Thursday, 15 October 2026

இஸ்லாத்தில் உணவுக்கொள்கை!!!

 

இஸ்லாத்தில் உணவுக்கொள்கை!!!



உலக உணவு தினமானது 1945 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 16 -ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் சிறப்பாக ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பொதுவாகவே உலக உணவு தினமானது, அன்றாடம் ஒருவேளை உணவு உண்பதற்கு வழியில்லாமல் துன்பப்படும் மக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் ஆடம்பர செலவின் மூலம் அதிக உணவு வீணாக்கப்படுவதை தடுத்தல் வேண்டும் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அக்டோபர் 16, உலக உணவு தினம்.

இந்த உம்மத்தின் பணம் பெருமளவில் செலவிடப்படுவது மூன்று விஷயங்களில் தான். ஒன்று கல்வி, இரண்டாவது மருத்துவம், மூன்றாவது உணவு.

எனவே, நாம் இஸ்லாமிய மார்க்கத்தில் உணவு குறித்தான வழிகாட்டலை தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

அபஸ அத்தியாயத்தின் 24 -ஆம் வசனம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனித சமூகத்திற்கு வழங்கி இருக்கிற உன்னதமான ஒரு அருட்கொடையைப் பற்றி சிந்திக்குமாறு தூண்டுகிறது.

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِه

எனவே, மனிதன் தன் உணவின் பக்கம் (அது எவ்வாறு பெறப்படுகிறது என்பதை) சிந்தித்துப் பார்க்கட்டும்!".

இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்று உணவு. அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முன்னதாகவே அனைத்து உயிரினங்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தி வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான். 

உயிரினங்களில் எந்த உயிரினமும் தமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன். ( அல்குர்ஆன்: 29: 60 )

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

இன்னும், எந்த உயிரினமும் - அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தேதவிர பூமியில் இல்லை; மேலும், அவை தங்கும் இடத்தையும் அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்; இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. ( அல்குர்ஆன்: 11: 6 )

ஒரு நீல திமிங்கலம் சுமார் 120 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 3,600 கிலோ (8,000 பவுண்டுகள்) வரை கிரில் சாப்பிடுகிறது. ஒரு நீல திமிங்கலத்தின் வயிற்றை நிரப்ப 1,000 கிலோ (2,200 பவுண்டுகள்) உணவு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சாம்பல் திமிங்கலங்கள் 130 முதல் 140 நாட்கள் உணவளிக்கும் காலத்தில் சுமார் 150,000 கிலோ (340,000 பவுண்ட்) உணவை உண்கின்றன - ஒரு நாளைக்கு சராசரியாக 1,089 கிலோ (2,400 பவுண்ட்) உணவு உட்கொள்ளப்படுகிறது. ஒரு சாம்பல் திமிங்கலத்தின் வயிற்றை நிரப்ப 300 கிலோ (660 பவுண்ட்) உணவு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சாம்பல் திமிங்கலங்கள் உணவளிக்கும் பருவத்தில் அவற்றின் மொத்த உடல் எடையில் சுமார் 16% முதல் 30% வரை அதிகரிக்கும். ( நன்றி: https://seaworld.org/animals/all-about/baleen-whales/diet/ )

யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 12–18 மணி நேரம் புற்களை உண்பதிலும், மரப்பட்டைகள், வேர்கள், இலைகள் மற்றும் சிறிய தண்டுகளை மேய்வதிலும் செலவிடுகின்றன, ஒரு நாளைக்கு 150 முதல் 300 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன. ( நன்றி: https://www.worldanimalprotection.org.au/education/animal-facts/elephants/ )

ஏகத்துவத்தை ஏற்க மறுத்து இணை வைப்பாளர்களாக, இறை நிராகரிப்பாறர்களாக வாழ்ந்த மக்கா குறைஷிகள் கூட  தங்களுக்கு உணவு வழங்குவது அல்லாஹ்தான் என்பதை நன்கு விளங்கியிருந்தனர்.

قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏

“உங்களுக்கு வானத்திலிருந்தும்,  பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்?  இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?”  என்று (நபியே!) நீர் கேட்பீராக!. உடனே அவர்கள் “அல்லாஹ்” எனப் பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக!" ( அல்குர்ஆன்: 10: 31)

அல்லாஹ் மனித சமூகத்தைப் படைத்து மனித சமூகம் இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான்.  அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானதும் மனிதன் உயிர் வாழ அவசியமானதுமான உணவையும் படைத்துள்ளான். 

அந்த உணவுகளையும் கூட பல்வேறு உணவு வகைகளாக பல சுவைகளில், பல்வேறு நிறங்களில், பல்வேறு பருவ காலங்களில் மனிதன் ருசித்து இன்புற தானியங்களையும், தாவரங்களையும், கனிகளையும் படைத்திருப்பாதாக கூறுகிறான்.

 

وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ وَلَا تُسْرِفُوْا‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْن

படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன்: 6: 141 )

 وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِد وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ

பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. ( அல்குர்ஆன்: 13: 4 )

மனித சமுதாயத்தை படைத்த அல்லாஹ் மனிதன் ஒரே விதமான தாவர உணவை மட்டும் உண்ணாமல் இறைச்சியையும் உண்டு மகிழுவும் அதை செரிக்கும் விதமாக உடல் அமைப்பை கொண்டு மனிதனை படைத்துள்ளான்.

وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا‌ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர் ( அல்குர்ஆன்: 16: 14 )

وَالْاَنْعَامَ خَلَقَهَا‌ ۚ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ‏

கால்நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளும்) இன்னும், (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். ( அல்குர்ஆன்: 16: 5 )

“ஹலாலான - தூய்மையான உணவை உண்ணுங்கள்”….

அல் பகரா அத்தியாயத்தின் 172 –ஆவது வசனம் ஒரு இறைநம்பிக்கையாளனின் உணவுக் கொள்கை குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.

மேலும், இதே அத்தியாயத்தில் 57 –ம் வசனத்தில் பனூ இஸ்ரவேலர்களை நோக்கியும், 168 ம் வசனத்தில் ஒட்டு மொத்த மனித சமூகத்தை நோக்கியும் இதே உணவுக் கொள்கை குறித்து எல்லாம் வல்ல அல்லாஹ் அறை கூவல் விட்டிருப்பதை பார்க்க முடிகின்றது.

அந்த உணவுக் கொள்கை “தூய்மையான உணவை உண்ணுங்கள்” என்பது தான்.

இதே கொள்கையை அல்லாஹ் இறைத்தூதர்களிடமும் போதித்ததாக 23-ம் அத்தியாயமான அல் முஃமினூன் அத்தியாயத்தின் 51 –ம் வசனம் அறிவுறுத்துகின்றது.

மனிதன் அமைதியாக இயங்க அவசிய மானது வலுவான, தரமான ஆரோக்கியம். அந்த  ஆரோக்கியத்தின் ஆதாரமே ‌ உணவுகள் தான். அந்த உணவுகள் தான் மனித வளத்தை மேம்படுத்தும்.

மனித வளம் மேம்படுவதற்குச் சாதகமான சூழ்நிலை அமைய இஸ்லாம் சில உணவு முறைகளை‌  அனுமதிக்கிறது. அதுபோல மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளை‌த் தடுக்கிறது இஸ்லாம்.

மனிதவளம் குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)

1.   ஹலாலான உணவை உண்போம்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ

நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை”. (முஸ்லிம்)

حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ وَقَالَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை”. (முஸ்லிம்)

அதிக சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவரைக் குறித்து இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவருடைய தலை முடி கலைந்துள்ளது. உடலில் புழுதி படிந்துள்ளது. வானை நோக்கி கரங்களை ஏந்தியவாறு, ‘என் இறைவா..! என் இறைவா..!” என்று இறைஞ்சுகின்றார். (ஆயினும் அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) இறைவன் எப்படிஅந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்? அவனது உணவு ஹராம். அவனது பானம் ஹராம். அவனது உடை ஹராம். ஹராமிலேயே வளர்ந்திருக்கின்றான். பின் எப்படி அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்?” (புகாரி)

وسأل رجل سفيان الثوري عن فضل الصف الأول فقال: ( انظر كسرتك التي تأكلها من أين تأكلها؟ وقم في الصف الأخير، وكأنه رحمه الله رأى من الرجل استهانة بهذا الأمر، فأحب أن ينبهه إليه؟ لأنه أهم مما سأل عنه )

ஸுப்யானுஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்டார்: “அறிஞரே! கூட்டுத் தொழுகையின்போது முதல் வரிசையில் வலப்பக்கமாக நின்று தொழுவது சிறந்ததா? அல்லது இடப்பக்கமாக நின்று தொழுவதா? என்று கேட்டார்.

ஸுப்யானுஸ் ஸவ்ரி (ரஹ்)  கூறினார்கள்: “நீ உண்ணும்ரொட்டித் துண்டு ஆகுமான வழிமுறையின் மூலம் (ஹலால்) கிடைத்ததா? அல்லது தவறான வழிமுறையின் மூலம் (ஹராம்) கிடைத்ததா? என்பதில் கவனம் செலுத்து. அவ்வாறெனில் வரிசையில் எங்கு நின்று தொழுதாலும் பிரச்சினை இல்லை”

இப்படித்தான் வணக்க வழிபாடுகளில் அதிக கவனம் எடுப்பவர்கள் உணவு  விஷயத்தில் ஹலாலா? ஹராமா? என கவனமெடுக்கத் தவறி விடுகின்றோம்.

قَامَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مُسْتَجَابَ الدَّعْوَةِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا سَعْدُ أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، إِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلَ أَرْبَعِينَ يَوْمًا

ஸஅத் பின் அபீ வகாஸ் (ரலி) அவர்கள் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்)  அவர்களிடம் இவ்வாறு விண்ணப்பித்தார்: “இறைத்தூதரே! எனது பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்! என்று  வேண்டி நின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஸஅதே! தூய்மையானவற்றை மட்டும் உண்ணுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்” என்று கூறிவிட்டு. இந்த முஹம்மதின் உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! “நிச்சயமாக ஒரு அடியான் தன் வயிற்றிலே இரு கவள ஹராமான உணவை உட்கொண்டு விடுகின்றான். அதன் காரணமாக அவனுடைய நாற்பது நாள் அமல்கள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” என்று கூறினார்கள்.”.

நபிகளாரின் இந்த உபதேசத்திற்குப்பின் ஸஅத் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு உணவில் தூய்மையானவற்றைக் கடைப்பிடித்தார் என்றால், அதற்குப் பின் அவர் ஹலாலான உணவை மட்டுமே உண்டு வந்தார். அவர் வீட்டில் ஆடு ஒன்று இருந்தது. அந்த ஆட்டின் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் அருந்துவர். ஒருநாள் அந்த ஆடு அண்டை வீட்டுக்காரரின் நிலத்தில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த புற்களை மேய்ந்துவிட்டது. இதை அறிந்த ஸஅத் (ரலி) அன்று முதல் ஆடு இறக்கும்வரை அதிலிருந்து கறக்கும் பாலை அருந்துவதை நிறுத்திவிட்டார்.  அனுமதியின்றி நுழைந்து மேய்ந்த புல்லின் தாக்கம் அந்த ஆட்டின் பாலில் வெளிப்பட்டுவிடுமோ, அது அனுமதியில்லாத உணவாக மாறிவிடுமோ என்ற பயம்தான் காரணம் ஆகும்.

2. ஆரோக்கியம் தரும் உணவை உண்போம்.

நாளொரு நோயும் பொழுதொரு உபாதைகளும் பெருகிவரும் தற்காலத்தில் பெரும்பாலான நோய்களை விட்டு நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கு அதிகமான மருத்துவர்கள் சிபாரிசு செய்வது உணவுக்கட்டுப்பாடுதான்.

       நல்லதும் கெட்டதும் நம் முன் எப்போதும் அணிவகுத்து நிற்கும். எதைத்தேர்ந்தெடுப்பதென்பது தான் இந்த உலகில் வாழும் காலங்களில் நமக்கான சவால் ஆகும். அந்த வகையில் தற்போது நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் ஆயிரக்கணக்கான வகை உணவுகள் இருக்கின்றன. பெரும்பாலும் துரித வகை உணவுகளையும், கொழுப்புச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளையும், சரியாக வேகாத அசைவ உணவுகளையும் உண்டு வருகின்றோம்.

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 4: 29 )

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு 

செல்லாதீர்கள். (  அல்குர்ஆன்:  2: 195 )

3. அளவாக, தேவைக்கு உண்போம்.

عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ» سنن الترمذي

 நபி {ஸல்} அவர்கள் கூற, நபித்தோழர் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள்  அறிவிக்கிறார்கள். “ஆதமின் மகன் வயிறை விடக் கெட்ட ஒரு பையை   நிரப்புவதில்லை. ஆதமுடைய மகனின் முதுகெலும்பை நிமிர்த்தும் அளவிற்கு  சில  கவளம் உணவே அவனுக்குப் போதுமானது! அவசியமானால் அவனுடைய  வயிற்றில்  மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், மற்றொரு பகுதி  தண்ணீருக்காகவும், பிரிதொரு  பகுதி மூச்சு விடுவதற்காகவும் (காலியாக)  இருக்கட்டும். ( நூல்: ஸுனன் திர்மிதீ )

وفي رواية للبخاري: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا، فَأَسْلَمَ فَكَانَ يَأْكُلُ أَكْلًا قَلِيلًا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ 

إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ

البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். “ஒரு மனிதர் அதிகமான அளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வயிறு புடைக்க சாப்பிடுவார். அப்படிப்பட்டவர் ஒரு நாள் புனித இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து அவர் குறைவாக உண்ணும் பழக்கமுடையவராகிவிட்டார். அவரின் உணவுப் பழக்கம் அடியோடு மாறி - அளவோடு உணவு உண்பவராக ஆகிவிட்டார். இந்த நபரின் இந்த மாற்றம் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு அண்ணலார் {ஸல்} அவர்கள் “இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்.  இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்” என்று கூறினார்கள். (  நூல்: புகாரி )

  இந்த ஹதீஸிற்கு விளக்கம் இவ்வாறு எழுதப்படுகிறது. அதாவது இறை மறுப்பாளன் தன் மனம் விரும்பும் எல்லா உணவுகளையும் விதிவிலக்கில்லாமல் புசிப்பான். ஆனால், இறைநம்பிக்கையாளர் (முஃமின்) அனுமதிக்கப்பட்ட (ஹலால்)  உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவார். அப்போது தான் இபாதத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் - அதிகமாக உண்பதால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் அவருக்கு இலகுவாயிருக்கும்.                                         (  நூல்: ஃபத்ஹுல்பாரி )

عبد الله بن عمر: روى البخاري بسنده عن نافع قَالَ: كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ، فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ، فَأَكَلَ كَثِيرًا، فَقَالَ :يَا نَافِعُ! لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ، سَمِعْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَقُولُ

"الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ

 البخاري

ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் எப்போது உணவு சாப்பிட்டாலும் ஒரு ஏழை ஒருவரை அமர்த்தி உணவு உண்பார்கள். ஒரு நாள் இப்னு உமர் (ரளி)  அவர்களுடன் சாப்பிட ஒரு ஏழை ஒருவரை ஹள்ரத் நாபிஃ (ரளி) அவர்கள் அழைத்துச் சென்றார்கள். அவருக்கு உணவு பரிமாறிவிட்டு தானும் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்கள். இப்னு உமர் (ரளி) அவர்கள் ! அவர்களுடன் சாப்பிட்ட நபர் அளவுக் கதிகமாக சாப்பிட்டார். வயிறுபுடைக்க சாப்பிட்டார். சாப்பிடுவதில் வரைமுறை இல்லாத நிலையை மேற்கொண்டார். அவர் சாப்பிட்டு முடித்து வெளியே சென்ற பின் ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் ஹள்ரத் நாபிஃ (ரளி) அவர்களைப் பார்த்து கூறினார்கள். “ வயிறார உணவு கொடுப்பதில் எனக்கு இருவேறு கருத்து கிடையாது.  ஆனால், நீர் அழைத்து வந்த நபர் வயிறார சாப்பிடவில்லை. வயிறு புடைக்க வரைமுறைகளின்றி சாப்பிடுபவராக உள்ளார். இனிமேல் இந்த நபரை எனது இல்லத்துக்கு அழைத்து வராதீர். காரணம் அண்ணலார் (ஸல்) அவர்கள் “ இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்” எனக்கூற நான் கேள்விப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.                             (  நூல்: புகாரி )

பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.

1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)

2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)

3. E.N.T. Diseases (காது. மூக்கு,தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)

4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)

5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)

6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)

7. Diabetese (நீரழிவு நோய்)

8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)

9. Depression (மன அழுத்தம்)

மேலும் அவர் தேவையை விட அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

4. உணவு உண்பதில் வீண் விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.

வீண் விரயம் செய்வது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى المُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنِ اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ “

அல்லாஹ் உங்களிடம் இருந்து வெளிப்படும் செயல்களில் மூன்றை வெறுக்கிறான். அவர் சொன்னார். இவர் சொன்னார். அப்படி சொல்லப்பட்டது. இப்படி சொல்லப்பட்டது. என்று கூறுவதையும், பொருள்களை வீணாக்குவதையும், அதிகமாக கேள்வி கேட்பதையும் இறைவன் வெறுக்கின்றான் என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் என முஃகீரா இப்னு ஷுஅபா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல் : புகாரி )

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.                   ( அல்குா்ஆன்: 7: 31 )

وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا (26) إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا (27)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாகஉள்ளனர். ஷைத்தான்தனதுஇறைவனுக்குநன்றி கெட்டவனாக இருக்கிறான்.                            ( அல்குா்ஆன்: 17: 26, 27 )

வீண் விரயம் செய்வது ஷைத்தானுடைய செயல் என்றும் ஆதலால் வீண் விரையம் செய்யக்கூடாது என்றும் இறைவன் மேற்கண்ட  வசனங்களில்  தெரிவிக்கின்றான்.

உணவை வீணடிப்பது மட்டும் விரயம் அல்ல பெருமானார் {ஸல்} அவர்களின் வார்த்தையில் கவனம் குவிப்போம்!

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّ مِنْ السَّرَفِ أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ ) رواه ابن ماجه

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீ விரும்பிய அனைத்தையும் உண்பதுகூட விரயம்தான்”. ( நூல்: இப்னுமாஜா )

 

உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான அளவை அறிந்து மீதம் ஏற்படாதவாறு நமது சாப்பாட்டு முறையை அமைத்துக் கொள்வது முஸ்லிம்களின் மீது அவசியமாகும். மீதம் வந்தால் கூட அதை வீண் விரயம் செய்யாது பிறருக்கு வழங்கி விட வேண்டும். உணவு மீதமாகும் என்பதைத் தெரிந்து கொண்டே கூடுதலாக சமைத்து குப்பைத் தொட்டியில் போட்டால் அது வீண் விரயம் செய்த குற்றத்தில் சேரும்.

 

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு எவ்விதச் சிரமமும் இன்றி நாம் பசித்திருக்கும் போது உணவளித்து வரும் தயாளத்தன்மைக்காக சாப்பிட்டு முடித்ததும் மாநபி ஸல் அவர்களின் வழியில் அல்லாஹ்வுக்கு அழகிய நன்றியை செலுத்துவோம்!

 كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم إذا رفعتِ المائدةُ من بينِ يديْهِ يقولُ الحمدُ للَّهِ حمدًا كثيرًا طيِّبًا مبارَكًا فيهِ غيرَ مودَّعٍ ولاَ مستغني عنْهُ ربُّنا .

الراوي : أبو أمامة الباهلي  المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3456 | خلاصة حكم المحدث : صحيح |

நபி ஸல் அவர்கள் ( சாப்பிட்டு முடித்த பின் ) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது " அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா " என்று பிரார்த்திப்பார்கள்

பொருள் ( அதிகமான தூய்மையான வளமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது கைவிடப்படக் கூடாதது தவிர்க்க முடியாதது ஆகும் ) என்று அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்

( நூல் : திர்மிதீ  )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் பசி பட்டினியில் இருந்தும், உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுத் தேவையில் இருந்தும் பாதுகாப்பானாக! வாழும் காலமெல்லாம் தடையில்லாத ரிஜ்கைத் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!