Showing posts with label Heaven. Show all posts
Showing posts with label Heaven. Show all posts

Thursday 9 December 2021

இவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகர தடை செய்யப்பட்டவர்கள்!!

 

இவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகர தடை செய்யப்பட்டவர்கள்!!

 


 

மரணத்தின் பின்னால் நாம் இரண்டு உலகங்களை சந்திக்க இருக்கின்றோம். ஒரு உலகம் முடிந்து விடும். ஆனால், அந்த உலகத்தில் எவ்வளவு நாள் தங்கி இருப்போம் என்று தெரியாது. ஆம்! அந்த உலகின் பெயர் ஆலமுல் பர்ஸஃக். திரை மறைவு உலகம். மண்ணறை உலகம். இன்னொன்று தீர்ப்பு வழங்கப்படும் மறுமை எனும் உலகம். அந்த உலகத்தில் நாம் இரண்டு இல்லங்களில் ஒன்றை சந்திக்க இருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றொன்று நரகம் இந்த இரண்டில் எதில் நுழைந்தாலும் முடிவென்பதே கிடையாது. நிரந்தரமான வாழ்வுக்குச் சொந்தமானது.

நரகத்தில் நுழைய நாம் பெரிய அளவில் சிரமப்பட தேவை இல்லை. பாவங்கள் செய்தாலே போதும் அங்கே நிரந்தர குடியுரிமை கிடைத்து விடும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நரகத்தில் இருந்து நம் அனைவரையும், உலக முஸ்லிம்களையும் பாதுகாப்பானாக! ஆமீன்!

ஆனால், சுவனத்தை அவ்வளவு எளிதாக, இலகுவாகப் பெற்றுக் கொள்ள இயலாது. அதற்காக பல்வேறு சிரமங்கள், தியாகங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

வணக்க வழிபாடுகள், நல்லறங்கள் புரிய வேண்டும். நற்பண்புகளோடும், நற்குணங்களோடும் வாழ வேண்டும்.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ

உங்களில் போராளிகள், தியாகிகள், சகிப்புத்தன்மை உடையோர் யார் என்பதை அறியாது சுவனத்தில் எளிதாக நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?”                                    ( அல்குர்ஆன்: 3: 142 )

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا (107) خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا

நிச்சயமாக! எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனம் தங்குமிடமாக ஆகிவிட்டது. அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அதை விட்டும் வேறெங்கும் திரும்பிச் செல்வதை தேட (விரும்ப) மாட்டார்கள்”. ( அல்குர்ஆன்: 18: 107, 108 )

சுவனத்தில் நுழைந்த அதிகமான மனிதர்கள் இறையச்சமுடையோராகவும், நற்பண்புகளையும், நற்குணங்களையும் கொண்டவர்களாக நான் இருக்கக் கண்டேன்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                          ( நூல்: திர்மிதீ )

عن النبي ﷺ أنه قال

 حفت النار بالشهوات، وحفت الجنة بالمكاره

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”இன்பங்கள், ஆபாசங்கள் ஆகியவற்றால் நரகம் சூழப்பட்டிருக்கிறது. கஷ்டங்கள், துன்பத் துயரங்கள் ஆகியவற்றால் சுவனம் சூழப்பட்டிருக்கிறது. ( நூல்: புகாரி )

 

மேற்கூறிய இறைவசனமும், நபிமொழியும் சுவனத்தை நோக்கிய பயணத்திற்கு வழி சொல்லக்கூடியதாக இருப்பதை உணர முடிகின்றது.

சுவனம் என்பது

وعن أبي هريرة- رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلّم- قال: (قالَ اللَّهُ عزَّ وجلَّ: أعْدَدْتُ لِعِبادِيَ الصَّالِحِينَ ما لا عَيْنٌ رَأَتْ، ولا أُذُنٌ سَمِعَتْ، ولا خَطَرَ علَى قَلْبِ بَشَرٍ)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் காணாத, எந்தக்காதும் கேட்காத, எவருடைய உள்ளத்திலும் தோன்றாத அருட்கொடைகளை என் நல்லடியார்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன்”. நீங்கள் விரும்பினால் குர்ஆனில் பின்வரும் (32:17-ம்) வசனத்தை நல்லடியார்களுக்காக எத்தனைக் கண்குளிர் இன்பங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

عَنْ سَهْلٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

”சுவனத்தில் ஒரு சாட்டை வைக்கின்ற சிறிதளவு இடம் கூட உலகம் மற்றும் உலகின் பொருட்களை விடச் சிறந்த்தாகும்”  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி)

قال رسول الله - صلى الله عليه وسلم

 ما رأيت مثل النار نام هاربها 

 ولا مثل الجنة نام طالبها "

الترمذي 

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான் நரக நெருப்பை விட பயங்கரமான ஒன்றைப் பார்த்ததில்லை ஆனால், அதனைவிட்டு வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.

நான் சுவனத்தை விட உயர்ந்த ஒன்றைப் பார்த்ததில்லை. ஆனால், அதனை விரும்பக்கூடியவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்”. ( நூல்: திர்மிதி )

وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ

 இன்பம் நிறைந்த சுவனத்தின் வாரிசு தாரர்களில் ஒருவராக என்னையும் ஆக்கிடுவாயாக!” (அல்குர்ஆன்: 26: 85) என இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

என் இறைவா! சுவனத்தில் எனக்கென்று ஒரு மாளிகையை அமைத்திடுவாயாக! ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கொடுமைகளில் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக! ( அல்குர்ஆன்: 66: 11 ) என அன்னை ஆசியா (ரலி) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

எனவே, ஒரு முஃமினாக நாம் சுவனத்தில் பிரவேசிக்க ஆசைப்படுவதோடு அல்லாஹ்விடம் அதை வேண்டியும் நிற்க வேண்டும். நபிமார்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள் வசிக்கும் அந்த சுவனத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் மேலோங்க வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக ஆக்குவானாக!

அந்த சுவனத்தில் பல்வேறு இன்பங்களை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அதை முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்குவான்.

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ

”இறையச்சமுடையோருக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அதன் மகத்துவம் இதுவே - அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குறையாத பாலாறுகளும் குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொணடிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு அனைத்து விதமான கனிவர்க்கங்களும் கிடைக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும். ( அல்குர்ஆன்: 47:15 )

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

”கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்பார்கள்! மேலும் அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும் இதுவே மாபெரும் வெற்றியாகும்!”. ( அல்-குர்ஆன்:9:72 )

 

மேலும், சுவனம் சம்பந்தமாக அல்லாஹ் குர்ஆனில் பல வசனங்கள் மூலம் விரிவாகப் பேசுகிறான். ( பார்க்க: அல்குர்ஆன் : 2:25, 9:20-22, 11:108, 13:24, 15:45-48, 16:30,31,  18:31, 20:75,76, 25 75,76 (இன்னும் 50-க்கும் மேற்பட்ட வசனங்கள் உண்டு)

அந்த சுவனத்தில் அல்லாஹ் பல்வேறு அந்தஸ்துகளை வைத்திருக்கின்றான். அதை அதற்கு தகுதியான முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்குவான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ وَأَقَامَ الصَّلَاةَ وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ هَاجَرَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نُنَبِّئُ النَّاسَ بِذَلِكَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ كُلُّ دَرَجَتَيْنِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ

(متفق عليه)

”யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் யார் நம்பி, தொழுகையையும் நிலைநாட்டி, ரமளான் (மாத) நோன்பையும் நோற்கின்றாரோ அவரை சுவனத்தில் நுழைவிப்பது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். அவர் ஹிஜ்ரத் செய்தாலோ, அல்லது அவர் பிறந்த ஊரில் வாழ்ந்தாலோ (மரணித்தாலோ) எதுவானாலும் சரியே! என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! இதை மக்களுக்கு நாம் அறிவிக்கட்டுமா? எனக் கேட்டனர். நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் (வகுப்புக்கள்) உள்ளன. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்காக அதனை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றில் இரு படித்தரங்களுக்கும் இடையில் உள்ள அளவு வானம், பூமி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட அளவாகும். நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டுகின்றபோது அல்பிர்தௌஸ்என்ற சுவனத்தை வேண்டுங்கள். அது சுவனத்தில் மத்தியும், சுவனத்தில் உயர்வானதுமாகும். அதன் மேல் அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதிலிருந்து சுவனத்தின் நதிகள் பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

கடைசியாக சுவனம் செல்பவருக்கு அல்லாஹ் வழங்கும் சுவனத்தின் அந்தஸ்து..

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: சுவனத்தில் இறுதியாக நுழையும் ஒரு மனிதன் அவன், -ஸிராத்- பாலத்தைக் கடந்து செல்லும் வேளை ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடவை தவழ்ந்தும் செல்லுவான். (வழியில்) நரகத்தின் தீச்சுவாலை அவனை சில போது தீண்டிவிடும். அவன் அந்தப் பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப் பார்த்தவனாக..

تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ



உன்னில் இருந்தும் என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், அவன் முதல், மற்றும் இறுதியாக வந்தவர்கள் எவருக்கும் வழங்காத (பல வெகுமதிகளை) எனக்கு அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான். (முஸ்லிம்).

சுவனவாதி பற்றிய மற்றொரு செய்தியின் தொடரில் ….. ‘அப்போது அவன் முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன் நிழலில் நிழல் பெறவும், அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம் நெருக்கி வைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேறு எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே! நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என வாக்குறுதி செய்ததும் அல்லாஹ் அதை வழங்குவான். பின்னும் அதைவிட அழகான மரம் ஒன்று கொடுக்கப்படுவான். பின்னும் அவன் அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும் கேட்பான், அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுபடுத்திக் கூறும்போது இதன் பின் எதையும் கேட்கமாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்தில் இருந்து ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல்வரை நெருக்கப்படுவான். ….. என்ற நீண்ட ஹதீஸின் தொடரில் மற்றொரு செய்தியும் இடம் பெறுகின்றது.

அப்போது அவன் சுவனவாதிகளின் சப்தத்தை செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னை அதில் நுழைவிப்பாயாக! எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகையும், அதை போன்றதொரு மடங்கும் தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக் கேட்பான்.

 

قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ

அப்போது அந்த சுவனவாதி, நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிகாசம் செய்கின்றாயா? எனக் கேட்பான் எனக் கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சிரித்தார்கள். இதை செவிமடுத்தோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்டபோது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

அந்த சுவனத்தின் மிகப் பிரம்மாண்டமான ஒரு அம்சமும், மகத்தான அருட்கொடையும் தான் சுவனத்தில் இருந்து வீசும் நறுமணம்.

ஏனெனில், சுவனத்தின் நிலப்பரப்பும் சுவனத்தின் மணலும் கஸ்தூரியால் ஆனது. மேலும், சுவனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழகிய பல சோலைகளை அமைத்து வைத்திருக்கின்றான். அங்கிருந்து வீசும் காற்று அந்த நறுமணங்களைச் சுமந்தே வீசும் அந்த நறுமணத்தை இறைநம்பிக்கையாளர்கள் நுகரும் பாக்கியத்தை சுவனத்திற்குள் பிரவேசிக்கும் முன்பாகவே அல்லாஹ் வழங்குவான்.

 

قيل أن تراب الجنة مسكٌ أذفر، أي مسك ذو رائحة شديدة طيبة، ففي الحديث الصحيح أن النبي عليه الصلاة والسلام سأل ابن صياد عن تربة الجنة فقال له درمكة بيضاء مسك أذفر

தன்னை நபியென்று மாநபி {ஸல்} அவர்களிடமே வந்து வாதிட்ட, அரையும், குறையுமாக ஷைத்தானின் துணையுடன் செய்திகளை அறிவித்த இப்னு ஷைய்யாத் என்பவன் சுவர்க்கத்து மண்ணின் நிறம் பற்றியும், அதன் தன்மை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் வினவியபோது தூய்மையான, வெண்ணிற கஸ்தூரிபோன்றது என அவனுக்கு பதில் கூறினார்கள் (முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத்).

عن أنس بن مالك رضي الله عنه قال: كان أبو ذر رضي الله عنه يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال

 ((أدخلت الجنة فإذا فيها جنابذ اللؤلؤ، وإذا ترابها المسك))

புகாரியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில்: மிஃராஜின் போது சுவனத்தில் நான் பிரவேசித்தேன் அங்கு மணல் குவியலைப்போன்ற முத்துக்கள் இருந்தன, அதன் மண் கஸ்தூரியினால் இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அப்படியானால் அதன் நில அமைப்பு வெண்ணிறமான கஸ்தூரியை ஒத்ததாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

قال في (حادي الأرواح  

 (وريح الجنة نوعان: ريح يوجد في الدنيا تشمه الأرواح أحياناً لا يدركه العباد، وريح يدرك بحاسة الشم للأبدان كما تشم روائح الأزهار، وغيرها، وهذا يشترك أهل الجنة في إدراكه في الآخرة من قرب وبعد، وأما في الدنيا فقد يدركه من شاء الله من أنبيائه، ورسله، وهذا الذي وجده أنس بن النضر رضي الله عنه يجوز أن يكون من هذا، وأن يكون من الأول). انتهى.
... الظاهر أنه من الثاني؛ لأنه قوله: (لريح الجنة أجده دون أحد، يشير إلى هذا)، فتأمل

அல்லாமா இப்னுல் கய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய ஹாதில் அர்வாஹ் இலா பிலாதில் அஃப்ராஹ் எனும் நூலில் “சுவனத்தின் நறுமணத்தை நுகர்வதென்பது இரு வகைப்படும். 1.உலகிலே சில நறுமணங்களை ஆன்மாக்கள் மட்டுமே நுகர்ந்ததாக உணரும். இது எல்லா மனிதர்களாலும் உணர்ந்து கொள்ள முடியாது. 2. இன்னும் உலகிலே சில நறுமணங்களை உடல் உறுப்பால் உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக, மலர்களின் நறுமணத்தை நுகர்வதைப்போல. மறுமையில் அல்லாஹ் சுவனவாசிகளுக்கு சமீபமாகவோ அல்லது தூரமாகவோ சுவனத்தின் நறுமணத்தை நுகரும் பாக்கியத்தை வழங்குவான்.

சுவனத்தின் நறுமணத்தை உலகிலும் நுகர முடியுமா? என்று கேட்டால் “அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ( நபிமார்கள், ரஸூல்மார்கள், ஸாலிஹீன்கள் ) வழங்குவான். ஏனெனில், நபித்தோழர் அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் உஹத் யுத்த களத்தில் தமது தோழர் ஸஅத் (ரலி) அவர்களிடத்தில் “ஸஅதே! சுவனத்தின் நறுமணத்தை உஹத் மலையடிவாரத்தில் இருந்து நான் நுகர்ந்தேன்” என்று கூறியவாறு யுத்தகளத்திற்குள் வேகமாக நுழைந்து போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள். இந்த தகவலை ஸஅத் (ரலி) அவர்கள் மாநபி {ஸல்} அவர்களிடம் தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்களின் ஆன்மா தான் சுவனத்தின் நறுமணத்தை நுகர்ந்தது என்று சொல்லலாம்” என இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ( நூல்: ஹாதில் அர்வாஹ் இலா பிலாதில் அஃப்ராஹ் )

والجنة لها رائحة طيبة كأطيب ما تكون الرائحة، ويوجد أثر هذه الرائحة من مسيرة خمسمائة عام، وقيل: من مسيرة مائة عام، وقيل: أقل من ذلك، وقيل: أكثر من ذلك، والروايات كلها صحيحة، فكأن ريح الجنة يشمها من كان من أهلها على حسب عمله، وعلى حسب درجته، فمنهم من يشم رائحة الجنة على مسيرة خمسمائة عام، ومنهم من يشم رائحتها على مسيرة مائة عام، وأربعين عاماً، وغير ذلك والروايات كلها صحيحة، فإذا صحت الروايات وجب العمل بها جميعاً، وهو خير من رد بعضها، أو الحكم عليها بالشذوذ أو النكارة وغير ذلك

மேலும், மறுமை நாளில் சுவனவாசிகள் சுவனத்திற்கு செல்லும் முன்பாக மஹ்ஷர் பெருவெளியிலேயே சுவனத்தின் நறுமணத்தை அவரவர்களின் அமல்களுக்கு தக்கவாறு, அந்தஸ்துகளுக்கு தக்கவாறு நுகர்வார்கள்.

சிலர் 40 ஆண்டு கால நடைபயண தூரத்தில் இருந்தும், இன்னும் சிலர் 70 ஆண்டு கால நடைபயண தூரத்தில், இன்னும் சிலர் 100, இன்னும் சிலர் 500, இன்னும் சிலர் 1000 ஆண்டு கால நடைபயண தூரத்தில் இருந்து சுவனத்தின் நறுமணத்தை நுகர்வார்கள். இது தொடர்பான அனைத்து நபிமொழிகளும் ஸஹீஹான நபிமொழிகளே!

இத்தகைய மகத்தான நற்பேற்றை சில துர்பாக்கியசாலிகளுக்கு அல்லாஹ் தடுத்து விடுவான், நறுமணத்தை நுகர்வதை தடை செய்து விடுவான் என மாநபி {ஸல்} அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

1.இஸ்லாமிய எல்கைக்குள் வாழும் சகோதர சமயத்தவர் அல்லது ஒரு முஸ்லிமோடு ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தம் செய்தவர் இவரை கொலை செய்தவர்.

فأخرج الطبراني عن عبد الله بن عمرو، عن النبي صلى الله عليه وسلم قال

 ((من قتل قتيلاً من أهل الذمة لم يرح رائحة الجنة، وإن ريحها ليوجد في مسيرة مائة عام))

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் ஒப்பந்தம் செய்திருக்கும் திம்மியான ஒருவரை கொலை செய்கின்றாரோ, அவர் சுவனத்தின் நறுமணத்தை நுகர மாட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

2.பெற்றோரை நோவினை செய்பவன். 3.உறவைத் துண்டித்து வாழ்பவன். 4.வயோதிகத்திலும் விபச்சாரம் செய்பவன். 5. கர்வத்தோடு ஆடை அணிபவன்.

عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم 

ريح الجنة يوجد من مسيرة ألف عام والله لا يجدها عاق، ولا قاطع رحم، ولا شيخ زان، ولا جار إزاره خيلاء

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெற்றோருக்கு நோவினை செய்பவன், உறவைத் துண்டித்து வாழ்பவன், வயோதிகத்திலும் விபச்சாரம் செய்பவன், கர்வத்தோடு பூமியில் (தரையில்) படும்படி கீழாடையை அணிபவன் (ஆகியோர்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சுவனத்தின் நறுமணத்தை நுகர மாட்டார்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

6.தந்தையல்லாத ஒருவரை தந்தை என்று அழைப்பவன்.

عن عبد الله بن عمرو رضي الله عنهما

 من ادعى إلى غير أبيه لم يرح رائحة الجنة, وإن ريحها ليوجد من مسيرة خمسمائة عام

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவன் தன் தந்தை அல்லாத ஒருவனை தன் சொந்த தந்தை என (வாதிடுவானோ) அழைப்பானோ அவன் சுவனத்தின் நறுமணத்தை நுகரமாட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

7.தான் செய்த நன்மைகளையும், நல்லறங்களையும் சொல்லித் திரிபவன். 8.மதுவில் மூழ்கியவன்.

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً قال

 ((تراح رائحة الجنة من مسيرة خمسمائة عام، ولا يجد ريحها منان بعمله، ولا عاق، ولا مدمن خمر

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தான் செய்த நல்லறங்களை பிறரிடம் சொல்லித் திரிபவனும், பெற்றோரை நோவினை செபவனும், மதுவில் மூழ்கியவனும் சுவனத்தின் நறுமணத்தை நுகர மாட்டார்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ )

9.ஆபாச ஆடை அணியும், பிற ஆண்களை கவர்ந்திழுக்க ஆடையையும், நடையையும் அமைத்துக் கொண்ட பெண். 10. அப்பாவி மக்களை கொடுமை செய்பவன்.

صنفانِ من أهلِ النارِ لم أرَهما، قومٌ معهم سياطٌ كأذنابِ البقرِ يضربون بها الناسَ. ونساءٌ كاسياتٌ عارياتٌ مميلاتٌ مائلاتٌ. رؤوسُهنَّ كأسنِمَةِ البختِ المائلةِ . لا يدخلْنَ الجنةَ ولا يجدْنَ ريحَها. وإن ريحَها ليوجد من مسيرةِ كذا وكذا

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரு பிரிவினர் நரகவாசிகளாவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. முதல் பிரிவினர் யாரெனில், மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற நீண்ட சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடிப்பார்கள். இன்னொரு பிரிவினர் யாரெனில், மெல்லிய ஆடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து, ஒய்யாரமாக நடந்து, அந்நிய ஆண்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்களாவர். அவர்களின் தலை (முடி – கொண்டை) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் இரு பக்கமும் சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகர மாட்டார்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

11.எவ்வித ஆகுமான காரணமும் இன்றி விவாகரத்து கோரும் பெண்.

أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّة

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்தப் பெண் தகுந்த காரணமின்றி தன்னுடைய கணவனிடம் தன்னை மணவிலக்குச் செய்யுமாறு கேட்கின்றாளோ அவளுக்கு சுவனத்தின் நறுமணம் ஹராம் ஆக்கப்படும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: இப்னு குஸைமா )

12.பொறுப்புகளை நிறைவேற்றாமல் பாழ்படுத்துபவன்.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الْحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلاَّ لَمْ يَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ ‏"‏‏

மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் ஒரு அடியானுக்கு பொறுப்பை வழங்கி, அந்த பொறுப்பில் அதோடு தொடர்புடையவர்களுக்கு நலம் நாடாமல், நன்மை செய்யாமல் சரியாக பொறுப்பையும் நிறைவேற்றாமல் இருப்பான் எனில் சுவனத்தின் நறுமணத்தை அவன் நுகரமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

13.நபி {ஸல்} அவர்கள் விஷயத்தில் பொய்யுரைப்பவன். 14.கண்ணால் பார்த்த விஷயத்தில் பொய்யுரைப்பவன். 15.தன் பெற்றோர் விஷயத்தில் பொய்யுரைப்பவன்.

وعن أوس بن أوس قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏

‏"‏من كذب على نبيه أو على عينيه أو على والديه لم يرح رائحة الجنة‏"‏‏.‏

رواه الطبراني في الكبير وإسناده حسن

அவ்ஸ் இப்னு அவ்ஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் தன்னுடைய நபியின் விஷயத்தில் பொய்யுரைக்கின்றானோ, தன் கண்ணால் பார்த்த விஷயத்தில் பொய்யுரைக்கின்றானோ, தன் பெற்றோர் விஷயத்தில் பொய்யுரைக்கின்றானோ அவன் சுவனத்தின் நறுமணத்தை நுகர மாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஜுஸ்வு ஹம்பல் இப்னு இஸ்ஹாக், அல் அஃக்லாக் லில் கராயித்தீ )

16.தலை முடிக்கு டை அடிப்பவன்.

 ابن عباس قال

قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ 

يكون قوم يخضبون في آخر

 الزمان بالسواد كحواصل الحمام لا يريحون رائحة الجنة

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “புறாவின் கழுத்தில் உள்ள தூய கறுப்பு நிறத்தைப் போன்ற சாயத்தை பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதி காலத்தில் தோன்றுவார்கள். அவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகரமாட்டார்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

17.உலகாதாய நோக்கங்களைப் பெற கல்வியை கற்றவர்.

عن النبي عليه الصلاة والسلام أنه قال

 من تعلم علمًا مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضًا من الدنيا لم يجد عرف الجنة  ،

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்தக் கல்வியைக் கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடப்படுமோ அந்தக்கல்வியை ஒருவர் உலகாதாய நீக்கங்களைப் பெறுவதற்காக கற்றுக் கொள்கின்றாரோ அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையை நுகரமாட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத், அஹ்மத், இப்னுமாஜா )

எனவே, நாம் சுவனத்தை அல்லாஹ்விடம் கேட்பதோடு சுவனத்து நறுமணத்தை நுகரும் பாக்கியத்தையும் அல்லாஹ்விடம் கேட்டுப் பெற வேண்டும்.

 

மேலும், சுவனத்து நறுமணத்தை நுகர்வதற்கு தடையாக இருக்கும் எல்லா காரியங்களில் இருந்தும் நாம் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் சுவனத்தின் நறுமணத்தை நுகரும் பாக்கியத்தை வழங்கியருள்வானாக!

மேலான, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக ஆக்குவானாக!