Thursday 2 March 2017

இனிது! இனிது!! தேர்வு இனிது!!!



இனிது! இனிது!! தேர்வு இனிது!!!



தற்போது, சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 தேர்வு தொடங்கி இருக்கும் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்க இருக்கிறது.

ப்ளஸ் டூ தேர்வுகளை இந்தாண்டு 8,98,832 ( எட்டு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து எண்ணூற்றி முப்பத்து இரண்டு ) மாணவ மாணவியர்கள் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் எழுதுகின்றனர்.

கடந்த ஆண்டை விட 65,000 மாணவ மாணவியர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர் என அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த 2 தேர்வுகளையும் எதிர் கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவச் சமூகத்திற்கு தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

சமீபகாலமாகவே தேர்வெழுதும் மாணவர்களைத் தாண்டி பெற்றோர்களையும் தேர்வு பயம் தொற்றிக் கொண்டுள்ளது. தங்களின் பிள்ளைகள் தேர்வுகளின் அதிக மதிப்பெண்கள் பெற்று, வெற்றி வாகை சூட வேண்டும் என்ற வேட்கையில் அறிமுகம் ஆன அத்துனை பேர்களிடமும்என் மகன்/மகள் இந்த வருஷம் ப்ளஸ் டூ/ எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுதுகிறார் துஆச் செய்யுங்கள்என்று கூறுகிற அநேகம் பேர்களை நாம் அன்றாடம் சந்தித்து வருகின்றோம்.

தேர்வெழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் தாண்டி சமீப காலங்களில் சமூகத்தின் அத்துனை பேர்களையும் இந்த பொதுத்தேர்வுகள் கவனத்தில் ஈர்த்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

ஆம்! பொதுத் தேர்வுகளுக்கு மூன்று மாதத்திற்கும் முன்பாகவே காட்சி, எழுத்து ஊடகங்கள், சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என அத்துனை பேரும் களமிறங்கிதேர்வு பயம் நீங்க என்ன வழி? அச்சம் வேண்டாம்! இனிது! இனிது! தேர்வு இனிது! என்பன போன்ற தேர்வு வழிகாட்டி, தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல. இஸ்லாமிய அமைப்புகளும், பள்ளிவாசல் நிர்வாகங்களும், ஜமாஅத்துல் உலமா சபையும் தற்போது அந்தந்த மஹல்லாக்களில் இவ்வாறு செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்த அதீத கவனத்திற்கு மூன்று காரணங்களைக் கூறலாம்.

1. நாடெங்கிலும் பெருகிப் போயிருக்கும் மாணவர்கள் தற்கொலைகள்.
2. அதிக மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்கிற பார்வை.
3. இன்றைய பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் கௌரவம், மரியாதை எனும் அகங்காரம்.

1. தேர்வுக்கு முன்னும் பின்னும் மாணவர்களின் நிலைகள்...

இந்திய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும், 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக மாணவச் சமூகம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரிசல்ட் வரும் நாள் வரை ஒரு வித பதட்டத்தோடும், அச்சத்தோடும், மனச் சோர்வோடும் காணப்படுகின்றனர்.

National crime records bureau ( NCRB – நேஷனல் க்ரைம் ரிகார்ட்ஸ் ப்யூரோ ) என்ற அமைப்பின் கூற்றுப்படி நாடெங்கிலும் நாளொன்றுக்கு 7 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

2009 –இல் 2000 மாணவர்கள், 2011 –இல் 2381 மாணவர்கள், இன்னொரு புள்ளி விவரப்படி நாடெங்கிலும் நடைபெறுகிற தற்கொலையில் 14 வயதிற்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 3035 ஆகும்.

வாருங்கள்! தேர்வைச் சந்திக்கும், சந்திக்க இருக்கும் மாணவச் சமூகத்திற்கான தெளிவானதொரு வழிகாட்டுதலை சத்திய சன்மார்க்கத்தின் வாயிலாக பயிற்றுவிப்போம்!!

பொதுவாக மாணவச் சமூகம் என்பது நான்கு தளங்களில் இயங்குகின்றது.

1. பள்ளிக்கூடம், 2. வீடு, 3. விளையாட்டு, 4. நண்பர்கள்.

இன்று இந்த தளங்கள் அவர்களை மிகச் சரியாக இயங்க விட்டிருக்கின்றதா? என்ற கேள்வியோடு அவர்களின் தளங்களில் நாம் நுழைந்தோம் என்றால் அங்கே மாணவச் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிற அவலங்கள் ஏராளம் தாராளம்.

1. பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகளா?...

அதிகாலை 6 மணியில் இருந்து துவங்கி 7:30 வரை பள்ளிப் பேருந்துக்காக காத்திருக்கத் துவங்கும் மாணவமாணவியரின் நடவடிக்கையில் இருந்து தொடங்கி மாலை பள்ளி முடிந்து மீண்டும் பள்ளிப் பேருந்து அல்லது வேனில் அமர்வது வரை மாணவச் சமூகம் அடையும் துன்பங்கள், துயரங்கள் சொல்லி மாளாது.

மிகச்சரியாக காலை 8: 30 க்குள் பள்ளிக்குள் சென்று விட வேண்டும். ( பள்ளிக்கு பள்ளி இது மாறுபடும் ) அதன் பிறகு அசெம்பிளி இராணுவ மிடுக்கில் நின்று பிரேயர், இத்யாதி இத்யாதி என்று ஒருவாராக முடிந்து 9:00 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்தால் அங்கிருந்து துவங்கும் அரட்டல் உருட்டல் ஒவ்வொரு வகுப்பறையிலும் 40 நிமிட பாடம் என்று மதியம் 1:00 வரை.

பின்னர் மீண்டும் 1:30 –இல் இருந்து துவங்கி மாலை 3:40 வரை, பின்பு எக்ஸ்ட்ரா கிளாஸ், ஸ்மார்ட் கிளாஸ் என குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மீண்டும் 5 அல்லது 5:30 வரை பாடம் நடத்தப்படுகின்றது.

இடையில் சுமார் ஸ்நாக்ஸ் டைம் 10 நிமிடம், உணவு நேரம் 30 நிமிடம் இந்த 40 நிமிடத்தில் மாணவச் சமூகத்திற்கு என்ன மன நிம்மதி கிடைத்து விடும் என நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்.

அதன் பிறகு வீடு வந்து சேர்ந்ததும் டியூஷன் 2 அல்லது 3 மணி நேரம் இதற்கிடையில் ஹோம் ஒர்க், புராஜக்ட் என்ற பெயரில் வேறு மிரட்டல்கள் ஒருவாராக மாணவச் சமூகம் உறங்கச் செல்லும் போது பெரும்பாலான வீடுகளில் 11 முதல் 12 வரை மணி ஆகிவிடுகின்றது.

( இத்துனை மனஅழுத்தத்திற்கும் மத்தியில் சில பிள்ளைகள் மதரஸாவிற்கு வருகை தந்து விட்டுச் செல்கின்றனர். அல்லாஹ் அந்த மாணவச் செல்வங்களுக்கு அருள் புரியட்டும்! )

விடுமுறை நாட்களையாவது மகிழ்ச்சியோடு கழிக்க முடிகின்றதா என்றால் அங்கேயும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் எனும் போர்வையில் ஸ்பெஷல் கிளாஸ் வகுப்புகள்.

சில பள்ளிக்கூடங்களில் சுற்றுலா என்று அழைத்துச் சென்று ஸ்கூல் வந்து சேர்ந்ததும் சுற்றுலாவில் நீ பெற்ற பயன் என்ன? என்று அது குறித்த ஒரு அஸைண்ட்மெண்ட் வேறு எழுதச் சொல்கின்றார்கள்.

எல்.கே.ஜி வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரை சுமார் 14 ஆண்டுகளில் இந்தப் பள்ளிக்கூடங்கள் மாணவச் சமூகத்தில் விதைத்த விதைகள் என்ன தெரியுமா?

மனஅழுத்தம், இனம் புரியாத பயம், சோர்வு, இயந்திர வாழ்க்கை உளவியல் சார்ந்த நோய்கள் என நீண்டதொரு பட்டியலை இங்கே தர முடியும்.

சுறுங்கச் சொன்னால் சிறைச்சாலைகளில் கைதிகளை மணி ஓசைகளுக்கு ஏற்றவாறு பழக்கப்படுத்தி இருப்பது போன்று ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி இருக்கின்றனர்.

நேரத்திற்கு உணவை கொடுத்து கூண்டுக்குள் அடைத்து வைத்து அழகு பார்க்கப்படும் அழகிய பறைவைகளின் வாழ்க்கைக்கு ஒப்பானது அவர்களின் வாழ்க்கை.

கொஞ்சம் கூண்டுக் கதவுகளைத் திறந்து விட்டுப் பாருங்கள்! அது எப்படி எல்லாம் மகிழ்ச்சியோடு சிறகடித்துப் பறந்து திரியும் என்று.

இன்றைக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்கள் அதிகம் எடுக்கிற மாணவர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகின்றார்கள். அவர்களிடம் மட்டுமே அதிக அக்கறையை காட்டுகின்றார்கள். கல்வி நிறுவனங்களும் அவர்களை மட்டுமே முன்னிறுத்தி, முக்கியத்துவம் அளிக்கிறது.

கல்வித்தரம் குறைந்த மாணவர்களிடம் மேற்கொண்டு அவர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆசிரியர்களும், நிறுவனங்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.

இதுவும் மாணவச் சமூகம் மனச் சுமைகளோடும், அச்சத்தோடும் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.

அனைத்து மாணவர்களையும் சமமாகப் பார்க்கிற, அவரவர்களிடம் இருக்கிற திறமைகளை வெளிக் கொணர்கிற ஆற்றல் படைத்தவர்களாக, தவறு செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

மாநபி {ஸல்} அவர்கள் “மனிதர்கள் எல்லோரும் சுரங்கங்களுக்கு நிகரானவர்கள் ஆவர். எப்படி சுரங்கங்கள் சிலது தங்கத்தையும், சிலது வெள்ளியையும் வெளிப்படுத்துகின்றதோ அது போன்று” என்று கூறினார்கள்.

இந்தப் பார்வை இல்லாத காரணத்தால் தான் எந்த ஒரு பள்ளிக் கூடத்திலும், வகுப்பிலும் 100 சதவீத தேர்ச்சி என்பது இல்லாமலே போய்விட்டது.

திறமையை அங்கீகரித்த ஆசிரியர்….

ولما جلس الإمام الشافعي بين يدي مالك وقرأ عليه أعجبه ما رأى من وفور فطنته ، وتوقد ذكائه ، وكمال فهمه ، فقال : إني أرى الله قد ألقى على قلبك نورا ، فلا تطفئه بظلمة المعصية .

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் மாணவராக சேர்ந்த புதிதில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் புத்திக் கூர்மையையும், அறிவு ஞானத்தையும் அறிந்து கொண்ட இமாம் மாலிக் அவர்கள் “அல்லாஹ் உன் இதயத்தை அறிவெனும் ஒளியால் இலங்கச் செய்திருக்கின்றான். நீ பாவமான செயல்களில் ஈடுபட்டு உன் ஒளியை, கல்வியறிவை இழந்து விடாதே! என்று கூறினார்கள்.


        وفي مرة جاء رجل الي الامام مالك ليساله في امرحيث انه قال لزوجته  انتي طالق ان لم تكوني اجمل من القمر )
       فقال له الامام مالك انت قد طلقتهافما كان من الرجل الا ان خرج حزينافساله الامام الشافعي عن جواب فتواه
        وعندما علم الامام الشافعي دخل الي الامام مالك وقال له يا امام - الله سبحانه وتعالي يقول (لقد خلقنا الإنسان في أحسن تقويم
        فما كان من الامام مالك الا ان تراجع عن فتواه وقال ( اخطأ مالك واصاب الشافعي)
        ومن ذلك حين صار يسمح للامام الشافعي للدخول الي مجلسه.

ஒரு நாள் ஒருவர் மிகவும் பதற்றட்டத்துடன் மாலிக் (ரஹ்) அவர்களின் சபைக்கு வந்தார். வந்தவர் “இமாம் அவர்களே! நானும் எனது மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம். இருவரில் யார் அழகு என்கிற பேச்சும் வந்தது.

அப்போது, அவள் தன்னுடைய அழகை பெருமையடித்து நான் நிலவை விட அழகானவள் என்று சொன்னாள். 

எனக்கு கோபம் வந்து, கோபத்தில் ”அப்படி இல்லை எனில் நீ தலாக் என்று சொல்லி விட்டேன்” என்ன செய்வது? தலாக் நிகழ்ந்து விடுமா? என்று கேட்டார்.

நீண்ட மௌனத்துக்குப் பின்னர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தலாக் நிகழ்ந்து விட்டது என்றார்கள்.
கவலையோடு அங்கிருந்து வெளியேறினார் அம்மனிதர். ஏதோ வேலை காரணமாக வெளியே சென்ற ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் உள்ளே நுழையும் போது கவலையோடு செல்லும் அவரை அழைத்து காரணம் என்ன என்று வினவினார்கள்.

அவர் நடந்த சம்பவத்தை விவரித்தார். கையோடு அவரை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்தி, இதற்கு நான் வேறு தீர்வை கூற முடியும் என்றார்கள்.

என்ன தீர்வு என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வினவ, “இமாம் ஷாஃபிஈ அவர்கள் “திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்” எனக் கூறுகின்றான்.

எனவே, அவரின் மனைவி நிலவை விட அழகானவள் தான். ஆகவே, தலாக் நிகழாது என்று கூறினார்கள்.

இது கேட்ட இமாம் மாலிக் (ரஹ்) தாங்கள் அளித்த தீர்ப்பை திரும்பப் பெற்றதோடு “இமாம் மாலிக் தவறிழைத்து விட்டார், இமாம் ஷாஃபிஈ மிகச் சரியான தீர்ப்பை சொல்லி விட்டார்” என்று அறிவிப்பு செய்தார்கள்.

அதன் பின்னர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானும் இமாம் மாலிக் (ரஹ்) அனுமதி இன்றி சபைக்குள் நுழையும் அனுமதியை வழங்கினார்கள்.                       
                                              ( நூல்: தபகாத்துஷ் ஷாஃபிஈ )

2. வீடு சித்ரவதைக்கூடங்களா?.....

பள்ளிக்கூடம் சாதாரணச் சிறைச்சாலை என்றால் வீடு குவாண்டனோமோ சித்ரவதைச் சிறைக்கு ஒப்பானது.

போய் படி, அவன் கூட சேராதே, அங்க எங்க வேடிக்கைப் பார்க்கிற, அவனைப் பாரு உன் கிளாஸ் தானே படிக்கின்றான் எப்படி மார்க் எடுக்கின்றான், உன் தங்கச்சி தானே அவ உன்னைப் பெற்ற வயிற்றில் தானே அவளையும் பெற்றேன் பாரு ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிறா?, நீ இப்படியே இருந்த உருப்பட மாட்டே, இந்த வருஷம் மட்டும் மார்க் குறையட்டும் அப்புறம் பாரு என்ற வித விதமான கட்டளைகள்.

அடுக்கடுக்கான வசைகளையும், எதிர்பார்க்காத ஏமாற்றங்களையும், தாழ்வு மனப்பான்மை, குரோதம், ஒரு வித வெறி, நாம என்ன செய்தாலும் இவர்கள் இப்படித் தான் ஏசுவார்கள் என்கிற அலட்சியமனப்பான்மை ஆகியவற்றை மாணவச் சமூகத்திற்கு உருவாக்கும் இடமாக இன்று அநேக வீடுகள் மாறிப்போனது.

வீடு என்றால் அன்பு செலுத்துகிற தாய், அர்ப்பணிப்பு நிறைந்த தந்தை என்று அன்பு தவழும் ஒரு வீடாக இருக்க வேண்டும்.

இப்படியும் ஒரு தாய்?...

இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 150 –இல் ஃபலஸ்தீனீன் காஸாவில் பிறக்கின்றார்கள்.

ஹிஜ்ரி 204 –இல் எகிப்தின் கெய்ரோவில் மரணிக்கின்றார்கள். சுமார் 55 ஆண்டு காலம் வாழ்ந்த அவர்கள் கோடான கோடி பேர்களால் இன்றளவும் பேசப்பட்டு, பின்பற்றப்பட்டு, அனுதினமும் நினைவு கூறப்பட்டு துஆச் செய்யப்பட்டு கௌரவிக்கப் படுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வம்சாவளியில் பிறந்து, முத்தலிபீ என்றே அழைக்கப்பட்டார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர்கள் தங்களின் இரண்டாம் வயதில் தந்தையை இழந்து அநாதையாக ஆகின்றார்கள்.

காஸாவின் ஓர் குடிசையில் பிறந்த தன் மகனை உலகறியும் அறிஞராக, புகழ்மிக்க வாழ்க்கைக்குச் சொந்தமானவராக மாற்ற வேண்டும் என்ற வேட்கையோடு இரண்டு வயது பாலகனை தூக்கிக் கொண்டு மக்காவிற்கு வருகின்றார்கள்.

இமாம் ஷாபிஈ அவர்களை உருவாக்குவதில்தில் அவரது தாய் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பரியது. இமாம் ஷாஃபிஈ அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் மிகச் சரியான திட்டத்தை வகுத்து வளர்த்தார்கள்.
ஏழு வயதில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்ய வைத்து ஹாஃபிளாக உருவாக்கினார்கள்.

இமாம் ஷாஃபிஈ அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தார்கள். அதுவும் அம்பெறியும் விளையாட்டில் பெரும் வீரராக உருவெடுத்தார்கள்.

وأقبل على الرمي ، حتى فاق فيه الأقران ، وصار يصيب من عشرة أسهم تسعة

இமாம் ஷாஃபிஈ அவர்களே கூறுவார்கள்: நான் இலக்கை நோக்கி குறி வைத்து பத்து அம்புகளை எய்கிறேன் என்றால் ஒன்பது அம்புகள் மிகச் சரியாக இலக்கை சென்று அடைந்து விடும், ஒரு அம்பு தான் இலக்கில் இருந்து தவறும்”.

மாபெரும் அறிஞராக உருவெடுக்க வேண்டும் என்கிற கனவைச் சுமந்து நிற்கிற அவரது தாய்க்கு இது கவலையைத் தந்தது.

وجعلت أطلب العلم ، فتقول لي : لا تشتغل بهذا ، وأقبل على ما ينفعك ، فجعلت لذتي في العلم

ஒரு நாள் தனது மகனை அமர வைத்து மகனே! இது போன்ற உனக்கு பயன் தராதவைகளில் கவனம் செலுத்தாதே! உனக்கு பயன் அளிக்கும் விஷயத்தில் உன் கவனத்தைத் திருப்பு!” இமாம் ஷாஃபிஈ அவர்கள் கூறுவார்கள்: அதன் பின்னர் எனக்கு அறிவு ஞானத்தைப் பெறுவதில் இன்பம் ஏற்பட்டது.

ثم أقبل على العربية والشعر 
فبرع في ذلك وتقدم . ثم حبب إليه الفقه ، فساد أهل زمانه

பின்பு அரபு மொழியிலும், அரபி இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றார்கள். பின்னர் ஃபிக்ஹ் கலையில் கவனம் செலுத்தி அதிலும் தேர்ச்சி பெற்று சம காலத்து பெரும் அறிஞர்களுக்கு நிகராக விளங்கினார்கள்.

அப்போது இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? வெறும் 9 வயது தான்.

இமாம் ஷாஃபிஈ அவர்கள் இந்த கல்வியறிவைப் பெற்றுக் கொண்ட கால கட்டம் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

ஏனெனில், படிக்கும் ஆர்வம் இருந்த அவரிடத்தில் படிப்புக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் இல்லை.

ஆசிரியர் நடத்துகின்ற பாடத்தை எழுதி வைத்திட பேப்பர் கூட இல்லை. அவரது தாயாரிடம் முறையிட்ட போது அரசுக் கருவூலத்தில் பயன்படுத்தப்பட்டு வெளியே வீசப்பட்ட பேப்பர்களை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து எழுதப்படாத மற்றொரு பகுதியிலே எழுதச் சொன்னார்களாம் அவர்களது தாயார்.

இப்படியாக ஒருவாராக படிக்க வைத்தார்கள். தங்களின் மகனை மதீனாவில் பிரபல்யமாக இருக்கும் இமாம் மாலிக் அவர்களிடம் ஹதீஸ் கலையைக் கற்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அதற்காக அடுத்தக் கட்ட முயற்சியாக இமாம் மாலிக் ரஹ் அவர்கள் எழுதிய முஅத்தாவை மனனமிட வைத்தார்கள்.

حدثنا المزني ، سمع الشافعي يقول : حفظت القرآن وأنا ابن سبع سنين ، وحفظت " الموطأ " وأنا ابن عشر 
        فكان أول ما فعله قبل سفره هو حفظ الموطأ، فحفظه في تسع ليالٍ

இமாம் முஸ்னீ (ரஹ்) அவர்கள் இமாம் ஷாஃபிஈ அவர்கள் வாயிலாக அறிவிக்கின்றார்கள்: “நான் ஏழு வயதில் குர்ஆனை மனனம் செய்தேன். பத்து வயதாக இருக்கும் போது முஅத்தாவை மனனம் செய்தேன்” என்று இமாம் ஷாஃபிஈ கூறினார்கள். முஸ்னீ ரஹ் அவர்கள் இமாம் ஷாஃபிஈ அவர்கள் வெறும் 9 நாட்களில் மனனம் செய்தார்கள்.

“பின்னர் 14 –ஆம் வயதில் இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் அழைத்துச் சென்று மாணவராகச் சேர்த்து சுமார் 9 ஆண்டுகள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மரணமாகும் வரை அங்கேயே இருந்தார்கள்.

அதன் பின்னர் மக்கா, மதீனா, மிஸ்ர், பக்தாத் என அரபுலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இமாம் ஷாஃபிஈ அறியப்பட்டார்கள்.

அரபுலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மார்க்கல்வியை பயிற்றுவித்தார்கள்.

இறுதியாக, ஹிஜ்ரி 198 –இல் மிஸ்ரின் மஸ்ஜித் அம்ர் இப்னுல் ஆஸில் ஆசிரியராகப் பணியாற்றி பல்லாயிரக்கணக்கான அறிஞர் பெருமக்களை உருவாக்கினார்கள்.

இஸ்லாமிய உலகின் அறியப்பட்ட பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் அது எந்தத் துறை அறிஞர்களாக இருந்தாலும் அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் மதஹபைப் பின்பற்றக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

குறிப்பாக, இமாம் பைஹகீ, ஹாகிம் அன்னய்ஸாபூரி, ஜலாலுத்தீன் சுயூத்தி, இமாம் தகபீ, இமாம் கஸ்ஸாலி, இமாம் நவவி, இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி, ஹாபிழ் இப்னு கஸீர், இமாம் புகாரி ஆகியோர்.

                                         ( நூல்: அத் தபகாத்துஷ் ஷாஃபிஈ )

வெறும் அம்பெய்யும் வீரராக அறியப்பட இருந்த ஓர் வீரரை உலகறியும் அறிஞராக, ஃபிக்ஹ் எனும் அறிவுச்சுடரை உலகெங்கிலும் பிரகாசிக்கச் செய்த மாபெரும் பங்கு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் தாயாரையேச் சாரும்.

இன்றைய காலகட்டத்தின் தாய்மார்களுக்கு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் தாயார் உண்மையில் மிகப்பெரும் முன்மாதிரி ஆவார்கள்.
  
விங்ஸ் ஆப் பயர் ( Wings Of Fire ) அக்னி சிறகுகள் புத்தகத்தில் My Mother: Embodiment of Love என்ற தலைப்பில் தனது தாயார் குறித்து கலாம் சொல்கிறார்..

1941ம் வருடம்.. இரண்டாம் உலகப் போர் கொழும்புவை எட்டிவிட்டதால் ராமேஸ்வரத்திலும் போர் மேகங்கள். ராமேஸ்வரத்தில் எங்களின் பெரிய கூட்டுக் குடும்பம் வசித்த அந்த சிறிய வீட்டின் கதவையும் போரின் தாக்கம் தட்டியது. இதனால் உணவில் ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு.

10 வயதான நான் வழக்கமாக காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு எனது ஆசிரியரிடம் கணக்குப் பாடம் கற்கச் செல்வேன். எனது ஆசிரியர் மிக வித்தியாசமானவர். வருடத்துக்கு 5 பேருக்கு மட்டும் இலவசமாக டியூசன் எடுப்பார். குளிக்காமல் வந்தால் கூட சேர்க்கவே மாட்டார். இதனால் எனது தாயார் எனக்கு முன் எழுந்து என்னை குளிப்பாட்டி, தயார் செய்து படிக்க அனுப்பி வைப்பார். 5.30 மணிக்கு திரும்பி வருவேன்.

எனக்காக என் தந்தை காத்திருப்பார். வந்தவுடன் என்னை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்வார். தொழுகை முடிந்ததும் திருக்குரான் வாசிக்க அரபிப் பள்ளிக்கு செல்வேன்....

(இதன் பிறகு அந்தச் சிறுவன் அப்துல் கலாம் கூறுவது தான் யாருக்கும் கண்ணீரை வரவழைத்துவிடும்... ஏழ்மையான குடும்பம் என்பதால் 10 வயதிலேயே வீட்டிற்காக ஏதாவது பணம் ஈட்ட வேண்டிய சூழல். இதனால் பேப்பர் போடும் வேலையை செய்துள்ளார் கலாம்)

கலாம் தொடர்கிறார்... திருக்குரான் ஓதிவிட்டு ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டார் தூரம் ஓடுவேன். அது போர் நேரம் என்பதால் மதுரை- தனுஷ்கோடி ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காது.

பேப்பர் பண்டல்களை தூக்கி பிளாட்பாரத்தில் வீசுவார்கள். அதை அள்ளி எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் நகரின் வீடுகளுக்கு பேப்பர்களைப் போடுவேன். மற்றவர்களுக்கு முன் பேப்பர் போட்டுவிட வேண்டும் என்று தினமும் முனைப்போடு இருப்பேன். இதனால் வேக வேகமாக ஓடுவேன். பேப்பர் போட்டுவிட்டு 8 மணிக்கு வீட்டுக்கு ஓடி வருவேன்.

மிக எளிமையான காலை உணவு தான் எங்கள் வீட்டில் எப்போதும். அதிலும் கூட எனக்கு கொஞ்சம் அதிகம் தருவார் என் தாயார்.
நான் படித்துக் கொண்டே (பேப்பர் போடும்) வேலையும் பார்க்கிறேன் இல்லையா.. எனக்கு ஓட சக்தி வேண்டுமே, அதற்காக...

ஒரு நாள் இரவு என் வீட்டில் நடந்த சம்பவத்தை நான் இங்கே பகிர்வது அவசியம் என்று நினைக்கிறேன்.. இரவு அனைவரும் உண்டு கொண்டு இருந்தோம். நான் என் தாயார் சப்பாத்தி தரத் தர சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.

சாப்பிட்டு முடித்தபின் என் அண்ணன் என்னை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்.. கலாம், நீ என்ன காரியம் செய்கிறாய்.. அம்மா நீ சாப்பிட சாப்பிட சப்பாத்தி தந்து கொண்டே இருக்கிறார். அவர் தனக்காக போட்ட சப்பாத்தியையும் உணக்கே தந்துவிட்டார். நீயும் எல்லாவற்றையும் தின்றுவிட்டாய். இனி வீட்டில் மாவும் இல்லை, சப்பாத்தியும் இல்லை.. கொஞசம் பொறுப்பாக நடந்து கொள். இது கஷ்டமான காலம். தாயாரை பசியில் வாட விடாதே என்றார்.

இந்த விவரத்தை கொஞ்சமும் உணராமல் சாப்பிட்ட எனக்கு கை கால்கள் நடுங்கிவிட்டன. என்ன காரியம் செய்துவிட்டோம் என கலங்கிப் போனேன். ஓடிப் போய் என் தாயாரை கட்டிக் கொண்டேன். அவரிடம் தான் தியாகம் கற்றேன்.

காலை 4 மணிக்கு எழுந்து படிக்க, பேப்பர் பண்டல் தூக்க, அதை வினியோகிக்க, பள்ளிவாசல் செல்ல, பள்ளிக்கூடம் செல்ல, மாலையில் பேப்பருக்கான பணம் வசூலிக்க என ஓடிக் கொண்டே இருப்பேன்.

ஆனாலும், இரவு 11 மணி வரை படிப்பேன். நான் சாதிப்பேன் என என் தாயார் நம்பியிருக்க வேண்டும். இதனால் அந்தக் கஷ்டத்திலும் எனக்கு தனியாக ஒரு மண்ணெண்ணெய் விளக்கைத் தந்து 11 மணி வரை படிக்க என் தாயார் உதவினார். அது மட்டுமல்ல, அவரும் என்னோடு விழித்திருப்பார்.. பின்னர் என்னை தூங்க வைத்துவிட்டே அவர் உறங்குவார்

என் தாயார் அன்பும் கருணையும் நிறைந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புனிதத் தன்மை கொண்டவர். 5 வேலை தொழுகை புரிவார். அவர் தொழுகை செய்யும்போது ஒரு புனித தேவதை மாதிரி எனக்குத் தெரிவார்.

இவ்வாறு சொல்லும் கலாம் தனது தாயாருடன் ஒரு முழு இரவு நாளில் நடந்த சம்பவத்தை ஒரு கவிதையாய் வடித்துள்ளார். இதுவும் விங்ஸ் ஆப் பயர் புத்தகத்தில் இருக்கிறது. அந்தக் கவிதையில் தனக்காக தனது தாயார் பட்ட கவலை, குடும்பத்திற்காக தினமும் காலை 4 மணி முதல் ஓட்டமே வாழ்க்கையாக்கிக் கொண்ட தனது இளைய மகனுக்காக அந்தத் தாயார் விட்ட கண்ணீரை கவிதையாய் சொல்கிறார் கலாம்.

''தாய்'' என்ற தலைப்பிலான அந்தக் கவிதை.... ''அம்மா... எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த நாள். எனக்கு வயது 10 அது ஒரு பெளர்ணமி தினம் என் உலகம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும்,

அம்மா நான் உங்கள் மடியில் படுத்திருக்கிறேன்.. திடீரென நள்ளிரவில் என் கால் முட்டியில் விழுந்த கண்ணீர் துளிகள் என்னை திடுக்கிட்டு எழ வைத்தன குழந்தையின் வலிகளை தாய் மட்டும் தானே உணர முடியும் அம்மா!'' ஓடி ஓடி உழைத்துப் படிக்கும் மகனை வருடியபடி கலாமின் தாயார் கண்ணீர் விட அந்தக் கண்ணீரின் வெப்பத்தில் எழுந்து தனது தாயாரை பார்த்த நினைவில் கலாம் எழுதிய கவிதை இது...

அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார் கலாம்... ''உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே, இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா''!

( oneindiatamil எனும் ப்ளாக்கில் ஏ. கே கான் அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து…. )

3. விளையாட்டுகள் விபரீதமாகின்றனவா?

இன்று தெருக்களும் வீதிகளும் ஃபேவர் ப்ளாக் சாலைகளாகவும், காங்கிரீட் சாலைகளாகவும் மாறிவிட்டன. ஊருக்கு ஒதுக்குப் புறமாக தரிசு நிலங்களாக இருந்த பல இடங்கள் இன்று ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் கம்பி வேலிகளுக்குள் சிக்கிக் கொண்டன.

கல்விக்கூடங்கள் கார்ப்பரேட்டுகளின் மூலதனமாக மாறியதன் விளைவாக மைதானங்கள் இருந்தும் இன்று விளையாட்டு வகுப்புகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

மேற்கத்தைய கலாச்சார ஊடுருவலால் இன்று பாரம்பரிய, மரபு விளையாட்டுக்கள் இடம் தெரியாமல் போயிற்று.

பள்ளிக் கூடங்களும், வீடும் மாணவச் சமூகங்களுக்கு பாரமாகப் போனதாலும், பாரம்பரிய, மரபு வழி விளையாட்டுக்கள் காணாமல் போனதாலும் ஆரோக்கியமும், மனஆற்றலும் இல்லாத ஓர் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

வீடியோ கேம்ஸ், ஆண்ட்ராய்ட் மொபைலில் கேண்டி கிராஷ், டெம்பிள் ரன், செக்ஸ்ஷுவல் கேம்ஸ் இன்னும் இது போன்ற எத்தனையோ விளையாட்டுகளில் சதா வீழ்ந்து தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறது.

இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட விளையாட்டுகள் என்ன என்பதை சுருக்கமாக சொல்லிவிடலாம்.

விளையாடுபவர்களுக்கு உயிர் உறுப்புகள் சேதம் ஏற்படுத்தக்கூடிய, பொருளாதார இழப்பை தரக்கூடிய இன்னும் மோசடி, சூதாட்டம், இவைகளையே குறிக்கோளாகக் கொண்டவிளையாட்டுகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.

பொதுவாக விளையாட்டுகளில் சூதாட்டத்தை மையமாக கொண்டவையாக இருந்தால் அது மார்க்கத்தில் மிகவும் தண்டனைக்குரிய காரியமாகும்.

“நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்  (அல் குர்ஆன் 5:90)

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட எந்த விளையாட்டாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் தூண்டிய எந்த விளையாட்டுகளாக இருந்தாலும் அவைகளில் சூதாட்டம் கலந்திருந்தால் அவைகள் ஷைத்தானின் செயல்கள் ஆகும்.

ஏனென்றால் சூதாட்டம் திறமைக்கும் உடலுழைப்புக்கும் மதிப்பில்லாமல் குறுக்கு வழியில் பணத்தை உறிஞ்சக்கூடிய ஒரு வடிகாலாகவும் உள்ளது.
இன்னும் சில குறிப்பபிட்ட விளையாட்டுகளையும் நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் : யார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்.

      ( அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : முஸ்லிம் 4194 )

நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள். ( அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) நூல்: புகாரி 6220)

இது போன்ற தேவையில்லாமல் விளையாடி உடலுக்கு பாதிப்பை உண்டாக்கூடிய விளையாட்களை இஸ்லாம் தடைசெய்துள்ளது. எனவே இஸ்லாம் உடலை ஆரோக்கியாக வைக்கவும் மனதை ஒரு முகப்படுத்தவும் உதவுகிற விளையாட்டை ஊக்குவித்து இருக்கின்றது. எனவே, அப்படியான விளையாட்டுக்களில் நமது பிள்ளைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.


4. நண்பர்கள் வரமா? சாபமா?

இது மாணவச் சமூகம் இயங்கும் முக்கியமான தளமாகும். பெரும்பாலும் இன்றைய மாணவச் சமூகத்திடம் இருந்து வெளிப்படும் நடவடிக்கைகள் தங்களின் நட்பு வட்டத்தில் இருந்து தான் என்பதை நாம் உணர வேண்டும்.


கெட்ட குணங்களும், பழக்க வழக்கங்களும் கொண்டவர்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாமல் பாதுகாக்கும் பொறுப்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

தென் இந்தியாவைப் பொறுத்தவரை பள்ளி மாணவர்களிடையே சில வருடங்களாக போதை பழக்கம் டொலுயீன் மற்றும் பெட்ரோலிய கழிவுகளிலிருந்து பெறப்படும் வேதியியல் பொருட்கள் மற்றும் கஞ்சாவின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

உதாரணமாக ஒயிட்னர், சைக்கிள் டியூப்களுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் பசை, நெயில் பாலிஷ் நீக்க பயன்படுத்தப்படும் திரவம், பெயிண்ட்களோடு கலக்கப்படும் தின்னர் என்ற திரவம் போன்றவைகளாகும்.

இந்த திரவங்களை துணிகள், பாலிதின் கவர்களில் வைத்து சுவாசத்தில் உறிஞ்சும்போது ஒருவித போதைமயக்கம் ஏற்படும். மேலும் இந்த வகை பொருட்கள் எளிதில் கிடைப்பதாலும், அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்படுவதாலும் இதை வைத்திருக்கும் மாணவர்களை யாரும் எளிதில் சந்தேகப்படுவதில்லை. இதனால் அவர்கள் இந்த பழக்கத்திற்கு நெடுநாட்களாய் அடிமையாகும் வாய்ப்பும் அதிகம்.

சில மாணவர்கள் புத்தகப் பையிலேயே "சரக்கு" பாட்டில்களை எடுத்துவரும் அவலம் அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு கஞ்சா பழக்கமும் தொற்றிக் கொண்டுள்ளது.

பள்ளிக்கு வரும்போதே டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் வாங்கி முந்திரி தோப்பில் வைத்து குடித்து விட்டு மாலை பள்ளி விடும் நேரத்திற்கு வீட்டிற்குச் செல்லும் மாணவர்களும் உள்ளனர்.

இத்துடன் பள்ளியிலேயே மொபைல் போன்களில் ஆபாச படம் பார்க்கும் சம்பவமும் அதிகரித்துள்ளது. போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட மாணவர்கள் மது குடிக்க பணம் கிடைக்காத நிலையில், நகரில் வாக்கிங் செல்லும் பெண்களிடம் செயினை அறுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து புது தில்லியின் மனோதத்துவ மருத்துவர் சமீர் கூறியுள்ளதாவதுமாணவர்கள் ஏழாவது எட்டாவது படிக்கும்போதே பெற்றோரிடமிருந்து பணம் வாங்கி தாராளமாக செலவழிக்கிறார்கள்.

இதுதான் போதைப்பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகக் காரணமாக இருக்கும் முதல் விஷயமாகும்” என்று.

பெற்றோர்களைக் குற்றம் சாட்டும் தொனியில் சமீர் கூறியிருப்பது சரிதானா என்று ஆராய ஆரம்பித்தால் நிச்சயமாக முதலில் நாம் குற்றம் கூற வேண்டியது பெற்றவர்களைத் தான்.

இன்றைய நாகரீக சூழ்நிலையில் பெற்றவர்கள் இருவருமே வேலை பார்க்கும் நிலையில் பிள்ளைகளின் மீதான அவர்களது கவனம் வெகுவாகக் குறைகிறது.

தன் பிள்ளையைத் தன்னால் சரியாக கவனிக்க முடிவதில்லையே என்ற குற்ற உணர்சியால் தூண்டப்படும் இவர்கள் அளவான அன்பையும் பாசத்தையும் பிள்ளைகள் மீது பொழிவதற்கு பதிலாக பிள்ளைகளுக்கு தேவைக்கு மீறிய அளவிற்கு பணத்தைக் கொடுத்து தங்கள் குற்ற உணர்சியை மறைக்க வடிகால் தேடுகிறார்கள்.

விளைவு - அதீத பண வரவால் முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கதை முடிந்து இன்று பள்ளி மாணாவர்களே போதைக்கு அடிமையாகி நிற்கிறார்கள்.

ஆக மாணவச் சமூகம் இயங்குகின்ற தளங்கள் அவ்வளவான பாதுகாப்பான அம்சங்கள் நிறைந்ததாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

எனவே, சிறந்த பெற்றோர்கள், நல்வழிப்படுத்துகின்ற ஆசிரியர்கள், உடல் ஆரோக்கியம் தருகின்ற விளையாட்டுக்கள், ஒழுக்கமும், நற்குணங்களும் கொண்டிருக்கின்ற நண்பர்கள் ஆகியவற்றை கொண்டிருக்கிற மாணவச் சமூகம் தேர்வை கண்டு மாத்திரமல்ல, வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலைகளையும் இன் முகத்துடன் எதிர் கொள்ளும்!

தேர்வு இனிதாய் அமைந்திட....

சரித்திரம் படைத்த மனிதர்களின் வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர்கள் ஒவ்வொருவரும் திறமைசாலிகளாக வாழ்க்கையில் நாமும் சாதனையாளர்களாக ஆக முடியும் என்ற நம்பிக்கையோடு சரித்திரத்திரத்தில் இடம் பிடிப்பதற்கான சரியான பாதையை நோக்கி பயணித்தார்கள்.

1. ( Faith ) ஆழ்ந்த இறைநம்பிக்கை.
2. ( Passion ) எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த உணர்வு
3. ( Clarity of Values ) தெளிவான கொள்கைகள்.
4. ( Methodologies ) அதை நோக்கிய வழிமுறைகள்
5. ( High Energy Levels ) அதற்கென பிரத்யேகப் பயிற்சி
6. ( Art of Relationship ) உறவுமுறைகள் எனும் பலம்.

எனவே, தேர்வும் தேர்வின் முடிவும் இனிதாய் அமைந்திட வேண்டுமானால் மாணவச் சமூகம் மேற்கண்ட ஆறு அம்சங்களை கைவரப் பெற்று, வெற்றியாளராய், சரித்திரத்தில் இடம் பிடிக்கும் சாதனையாளராய் வலம் வர முடியும்.

பெரும்பாலான பெற்றோர்கள் வீடு, வாசல், தோட்டம் துறவுகளை, நகைகளை விற்று, கடன் வாங்கி, லோன் வாங்கி, வட்டிக்கு பணம் வாங்கி படிக்க வைக்கின்றனர்.

ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் பள்ளிக் கூடத்திற்கு சரியாக செல்லாமல் வீண் விளையாட்டுக்களிலும், சினிமா கேளிக்கைகளிலும், ஊர் சுற்றுவதிலும் கழித்து விட்டு பரீட்சை நேரத்தில் சரியாக தேர்வெழுதாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள்.

மனவலிமையோடும், தன்னம்பிக்கையோடும், இறைச் சார்போடும் தேர்வெழுதி உயர்ந்த பல சிகரங்களைத் தொடும் உயர்ந்தவர்களாக எம் மாணவச் சமூகத்தை அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக!

     ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!