Thursday 26 September 2019

இஸ்லாம் வலியுறுத்தும் சமூகப் பொறுப்புணர்வு!!!

இஸ்லாம் வலியுறுத்தும் சமூகப் பொறுப்புணர்வு!!!




சுபஸ்ரீ மரணம் அதைத் தொடர்ந்து சமூகத்தில் நாள் தோறும் நடைபெறும் சர்ச்சைகள், பிரச்சனைகள் நாம் அறிந்ததே.

மென்பொருள் பொறியாளர், இயற்கை முறையில் அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து உலகம் முழுவதும் அனுப்பும் தலை சிறந்த உற்பத்தியாளர், மனச்சோர்வு அடைந்தவர்களை ஸ்கூபா எனும் ஆக்ரோஷ அமெரிக்க நடனத்தின் மூலம் குணப்படுத்தும் சர்வதேச பயிற்சியாளர் 23 வயது இளம் பெண் சுபஸ்ரீ.

சென்னை கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடந்த 12 –ஆம் தேதியன்று நடைபெற்ற ஆளும்கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்கு வருகைதரும் ஆளும் கட்சி பிரமுகர்களை வரவேற்க  துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பேனர்களில் ஒன்று விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீயின் மீது விழ, சாலையில் கீழே விழுந்து கிடக்கும் சுபஸ்ரீ அவர் மேல் கிடக்கும் பேனர் என இது எதுவும் தெரியாமல் சாலையில் சென்ற தண்ணீர் லாரி ஏறி இறங்க 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சுபஸ்ரீ இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதற்குப் பின் நடைபெற்ற, நடைபெறுகிற எல்லாவற்றையும் நாம் ஊடகம், மீடியாக்களின் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

இந்த தவறு நிகழ்வதற்கு அலட்சியம், அராஜகம், சட்டவிரோதம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், சமூகப் பொறுப்பற்ற உணர்வால் நடந்தேறிய கொடூரமான கொலை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

லாரி ஓட்டுநர், பேனர் அச்சடித்தவர், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகரிகள், திருமண வீட்டார் என இவ்வளவு பேர்களைத் தாண்டி சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தார்மீகமாக இதில் பங்குண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

இன்று ஒவ்வொரு தனி மனிதனில் தொடங்கி, இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் என ஒரு வகையான புகழ் போதையில் இந்த கலாச்சாரத்தில் மூழ்கி, எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாத ஒரு மனநோயாளி சமூகமாக மாறிப்போய் இருக்கின்றோம்.

இந்த பேனர் கலாச்சாரம் இன்று இஸ்லாமிய சமூகத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

வாருங்கள்! சமூகத்தின் மீதான நமக்கான பொறுப்புகள் என்ன? என்பதை இஸ்லாத்தின் ஒளியில் பார்ப்போம்.

மனித வாழ்வென்பது மகத்துவங்கள் பல நிறைந்தது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளியைத் தான் நாம் வாழ்க்கை என்கிறோம்.

அந்த வாழ்க்கை குறித்தான நம்முடைய கண்ணோட்டம் மிகவும் முக்கியத்துவமானது, அது குறித்தான லட்சியம் அவசியமானதும் கூட.

ஏதோ பிறந்து விட்டோம், வாழ்ந்து விட்டுப் போவோம் என்கிற சிந்தனையோடு வாழ்பவன் சராசரி மனிதனாகவே கணிக்கப்படுவான்.

தான் வாழ்ந்ததோடு மாத்திரமல்லாமல் இந்த உலகத்திற்கும் அவனுடைய வாழ்வின் மூலம் ஏதாவது ஒன்றை தந்து விட்டு செல்பவனே மாமனிதனாக கவனிக்கப்படுவான்.

உயர்ந்த லட்சியத்தோடும், கண்ணோட்டத்தோடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புமாறு இஸ்லாம் தூண்டுகிறது.

وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ

அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்து வைத்திருக்கின்றோம். அவர்கள் விட்டுச்சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம், மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் நாம் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்”.                                              (அல்குர்ஆன்: 36: 12)

அப்படியானால், ஒவ்வொரு மனிதனும் தன் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான வாழ்வு குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு மனிதன் தான் யார்? தனக்கான பொறுப்பு என்ன? தான் யார் மீதெல்லாம் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டிருக்கின்றான்? என்பதை சிந்தித்து பார்க்க கடமை பட்டிருக்கின்றான்.

மனிதன் என்பவன் பூலோகத்தின் பிரதிநிதி..

துவக்கமாக அல்லாஹ் மனித குலத்தின் மூலமான ஆதம் {அலை} அவர்கள் படைப்பு குறித்து வானவர்களிடம் விவரித்த போது

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً

அந்த நேரத்தை நினைவு கூர்ந்து பாரும்! (நபியே), உம் இறைவன் வானவர்களை நோக்கி நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) ஏற்படுத்தப் போகின்றேன்என்று கூறினான்.                                 (அல்குர்ஆன்: 2: 30)

மனிதன் என்பவன் பிரபஞ்சம் முழுவதின் பிரதிநிதி

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ (32) وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ (33)

அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.    (அல்குர்ஆன்: 14: 32, 33)



هُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً لَكُمْ مِنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ (10) يُنْبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالْأَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (11) وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ (12) وَمَا ذَرَأَ لَكُمْ فِي الْأَرْضِ مُخْتَلِفًا أَلْوَانُهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَذَّكَّرُونَ (13) وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (14) وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ (15) وَعَلَامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ (16)

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.

இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூறும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்). (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.                                           (அல்குர்ஆன்: 16: 10 - 16)

மனிதன் என்பவன் இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் பிரதிநிதி ஆவான். அவனுக்காக வானம், வானத்தின் கோள்கள், நட்சத்திரம், சூரியன் சந்திரன், விண்வெளி, மழை, காற்று, பூமி பூமியின் மலை, ஆறுகள், நதிகள், தாவரங்கள், உயிரனங்கள், காடு, கரை இரவு பகல், கடல் என எல்லாப் படைப்புகள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.

இப்படியாக ஒரு புறம் இப்பிரபஞ்சத்தின் எல்லா வகையான படைப்புகளோடும் மனிதன் தொடர்கிறான், இணைகிறான்.

يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا

மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்”. (அல்குர்ஆன்: 49: 13)

وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا

மேலும், நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு வம்ச உறவின் மூலமாகவும், திருமணத் தொடர்பின் மூலமாகவும் இரு தனித்தனியான உறவு முறைகளை அவன் ஏற்படுத்தினான். உம் இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்                                                (அல்குர்ஆன்: 25: 54)

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

திண்ணமாக! இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே! உங்கள் சகோதர உறவுகளை உங்களுக்கிடையே சரி செய்து கொள்ளுங்கள்                                                (அல்குர்ஆன்: 49: 10)

1.   இரத்த உறவுகள் ( தந்தை, தாய் வழி உறவுகள்.
2.   திருமணத்திற்கு பிந்தைய ( மனைவியின் மூலம் வருகிற ) உறவுகள்.
3.   ஈமானிய ( சகோதரத்துவ உறவுகள்.


وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ()

அந்த அல்லாஹ்வுக்கே நிங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்த பந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்”.   ( அல்குர்ஆன்: 4: 1 )

இன்னொரு புறம், தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரன் சகோதரி, உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தார்கள், கோத்திரத்தார்கள் என சக மனிதர்களோடு நீண்டதொரு பட்டியலில் தொடர்கிறான், வாழ்கிறான்.

அப்படியானால், மனிதன் என்பவன் தனியொருவன் அல்ல. அவன் மாபெரும் சமூகத்தோடு வாழும் ஒரு உன்னத படைப்பு.

இதை ஒரு மனிதன் உணர்ந்து கொண்டான் என்றால் தான் வாழும் நிலத்தின் மீதான தனக்கான பொறுப்புகள் என்ன? தான் சுவாசிக்கும் காற்றின் மீதான தனக்கான பொறுப்புகள் என்ன?

மலையின் மீதான, வானின் மீதான, பூமியின் மீதான, பிற உயிரினங்களின் மீதான, கடலின் மீதான, தாவரங்கள், காடுகள் மீதான தனக்கான பொறுப்புகள் என்னென்ன? என்பதையும், தன் பெற்றோர், சகோதர, சகோதரிகள், மனைவி மக்கள், உறவுகள், நண்பர்கள், சொந்தங்கள், சக மனிதர்கள் மீதான, ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை விளங்கிக் கொள்வான். அதன் பின்னர் அவன் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது சுவடுகளையும், தடங்களையும் பதிவு செய்து மாமனிதனாக செல்வான்.

இன்ஷாஅல்லாஹ்... நாமும் மாமனிதனாக வாழ வல்ல ரஹ்மான் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்!

இந்த அடிப்படையில் மனிதனைப் பொறுத்தவரை அவனுடைய எண்ணங்கள், செயல்கள், சொற்கள், ஏனைய விவகாரங்கள் அனைத்தும் பிற மனிதர்களோடும், பிரபஞ்சத்தோடும், பிரபஞ்சத்தின் ஏனைய உயிரினங்கள், படைப்புகளோடும் தொடர்புடையது. ஆகவே, அவைகள் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டே தீரவேண்டும்.

அதாவது, அவனது செயல்கள் அவன் சார்ந்து வாழ்கிற சமூகத்திற்கு நன்மை பயக்குமா? அல்லது தீமை பயக்குமா? என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சமூகத்தில் அதன்மூலம் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தே அச்செயல் சமூகப் பொறுப்புணர்வு மிக்க செயலா? அல்லது சமூகப் பொறுப்புணர்வற்ற செயலா? என்று பாகுபடுத்தி பார்க்க இயலும்.

மனிதனை சமூகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவும், முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை குறிப்பாகவும், எல்லா நிலைகளிலும் அவனது சொல், செயல், எண்ணங்களால் மற்றவர்களுக்கு துன்பம் வரும் அளவுக்கு ஒருபோதும் நடந்துகொள்ளக் கூடாது. தன்னைக் குறித்து மட்டும் சிந்திக்காமல் பொதுநலனுடன் சிந்திப்பவனாகவே ஒரு முஸ்லிம் எப்போதும் இருக்க வேண்டும்.

நான் பேசும் பேச்சு, எனது நடத்தை, எனது எண்ணம் இவைகளால் எவராவது காயப்படுவார்களா..? தொந்தரவு அடைவார்களா..? நிம்மதி இழப்பார்களா? என்றெல்லாம் யோசித்து சிந்தித்து செயல்படும் ஒரு மனிதனையே இஸ்லாம் சமூகப்பொறுப்பு மிக்கவன் என்று கூறுகின்றது.

சாலை விபத்துகளும்பேணப்பட வேண்டிய பொறுப்புணர்வும்....

2016-ம் ஆண்டு, நாடு முழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அந்த விபத்துகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்து, மொத்தமாக 4 லட்சத்து 60 ஆயிரம் விபத்துகளும், அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. 

இந்திய அளவில் இருக்கும் புள்ளிவிவரங்களின் படி, தமிழ்நாடு சாலை விபத்துகளில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடந்த2016-ம், 2017-ம், ஆண்டு நடந்த விபத்துகளின் எண்ணிக்கையை விட, 2018-ம் ஆண்டு விபத்துகள் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பது கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. 

காவல்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டின் படி தமிழகத்தில் 2016 –ஆண்டு 71000 சாலை விபத்துகளும், 17 ஆயிரம் உயிரிழப்புகளும், 2017 –ஆம் ஆண்டு 65 ஆயிரத்து 562 சாலை விபத்துகளும், 16 ஆயிரத்து 157 உயிரிழப்புகளும், 2018 –ஆம் ஆண்டு 63 ஆயிரத்து 920 சாலை விபத்துகளும், 12 ஆயிரத்து 216 உயிரிழப்புகளும், இந்த (2019 –ஆம்) ஆண்டு மார்ச் வரை 15 ஆயிரத்து 44 சாலை விபத்துகளும், 2 ஆயிரத்து 774 உயிரிழப்புகளும் அதிகபட்சமாக சென்னையில் 988 சாலை விபத்துகளும் 340 உயிரிழப்புகளும் நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 –ஆம் ஆண்டின் மொத்த சாலை விபத்துகளில் 28.8 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இரு சக்கர வாகன விபத்துகள் மட்டும் 1,44,391 ஆகும். இதில் 36,803 பேர் இறந்துள்ளனர். 1,35,343 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுவரை ஏற்பட்டுள்ள விபத்துகளுக்கு அரசு பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதிவேகமாகப் பயணிப்பதால் பெரிய அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கவனக்குறைவாகவும், ஆபத்தாகவும் பயணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 

சாலை விபத்துகளைக் குறைக்க  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. (நன்றி: விகடன் 15/8/2018, புதிய தலைமுறை 20/7/2019 ஆன்லைன் வெளியீடு)

தங்கள் உயிரையும், மற்றவர்கள் உயிரையும் கருத்தில் கொண்டு விதிகளை மீறாமல், கவனம் சிதறாமல், அவசரப்படாமல் பயணம் செய்வது சாலை விபத்துகளை பெரும் அளவில் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனினும், சாலைகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் பொறுப்புணர்வுடன் பயணிக்க வேண்டும்.

இஸ்லாம் கூறும் சாலை மற்றும் பாதையின் ஒழுங்குகள்...

1.   நடுநிலை பேணுதல். பெருமையை தவிர்த்தல்.

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا

“மேலும், ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில் அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்”.                     (அல்குர்ஆன்: 25: 63)

இபாதுர் ரஹ்மான் - ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள் எனும் சிறப்பு பெற்ற மனிதர்களின் பல்வேறு பண்புகளை பட்டியலிடும் அல்லாஹ் துவக்கமாக அவர்களின் நடை குறித்து குறிப்பிடுகின்றான்.

وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ

“மேலும், பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும், ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள்வாயாக!” என்று லுக்மான் {அலை} தமது மகனுக்கு உபதேசம் செய்தார் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.                          (அல்குர்ஆன்: 31: 18, 19)

வீதிகளில் நாம் நடந்து செல்லும் போது அடக்கமாகவும், பணிவாகவும், மிதமான நிலையை கையாண்டும் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

மாறாக நான் செல்வந்தன், நான் அரசியல்வாதி, நான் பதவி. பட்டம்,அதிகாரம் உடையவன், என்று ஆணவத்தோடு நடந்து சென்றால் அதுவே  அவரின் அழிவுக்கு காரணமாகிவிடும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். (நூல்: முஸ்லிம் 5789)

இந்த இறைவசனங்களும், நபிமொழியும் வாகனத்தில் செல்வதையும் எடுத்துக் கொள்ளும்.

சமூகத்தில் இன்று தங்களது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளும் அடையாளமாகவே விலை உயர்ந்த, ஆடம்பர இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் போக்கு அதிகரித்து இருக்கின்றது.

பல நேரங்களில் விலை உயர்ந்த என் வாகனத்தை விட சாதாரண பைக் முந்துவதா? ஓட்டை கார் முந்துவதா? டப்பா பஸ் முந்துவதா? என்கிற செருக்கும், பெருமையும் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்த தூண்டுகின்றது.

2.   விதிமுறைகளை அறிந்து வைத்தல், அதை பின்பற்றுதல்

روى البخاري ومسلم في صحيحيهما من حديث أبي سعيد الخدري رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: «إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ
 فَقَالُوا: مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا، قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا»، قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ؟ قَالَ: «غَضُّ الْبَصَرِ، وَكَفُّ الْأَذَى، وَرَدُّ السَّلَامِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ»

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்: “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.

الطريق في اللغة: من طَرق، وهو المطروق، والممر الواسع الممتد من أوسط الشارع"(المعجم الوسيط، تأليف إبراهيم مصطفى وآخرون- 1/655).
  وفي الاصطلاح: جاء تعريفه في نظام المرور بالمملكة العربية السعودية
بأن كل سبيل مفتوحة لسير وسائط النقل والبحر والمشاة والحيوانات"(أحكام حوادث المرور في الشريعة الإسلامية أ/ محمد علي شبيب القحطاني: ص24).
  وعرفه الشيرازي بقوله: سبيل مفتوح للمرور العام من مشاة وحيوانات ومركبات، بما في ذلك الشوارع والساحات والجسور أو ما يشاهبها"(فقه المرور، محمد الشيرازي: ص 53).
  تعريف آداب الطريق بوجه عام: هي الأدبيات والأنظمة المتعلقة بحفظ الطريق بما فيه من ممتلكات عامة، ومشاة، وركبان، ودواب، ومركبات، ويضمن بها حفظ الأرواح والأموال والأعراض"(آداب الطريق: بدر سالم).
  للطرق أمساء ذكرها الفقهاء منها: السبيل، والشارع وهو الطريق الأعظم الذي يسلكه الناس عامة، والفج وجمعه فجاج، وهو الطريق الواسع بني جبلين، والممر موضع المرور، والمسلك، والدرب ونحوه"(أحكام حوادث المرورية في الشريعة الإسلامية، ص9-22).

பாதை என்பதை குறிக்க அரபியில்தரீக்என்கிற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.

இதை வெறும் மனிதர்கள் நடந்து செல்லும் பாதையாக கவனிக்காமல் மனிதர்கள் நடந்து செல்ல, வாகனிக்க, பயணிக்க பயன்படும் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் என சமகால அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேற்கூறிய நபிமொழி இஸ்லாமிய வழிகாட்டுதலை தந்தாலும், பொதுவாக நாம் பயன்படுத்துகிற பாதைகள், சாலைகள் ஆகியவற்றின் விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதன் அவசியத்தையும், அதை அவசியம் கடைபிடிப்பதையும் உணர்த்துகின்றது.

3.   பிறருக்கு அச்சமேற்படும் வகையில் வாகனத்தை ஓட்டுதல் (அ) அதிக ஒலி எழுப்புதல்….

عن أم هانئ بنت أبي طالب -رضي الله عنها- عن النبيِّ صلى الله عليه وسلم في قولِه تعالى: (وَتَأْتُونَ فِي نَادِيكُمُ المُنْكَرَ) قال: "كانوا يَخْذِفُونَ أهلَ الأرضِ ويَسْخَرُونَ منهم"(رواه الترمذي:٣١٩٠، وحسنه) وفي رواية: أنَّها سألت رسولَ اللهِ صلى الله عليه وسلم قالت: قلتُ: يا رسولَ اللهِ ! أرأيتَ قولَ اللهِ -عزَّ وجلَّ-: (وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنْكَرَ) ما ذلك المنكرُ الَّذي كانوا يأتون في ناديهم؟ قال: "كانوا يسخرون بأهلِ الطَّريقِ ويُخوِّفونهم"(رواه البيهقي في شعب الإيمان:٥-٢٣٠٣، وقال: له متابعة).

உம்மு ஹானீ (ரலி) அவர்கள் “அல்லாஹ் “உங்களின் சபைகளில் வைத்தே தீயசெயல்களில் ஈடுபடுகின்றீர்கள்” என்று லூத் {அலை} அவர்களின் சமூகம் குறித்து விமர்சிக்கின்றானே, அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? என்று வினவினார்கள்.

அதற்கு மாநபி {ஸல்} அவர்கள், “பாதையில் செல்பவர்களை, சாலையில் பயணிப்பவர்களை அவர்கள் பயமுறுத்தினார்கள்என்று பதிலளித்தார்கள்.

இன்றைக்கு நடைபெறும் பெரும்பாலான விபத்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன், அதிக ஒளி உமிழும் எல்..டி விளக்குகள், அதிக சப்தத்தை எழுப்பும் சைலன்ஸர்கள் பொருத்திய கார்கள் மற்றும் பைக்குகள் முக்கிய காரணங்களாக இடம் பெறுகின்றன.

4.   பிறருக்கு இடையூறு தராதவாறு நடந்து கொள்பவருக்கு சோபனம்...

روى البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»

“ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்”. இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த நபிமொழி பாதையில் இடையூறு ஏற்படுத்துபவற்றை அகற்றுபவருக்கான பிரதிபலன் குறித்து பேசுகின்றது. வாகனம் ஓட்டும் ஒருவர் எவருக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் ஓட்டுகின்றார் என்றால் அவருக்கும் இது பொருந்தும்.

விபத்து மூலம் ஏற்படும் இழப்புகள் சாதாரணமானது அல்ல. ஒருவர் விபத்துக்குள்ளாகிறார் என்றால் அவரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறது ஆய்வறிக்கைகள்.

சில போது ஏற்படுகிற விபத்துகளில் ஒருவர் இறந்துபோகிறார் என்றால், அவரின் உயிரிழப்புக்குப் பின்னால் அவரின் குடும்பம், அவரின் நிறுவனம், அவர் வேலை பார்த்த நிறுவனம் அல்லது கடை, அல்லது அவர் பார்த்த பணியின் மூலம் பயனடைந்தவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஆனால், உயிரிழப்புக்கு பதிலாக அவர் காயமடைகிறார், உடல் உறுப்புக்கள் சேதமடைகிறது அல்லது உருக்குலைந்து போகிறது என்றால் அவர் வாழும் காலமெல்லாம் அவஸ்தைப் படுவதோடு தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் அவஸ்தையில் ஆழ்த்தி விடுகின்றார்.

உயிரிழப்பு, காயங்கள் என இதைத் தாண்டி அவர் குடும்பம் பொருளாதாரத்தை இழக்கிறது. அவர் நிறுவனம் ஒரு நல்ல தலைவனை இழக்கிறது. நாடு நல்ல மனிதரை இழக்கிறது என இறந்து போன காயம் பட்டவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்து இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.

எனவே, சாலைகளில், பாதைகளில் நமக்கான பொறுப்புணர்வை உணர்வோம்! விபத்தில் சிக்காத, விபத்தை ஏற்படுத்தாத பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்!

வல்ல ரஹ்மான் நம் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுகின்றவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!