Thursday, 19 January 2017

இஸ்லாமும்….. கலாச்சாரங்களும்…. ஓர் பார்வை!!



இஸ்லாமும்….. கலாச்சாரங்களும்…. ஓர் பார்வை!!



மனித சமூகம் பூமியில் வாழத் துவங்கிய நாள் முதற்கொண்டு கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் வரலாறும் துவங்கிற்று.

மனித சமூகத்தின் உயர்வு தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற உயர்ந்த ஓர் ஆயுதம் தான் இந்த கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என்பவைகள்.

ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு சமூகமும் ஏதாவதொரு கலாச்சாரத்தோடும், நாகரிகத்தோடும் பண்பாட்டோடும் வாழ்ந்து சென்றிருக்கின்றனர்.

மறவாமல் தங்களின் கலாசாரத்தையும், நாகரிகங்களையும், பண்பாடுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர்.

தமிழர்களின் 1500 கால, ஒரு வரலாற்றுக் குறிப்பின் படி கி.மு 2000 க்கும் முன்பிலிருந்து மரபாகவும், பண்பாடாகவும், தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாகவும் விளங்கி வந்த ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்படுவதற்காக தமிழகம் மற்றும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது.

அந்தப் போராட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் முஸ்லிம் சமூகமும் பங்கெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தின் சில உலமாக்களும், சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் தர்வேஷ் ரஷாதி ஹள்ரத் அவர்களும், பிலாலியா மதரஸாவின் மாணவர்களும் பங்கெடுத்த காட்சியை ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம்.

ஜல்லிக்கட்டு என்றால் என்ன?
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டை ஏறுதழுவல் என்றும் அழைப்பர். காளை மாட்டை ஓடவிட்டு அதனை மனிதர்கள் அடக்குவது, கொம்பை பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டாகும்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை நார்த்தாமலை, தேனி, தேனிமலை ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வந்தது.

வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சு விரட்டு என்ற பெயரில் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. நீண்ட கயிற்றால் காளையை கட்டு இரண்டு பக்கமும் ஆண்களை அதனை இழுக்க, சிலர் காளையின் கொம்பில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை அல்லது பரிசை எடுக்க முயற்சிப்பார்கள்.

பெயர்க்காரணம்

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.

மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.

தடையும், அனுமதியும்…

சல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது.
பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ளதமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது.

இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியிலிட்டது. தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர்.

அதன் பின்னர் 2010 –இல் இருந்து 2013 வரை பல்வேறு போராட்டங்கள், வழக்குகள் என உச்ச நீதிமன்ற அனுமதியின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

மீண்டும், பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.

ஆதரவாளர்களின் குரல்....

தமிழ்நாட்டின் ஏறு தழுவலிலும், மாட்டு வண்டிப் பந்தயங்களிலும் மட்டும்தாம் வாயில்லா உயிர்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா முதலான சில மாநிலங்களில் எருமைப் பந்தயம் நடத்தப்படுகிறது.


கேரளாவின் உட்பகுதியிலுள்ள நாட்டுப்புறங்களில் காளைச் சறுக்கல் எனும் விளையாட்டு ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது. மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை என இந்தியாவின் பல இடங்களில் இன்றும் குதிரைப் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் குதிரைகள் எல்லாம் வாயில்லாத உயிரினங்கள் இல்லையா? இவை மட்டும் என்ன பேசும் திறன் படைத்தவையா? அல்லது, இந்த விளையாட்டுக்களிலெல்லாம் பொதுமக்களோ பார்வையாளர்களோ பாதிக்கப்படுவதில்லையா? சொல்லப் போனால், மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடைபெறும் எருமைப் பந்தயத்தில், எருமைகளைக் கட்டுப்படுத்த வீரர்கள் (!) நீண்ட கம்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டு ஏறு தழுவலிலோ வீரர்கள் வெறும் கைகளால் காளைகளைக் கையாள்கிறார்கள்.என்று.

எதிர்ப்பவர்கள் குரல்…..

சல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்கு கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம்.

இரண்டாவது வாதம், ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமையாகி, ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் வரை மதுரை இராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.

பீட்டா! உருவாக்கமும்… நோக்கமும்….?

PETA - (People for the ethical treatment of animals)  என்று தன்னைஅழைத்துக் கொள்ளும் இந்தஅமைப்பானது அமெரிக்க நாட்டின் வர்ஜீனியா மாநிலத்தின் நோர்போக் நகரில் விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வலர்களைக் கொண்ட அமைப்பாகும்.

இதன் பன்னாட்டுத் தலைவராக இங்கிரிடு நியூகிர்க் உள்ளார். இலாபநோக்கற்ற இவ்வமைப்பில் 300 ஊழியர்களும், 3 மில்லியன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்.

உலகளவில், இத்துணை அளவிலான எண்ணிக்கை கொண்ட உரிமைக் குழு இதுவேயாகும். இதன் முழக்கம் "விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறத்தப்படவும் உண்டானவை இல்லை" ஆகும் என்ற நோக்கத்தோடு 1980 ம் ஆண்டுமுதல், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இன்று, இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றதுதொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களை சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல்,  நாய்ச் சண்டை,  சேவல் சண்டை, ஆட்டுச் சண்டை,  காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.

ஜனவரி 2000 -இல் பீட்டா இந்தியா வின் இதயப்பகுதியான மும்பையில் நிறுவப்பட்டது. இக்குழுவின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இது முதன்மையாக "புலனாய்வு, பொதுமக்கள் விழிப்புணர்ச்சி, ஆராய்ச்சி, விங்குகளைக் காப்பாறுதல், சட்டவாக்கம், சிறப்பு நிகழ்வுகள், புகழாளர் ஈடுபாடு மற்றும் தேசியளவிலான ஊடக ஈர்ப்பு" ஆகியற்றில் கவனம் கொண்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் எண்ட்ரி ஏன்?

தற்போது, முஸ்லிம் சமூகத்தின் முன்னால் மூன்று அம்சங்கள் கேள்விகளாக முன் வைக்கப்பட்டுள்ளது.

1. நம்முடன் மாமன், மச்சான்களாக, அண்ணன் தம்பிகளாக, சகோதர வாஞ்சையோடு பழகியும், கொடுத்தும், வாங்கியும் வந்து கொண்டிருக்கிற தமிழ்ச்சமூகம் அதன் கலாச்சாரத்தை, அடையாளத்தை இழந்து, அதை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

அதை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் ஆதரித்து, அந்த போராட்டத்தில் தங்களையும் இணைத்து இருக்கின்றார்கள். இது எந்தளவு ஷரீஅத் ரீதியாக சரி?

2. இப்போது, வதை என்ற போர்வையில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த 6 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தடை உத்தரவையும், தொடர்ந்து இப்போது வரை நடத்த விடக்கூடாது என்பதில் முழுமூச்சாக களம் கண்டிருக்கும் ஓர் அமைப்பு தான் பீட்டாவாகும்.

எதிர்காலத்தில், நம்முடைய குர்பானிக்கும் தடை கோரி இவர்கள் வழக்கு தொடர மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதம் இருக்கின்றது?

ஃபாஸிச மத்திய அரசு ஆண்டு கொண்டிருக்கிற தருணத்தில், இவர்கள் வழக்கு தொடர்ந்தால் பாபர் மசூதி வழக்கு, சிறைவாசிகள் வழக்கு, தற்போதைய பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் காட்டும் வேகத்தை அரசு இதிலும் காட்டும்.

சகோதர சமுதாய மக்களின் கலாச்சாரத்திற்காக குரல் கொடுக்கும் அதே வேளையில், பீட்டாவை நோக்கியும் நம்முடைய கண்டனக் குரல்கள் உரக்க முழங்க வேண்டும்.

3. பொதுவாக, வெகுஜன மக்களால் முஸ்லிம் சமூகத்தின் மீது ஒரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகின்றது.

அதாவது, ”முஸ்லிம்கள் அவர்களின் சொந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள், சுய நலம் நிறைந்தவர்கள், தங்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமே போராடக்கூடியவர்கள், தேசிய, மாநில நீரோட்டத்தின் மீதமைந்த பிரச்சனைகளின் போது அதில் கலந்து கொள்ளமாட்டார்கள்” என்று.

போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு எதற்காக?

1. தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் போராட்ட பங்களிப்பு என்பது நன்றிக்கடன் என்ற அர்த்தத்திலும் வைத்துக் கொள்ளலாம்.

قال - صلى الله عليه وسلم -:
مَن أعطى شيئًا فوجَد، فليَجزِ به، ومَن لم يجد، فليُثنِ به، فإنَّ أَثنى به، فقد شكَره، وإنْ كتَمه، فقد كفَره، ومن تَحلَّى بما لَم يُعطِ، فإنَّه كلابس ثَوبَي زُورٍ
எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.  ( நூல்:திர்மிதீ )

ஏனெனில், விஸ்வரூபம் தொடர்பான பிரச்சனை, இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம் தொடர்பான பிரச்சனை, சமீபத்திய பொதுசிவில் சட்ட எதிர்ப்பு தொடர்பான பிரச்சனை ஆகியவைகளின் போது, தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், அ. மார்க்ஸ், பீட்டர் அல்போன்ஸ், ஆகியோரின், இன்னபிற தமிச்சொந்தங்களின் குரல்கள் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக ஒலித்ததை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

தமிழ்ச்சமூகத்தின் ஒரு சிலர் செய்த உபகாரத்திற்கு எப்படி ஒரு சமூகத்திற்கே பிரதி உபகாரம் செய்ய முடியும் என்று கேட்கலாம்?

மாநபி {ஸல்} அவர்கள் பத்ர் கைதிகள் விடுதலை விஷயத்தில் சமரசம் பேச வந்த மக்கத்து குறைஷித்தலைவர்களின் பிரதிநிதிகளிடம் “இப்போது முத்இம் இப்னு அதீ அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் அவருக்காக கைதிகளை விடுதலை செய்திருப்பேன்” என்று மறுமொழி பகர்ந்தார்கள்.

ஆம்! முத்இம் இப்னு அதீ என்பவர், பெருமானார் {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் ஊர் விலக்கம் செய்யப்பட்டார்கள் எனும் அறிவிப்புப் பலகையை கஅபாவில் இருந்து அப்புறப்படுத்தி, மாநபி {ஸல்} அவர்களுக்கும், நபித்தோழர்களுக்கும் மீண்டும் மகத்துப் பூமியில் நடமாட உதவி செய்தவர்கள். ஆகையால் தான் முத்இம் இப்னு அதீ என்ற தனியொரு மனிதருக்காக எவ்வித ஈட்டுத்தொகையும் இல்லாமல் கைதிகளை விடுவித்து இருப்பேன் என மாநபி {ஸல்} அவர்கள் முழங்கினார்கள்.

அந்தக் கைதிகள் ஒன்றும் சாதாரணமானவர்கள் அல்ல, இஸ்லாமும், முஸ்லிம்களும் இப்பூமியில் இருக்கவே கூடாது என்று சூளுரைத்தவர்கள். அத்தகையவர்களையே மாநபி {ஸல்} அவர்கள் தனியொரு நபரின் உபகாரத்திற்காக பிரதி உபகாரம் செய்ய முன்வந்தார்கள்.

2. சமநிலைச்சமுதாயம் எனும் அடைமொழிக்குச் சொந்தமான ஓர் உயரிய சமூகம் எனும் அடையாளத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

“மேலும், முஸ்லிம்களான உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் – சமநிலை யுடையச் சமுதாயமாக ஆக்கினோம்”.                         ( அல்குர்ஆன்: 2: 142 )

சமநிலையுடையச் சமுதாயம் என்பது தங்களுடைய கொள்கைக் கோட்பாடுகளில் மாற்றார்களின் எவ்வித சமரசங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், அதே நேரத்தில் தங்களோடு அருகில் வாழ்கிற சமூக, சமுதாய மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த, அவர்களின் சுக, துக்கங்களின் போது பங்கெடுக்கிற ஓர் சமூகமாகவே பங்கெடுக்கும் ஆற்றல் கொண்டது.

அந்த வகையில், நம்மோடு வாழ்கிற தமிழ்ச்சமூகம் இப்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளது, இந்த தேசத்தின் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற உரிமையை கலாச்சார அடையாளத்தை இழக்கும் தருணத்தில் இருப்பதாக அவர்களின் போராட்டத்தின் வாயிலாக நாம் அறிய முடிகின்றது.

இப்போது, நாம் அவர்களின் குரலுக்கு வலு சேர்க்கும் முகமாக நம்முடைய குரலை பதிவு செய்வது சமநிலைச் சமுதாயம் எனும் அடையாளத்திற்கு அழகு சேர்ப்பது போல் ஆகும்.

மாநபி {ஸல்} அவர்கள், மதீனாவிற்குள் காலெடி எடுத்து வைத்த சில நாட்பொழுதிலேயே அருகில் வசிக்கிற சிறு, சிறு குழுக்களிடையே ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டார்கள்.

அவ்வொப்பந்தத்தில் இதுவும் ஒன்று. அதாவது, ”எங்களுக்கு எதிராக யாரவது படை நடத்தி வந்தாலோ, அல்லது எங்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தாலோ அதில் நீங்கள் பங்கெடுக்கக் கூடாது. மேலும், அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. நீங்கள் எங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், இதே போன்று உங்களுக்கு எதிராக எவராவது நடந்து கொண்டால் நாங்களும் மேற்சொன்ன அடிப்படையில் நடந்து கொள்வோம்” என்று.

ஆக, பல்வேறு பட்ட கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட சமூக மக்களோடு வாழ்கிற போது முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற மகத்தான பாடத்தை மாநபி {ஸல்} அவர்கள் இங்கே நமக்கு போதிக்கின்றார்கள்.

இதன் அடிப்படையிலும் போராட்டத்தில் பங்கெடுக்கும் ஒரு முஸ்லிமோ, முஸ்லிம் சமூகமோ ஷரீஆவின் நீரோட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றிடவில்லை.

3. வருமுன் காப்போம் எனும் விழிப்புணர்வோடு இப்போராட்டத்தில் பங்கெடுப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

மிகவும் மோசமான கொள்கைகளைக் கொண்டது தான் பீட்டா எனும் அமைப்பு, 2000 ஆண்டு பழமை வாய்ந்த, பன்னெடுங்கால வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட ஒரு மாநிலத்தின் பெரும்பான்மைச் சமூகத்தின் ஒரு அடையாளத்தை வெறும் ஆறு ஆண்டுகளில் சிதைக்க முற்பட்டு, அதில் நீதிமன்ற மற்றும் அரசின் துணையோடு சிறிய அளவிளான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றால்….

நமக்கு முற்றிலும் எதிரான சிந்தனை கொண்ட ஃபாஸிச அரசின் துணை கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தீர்ப்புக்களையே வழங்கிப் பழகிய நீதிமன்றங்களின் உதவியோடு நம்முடைய வணக்க, வழிபாடுகளில் ஒன்றான குர்பானியை தடை செய்யக் கோரவோ, அல்லது இன்னபிற வழிகளில் கெடுதல் செய்யவோ வாய்ப்பும் இருக்கிறது.

எனவே, நம்முடைய பங்களிப்பு என்பது பீட்டாவை எச்சரிப்பதோடு, நம்முடைய எதிர்கால பிரச்சனைகளின் போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை பெரும் விதமாக அமைந்து இருக்கும்.

جاءت قريش من ها هنا واليهود من ها هنا والنجدية من ها هنا. يريد مالك: إن الذين جاءوا من فوقهم بنو قريظة، ومن أسفل منهم قريش وغطفان. وكان سببها: أن نفرا من اليهود منهم كنانة بن الربيع بن أبي الحقيق وسلام بن أبي الحقيق وسلام ابن مشكم وحيي بن أخطب النضريون وهوذة بن قيس وأبو عمار من بني وائل، وهم كلهم يهود، هم الذين حزبوا الأحزاب وألبوا وجمعوا، خرجوا في نفر من بني النضير ونفر من بني وائل فأتوا مكة فدعوا إلى حرب رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وواعدوهم من أنفسهم بعون من انتدب إلى ذلك، فأجابهم أهل مكة إلى ذلك، ثم خرج اليهود المذكورون إلى غطفان فدعوهم إلى مثل ذلك فأجابوهم، فخرجت قريش يقودهم أبو سفيان بن حرب، وخرجت غطفان وقائدهم عيينة بن حصن بن حذيفة بن بدر الفزاري على فزارة، والحارث بن عوف المري على بني مرة، ومسعود بن رخيلة على أشجع


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்த துரோகத்திற்காக நாடு கடத்தப்பட்ட பனூ நளீர் குலத்தார்களின் தலைவனான ஹுயய் இப்னு அக்தப் என்பவன் குறைஷித் தலைவர்களைச் சந்தித்து, மாநபி {ஸல்} அவர்களின் மீதும், முஸ்லிம்களின் மீதும் படையெடுக்குமாறு தூண்டினான்.

அப்படி படையெடுத்தால் தங்களின் குலம் முழு ஒத்துழைப்பு தரும் என வாக்கும் தந்தான்.

பனூ நளீர் குலத்தின் இன்னொரு தலைவனான கினானா இப்னு ரபீஉ என்பவன், பனூ ஃகத்ஃபான் குலத்தாரை மாநபி {ஸல்} அவர்களுக்கெதிராக படை எடுக்குமாறு தூண்டிவிட்டான்.

பனூ ஃகத்ஃபான் குலத்தார் தங்களின் நட்பு குலத்தாரான பனூ அஸத் குலத்தாரிடம் இது விஷயத்தில் தங்களுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

இதற்கிடையில், குறைஷிகள் பனூ சுலைம் கோத்திரத்தார்களை அழைத்துக் கொண்டு மர்ருள் ளஹ்ரான் எனும் இடத்தில் ஒன்று கூடினர்.

பனூ நளீர், பனூ குரைளா, பனூ ஃகத்ஃபான், பனூ அஸத், பனூ சுலைம், குறைஷிகள் என 10,000 பேர் ஒரு பெரும் படையாகத் திரண்டு மதீனாவைத் தாக்கிட திட்ட மிட்டனர்.

ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் இது நடைபெறுகின்றது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மதீனாவைச் சுற்றிலும் பெரும்அகழி தோண்டியதால் அகழ்யுத்தம் என்றும், பல அணிகளாக பிரிந்திருந்த எதிரிகள் ஓரணியில் ஒன்றிணைந்ததால் இது அல் அஹ்ஸாப் பல அணியினர் என்றும் அழைக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 20 அல்லது 15 நாட்கள் முற்றுகை நீடித்தது. எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகம், ஆயுதங்களும் அதிகம். ஆனால், முஸ்லிம்களின் எண்ணிக்கையும், ஆயுதபலமும் மிகவும் குறைவாகத் தான் இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.

وأتى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نعيم بن مسعود بن عامر الأشجعي فقال: يا رسول الله، إني قد أسلمت ولم يعلم قومي بإسلامي، فمرني بما شئت، فقال له رسول
الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إنما أنت رجل واحد من غطفان فلو خرجت فخذلت عنا إن استطعت كان أحب إلينا من بقائك «» معنا فأخرج فإن الحرب خدعة) «»

. فخرج نعيم بن مسعود حتى أتى بني قريظة- وكان ينادمهم في الجاهلية- فقال: يا بني قريظة، قد عرفتم ودي إياكم، وخاصة ما بيني وبينكم، قالوا: قل فلست عندنا بمتهم، فقال لهم: إن قريشا وغطفان ليسوا كأنتم، البلد بلدكم، فيه أموالكم وأبناؤكم ونساؤكم، وإن قريشا وغطفان قد جاءوا لحرب محمد وأصحابه، وقد ظاهرتموهم عليه فإن رأوا نهزة «» أصابوها، وإن كان غير ذلك لحقوا ببلادهم وخلوا بينكم وبين الرجل، ولا طاقة لكم به، فلا تقاتلوا مع القوم حتى تأخذوا منهم رهنا. ثم خرج حتى أتى قريشا فقال لهم: قد عرفتم ودي لكم معشر قريش، وفراقي محمدا، وقد بلغني أمر أرى من الحق أن أبلغكموه نصحا لكم، فاكتموا علي، قالوا نفعل، قال: تعلمون أن معشر يهود، قد ندموا على ما كان من خذلانهم محمدا، وقد أرسلوا إليه: إنا قد ندمنا على ما فعلنا، فهل يرضيك أن نأخذ من قريش وغطفان [رجالا من «» أشرافهم فنعطيكهم فتضرب ] أعناقهم، ثم نكون معك على ما بقي منهم حتى نستأصلهم. ثم أتى غطفان فقال مثل ذلك.

فلما كان ليلة السبت وكان ذلك من صنع الله عز وجل لرسوله والمؤمنين، أرسل أبو سفيان إلى بني قريظة عكرمة بن أبي جهل في نفر من قريش وغطفان يقول لهم: إنا لسنا بدار مقام، قد هلك الخف والحافر، فاغدوا صبيحة غد للقتال حتى نناجز محمدا، فأرسلوا إليهم: إن اليوم يوم السبت، وقد علمتم ما نال منا من تعدى في السبت، ومع ذلك فلا نقاتل معكم حتى تعطونا رهنا، فلما رجع الرسول بذلك قالوا: صدقنا والله نعيم بن مسعود، فردوا
إليهم الرسل وقالوا: والله لا نعطيكم رهنا أبدأ فاخرجوا معنا إن شئتم وإلا فلا عهد بيننا وبينكم. فقال بنو قريظة: صدق والله نعيم بن مسعود. وخذل الله بينهم، واختلفت كلمتهم، وبعث الله عليهم ريحا عاصفا في ليال شديدة البرد، فجعلت الريح تقلب آنيتهم وتكفأ قدورهم.


முற்றுகையில் ஈடுபட்டிருந்த ஓர் இரவில் நபி {ஸல்} அவர்கள்யா அல்லாஹ் நீ வாக்களித்திருக்கின்றாயே அந்த வெற்றியை உன்னிடம் கேட்கின்றேன்என மன்றாடிக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எதிரிகளின் புறத்திலிருந்து ஓர் உருவம் முஸ்லிம்களின் பகுதிக்கு வந்து கொண்டிருந்ததை நபி {ஸல்} அவர்கள் பார்த்துவிட்டார்கள்.

யார்? என {ஸல்} அவர்கள் கேட்டதும், நான் தான் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிருல் அஷ்ஜயீ என்று பதில் வந்தது.

! நுஅய்ம் இப்னு மஸ்வூதா? என்ன இந்த நேரத்தில் அதுவும் இங்கே? என நபி {ஸல்} அவர்கள் வினவினார்கள்.

அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், இது என் குடும்பத்தார் களுக்கும், என் குலத்தார்களுக்கும் தெரியாது என்று கூறிவிட்டு, சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்நீரோ ஃகத்ஃபான் குலத்தார்களில் இருந்தும் இஸ்லாமான தனியொரு நபராக இருக்கின்றீர்.

உம்மால் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால் தந்திரத்தைக் கையாண்டு இந்த யுத்தத்தின் போக்கை மாற்றிவிடும்!

கைகோர்த்து நிற்கிற இவர்களின் இதயங்களில் உமது தந்திரத்தால் பிரிவினையை ஏற்படுத்தி விடும்! உமக்கு சக்தி இருந்தால் இப்படிச் செய்து விடும்! அது போதும்! போர் என்றாலே தந்திரம் தானே!என்று கூறினார்கள்.

நுஅய்ம் இப்னு மஸ்வூத் அவர்கள் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்தவர்கள். மதீனாவிற்கு கிழக்கே இருந்த நஜ்த் தேசத்தில் தான் ஃகத்ஃபான் குலத்தார்கள் வசித்து வந்தனர். வியாபார ரீதியாக பனூ குரைளாக்களோடு மிக அதிகமான நெருக்கம் இருந்த்து நுஅய்ம் அவர்களுக்கு.

அதையும் தாண்டி ஒரு நெருக்கம் அவர்களோடு இருந்த்தென்றால் அது இது தான் நுஅய்ம் ஓர் உல்லாசப் பிரியராக இருந்தார்.

மது, சூது, மாது என உல்லாசத்தில் மூழ்கிக் கிடந்தார். அதற்காக காசு பணங்களை கொண்டு வந்து பனூ குரைளாக்களிடம் கொட்டுவார். அவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

ஆனாலும், நுஅய்ம் மதிநுட்பம் நிறைந்தவர், எந்தக் காரியத்தையும் மிக அற்புதமாக திட்டம் தீட்டி சாதிப்பதில் வல்லவர்.

இவையனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்ததால் நுஅய்ம் அவர்களிடம் தமது முடிவைக் கூறினார்கள்.

நுஅய்ம் நேராக பனூ குரைளாக்களிடம் வந்தார். எனக்கு உங்கள் மீது இருக்கிற அன்பு உங்களுக்கு தெரியும் தானே? குறிப்பாக உங்களுக்கும் எனக்கும் இடையே இருக்கிற நட்பு உண்மையானது தானே?என்றார்.

அதற்கு, அவர்கள் அதில் அணுவளவேனும் சந்தேகம் இல்லை. நீர் உண்மையைத் தான் சொல்கின்றீர்!

அப்படியென்றால், என் மனதை உறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லட்டுமா? என்று கேட்டார் நுஅய்ம்.

ம்ம்ம், சொல்லும் என்றார்கள்.

ஃகத்ஃபான் குலத்தார்களும், குறைஷிகளும் உங்களைப் போன்று கிடையாது. அவர்களின் சொத்துக்களும், மனைவி மக்களும், ஊரில் பத்திரமாக இருக்கின்றார்கள்.

சுய நலத்தைத் தவிர வேறொன்றும் அவர்களை முஹம்மதுக்கு {ஸல்} எதிராக போரிட அழைத்து வரவில்லை.


இந்தப் போரில் வெற்றி கிடைத்தாலும் போரில் கிடைத்த பொருட்களில் எந்த ஒன்றையும் அவர்கள் உங்களுக்கு தரப்போவதில்லை.

சரி, வெற்றி கிடைத்தால் பரவாயில்லை. ஒரு சமயம் போரில் தோற்றுவிட்டால் உங்களை அம்போ என விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது உங்களின் சொந்த பூமி, உங்களின் சொந்த ஊர், உங்களின் சொத்துக்களெல்லாம் இங்கேதான் இருக்கின்றன.

உங்களின் மனைவி, மக்கள் என அத்துனை பேர்களும் உங்களுடன் இங்கே தான் இருக்கின்றார்கள்.

நீங்கள் வேறு அவசரப்பட்டு, முஸ்லிம்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை நொடிப்பொழுதில் அவர்கள் போருக்கு வா என்றதும் தூக்கி எறிந்து விட்டீர்கள்.

முஸ்லிம்களின் கோபத்திற்கும், வேகத்திற்கும் உங்களால் ஈடுகொடுக்க இயலாது. ஏனெனில், அவர்களின் கோபம் முழுக்க உங்களின் மீது தான் இருக்கும். இப்ப கூட ஒன்றும் நடந்து விட வில்லை பார்த்து, யோசித்து நல்ல முடிவாக எடுங்கள்.

இதை உங்கள் மீது நான் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட அன்பின் வெளிப்பாட்டில் தான் சொல்கின்றேன்என்றார் நுஅய்ம்.

நினைத்துப் பார்க்கவே பனூ குரைளா குலத்தாருக்கு திகிலூட்டியது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதையும் நீரே சொல்லிவிடும்!என்றார்கள்  பதற்றத்தோடு.

என்னுடைய தீர்க்கமான ஆலோசனை இது தான்! “அதாவது உங்கள் கூட்டணிப் படையினரில் சில முக்கியஸ்தர்களை நீங்கள் பிணையாக கேட்க வேண்டும். அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை போர் செய்யப் போவதில்லை என உறுதியாய் நின்று விடுங்கள்.

அப்படி பிணையாளியாய் சிலரை தந்தார்கள் என்றால் நம்பி போரிடுங்கள். அப்போது தான் அது உங்கள் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தும். நீங்கள் பாதுகாக்கப்பட அடித்தளமாய் அமையும்.என்றார் நுஅய்ம்.

இதைக்கேட்ட பனூ குரைளாவினர் தக்க சமயத்தில் அழகானதொரு தீர்வை சொன்னீர்! உண்மையில் நீர் ஒரு சிறந்த சிந்தனையாளர் தான்! என மகிழ்ச்சியோடு கூறினர்.

முதல் தந்திரம் படுவேகமாக வேலை செய்ய ஆரம்பித்ததும், அடுத்து தன் தந்திரவலையில் சிக்க வைக்க படையை வழி நடத்தி வந்த குறைஷித் தலைவர் அபூ சுஃப்யானை நோக்கி நகர்ந்தார்கள் நுஅய்ம் {ரலி} அவர்கள்.

நேராக குறைஷிகளின் கூடாரம் நோக்கி நடந்தார்கள். அங்கே அபூ சுஃப்யானும், இன்னும் சில தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.

அடுத்த வலையை கொஞ்சம் பெரிதாகவே வீசினார் நுஅய்ம். குறைஷித் தலைவர்களை நோக்கிஉங்கள் மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த நேசத்தையும், முஹம்மது மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த வெறுப்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நான் ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அதை உங்களிடம் கூறுவது என் மீதுள்ள தார்மீகக் கடமையாக கருதுகின்றேன். ஆனால், நான் தான் உங்களிடம் கூறியதாக நீங்கள் யாரும் என்னைக் காட்டிக் கொடுத்து விடக் கூடாது. இதற்கு ஒத்துக் கொண்டீர்களென்றால் நான் அதைக் கூறுகின்றேன்என்றார்.

குறைஷித்தலைவர்கள் சரி நாங்கள் உம்மை காட்டிக் கொடுக்க மாட்டோம்என்றார்கள்.

பனூ குரைளாவினர் முஹம்மதிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து விட்டு, உங்களோடு கை கோர்த்த்தை நினைத்து வருத்தப்பட்டு பயப்பட ஆரம்பித்து விட்டனர்.

நீங்கள் கைவிட்டு விடுவீர்களோ என கவலை கொண்டு அச்சப்பட ஆரம்பித்து விட்டனர். ஆகவே, அவர்கள் தரப்பிலிருந்து சிலரை முஹம்மதிடம் தூது அனுப்பியுள்ளனர்.

நாங்கள் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டோம்! அதற்காக நாங்கள் இப்போது வருந்துகிறோம். எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

நாங்கள் செய்த தவறுக்குப் பரிகாரத்தையும் நாங்களே செய்கிறோம். அது இது தான்குறைஷ் மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் முக்கியஸ்தர்கள் சிலரை பிணையாக பிடித்துத் தருகிறோம் நீங்கள் திருப்தியடைவீர்களா? அதன் பின்னர் உங்களோடு இணைந்து அவர்களை கடுமையாக தாக்குகிறோம்.என்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். என்றார் நுஅய்ம்.

மேலும், பனூ குரைளாவினர் உங்களிடம் பிணையாளிகள் வேண்டும் என கோரிக்கை வைத்தால் ஒருத்தரைக் கூட அனுப்பி வைத்துவிடாதீர்கள்.என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நுஅய்ம்.

அடுத்து தன்னுடைய குலமான ஃகத்ஃபான் குலத்தின் தலைவர்களிடம் வந்து குறைஷிகளிடம் சொன்னது போலவே சொன்னார்.

அவர்களின் தந்திரம் மூன்று புறத்திலும் வேலை செய்ய ஆரம்பித்தது.

அன்றொரு நாள் இரவு விடிந்தால் சனிக்கிழமை, அபூ சுஃப்யான் தமது மகன் இக்ரிமாவையும், ஃகத்ஃபான் குலத்தார்கள் சிலரையும் பனூ குரைளாவினரிடம் தூது அனுப்பினார்கள்.

இக்ரிமா பேசினார்நாம் இங்கு எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அது இன்னும் நிறை வேறியதாகத் தெரியவில்லை. முற்றுகையும் நீடித்துக் கொண்டே செல்கிறது.

வீர்ர்களும் சோர்வடைந்து விட்டனர். என் தந்தை நாளை யுத்த்த்தை தொடங்கலாம் என்று கூறிவிட்டார், நீங்கள் தயாராய் இருங்கள். நாளை நடக்கும் யுத்தத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுமென என் தந்தை உங்களிடம் சொல்லச் சொன்னார்”.என்று பேசி முடித்தார் இக்ரிமா.

நாளை சனிக்கிழமை நாங்கள் அந்த நாளில் எதையுமே செய்யமாட்டோம் என்று உங்கள் தந்தைக்கு தெரியாதா?

அது போக, நாங்கள் உங்களோடு இணைந்து போரிட வேண்டுமானால் உங்களில் சில முக்கியஸ்தர்களை எங்களிடம் பிணையாக தரவேண்டும்.

அப்படி தந்தால் தான் நாங்கள் உங்களோடு இணைந்து போரிடுவோம். இல்லையென்றால் நாங்கள் பின் வாங்கி விடுவோம்என்றார்கள்.

இந்தச் செய்தியை கேட்டு விட்டு, நேராகச் சென்று அபூ சுஃப்யான் அவர்களிடம் இக்ரிமா அவர்கள் கூறினார்கள்.

அதைக்கேட்ட அபூ சுஃப்யான்உண்மையில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் சத்தியத்தையே நம்மிடம் கூறியுள்ளார். பனூ குரைளாவினரிடம் ஆளனுப்பிக் கூறி விடுங்கள்அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு ஆளைக்கூட நாங்கள் அனுப்ப மாட்டோம். இஷ்டம் இருந்தால் சேர்ந்து போரிடட்டும். இல்லையென்றால், ஊரைப் பார்த்து போகட்டும்!என்று.

இதைக் கேட்டதும் பனூ குரைளாவினர் நமது நண்பர் நுஅய்ம் உண்மையையே கூறினார். குறைஷ், மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் சுயரூபம் இப்போது நமக்கு புரிந்து விட்டது. நாம் போரில் கலந்து கொள்ள வேண்டாம். என்று கூறினர்.

( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:8, பக்கம்:17,18.  தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:173,174,175. )


இக்கட்டான சூழ்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென வேண்டி நின்ற நுஅய்ம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விழிப்புணர்வோடு மேற்கொண்டதுல்லியமான முடிவும், அதைக் கையாண்ட விதமும்பல அணியினராய் இறுமாப்போடு வந்த எதிரிகள் பிரிந்து, கத்தியின்றி இரத்தமின்றி அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு மா பெரும் வெற்றியை பெற்றது.

கலாச்சாரங்களை உள்வாங்கும் விஷயத்தில், அதை மறுக்கும் விஷயத்தில் இஸ்லாம் கையாளும் முறைகள் என்ன? எப்படி? எவ்வாறு?....

1. படைத்த ரப்புக்கு இணைவைக்கும் செயல் கொண்ட எந்தவொரு கலாச்சாரத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்காது.

حديث قيس بن سعد . يرويه الشعبى عنه قال : ( أتيت الحيرة ، فرأيتهم يسجدون لمرزبان لهم ، فقلت : رسول الله أحق أن يسجد له ، قال : فأتيت النبي ( صلي الله عليه وسلم ) ، فقلت : إنى أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم
 فانت يا رسول الله أحق أن نسجد لك ، قال : أرأيت لو مررت بقبري أكنت تسجد له ؟ قال : قلت : لا ، قال : فلا تفعلوا ، لو كنت آمرا أحدا أن يسجد لأحد ، لأمرت النساء أن يسجدن لأزواجهن ، لما جعل الله لهم عليهن من الحق ) .

கைஸ் இப்னு ஸஅத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ""நான் ஹீரா என்ற பகுதிக்குப் போயிருந்தேன். அங்கள்ள மக்கள் தங்களுடைய தலைவருக்கு ஸஜ்தா செய்துவந்தார்கள். இந்தத் தலைவரைவிட ஸஜ்தா செய்யப்படுவதற்குத் தகுதியானவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் என்று நான் மனதிற்குள் கூறிக்கொண்டேன்.

மதீனா திரும்பியபிறகு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "ஹீரா பகுதியினர் தங்களது தலைவருக்கு ஸஜ்தா செய்கிறார்கள். ஸஜ்தா செய்யப்படுவதற்கு தாங்கள்தாம் உண்மையிலேயே முழுத்தகுதி உடையவர்கள்' என்று தெரிவித்தேன்.

"நான் இறந்த பிறகு என்னுடைய கபுறு வழியாக நீங்கள் சென்றால் என்னுடைய கபுறுக்கு ஸஜ்தா செய்வீர்களா?' என்று என்னிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். "இல்லை' எனக் கூறினேன். "அப்படியென்றால் எனக்கு ஸஜ்தா செய்யாதீர்கள்.

ஸஜ்தா செய்யலாம் என்று யாருக்கேனும் நான் அனுமதி வழங்க நினைத்தால், தங்களுடைய கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு பெண்களிடம் கூறுவேன். அல்லாஹுத் தஆலா கணவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மனதில்கொண்டு தான் இவ்வாறு நான் கூறுகிறேன்' என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.                   ( நூல்: அபூதாவூத் )

இதே போன்றதொரு மற்றொரு அறிவிப்பில்....

حديث عبداللة بن أبى أوفى ، يرويه القاسم الشيباني عنه قال : ( لما قدم معاذ من الشام ، سجد للنبى قال : ما هذا يا معاذ ؟ !
 قال : أتيت الشام فوافيتهم يسجدون لأساقفتهم وبطارقتهم ، فوددت في نفسي أن نفعل ذلك بك ، فقال رسول الله ( صلي الله عليه وسلم ) : فلا تفعلوا ، فإنى لو كنت آمرا أحدا أن يسجد لغير الله ، لأمرت المرأة أن تسجد لزوجها ،

முஆத் (ரலி) அவர்கள் ஷாமில் இருந்து வந்த போது, மாநபி {ஸல்} அவர்களுக்கு ஸஜ்தா செய்ய முற்பட்ட போது மாநபி {ஸல்} அவர்கள் ஸஜ்தா செய்ய வேண்டாம் என தடுத்தார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. தவறான பகுதியை நீக்கி விட்டு, அழகானதை இஸ்லாம் அங்கீகரிக்கும்…

عن الربيِّع بنت معوذ بن عفراء جاء النبي صلى الله عليه وسلم فدخل حين بُني علي – أي : دُخل عليها في الزواج - فجلس على فراشي كمجلسك مني فجعلت جويريات ( أي بنات صغيرات ) لنا يضربن بالدف ويندبن من قتل من آبائي يوم بدر إذ قالت إحداهن :
وفينا نبي يعلم ما في غد
فقال : دعي هذه وقولي بالذي كنت تقولين .
رواه البخاري ( 4852 ) .

ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவிக்கிறார்கள்: “எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ( இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் ரஹ் அவர்களிடம் ) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்.

அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்என்று கூறினார்கள்.                       ( நூல் புகாரி )

இங்கே, தஃப் அடிப்பதையும், கவி படிப்பதையும் அங்கீகரித்த மாநபி {ஸல்} அவர்கள் தவறான வார்த்தைப் பிரயோகத்தை தவிர்த்து விடுமாறு ஒரு பகுதியின் கலாச்சாரத்தை அங்கீகரித்தார்கள்.

3. மக்களை வேதனைப் படுத்துகிற எதையும் இஸ்லாம் கலாச்சாரமாக விதைக்காது….

روى الدارقطني عن ابن عباس قال: لما انصرف المشركون عن قتلى أحد انصرف رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فرأى منظرا ساءه، رأى حمزة قد شق بطنه، واصطلم أنفه، وجدعت أذناه، فقال:" لولا أن يحزن النساء أو تكون سنة بعدي لتركته حتى يبعثه الله من بطون السباع والطير لأمثلن مكانه بسبعين رجلا"

உஹத் யுத்தகளத்தை மாநபி {ஸல்} அவர்கள் யுத்தம் முடிந்து ஷஹீத்களை பார்வையிட்டு வருகிற பொழுது, ஒரு உடலின் அருகே மாநபி {ஸல்} அவர்கள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றார்கள். நெஞ்சு பொறுக்காமல் அழுகின்றார்கள்.

ஆம்! அஸதுல்லாஹ் ஹம்ஜா (ரலி) அவர்களின் வீர மரணம்! மாநபி {ஸல்} அவர்களை ஓர் உலுக்கு உலுக்கிற்று!

வயிறு கிழிக்கப்பட்டு, குடல்கள் எல்லாம் அறுக்கப்பட்டு, மூக்கு சிதைத்து, காதுகளை கிழித்து, தலையை கொய்து, மண்டை ஓட்டை பிய்த்து எடுத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த ஹம்ஜா (ரலி) அவர்களின் உடலைப் பார்த்த மாநபி {ஸல்} அவர்கள்.....

பெண்கள் கவலை கொள்வார்கள் எனும் அச்சம் எனக்கு இல்லை எனில், எனக்குப் பிறகு இந்த நடைமுறை காலம், காலமாக பின்பற்றப்பட்டு விடுமோ எனும் அச்சம் எனக்கு இல்லாதிருக்குமானால்,

என் பெரிய தந்தையே! உங்களின் இந்த உடலை இந்த வனாந்தரத்திலேயே விட்டு விட்டுச் சென்று விடுவேன்! நாளை மஹ்ஷ்ரில் அல்லாஹ் மக்களை அவர்களின் புதைகுழிகளில் இருந்து எழுப்பும் போது, அவர்கள் அங்கிருந்து எழுந்து வரும்போது, நீங்கள் இந்த வனாந்தரத்தில் விடப்பட்ட பின்னர் உங்களை தின்ற வனவிலங்குகளின் வயிறுகளில் இருந்து மஹ்ஷரை நோக்கி வருவதை நான் விரும்பி இருப்பேன்! இப்போது சொல்கின்றேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதே போன்று எதிரிகளின் எழுபது பேர்களை சிதைக்காமல் விட மாட்டேன்என சபதமெடுத்து விட்டு, கஃபன் செய்து மாநபி {ஸல்} அவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அடக்கம் செய்தார்கள்.

அந்த இடத்திலேயே மாநபி {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ்….

وَإِنْ عاقَبْتُمْ فَعاقِبُوا بِمِثْلِ ما عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ ()

நீங்கள் தண்டிக்க வேண்டும் என விரும்பினால் உங்களை அவர்கள் எவ்வாறு தண்டித்தார்களோ அவ்வாறே தண்டித்து விடுங்கள் நபியே! மாறாக, நீங்கள் பொறுமை காத்தீர்கள் என்றால் அதுவே பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாகும்என இறைவசனத்தை இறக்கியருளினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபதத்தை முறித்துக் கொண்டு, சத்தியத்திற்கான பரிகாரத்தைச் செய்தார்கள். ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, இப்னு கஸீர் )

மாநபி {ஸல்} அவர்களின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் விரிவடைந்தது. பல தேசிய மக்களை, பல கலாச்சார மக்களை, பல இன மக்களை, பல பண்பாடு கொண்ட மக்களை இஸ்லாம் வென்றெடுத்த போதும், மேற்கூறிய மாநபி {ஸல்} அவர்களின் வழிகாட்டலை அப்படியே பின்பற்றுகிற மக்களாக அந்தந்த சமூக மக்கள் மாறிப்போனார்கள்.

மாநபி {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட முதல் கலாச்சார நுகர்வும்…. முஸ்லிம் சமூகத்தின் உள்வாங்கும் தன்மையும்…

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் குறித்து சொன்ன முன்னறிவிப்பு நிறைவேறும் நாளும் நெருங்கியது.

ஆம்! ஃபாத்திமா(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்களைப் பார்க்க மதீனத்து மக்கள் அனுதினமும் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

ஃபாத்திமா(ரலி) அவர்களின் நோயை பற்றி விசாரிக்க கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்து நோய்பற்றியும் உடல்நிலைப் பற்றியும் விசாரித்து சென்றார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களின் அருகில் இருந்து,  பணிவிடை செய்ய அவர்களின் தோழியும், அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியுமான அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் உடன் இருந்தார்கள்.

( அலி (ரலி) அவர்களின் சகோதரர் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் மூத்தாப் போரில் ஷஹிதானார்கள். பிறகு அவர்களை அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுமணம் புரிந்திருந்தார்கள். )

ஃபாத்திமா (ரலி) அவர்களும், அஸ்மா (ரலி) அவர்களும் மிகவும் நேசமாக இருப்பார்கள், மூத்தாப் போரில் ஜாபர்(ரலி) அவர்கள் ஷஹிதானார்கள். என்ற செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மதினாவில் இருந்து எடுத்துச் சொன்ன போது அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்கள் சற்று கதறி அழுதார்கள்.

அப்போது, ஃபாத்திமா (ரலி) அருகில் இருந்து ஆறுதல் சொன்னார்கள். அஸ்மா (ரலி) அவர்களின் அழுகையைப் பார்த்த ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழுதார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களின் அழுகையைப் பார்த்து {நபி ஸல்} அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

இப்போது, ஃபாத்திமா (ரலி) அவர்களின் மரண நேரத்தை அறிந்து கொண்ட அஸ்மா (ரலி அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் அருகில் இருந்து ஆறுதல் கூறினார்கள்.

عن أم جعفر، أن فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم قالت: " يا أسماء إني قد استقبحت ما يصنع بالنساء، إنه يطرح على المرأة الثوب فيصفها "، فقالت أسماء: يا بنت رسول الله صلى الله عليه وسلم ألا أريك شيئا رأيته بأرض الحبشة فدعت بجرائد رطبة فحنتها، ثم طرحت عليها ثوبا، فقالت فاطمة رضي الله عنها: " ما أحسن هذا وأجمله يعرف به الرجل من المرأة فإذا أنا مت فاغسليني أنت وعلي رضي الله عنه ولا تدخلي علي أحدا "، فلما توفيت رضي الله عنها جاءت عائشة رضي الله عنها تدخل، فقالت أسماء: لا تدخلي فشكت أبا بكر، فقالت: إن هذه الخثعمية تحول بيني وبين ابنة رسول الله صلى الله عليه وسلم، وقد جعلت لها مثل هودج العروس , فجاء أبو بكر رضي الله عنه فوقف على الباب، وقال: يا أسماء ما حملك أن منعت أزواج النبي صلى الله عليه وسلم يدخلن على ابنة النبي صلى الله عليه وسلم وجعلت لها مثل هودج العروس، فقالت: أمرتني أن لا تدخلي علي أحدا وأريتها هذا الذي صنعت وهي حية فأمرتني أن أصنع ذلك لها، فقال أبو بكر رضي الله عنه: فاصنعي ما أمرتك، ثم انصرف وغسلها علي، وأسماء رضي الله عنهما.

அப்போது, ஃபாத்திமா (ரலி) அஸ்மாவை  நோக்கி அஸ்மாவே! இப்பொழுது நான் இருக்கும் நிலைமையை நீ பார்க்கின்றாய்! என்று கவலையோடு சொன்னார்கள். அதாவது நான் இறந்தும் போகும் நிலையில் இருக்கிறேன் என்று சூசகமாக சொன்னார்கள்.

பிறகு பெண்களுக்கு (சந்தூக்) ஜனாஸாபெட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி இருவரும் பேசி கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அஸ்மாவே! இப்பொழுது இறந்தவர்களை எடுத்துச் செல்லும் முறை எனக்கு திருப்தியாக தோன்றவில்லை மைய்யித்தை கட்டிலில் வைத்து மேலே ஒரு துணியைப் போர்த்தி விடுகின்றனர் பெண்களுக்கும் இதே நிலை தான்.

அப்படி, கொண்டு போகும் போது  மைய்யித்தின் உடல் அமைப்பு தெளிவாக தெரிகிறது என்றார்கள்.

அதற்கு, அஸ்மா(ரலி) அவர்கள் ஆம்! என கூறி விட்டு, அல்லாஹ்வின் தூதரின் அருமை புதல்வியே! நான் அபீஸீனியா நாட்டில் இருக்கும் போது ஜனாஸாவைப் பார்த்திருக்கிறேன்! உங்களுக்கு விருப்பமானால் அது போலவே இப்பொழுது செய்து காட்டுகிறேன் என்றார்கள்.

இவர்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அதன்பின் மதினாவுக்கு இரண்டாவது முறையாக ஹிஜ்ரத் செய்தவர்கள் அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் தமது முதலாம் கணவர் ஜஅஃபர் (ரலி) அவர்களுடன் அபீஸீனியாவில் சில காலம் தங்கி இருந்தார்கள்.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் செய்து காட்ட சொன்னார்கள். உடனே ஒரு கட்டிலைக் கொண்டு வர சொன்னார்கள் அதன் இரு பக்கத்திலும் கட்டுவதற்காக பேரிச்ச மரத்து பச்சை மட்டைகளை வெட்டி வரும்படி ஏவினார்கள்.

பிறகு அதை அமைத்து ஒவ்வொரு கிளை மட்டையின் இரண்டு நுனிகளையும் வளைத்து பாதி வட்ட வளைவைப் போலச் செய்தார்கள். இந்த இரண்டு நுனிகளையும் கட்டிலில் இரண்டு ஓரங்களோடு சேர்த்துக் கட்டினார்கள்.

பிறகு மேல் ஒரு துணியைப் போட்டு மூடிக் காட்டினார்கள். இந்த முறை முழுமையாக மூடும் முறையாக இருக்கும். இப்போது, யாரும் மைய்யித்தை பார்க்க முடியாது என்று கூறினார்கள்.

இந்த ஜனாஸா பெட்டியை பார்த்தமாத்திரத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு சந்தோஷம் ஏற்பட்டு, இது நன்றாக இருக்கிறது இந்த முறை மிகவும் அழகாக இருக்கின்றது.

இதில் வைத்து கொண்டு போனால் இறந்தவர் ஆணா? பெண்ணா? என்று எவரும் அறிந்து கொள்ள மாட்டார்கள் என்று பூரித்துப் போனவர்களாக, இவ்வாறு தான் எனது ஜனாஸாவையும் எடுத்துச் செல்ல வேண்டும், மேலும், நீயும் என் கணவர் அலீ (ரலி) அவர்களும் தான் என்னைக் குளிப்பாட்ட வேண்டும், வேறு எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது!” என்று தங்களின் இறுதி ( சாசனத்தை ) ஆசையை அவர்களிடம் சொன்னார்கள்.

பின்னர், ஓரிரு நாட்களில் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் வஃபாத்தானார்கள். வஃபாத்தான செய்தி கேள்வி பட்டு, மாநபி {ஸல்} அவர்களின் தோழர்கள் அனைவரும் குழுமத்தொடங்கினார்கள்.

வீட்டின் ஓரிடத்தில் அமர்ந்து ஃபாத்திமா (ரலி) அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வண்ணமாக, அபீசீனியாவில் கண்ட அந்த மைய்யித் கொண்டு செல்லும் உபகரணத்தை ( இன்றைய சந்தூக் வடிவத்தை ) செய்ய ஆரம்பித்தார்கள்.

இறுதியாக, குளிப்பாட்டும் நேரம் வந்த போது, அலீ (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா (ரலி) அவர்களின் இறுதி ஆசையைக் கூறி அலீ (ரலி) அவர்களோடு குளிப்பாட்ட இணைந்து கொண்டார்கள்.

அப்போது, அங்கே ஆயிஷா (ரலி) அவர்கள் வருகை தந்து குளிப்பாட்ட அனுமதி கேட்டார்கள். அஸ்மா (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வஸிய்யத்தைக் கூறி உள்ளே விட மறுத்து விட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து “தந்தையே ஃகஸ்அமிய்யாக் கோத்திரத்தின் இந்தப் பெண்மனி ( அஸ்மா ) அண்ணலாரின் மனைவியான என்னை, அண்ணலாரின் மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களை குளிப்பாட்ட அனுமதிக்காததோடு, என்னை வெளியே செல்லுமாறு கூறி விரட்டி விட்டார், மேலும், இது வரை எவருக்கும் செய்யாத புதுமையான சந்தூக் ஒன்றையும் தயார் செய்து வைத்திருக்கின்றார்! அங்கு அவரிடன் என்னவென்று கேளுங்கள்! என்று முறையிட்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் “அண்ணலாரின் மனைவியான ஆயிஷாவை, அண்ணலாரின் மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களை குளிப்பாட்ட அனுமதிக்காததோடு, வெளியே செல்லுமாறு கூறி விரட்டி விட்டாயாமே, மேலும், இது வரை எவருக்கும் செய்யாத புதுமையான சந்தூக் ஒன்றையும் தயார் செய்து வைத்திருக்கின்றாயாமே!!” என்று கேட்டார்கள்.

அதற்கு, நடந்த விபரத்தைக் கூறிய அஸ்மா (ரலி) அவர்கள், இது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மரண சாசனம் என்றார்கள்.

அதைக் கேட்ட, ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மகளார் உமக்கு ஏவியதைப் போன்றே நீ செய்து கொள்!” என்று கூறினார்கள்.

அது போன்றே, ஃபாத்திமா (ரலி) அவர்கள் குளிப்பாட்டப்பட்டு, அந்த சந்தூக்கில் வைத்து மண்ணறைக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.


இந்த செய்தியை அறிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் உம்மு ஜஅஃபர் (ரலி) ஆகியோர் ”மேற்கூறிய இந்த அமைப்பில் முதன் முதலாக ஃபாத்திமா (ரலி) அவர்களே எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

கொஞ்ச நாளுக்குப் பின்னர் ஜைனப் பிந்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் இறந்த போது இதைப் பின்பற்றி எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

பின்னர், நாளடைவில் இந்த நடைமுறையே அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டது” என்று கூறுகின்றார்கள்.

                             ( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஅரிஃபதில் அஸ்ஹாப் )

அன்றைக்கு முஸ்லிம் சமூகம் உள்வாங்கிய ஒரு கலாச்சாரம் இப்போது, உலகெங்கிலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது, ஆனால், அது உள்வாங்கப்பட்ட போது அதன் சாதக பாதகங்களை அலசிப் பார்த்தே உள்வாங்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இஸ்லாம் எந்த ஒரு இனத்தின் கலாச்சாரத்தையும், எந்த ஒரு சமூகத்தின் கலாசாரத்தையும் ஏற்றுக் கொள்வதற்கான அளவு கோலாக மேற்கூறிய அம்சங்களையே கடைபிடிக்கின்றது.

அதே அடிப்படையில் தமிழ்ச்சமூகத்தின் கலாச்சாரங்களை இன்றைய முஸ்லிம் சமூகம் உற்று நோக்குகின்றது.

அதனடிப்படையிலே ஆதரவுக்கரம் நீட்டி, போராட்டத்தில் பங்கெடுத்து இருக்கின்றது.

இஸ்லாத்தின் நெகிழ்வுத்தன்மையை உலகிற்கு பறைசாற்றுவோம்!!!
இஸ்லாமியன், முஸ்லிம் என்று சொல்வதில் பெருமை அடைவோம்!!
வஸ்ஸலாம்!!!!