Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Thursday 2 December 2021

The History Repeating Itself…வரலாறு என்பது நிச்சயம் ஒரு நாள் ( முன்பு போல ) திரும்ப வரும்!!

 

The History Repeating Itself…

வரலாறு என்பது நிச்சயம் ஒரு நாள் ( முன்பு போல ) திரும்ப வரும்!!


இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் இந்த தேசத்தில் எங்கும் எப்போதும் தாக்கப்படலாம், காவல்துறையால் கைது செய்யப்படலாம், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படலாம், பசுக்குண்டர்களால் கொல்லப்படலாம், ராம் பக்தர்களால் தாக்கப்படலாம், முஸ்லிம்களின் அடையாளங்கள் மாற்றப்படலாம், அழிக்கப்படலாம், பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம், வீடுகளும், கடைகளும், நிறுவனங்களும் சூறையாடப்படலாம், முஸ்லிம்களின் சட்டங்கள் நிராகரிக்கப்படலாம், லவ்ஜிஹாதி, தீவிரவாதி, தேசவிரோதி என பெயர் சூட்டி அழைக்கப்படலாம், தேவை ஏற்பட்டால் சட்டமியற்றி நாட்டை விட்டே வெளியேற்றப்படலாம் எனும் சூழல் தற்போது அதிகரித்து வருகின்றது.

அதற்கு முன்னோட்டமாக .பி, திரிபுரா, அஸ்ஸாம், ஜார்கண்ட், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள், கலவரங்கள், அடக்குமுறைகள், கைது படலங்கள், கும்பல் படுகொலைகள் என பெருகி வருவதை பார்க்க முடிகின்றது.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் சங்கப்பரிவாரக் கூட்டங்களால் தீட்டப்பட்டு சன்னம் சன்னமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதை நாம் அனுபவித்து வருகின்றோம்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் அடையவில்லை என்று சொல்ல முடியாது. பாபர் மசூதி இடிப்பு கலவரம், கோவை கலவரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பெயரால் நடைபெறும் பிரச்சினை என பல்வேறு பாதிப்புகளை நாம் அடைந்திருக்கின்றோம்.

கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக செய்யாத குற்றத்திற்காக சிறையிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விட்ட அப்பாவி முஸ்லிம்களின் கேள்விக்குறியான வாழ்க்கைச் சூழலை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களில் நாள்தோரும் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர் கொண்டு வீதிகளிலும், சாலைகளிலும் ஷாஹீன்பாக்குகள் அமைத்து போராடும் சூழ்நிலைக்கு இந்திய முஸ்லிம் சமூகம் தள்ளப்படுவது தவிர்க்க முடியாது என்றால் அது மிகையல்ல.

எனவே, தற்போதைய சூழலை எதிர் கொள்ளவும், அடுத்த தலைமுறையின் இருப்பை உறுதி செய்யவும் களம் அமைத்து, தடம் பதிக்க வேண்டிய கடமையும், கடப்பாடும் நமக்கு இருக்கிறது.

ஏனெனில், முஸ்லிமாக இருந்தால் மட்டுமே போதுமானது அந்த முஸ்லிம் அதிகாரத்தில் இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி, சாமானியனாக இருந்தாலும் சரி, சாதனை படைத்தவனாக இருந்தாலும் சரி சங்கப்பரிவாரங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனும் கட்டமைப்பை உறுவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

 

பாபர் மசூதியைத் தொடர்ந்து

1992 –க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி என்பது இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக ஆகிவிட்டது.

பாபரி மஸ்ஜிதை இடித்த கொடூரமான காட்சியை மனங்களில் சுமந்து, வீதிகளில் போராடி, நீதிமன்றங்களின் படியேறி இன்று அந்த இறை ஆலயத்தை இழந்து நிற்கின்றோம்.

அந்த ரணம் ஆறுவதற்கும் முன்பாக இப்போது அடுத்தஇடிப்புக்குதயாராகி விட்டன சங்கப்பரிவார கும்பல்கள்.

 முகலாய மன்னர் அவுரங்கசீப், 17-ம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறு கூறுகிற ஷா(யி)ஹி ஈத்கா மசூதி தான்  கிருஷ்ண ஜென்ம பூமி என்று பிரச்சினையை கிளப்பி எதிர் வருகிற டிசம்பர் 6 ம் தேதி மதுராவின் ஷா(யி)ஹி மசூதியினுள் கிருஷ்ணர் சிலை வைக்கப் போவதாக மதுராவின் நாராயணி சேனா, அகில பாரதிய இந்து மகாசபா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. 

தனால், மதுராவில் அரசு நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.யோத்தியில் ராமர் பிறந்த இடத்திலிருந்த கோயிலை முகலாயப் பேரரசர் பாபர் இடித்து விட்டு அங்கு மசூதி கட்டியதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்து தற்போது ராமர் கோவில் கட்டியது போன்று முகலாய மன்னர் அவுரங்கசீப் இதற்கு முன் அங்கிருந்த பழமையான கோயிலை இடித்துவிட்டு அதன் பாதி நிலத்தில் ஷா(யி)ஹி ஈத்கா மசூதியைக் கட்டியதாக வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க, பகவான் கிருஷ்ண விராஜ்மன் சார்பில் மதுரா நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ண விராஜ்மன் சார்பில் லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி மற்றும் ஏழு பேர் சேர்ந்து மனு தாக்கல் செய்துள்ளார்கள். உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம், ஷாயி ஈத்கா மசூதி நிர்வாக அறக்கட்டளை ஆகியவை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

ரஞ்சனா அக்னி ஹோத்ரி தனது மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 1658ம் ஆண்டு முதல் 1707ம் ஆண்டு வரை முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. கடந்த 1669 - 70ம் ஆண்டுகளில் அவுரங்கசீப்பின் உத்தரவுபடி அவரது படையினர், மதுராவில் உள்ள கேசவ தேவ் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதியை கட்டினர். மசூதி அமைந்துள்ள இடம் பகவான் கிருஷ்ண விராஜ்மனுக்கு சொந்தமானது. அந்த ஆக்கிரமிப்பு மசூதியை அகற்ற வேண்டும்.

மதுராவின் கத்ரா கேசவ் தேவ் பகுதியின் ஒவ்வொரு அங்குல நிலமும் இந்துக்களின் புனித பூமியாகும். கிருஷ்ண ஜென்ம பூமியின் 13.37 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர வேண்டும். மேலும், 1973 ஜூலை மாதம் சிவில் நீதிபதி மதுராவில் நிறைவேற்றிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஞ்சனா அக்னி ஹோத்ரி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரி சங்கர் ஜெயின், விஷ்ணு சங்கர் ஆகியோர் மதுரா நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பாபர் மசூதி வழக்கில் நீதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கிருஷ்ணஜென்ம பூமி என்ற பெயரில் தற்போதுள்ள ஷா(யி)ஹி மசூதியை ஒப்படைக்க வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் ஒப்புக் கொண்டதே மற்றொரு இருண்ட காலத்தை நோக்கி இந்தியா திரும்புகின்றதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்' என, கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த2020ஆக., 5ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதே, 'உத்தர பிரதேசம் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியையும் மீட்க வேண்டும்' என, இந்து அமைப்புகள் குரல் எழுப்பின.

இதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில், 'கிருஷ்ண ஜென்ம பூமி நிர் மாண் நியாஸ்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 80 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்த காலகட்டத்தில், ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அயோத்தி விவகாரத்தைத் தவிர்த்துவிட்டு, `1947-ல் இருந்த வழிபாட்டுத்தலங்களில் எந்த மாறுதலையும் செய்யக் கூடாதுஎன்பது அந்தச் சட்டம். அந்தச் சட்டத்தின்படி, இப்போது இருக்கும் வழிபாட்டுத்தலங்களின் கட்டமைப்பு எதையும் மாற்ற வேண்டும் என்று போக முடியாது. இந்தச் சட்டம் இருக்கும் வரை, இவர்களால் காசி மற்றும் மதுரா மீது கைவைக்க முடியாது. ராமர் கோயில் கட்டுமான வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டு, அதன் பிறகு இந்தச் சட்டத்தைக் காலிசெய்துவிடும் வேலையும் நடக்கலாம்என்கிற அச்சம் நமக்கில்லாமல் இல்லை.

 

பாராபங்கி மசூதி இடிப்பு

பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் முதன் முதலாக முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மசூதியே பாராபங்கி கரீப் நவாஸ் மசூதியாகும்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாராபங்கியின் ராம் ஸனேஹி காட் தாலுகா அலுவலகம் அருகில் கரீப் நவாஸ் மசூதி இருந்தது. சுமார் 100 வருடங்கள் பழமையானது எனக் கூறப்படும் இந்த மசூதி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டதாக கூறி கடந்த மார்ச் 15-ம் (2021) தேதி, மசூதியின் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கான பதில் கிடைக்காத நிலையில் பாராபங்கியின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று ராம் ஸனேஹி காட் தாலுகாவின் அரசு நிர்வாகத்தால் மே 17-ல் மசூதி இடிக்கப்பட்டது.

நோட்டீஸ் வந்ததும் பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசல் இடிக்கப்படும் அச்ச நிலையை சுட்டிக்காட்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதன் மீதான விசாரணையின் போது மே 31 வரை மசூதி இடிக்கப்படக்கூடாது, அங்கிருந்து யாரும் வெளியேற்றப்படக்கூடாது, பள்ளிவாசல் பாதுகாக்கப்பட வேண்டும் என ஏப்ரல் 24 –ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி பள்ளிவாசல் இடிக்கப்பட்டது.

1959 முதல் பள்ளிவாசல் கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு இருப்பதையும், பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்திலிருந்தே ஆறு தசாப்தங்களாக இருந்து வரும் பழமையான பள்ளிவாசல் எனவும், மேலும், உ.பி.யின் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான (சொத்துப்பட்டியலில் இடம் பெற்ற) நிலத்தில் பள்ளிவாசல் இருப்பதாகவும் ஆவணங்களை உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பித்த பின்னர், அந்த ஆவணங்களை ஏற்க மறுத்து உள்ளூர் நிர்வாகம் மே 17 –ல் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கியது.

இச்சூழலில் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும், அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சினையை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கவனத்துக்கு உத்தர பிரதேச வஃக்பு வாரியம், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் உபியின் எதிர்கட்சிகள் மற்றும் சமாஜ்வாதி கட்சி கொண்டு சென்றன.

இதைத்தொடர்ந்து உத்தர பிரதேச அரசு சார்பில் மசூதி இடிப்பு குறித்து ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட இக்குழுவிற்கு மாநில சிறுபான்மை நலத்துறை சிறப்பு செயலாளரான ஷிவாகாந்த் துவேதி தலைமை வகிக்கிறார். இதே துறையின் லக்னோ மற்றும் அயோத்யா மாவட்ட அலுவலகத்தின் துணைஇயக்குநர்கள் இருவர் அதன் உறுப்பினர்களாக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, இடிக்கப்படுவதற்கு முன்பாக மசூதியின் போலி ஆவணங்களுடன் (உண்மையான ஆவணத்தை) உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யமுயன்றதாகப் புகார் எழுந்தது.

இதற்கானப் புகாரை பாராபங்கிகாவல்துறையிடம் அம்மாவட்டத்தின் சிறுபான்மை நலத்துறை அதிகாரி அளித்திருந்தார். இதில் மசூதியின் 7 நிர்வாகிகள் மற்றும் வஃக்பு வாரிய அலுவலக ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்த செய்தியை இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் அப்போது மறைத்து விட்டன. லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் எனும் தினசரிப் பத்திரிக்கையே முதலில் செய்தி வெளியிட்டது. இதன் பின்னரே இந்து போன்ற முண்ணனி பத்திரிக்கைகள் இந்தச் செய்தியை வெளியிட்டன.

சங்கப்பரிவாரங்களின் கைகளில் காசி ஞானவாபி பள்ளிவாசல் உட்பட 1000 பள்ளிவாசல்களின் பட்டியல் இருக்கின்றது. டெல்லியில் நடந்த கலவரத்தின் போது  டெல்லி மேற்கு தொகுதியின் பாஜக எம்பி பர்வேஸ் வர்மா ”டெல்லியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு நிலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இடிக்கப்படும்” என்று கூறினார். மேலும், டெல்லி கலவரத்தின் போது பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. கடந்த மாதம் திரிபுராவில் நடைபெற்ற கலவரத்தின் போதும் பள்ளிவாசல்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.

 

எதிர்வரும் காலங்களில் பள்ளிவாசல்கள் இடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால் முஸ்லிம் சமூகம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் முஸ்லிம் சமூகத்திடம் இருக்கின்றதா?

 

கும்பல் படுகொலை...

மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறியும், ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் எனக் கூறச் சொல்லியும், லவ் ஜிஹாதின் பெயராலும் முஸ்லிம்கள் கும்பல் படுகொலை செய்யும் போக்கு வடமாநிலங்களில் அதிகரித்து இருக்கின்றது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (human rights watch) எனும் அமைப்பும், NDTV செய்திச் சேனலும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 2015 மே முதல் 2018 டிசம்பர் வரை இந்தியாவில் 12 மாநிலங்களில் 112 கும்பல் தாக்குதல்கள் (Lynching) நடைபெற்றுள்ளன. 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36 பேர் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ( நன்றி: பிபிசி 16/08/2019, )

கும்பல் கொலை குறித்து புள்ளிவிவரங்கள் எதுவும் தேசியக் குற்ற ஆவணக்காப்பகத்தில் இல்லை என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் பதிலளித்துள்ளார்.

2018 –ல் ஒரே மாதத்தில் மட்டும் 28 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். ( நன்றி: விகடன், 15/08/2018 )

2014 மார்ச் முதல் 2019 வரை ஜார்க்கண்ட்டில் 18 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அகிலேஷ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் உபியில் 2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை முஸ்லிம்கள் மீது 11 தீவிர குற்றச் செயல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதுவே, யோகியின் தற்போதைய ஆட்சி காலத்தில் 2021 –ல் 24 ஆக உயர்ந்துள்ளன. நாட்டிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடைபெறும் முதல் மாநிலமாக உபியே இருக்கின்றது. ( நன்றி: பிபிசி, 7/11/2021 )

2018 -ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுகும்பல் கொலைகளுக்கு என்று தனியான சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான தண்டனை நாடாளுமன்றத்தால் விவாதிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட வேண்டும்என கும்பல் கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தனர். மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து ஆலோசிக்க அமைச்சர் குழுவொன்றை நியமித்தது ஆனாலும் இன்று வரை அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ( நன்றி: தினமணி, 28/06/2019 )

அதிக கும்பல் கொலைகள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக அல்லது மாட்டுக்கறி சாப்பிட்டதாக அல்லது மாட்டை அறுப்பதற்காக அழைத்துச் சென்றதாக கூறியே பசுக்குண்டர்கள் கொலை செய்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மாட்டின் மீது பக்தி இருப்பதாக சொல்லும் சங்கப்பரிவாரங்களும், அதை ஆதரிக்கும் மத்திய அரசும் வகையாக ஒன்றை மறைக்கின்றார்கள்.

 

ஆம்! உலகத்தில் உள்ளவர்கள் சாப்பிடும் மாட்டுக்கறியில் 20 சதவீதம் இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதியாகின்றது. மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்று கூட முஸ்லிம்களுக்கு சொந்தமானது இல்லை.

2012 –ல் மாட்டுக்கறி ஏற்றுமதியில் 5 –வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசில், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. 2014 – 15 ல் மாட்டுக்கறி ஏற்றுமதி 14,75,540 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக உயர்ந்த ஏற்றுமதியாகும். மாட்டிறைச்சிக்காக  முஹம்மது அக்லாக் கொல்லப்பட்ட 2015 –ம் ஆண்டில் தான் இந்தியாவின் மாட்டுக்கறி ஏற்றுமதி வருமானம் 29,282 கோடியை எட்டியது. 2016 –ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1,850.000 மெட்ரிக் டன்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. 2026 வரை 1.93 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஐ. நாவின் உணவு மற்றும் விவசாயக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ( நன்றி: கீற்று, 15/07/2019 )

உண்மையில் மாட்டுக்கறியை தடை செய்ய வேண்டும், மாடுகளை பாதுகாக்க வேண்டும், மாடு தான் கோமாதா, மாடு தான் கடவுள் என்ற அழுத்தமான நம்பிக்கை எல்லாம் அவர்களுக்கு கிடையாது. முஸ்லிம்களை கொல்ல வேண்டும். கும்பல் கும்பலாக சேர்ந்து போய் கொல்ல வேண்டும் அதற்கு ஒரு காரணம் வேண்டும் அதுவும் கடவுளின் பெயரால் அரங்கேற்ற வேண்டும் இது தான் சங்கப்பரிவாரங்களின் அடிப்படை நோக்கம்.

இல்லையென்றால் தங்களது கடவுளை வெட்டிக் கூறு போட்டு, அழகழகான அட்டைப் பெட்டிகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி கல்லா கட்டுகின்ற இவர்களின் பக்தி போலித்தனமானது.

 

அதிகாரம் பறிப்பு, பயங்கரவாதப் பட்டம், சிறைவாசம் அல்லது கொலை

1.   டாக்டர் கஃபீல் கான் 

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.68 லட்சம் கொடுக்காத காரணத்தால்தான், ஆக்சிஜனுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டதாக அந்த மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு டாக்டர் கஃபீல் கான் குற்றம்சாட்டினார்.

ஆனால், மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிட்டியோ, பணியில் கவனக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி டாக்டர் கஃபீல் கானை அந்தப் பிரிவிலிருந்து நீக்கியதோடு 2017, ஆகஸ்ட் 22-ம் தேதி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது.

அதோடு மட்டுமல்லாமல், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி கஃபீல் கான் கைதும் செய்யப்பட்டார். கஃபீல் கானுடன் மொத்தம் எட்டுப் பேர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் ஏழு பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில் கஃபீல் கான் மட்டும் பணியில் சேர்க்கப்படாமல் ஒன்பது மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதையடுத்து, மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியபோது மீண்டும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த பிறகு கொரோனா காலத்தில் தன் ஜாமீனை ரத்து செய்தால் மக்களுக்கு சேவை செய்யத் தயாராக இருப்பதாக கஃபீல் கான் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அரசு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவில்லை. ஏற்கெனவே, சஸ்பெண்ட் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், 2019-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி அரசு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததற்காக மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கஃபீல் கான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவுக்குத் தடைவிதித்தது. மற்றொரு புறம், கஃபீல் கானின் கவனக்குறைவால்தான் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்ததாக விசாரணைக் கமிட்டி தெரிவித்தது. கஃபீல் கான் மீது கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளை விசாரணை கமிட்டி ரத்து செய்திருந்தது.

மேலும், கஃபீல் கான் தொடர்ந்த வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், `நான்கு ஆண்டுகளாக ஏன் கஃபீல் கானை தொடர்ந்து சஸ்பெண்டில் வைத்திருக்கிறீர்கள்!' என்று அரசுக்குக் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணும்விதமாக கஃபீல் கானை மாநில அரசு, பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.

அரசின் இந்த உத்தரவு தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் கஃபீல் கான், ``அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் நிச்சயம் வழக்கு தொடர்வேன். இதற்கு முன்பு அரசின் எட்டு விசாரணைகளில் நான் நிரபராதி என்று கூறி விடுவிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

2.   ராபியா சைஃபி

டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராபியா சைஃபி (21). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த மாதம் 27-ம் திகதி பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கொலை செய்தனர்.

சம்பவத்தின் அன்று ராபியா வீட்டுக்கு வராததால் குடும்பத்தார் இரவு 10 மணி அளவில், ராபியாவின் அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, ஒரு வழக்கு சம்பந்தமாக, ராபியா உயரதிகாரியுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஆறுதல் கூறியுள்ளார்.

இதனால், நிம்மதியடைந்த குடும்பத்தினர், ராபியா வந்துவிடுவார் எனக் காத்திருந்துள்ளனர். ஆனால், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த இரண்டு பொலிசார் ராபியாவின் உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர்.

ஒரு கணம் என்ன நடந்தது எனப் பிடிபடாமல் இருந்த அவரின் பெற்றோர், பின்னர் கதறித் துடித்து அழுதுள்ளனர். என்ன நடந்தது? ராபியாவுக்கு என்ன ஆனது? எனத் தெரியாமல் அடையாளம் காட்டச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

ராபியாவின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில், ராபியா வன்புணர்வு செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், ராபியாவின் அண்ணன் மோனிஸ் சைஃபி வெளியிட்ட காணொளிப் பதிவில், என் தங்கையின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவளின் வாய் வழியாகச் சென்ற கத்தி கழுத்து வழியாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அவளின் மார்பகங்கள் அறுத்து வீசப்பட்டிருக்கின்றன. என் தங்கச்சியைப் பற்றி நானே இப்படிச் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே என கண் கலங்கினார்.

 

ராபியாவின் தந்தை கூறுகையில், என் மகள் ஒருமுறை, தான் பணியாற்றும் அலுவலகத்தில், ஒரு ரகசிய அறை இருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இப்படி, அந்த அறைக்கு லஞ்சப் பணமாக தினமும் 4 லட்சம் வரை வரும் காட்சியை தான் கண்டதாகவும் கூறினார். இந்த நிலையில்தான், அவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். திருமண உறவு, ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ரகசியப் பணவறை, காவல்துறையின் அலட்சியம் போன்றவை இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.  

 

ஒன்று இவர்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கிற முஸ்லிம் அதிகாரிகளை, கல்வியாளர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி அவர்களின் அதிகாரத்தை, பணியை பிடுங்கி வெளியே தள்ளி விடுகின்றார்கள். அல்லது பொய்யான ஆதாரங்களையும், ஆவணங்களையும் காட்டி நீதியை குழி தோண்டி புதைத்து விடுகின்றார்கள்.

 

மேற்கூறிய டாக்டர் கஃபீல் கான் மற்றும் சிவில் ஆஃபீஸர் ராபியா சைஃபி ஆகியோர் விஷயத்தில் இப்படி நடந்து கொண்டதை நாம் பார்க்க முடிகின்றது.

 

எனவே, எதிர்காலத் தலைமுறையினரை இந்த தேசத்தில் நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழச் செய்ய வேண்டிய பொறுப்பு நிகழ்கால முஸ்லிம்களாகிய நம் மீது கடமையாகும்.

அதற்கான முன்னெடுப்புகளையும், திட்டமிடல்களையும், முயற்சிகளையும் ஒருங்கிணைந்த ஒரு சமுதாயமாக நாம் மேற்கொள்ள வேண்டும்.

 

1.   இறைநம்பிக்கையில் உறுதியோடு இருப்போம்!

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

“இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் துணிவை இழந்து விட வேண்டாம். கவலையுறவும் வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கையில் உண்மையாக இருப்பீர்களாயின் நீங்கள் தான் (வெற்றி பெறுவீர்கள் - எதிரிகளை வீழ்த்தி ) மேலோங்குவீர்கள்”. ( அல்குர்ஆன்: 3: 139 )

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

“இறைநம்பிக்கை கொண்டோருக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகி விட்டது”. ( அல்குர்ஆன்: 30: 47 )

وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ

“இன்னும் கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும்”. ( அல்குர்ஆன்: 63: 8 )

2.   வீழ்கிற போதெல்லாம் விருட்சமாக எழுந்து நிற்போம்!!

 

الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ (172) الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173)

“அவர்கள் எத்தகையோரென்றால் (போரில்) தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும், அல்லாஹ்வுடையவும், அவனுடைய தூதருடையவும் அழைப்பை ஏற்று மீண்டும் போருக்குச் சென்றனர். அவர்களில் நன்மைகள் செய்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்களுக்கு மகத்தான கூலி உண்டு.

மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் சில மனிதர்கள் அவர்களை நோக்கி “நிச்சயமாக! எதிரிகள் உங்களுக்கு எதிராக அணி திரண்டிருக்கின்றனர். எனவே, அவர்களை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! என்று கூறினர். இது இறைநம்பிக்கையாளர்களாகிய அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையையே அதிகப்படுத்தியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்! ”பொறுப்பேற்பவர்களில் அவன் மிக நல்லவன்” என்றும் கூறினார்கள்”. ( அல்குர்ஆன்: 3: 172, 173 )

قال أهل المغازي ما حاصله‏:‏ إن النبي صلى الله عليه وسلم نادي في الناس، وندبهم إلى المسير إلى لقاء العدو، وذلك صباح الغد من معركة أحد، أي يوم الأحد الثامن من شهر شوال سنة 3 هـ، وقال‏:‏ "‏‏لا يخرج معنا إلا من شهد القتال‏"، فقال له عبد الله بن أبي‏:‏ أركب معك‏؟‏ قال‏:‏ ‏‏‏لا‏‏، واستجاب له المسلمون على ما بهم من الجرح الشديد، والخوف المزيد، وقالوا‏:‏ سمعاً وطاعة‏.‏

كما قال تعالى: {الَّذِينَ اسْتَجَابُواْ لِلّهِ وَالرَّسُولِ مِن بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُواْ مِنْهُمْ وَاتَّقَواْ أَجْرٌ عَظِيمٌ} [آل عمران: 172].

ولقد استأذنه جابر بن عبد الله رضي الله عنه، وقال‏:‏ يا رسول الله، إني أحب ألا تشهد مشهداً إلا كنت معك، وإنما خلفني أبي على بناته فائذن لي أسير معك، فأذن له‏.‏ وسار رسول الله صلى الله عليه وسلم والمسلمون معه حتى بلغوا حمراء الأسد، على بعد ثمانية أميال من المدينة، فعسكروا هناك‏.‏

وهناك أقبل مَعْبَد بن أبي معبد الخزاعي إلى رسول الله صلى الله عليه وسلم فأسلم، ويقال‏:‏ بل كان على شركه، ولكنه كان ناصحاً لرسول الله صلى الله عليه وسلم لما كان بين خزاعة وبني هاشم من الحلف، فقال‏:‏ يا محمد، أما والله لقد عز علينا ما أصابك في أصحابك، ولوددنا أن الله عافاك‏.‏ فأمره رسول الله صلى الله عليه وسلم أن يلحق أبا سفيان فَيُخَذِّلَه‏.‏

ولم يكن ما خافه رسول الله صلى الله عليه وسلم من تفكير المشركين في العودة إلى المدينة إلا حقاً، فإنهم لما نزلوا بالروحاء على بعد ستة وثلاثين ميلاً من المدينة تلاوموا فيما بينهم، قال بعضهم لبعض‏:‏لم تصنعوا شيئاً، أصبتم شوكتهم وحدهم، ثم تركتموهم، وقد بقي منهم رءوس يجمعون لكم، فارجعوا حتى نستأصل شأفتهم‏.

 

ஹிஜ்ரி 3 ஷவ்வால் 8, ஞாயிறு இரவு உஹுதிலிருந்து திரும்பிய பின் களைப்பும் அசதியும் எவ்வளவுதான் அதிகமாக இருந்தும் முஸ்லிம்கள் பாதூகாப்புடனே அன்றிரவை கழித்தனர். அதாவது, மதீனாவின் தெருக்களிலும், அதன் வாயில்களிலும் வீரர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் பாதுகாப்பிலும் ஒரு பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். எத்திசையிலிருந்தும் எதிரிகள் மூலம் ஆபத்து நிகழலாம் என்று அவர்கள் சந்தேகப்பட்டதால் இவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்தனர்.

ஹம்ராவுல்அஸத் போர்

நபி(ஸல்) அவர்கள் நிலைமையை யோசித்தவாறே அன்றிரவைக் கழித்தார்கள். போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என குறைஷிகள் சிந்திக்கத் தொடங்கினால், அதற்காக கைசேதம் அடைந்து மதீனாவின் மீது இரண்டாவது முறை போர் தொடுக்க திரும்பி வரலாம் என்று நபியவர்கள் யோசித்தார்கள். எனவே, எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்று மதீனாவின் எல்லைகளை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது:

உஹுத் போர் முடிந்து அடுத்த நாள் காலை, அதாவது ஹிஜ்ரி 3, ஷவ்வால் 8 ஞாயிற்றுக் கிழமை காலை, நபி(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்திப்பதற்கு முஸ்லிம்கள் ஆயத்தமாக இருக்க வேண்டுமெனக் கூறினார்கள். மேலும், உஹுத் போரில் கலந்தவர்கள்தான் தங்களுடன் வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நானும் வருகிறேன் என்றான். நபியவர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயம், களைப்பு எதையும் பொருட்படுத்தாமல் நபியவர்களின் அழைப்புக்கு அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டோம். உங்களது கட்டளையை ஏற்றுக் கொண்டோம்என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) எனும் தோழர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கலந்து கொள்ளும் அனைத்து போரிலும் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், எனது தந்தை உஹுத் போருக்கு செல்லும் போது எனது சகோதரிகளின் பாதுகாப்புக்காக என்னை விட்டுச் சென்றார்கள். அதனால்தான் நான் தங்கினேன். எனவே, எனக்கு இப்போது உங்களுடன் போரில் கலந்து கொள்ள அனுமதி அளியுங்கள்என்று கூறவே நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிலிருந்து 8 மைல்கள் தூரமுள்ள ஹம்ராவுல் அஸத்என்ற இடத்திற்கு வந்து முகாமிட்டார்கள். அங்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த மஅபத் இப்னு அபூமஅபத்என்பவர் நபியவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார். (சிலர் அவர் இணைவைப்பவராகத்தான் இருந்தார். இருப்பினும் குஜாஆ மற்றும் ஹாஷிம் ஆகிய இரு கிளையினருக்கும் இருந்த நட்பின் காரணமாக நபியவர்களிடம் வந்தார் என்று கூறுகின்றனர். ஆக) அவர் நபியவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆனையாக! உமது தோழர்களுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ் உங்களுக்க சுகம் அளிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஏதாவது உங்களுக்கு செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் நீ அபூ ஸுஃப்யானிடம் சென்று அவரை எங்களை விட்டும் திருப்பிவிடுஎன்றார்கள்.

எதிரிகள் மதீனாவிற்குக் திரும்ப வரவேண்டுமென யோசிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பயந்தது உண்மையாகவே நடந்தது. எதிரிகள் மதீனாவிற்கு 36 மைல்கள் தொலைவிலுள்ள ரவ்ஹாஎன்ற இடத்தை அடைந்த போது தங்களுக்குள் ஒருவர் மற்றவரை பழித்துக் கொண்டனர். சிலர் சிலரைப் பார்த்து நீங்கள் என்ன செய்தீர்கள்; ஒன்றுமே செய்யவில்லை; அவர்களில் சில வீரர்களைத்தான் கொன்றுள்ளீர்கள்; அவர்களின் தலைவர்கள் மீதமிருக்கிறார்கள்; அவர்கள் உங்களுடன் போர் செய்ய மக்களை அழைத்து வரலாம்; திரும்புங்கள்; நாம் அவர்களிடம் சென்று அவர்களது ஆற்றல் அனைத்தையும் அடியோடு அழித்து வருவோம்என்றனர்.

இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பாரின் வலிமையையும் ஆற்றலையும் சரியாக ஒப்பிட்டு பார்க்காதவர்கள்தான் அவ்வாறு ஆலோசனை சொல்லி இருப்பார்கள். ஆகவேதான், உண்மை நிலையை புரிந்த அவர்களின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவனான ஸஃப்வான் இப்னு உமைய்யா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த எனது கூட்டத்தினரே! அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். உஹுத் போரில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்களைத் தாக்கக்கூடும் என நான் பயப்படுகிறேன்; நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான் கிடைத்துள்ளது. நீங்கள் மீண்டும் மதீனா சென்றால் அவர்கள் வெற்றி பெற்று நீங்கள் தோற்றுவிடுவீர்களோ என் நான் அஞ்சுகிறேன்என்றான். இவனது ஆலோசனையை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மதீனாவிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என முடிவெடுத்து அபூ ஸுஃப்யான் தனது படையோடு கிளம்புவதற்கு ஆயத்தமாகும் போது அபூ ஸுஃப்யானிடம் மஅபத் இப்னு மஅபத் வந்தார். அபூ ஸுஃப்யானுக்கு அவர் முஸ்லிமானது தெரியாது. அவர் மஅபதே! ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றார். அதற்கு மஅபத் ஒரு பெரிய கற்பனையான போரை அபூ ஸுஃப்யானின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். அதாவது அபூ ஸுஃப்யானே! முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மதீனாவை விட்டு புறப்பட்டு விட்டார். நான் இதுவரை பார்திராத ஒரு ராணுவத்துடன் அவர் உன்னைத் தேடி வருகிறார். அவர்கள் உன் மீது நெருப்பாய் பற்றி எரிகிறார்கள். அன்றைய உஹுத் போரில் கலந்து கொள்ளாதவர்கௌல்லாம் அவருடன் சேர்ந்து இப்போது புறப்பட்டுள்ளனர். தாங்கள் நழுவவிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எண்ணி மிகுந்த வருத்தத்துடன் வருகின்றனர். உங்களுக்கு எதிராக அவர்களிடம் இருக்கும் கோபத்தைப் போன்று நான் பார்த்ததே இல்லைஎன்று கூறினார்.

இதைக் கேட்ட அபூ ஸுஃப்யான் உனக்கு நாசம் உண்டாகட்டும். நீ என்ன சொல்கிறாய்?” என்று அதிர்ந்தார். அதற்க்கு அவர்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ இங்கிருந்து அவர்களை நோக்கி பயணித்தால் வெகு விரைவில் அவர்களுடைய குதிரைகளைக் காண்பாய்என்றார். (அல்லது இந்தக் காட்டுக்குப் பின்புறத்திலிருந்து முஸ்லிம்களுடைய படையின் முதல் படை வருவதை நீ பார்க்கப் போகிறாய் என்றார்). அதற்கு அபூ ஸுஃப்யான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களை வேரோடு அழிக்க வேண்டுமென்று நாங்கள் எங்களின் முழு ஆற்றலையும் ஒன்று சேர்த்திருக்கிறோம்என்றார். அதற்க அவ்வாறு நீ செய்யாதே! நான் உனக்கு உனது நன்மையை நாடி இதைக் கூறுகிறேன். நீ திரும்புவதுதான் உனக்கு நல்லதுஎன்றார் மஅபத்.

மஅபத் தந்த தகவலால் எதிரிகளின் நம்பிக்கையும் வீரமும் தளர்ந்து, பயமும் திடுக்கமும் அவர்களை ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தங்களுக்கு ஏற்றமானது என்று கருதினர். இருப்பினும் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக இஸ்லாமிய படைக்கு எதிராக ஒரு பொய் பிரச்சாரப் போரை அபூ ஸுஃப்யான் தூண்டிவிட்டார். அதாவது, மதீனா சென்று கொண்டிருந்த அப்துல் கைஸ் கிளையினர் இவர்களை வழியில் பார்த்த போது அவர்களிடம் நான் கூறும் செய்தியை என் சார்பாக முஹம்மதுக்கு எட்ட வைப்பீர்களானால் நீங்கள் மக்கா வரும் போது உக்காள்கடைத் தெருவில் உங்களின் ஒட்டகம் சுமை தாங்குமளவிற்கு நான் காய்ந்த திராட்சையை தருவேன்என்று அபூ ஸுஃப்யான் கூற அவர்கள் சரிஎன்றனர். முஹம்மதையும் அவரது தோழர்களையும் வேரோடு அழிக்க நாங்கள் முழு ஆற்றலையும் ஒன்று திரட்டி வருகிறோம் என்ற செய்தியை முஹம்மதுக்கு சொல்லிவிடுங்கள்என்று அபூ ஸுஃப்யான் கூறினார்.

அந்த வியாபாரக் கூட்டம் நபி(ஸல்) அவர்களிடமும் நபித்தோழர்களிடமும் வந்து அபூ ஸுஃப்யான் தாங்களிடம் கூறி அனுப்பிய செய்தியைக் கூறினர். அப்போது நபியவர்களும் நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸத் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். இதைப் பற்றித்தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். அல்குர்அன் 3:173-174

ஆனால், இவர்களுடைய பேச்சை நபியவர்களும் முஸ்லிம்களும் பொருட்படுத்தவில்லை. எதிரிகளை எதிர்பார்த்து (ஹிஜ்ரி 3) ஷவ்வால் பிறை 9, 10, 11 திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் ஹம்ராவுல் அஸதில் தங்கியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை பிறை 8ல் ஹம்ராவுல் அஸதிற்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை நாம் முன்பே கூறியிருக்கின்றோம். அப்போது அபூ இஜ்ஜா அல் ஜுமஹி என்பவனை நபியவர்கள் கைது செய்தார்கள். ஏற்கனவே பத்ர் போரில் கைது செய்யப்பட்டிருந்த இவனை நபியவர்கள் அவன் ஏழை, அவனுக்க பெண் பிள்ளைகள் அதிகம் இருக்கின்றனர் என்ற காரணத்தால் அவன் மீது கருணை காட்டி அவனை உரிமையிட்டு தனக்கு எதிராக செயல்படக்கூடாது என்று அவனிடம் ஒப்பந்தம் வாங்கினார்கள். ஆனால், அவன் அந்த ஒப்பந்தத்தை மீறி உஹுத் போரிலும் கலந்து கொண்டதால் நபியவர்கள் அவனை கைது செய்தார்கள்.

அவன் நபியவர்களிடம் முஹம்மதே! என்னை மன்னித்துவிடும். என்மீது உபகாரம் செய். எனது பெண் பிள்ளைகளுக்காக என்னை நீ விட்டுவிடு. நான் இப்போது செய்ததைப் போன்று இனி எப்போதும் செய்ய மாட்டேன் என்று உங்களுக்க வாக்குறுதி தருகிறேன்என்றான். ஆனால், நபியவர்கள் இதற்குப் பின் நீ மக்காவிற்கு சென்று முஹம்மதை இருமுறை நான் ஏமாற்றிவிட்டேன் என்று கூறும் நிலைமை (எனக்கு) ஏற்படக்கூடாது. ஏனெனில் இறைநம்பிக்கையாளன் ஒரு புற்றில் இருமுறை தீண்டப்பட மாட்டான். (அதாவது ஒரு தவறை மறுமுறை செய்யமாட்டார்) என்று கூறிவிட்டு ஜுபைர் அல்லது ஆஸிம் இப்னு ஸாபித்திடம் அவனது தலையை துண்டிக்கக் கூறினார்கள்.

இவ்வாறே எதிரிகளின் ஒற்றர்களில் ஒருவனான முஆவியா இப்னு முகீரா இப்னு அபுல் ஆஸையும் கொன்றுவிட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (இவன் பிற்காலத்தில் வந்த முஸ்லிம் மன்னர் அப்துல் மலிக் இப்னு மர்வானின் தாய்வழி பாட்டனாவான்.)

இதன் விவரமாவது: இணைவைப்பவர்கள் உஹுத் போர் முடிந்து மக்காவிற்கு திரும்புகையில் இவன் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பார்க்க மதீனாவிற்கு வந்தான். உஸ்மான் (ரழி) நபியவர்களிடம் இவனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும்படி கேட்டார்கள். நபியவர்கள் அவனுக்கு பாதுகாப்புக் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் மட்டும் தங்கவேண்டும், அதற்கு மேல் இங்கு தங்கியிருந்தால் கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இஸ்லாமியப் படை மீண்டும் (அல்லது இரண்டாம் முறை) மதினாவில் இருந்து வெளியேறியதற்குப் பின் இவன் மூன்று நாட்களுக்கு மேலாகவும் மதீனாவில் தங்கியிருந்து குறைஷிகளுக்காக உளவு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்லாமியப் படை மதீனாவிற்குத் திரும்ப வருகிறது என்று தெரிந்தவுடன் அவன் மதீனாவிலிருந்து தப்பித்து ஓடினான். அவனைக் கொலை செய்து வரும்படி நபி(ஸல்) ஜைது இப்னு ஹாரிஸா, அம்மார் இப்னு யாசிர் (ரழி) ஆகிய இருவரையும் அனுப்பினார்கள். அவ்விருவரும் அவனைக் கொன்று வந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

3.   சமூகக்கட்டமைப்பை வலிமைப்படுத்துவோம்!


وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ

 

மேலும், உங்களால் இயன்ற அளவுக்கான ஆற்றல்களையும், வலிமைகளையும் பெற்றவர்களாக எப்போதும் தயாராக இருங்கள். தயார் நிலையிலுள்ள குதிரைப்படை களையும் திரட்டி வையுங்கள்!

 ஏனெனில், உங்களின் விரோதியையும், உங்களைப் படைத்த ரப்பின் விரோதியையும்,  இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் எதிர் கொள்வதற்காக வேண்டி. அந்தப்  பகைவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆனால், அல்லாஹ் அவர்களை நன்கறிவான்”.                                     ( அல்குர்ஆன்: 8: 60 )

இந்த இறைவசனத்தில் பகைவர்களையும், விரோதிகளையும் எதிர் கொள்வதற்கு வலிமை அவசியம் என்பதையும், முஸ்லிம் சமூகம் எதிர் கொள்வதற்காக எப்போதும்  தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இந்த இறைவசனம் ஜிஹாதை மட்டும் வலியுறுத்தவில்லை. மாறாக, ஷைத்தான் நமக்கு விரோதியாவான் அவனை எதிர் கொள்ள சில போது நமக்கு ஆன்மீக வலிமை  அவசியம். அறியாமை நமக்கு விரோதியாகும் அதை எதிர் கொள்ள சில போது  அறிவாற்றல் அவசியம். ஏழ்மையும், வறுமையும் நமக்கு விரோதியாகும் அவைகளை  எதிர் கொள்ள சில போது மன வலிமையும், சில போது பொருளாதார பலமும் அவசியம். கொடுங்கோன்மை நிறைந்த ஆட்சியாளார்களை எதிர் கொள்ள சில போது அரசியல்  வலிமை அவசியம். அதிகார வரம்பை நமக்கெதிராக சுழற்றும் அதிகாரிகளுக்கு எதிராக  சில போது அதிகார பலம் அவசியம் இப்படியாக நாம் சக்தி பெற்று நம்முடைய  சமூகத்தையும் நாம் சக்தி படுத்த கடமைப் பட்டிருக்கின்றோம்.

ஒரு முஃமினிடம் ஏதேனும் ஒரு ஆற்றல் இடம் பெறுகிற போது அதைக் கொண்டு சன்மார்க்கத்தையும், சமூகத்தையும் சக்திபடுத்துவது, பலப்படுத்துவது அவர் மீது தார்மீக கடமையாகும்.

1.   வீரம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் துணை கொண்டு…


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

 

பலகீனமான இறைநம்பிக்கையாளரை விட சக்தியும், வலிமையும் நிறைந்த  இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும், அல்லாஹ்விற்கு அதிக விருப்பமானவரும்  ஆவார் என மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக  அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: திர்மிதி )

உங்களை அழித்துவிடுவோம் , பூண்டோடு மிதித்து விடுவோம் என்ற மிரட்டல்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியைக் காணப் பொறுக்காத கொடியோர் கூட்டம் முஸ்லிம்களது குரல் வளையை நெரித்து அமுக்கப்பார்த்தனர். அப்பொழுது தான் பின்வரும் வசனம் இறங்கியது.

''நபியே! முஃமின்களிடம் [எதிர்த்துப்] போராடும்படி தூண்டுவீர்! உங்களில் பொறுமையுள்ள 20 பேர் இருந்தால், அவர்களில் 200 பேரை வென்று விடுவர் , உங்களில் 100 பேர் இருந்தால், அவர்களில் 1000 பேரை வெல்வர்''.
அல்குர்ஆன் ..8.65]

இந்த வசனத்தை இந்தியாவில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.  இப்பொழுது இந்தியாவில் முஸ்லிம்களை எதிர்க்கும் கூட்டம் ஒரு சொர்ப்பக் கூட்டம்.  அவர்களை நாம் அல்லாஹ்வின் உதவியால், அருளால் நாம் அவர்களை வென்று விடலாம்.

ஆனால், துணிவோடும், வீரத்தோடும் எதிர்த்து நின்றோமானால் நிச்சயம் நாம் அவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து நாம் பாதுகாப்பைப் பெறுவோம்.

كانت لها موعظة لأولادها قبيل معركة القادسية قالت فيها: "يا بني إنكم أسلمتم وهاجرتم مختارين، والله الذي لا إله غيره إنكم لبنو رجل واحد، كما أنكم بنو امرأة واحدة، ما خنت أباكم ولا فضحت خالكم، ولا هجنت حسبكم ولا غيرت نسبكم. وقد تعلمون ما أعد الله للمسلمين من الثواب الجزيل في حرب الكافرين. واعلموا أن الدار الباقية خير من الدار الفانية يقول الله عزَّ وجل: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ[آل عمران: 200]. فإذا أصبحتم غدًا إن شاء الله سالمين، فاغدوا إلى قتال عدوكم مستبصرين، وبالله على أعدائه مستنصرين. وإذا رأيتم الحرب قد شمرت عن ساقها واضطرمت لظى على سياقها وجللت نارًا على أوراقه، فتيمموا وطيسه، وجالدوا رئيسها عند احتدام خميسها تظفروا بالغنم والكرامة في دار الخلد والمقامة"[6].

فلما وصل إليها نبأ استشهادهم جميعًا قالت: "الحمد لله الذي شرفني بقتلهم وأرجو من ربي أن يجمعني بهم في مستقر رحمته".

 

பெண் கவிஞர் கன்ஸா பிந்த் அம்ர் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது 4 ஆண்மக்களுடன் காதிஸிய்யாப் போரிலே கலந்து கொண்டார்கள். இவரது பொறிபரக்ககும் வீர உரைகளைக் கேட்ட  இவரின் 4 ஆண்மக்களும் களத்திலே குதித்து வீரப் போராடி ஷஹீதானார்கள் என்ற செய்தியை அறிந்ததும் அல்ஹம்துலில்லாஹ்! என் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது. யா அல்லாஹ்! உனது சுவர்க்கத்திலே எங்களை ஒன்று சேர்ப்பாயாக!என்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்து துஆச் செய்தது நமது இதயங்களை எல்லாம் உருகச் செய்கிறது.

عفراء بنت عبيد بن ثعلبة بن عبيد

ابن ثعلبة بن غنم بن مالك بن النجار وأمها الرعاة بنت عدي بن سواد بن مالك بن غنم بن مالك بن النجار تزوجها الحارث بن رفاعة بن الحارث بن سواد بن مالك بن غنم بن مالك بن النجار فولدت له معاذا ومعوذا وعوفا شهدوا بدرا أسلمت عفراء وبايعت رسول الله صلى الله عليه وسلم

 

அஃப்ரா பிந்த் உபைத் அந்நஜ்ஜாரிய்யா ரழியல்லாஹு அன்ஹா தமது மூன்று மக்களுடன் (முஆத், முஅவ்வித், அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹும்) பத்ர் களத்திலே குதித்து மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பத்ர் வெற்றிக்கு உறுதுணையாக நின்றது வரலாற்றிலே அழியாத இயடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. 

எனவே, அடிவாங்கிக் கொண்டும் கொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கும் ஒரு சமூகமாக நாம் இருந்து விடக்கூடாது. துணிச்சலோடு எதிர் கொண்டு நம்மையும், நம் குடும்பத்தையும், நம் சமூகத்தையும் காக்கும் கேடயமாக நாம் வீரத்தோடும், விவேகத்தோடும் செயலாற்ற வேண்டும்.

2.   கல்வி, மற்றும் அதிகாரத்தின் துணை கொண்டு…

 

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول  من رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمان ) رواه مسلم

அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்கவும், அடுத்து நாவால் தடுக்கவும், இவை இரண்டும் இயலா விட்டால் மனதளவில் வெறுத்து விடட்டும்”, இது ஈமானின் பலஹீனமான நிலையாகும்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                               ( நூல்: முஸ்லிம் )

இன்று உலகெங்கிலும் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்ற தீமைகளை, கொலைக் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டுமானால் முஸ்லிம் சமூகம் இந்த நபிமொழியை உற்று நோக்கிட கடமைப் பட்டிருக்கின்றது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும் என அல்லாஹ்வால் ஆணையிடப்பட்ட ஓர் சமூகம் இந்த நிலையைக் கண்டு நபிகளார் {ஸல்} அவர்கள் கூறிய மூன்றாம் நிலையிலேயே நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தீமைகளை தடுக்கும் முதல் இரண்டு நிலைகளில் முஸ்லிம் சமூகம் இருக்குமானால் உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக குற்றங்களை குறைத்து, குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகளை வழங்கி, குற்றங்கள் நிகழா வண்ணம் தடுக்க முடியும்.

ஆம்! கையால் தடுப்பது அல்லது நாவால் தடுப்பது இவ்விரண்டிற்கும் பொருள் தருகிற ஹதீஸ் விரிவுரையாளர்கள் இவ்வாறு விளக்கம் தருகின்றார்கள்.

 

التغيير باليد للقادر عليه

إنكار المنكر بيده كولي الأمر ومن ينوب عنه ممن أعطي صلاحية لذلك،

அதாவது, அதற்கான முழு ஆற்றலையும் ஓர் முஸ்லிம் பெற்றவனாக இருக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி, நிர்வாகம் ( காவல்துறை மற்றும் சட்டத்துறை, நீதித்துறை ) ஆகியவற்றில் இல்லாததே இந்த ஹதீஸை அமல் செய்ய முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2013 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி இந்திய அளவில் 16 லட்சத்து 60 ஆயிரத்து 151 பேர்கள் காவல்துறையில் பணிபுரிகின்றனர். இதில் முஸ்லிம்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேர். இது மொத்த சதவீதத்தில் 6 ஆகும். தமிழகத்தில் 0.76 சதவீத எண்ணிக்கையில் முஸ்லிம்கள் காவல்துறையில் இருக்கின்றனர்.

நீதித்துறையைப் பொறுத்த வரையில் இந்திய அளவில் 7.8 சதவிகித அளவில் தான் முஸ்லிம்களின் பங்களிப்பு இருக்கிறது.

காவல்துறை அதிகாரி எனும் அதிகார வரம்பில் ஓர் முஸ்லிம் இருக்கும் பட்சத்தில், தைரியமாக குற்றவாளிகளை கையால் அதிகாரத்தால் தடுக்க முடியும்.

நீதித்துறையின் அதிகார வரம்பை ஓர் முஸ்லிம் அடைந்திருக்கும் பட்சத்தில் வாயால் தடுக்க முடியும். அதாவது, நீதிபதி எனும் இடத்தில் இருந்து இந்திய அரசுக்கு இஸ்லாமியச் சட்டங்களை பரிந்துரைக்க ஓர் வாய்ப்பும், வழக்கறிஞர் எனும் இடத்தில் இருந்து நேர்மையோடும், வாய்மையோடும் வாதாடி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையும் பெற்றுத்தர இயலும். மேலும், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இயலும்.

மேலும், குர்ஆன், ஸுன்னாவைப் பின் பற்றிய பாக்கியம் கிடைப்பதோடு நிறைவான பொருளாதார வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதில், இன்னொரு நன்மையையும் தன் சமூகத்திற்கு செய்ய இயலும். அதாவது இன்று மேற்கூறிய இரு துறைகளாலும் முஸ்லிம் சமூகம் மிகப் பெரிய அளவிலான இன்னல்களைச் சந்தித்து வருகின்றது.

இந்தியாவில் மொத்தம் உள்ள சிறைச்சாலைகளின் எண்ணிக்கை 1382. மொத்த கைதிகளின் எண்ணிக்கை 3,72,296. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21% ஆகும்.

இந்த 21 % முஸ்லிம் கைதிகள் காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்கள். நாளை நீதிமன்றங்களின் நீதிபதிகள் யாரை வேண்டுமானாலும் எந்த நிரபராதிகளை வேண்டுமானாலும் இவர்கள் சதிகாரர்கள் என்று கூறலாம். மரண தண்டனை தீர்ப்பு வழங்கலாம்.

இன்று சட்டக்கல்வி விஷயத்தில் நம் சமூகத்தின் எண்ணம் தவறாக இருக்கின்றது. பிராமணர்கள் அதிகம் பேர் சட்டக்கல்வி பயின்று பல உயர்நீதி மன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றங்களில் நீதிபதியாக அமர்ந்து நமது இறையில்லம் தொடர்பான வழக்கில் நமக்கு எதிராக தீர்ப்புச் செய்து கொண்டிருக்கின்றனர்.

சிறைச்சாலைகளில் உள்ள 21 சதவிகித முஸ்லிம்களில் மிகுதியானோர் அப்பாவிகள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

அப்பாவியான இவ்விளைஞர்களுக்காக வாதாடி உண்மையை இவ்வுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்கள் அப்பாவிகள் என்று நிருபிப்பதற்கு கூட போதிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் இல்லை.

எனவே, தற்போதைய இளைய தலைமுறையினர்க்கு சட்டம், ஒழுங்கு (காவல்துறை) மற்றும் நீதித்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டக்கல்வி மற்றும் ஐபிஎஸ்  பயில  ஊக்குவித்தும்,  சட்டம் பயின்றவர்கள்,  நீதிபதித் தேர்வுகளில்  கலந்துக்கொள்ள வழிகாட்டுவதும் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் தலையாய  கடமையாகும்.

நிறைவாக…

வரலாற்றை மீட்டெடுப்போம்! வரலாறு படைப்போம்!!

أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُنْتَصِرٌ (44) سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ

“நாங்கள் வெற்றி பெரும் கூட்டம் என்று (இந்த மக்கா நிராகரிப்பாளர்கள்) இவர்கள் கூறிக் கொண்டு இருக்கின்றார்களா?

மிகவிரைவில் இக்கூட்டத்தினர் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் புறமுதுகு காட்டியும் ஓடுவார்கள்”. ( அல்குர்ஆன்: 54: 44,45 )

وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

“அநியாயம் செய்பவர்கள் தாங்கள் எந்த மீளும் தலங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என விரைவில் அறிந்து கொள்வார்கள்”. ( அல்குர்ஆன்: 26: 227 )

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

“நாம் தான் அவர்களிடையே வெற்றி, தோல்வி என நாட்களை மாறி, மாறி வருமாறு செய்கின்றோம்”. ( அல்குர்ஆன்: 3: 140 )

 

மாநபி {ஸல்} அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு வரலாற்றைத் திரும்ப கொண்டு வந்தது போன்று, சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் சிலுவைப்போரை முடிவுக்கு கொண்டு வந்து ஃபலஸ்தீன பூமியை வெற்றி கொண்டு வரலாற்றைத் திரும்ப கொண்டு வந்தது போல நாமும் மீண்டும் ஒரு சுபிட்சமான இந்தியாவை இந்த உலகத்திற்கு கொடுப்போம்!

 

The History Repeating Itself - வரலாறு என்பது நிச்சயம் ஒரு நாள் ( முன்பு போல ) திரும்ப வரும்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!