Thursday, 6 September 2018

என் வாக்குரிமை!! என் வாழ்வுரிமை!!!

                  என் வாக்குரிமை!! என் வாழ்வுரிமை!!!







ஓரு முஸ்லிம் தமது அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

ஆனால், இன்றைய உலகில் இஸ்லாமிய சமூக வாழ்க்கைக் கட்டமைப் பின் படி வாழ இயலாத சூழலில் முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமான சட்ட நடைமுறைகளைக் கொண்ட சமூக ஒழுங்குகளுக்குளும், வரையறைக்குள்ளும் வாழ வேண்டுமாய் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

இதன் விளைவாக நமது செயல்களில் பல இஸ்லாமிய விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் தவறான பாதைக்குள் அகப்பட்டு விடுவதைக் காண்கிறோம்.

இதற்கோர் நல்ல உதாரணம் தான் இன்று இந்த இந்திய தேசத்தில் நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகள்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை எதிர்கால இந்திய முஸ்லிம்களின் இந்திய இருப்பையே கேள்விக்குறியாக்கி இருக்கும் பிரச்சனையாகும்.

ஆம்! இந்திய அளவில் 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் தமிழக அளவில் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

வாக்குரிமை என்றால் என்ன? ஏன் முஸ்லிம்கள் வாக்குரிமை மட்டும் பரிபோய் இருக்கின்றது? இஸ்லாமியப் பார்வையில் வாக்குரிமை? முஸ்லிம் சமூகத்தின் வாக்குரிமையை பரித்தது யார்? நாம் என்ன செய்ய வேண்டும்?

வாருங்கள்! உலக நடைமுறைகளையும், இஸ்லாமிய வழிகாட்டுதலையும் பார்த்து விட்டு வருவோம்!!

அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை..

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்த தேசத்தின் அனைத்து தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம்முழுமையான சுதந்திரம் என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு, 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

1947 –இல் ஆகஸ்ட் 15 –இல் நமது இந்திய தேசம் 200 ஆண்டுகால ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்து சுதந்திர நாடாக ஆனது.

1946 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 –ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்ஹா என்பவரை நியமித்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அதன் பிறகு இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு டாக்டர் பி. ஆர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசனம், முகவுரை, விதிகள், அட்டவணைகள் பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்டு இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால் 1930 ஜனவரி 26 –ஆம் நாளை நினைவு கூறும் வகையில் 1950 –ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 –ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

அந்த மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் சாசனத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ”வாக்காளர்என்றால் என்னவென்று பகுதி 1, பிரிவு 2-ல், உட்பிரிவு (e) -ல் வரையறுத்திருக்கிறது.

பிரிவு 2(e)வாக்காளர் எனில் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரொருவரின் பெயர் அப்போதைக்கு செயல்லாற்றலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.

அதாவது வாக்காளர் என்றால், இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். மற்றும் இதே சட்டத்தின் பிரிவு 11ல் வாக்காளராக இருப்பவருக்கு சில தகுதிக் குறைபாடுகள் இருக்ககூடாது எனச் சொல்கிறது. அந்தக் குறைப்பாடுகள் எதுவெனில் 1. கிரிமினல் குற்றம் புரிந்து தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171 E (Punishment for Bribery) அல்லது 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election)அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 125 / பிரிவு 136 -ன் உட்பிரிவு (2) கூறு (அ) வின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

2. புத்தி சுவாதீனம் அற்றவராக இருக்கக்கூடாது.

வாக்குரிமை கடந்து வந்த பாதை...

வாக்குரிமையின் வரலாறு மிக நீண்டதாகும். வாக்குரிமைக்காக பல போராட்டங்களும், புரட்சிகளும் தியாகங்களும் நிகழ்ந்துள்ளன. இது பற்றி (Garner) கார்னர் எனும் நூலாசிரியர், "சென்ற நூற்றாண்டில், வாக்குரிமை தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டது, மக்களாட்சியின் வரலாற்றில் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார்.

வாக்குரிமை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த, பாலினம், சொத்து, கல்வித் தகுதி போன்றவை காலப்போக்கில் மறைந்து போயின. இன்று, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடுகளில் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனினும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில், பின்வரும் தகுதிகள் விதிக்கப்பட்டிருந்தன. அவையாவன.

சொத்துரிமை அல்லது வரி செலுத்துதல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சொத்துடைமை என்பது, வாக்குரிமைக்கான அடிப்படைத் தகுதியாக இருந்தது. அதேபோல், வரி செலுத்துவோரும் வாக்குரிமை பெற்று வந்தனர்.

சொத்து உள்ளவர்களும், வரி செலுத்துவோரும் நம்பகத்தன்மையுடையவர்கள். எனவே அவர்கள் அரசாங்க செயல்பாடுகளில் பங்கு பெறலாம் என்று இதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டு வந்தது. உதாரணமாக, ஜப்பானிய நாட்டில், 1925 ஆம் ஆண்டு வரை, வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது. இதனால், வரி செலுத்தாதோருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது.

கல்வித் தகுதி:

ஜே.எஸ்.மில் போன்ற அரசியல் சிந்தனையாளர்கள், கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், பொது நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என வாதிட்டனர். பிரேசில், சிலி (Chile) போன்ற நாடுகளில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசியல் முதிர்ச்சி இருக்கும் என்பதும், எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு அரசியல் முதிர்ச்சி இருக்காது என்பதும் ஏற்க முடியாத வாதமாகும்.

பாலினத்தகுதி

ஆரம்ப காலம் முதலே ஆண்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடத் தக்கவர்கள் என்பதும், பெண்கள் வீட்டுப் பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக இருந்து வந்திருக்கின்றது. பெருமளவில் பெண்களுக்கு பொது வாழ்வில் பங்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது, வாக்குரிமையும் இதற்கு விதிவிலக்கல்ல.
பிரிட்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட சென்ற நூற்றாண்டின் இடையில் தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க முன்வந்தன. ஆனால் சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்பது பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.

தேசியத் தகுதி

தற்கால அரசுகள் தங்கள் குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்குகின்றன.

வயதுத் தகுதி

வயது என்பது ஒரு முக்கியத் தகுதியாகும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் முதிர்ச்சி பெற்றவர்களே நன்கு முடிவெடுக்க இயலும் என்பதால் வயது ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உலகளவில் 18 வயது என்பது முதிர்ச்சியுற்ற வயதாகக் கருதப்படுவதால், பல நாடுகளிலும் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது - இந்தியாவில், முதலில் 21 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது.

பின்னர், 1989 ஆம் ஆண்டு முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் ஆர்வத்துடன் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் இந்த உரிமைமையை வழங்கினார்கள்.

ஷரீஆவின் பார்வையில் வாக்குரிமை...

வாக்குரிமை என்பது ஷரீஆவின் பார்வையில் பிரதானமான நான்கு அம்சங்களில் நோக்கப்படுகின்றது.

கலாநிதி முஸ்தபா அல்ஸிபாஈ, முஹம்மத் பல்தாஜீ, பத்ஹி அபுல் வர்த், அப்துல் கரீம் ஸைதான், அப்துல் ரகுமான் அல்பர், யூஸுப் கர்ளாவி, முஹம்மத் அஹ்மத் ராஷித் போன்ற சம கால அறிஞர்கள் பலர் வாக்குரிமை குறித்து ஆய்வு செய்து பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.

1.   ஷஹாதத் – சாட்சி பகர்தல்.

வாக்களிப்பது என்பது சாட்சி பகர்தல் என்று அர்த்தத்தில் சில போது நோக்கப்படும். அதாவது, அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பார்களுக்கு வாக்களிப்பது என்பது நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக அல்லது நாட்டின் தலைவராக வருவதற்கு தகுதியானவர், பொருத்தமானவர் என்று வாக்காளர் வழங்கும் சாட்சியம் ஆகும்.

அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள சாட்சி பகர்தல் என்ற வார்த்தை வாக்களித்தல் என்பதற்கு சமனானது என்ற கருத்தில் சட்டத்துறை மற்றும் அரசியல் துறை அறிஞர்கள் மத்தியில் கருத்தொற்றுமை நிலவுகிறது.

தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்காளர் அட்டை என்பது சாட்சி பகர்வதற்கான அழைப்பாகும்.

وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا

சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாதுஎன்ற அல்பகரா அத்தியாயத்தின் 282 –ஆவது வசனத்தில் அல்லாஹ் பணிக்கிறான்.

அவ்வாறே வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்வது, மறைப்பது குற்றம் என்ற கருத்தை அதே அத்தியாயத்தின் அடுத்த 283 –ஆவது வசனத்தில் அல்லாஹ்..

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ

சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தல் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றதுஎன அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

2.   ஷஃபாஅத் – பரிந்துரை வழங்குதல்...

வாக்களிப்பது என்பது சாட்சி பரிந்துரைத்தல் என்ற அர்த்தத்தில் சில போது நோக்கப்படும். அதாவது, அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பார்களுக்கு வாக்களிப்பது என்பது நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து அல்லது நாட்டின் தலைவராக இருந்து தமது சமூகத்தின் குறை நிறைகளை அறிந்து சமூகத்திற்காக உழைப்பார் எனக் கருதி அந்தப் பொறுப்பிற்கு வாக்குரிமை மூலம் நாம் அளிக்கும் பரிந்துரை ஆகும்.

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا

எவர் நன்மையான ஒன்றுக்கு பரிந்துரை செய்வாரோ அந்த நன்மையில் அவருக்கு ஒரு பங்குண்டு. எவர் தீமையான ஒன்றுக்கு பரிந்துரை செய்வாரோ அவருக்கு அதில் ஒரு பங்குண்டு”                         ( அல்குர்ஆன் 4: 85 )

3.   அமானத் – நம்பகத்தன்மை...

வாக்குரிமை என்பது நமக்கு இந்த தேசம் தந்திருக்கும் அடிப்படை உரிமை என்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும் போது அது இஸ்லாமிய வழக்கில் அமானிதம் என்ற நோக்கில் பார்க்கப்படும்.

அப்படி நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

“உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி அல்லாஹ் உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 4: 58 )

4.   வகாலத் – பொறுப்பேற்றல்..

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமது சார்பில் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கின்றார்.

மேலும், ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து உம் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி என் சமூகத்தின் பிரச்சனைகளை சரி செய்வதும், என் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதும் உமக்கான பிரதான கடமை என்று சமூகத்தின் சார்பாக அவர் செய்வார் என்கிற நம்பிக்கையில் பொறுப்பேற்பதால் சில போது வகாலத் எனும் பொருளில் நோக்கப்படும்.

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இருமகள்களில் ஒருவர் மூஸா {அலை} அவர்கள் குறித்து கூற வருகிற போது... பொறுப்பேற்கும் விதமாக

قَالَتْ إِحْدَاهُمَا يَاأَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (26)

“என் தந்தேயே அவரை பணியில் அமர்த்துங்கள்! நிச்சயமாக நீங்கள் பணியில் அமர்த்துபவர்களில் சிறந்தவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும், சக்தியுடையவராகவும் உள்ளார்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 26 )

எனவே, வாக்குரிமையை பயன்படுத்துவது ஷரீஆவின் பார்வையில் ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமையும், காலத்தின் கட்டாயத் தேவையும், பொறுப்புணர்ச்சியும் ஆகும்.

நாட்டில் அரசியல் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. பாஸிச சக்திகளின் கை அனைத்து மட்டங்களிலும் மேலோங்கி வருதை காண முடிகிறது.

அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆடுகளமாக இந்திய தேசம் மாறியுள்ள நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று ஒரு முஸ்லிம் வாழ முடியாது.

தொழுகை தீமையை தடுக்கும் என்றும், நன்மைகள் தீமைகளை தடுக்கும் என்றும், அல்குர்ஆன் கூறுகிறது. இந்த வகையில் வாக்குரிமை என்பது தீமையை தடுப்பதற்கான பலமான ஆயுதமாகும்.

இது மகத்தான சக்தியை பெற்றுத்தரும் அரசியல் ஆதாரம் ஆகும். இந்த நிலையில் வாக்குரிமையை நாம் இழந்து விட்டால் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்.

இன்று நாட்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிந்தனைகள் முடுக்கி விடப்பட்டுள்ள. பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

எனவே தேசத்தை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும். நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ தேர்தல் ஒரு சிறந்த ஆயுதம்.

அதற்கு வாக்குரிமையை மிகக் கச்சிதமாக பயன்படுத்தவது ஏனைய சமூகத்தைப் போல முஸ்லிம் சமூகத்திற்கு முன்னால் உள்ள சமனான பொறுப்பாகும்.

தேர்தலில் பங்கு கொள்வதற்கான ஷரீஆ ஆதாரங்கள்...

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தாம் வாழும் தேசத்தின் நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும், தீமைகளை தவிர்ப்பதற்கும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் குறிப்பிடுகிறார்.

காபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும் என்ற அடிப்படையில் அதற்கு அவர் ஆதராரம் காட்டுகிறார்.

இந்த ஆதாரத்தை அவர் விளக்கும் போது, நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் குறைஷிக் காபிர்களின் தலைவர்களிடமிருந்து உயிர்ப் பாதுகாப்பு பெற்ற பல சம்பவங்கள் ஸீராவில் உள்ளன.

அதன் பொருள் செல்வாக்குள்ள, உயர் அந்துஸ்துள்ள குறைஷி காபிர் ஒருவர், இன்னாருக்கு நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அறிவித்தால் அவருடை சமூகம் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டவருக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதாகும். காரணம் அந்த அறிவிப்பு ஒரு உடன்படிக்கை. எனவே அவரது கோத்திரத்தில் யாராவது பாதுகாப்பு கொடுக்கப்பட்டவருக்கு தீங்கு செய்தால் அது அத்துமீறியதாகவும் உடன்படிக்கையை முறித்ததாகவுமே கருதப்பட்டது.

رجع النبي ـ صلى الله عليه وسلم ـ من الطائف حزينًا مهمومًا بسبب إعراض أهلها عن دعوته، وما ألحقوه به من أذىً، ولم يشأ أن يدخل مكة كما غادرها، إنما فضل أن يدخلها في جوار بعض رجالها، خاصة أنه حين خرج ـ صلى الله عليه وسلم ـ إلى الطائف عزمت قريش على منعه من العودة إلى مكة، حتى لا يجد مكانا يؤيه، أو أناسا يحمونه .
قال ابن القيم

فقال له زيد

كيف تدخل عليهم وقد أخرجوك؟ ـ يعني قريشا ـ ، قال: يا زيد، إن الله جاعل لما ترى فرجا ومخرجا، وإن الله ناصر دينه، ومظهر نبيه، فلما انتهى إلى مكة، أرسل رجلا من خزاعة إلى مُطْعَم بن عدي: أدخل في جوارك؟، فقال: نعم، فدعا بنيه وقومه، وقال: البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرتُ محمداً،

وأصبح المطعم قد لبس سلاحه هو وبنوه وبنو أخيه فدخلوا المسجد، فقال له أبو جهل: أمجير أم متابع؟، قال

بل مجير، قال: قد أجرنا من أجرت " .


நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம் பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வால்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலே வந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா? எனக் கேட்டான்.

நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.

இதுபோன்ற ஏராளமான நம்பகமான நிகழ்வுகள் ஸீராவில் அதிகமாகவே காணமுடிகின்றது.

இவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான வழிகாட்டல்களாகும்.

அநீதி நிலவும் அரசாங்கத்தில் தேர்தல் என்பது சத்தியத்தை உரைப்பதற்கான ஒரு வழிமுறையாகும். சர்வதிகாரிகளின் கொடுமையை எதிர்ப்பதற்கான சாத்வீகமான போரட்ட ஒழுங்கும் அதுவே. எனவே தான் இறைதூதர் {ஸல்} அவர்கள் தேச, மக்கள் நலன்கள் கருதி ஒரு காபிரின் பாதுகாப்பை வேண்டினார்கள். ஒப்பிட்டு நோக்கும் போது இது தேர்தலில் பங்கு பெறுவதற்கான தெளிவான ஆதராமாகும்
இங்கு வாக்குரிமை என்பது நிராகரிப்புக்கு விசுவாசம் தெரிவிப்பது அன்று. முஸ்லிம்களின் நலனுக்கான விருப்பத்தை வாக்குரிமை மூலம் நிறைவேற்றிக் கொள்வதாகும்.  

இதற்கு பல சம்பவங்கள் சான்றாக உள்ளன.

உதாரணமாக, மக்கா காலப் பிரவில் பாரசீகத்துக் எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

ஹபஷாவில் நஜ்ஜாஷியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அது போன்ற ஒரு சமூக செயற்பாட்டிற்காக இன்று அழைக்கப்பட்டாலும் நான் நிச்சயமாக பதில் அளிப்பேன் என கூறினார்கள். இவை உலக விவகாரங்களில் நபிகளார் (ஸல்) அவர்கள் தேச மற்றும் மக்கள் நலனகள் கருதி பற்றோடும் விசுவாசத்தோடும் அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள் என்பதை காட்டுகின்றன.

எனவே, எமது பொறுப்பில் உள்ள வாக்குப் பலத்தை பிரயோகித்து அநியாயத்திற்கு இல்லை என்றும் மிதவாதிக்கு ஆம் என்றும் சாட்சி சொல்வது இறைவிசுவாசியின் கடமையாகும்.

மாற்றத்திற்கான சாத்வீக போராட்டத்தின் ஒரு ஆயுதமே வாக்குரிமை. மோசடி என்ற காரணம் காட்டி அந்தக் கடமையை பாழ்படுத்தக் கூடாது. தீமையை தடுப்பதற்கு அடுத்த தரப்பின் ஒப்புதல் தேவையில்லை. கடமையை செய்தால் அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும்.

வாக்குரிமையை விட்டுக் கொடுப்பது என்பது மோசடிக்கு நாம் உடந்தையாக இருக்கிறோம் என்பதே அர்த்தம். சாட்சி சொல்லாமல் மௌனிப்பது நடக்கின்ற அநீதிகளை அங்கீகரிப்பது என்று பொருள் அல்லது சரியோ பிழையோ நீ விரும்பியதை செய்வதற்கு நான் பூரண ஆதரவு என்று கூறுவதாக அர்த்தம்.

எனவே, எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் காலத்தின் தேவையறிந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.

அதற்கான முன்னேற்பாடாக நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து எதிர் வரும் காலங்களில் வாக்களிப்பதோடு இந்த தேசத்தின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

யார் நீக்கினார்கள்?

டெல்லியில் நடந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பல செயல் திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் பெறப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெங்களுரில் நடந்த தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரைஷி, கர்நாடக மூத்த அமைச்சர் ரோஷன் பேக், மாநில சிறுபான்மை கமிஷன் மற்றும் வஃக்பு போர்டு தலைவர்கள் மூத்த அரசு அதிகாரிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக நாமும் கலந்து கொண்டோம். சச்சார் கமிட்டி அறிக்கையையும், பரிந்துரையையும் அளித்த குழுவைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அளித்த அறிக்கை அனைவரையும் திகைப்படைய வைத்தது. ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பட்டியயிலிருந்து நீக்கப்பட்டதற்கான விவரத்தை அவர்கள் கணிணி ஆதாரங்களுடன் அளித்தனர். அவ்வாறே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்கும் இதர வாக்காளர்களிலும் கணிசமானவர் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அறிய முடிந்தது.

மூன்று மாதிரி தொகுதிகளில் நீக்கப்பட்டவரின் பட்டியலை விலாசத்துடன் அளித்ததை மாநில அரசு அதிகாரிகளே அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். பெங்களுரு மையத்திலுள்ள அமைச்சர் ரோஷன் பேக் வெற்றி பெற்ற சிவாஜி நகர் தொகுதியில் மட்டும் 8000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தகவல் தெரிவித்ததை அவர் முதலில் மறுத்தாலும் ஒரே நாளில் ஆய்வு செய்து அறிவிப்பதாகக் கூறினார். ஆய்விற்குப் பின் மறுநாளே அத்தகவல் உண்மை என்று அவர் அளித்த பேட்டி ஊடகங்களில் வெளியாயின. இவரின் வீடியோ கிளிப் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியை சரி செய்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மறு பதிவு செய்ய அதிவேகமான செயல் திட்டங்கள் கர்நாடக அரசும், ஆர்வலர்களும் மேற் கொண்டுள்ள நிலையிலும் 3 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மாநில அளவில் தேர்தலுக்கு முன் பதிவு செய்ய முடியும் என்று அறிய முடிகிறது.
இந்தியா முழுவதும் ஏறக்குறைய 3.5 – 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கலாம் என்ற தகவலும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏறக்குறைய 10 – 12 இலட்சம் முஸ்லிம் வாக்களார் நீக்கப்பட்டு இருக்கலாம் என்பதை தோராயமாக கணக்கிட்டாலும், மூன்று தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கணிணி மூலம் நீக்கப் பட்டியல் சில நாட்களில் அளிக்க கோரியுள்ளேன்.

பாராளுமன்ற தேர்தல் ஒரு வருடம் இருப்பதால் பா.ஜ.க. அல்லாத அரசியல் கட்சிகள், இசுலாமிய இயக்கங்கள் சமூக அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து இந்த சதியை முறியடிக்க வேண்டும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் விரைவில் கூட்டபடும்.

- தாவூத் மியான் கான்


ஏன் நீக்க வேண்டும்?..
வரலாற்றின் ஊடாக நாம் அந்த எதிரிகள் மேற்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்து பார்த்தால் 4 வகையான அணுகுமுறைகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

1. Annihilation – அனிகிலேஷன் நிர்மூலமாக்குதல் அல்லது இல்லாமல் ஆக்குதல்,

2. Acimilation – அசிமிலேஷன் தனித்தன்மையை இல்லாமல் ஆக்குதல், அல்லது தனித்தன்மையை அழித்தொழித்தல்,

3. Segregation – செக்ரிகேஷன்புறக்கணிப்பது, அல்லது ஒதுக்கி வைப்பது,

4.   Elimination – எலிமினேஷன் வெளியேற்றுவது.

எதிரிகள் இறுதியில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த நீக்கம், வெளியேற்றம் என்பது. இப்போது அதைக் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வும் இது குறித்து எச்சரித்தும் நினைவூட்டியும் உள்ளான்.

“நபியே! அவர்கள் உமக்கெதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். உம்மை சிறைபிடிப்பதற்கும், உம்மை கொல்வதற்கும், உம்மை ஊரை ( நாட்டை ) விட்டு வெளியேற்றுவதற்கும்! அல்லாஹ் சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த சூழ்ச்சிக்காரன் ஆவான்”.                                  ( அல்குர்ஆன்: 8: 30 )

எனவே, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நமது வாக்குரிமையை சரி பெயர் பட்டியலில் சரி பார்த்து, எதிர் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் ஃபாஸிச சக்திகளை இந்த நாட்டை விட்டே துரத்துவோம்.

என் வாக்கு! என் உரிமை என்பதை விட வாக்குரிமை என் வாழ்வுரிமை என்பதை உணர்வோம்.

வஸ்ஸலாம்!!!