Sunday, 10 April 2022

அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-9 ஒதுங்கி இருப்பது பாவமாகும்!!

 

அருள்மறைச் சாரல்தராவீஹ் சிந்தனை:-9

ஒதுங்கி இருப்பது பாவமாகும்!!



அல்ஹம்துலில்லாஹ்!! நாம் நோற்ற 8 –வது நோன்பை சிறப்பாக நிறைவு செய்து, 9 – வது நாள் தராவீஹ் தொழுகையை தொழுது விட்டு இறைமறையின் வசனத்தின் விளக்கத்தைப் பெறும் பொருட்டு அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அமர்வை அருள் செய்யப்பட்ட அமர்வாக ஆக்கியருள்வானாக! ஆமீன்! நம் அமர்வை பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட அமர்வாக ஆக்கியருள்வானாக!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

நேற்றைய நாளின் தராவீஹ் தொழுகையோடு 10 ஜுஸ்வுகள் நிறைவு செய்யப்பட்டு இருக்கின்றது. 7 அத்தியாயங்களும் 93 வசனங்களுமாக மொத்தம் 1321 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்றைய தராவீஹ் தொழுகையில்  அத்தவ்பா அத்தியாயத்தின் சில வசங்களும், சூரா யூனுஸ் முழுமையாக ஓதி நிறைவு செய்யப்பட்டு, சூரா ஹூதின் 49 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்று ஓதப்பட்ட அத்தவ்பா அத்தியாயத்தின் 120 வது வசனத்தில் சமூகத்தின் பிரச்சினைகளின் போது ஒதுங்கி இருப்பதன் நஷ்டம் குறித்து அல்லாஹ் ஆதங்கத்துடன் கூறுகின்றான்.

தபூக் யுத்தத்திற்கு வராமல் ஊரிலேயே தங்கி விட்டவர்களின் நிலைமை, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார நெருக்கடி, அவர்களின் மன்னிப்பு என பேசி வந்த இறைவன் தொடர்ந்து அவர்களின் செயல் குறித்து ஆதங்கத்துடன் பதிவு செய்வதை அவ்வளவு எளிதாக ஒரு முஃமின் கடந்து போய்விட முடியாது.

مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّـفْسِهٖ ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ‏

மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும்  கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின்  தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல;

ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.

                                                     

وَلَا يُنْفِقُوْنَ نَفَقَةً صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً وَّلَا يَقْطَعُوْنَ وَادِيًا اِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு)  அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப்  பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு  செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான  கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.           ( அல்குர்ஆன்:  9: 120 )

சமூகத்திற்கு பேராபத்து சூழ்ந்திருக்கும் வேளையில் சமூகத்தைவிட்டு ஒதுங்கியும் விலகியும் வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. 

இந்த சமூகத்தில்தான் நாம் பிறந்துள்ளோம். எனவே இந்த சமூகத்தின் நெருக்கடியைத் தடுத்து நிறுத்த வேண்டியதும் நமது கடமையே அன்றி வேறெவர் மீதும் இல்லை. 

இதற்காக இறைவன் எப்போதும் வானவர்களையும், அபாபீல்களையும் அனுப்பிக் கொண்டே இருக்க மாட்டான்.

ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களின் விவகாரங்களில் இருந்து விலகி, கலைப்படாமல் வாழ்பவர் முஸ்லிமே இல்லை" என்று.

عن أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال

من لم يهتم بأمر المسلمين فليس منهم

أخرجه الطبراني في "المعجم الأوسط" (1/29)

 

முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் யார் ஒதுங்கி இருக்கின்றார்களோ, கவலைப் படாமல் இருக்கின்றார்களோ அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களே அல்லர்என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                              ( நூல்: தப்ரானீ )

இன்னும் சிலர் ஒதுங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதைச் செய்யாததால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று கூறுவர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

صحيح مسلم) 142/13)

பலசாலியான இறை நம்பிக்கையாளன் பலவீனமான இறை நம்பிக்கையாளனை விட சிறந்தவன், அல்லாஹ்விடம் நேசத்திற்குரியன். (இருப்பினும்) அனைவரிலும் நன்மை உண்டு. உனக்கு பயன் தரும் விஷயத்தில் நீ ஆசைகொள். (அதற்காக) அல்லாஹ்விடம் உதவி தேடிக் கொள். மனவலிமையை இழக்காதே! ஏதாவது உனக்கு நேர்ந்து விட்டால் நான் இவ்வாறு இவ்வாறு செய்திருந்தால் என்ன என்று பேசிக் கொள்ளாதே! மாறாக, அல்லாஹ்வின் (கத்ர்) முன்னேற்பாடு அவன் விரும்பியதை செய்பவன் என்று கூறிக் கொள். ஏனெனில் அப்படி, இப்படி செய்தால் என்பது ஷைத்தானின் செயற்பாட்டை திறந்துவிடும் என நபி (ஸல்) அவர்ள் கூறினார்கள் (முஸ்லிம்)

நெருக்கடியான காலகட்டங்களில் தனியாகவோ, குழுவாகவோ செயல் பட்டு மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் பயன் தரும் வகையில் நாம் இருக்க வேண்டும்.

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانْفِرُوا ثُبَاتٍ أَوِ انْفِرُوا جَمِيعًا

النساء : 71

            நம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். (எச்சரிக்கையாக இருங்கள்), பிரிந்தவர்களாகவோ, சேர்ந்தோ போருக்குப் புறப்படுங்கள். (அந்நிஸா: 71)

நெருக்கடியான காலகட்டங்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை எச்சரிக்கின்ற வசனமாக இவ்வசனம் அமைந்துள்ளது. 

 

ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ (18)

நபி ஸுலைமான் (அலை)  அவர்களும் அவருடைய படைகளும் எறும்புகள் வசிக்கும் பள்ளத்தக்கின் அருகில் வந்த பொழுது (தலைமை வகிக்கும்) ஒர் எறும்பு மற்ற எறும்புகளை நோக்கி, ”நீங்கள் உங்களுடைய வீடுகளுக்குள் (புதர்களுக்குள்) புகுந்து கொள்ளுங்கள்! ஸுலைமானும் அவருடைய படையினரும் தங்களையும் அறியாமல் உங்களை மிதித்து விட வேண்டாம்என்று கூறியது. (அல்குர்ஆன்:27: 18)

மேலே சொன்ன இறைவசனத்தில் ஒரு எறும்பு எப்படி தனது சமூகத்தை நபி சுலைமான் (அலை) அவர்களிடமிருந்தும், அவர்களின் படையினரிடமும் இருந்து  காப்பற்ற தனது சமூகத்தைப் பார்த்து இவ்வாறு சொன்னதோ அது போன்று தன் சமூகத்திற்கு ஏற்படும் நெருக்கடியான நேரத்தில் ஒதுங்கி இருக்காமல் தன்னால் ஆன பங்களிப்பை, ஒத்துழைப்பை நல்குவது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். அதே நேரம் எனக்கென்னா என்று ஒதுங்கி இருப்பது பாவமாகும்.

இதனால் தான் தன் சமூகம் யாராலும் நசுக்கப்பட்டு விடக்கூடாது என்ற சமூக உணர்வு கொண்ட எறும்பு கூட அல்லாஹ்வால் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளதோடு, இந்த வசனம் இடம் பெற்றுள்ள இந்த மொத்த அத்தியாயத்திற்கே எறும்பு என்று தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த உம்மத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

அப்படியான எல்லா கால கட்டங்களிலும் மேன்மக்களில் பலர் அரும்பாடு பட்டு மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இஸ்லாமிய வரலாற்றில்  இறைதூதர் {ஸல்} அவர்களின் காலத்திலிருந்தே மகத்தான பங்களிப்புகள் ஆரம்பமாகியது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் மிக அதிகமானோர் இளைஞர்களாக இருந்தனர். மிக முக்கிய கட்டங்களின் போது அந்த  இளைஞர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்தார்கள் என்பதை  கீழே இரண்டு நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.

மக்காவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்த தருணம் அது. மக்காவில் முஸ்லிம்கள் ஒன்று கூட ஒரு இடம் தேவைப்பட்டது. அப்போது தம் வீட்டைக் கொடுத்துதவியவர் அர்க்கம் இப்னு அபில்அர்க்கம் (ரழி) என்ற 16 வயது மட்டுமே நிரம்பிய இளைஞர்.

மாநபி {ஸல்} அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற சந்தர்ப்பத்தில் நிராகரிப்பாளர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வீட்டை சூழ்ந்திருந்த போது அவர்களது படுக்கையில் படுத்தவர் அலி (ரழி) என்ற இளைஞரே. அது அவரது மரணப்படுக்கையாகக் கூட அமைந்திருக்க முடியும்.

இந்த இரண்டு இளைஞர்களின் மகத்தான பங்களிப்பு தான் இஸ்லாம் இன்று தழைத்தோங்க அடிப்படையாய் அமைந்தது.

அபூபக்ர் (ரலி) ஆட்சி காலத்தில் யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்திருந்த 70 ஹாஃபிழ்களின் வீர மரணம் நபித்தோழர்களுக்கு இடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

இப்படியே ஹாஃபிழ்களின் மரணம் தொடருமேயானால் இந்த உம்மத்திற்கு பெருமானார் {ஸல்} பேரொளியாக விட்டுச் சென்றிருக்கிற குர்ஆன், ஸுன்னா என்கிற இரண்டில் ஒன்றான குர்ஆன் உடைய நிலைமை என்னவாகும் என்பதே அந்த அச்சத்திற்கு மூல காரணம் ஆகும்.

எனவே, அவர்களுடைய இந்த அச்சம் அவ்வப்போது நிகழ்கிற சந்திப்பின் ஊடாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

இறுதியாக ஆட்சியாளர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனத்திற்கு உமர் (ரலி) அவர்களின் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர் (ரலி) என்னை கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற போது அவர்களோடு உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என உமர் என்னிடம் வந்து கூறினார்.

அதற்கு நான் உமரிடம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின் கருத்தை நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலை ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்].

ஜைத் (ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்: அபூபக்ர் தொடர்ந்து என்னைப்பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர் மாநபி {ஸல்} அவர்களுக்கு வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள் உங்களை நாங்கள் சந்தேகிக்கவில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர், உமர் இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி அபூபக்ர் என்னிடம் திரும்பத்திரும்ப பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ஆகியோரின் மனதில் எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.

அதன் பின் குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்ர் அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. ( நூல்: புகாரி, 4986 )

அன்று அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மூலமாக வந்த இந்த உம்மத்தின் கவலையை, பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்து தீர்வை நோக்கி நகர்ந்து உடனடியாக செயல் பட்டிருக்காவிட்டால் இன்று உலகின் 200 கோடிக்கும் மேலான மக்களின் நாவுகளிலும், இதயங்களிலும் இறைவனின் வார்த்தையான குர்ஆன் இடம் பெற்றிருக்காது. அன்றைக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் “ஒதுங்கி இருந்தால்?”.. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அல்லவா?..

எனவே, இந்த சமூகத்தின் தேவைகளின் போது, எதிர் கொள்ளும் நெருக்கடிகளின் போது ஒதுங்கிக் கொள்ளாமல் நம்மால் ஆன பங்களிப்பை செய்வோம். சமூகத்தின் உயர்வுக்கு காரணமாய் ஆவோம்!!

Friday, 8 April 2022

அருள்மறைச் சாரல் – தராவீஹ் சிந்தனை:-8 அல்லாஹ்வை நேசிப்போம்!!

 

அருள்மறைச் சாரல்தராவீஹ் சிந்தனை:-8

அல்லாஹ்வை நேசிப்போம்!!



அல்ஹம்துலில்லாஹ்!! நாம் நோற்ற 7 –வது நோன்பை சிறப்பாக நிறைவு செய்து, 8 – வது நாள் தராவீஹ் தொழுகையை தொழுது விட்டு இறைமறையின் வசனத்தின் விளக்கத்தைப் பெறும் பொருட்டு அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அமர்வை அருள் செய்யப்பட்ட அமர்வாக ஆக்கியருள்வானாக! ஆமீன்!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் அன்ஃபால் அத்தியாயம் முழுமையாக ஓதி நிறைவு செய்யப்பட்டு, அத் தவ்பாவின் 93 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.

இன்று ஓதப்பட்ட அத்தவ்பா அத்தியாயத்தின் 24 வது வசனத்தில் அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியம் குறித்து அல்லாஹ் பேசுகின்றான்.

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

              உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான் என்று கூறுவீராக!” ( அல்குர்ஆன்: 9: 24 )
المحبة

என்ற சொல்லுக்கு தமிழில் நேசம்  என்று பொருள் சொல்லப்படும்.  அன்பு, பிரியம், விருப்பம், காதல் போன்ற பொருள்களும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒருவனின் மனம் சார்ந்த விஷயமாகும்.

ஒருவன் இந்த உலகில் ஒருவரை, ஒரு பொருளை எந்த அளவுக்கு நேசிக்கின்றான் என்பதை, அவனை அழைத்து கருவிகள் துணை கொண்டு அளந்து பார்த்தோ, ஸ்கேன் மூலம் பரிசோதித்தோ சொல்லிவிட முடியாது! அவனது செயல் மூலமாகத்தான் அவனது நேசத்தை அளவிடமுடியும்.

 

மனிதன் இந்த பொல்லாத உலகில் எதைத் தான் நேசிக்காமல் இருக்கின்றான்.

பணம், காசை நேசிக்கின்றான்,  செல்வத்தை, செல்வாக்கை நேசிக்கின்றான், 

அணிகலன், ஆபரணத்தை நேசிக்கின்றான், அவனது தொழிலை அழகிய இல்லத்தை, அழகிய வாகனத்தை நேசிக்கின்றான், 

தாய் தந்தையை நேசிக்கின்றான், மனைவி மக்களை நேசிக்கின்றான், சொந்த பந்தங்களை நேசிக்கின்றான்,  தான் வசிக்கும் தெருவை, ஊரை, நாட்டை, அவனது சமூகத்தை நேசிக்கின்றான், மொழியை நேசிக்கின்றான், அவன் விரும்பும் எல்லாவற்றையும் நேசிக்கின்றான். 

இங்கு குறிப்பிட்டவர்கள் மற்றும் குறிப்பிட்டவைகளின் மீதான நேசத்திற்கு எல்கையும் அளவும் உண்டு.

ஆனால், ஒரு இறைநம்பிக்கையாளனின் நேசம் என்பது யாரின் மீது இருக்கும் என்பதை அல்லாஹ் கூறும் போது பின் வருமாறு கூறுகிறான்.

وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

“இறைநம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வை நேசிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்”.                                               ( அல்குர்ஆன்: 2: 165 )

இந்த உலகத்தில் வாழும் போதும் சரி! மறுமையில் சொர்க்கத்திற்குச் சென்ற பிறகும் சரி! எப்போதும் இறைநம்பிக்கையாளனின் உள்ளத்தை விட்டு நீங்காமல் என்றும் நிலைத்திருக்கக் கூடியது அல்லாஹ்வின் நேசம் மட்டும் தான். 

ஆனால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் ஏராளமானோர் அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள். 

எனவே தான், தன் தாய், தந்தை, நண்பர்கள், இன்ன பிற உறவினர்களை விரும்புவது போல் கூட அல்லாஹ்வை அவர்கள் நேசிப்பதில்லை.

ஆனால், மேற்கூறிய இறைவசனத்தில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது அளவுகடந்த நேசத்தை கொண்டிருப்பார்கள் என்கிறான்.

அத்தகையவர்களில் ஒருவராக உங்களையும் என்னையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆக்கியருள்வானாக!! ஆமீன்!!!

நேசமும் செயலும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையது. மனிதனின் நேசங்கள் அனைத்திற்கும் சாட்சியாக அல்லது ஆதாரமாக இருப்பது அவனது சொல்லும் செயலும் வெளிப்படுத்துவதை வைத்துத்தான் ஒருவனின் நேசத்தை அளவிடமுடியும்.

 நேசத்தின் வெளிப்பாடாக முதலில் அல்லாஹ்வின் மீது ஆர்வமும் அல்லாஹ்வை அழைப்பதில் ஆசையும் வரவேண்டும்.

وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب

நபியே! உங்களுடைய ரப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களாக இபாதத் செய்யுங்கள்.                                             ( அல்குர்ஆன்: 94: 8 )

يَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا

நபிமார்கள் தொழும்போது அல்லாஹ்வின் மீது ஆசை உள்ளவர்களாக தொழுவார்கள். அல்லாஹ்வின் மீது பயம் உள்ளவர்களாக தொழுவார்கள். ( அல்குர்ஆன்:21: 90 )

தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் ஜபூரிலே கூறிய அந்த கருத்தை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இஹ்யாவிலே கூறுகின்றார்கள்.

يا دَاوُود ابلغ اهل ارضي اني حبيب لمن احبني

و جليس لمن جالسني

و مئنس لمن انس بذكري

و صاحب لمن صاحبني

 و مختار لمن اختارني

و مطيع لمن اطاعني

ما احبني عبد اعلم ذلك يقينا بقلبه الا قبلته لنفسه واحببته حبا لا يتقدمه احد من خلقي

 

       தாவூத் அவர்களே!பூமியில் உள்ள எனது அடியார்களுக்கு நீங்கள் சொல்லுங்கள். யார் என்னை நேசிப்பார்களோ நான் அவர்களுடைய நேசன் ஆக இருக்கிறேன். யார் என்னோடு பேச விரும்புகிறார்களோ நான் அவர்களோடு பேசுகிறேன். யார் என்னுடைய நினைவில் மனமகிழ்ச்சியை காண்கிறார்களோ அவர்களுடைய மனதை நான் மகிழ்விப்பேன். யார் என்னோடு நட்பு வைக்க விரும்புகிறார்களோ நான் அவர்களுடைய நண்பனாக இருக்கின்றேன். யார் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்களோ நான் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.

யார் எனக்கு கட்டுப்படுவார்களோ அவர்களுடைய கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன். என்னுடைய அடியான் என்னை நேசிக்கிறான் என்று தெரிந்துவிட்டால், நான் அவனை எனக்காக ஏற்றுக் கொள்கிறேன்.நானும் அவனை நேசிக்கிறேன்.என்னுடைய நேசத்தை போன்று அவனுக்கு வேண்டப்பட்டவர்களில் யாரும் அவனை நேசிக்க முடியாது. ( நூல்: இத்திஹாஃபு ஸாதத்துல் முத்தகீன் )

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.                                   ( அல்குர்ஆன்: 76: 8 )

حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم

لاَ يَجِدُ أَحَدٌ حَلاَوَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ وَحَتَّى أَنْ يُقْذَفَ فِي النَّارِ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ إِلَى الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ وَحَتَّى يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மூன்று தன்மைகள் அமையப் பெறாத) எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார். (அவை)

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.

2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ( நூல்: புகாரி )

எப்படி நாக்கு ருசியை உணர்கிறதோ அது போல நல்ல, கெட்ட விஷயங்களை சுவைக்கும் பண்பு மனித உள்ளத்திற்கும் உண்டு.

இக்குணம் மனிதனின் உள்ளத்திற்கு வந்து விட்டால் அவன் உள்ளம் நல்ல கருத்துக்களை உள்ளே வைத்துக் கொண்டு கெட்டக் கருத்துக்களை வெளியே அனுப்பி விடுகிறது. எனவே தான் நம் உள்ளம் இந்த பாக்கியத்தை அடைய இம் மூன்று விஷயங்கள் நம்மிடத்தில் வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஈமானுக்குத் தேவையான எத்தனையோ விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் வேண்டியுள்ளார்கள். அல்லாஹ்வை நேசிப்பது ஈமானுக்கு மிக முக்கியமான அம்சம் என்பதால் இத்தன்மை தன்னிடத்தில் இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

 

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رضى الله عنه قَالَ

 رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ

இறைவா! உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                      ( நூல்: திர்மிதீ )


அல்லாஹ்வை நேசிப்பதே ஈருலக வெற்றிக்கு உதவும்..

அல்லாஹ்வை நேசிப்பதை சாதாரண ஒரு விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. தொழுகை, நோன்பு, தர்மம் இவற்றையெல்லாம் விட மறுவுலக வெற்றிக்கு மிக அவசியமானதாக அது இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இருந்தால் தான் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் மனிதன் வருகிறான். இத்தன்மை எப்போது அவனை விட்டு நீங்கி விடுகிறதோ அப்போது இஸ்லாத்தை விட்டும் அவன் வெளியேறி விடுகிறான்.

حَدَّثَنَا عَبْدَانُ ، أَخْبَرَنَا أَبِي ، عَنْ شُعْبَةَ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَتَّى السَّاعَةُ يَا رَسُولَ اللهِ قَالَ مَا أَعْدَدْتَ لَهَا قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ ، وَلاَ صَوْمٍ ، وَلاَ صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ : أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ, தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள்            . ( நூல்: புகாரி )

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ نَوْفَلِ بْنِ مَسْعُودٍ قَالَ : دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَقُلْنَا : حَدِّثْنَا بِمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ حُرِّمَ عَلَى النَّارِ ، وَحُرِّمَتِ النَّارُ عَلَيْهِ : إِيمَانٌ بِاللَّهِ ، وَحُبُّ اللهِ ، وَأَنْ يُلْقَى فِي النَّارِ فَيُحْرَقَ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். அவை 1. அல்லாஹ்வை நம்புதல், 2. அல்லாஹ்வை நேசித்தல், 3. இணை வைப்பிற்குத் திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக இருத்தல்.             ( நூல்: அஹ்மத் )

மறுமையில் மட்டுமல்லாது இவ்வுலகில் அல்லாஹ்வின் கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அவனை நேசிக்காமல் அவனை மறந்து வாழ்ந்தால் நம்மை அழித்து விட்டு அவனை நேசிக்கும் நல்ல கூட்டத்தாரை அல்லாஹ் படைப்பான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ‌ ؕ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.                                                  ( அல்குர்ஆன்: 5: 54 )

நபி {ஸல்} அவர்களின் மரணத்தருவாயைப் பற்றி மேலும் ஆயிஷா (ரழி) அன்ஹா சொல்கின்றார்கள்:

நபி {ஸல்} அவர்களுடைய தலை அன்னை ஆயிஷாவுடைய மடியில் இருக்கிறது. மீண்டும் மீண்டும் நபி {ஸல்} அவர்கள், இல்லை! எனக்கு உயர்ந்த நண்பன் தான் வேண்டும்.இல்லை! எனக்கு உயர்ந்த நண்பன் தான் வேண்டும்.இல்லை! எனக்கு உயர்ந்த நண்பன் தான் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ صَحِيحٌ إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنْ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرَ فَلَمَّا نَزَلَ بِهِ وَرَأْسُهُ عَلَى فَخِذِي غُشِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى سَقْفِ الْبَيْتِ ثُمَّ قَالَ اللَّهُمَّ الرَّفِيقَ الْأَعْلَى فَقُلْتُ إِذًا لَا يَخْتَارُنَا وَعَرَفْتُ أَنَّهُ الْحَدِيثُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا وَهُوَ صَحِيحٌ قَالَتْ فَكَانَتْ آخِرَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا اللَّهُمَّ الرَّفِيقَ الْأَعْلَى (صحيح البخاري-

மரணத்தருவாயிலே அவர்களுக்கு மீண்டும் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இன்னும் வாழ விரும்புகிறீர்களா? அல்லது உயர்ந்தோன் அல்லாஹ்விடத்தில் வர விரும்புகிறீர்களா? என்று.அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} மறுக்கிறார்கள். இல்லை, எனக்கு இந்த உலகம் வேண்டாம்.எனக்கு உயர்ந்த நண்பனாகிய அல்லாஹ்வே வேண்டும் என்று.

       ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது சொல்கிறார்கள்; மீண்டும் மீண்டும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இனி எங்களோடு இருக்க அவர்கள் விரும்பவில்லை. எங்களை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அல்லாஹ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்” என்று.                              ( நூல்: புகாரி )

قال رحمه الله في (مدارج السالكين): فصل في الأسباب الجالبة للمحبَّة والموجِبة لها وهي عشرة:  أحدُها: قراءةُ القرآن بالتدبر والتفهّم لمعانيه وما أُريدَ به، كتدبّر الكتابِ الذي يحفظه العبدُ ويشرحه؛ ليتفهَّم مُرادَ صاحبه منه. الثاني: التقرب إلى الله بالنوافل بعد الفرائض فإنها توصله إلى درجة المحبوبيَّة بعد المحبة. الثالث: دوام ذكره على كل حال باللسان والقلب والعمل والحال فنصيبه من المحبة على قدر نصيبه من هذا الذكر. الرابع: إيثارُ محابّه على محابّك عند غلَبَات الهوى، والتسَنُّمُ إلى محابّه وإن صَعُبَ المرتقى. الخامس: مطالعة القلب لأسمائه وصفاته، ومشاهدتها ومعرفتها، وتقلّبه في رياض هذه المعرفة ومباديها؛ فمن عرف الله بأسمائه وصفاته وأفعاله أحبَّه لا محالة، ولهذا كانت المعطّلة والفرعونية والجهمية قطّاع الطريق على القلوب بينها وبين الوصول إلى المحبوب. السادس: مشاهدة برِّه وإحسانه وآلائه ونعمه الباطنة والظاهرة فإنها داعية إلى محبته. السابع: وهو من أعجبها، انكسار القلب بكليته بين يدي الله تعالى، وليس في التعبير عن هذا المعنى غير الأسماء والعبارات. الثامن: الخلوة به وقت النزول الإلهي لمناجاته وتلاوة كلامه، والوقوف بالقلب والتأدب بأدب العبودية بين يديه، ثم ختم ذلك بالاستغفار والتوبة. التاسع: مجالسة المحبين الصادقين، والتقاط أطايب ثمرات كلامهم كما ينتقى أطايب الثمر، ولا تتكلَّم إلا إذا ترجَّحتْ مصلحة الكلام، وعلمتَ أنَّ فيه مزيدًا لحالك ومنفعةً لغيرك. العاشر: مباعدةُ كلِّ سببٍ يحولُ بينَ القلب وبينَ اللهِ عزَّ وجلَّ

இமாம் இப்னுல் கையும்(ரஹ்) கூறும் அல்லாஹ்வின் நேசத்தை வரவழைக்கக்கூடிய 10 காரணிகள்:

1. அல்குர்ஆனின் கருத்துக்களை மேலும் அதன் மூலம் நாடப்படுபவைப்பற்றி சிந்தித்தவாறும், விளங்கி எடுத்தவாறும் அதை ஓதிவருதல்.

2. பர்ளான கடமைகளுக்கு பின் நபீலான வணக்கங்களை கொண்டு அல்லாஹ்வை நெருங்கிக்கொள்ளல்.

3. நாவாலும், உள்ளதாலும், செயலாலும் அல்லாஹ்வைப்பற்றிய திக்ரிலே நீடித்திருத்தல்.

4. இரண்டு நேசகங்கள் ஒன்றோடு ஓன்று போட்டியிடும் வேளை அடியான் தான் விரும்பும் அம்சங்களை விட அல்லாஹ் விரும்பும் அம்சங்களை தேர்வு செய்தல்.

5. அல்லாஹ்வின் திருனாமங்களையும், அவனது பண்புகளைப் பற்றியும் மேலும் அவனது பூரணத்துவத்தையும் கண்ணியத்தையும் உணர்த்தக்கூடியவற்றைப்பற்றியும் மேலும் இவற்றுக்கென இருக்கும் புகழுக்குரிய தாக்கத்தைப்பற்றியும் ஆழமாக சிந்தித்தல்.

6. அல்லாஹ் அளித்திருக்கும் வெளிப்படையான, உள்ரங்கமான அருட்கொடைகளையும், அவன் அடியார்களுக்கு நலவு நாடுவதையும், நல்லுபகாரம் செய்வதையும், அருள்புரிவதையும் உற்று நோக்கல்.

7. அல்லாஹ்வுக்கு முன்னிலையில் உள்ளம் உடைந்து போய், அவன் பால் தேவையுடையவனாக நிற்றல்.

8. இரவின் மூன்றில் ஒரு பங்கின் இறுதி மீதமாக இருக்கும் போது இறைவன் இறங்கி வரும் வேளையில் அல்லாஹ்வோடு தனித்திருத்தல். மேலும் இந்நேரத்திலே அல்குர்ஆன் ஓதுவதோடு பாவமன்னிப்பு கோருவதன் மூலமும், பாவமீட்சியில் ஈடுபடுவதன் மூலமும் அந்நேரத்தை நிறைவு செய்தல்.

9. அல்லாஹ்வை நேசிக்கக்கூடிய நல்லோர்களோடும், சீர்திருத்தவாதிகளோடும் அமர்ந்திருந்து அவர்களது பேச்சின் மூலம் பிரயோசனம் பெறல்.

10. உள்ளத்திற்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் சூழ்ந்து கொள்ளும் பராக்காக்கக்கூடிய காரணிகளிலிருந்து தூரமாக இருந்து கொள்ளல்.

ஆகவே, அல்லாஹ்வை நேசிப்போம். அல்லாஹ்வை மட்டுமே நேசிப்போம்.