Thursday, 21 February 2019

அச்சம் தவிர்! உச்சம் தொடு!!


அச்சம் தவிர்! உச்சம் தொடு!!



2019ம் ஆண்டிற்கான பிளஸ்1, பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளின் பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை முன்கூட்டியே வெளிடும் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்தது.

இதன்மூலம் பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் எந்தவித மன அழுத்தம் இல்லாமல், தேர்வுகளுக்கு தயாராகலாம் என்னும் பொருட்டு இந்த யுக்தியை தமிழக கல்வித்துறை அமைச்சகம் கையாண்டது.

இந்த நடைமுறை இந்தாண்டு தொடர்கிறது. அதன்படி, 2019ம் ஆண்டிற்கான 10, +1, +2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

1. மார்ச் 1ம் தேதி தொடங்கும் பிளஸ் 2 தேர்வு 19ம் தேதி முடிவடைகிறது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கால அட்டவணை

2019
மார்ச் 1- தமிழ்

2019
மார்ச் 5- ஆங்கிலம்

2019
மார்ச் 7- கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.

2019
மார்ச் 11- இயற்பியல், பொருளாதாரம்.

2019
மார்ச் 13- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

2019
மார்ச் 15- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

2019
மார்ச் 19- உயிரியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கியல் மற்றும் தணிக்கை.

2. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 6ம் தேதி தொடங்கி, 20ம் தேதி முடிவடைகிறது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு கால அட்டவணை

2019
மார்ச் 6- தமிழ்

2019
மார்ச் 8- ஆங்கிலம்

2019
மார்ச் 12- கணிதவியல், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ-பயாலஜி.

2019
மார்ச் 14- இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்.

2019
மார்ச் 18- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்.

2019
மார்ச் 20- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

2019
மார்ச் 22- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணினி பயன்பாடுகள், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு பாடம் (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்.

3. 2019, மார்ச் 14ல் தொடங்கும் 10ம் வகுப்பு தேர்வு 29ம் தேதி முடிவடைகிறது.

10
ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வு கால அட்டவணை

2019
மார்ச் 14- தமிழ் முதல் தாள்

2019
மார்ச் 18- தமிழ் இரண்டாம் தாள்

2019
மார்ச் 20- ஆங்கிலம் முதல் தாள்

2019
மார்ச் 22- ஆங்கிலம் இரண்டாம் தாள்

2019
மார்ச் 23- விருப்ப பாடம்

2019
மார்ச் 25- கணிதம்

2019
மார்ச் 27- அறிவியல்

2019
மார்ச் 29- சமூக அறிவியல்.

எதிர்வருகிற மார்ச் 1 –ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துவங்க இருக்கிற ப்ளஸ் டூ தேர்வு அதில் பங்கெடுத்து தேர்வெழுத இருக்கிற லட்சக்கணக்கான மாணவக் கண்மணிகளுக்கு நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வாழ்த்தி துஆச் செய்யும் இந்த தருணத்தில் அவர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டலை இந்த ஜும்ஆவில் நினைவு படுத்துவது சாலச் சிறந்தது என்றே கருதுகின்றேன்.

மாற்றம் முன்னேற்றம் தரும் என்று நம்புவோம்!

கடந்த ஆண்டு வரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் 4 தாள்களை எழுதியவர்கள் இந்தாண்டு முதல் பள்ளிக்கல்வித்துறையின் சீர்மிகு நடவடிக்கையால் 2 தாள்களாக மாற்றப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த ஆண்டு வரை 8 தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த ஆண்டு முதல் 6 தேர்வுகள் எழுதினால் போதும்.

மேலும், கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளி விட்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 2 நாட்கள் இடைவெளியில் தேர்வுகள் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு வரை ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண் என்று 1200 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்தாண்டு முதல் 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் இந்த கால அவகாசமே போதும் என்று பள்ளிக் கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வென்பது

மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரையிலான இடைப்பட்ட காலத்தைக் கூட தேர்வு களம் என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு!” ( 67: 2 )

இங்கே நாம் அனைவரும் தேர்வெழுதிக் கொண்டு தான் இருக்கின்றோம்.

ஆகவே, மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு கடந்து செல்வதற்கான ஒரு தேடல் தான் தேர்வு என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தேர்வெழுதுவதை ஒரு பிரச்சனையாக எண்ணக் கூடாது. மாறாக அதை ஒரு சவாலாக ஏற்க வேண்டும். தேர்வெழுதுவதை ஒரு சிக்கலாக நினைக்கக்கூடாது. அதை திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக கருத வேண்டும்.

காரணம் உண்டு வருடம் முழுவதும் நீங்கள் படித்த, மாதத்தேர்வெழுதிய, பல செய்திகளைப் புரிந்து கொண்ட பாடங்களைத்தான் தேர்வாக எழுதப்போகின்றீர்கள்.

வகுப்பறையில் நீங்கள் பெற்ற பகுத்துப் பார்க்கும் ஆற்றலையும் தொகுத்து உணரும் ஆற்றலையும் உலகிற்கு வெளிப்படுத்த மகத்தான ஒரு வாய்ப்பு தான் தேர்வுகள்.

பல நாட்கள் படித்து தேர்வெழுதுவதற்காக உங்களைத் தயார் செய்து அவற்றையெல்லாம் தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் சமூகத்தின் இதர மனிதர்களின் அங்கீகாரம் பெற தேர்வுதான் சரியான வாய்ப்பு.

நீங்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே உங்கள் அறிவை, ஆற்றலை மன ஆற்றலை, திறமையை உலகம் எடை போடுகிறது.

எனவே, அதிக மதிப்பெண்கள் பெற்று புகழை, அங்கீ காரத்தைப் பெறுங்கள்! சந்தோஷம் அடையுங்கள்!! தேர்வுகள் என்பது உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் முன்னே உள்ள மிகப்பெரிய சவால், ஜெயித்துக் காட்டுங்கள்!!!

தேர்வு இனிதாய் அமைந்திட....

1.   ( Faith ) ஆழ்ந்த இறைநம்பிக்கை.
2. ( Self Confidence ) தன்னம்பிக்கை
3. ( Passion ) எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த உணர்வு
4. ( Clarity of Values ) தெளிவான கொள்கைகள்.
5. ( Methodologies ) அதை நோக்கிய வழிமுறைகள்
6. ( High Energy Levels ) அதற்கென பிரத்யேகப் பயிற்சி

எனவே, தேர்வும் தேர்வின் முடிவும் இனிதாய் அமைந்திட வேண்டுமானால் மாணவச் சமூகம் மேற்கண்ட ஆறு அம்சங்களை கைவரப் பெற்று, வெற்றியாளராய், சரித்திரத்தில் இடம் பிடிக்கும் சாதனையாளராய் வலம் வர முடியும்.

1.   ( Faith ) ஆழ்ந்த இறைநம்பிக்கை...
2.    
فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159)
அல்லாஹ் கூறுகின்றான்: “ {நபியே! ஏதாவது ஒரு விஷயத்தில்} நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருப்பீராக!                                              ( அல்குர்ஆன்:3: 159 )

இங்கே அல்லாஹ் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உறுதியான முடிவை மேற்கொண்டு விட்டால் பின்பு அது குறித்து அல்லாஹ்விடம் தவக்குல் பொறுப்புச் சாட்ட வேண்டும் என்று மாநபி {ஸல்} அவர்களுக்கு வழி காட்டுகின்றான்.

3.   ( Self Confidence ) தன்னம்பிக்கை..

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ (45)

“இறைநம்பிக்கையாளர்களே, (எதிரிகளின்) கூட்டத்தினரை நீங்கள் சந்தித்தால் (எவ்விதக் கலக்கத்தையோ பயத்தையோ மனதில் கொள்ளாமல்) உறுதியான (தன்னம்பிக்கை) நிலைப்பாட்டை மேற்கொள்ளுங்கள். அல்லாஹ்வை அதிகமாக (மனதாலும் வாயாலும்) நினைவு கூறுங்கள். அதன்மூலம் நீங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட முடியும்.                                                                                            ( அல்குர்ஆன்   8:45 )

3.   ( Passion ) எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த உணர்வு..

ويوم جاء وفد نجلاان من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة والاسلام، قال لهم رسول الله:
" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!!
وسمع الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم، فتمنى كل منهم لو يكون هو الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه..
يقول عمر بن الخطاب رضي الله عنه:
" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..
فلم يزل يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!!

ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.

இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள். உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்பு இடது புறம் பார்த்தார்கள். என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.

இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள், பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கையாளர் உண்டு.என்னுடைய உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள்.

உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம் வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது அன்று நான் ஆசை பட்டேன் நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தை அடையவேண்டுமென்று ஆனால்  அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்”.          ( நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241 )

فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يحبه الله ورسوله يفتح الله على يديه ليس بفرار قال يقول سلمة فدعا رسول الله صلى الله عليه وسلم عليا رضوان الله عليه وهو أرمد فتفل في عينه ثم قال خذ هذه الراية فامض بها حتى يفتح الله عليك
يقول عمر بن الخطاب رضي الله عنه:

" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها،

 ஃகைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது மாநபி {ஸல்} அவர்களின் தலைமையிலான முஸ்லிம்களின் அணி கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அல்லாஹ்வை மறுக்கும் எதிரணியினர்.முதல் நாள் முடிவுக்கு வந்தது.

அப்போது, நபி {ஸல்} அவர்கள் நாளை நான் ””அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம் கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம் வெற்றியை வழங்குவான்”” என்று கூறினார்கள்.

உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: "ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அதுவரை நான் எந்த புகழுரைக்கும்,அந்தஸ்துக்கும் ஆசைப் பட்டது கிடையாது. அன்று நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற ஒருவனாக ஆக வேண்டும், நபிகளாரின் அமுத வாயால் சொல்லப்பட்ட சோபனத்திற்கு சொந்தக்காரனாய் ஆக வேண்டும் என ஆசைப் பட்டேன்”. ஆனால், அதை அலீ {ரலி} அவர்கள் தட்டிச் சென்று விட்டார்கள். ( நூல்: ஃகுலஃபாவுர்ரஸூல் {ஸல்}, பக்கம்:294 )                        
இந்த இரு வேறு அறிவிப்புக்களையும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஃகாலித் முஹம்மத் ஃகாலித் {ரஹ்} தங்களது இரு வேறு நூற்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

இங்கே உமர் {ரலி} அவர்களின் சாதிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த உணர்வு பிற்காலத்தில் இருபத்தி இரண்டரை லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட இஸ்லாமிய எல்கையை ஆட்சி செய்யும் ஆட்சியாளாராக கொண்டு வந்து நிறுத்தியது.

4.   ( Clarity of Values ) தெளிவான லட்சியங்கள்....

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  (மூமின்களே!) உங்களின் இலக்கு நன்மையானவற்றில் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்”.                                 ( அல் குர் ஆன்: 2: 148 )

ஹஸன் இப்னு (ரலி) அறிவிக்கின்றார்கள்:


إِنَّ اللهَ تَعَالَى يُحِبُّ مَعَالِيَ الأُمُوِر وَأَشرَافَهَا، وَيَكَرهُ سَفْسَافَهَا
திண்ணமாக!அல்லாஹ் காரியங்களில், செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், சிறப்பானவற்றையும் பிரியப்படுகின்றான்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

                                                          ( நூல்: தப்ரானீ )

ஓர் இறை நம்பிக்கையாளன் உலக வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையையும் உயர்ந்த இலக்கை நோக்கியதாகவே அமைந்திருக்க வேண்டும் என மேற்கூறிய இறைவசனமும், நபி மொழியும் நமக்கு உணர்த்துகிறன்றது.


عن العرباض بن سارية - رضي الله عنه - قال : قال النبي - صلى الله عليه وسلم - : "إذا سألتم الله فسألوه الفردوس ، فإنه سر الجنة" .(صحيح). 
عن عبادة بن الصامت - رضي الله عنه - قال : قال النبي - صلى الله عليه وسلم - : "إن في الجنة مائة درجة ، ما بين كل درجتين كما بين السماء والأرض ، والفردوس أعلاها درجة ،ومنها تفجر أنهار الجنة الأربعة ، ومن فوقها يكون العرش ، فإذا سألتم الله فاسألوه الفردوس" .(صحيح).

நீங்கள் அல்லாஹ்விடம் சுவனத்தைக் கேட்டால் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தையே கேளுங்கள். ஏனெனில், அதுதான் உயர்வானதும், மிக்க மேலானதுமாகும். அதற்கு மேலாகத்தான் அல்லாஹ்வின் அர்ஷ் அரியாசனம் உள்ளது. அங்கிருந்துதான் சுவனத்து நதிகள் வெளியாகின்றது. அது தான் பரந்து விரிந்த சுவனத்தின் மத்தியப்பகுதிநடுப்பகுதியாகும்  ( நூல்: புஹாரி )

ஆக, ஒரு மூஃமின் உலக வாழ்க்கைக்காவோ, மறுமை வாழ்க்கைக்காகவோ எதுவொன்றை தேர்ந்தெடுக்கின்றானோ அது மேலானதாய், மிக உயர்வானதாய் அமைந்திருக்க வேண்டுமென அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் விரும்புகின்றார்கள். அத்தோடு நின்று விடாமல் அதற்காக முழு முயற்சியோடும், உத்வேகத்தோடும் செயல்படுமாறு பணிக்கின்றார்கள்.

5.   ( Methodologies ) அதை நோக்கிய முயற்சிகள்...

மனித வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ வேண்டுமானாலும் கூட அதற்கு மனித முயற்சி மிகவும் அவசியம் என்கிறது அல்குர்ஆன்.

அல்லாஹ்வின் அற்புதத்தை வயிற்றில் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் உணவளிக்க முன்வந்த போது வெறுமெனே அதியசத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. மாறாக, அதற்காக அவர்களுடைய முயற்சி எனும் பங்களிப்பைத் தரச் சொன்னான்.

فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا (22) فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا (23) فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا

பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஒர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார். பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது.

அப்போது, அவர் அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருக்கக் கூடாதா?” என்று கூறலானார். அப்பொழுது, கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார் நீர் கவலைப் படாதீர்! உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.

மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும், அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும். ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக!”.                                 ( அல்குர்ஆன்: 19: 22 26 )

மூஸா (அலை) அவர்களின் சமூகம் தண்ணீர் இன்றி தவித்த போது அல்லாஹ்விடம் மூஸா (அலை) பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அல்லாஹ் தண்ணீர் தர முன் வந்த போது வெறுமெனே அதியசத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. மாறாக, அதற்காக அவர்களுடைய முயற்சி எனும் பங்களிப்பைத் தரச் சொன்னான்.

وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا

இன்னும், மூஸா தம் சமூகத்தினருக்காக தண்ணீர் வேண்டி பிரார்த்தித்ததையும் நினைவு கூறுங்கள். அப்போதுஉம்முடைய கைத்தடியைக் கொண்டு இந்தக் கல்லின் மீது அடிப்பீராக!” என்று நாம் கூறினோம். அவ்வாறு அவர் அடித்ததும் அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பொங்கி எழுந்தன”. ( 2: 60 )

فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ (63) وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ (64) وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ (65)

இது போன்றே ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து தப்பித்துச் சென்ற போது கடல் நீர் குறுக்கிடவே மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் கைத்தடியைக் கொண்டு கடலில் அடிக்குமாறு கட்டளை பிறப்பித்தான். ( பார்க்க, அல்குர்ஆன்: 26: 60 – 66 )

ஆக, மனித வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டு வெளியே வர வேண்டுமானால் முழுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இருமலைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த ஓர் சமூகத்தார் யஃஜூஜ்மஃஜூஜ் எனும் கலகக்காரர்களால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் அராஜகப் போக்கால் வாழ்க்கையின் மீது நிராசை கொண்டு வாழ்ந்து வந்தனர்.

யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தாரை எதிர் கொள்ளத் துணிவில்லாமல் தகுதி உள்ள எவராவது வரமாட்டார்களா? அவர்களைக் கொண்டு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்களின் தாக்குதல்களிலிருந்து மீண்டு விடலாம் என எண்ணிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தனர்.

இந்த நேரத்தில் தான் உலகை சுற்றி வந்து கொண்டிருந்த துல்கர்னைன் (அலை) அவர்கள் அம்மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகை தந்திருந்தார்கள்.

இதன் பின்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ், அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் நயம்பட விவரிக்கின்றான்.

حَتَّى إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا () قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا () قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا () آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا فَمَا اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا ()
قَالَ هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا ()

பிறகு, துல்கர்னைன் (அலை) வேறொரு முக்கிய காரியத்தை முன்னிட்டு புறப்பட்டார். அவர் இரு மலைகளுக்கிடையே வாழ்ந்துவந்த ஓர் சமுதாயத்தைக் கண்டார். அவர்களின் மொழியை துல்கர்னைன் அவர்களால் எளிதில் விளங்கிக் கொள்ள இயலவில்லை

அப்போது, அந்த மக்கள்துல்கர்னைன் அவர்களே! யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் நாங்கள் வசிக்கும் பகுதியில் பெரும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து வருகின்றனர். எனவே, நீர் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் தடுப்புச் சுவரை எழுப்பித்தர வேண்டும், இதற்காக நாங்கள் உங்களுக்கு ஏதேனும் கப்பம் வரி செலுத்த வேண்டுமா? என்று கோரினார்கள்.

அதற்கு, அம்மக்களிடம் துல்கர்னைன் {அலை} அவர்கள் ““என்னுடைய இறைவன் எனக்கு ஏராளமாக வழங்கியிருக்கின்றான். எனக்கு எதுவும் நீங்கள் தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள்நான் உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஓர் தடுப்புச் சுவரை எழுப்பித் தருகின்றேன். அதற்காக நீங்கள் இரும்புப்பாளங்களை கொண்டு வாருங்கள்என்றார்கள்.

இறுதியில், இரு மலைகளுக்கு இடையிலான பகுதிகளை இரும்புப் பாளங்களால் நிரப்பி விட்ட பிறகு, மக்களை நோக்கி துல்கர்னைன்இப்பொழுது நெருப்பை மூட்டுங்கள்! என்று கூறினார்.

கடைசியில், அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய் பழுக்கக் காய்ந்த போது மக்களை நோக்கி துல்கர்னைன் {அலை} அவர்கள்உருக்கிய செம்புத் திரவத்தைக் கொண்டு வாருங்கள்! நான் அதன் மீது ஊற்றுகின்றேன்.

யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தார் ஏறி வராத அளவுக்கு உயரமாகவும், துளையிட முடியாத அளவுக்கு வலுவாகவும் அந்தச் சுவர் அமைந்திருந்தது.

அம்மக்கள் பிரம்மாண்டமான அந்த தடுப்புச் சுவர் குறித்து வியப்பில் ஆழ்ந்த போது துல்கர்னைன்இது என் இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் ( மறுமை ) வந்து விட்டால், அவன் இதனைத் தூள் தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையாகும்”.

                                                  ( அல்குர்ஆன்: 18: 92 – 98 )

6. ( High Energy Levels ) அதற்கென பிரத்யேகப் பயிற்சி...

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
يَا غُلَامُ أَوْ يَا غُلَيِّمُ أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِنَّ فَقُلْتُ بَلَى فَقَالَ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ أَمَامَكَ تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ فِي الشِّدَّةِ وَإِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ قَدْ جَفَّ الْقَلَمُ بِمَا هُوَ كَائِنٌ فَلَوْ أَنَّ الْخَلْقَ كُلَّهُمْ جَمِيعًا أَرَادُوا أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَإِنْ أَرَادُوا أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ عَلَيْكَ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ وَاعْلَمْ أَنَّ فِي الصَّبْرِ عَلَى مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ وَأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْبِ وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.

அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்!என்று கேட்டார்கள். நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள்

1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்! உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.

4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்டாகி விட்டன.

 6. அறிந்து கொள்! முழு மனித சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது!

 7. அவ்வாறு தான் முழு மனித சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது!

8. அறிந்துகொள் சிறுவனே! நீ வெறுக்கின்ற பல காரியங்களில் பொறுமை மேற்கொண்டால் பல நல்ல விளைவுகளைக் காண்பாய்!

9. திண்ணமாக! அல்லாஹ்வின் உதவி என்பது பொறுமை கொள்வதில் தான் இருக்கின்றது!, திண்ணமாக, மகிழ்ச்சி என்பது சிரமத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது! திண்ணமாக, இலகு என்பது கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது!என்று கூறினார்கள்.                              ( நூல்: திர்மிதீ )

இது சிறுவராயிருந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கற்றுத்தந்த வார்த்தைகள் மாத்திரம் அல்ல. ஒட்டு மொத்த உம்மத்துக்கும் தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

هذا الحديث شرحه الحافظ ابنُ رجب الحنبليُّ في كتابه "جامع العلوم والحكم" شرحًا عظيمًا، ومما جاء في كلامه - رحمه الله -: "هذا الحديث تضمَّن وصايا عظيمةً، وقواعدَ كليةً من أهمِّ أمور الدين!".

இந்த நபிமொழிக்கு விளக்கம் தருகிற ஹாஃபிழ் இப்னு ரஜப் ஹம்பலீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் மகத்தான பல கருத்துக்களை பொதிந்திருக்கின்றது. மார்க்கத்தின் பல கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதை அமைந்திருக்கின்றது
                                     ( நூல்: ஜாமிவுல் உலூமி வல் ஹிகம் )

மனவலிமையோடும், தன்னம்பிக்கையோடும், இறைச் சார்போடும் தேர்வெழுதி உயர்ந்த பல சிகரங்களைத் தொடும் உயர்ந்தவர்களாக எம் மாணவச் சமூகத்தை அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக!

     ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!