Thursday 30 July 2015

சமநீதி தேடும் முஸ்லிம் சமூகம்!



சமநீதி தேடும் முஸ்லிம் சமூகம்!



 
இந்த தேசத்தின் உயர்விலும், விடுதலையிலும் உயிராலும், உடலாலும், உணர்வுகளாலும் மாபெரும் அர்ப்பணிப்பை அளித்த முஸ்லிம் சமூகம் இன்று சமநீதி கேட்டு நீதிமன்ற வாயிற்படிகளில் காத்து நிற்பதும், தொடர்ந்து  அநீதி நிறைந்த தீர்ப்புகளையும் பல அவலங்களையும் சந்தித்து வருவதை உலக சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும்  1) லிபர்ட்டிசுதந்திரம், 2) ஜஸ்டிஸ்சமநீதி, 3) பிரதர்கூட்சகோதரத்துவம், 4) ஈகுவாலிட்டிசமஉரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் தரப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் இந்நான்கு உரிமைகளும் இந்த தேசத்தால் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றதே தவிர நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அதிலும் குறிப்பாக பன்நெடுங்காலமாகவே இந்திய தேசத்தின் நீதித்துறையின் செயல்பாடு கவலை அளிப்பதாகவே அமைந்துள்ளது.

 சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிரான நிலைப்பாடு, வழக்குகளின் முடிவில் வழங்கப்படும் தண்டனை என அத்தனையும் முஸ்லிம்களின் நலனுக்கு எதிராகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.


நீதி வழங்கும் நீதிபதிகள் சட்டப்புத்தகத்தை பார்த்தும், சாட்சிகளை விசாரித்தும், ஆய்வு செய்தும் தீர்ப்பளிக்கின்றார்களா? இல்லை மனம் போன போக்கில் தீர்ப்பளிக்கிறார்களா? என்பதை முஸ்லிம்களுக்கெதிரான வழக்குகளில் அவர்கள் அளித்த தீர்ப்புகளே சான்றுபகர்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த தேசத்தின் பல்வேறு வழக்குகளில் 1303 மரண தண்டனை தீர்ப்புகளை இந்திய தேச நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன.

தொடர்ச்சியாக மூன்று நபர்கள் மட்டுமே தூக்கிலிடப்பட்டிருக்கின்றார்கள். மூவரும் முஸ்லிம்கள் 1. அஜ்மல் கசாப் 2. அப்சல் குரு 3. யாகூப் அப்துல் ரசாக் மேமன்.


நேற்று

அப்சல் குருவும்…. திரைப்பட பிண்ணனியிலான தீர்ப்பும்….

அப்சல் குருவின் தூக்கு தண்டனை, இதில் ஆயிரமாயிரம் கேள்விக் கணைகள் தொக்கி நிற்கின்றன. 

  ஜீ நியூஸ் நிறுவனம் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு அப்சல் குரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்த திரைப்படம் ஒன்றை எடுத்தது.

திரைப்படத்தின் பெயர்டிசம்பர் 13” வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது  இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லோருக்கும் தூக்குதண்டனை தீர்ப்பாக வழங்கப்படுகின்றது.
  
 அந்த திரைப்படத்தில் தூக்கு தண்டனையே கீழ் நீதிமன்றத்தால் தீர்ப்பாக வழங்கப்பட்டது.    இப்படித்தான் தீர்ப்பு இருக்க வேண்டுமென திரைப்படம் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களைத் தந்தது.

மேலும்,அது தான் மக்கள் எதிர் பார்க்கும் தீர்ப்பு என்றது திரைப்படம். இப்படி படம் எடுத்தது தவறு, அதை திரையிட்டது தவறு, உடனே தடைசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு டெல்லி நீதி மன்றத்தில் முறையிட்டனர். டெல்லி நீதிமன்றம் திரைப்படத்தை தடை செய்தது.

 படம் எடுத்தவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கெல்லாம் ஆளாகமாட்டார்கள் எனக்கூறி  தடையை அகற்றியது.

திரைப்படம் தங்கு தடையின்றி ஓடியது. இறுதியில் திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனையே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது. 

  ஆனாலும் அவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

 கீழ் நீதிமன்ற நீதிபதி திங்காரா கங்காரா என்பவரால் வழங்கப்பட்ட இந்த மொத்தத் தீர்ப்பும் பின்னாளில் உயர் நீதிமன்றத்தால் பல திருத்தங்களுக்கும்,  தலைகீழ் மாற்றங்களுக்கும் உள்ளாகியது.

 திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் நாடாளுமன்ற தாக்குதலின் மூளை என குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலை பேரா. எஸ்..ஆர்.ஜீலானி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பெற்றது.      

  ஆனால், உயர் நீதிமன்றம்  அவரை விடுவித்தது. உச்ச நீதிமன்றத்தின் அநீதியும் அந்த திரைப்படத்தின் தாக்கமும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நந்திதா ஹாக்ஸர் என்ற மூத்த வழக்கறிஞர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.


The supreme court however vacatet the stay on grounds that judges could not be influenced. It failed to appreciate how such film are responsible for creating a climate of fear and mistrust. Today even post acquittal geelani cannot get a house on rent. His children find it har to lead a normal life.(source:13 december a reader with on introduction by arunthathi rai page no:9)

 அதாவது உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்கிற்று. நீதிபதிகள் ஊடகங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள் என காரணம் சொன்னது.

 அது போன்ற திரைப்படங்கள் மக்களிடையே அச்சத்தையும், அவ நம்பிக்கை யையும் ஏற்படுத்துவதில் பொறுப்பு வகிக்கின்றன என்பதை கண்டு கொள்ள உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது.

 இப்போது ஜீலானி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை மக்கள் மத்தியில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்.

அவருக்கு ஒரு வாடகை வீடு கூட கிடைப்பதில்லை. அவருடைய குழந்தைகளும் ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திட முடிவதில்லை.


                                                                                                                                               (நூல்: ரீடர் , பக்கம்:9)

இன்று….

யாகூப் மேமனும்.... கருணை காட்டாத நீதிமன்றமும்.....

1962 இதே ஒரு ஜூலை மாதத்தில் 30 –ஆம் தேதி மும்பையின் மாஹிம் எனும் பகுதியில் பிறந்தவர் தான் யாகூப் அப்துர் ரஸ்ஸாக் மேமன் என்ற யாகூப் மேமன். தற்போது 53 –ஆவது பிறந்த நாளான ஜூலை 30 –ஆம் தேதியே அவரின் மரணமும் நிறைவேறி இருக்கிறது.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக! அன்னாரின் மண்ணறை வாழ்வை பூஞ்சோலையாக ஆக்குவானாக! நாளை மறுமையில் அத்தனை திடுக்கங்கங்களில் இருந்தும் அல்லாஹ் அன்னாரைக் காப்பானாக! மேலான சுவன வாழ்வை அல்லாஹ் அவருக்கு நல்குவானாக!! ஆமீன்!

1993 –ஆம் ஆண்டு மார்ச் 12 –ஆம் தேதி காலை முதல் பிற்பகல் 3:40 மணி வரை மும்பையின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. அதில் 257 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணிகளாக செயல்பட்ட தாவூத் இப்ராஹீம், ( யாகூப் மேமனின் சகோதரர் ) டைகர் மேமன் ஆகியோர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி விட்டனர்.

யாகூப் மேமன் உள்பட 189 பேர் கைது செய்யப்பட்டு ( யாகூப் மேமன் தன் சகோதரர் குறித்த எல்லா தகவல்களையும் காவல் துறைக்கு தந்து உதவி போலீசில் சரணடைந்தார். ஆனால், காவல் துறை கைது செய்ததாக பொய் கூறிற்று ) பத்தாயிரம் பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை ஒன்றை மும்பை தடா கோர்ட்டில் தாக்கல் செய்தது இந்தியாவின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பான C.B.I (Central Bureau Of Investigation).

இதில் யாகூப் மேமன் மீது சதி செய்தல், சதி செய்தோருக்கு பண உதவி செய்தல், சதி செய்ய உடன் படுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது.

1995 முதல் 2007 வரை நடந்த விசாரணைக்குப் பின்னர் கோர்ட் மும்பை தடா நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யாகூப் மேமன் ஹைகோர்ட்டுக்குச் சென்றார். அங்கேயும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றார். அங்கேயும் அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ஆம்! மரணதண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். நிராகரிப்பே அவருக்கு மிஞ்சியது. அவருடைய வழக்குரைஞர்கள் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர்.

கடந்த 27 –ஆம் தேதி செவ்வாய்கிழமை அவரது மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனில் ஆர். தவே, ஜோசப் குரியன் ஆகியோர் 3 நீதிபதிகள் ( தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த், அமிதவ ராய் ஆகியோர் ) அடங்கிய (பெஞ்ச்) அமர்வுக்கு வழக்கை மாற்றியது.

இந்த அமர்வும் சகோதரர் யாகூப் மேமனுக்கு மரண தண்டனையை உறுதி படுத்தியது.

மீண்டும் ஜனாபதி மற்றும் மகாராஷ்டிரா ஆளுநருக்கும் கருணை மனு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் மத்திய மந்திரி சபை ஒன்று கூடி ”ஜனாதிபதி கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்” என முடிவெடுத்து ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதியை சந்தித்து கோரியது.

மந்திரி சபையின் முடிவுக்கு ஒத்திசைந்து ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தார்.

இறுதி முயற்சியாக அவரது வழக்குரைஞர்கள் ஆனந்த் குரோவர், நித்யா ராமகிருஷ்ணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சந்தித்து “கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஓர் கைதிக்கு அபெக்ஸ் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தூக்கு தண்டனையை 14 நாள் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

இதன் விளைவாக இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதன் முறையாக நள்ளிரவிலேயே சுப்ரீம் கோர்ட் திறக்கப்பட்டு 4 –ஆம் நம்பர் கோர்ட்டில் சுமார் 90 நிமிடங்கள் விசாரணை மேற்கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

அதன் படி வியாழன் அதிகாலை 6:43 மணியளவில் அன்னார் தூக்கிலிடப்பட்டார்… இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்….

யாகூப் மேமன் யார்?

யாகூப் மேமனோடு சுமார் ஓராண்டு காலம் சிறையில் கழித்த பேராசிரியர், சாய்பாபா அவர்கள் தம்முடைய சிறை நினைவுகளை தி ஹிந்து நாளிதழுக்கு பகிரும் போது “யாகூப் வயதுக்கு மீறிய முதுமையில் உள்ளார். ( 21 ஆண்டு காலச் சிறைவாசம் அவரை பல் வேறு விதமான சித்ரவதைகளைக் கடந்தது தானே!? ) அவர் மிகச் சிறந்த ஆங்கில இலக்கியவாதி.

அல்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அரசியல் அறிவியல் மற்றும் ஆங்கில இலக்கியம் ஆகிய இரண்டு பாடங்களில் எம். ஏ. பட்டம் பெற்றுள்ளார்.

சக கைதிகளின் பல்வேறு சட்டத் தேவைகளையும், சிறை பிரச்சனைகளையும் தீர்த்து வைத்திருக்கின்றார். நாக்பூர் சிறைக்கூடத்தின் பல்வேறு திருத்தங்களுக்கும் கைதிகளின் சௌகர்யத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்கியிருக்கின்றார்.

முன்னாள் சிறை கண்காணிப்பாளர் வைபவ் குமார் கூறும் போது “எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத சாதாரண ஒரு கைதியாக இருந்தார். பிற கைதிகளைப் போல எவ்விதப் புகாரும் கூறியது கிடையாது. தினமும் ஐந்து வேளை தொழுவார். அதிக நேரம் படிப்பார்.

இவருக்காக இவர் அடைக்கப்பட்டிருந்த நாக்பூர் சிறையில் கடந்த 27 –ஆம் தேதியன்று ஒரு நாள் உண்ணாவிரததிற்கு சக சிறைக் கைதிகள் அழைப்பு விட்டிருந்தனர்.

யாகூப் மேமன் கடைசியாக முழங்கிய இரு முழக்கங்கள்: “டைகர் மேமனுக்கு சகோதரன் என்பதற்காக தூக்கிலிடுங்கள்; அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், மும்பை குண்டு வெடிப்புச் சதிகாரன் என்று கூறி என்னை தூக்கிலிடுவதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்”. 

நாளை….?

இந்தியாவில் மொத்தம் உள்ள சிறைச்சாலைகளின் எண்ணிக்கை 1382. மொத்த கைதிகளின் எண்ணிக்கை 3,72,296. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21% ஆகும்.

இந்த 21 % முஸ்லிம் கைதிகளில் யாரை வேண்டுமானாலும் எந்த நிரபராதிகளை வேண்டுமானாலும் இவர்கள் சதிகாரர்கள் என்று கூறலாம். மரண தண்டனை தீர்ப்பு வழங்கலாம்.

நேற்று நடந்த போது மௌனமாக இருந்தோம். இன்று நடக்கிற போதும் மௌனமாக இருப்போமேயானால் நாளை நடக்கும் போது நாம் என்ன கூக்குரல் இட்டாலும் அதற்கு எந்த பிரயோஜனமும் கிடைக்காது.

நாளை மறுமையில் இந்த அக்கிரமத்திற்கு மௌனமாக இருந்து எவ்வித குற்றமும் செய்யாத ஓர் அப்பாவி முஸ்லிமின் உயிர் பிரிய ஒரு விதத்தில் உதவியதற்காக அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் கேள்வி கணக்கிற்கும் கடும் தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவோம்.

முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்?


இந்திய தேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இந்த நிலைப்பாட்டில் முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் என்ன?

1. போராட முன் வர வேண்டும்….

நாம் மதிக்கின்ற ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்படுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ
مسلم: كتاب الإيمان

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்.

அதற்கு அண்ணலார் “உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.

நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள் நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்”  என்றார்கள்.

”அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது...நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர்”. என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?”  என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார்அவன் நரகவாதியே!” என்று பதில் கூறினார்கள்.                                                                                      (  நூல்: முஸ்லிம் )

உலக வாழ்வின் அலங்காரம் என்றும், சோதனை என்றும் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் வர்ணிக்கப்படுகிற பொருளாதாரத்தைப் பாதுகாக்கவே போராட அனுமதி இருக்கிறது எனும் போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் இறுதிப்பேருரையின் போது கஅபாவின் மேன்மையை விட ஓர்  இறைநம்பிக்கையாளனின் மானம், மரியாதை, செல்வம், உயிர் உயர்வானது என்று கூறினார்களே அத்தகைய உயர்வான ஒன்றிற்காக எந்தளவு ஒரு முஃமின் முக்கியத்துவம் தந்து போராட முன்வர வேண்டும் என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது.

2. வீரியம் நிறைந்த போராட்டமாக இருக்க வேண்டும்....

  أَنَّ رَجُلا جَاءَ إِلَى النَّبِيِّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُو جَارَهُ ، فَقَالَ لَهُ النَّبِيُّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ يَشْكُو ، فَقَالَ لَهُ النَّبِيَّ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ يَشْكُو ، فَقَالَ لَهُ : اصْبِرْ ، ثُمَّ أَتَاهُ الرَّابِعَةَ يَشْكُوهُ ، فَقَالَ : اذْهَبْ فَأَخْرِجْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَجَعَلَ لا يَمُرُّ بِهِ أَحَدٌ إِلا قَالَ لَهُ : شَكَوْتُ جَارِي إِلَى رَسُولِ اللَّهِ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : اذْهَبْ فَأَخْرِجْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَجَعَلَ لا يَمُرُّ بِهِ أَحَدٌ إِلا قَالَ : اللَّهُمَّ الْعَنْهُ ، اللَّهُمَّ أَخِّرْهُ ، قَالَ : فَأَتَاهُ ، فَقَالَ : يَا فُلانُ ، ارْجِعْ إِلَى مَنْزِلِكَ فَوَاللَّهِ لا أُوذِيكَ أَبَدًا "

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார் செய்தார்.'நீர் சென்று பொறுமையாக இரு! என்று கூறினார்கள். அந்த மனிதர் (மீண்டும்) இரண்டாம் தடவை வந்து தன் அண்டைவீட்டாரைப் பற்றி புகார் செய்தார்.'நீர் சென்று பொறுமையாக இரு! என்று நபி (ஸல்) கூறினார்கள். மூன்றாம் தடவை (புகார் கூற) வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் ''நீர் சென்று உன் வீட்டுப் பொருட்களையெல்லாம் வீதியில் எறி! மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள்.
நீர் அவர்களிடம் விவரத்தை கூறு! மக்கள் அவரை சபிப்பார்கள், அல்லாஹ்வும் அவ்வறே செய்வான்'' என்று கூறினார்கள். அவரும் அவ்வாறு செய்தார் (நபிகளார் சென்னபடியே நடக்கவும் செய்தது. இதன் பின்னர்) அவரின் அண்டை வீட்டுக்காரர் வந்து, நீர் உம் வீட்டுக்கு திரும்பிச்செல்லும்! (இனிமேல்) நீ வெறுக்கும் எதையும் என்னிடம் காணமாட்டீர்! என்று கூறினார். 

                       ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: அபூதாவூத் )

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுகிறது, அநீதி இழைக்கப்படுகின்றது என நான்கு சுவற்றிற்குள் சப்தம் போடுவதால் எந்த வித பலனும் ஏற்படாது. முஸ்லிம் சமூகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றது. எவ்வாறெல்லாம் அநீதி இழைக்கப்பட்டு இருக்கின்றது என்று உலக அரங்கிற்கும், சகோதர மத அன்பர்களுக்கும் வீரியத்தோடும் உணர்த்த வேண்டும் என்பதை மேற்கூரிய நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

3. இறைநம்பிக்கையாளர் உயிரின் மகத்துவம் உணர்த்தப்பட வேண்டும்….

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்.

عن عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب النبي صلى الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة من نحاس، قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من أسرى المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح، وقال لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل. فأمر به أن يلقى في البقرة فبكى، فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن تصنع بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن يكون لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها. قال: فأعجب منه: وأحبّ أن يطلقه، فقال: قبل رأسي وأطلقك. قال: ما أفعل. قال تنصّر وأزوجك بنتي وأقاسمك ملكي. قال: ما أفعل. قال قبل رأسي وأطلقك وأطلق معك ثمانين من المسلمين. قال: أما هذه فنعم. فقبّل رأسه، وأطلقه، وأطلق معه ثمانين من المسلمين. فلما قدموا على عمر بن الخطاب قام إليه عمر فقبل رأسه، قال: فكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يمازحون عبد الله فيقولون: قبلت رأس علج، فيقول لهم: أطلق الله بتلك القبلة ثمانين من المسلمين.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள், இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள்

ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட புனிதர்களில் ஒருவர். பத்ரில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களித்த பாங்கான வீரரும் கூட.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கிஸ்ரா மன்னனுக்கு இவர்களிடம் தான் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய கடிதத்தை கொடுத்தனுப்பினார்கள்.

இன்னும் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க கௌரவத்திற்கு சொந்தக்காரர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமை நோக்கி அனுப்பப்பட்ட ஒரு படைக்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) தளபதியாக நியமிக்கப் பட்டார்கள்.

நீண்ட போராட்டத்திற்கு பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம் கூடுதலாகவே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கு முன்னால் தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.

ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

உடனடியாக மிகப்பெரிய அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும் நீரால் நிரப்பப்பட்டது.

தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி) அவர்களை நோக்கிநீர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் உம்மை நான் விட்டு விடுகின்றேன்என்றான் அரசன்.

ஒரு போதும் நான் அத்தகைய இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும் வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.

என் உயிரை விட இஸ்லாமே மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான். கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது. இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.

மீண்டும் இன்னொரு முஸ்லிம் கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை செய்யப்படுகின்றார்.

மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ தான் என்ன சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா? என்று கேட்டான்.

அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள். ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.

இந்த செய்தி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி அருகில் அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.

நான் ஒன்றும் நீ ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே என்று தான்.

அல்லாஹ் மாத்திரம் என் தலைமுடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால் அவையனைத்தையும் சத்திய மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான் நான் அழுகின்றேன் என்றார்கள்.

இதுவரை மரணத்தின் விளிம்பில் நிற்கிற எத்தனையோ மனிதர்களின் கெஞ்சல்களை கேட்டுப் பழகிய அரசனுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இந்த அணுகுமுறை புதிதாகத் தோன்றியது.

அப்படியே ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்ற அரசன் அவரை விடுவிக்க ஆணை பிறப்பித்தான். அருகில் அழைத்த அரசன் நீர் கிறிஸ்துவனாக மதம் மாறிவிடு! உமக்கு எனது மகளை திருமணம் செய்து தருகின்றேன். எனது ஆட்சியில் பாதி நிலப்பரப்பை ஆளும் அதிகாரத்தைத் தருகின்றேன்என்றான். 

ஒரு போதும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார்.
அதற்கு அந்த அரசன்என் நெற்றியில் முத்தமிட்டால் நான் உம்மையும் உம்மோடு சிறை பிடித்திருக்கிற 80 நபர்களை விடுதலை செய்து விடுகின்றேன்என்று கூறினான்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் அப்படி என்றால் உலகில் நீ தான் மிகச் சிறந்த மனிதன் இப்போதே உம் நெற்றியின் மீது முத்தமிடுகின்றேன்என்று கூறி முத்தமிட்டார்கள்.

சக தோழர்களை விடுவித்த மகிழ்ச்சியில் மதீனா நோக்கி வந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை மதீனாவின் எல்லையில் பெரும் கூட்டத்தோடு வந்து நின்று வரவேற்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

சுற்றியிருந்த மக்களில் சிலர் உயிருக்கு பயந்து எதிரியின் நெற்றியில் முத்தமிட்டு வந்த கோழை என்பதாக விமர்சித்து அப்துல்லாஹ் (ரலி) அவர்களை கேலி பேசினர்.

உடனே, உமர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு சுற்றியிருந்த மக்களை நோக்கி அவர் கொடுத்த ஒரு முத்தம் தான் 80 முஸ்லிம்களின் உயிரையும், ஈமானையும் காப்பாற்றியுள்ளதுஎன்று கூறினார்கள்.

கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என்கிற வெறியில், முஸ்லிம்களை கொன்று அவமானப்படுத்த வேண்டும் என்கிற ஆணவத்தில் இருந்த ரோம் அரசனுக்கு ஈமானின் வலிமையையும், முஸ்லிம்களின் உயிருக்கு உண்டான மரியாதையையும், கண்ணியத்தையும் இதை விட அழுத்தமாக உணர்த்த முடியாது என்பதை மிக அழகாகவே தங்களின் செயல்பாட்டால் நிரூபித்தார்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள்.
                                                    (நூல்: உஸ்துல் ஃகாபா)

எனவே, எதைச் செய்தாவது ஒரு முஸ்லிமின் உயிர் காப்பாற்றப் பட வேண்டும், அது சிறு புன்னகையின் மூலமாகவோ, முத்தத்தின் மூலமாகவோ, எழுத்தின் மூலமாகவோ, ஊடகத்தின் மூலமாகவோ, பேச்சின் மூலமாகவோ, போராட்டத்தின் மூலமாகவோ, உயிரைக் கொடுப்பதின் மூலமாகவோ கூட இருக்கலாம்.


எனவே, நம்முடைய ஜும்ஆ உரைகளில் கடந்த காலங்களில் அமெரிக்காவின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டியிருப்போம். இஸ்ரேலின் கொடுமைகளை விளக்கியிருப்போம். மியான்மரின் கொடூரங்களை கண்டித்திருப்போம்.

விஸ்வரூபம், இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் போன்ற திரைப்படங்களின் வாயிலாக இந்த சமூகத்தில் முஸ்லிம்களை கேவலப்படுத்த துணிந்த கயவர்களை அடையாளம் காட்டியிருப்போம்.

இதோ இந்த இந்திய தேசத்தின் எங்கோ ஓர் மூலையில் இறுதி வரை உயிர் வாழ்வதற்காக போராடி, தான் ஒரு குற்றமும் செய்யாதவன் என்று முழங்கி, மண்ணறையில் துயில் கொண்டிருக்கிற, யாகூப் மேமன் குற்றமற்றவர் என்று கொஞ்சம் முழங்குவோம்.

அல்லாஹ் நாளை மறுமையில் ”என் அடியான் அநீதி இழைக்கப்பட்ட போது, அதற்காக நீ என்ன செய்தாய்? என்று கேட்டால்...

என்ன பதில் வைத்திருக்கின்றோம்? மறுமையில் பதில் சொல்லிட, அல்லாஹ்வின் அன்பைப் பெற்றிட ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

  நீதி நிலை நாட்டப்படவும், இறைநம்பிக்கையாளரின் உயிரை பாதுகாக்கவும் தொடர்ந்து துணிவுடன் போராடுவோம்!

இன்ஷா அல்லாஹ்! இனி வரும் காலங்களில் முஸ்லிம்களின் உயிரும், உடமையும், உரிமைகளும் இந்த தேசத்தில் பாதுகாக்கப்படலாம்.

எம்முடைய தாழ்மையான வேண்டுகோளும், ஆலோசனையும் இது தான்! அவரவர்களின் பகுதிகளின் சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு யாகூப் மேமன் அவர்களுக்காக ஜனாஸா தொழுகையையோ, துஆ மஜ்லிஸோ வைத்து அவர்களின் மஃக்ஃபிரத்திற்கும், உயர் சுவனத்திற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

                          வஸ்ஸலாம்!!!