Wednesday 16 April 2014

எதிர்பார்ப்பும்...எதிர்காலமும்...

எதிர்பார்ப்பும்...எதிர்காலமும்...

 
    
ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வாழும் வாழ்க்கையின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். தன் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்தான கனவுகளும் இருக்கும்.

எதிர்பார்ப்புகளும் எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளும் இல்லாதவன் சிறந்த மனிதனாகவே கணிக்கப்படமாட்டான்.

ஆம்! ஓர் இறை நம்பிக்கையாளனிடத்திலும் இத்தகைய அம்சங்களும், அதற்கான தேடல்களும் இருக்க வேண்டுமெனெ இஸ்லாம் விரும்புகின்றது.

இல்லையென்றால்இன்ஷா அல்லாஹ்..” என்ற வார்த்தைப்பிரயோகம் அவசியமில்லாத ஒன்றாக ஆகிப்போயிருக்கும்.

ஆகவே, ஓர் முஃமின் அவனது எதிர்பார்ப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் இறைவனின் விருப்பப்படியும் இறைத்தூதரின் முன்மாதிரியின் படியும் அமைத்துக் கொள்வது அவசியமாகும்.

தகாத எதிர்பார்ப்புகளும், அழிவில் ஆழ்த்துகிற எதிர்காலக் கனவுகளும் ஓர் இறை நம்பிக்கையாளனின் ஈமானின் இன்பத்தையே பொசுக்கிவிடும் வல்லமை கொண்டது.

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆகவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நன்மையானவற்றில் நீங்கள் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்.

عَنْ حُسَيْنِ بن عَلِيٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ يُحِبُّ مَعَالِيَ الأُمُورِ وأَشْرَافَهَا ، وَيَكْرَهُ سَفَاسِفَهَا ".

ஹுஸைன் இப்னு அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! அல்லாஹ் காரியங்களில், செயல்பாடுகளில் மிக உயர்வானதையும், சிறப்பானதையுமே நேசிக்கின்றான். காரியங்களில், செயல்பாடுகளில் மிகவும் கீழானவற்றை வெறுக்கின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                                                        (நூல்: தப்ரானீ, 2856)

எதிர் காலத்தைப்பற்றிய இலட்சியங்களாக இருக்கட்டும், வாழ்க்கை குறித்தான எதிர்பார்ப்புகளாக இருக்கட்டும் அதற்கான எல்கை எது என்பதை மேற்கூறிய ஆயத்தும், நபிமொழியும் நமக்கு உணர்த்துகின்றது.

முஸ்லிம்களின் தலைமையும்... எதிர்காலமும், எதிர்பார்ப்பும்….

இந்த உம்மத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சமுதாய அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்க தலைவர்களுக்கு மத்தியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை கண்கூடாக கண்டுவருகின்றோம்.

ஏற்கனவே 58 இஸ்லாமிய அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் தற்போது புதிதாய் ஓர் அமைப்பு உதயமாகி விட்டது.

பதவிகளிலும், அதிகாரங்களிலும் இருந்து சுகம் கண்டவர்கள் ஏதேனும் சில்லரைக் காரணங்களுக்காக ஓர் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டோ, அல்லது விலகும் சூழல் ஏற்படும் போதோ உடனடியாக புதிதாய் ஓர் அமைப்பை தோற்றுவித்து முஸ்லிம்களின் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்தி தங்களின் சுகபோகத்தை தொடர்கின்றனர்.

தேர்தல் நேரங்களில் ஆளுக்கு ஒரு அரசியல் கட்சிகளை தேர்ந்தெடுத்து முஸ்லிம் சமுதாயத்தை அடகுவைத்து மதிப்புமிக்க வாக்குகளை சேதாரமாக்கி, சமுதாயத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.
நம் காலத்து அரசியல் கட்சிகளின் நிலையை நம் இஸ்லாமிய அரசியல் & இயக்க தலைவர்கள் ஒரு போதும் அறிந்து வைத்திட முற்பட்டதில்லை.

கடந்த (2009 – 2014) நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் 162 பேர் ரவுடிகள், கொலை மற்றும் கொள்ளைக்காரர்கள்.

இது 30% சதவீதமாகும். இதுவே அதற்கு முந்தைய (2004 – 2009) நாடாளுமன்றத்தில் 24% சதவீதமாக இருந்தது.

 நடக்க இருக்கும் இப்போதைய தேர்தலிலும் இத்தகையவர்கள் தாம் அதிகமாக வெற்றிபெற வாய்ப்பு இருக்கின்றது.

     (வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014,Times Of India: 12.2.2014.)

நமது தேசத்தின் மிகப் பெரும் கட்சியும், தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் கொலைகாரர்.

நமது தேசத்தை ஆளத்துடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மூன்றில் ஒருவர் கொலைகாரர்.

(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014 Association Of Democratic Rights)

நமது தேசத்தின் பிரபல கட்சிகளைப் பற்றி அதிர்ச்சியூட்டும் இன்னொரு புள்ளி விபரம்.

நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கொலைகாரர்களையும், கொள்ளைகாரர்களையும் (80%சதவீதம் பேர்) கொண்ட கட்சி சிவசேனைகட்சி.

அதற்கு அடுத்து பாரதீய ஜனதா கட்சி 41.7% சதவீதம் பேர்.              ஐக்கிய ஜனதா தளம் 36.84% சதவீதம் பேர். பகுஜன் சமாஜ் கட்சி 28.57% சதவீதம் பேர்.

சமாஜ்வாதி கட்சி 27.27% சதவீதம் பேர். காங்கிரஸ் கட்சி 23.88% சதவீதம் பேர். கம்யூனிஸ்ட் கட்சி 18.75% சதவீதம் பேர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 16.16% சதவீதம் பேர்.

(வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014, The Numbers Story: March 17, 2013.)
கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கிச் செல்வோம். 1947 இந்திய விடுதலைச் சட்டம் ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்த தருணம் அது.

கிளிமண்ட் அட்லி அன்றைய ஆங்கிலேய அரசின் பிரதமர், இந்தியாவிற்கு சுதந்திரம் விரைவில் தந்துவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.

அப்போதைய ஆங்கிலேய அரசின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான வின்ஸ்டன் சர்ச்சில் இப்படிக்கூறினார்:

You are entrusting the reigns of government in the hand of Rowdies, rascals and free booters they will not stop at anything the very air people breath will be taxed one day.

It will take millions and millions Of Years for the Indians to enter into the periphery of politics”

அதாவது, “இந்தியாவின் பரிபாலனத்தை நீங்கள் கொலைகாரர்கள், குண்டர்கள் கொள்ளையர்கள் ஆகியோரின் கையில் ஒப்படைக்கின்றீர்கள். அவர்கள் அநீதி இழைப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.

ஒரு நாள் மக்கள் சுவாசிக்கும் காற்றுக்கும் வரி போட்டு விடுவார்கள். அவர்கள் உண்மையான அரசியல் எல்லையைத் தொடுவதற்கு பல நூறு நூற்றாண்டுகள் ஆகும்..”

                      (நன்றி: வைகறை வெளிச்சம் மாத இதழ், ஏப்ரல் 2014)

இந்தியா சுதந்திர நாடாக வேண்டும் என்பதில் இஸ்லாமியர்கள் காட்டிய தீவிரம் எத்தகையது என்பதை இந்திய சுதந்திரத்தின் இரத்த வரலாற்றில் பக்கங்களில் நிரம்பவே காணப்படுகின்றது. (அது வேறு விஷயம்)

ஆனால், அன்றைக்கு வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது எவ்வளவு பொருந்திப்போகின்றது இன்றைய நவீன கால அரசியலில்

இந்த அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் நம்முடைய இயக்க மற்றும் அரசியல் தலைவர்கள் நம் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தன்மைகள் கொண்டதாக அடையாளப் படுத்துகின்றனர்.

நபிகளாரின் வாழ்வினிலே….

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் புறப்பட்டு பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

வழியில், சுராக்கா இப்னு மாலிக் என்பவர் சிவப்பு நிற நூறு ஒட்டகைகளுக்காக துரத்திக்கொண்டு வருவதை அபூபக்ர் (ரலி) பார்த்து விட்டு, அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவிக்கின்றார்கள்.

இன்னும் வேகமாக செலுத்துகின்றார்கள் குதிரையை, ஆனாலும் அருகாமையில் வந்து விட்ட சுராக்காவை கண்ட அபூபக்ர் (ரலி) மீண்டும் பெருமானார் {ஸல்} அவர்களிடம் முறையிட, அப்படியே குதிரையை விட்டு கீழிறங்கி நின்று கொண்டு பின் தொடர்ந்து வருவதின் நோக்கம் என்ன வென்று சுராக்காவிடம் கேட்டார்கள் {ஸல்} அவர்கள்.

சுராக்கா சொன்னார்உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறினர்அதற்காகவே பின் தொடர்கின்றேன்.

وروى ابن عيينة، عن أبي موسى، عن الحسن أن رسول الله صلى الله عليه وسلم قال لسراقة ابن مالك: كيف بك إذا لبست سواري كسرى ومنطقته وتاجه؟ قال: فلما أى عمر بسواري كسرى ومنطقته وتاجه، دعا سراقة بن مالك وألبسه إياهما.
وكان سراقة رجلاً أزب كثير شعر الساعدين، وقاله له: ارفع يديك، وقل: الله أكبر، الحمد لله الذي سلبهما كسرى بن هرمز، الذي كان يقول: أنا رب الناس، وألبسهما سراقة رجلاً أعرابياً، من بني مدلج، ورفع عمر صوته.

அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள் சுராக்காவை நோக்கிசுராக்காவே! பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலன்களை நீர் அணிந்தால் நீர் எப்படி இருப்பீர்? உமது தோற்றம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள்.

சுராக்கா அண்ணலாரிடம்பாரசீக மன்னர் கிஸ்ராவின் அணிகலனையா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி {ஸல்} அவர்கள்ஆம்! இஸ்லாம் பாரசீகத்தை வென்றெடுக்கும்! அதன் அணிகலன்கள் உங்களை அலங்கரிக்கும்!” என்று கூறினார்கள்.

ஆம்! உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பாரசீகம் வெற்றி கொள்ளப்பட்டது. சுராக்கா இப்னு மாலிக் (ரலி) அழைக்கப்பட்டு பாரசீக மன்னன் கிஸ்ராவின் அணிகலன்களை அணிவித்து விட்டு, உமர் (ரலி) அவர்கள்மக்களின் இறைவன் நானே என்று சொல்லிக்கொண்டிருந்த ஹுர்முஸின் மகன் கிஸ்ராவினுடைய அணிகலனை ஏகனாம் அல்லாஹ்வின் அடிமையாகிய ஓர் அரபியான சுராக்காவிற்கு அணிவிக்க துணை செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! என்று உரத்த குரலில் முழங்கினார்கள்.

                                   (நூல்: உஸ்துல் காபா, பாகம்:1, பக்கம்:422)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடைய வஃபாத்திற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாரசீக வெற்றி சாத்தியமானது.

ஆனால், ”20 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமும், முஸ்லிம்களும் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பதில் பெருமானார் {ஸல்} அவர்கள் எதிபார்ப்போடும், வளமான எதிர்கால இலட்சியத்தோடும் இருந்தார்கள்என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.


கைபர் யுத்தத்திலே ஒல்லியான தேகம் கொண்ட வாலிப நபித்தோழர் ஒருவர் ஆயுதத்தைச் சுமந்தவாறு களத்திலே நுழைகின்றார். அவரால் அந்த ஆயுதத்தை இரு கரங்களால் மட்டுமே தூக்க முடியும் என்றொரு நிலை.

பெருமானார் {ஸல்} அவர்கள் அந்த வாலிபரை அழைத்துநீர் போரில் கலந்து கொள்ள வேண்டாம்! போய் படைவீரர்கள் அழைத்து வந்துள்ள குதிரைகள் மற்றும் ஒட்டகைக்கு தீனிபோடும் பணியை மேற்கொள்ளுங்கள்!” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

கைபர் வெற்றி கொள்ளப்பட்டது. கனீமத் பங்கு வைக்கப்பட்டது. அந்த வாலிபருக்கும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு பங்கை கொடுத்தனுப்பினார்கள்.

அதைப் பெற்றுக்கொண்ட அவர் அதை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் ததும்ப பெருமானார் {ஸல்} அவர்களின் சபை நோக்கி வந்துஅல்லாஹ்வின் தூதரே! இந்தாருங்கள்! நான் இந்த வெகுமதிகளுக்காக போர்க்களத்திற்கு வரவில்லை! உண்மையில் அல்லாஹ்வின் பாதையில் போராடி வீரமரணம் அடைந்திட வேண்டுமென்ற வேட்கையில் தான் வந்தேன்! ஆனால் போர்க்களத்தில் நீங்கள் என்னை பங்கெடுக்க அனுமதிக்க வில்லைஎன்றார்.

அது கேட்ட நபிகளார் {ஸல்} அவர்கள் அந்த நபித்தோழரை ஆறுதல் படுத்தினார்கள்.

நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் போர் ஆயுதங்களைக்கூட தூக்க முடியாத அந்த மெலிந்த தேகமுடைய வாலிபரை கைபர் யுத்த களத்தில் அடகு வைத்திருக்க முடியும். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அதை விரும்பவில்லை.

ஆனால், இன்றைய நம் அரசியல் & இயக்க தலைவர்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் ஏதோ சில லாபங்களுக்காக அடகு வைப்பதைக் காண முடிகின்றது.

ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தையும், சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் தீர்மானிக்க வேண்டிய ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்கள்.


நபித்தோழர்கள் வாழ்வினிலே…..

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். காதிஸிய்யா யுத்தத்திற்காக காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஓர் படையை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

காதிஸிய்யா போர் கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த போர் ஆகும். இதற்குப் பிறகு ஈராக் பகுதி முழுவதும் இஸ்லாமிய நிழலின் கீழ் வந்தது.

படை சென்ற பின்னர் ஒரு நாள் நகர் வலம் வந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் காதில் பேரிடியாய் வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

ஏகத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் உரசிப்பார்ப்பதாய் உணர்ந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஆம்! மக்கள்காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுச் சென்றிருக்கும் முஸ்லிம் படை நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்பும்என்று பேசிக்கொண்டனர்.

உடனடியாக அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பி இதை கொண்டு காதிஸிய்யாவிற்குச் செல்லுங்கள். அனைத்துப்படை வீரர்களுக்கு மத்தியில் இதைப்படித்துக் காட்டச் சொல்லுங்கள்என்று உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைவீரர்களின் ஊடாகச் சென்ற அபூ உபைதா (ரலி) அவர்கள் தளபதி காலித் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஆட்சித்தலைவர் சொன்ன விபரத்தைச் சொன்னார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி) கடிதத்தைப் பிரித்தார்கள். படித்தார்கள். அதில் இடம் பெற்றிருந்த வாசகம் இதோஆட்சித்தலைவர் உமர் அவர்களிடமிருந்து தளபதி மற்றும் படைவீரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…. இதோ இந்த நிமிடத்திலிருந்து காலித் (ரலி) படைத்தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அபூ உபைதா (ரலி) நியமிக்கப்படுகின்றார். இது அமீருல் முஃமினீன் அவர்களின் உத்தரவு!

உடனடியாக முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்பட்டனர். அதே படையில் ஒரு வீரராக காலித் (ரலி) அவர்கள் பங்கு பெற்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை வெற்றியோடு மதீனா திரும்பியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால்ஸைஃபுல்லாஹ்என்று கண்ணியப்படுத்தப்பட்டுள்ளேன். ஆகவே, என்னை நீக்கம் செய்தது செல்லாது என்றோ, தனியாய் பிரிந்து சென்று வேறு அணியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பேன் என்றோ காலித் அவர்கள் சூளுரைக்கவில்லை.

மாறாக, அதே யுத்தகளத்தில் சாதாரண ஒரு படை வீரராகவே களம் கண்டார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

பின்னாளில், ஒரு நாள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கலீஃபா அவர்களே! ”நான் எந்த ஒரு யுத்தகளத்திலும் இஸ்லாமிய யுத்த விதிகளை மீறியது கிடையாது. எந்த ஒரு மோசடியும் செய்தது கிடையாது. என் தலைமைப்பதவியை தவறாக பயன்படுத்தியதும் கிடையாது. எல்லா நிலையிலும் நான் ஓர் உண்மை இறை விசுவாசியாகவே நடந்து கொண்டிருக்கின்றேன்.

பின்னர் ஏன் நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள்என்னுடைய தனிப்பெரும் நேசத்திற்கும், பாசத்திற்கும் உடையவர்கள் நீங்கள். எப்போதும் உங்கள் மீது நான் தனிப்பெரும் கண்ணியம் வைத்துள்ளேன். உங்களை மோசடியாளனாகவோ அல்லது வேறு எந்த சிந்தனைகொண்டவனாகவோ காணவில்லை.

மாறாக! அல்லாஹ்வை மட்டுமே நினைத்த இதயங்கள்! அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி கெஞ்சிய நாவுகள்! இப்பொது அதை உதறிவிட்டு காலித் போனால் வெற்றி, அவர் தலைமை தான் வெற்றிக்குரிய தலைமை என்று அல்லாஹ்வை மறந்து பேச எத்தனித்து விட்டனர்.

வேறு வழியில்லை உம்மை பதவியிலிருந்து இறக்கினால் தான் இம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி ஞாபகம் வரும் என்பதற்காகத் தான் உம்மை பதவி நீக்கம் செய்தேன்என்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…. என்று கூறி முக மலர்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றுச்சென்றார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

                              (நூல்: குலஃபாவுர்ரஸூல் {ஸல்}, பக்கம்:186-187)

பத்ர் யுத்தகளத்தில் கைதியாக பிடிக்கப்பட்டு மஸ்ஜிதுன் நபவீயின் ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்த சுஹைல் இப்னு அம்ர் அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் பல்லை உடைத்து விடுகின்றேன்! இனி மேல் ஒரு போதும் உங்கள் முன்னால் வந்து நின்று குறைஷிகள் சார்பாக உரையாட மாட்டார்என்றார்கள்.

அது கேட்ட அண்ணலார்உமரே! அவரை விட்டு விடுங்கள்! பின்னாளில் உங்களுக்கு மகிழ்ச்சி தருகிற உரையொன்றை நிகழ்த்துவார்என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மையாகிப் போனது. குறைஷிகளின் பேச்சாளராககதீபாக விளங்கிய சுஹைல் (ரலி) அவர்கள் இஸ்லாமிய கதீபாக விளங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித உயிர் இப்பூலகை விட்டு பிரிந்திருந்த தருணம் அது.

மயக்க நிலையில் சில முஸ்லிம்கள். நபி {ஸல்} மிஃராஜ் சென்றிருக்கின்றார்கள் என சில முஸ்லிம்கள். உருவிய வாளோடு உமர் (ரலி) அவர்கள் என பல்வேறு நிலைகளைக் கொண்டிருந்த தருணம் அது.

நாயகத்தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் மதீனத்து முஸ்லிம்களிடம் உரையாடிய அந்த உரை நாம் அறிந்ததே.

ஆனால், மக்காவில் முஸ்லிம்களின் நிலை என்ன வென்பதை வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது
ஹரமுக்கு அருகே திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன்பு அநாயசமாக நின்று கொண்டு எழுச்சியான உரை நிகழ்த்தினார் சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.

சுஹைல் (ரலி) மக்கள் வெள்ளத்தை நோக்கிசத்தியமாக முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான். அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமைபடுத்தி முடித்த பின்னரே அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான். அவர்கள் தங்களது தூதுத்துவத்தை நம்மிடையே மிகச்சரியாகவே கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளார்கள். நம்மை விட்டு முஹம்மத் {ஸல்} பிரிந்து சென்றிருக்கிற இந்த வேளையில் உண்மையில் ஓர் இறைவிசுவாசி அவர்கள் காட்டித்தந்த வழியிலேயே நடை போடுவான்என்று முழங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்தச் செய்தி மதீனா நகர மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட போது, அங்கிருந்த உமர் (ரலி) அவர்கள்முன்னரே அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இது குறித்து சொல்லியிருக்கின்றார்கள்என்றார்கள்.

                        (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:590)

உண்மையில் பிளவின் அருகே அந்த சமூகம் நின்று கொண்டிருந்தது. ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மதீனாவில் அபூபக்ர் (ரலி) அவர்களும், மக்காவில் சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அவர்களும் அன்றைக்குச் செய்த அந்தப் பிரசங்கம் தான் இந்த உம்மத்தை பெரும் அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்றியது.

இது போன்ற தலைமைப் பண்புகளை கொண்ட தலைவர்களால் மட்டும் தான் இந்த முஸ்லிம் சமூகம் மிகச்சிறந்த எதிர்காலத்தையும், உயரிய எதிர்பார்ப்புகளையும் எய்தப் பெற முடியும்.

சமுதாயத் தலைவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து, தங்களைப் புதுப்பிக்க வேண்டிய அருமையான சந்தர்ப்பம் இது.

விழிப்புணர்வு இல்லாத சமுதாயம் ஒரு போதும் தம் எதிர்பார்ப்புகளை அடைந்து கொண்டது கிடையாது.

உண்மையை உணராத எந்த ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும் பிரகாசமாய் அமைந்தது கிடையாது.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِم
அல்லாஹ் கூறுகின்றான்: “எந்த ஒரு சமூகமும் தம் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை..”

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போன்று இருக்கமாட்டார்கள்..”

ஆகவே, எதிர்காலக் கனவுகளை தூய்மையாக்குவோம்! வாழ்வின் மீதான எதிர்பார்ப்புகளை வாகாய் அமைப்போம்!

நல்ல தலைமையைப் பெற்று, எல்லாமும் பெற ஏகனாம் அல்லாஹ் அருள் புரிவானாக!

                    ஆமீன்! வஸ்ஸலாம்!!











7 comments:

  1. masha allah good kalidh rali nihalchi inraya pala suyanala aasaamyhal& iyakkangalukku nalla paadam

    ReplyDelete
  2. காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களாக மக்களுக்கு மத்தியில் வலம் வரும் போலிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அற்புதமான வரலாறு! அவர்களிடம் இருந்த இறையச்சத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!

    ReplyDelete
  3. மௌலானா என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து விட்டீர்கள்! மிக முக்கியமான, அருமையான கட்டுரை,; வாழ்த்துக்கள்! Keep it up

    ReplyDelete
  4. Subject ku poruthamane nigalvugal vasanangal , zajakumullah

    ReplyDelete
  5. Subject ku poruthamane nigalvugal vasanangal , zajakumullah

    ReplyDelete
  6. கலத்துக்கு தோதுவான அற்புதமான கட்டுறை. அல்லாஹ் உங்களுடைய கல்வியில் மேலும் பரகத் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete