். அப்போது, துன்பத்தில் உழன்ற அம்மக்களுக்கு “இதோ! அல்லாஹ்வுடைய உதவி மிக அண்மையில் இருக்கின்றது” என்று ஆறுதல் சொல்லப்பட்டது”. ( அல்குர்ஆன்: 2: 214 )


இறைநேசமும்… இறைநெருக்கமும் எங்கேயோ அங்கே!!!

   عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் என் நேசரை பகைத்துக் கொள்கின்றாரோ அவருடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன்! எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை.

என் அடியான் உபரியான வழிபாடுகளின் மூலமாக என் பக்கம்  நெருங்கி வந்து கொண்டே இருப்பான். அதன் இறுதியில் அவனை  நான் நேசிப்பேன். அவ்வாறு அவனை  நான் நேசித்து விடும் போது , அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற பார்வையாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம்  நான் அவனுக்கு  பாதுகாப்பு அளிப்பேன்.

ஓர் இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப்போன்று நான் செய்யும் வேறெந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவரோ மரணத்தை வெறுக்கிறார். நானும் (மரணத்தின் மூலம்) அவருக்கு கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்என அல்லாஹ் கூறினான் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                               ( நூல்: புகாரி )

இறைநெருக்கத்தையும், இறை உதவியையும் பெற என்ன செய்ய வேண்டும் என்ற வினாவுக்கு இறை நேசத்தின் மூலமாகத் தான் பெற முடியும்க என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.


1. இறைநேசரின் அந்தஸ்தும்…. மகத்துவமும்…

முதலாவதாக, குர்ஆனில் அல்லாஹ் சிலாகித்துக் கூறும் மூஸா {அலை} அவர்கள் கிள்ரு(அலை) அவர்கள் தொடர்பான வரலாற்றின் ஊடாக இந்த உம்மத்திற்கு ஏராளமான படிப்பினைகளை தருகின்றான். முதல் சந்திப்பின் அறிமுக உரையாடலை படித்துப் பாருங்கள்.

فَوَجَدَا عَبْدًا مِنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا ()قَالَ لَهُ مُوسَى هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا ()

ஆகவே, அவ்விருவரும் ( மூஸா நபியும் அவர்களின் பணியாளரும் ) நம் அடியார்களில் ஓர் அடியாரை (கிள்ரை) கண்டார்கள். (அவர் எத்தகையவர் என்றால்) நமக்கு ( சொந்தமான ) அருளை அவருக்கு அளித்து இருந்தோம். மேலும் நம்முடைய ஞானத்தையும் நாம் அவருக்கு கற்றுத் தந்திருந்தோம்.

மூஸா {அலை} அவரிடம் உமக்கு கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீர் எனக்கு கற்று கொடுப்பதற்காக நான் உங்களை பின் தொடரட்டுமா?” என்று கேட்டார்.

                                                    ( அல்குர்ஆன்: 18:65, 66 )

கிள்ரு {அலை} அவர்கள் இறைத்தூதரா? அல்லது இறைநேசரா? என்ற சர்ச்சை அறிஞர் பெருமக்களிடம் இன்றும் தொடர்கின்றது. ஹிள்ரு அவர்கள்  இறைநேசர் என்பது தான் பெரும்பாலானோரின் கருத்துமாகும்.

வேதம் அருளப்பட்ட, ரப்போடு உரையாடும் பாக்கியம் பெற்ற மூஸா {அலை}  அவர்கள் இறைவனின் ஞானத்தைப் பெற்றிட ஓர் இறைநேசரிடம் “உங்களைப் பின் தொடரட்டுமா? என்று கேட்கிற அந்த ஒரு கேள்வி ஒன்றே இறைநேசர்களின் அந்தஸ்தை விளங்கப் போதுமானதாகும்.


2. இறைநேசர்களுடனான  தொடர்பின் முக்கியத்துவமும்... அதன் வலிமையும்....

ஓர் இறைநம்பிக்கையாளன் தன்னுடைய வாழ்வியல் கண்ணோட்டத்தை அழகுற வடிவமைப்பதற்கு அதிகம் கடமைப் பட்டிருக்கின்றான்.

அந்த வடிவமைப்பில் அவன் கொள்கிற தோழமையின் பங்கு என்பது மகத்தானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.

இறைநம்பிக்கையும், இறையச்சமும் தான் இறைநேசத்தின் (விலாயத்தின்) அடையாளமாக குர்ஆன் கூறுகின்றது.

எனவே, அத்தகைய அம்சங்களைப் பெற்றவர்களான இறைநேசர்களின் வாழ்வியலோடு தொடர்பை ஏற்படுத்தி, இறையச்ச நிலையை நாமும் அடைவதுதான் ஒரு முஃமினுடைய வாழ்வின் முக்கிய பகுதியாகும்.  

ஆகவே,  இறைநேசர்களின் வாழ்வியலோடு தொடர்பு கொள்வதென்பதும், தோழமை கொள்வதென்பதும் வாழ்வில் மிகமிக அவசியம் ஆகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ ()

”இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்! மேலும், வாய்மையாளர்களுடன் ( தோழமை கொண்டு ) இருங்கள்”. ( அல்குர்ஆன்: 9: 119 ) என்னும் திருவசனம் வலியுறுத்துகிறது.

فعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ نَبِيَّ اللَّهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ: (كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَاهِبٍ فَأَتَاهُ فَقَالَ إِنَّهُ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟ فَقَالَ: لَا. فَقَتَلَهُ فَكَمَّلَ بِهِ مِائَةً. ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فَدُلَّ عَلَى رَجُلٍ عَالِمٍ فَقَالَ: إِنَّهُ قَتَلَ مِائَةَ نَفْسٍ فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟ فَقَالَ: نَعَمْ وَمَنْ يَحُولُ بَيْنَهُ وَبَيْنَ التَّوْبَةِ, انْطَلِقْ إِلَى أَرْضِ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا أُنَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدْ اللَّهَ مَعَهُمْ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ فَإِنَّهَا أَرْضُ سَوْءٍ. فَانْطَلَقَ حَتَّى إِذَا نَصَفَ الطَّرِيقَ أَتَاهُ الْمَوْتُ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ, فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ: جَاءَ تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ, وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ. فَأَتَاهُمْ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ. فَقَالَ: قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ فَإِلَى أَيَّتِهِمَا كَانَ أَدْنَى فَهُوَ لَهُ, فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ فَقَبَضَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்: பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்றவர். பிறகு ( தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று ) விசாரித்தபடி, '(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார்.

அந்தப் பாதிரியார், 'கிடைக்காது" என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, ( மீண்டும் மனம் வருந்தி ) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், '(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!" என்று அவருக்குக் கூறினார்.

அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில் மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. ( மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையை நோக்கி சாய்த்துக் கொண்டவாறே  இறந்து விட்டார்.

அப்போது, இறையருளைச் சுமந்து பூமிக்கு வருகை தரும் வானவர்களும், இறை தண்டனைகளை சுமந்து பூமிக்கு வருகை தரும் வானவர்களும் அவர் விஷயத்தில் ( அவரை யார் அழைத்துச் செல்வது என்று ) தர்கித்துக் கொண்டனர்.

உடனே, இறைவன் அதை ( அவர் செல்லவிருந்த ஊரை ) நோக்கி, 'நீ நெருங்கி வா!" என்று உத்திரவிட்டான். இதை ( அவர் வசித்து வந்த ஊரை )  நோக்கி, 'நீ தூரமாகிப்போ!" என்று உத்திரவிட்டான். ( அவ்வாறே நெருங்கியும், தூரமாகியும் சென்றது. )

பிறகு, 'அவ்விரண்டு ஊருக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்" என்று ( வானவர்களுக்குக் ) கட்டளை பிறப்பித்தான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு ( அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே ) ஒரு சாண் அளவிற்கு அவர் ( உடைய உடல் ) சமீபமாக இருந்தது.

எனவே, இதன் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் பாவ மன்னிப்பை வழங்கினான்என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்"

நூறு கொலைகளைச் செய்த ஒருவர் நல்லடியார்களின் தொடர்பை முழுமையாக பெறவில்லை. எனினும், இறை மன்னிப்பை ஆதரவு வைத்து இறைநேசர்களின் தொடர்பில் இருக்க ஆசை கொண்டார், மரணம் அவரைத் தழுவிய போதும் அல்லாஹ் அவரின் மீது கருணை மழைப் பொழிந்து அவருக்கு பாவமன்னிப்பை வழங்கினான்.

யாஅல்லாஹ்! உன் உதவியைப் பெற்றுத் தருகிற, உன் நெருக்கத்திற்கு உதவுகிற உன் மீதான நேசத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவாயாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

இன்ஷா அல்லாஹ்... இறை நேசர்களைப் பற்றியுண்டான தொடர் அடுத்த வாரமும் தொடரும்....