Thursday, 17 September 2026

வெறுப்பை வெறுப்பே வீழ்த்தும்! வெறுப்பை நல்லிணக்கமே வெல்லும்!!

 

வெறுப்பை வெறுப்பே வீழ்த்தும்!

வெறுப்பை நல்லிணக்கமே வெல்லும்!!



Hate speech is rising around the world – வெறுப்புப் பேச்சு என்பது தற்போது உலகெங்கும் சர்வ சாதரணமாக ஆகிவிட்டது.

ஒரு காலத்தில் வாயும், வார்த்தைகளும்தான் அன்பைப் பொழியும் ஆயுதங்களாக திகழ்ந்தன. ஆனால், காலப்போக்கில் வார்த்தைகளும், சமூக ஊடகங்களும் சமூக ஒற்றுமையை குலைக்கும் கருவிகளாக மாறிவிட்டன. 

வெறுப்புப் பேச்சு, வெறுப்புப் பிரச்சாரம் ஆகியவற்றால் அடிக்கடி மோதல்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டன. இத்தகைய வெறுப்புப் பேச்சும், வெறுப்புப் பிரச்சாரமும் அரசியல் தளங்களிலும், சமூகத் தளங்களிலும் நுழையும்போதுதான் மிகவும் மோசமானதாக மாறுகின்றன. 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் மோதல்களுக்கு இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்கள் முக்கியக் காரணமாகும்.

இந்தியாவில் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் அண்மைக்காலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நட்புடனும், நல்லிணக்கத்துடனும் வாழ முடியுமா? என்பதே ஐயமாகியிருக்கிறது. 

குறிப்பிட்ட ஒரு சமூகத்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய பேச்சுகளும், தீய பிரச்சாரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணமாகும்.

உலகில் மனிதகுலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் படிப்படியாக வலுவிழந்து வருகின்றன என்பது தெளிவாகிறது. வெறுக்கத்தக்க பேச்சும் கருத்துச் சுதந்திரமும் இங்கு பரிசீலிக்கப்பட வேண்டும்

கடந்த வாரம் நமது மாநிலத்தில், தென் மாவட்டமான திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு சம்பவமும், மேற்கு வங்க மாநிலத்தில் கோரக்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவமும் முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்பு பாசிஸவாதிகளால் கட்டமைக்கப்பட்டு, எவ்வளவு தூரம் வேர் விட்டு வளர்ந்து இந்த தேசமெங்கும் பரவி விரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சம்பவம் 01: திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தில் திண்டுக்கல் கல்யாண பிரியாணி என்ற பெயரில் கடை செயல்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாள் சலுகையாக, 99 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என விநாயகர் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனரில் விநாயகர் பிரியாணி தயாரிப்பது போன்று புகைப்படத்துடன் பேனர் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 

ஆனால், இந்த காட்சி சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியது தான் தாமதம் ஒருவர் கடை உரிமையாளரின் மனைவியையோ அல்லது சகோதரியையோ அலைபேசியில் அழைத்து இது தொடர்பாக கேட்கிறார்.

அதற்கு எதிர் முனையில் பேசிய பெண்மணி பேனரை அகற்றியாச்சு சார் என்கிறார். அப்போது, பேசும் அந்த நபர் உன் பெயர் என்னம்மா? என்று கேட்க, மரியா என்கிறார் அந்தப் பெண்.

உடனே, பேசும் அந்த நபர் ஏன் மரியா, ஏசு பிரியாணி சமைக்கமாட்டாங்களா? முஹமது நபி பிரியாணி சமைக்கிற மாதிரி பேனர் வைக்க வேண்டியது தானே" என்கிறார்.

இறுதியில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது முருகையா என்பவரின் மகன் ஜெயந்த் என்ற இந்து ஒருவரின் கடை தான் இது என்பது தெரியவந்துள்ளது.

முஸ்லிம் சமூகம் மீது எவ்வளவு வன்மமும், வெறுப்பும் இருந்தால் எடுத்த எடுப்பிலேயே பேசும் அந்த நபர் முஹமது நபி பிரியாணி சமைக்கிற மாதிரி ஃபோட்டோ போட்டு பேனர் வைக்க வேண்டியது தானே? என்று கேட்டிருப்பார்.

சம்பவம் 02: மேற்கு வங்கத்தில் கரக்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் புஷ்ரா பானு ஐபிஎஸ் அவர்கள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் எம்.பி.ஏ மற்றும் பிஎச்டி (Ph.D.) பட்டம் பெற்றவர்.

சவுதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த நல்ல சம்பளப் பணியை விட்டுவிட்டு தாயகமான இந்தியாவில் சேவையாற்ற வேண்டும் என்ற ஆசையில் தாயகம் திரும்பினார்.

தாயகம் வந்தவர் தொடர்ந்து இரண்டு முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.

தனது இரண்டாவது கர்ப்பத்தின்போதும், பச்சிளம் குழந்தைகளைப் பராமரித்தபடியும் தேர்வுகளை எதிர்கொண்டு கர்ப்பிணி புஷ்ரா பானு நேர்காணலுக்கு ஆஜராகி ஐபிஎஸ் ஆனார்.

பெரோசாபாத் பகுதியில் துணை மாவட்ட நடுவராகப் (SDM) பணியாற்றியபோது சட்டவிரோதச் சுரங்கங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் (செப்டம்பர்7/ 2026-ல்) யுபிஎஸ்சி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் அவர் யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது அமைதி நிலவட்டும்), மாஷா அல்லாஹ் (இறைவன் நாடியது), இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்), ஜஸாக்கல்லாஹ் ஹைரா (இறைவன் உனக்கு நற்கூலி தரட்டும்)... போன்ற ஒரு முஸ்லிம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வாழ்த்துக்குரிய வாசகங்களை தனது பேச்சின் இடையே பயன்படுத்தினார்.

மேற்கு வங்கத்தின் தீவிர வலதுசாரி அமைப்புகளும், அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் மேற்குவங்க பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து புகாரளிக்க இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க பாஜக அரசு அவர் கரக்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து மாநில ஆயுதப்படைக்குக் துணை கமாண்டன்ட்டாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.

வெறுப்புப் பேச்சுகளும், வெறுப்புப் பிரச்சாரமும்....

ஒரு நாட்டில் பேச்சு சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட வெறுப்புப் பேச்சுகளும், வெறுப்புப் பிரச்சாரமும் முறியடிக்கப்பட வேண்டியது முக்கியம் ஆகும். 

இதை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.

நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் வெறுப்புப் பேச்சுகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளுடன் கூடிய சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

இந்த நேரத்தில் "இந்தியா வெறுப்புப் பரிசோதனை மையம்’ (India Hate Lab) என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட விரிவான அறிக்கையை மால்கம் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "வெறுப்புப் பேச்சுகளால் துண்டாடப்படும் இஸ்லாமோஃபோபியா" என்னும் புத்தகம் இந்தியாவில் திட்டமிட்டுப் பரப்பப்படும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலைத் தரவுகளுடன் அம்பலப்படுத்துகிறது.

இதை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் படித்து உணர்வது அவசியம் ஆகும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்குப் பின்னால் உள்ள உளவியலை இந்நூல் நுட்பமாக விளக்குகிறது. 

லவ் ஜிகாத்’, ‘மக்கள் தொகை ஜிகாத்’, ‘எச்சில் ஜிகாத்எனப் புனையப்படும் போலிச் சதி கோட்பாடுகள் (Conspiracy Theories) மூலம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், சிறுபான்மையினர் மீது ஆழமான வெறுப்பையும் விதைக்கும் சூழ்ச்சிகளை இது விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

2024 நாடாளுமன்றத் தேர்தல் காலத்தைவிட, 2025-ஆம் ஆண்டில் வெறுப்புப் பேச்சுகளின் வீரியம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது இது இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது கவலைக்குரியது. பாஜக ஆளும் மாநிலங்களில், ஆட்சி அதிகாரத்தையே வெறுப்புப் பிரச்சாரத்திற்கான கருவியாகப் பயன்படுத்துவதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிரதமர் முதல் அமைச்சர்கள் மற்றும் காவி உடை அணிந்த சாமியார்கள் துறவிகள் வரை இதில் ஈடுபடும் விதம் துல்லியமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ‘X’ தளம் போன்றவை வெறுப்புப் பிரச்சாரத்தின் முதன்மை விநியோகஸ்தர்களாக மாறியுள்ளன. குறிப்பாக மெட்டா’ (Meta) நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்நூல் கடுமையாக விமர்சிக்கிறது. வெறுப்புப் பேச்சுகளை நேரலையாக வெளியிட்ட பிறகு, அவற்றை நீக்குவதற்குக் கூட ஒரு மாத காலம் எடுத்துக்கொள்ளும் போக்கு, வன்முறையைத் தூண்டுவதற்கு வழிவகுக்கிறது. இதனுடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் தற்போது வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படுவதை நூல் எச்சரிக்கிறது.

இப்படியான வெறுப்பு பிரச்சாரம் ஓங்கி இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் தமது வாழ்வியல் அமைப்பை மிகவும் நுணுக்கமாக, நுட்பமாக கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வெறுப்பை இஸ்லாம் எங்கும் ஆதரிக்கவில்லை...

பொதுவாக இஸ்லாம் தனி மனிதர் ஒருவருக்கு எதிராகவோ, ஒரு குடும்பத்திற்கு எதிராகவோ, ஒரு குழுவுக்கு எதிராகவோ, ஒரு சமூகத்திற்கு எதிராகவோ வெறுப்பு பேச்சுக்கள் பேசுவதை தவிர்க்க ஆணை பிறப்பித்துள்ளதை அல்குர்ஆனை வாசிக்கும் போது அவதானிக்க முடிகின்றது.

وَلَا تَسُبُّوا الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَسُبُّوا اللّٰهَ عَدْوً بِغَیْرِ عِلْمٍ كَذٰلِكَ زَیَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ۪ ثُمَّ اِلٰی رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَیُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ 

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.( அல்குர்ஆன்: 6: 108 )

சக முஸ்லிம் ஒருவருக்கு எதிராக ஒரு குடும்பத்திற்கு எதிராகவோ, ஒரு குழுவுக்கு எதிராகவோ, ஒரு சமூகத்திற்கு எதிராகவோ வெறுப்பு பேச்சுக்கள் பேசுவதை தவிர்க்க ஆணை பிறப்பித்துள்ளதையும் அல்குர்ஆனை வாசிக்கும் போது அவதானிக்க முடிகின்றது.

ஈமான் - இறை நம்பிக்கை கொண்டதன் பின்னர் ஒரு முஸ்லிம் செய்யும் பாவங்களில் முதன்மையான பாவமாக, பெரும்பாவமாக இஸ்லாம் அதை சுட்டிக் காட்டுகிறது.

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ 

இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். ( அல்குர்ஆன்: 49: 11 )

1) நல்லிணக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நல்லிணக்கம் என்பது மன்னிப்பின் ஊடாகவோ, நமது சிறந்த நடத்தையின் ஊடாகவோ, நமது உயர்ந்த அணுகுமுறையின் ஊடாகவோ அமைந்திருக்க வேண்டும்.

மக்கா வெற்றியின் (Fath Makkah) போது, ஃபுளாலா இப்னு உமைர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. 

عَنْ فُضَالَةَ بْنِ عُمَيْرِ بْنِ الْمُلَوِّحِ اللَّيْثِيِّ قال: أَرَادَ قَتْلَ النَّبِيِّ ﷺ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ عَامَ الْفَتْحِ، فَلَمَّا دَنَا مِنْهُ، قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَفُضَالَةُ؟ قَالَ: نَعَمْ فُضَالَةُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: مَاذَا كُنْتَ تُحَدِّثُ بِهِ نَفْسَكَ؟. قَالَ: لَا شَيْءَ، كُنْتُ أَذْكُرُ اللَّهَ، قَالَ: فَضَحِكَ النَّبِيُّ ﷺ، ثُمَّ قَالَ: اسْتَغْفِرِ اللَّهَ، ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى صَدْرِهِ، فَسَكَنَ قَلْبُهُ، فَكَانَ فُضَالَةُ يَقُولُ: وَاللَّهِ مَا رَفَعَ يَدَهُ عَنْ صَدْرِي حَتَّى مَا مِنْ خَلْقِ اللَّهِ شَيْءٌ أَحَبُّ إِلَيَّ مِنْهُ.

மக்கா வெற்றி பெற்ற பின்னர் கஅபாவை நபி அவர்கள் வலம் வரும்போது (தவாஃப் செய்யும்போது) அவர்களை ரகசியமாகக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது வாளுடன் ஃபுளாலா அங்கு ஒளிந்திருந்தார். ஃபுளாலா நபி அவர்களை நெருங்கி வந்தபோது, அவரது மனதில் இருந்த எண்ணத்தை இறைவழிகாட்டுதல் மூலம் நபியவர்கள் அறிந்துகொண்டார்கள். அவரிடம், "உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு ஃபுளாலா, "ஒன்றுமில்லை, நான் இறைவனை நினைவுகூர்ந்து (திக்ர்) கொண்டிருந்தேன்" என்று பொய் கூறினார்.

அப்போது, இதைக் கேட்டு நபி அவர்கள் புன்னகைத்து, "அல்லாஹ்விடம் உனக்காக மன்னிப்புக் கோருகிறேன்" என்று கூறி, அவரது நெஞ்சின் மீது தங்களது கையை வைத்தார்கள். நபியவர்களின் கை தன் நெஞ்சில் பட்ட அந்த கணமே, ஃபுளாலாவின் மனதில் இருந்த வெறுப்பு முற்றிலும் நீங்கியது. இது குறித்து பின்னாளில் ஃபுளாலா இப்னு உமைர் ரலி அவர்கள் கூறும்போது, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி அவர்கள் என் நெஞ்சிலிருந்து கையை எடுப்பதற்குள், இந்த பூமியிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான மனிதராக நபி அவர்கள் மாறிப்போனார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம்)

நபி அவர்களின் இந்த அசாத்தியமான கருணையும் மன்னிக்கும் குணமும் ஃபுளாலாவின் இதயத்தை மாற்றி, அவரை உடனடியாக இஸ்லாத்தை ஏற்கும் படி செய்தது.

قال عروة بن الزبير: جلس عمير بن وهب الجمحي مع صفوان بن أمية في الحِجْر، بعد مصاب أهل بدر بيسير وكان عمير بن وهب شيطانًا من شياطين قريش، وممن كان يؤذي رسول الله صلى الله عليه وسلم وأصحابه، ويلقون منه عناء وهو بمكة، وكان ابنه وهب بن عمير في أسارى بدر، فذكر أصحاب القليب ومصابهم، فقال صفوان: (والله ما في العيش بعدهم خير). قال له عمير: صدقت، أما والله لولا دَيْنٌ علي ليس عندي قضاؤه، وعيال أخشى عليهم الضيعة بعدي، لركبت إلى محمد حتى أقتله، فإن لي فيهم علة ابني أسير في أيديهم

قال: فاغتنمها صفوان بن أمية فقال: عليّ دينك أنا أقضيه عنك، وعيالك مع عيالي أواسيهم ما بقوا، لا يسعني شيء ويعجز عنهم، فقال له عمير: فاكتم علي شأني وشأنك. قال: أفعل

قال: ثم أمر عمير بسيفه، فشحذ وسُمَّ، ثم انطلق حتى قدم المدينة، فبينما عمر بن الخطاب في نفر من المسلمين يتحدثون عن يوم بدر، ويذكرون ما أكرمهم الله به، وما أراهم في عدوهم، إذ نظر عمر إلى عمير بن وهب وقد أناخ راحلته على باب المسجد متوشحًا سيفه، فقال: هذا الكلب عدو الله عمير بن وهب، ما جاء إلا لشرٍّ وهو الذي حرش بيننا، وحزرنا للقوم يوم بدر. ثم دخل عمر على رسول الله صلى الله عليه وسلم فقال: يا نبي الله هذا عدو الله عمير بن وهب قد جاء متوشحًا سيفه.قال صلى الله عليه وسلم: «فأدخله عليَّ» قال: فأقبل عمر حتى أخذ بحمالة سيفه في عنقه فلبَّبَه بها، وقال لمن كان معه من الأنصار: ادخلوا على رسول الله صلى الله عليه وسلم فاجلسوا عنده واحذروا عليه من هذا الخبيث، فإنه غير مأمون. ثم دخل به على رسول الله صلى الله عليه وسلم، فلما رآه رسول الله صلى الله عليه وسلم وعمر آخذ بحمالة سيفه في عنقه قال: «أرسله يا عمر، ادنُ يا عميرُ». 

فدنا ثم قال: انعموا صباحًا، وكانت تحية أهل الجاهلية بينهم، فقال رسول الله صلى الله عليه وسلم: «أكرمنا الله بتحية خير من تحيتك يا عمير، بالسلام تحية أهل الجنة». 

فقال: أما والله، يا محمد إن كنت بها لحديث عهد

فقال: «فما جاء بك يا عمير؟» قال: جئت لهذا الأسير الذي في أيديكم فأحسنوا فيه

قال: «فما بال السيف في عنقك؟» قال: قبَّحها الله من سيوف! وهل أغنت 

عنا شيئًا؟!! قال: «اصدقني ما الذي جئْتَ به؟» قال: ما جئت إلا لذلك

قال: «بل قعدت أنت وصفوان بن أمية في الحجر، فذكرتما أصحاب القليب من قريش، ثم قلت: لولا دينٌ عليَّ وعيالٌ عندي لخرجت حتى أقتل محمدًا، فتحمل لك صفوان بن أمية بدينك وعيالك، على أن تقتلني له، والله حائل بينك وبين ذلك». 

 

قال عمير: أشهد أنك رسول الله، قد كنا يا رسول الله نكذبك بما كنت تأتينا به من خبر السماء، وما ينزل عليك من الوحي، وهذا أمر لم يحضره إلا أنا وصفوان، فوالله إني لأعلم ما أتاك به إلا الله، فالحمد لله الذي هداني للإسلام، وساقني هذا المساق، ثم شهد شهادة الحق, فقال رسول الله صلى الله عليه وسلم: «فقهوا أخاكم في دينه، وعلموه القرآن، وأطلقوا أسيره ففعلوا». 

முஸ்லீம்களின் மீது அநீதி இழைப்போரில் முதன்மையாய் திகழ்ந்தவர் உமைர் இப்னு வஹப் குறைஷிகள் இவரை இஸ்லாத்தில் இணையும் முன்பு ஷைத்தானுல் குறைஷ் என்று அழைத்தனர். 

பத்ருப் போரில் இஸ்லாத்துக்கு எதிராக முனைந்து போரிட்டவர். போரிடும் முன்பு கூடாரங்களில் தங்கி இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை சற்றேக் குறைய 300 பேர்கள் இருக்கும் என்று வேவுபார்த்து தம் குறைஷிப் படையினருக்கு தெரிவித்தவர்.

பத்ருப் போரில் படுதோல்வியைத் தழுவிய இணைவைப்பாளர்களில் பொருளாலும், உடலாலும் உயிராலும் இழப்புக்குள்ளானோர் முஸ்லீம்களைப் பழிவாங்குவதில் முனைப்பாய் இருந்தனர்.

உமைர் இப்னு வஹப் -ன் மகனும் பத்ருப்போரில் முஸ்லீம்களால் கைது செய்யப்பட்டு சிறைக்கைதியாய் இருந்தார் உமைரின் சிறிய தந்தையான உமைய்யா என்பவர் பத்ருப்போரில் முஸ்லீம்களால் கொல்லப்பட்டார்.

சிறைபிடிக்கப்பட்ட மகனை மீட்கவும் முஸ்லீம்களை பழிதீர்க்கவும் எண்ணிய உமைர் அவர்களுக்கு கடன் தொல்லையும் குடும்ப பராமரிப்பு செலவுகளும் தடையாய் இருந்தது. 

இந்நிலையில் போரில் உமைய்யாவைக் கொன்றதால் குரோதமுடன் இருந்த அவரின் வாரிசாகிய ஸஃப்வானும் உமைர் அவர்களும் கஃபாவில் ஒன்று கூடி பழிதீக்கும் விஷயம் பற்றி ஆலோசித்தனர். ஒருவருக்கொருவர் உறவினராகவும் உற்ற நண்பர்களுமாயிருந்தனர். குறைஷிகளாகிய நாம் மிக இழிவுபடுத்தப் பட்டுவிட்டோம் என் மீது மாத்திரம் கடன் தொல்லையும், குடும்ப பராமரிப்பு செலவினங்களும் மட்டும் இல்லாதிருந்தால் முஹம்மதுவைக் கொன்று பழிதீர்த்திருப்பேன் (நவூதுபில்லாஹ்) என உமைர் கூற உம் கடனையும், குடும்ப பராமரிப்பு செலவுகளையும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீர் சென்று பழிதீரும் என ஸஃப்வான் கூற உமைர் மதீனா பிரயாணமாகிறார். 

நபி அவர்களை ஒழித்துக் கட்டி விட வேண்டும் எனும் பழிதீர்க்கும் எண்ணத்தை மனதில் நிறைத்தவராய் மதீனா வந்தடைந்த உமைர் தம் வாகனத்தை நிறுத்தி விட்டு வாளைத் தோளில் தொங்கவிட்டவாறு நடந்து வருவதைக் கண்ட உமர்(ரலி) முஸ்லீம்களை நோக்கி உமைர் இவ்வாறு வருவது தீய நோக்குடன்தான் இருக்கும் எனவே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அவர்களுக்கு அருகில் பாதுகாப்பாக நில்லுங்கள் எனக் கூறினார்கள்.

உமைர் அவர்களை அழைத்துவர நபி அவர்கள் அனுமதி தர உமர் (ரலி)அவர்கள் உமைரின் தோளில் தொங்கும் வாளை இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டு நபிகளாரிடம் அழைத்துவருகிறார்கள். 

நபி உமர்(ரலி)-யை நோக்கி உமைரை விட்டுவிடுங்கள் எனக் கூறி விட்டு, உமைரை தமக்கு அருகில் வந்து அமருமாறு கூறினார்கள்.

பின்னர் நபிகளாரும் உமைரும் பேசிக் கொள்கிறார்கள். பேச்சின் இடையே நபி அவர்கள் உமைரை நோக்கி "நீர் இங்கு வந்ததன் நோக்கமென்ன? என்று வினவ நான் என் மகனை மீட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைக்கிறார் உமைர். 

அதற்கு, நபி அவர்கள் உமைரை நோக்கி "நிச்சயமாய் நீர் பொய்யுரைக்கின்றீர். கஅபாவில் நீரும் ஸஃப்வானும் ஒன்று கூடிப் பேசியது இவ்வாறுதானே என நபி அவர்கள் அவ்விருவருக்கும் இடையே நடந்த உரையாடலை உரைக்க திடுக்குற்றவராக ஆச்சரியமடைந்த உமைர் "நாங்கள் மக்காவில் பேசியது எவ்வாறு உங்களுக்கு தெரியும் அல்லாஹ்வே உங்களுக்கு இதனை அறிவித்துக் கொடுத்திருக்கிறான் நிச்சயம் நீர் இறைவனின் தூதரே என நான் நம்புகிறேன் என்று கூறி ஈமான் கொள்கிறார்."

உங்கள் புதிய சகோதரருக்கு (உமைர்(ரலி)க்கு) மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள் என நபி அவர்கள் கூற நபித்தோழர்களின் நன்மதிப்பையும் அரவணைப்பையும் பெறுகிறார்.

 உமைர் (ரலி) அவர்களிடம் "நீர் நபியின் எதிரியாக இருந்த போது பன்றியைவிடவும் மோசமாகக் கருதினேன். நீர் ஈமான் கொண்டுவிட்ட பின்னரோ என் மகனைப்போல் உம்மை நேசிக்கிறேன். என்று உமர் (ரலி) அவர்கள் கூறுவது புகாரியில் இடம் பெற்றுள்ளது. 

"தன்னைக் கொலை செய்ய வாளேந்தி வந்தவரை தம் அருகே வந்து அமருமாறு கூறிய அந்த கணமே எதிரியின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள்.

அடுத்து, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தங்களுக்கு அறிவித்துக் கொடுத்த எதிரியின் திட்டத்தை கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் சர்வ சாதாரணமாக எதிரியிடம் அறிவித்த கணமே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நபி அவர்கள் எதிரியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

வெறுப்பை விதைப்பவர்கள் எவராக இருப்பினும் அவரோடு, அவர் சார்ந்துள்ள அவரின் சமூகத்தோடு நல்லிணக்கம் காட்டுவதால் மட்டுமே அந்த வெறுப்பை வெல்ல முடியும் என்பதற்கு இலக்கணமாக மாநபி அவர்களின் வாழ்வில் இருந்து ஏராளமான உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டிட முடியும்.

عن أبي هريرة رضي الله عنه قال: (قال أبو عزة يوم بدر: يا رسول الله! أنت أعرف الناس بفاقتي وعيالي، وإني ذو بنات، قال : فرقَّ له ومنَّ عليه وعفا عنه ، وخرج إلى مكة بلا فداء، فلما أتى مكة هجا النبي صلى الله عليه وسلم، وحرض المشركين على رسول الله صلى الله عليه وسلم، فأُسر يوم أحدٍ، وأتى به رسول الله صلى الله عليه وسلم، فأمر بضرب عنقه، قال: وكان رسول الله صلى الله عليه وسلم، يقول: “لا يُلدغ المؤمن من جحر مرتين“)

பத்ரில் கைதியாக பிடிக்கப்பட்ட அபூ இஸ்ஸா என்பவர் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என் ஏழ்மையை, என் குடும்ப சூழலை, எனக்கு பெண் மக்கள் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்! ஆகவே, எனக்கு விதிக்கப்பட்டுள்ள ஈட்டுத்தொகையை தளர்த்தி என்னை விடுதலை செய்யுமாறு வேண்டுகிறேன்" என்றார். அப்போது நபி அவர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்று, அவருக்கான ஈட்டுத் தொகையை தள்ளுபடி செய்து, அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், மக்கா வந்த அவர் ஓராண்டு காலம் நபி அவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் செய்து உஹது யுத்தத்திற்கு ஆள் திரட்டினார். மீண்டும் உஹதிலே கைதியாக பிடிபட்டார். இப்போதும் நபி அவர்களிடம் வந்து தமது ஏழ்மை நிலையை முன் வைத்த போது நபி அவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். பிறகு, "ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) ஒரே புற்றில் (பொந்தில்) இரு முறை தீண்டப்பட மாட்டார்" என்று நபி அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ அஸ் ஸுனனுல் குப்ரா)

காலம் கடந்தும் பயன் தரும் அறமே நல்லிணக்கம்!

இன்று பல்வேறு வெறுப்பு பேச்சுக்கள் வெறுப்பு பிரச்சாரங்களை முஸ்லிம் சமூகம் இந்த தேசத்தில் தொடர்ந்து எதிர் கொண்டு வந்த போதும் பிற சமூகங்களுடனான நல்லிணக்கத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பேரிடர்களின் போது முஸ்லிம் சமூகம் மேற் கொண்டு உதவி வருகிறது.

தற்போது, நம்முடைய சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் விமர்சிக்கப்பட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த தேசமும், இந்த உலகும் இஸ்லாமிய சமூகம் குறித்து உணர்ந்து கொள்ளும். அது வரை காத்திருப்போம்.

2002 குஜராத் கலவரம் இந்திய இஸ்லாமிய சமூகம் அவ்வளவு எளிதில் மறந்து விடும் ஒன்றல்ல.

800 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப்பட்டும், இரண்டாயித்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கடுமையான காயத்திற்கு உள்ளாக்கப்பட்டும், முஸ்லிம்களின் பள்ளிவாசல், கடைகள், வீடுகள், சொத்துக்கள், வணிக வளாகங்கள் தீக்கீரையாக்கப்பட்டும் பெருத்த சேதத்தையும், ஆறாத ரணத்தையும் ஏற்படுத்திய இரத்தம் தோய்ந்த வரலாற்று நாள் பிப்ரவரி 28/2002.

அந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டு கை எடுத்து கும்பிட்டு கலங்கிய கண்களோடு சிதைந்து போய் நின்ற குதுபுத்தீன் அன்சாரியை யாரும் மறந்து விடவில்லை. 

அதே கலவரத்தில் மதவெறி ஊட்டப்பட்டு கொலை வெறியில் கைகளில் கத்தியும், தலையில் காவித் துணியுமாக அன்சாரியின் எதிரில் நின்ற அசோக் பர்மரையும் மறந்து விடவில்லை. 

இத்தனை ஆண்டுகாலம் கழிந்து வாழ்க்கையின் பல நிலைகளையும் கடந்து இன்று இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். 

கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கழித்து 2019 இதே செப்டம்பர் மாதத்தின் ஆறாம் தேதி, டெல்லியின் தர்வஜா பகுதியில் "Ekta chappal Ghar" (ஒற்றுமை காலணிக் கடை) எனும் பெயரில் செருப்பு கடை ஒன்றை திறந்தார் அசோக் பர்மர்.

அசோக் பர்மரின் புதிய செருப்பு கடையை திறந்து வைக்க வந்த சிறப்பு அழைப்பாளர், கை எடுத்து கும்பிட்டு கதி கலங்கி நின்ற குத்புத்தீன் அன்சாரி. ( நன்றி: விகடன்.காம், 09/09/2019 )

சமூக நல்லிணக்கம் மலர இஸ்லாம் காட்டியுள்ள கோட்பாடுகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

2. மனிதர்கள் அனைவரையும் நேசியுங்கள்!!

மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனின் படைப்புகள். ஒரே ஆதிப்பெற்றோரின் வழித்தோன்றல்கள். எனவே மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே.

يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மனிதர்களே, நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கொத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான்.” ( அல்குர்ஆன்: 49: 13 )

الرَّاحِمونَ يرحَمُهم الرَّحمنُ تبارَك وتعالى؛ ارحَموا مَن في الأرضِ يرحَمْكم مَن في السَّماءِ.

خلاصة حكم المحدث : حسن، الراوي : عبدالله بن عمرو | المحدث : ابن حجر العسقلاني | المصدر : الإمتاع لابن حجر | الصفحة أو الرقم : 1/62

التخريج : أخرجه أبو داود (4941 )،

 

மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.” ( நூல்: திர்மிதி)

الخَلقُ عيالُ اللَّهِ، فأحبُّ الخلقِ إلى اللَّهِ مَن أحسنَ إلى عيالِهِ، الراوي : عبدالله بن مسعود | المحدث : البيهقي | المصدر : شعب الإيمان

படைப்புகளனைத்தும் இறைவனின் குடும்பமே.” ( நூல்: பைஹகி)

எனவே மதவேறுபாடின்றி எல்லா மனிதர்களையும் நேசிக்கும்படி இஸ்லாம் பணிக்கிறது.

கருத்துகளை விமர்சிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் இழிவுபடுத்த அனுமதியில்லை. கருத்துகளை மறுக்கலாம். ஆனால் உணர்வுகளை மதிக்குமாறு கட்டளையிடுகிறது.

3. கொள்கைகளைத் திணிக்காதீர்கள்!

கொள்கைத் திணிப்பு வன்செயலுக்கு இட்டுச் செல்லும், நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்பதால் இஸ்லாம் அதைத் தடை செய்திருக்கிறது.

لَا إِكْرَاهَ فِي الدِّينِ

“(இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்பந்தமோ இல்லை.” ( அல்குர்ஆன் 2: 256 )

وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ

இது (குர்ஆன்) இறைவனிடமிருந்து வந்துள்ள செய்தியாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும். நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்.” ( அல்குர்ஆன்: 18:29)

4. உரிமைகளைப் பறிக்காதீர்!

முஸ்லிமல்லாத மக்களின் உயிர், உடைமை, நம்பிக்கை, கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு உத்தரவிடுகிறது இஸ்லாம்.

وَعَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ عِدَّةٍ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ آبَائِهِمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا مَنْ ظَلَمَ مُعَاهِدًا أَوِ انْتَقَصَهُ أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

நபி  அவர்கள் நவின்றார்கள்: ஒப்பந்தக்காரர் (இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிம் அல்லாத குடிமகன்) ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்து விட்டாலோ, அவன் உரிமையைப் பறித்துவிட்டாலோ, அவன் சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்திவிட்டாலோ, அவனுடைய பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ, மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் சார்பில் நானே வாதிடுவேன்.” ( நூல்: அபூதாவூத் )

وَعَنْ عَبْدِاللَّهِ بْنِ عمر رضي الله عنهما، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَد مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.

ஒப்பந்தத்தில் உள்ள ஒருவரை (முஸ்லிமல்லாத குடிமகனை) யராவது கொலை செய்தால் அவர் சுவனத்தின் நறுமணத்தைக் கூட நுகμமாட்டார்.” (நூல் புகாரி, அபூதாவூத்)

5. மனிதனை மனிதனாகப் பார்க்க வேண்டும்!

மனிதனை மனிதராக பார்க்கிற ஒரு பார்வையை பெருமானார்  அவர்கள் தங்களது தோழர்களுக்கு கற்பித்தார்கள். இதை அவர்கள் தாம் வாழும் காலத்தில் மறவாமல் கடை பிடித்து வந்தார்கள்.

ولما ودخل المسلمون أرض فارس بلد المجوس عباد النار، أَنَّه َمَرَّتْ جَنَازَةٌ بقَيْسَ بْنَ سَعْدٍ وَسَهْلَ بْنَ حُنَيْفٍ كَانَا بِالْقَادِسِيَّةِ، فَقَامَا، فَقِيلَ لَهُمَا: إِنَّهَا مِنْ أَهْلِ الأَرْضِ. فَقَالا: إِنَّ رَسُولَ اللهِ مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ، فَقِيلَ: إِنَّهُ يَهُودِيٌّ، فَقَالَ: "أَلَيْسَتْ نَفْسًا -  

முஸ்லிம்கள் நெருப்பு வணங்கிகள் நிறைந்த பாரசீகத்தை வென்று அந்த நகரத்தில் வாழத் துவங்கிய போது அந்த மக்கள் அப்போதும் நெருப்பை வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். ஒரு நாள் காதிஸிய்யா நகரத்தில் நெருப்பு வணங்கி ஒருவர் இறந்து அவருடைய ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு கைஸ் இப்னு ஸஅத் (ரலி) மற்றும் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) ஆகியோர் அமர்ந்திருக்கும் சபையை கடந்து செல்லும் போது இரண்டு பேரும் எழுந்து நின்றார்கள்.

அப்போது, அங்கிருந்த மற்ற முஸ்லிம்கள் இறந்து போனவர் இந்த நகரைச் சேர்ந்தவர். அவர் நெருப்பு வணங்கி, அவருக்காகவெல்லாம் நீங்கள் எழுந்து நிற்பீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவ்விரு நபித்தோழர்களும் "நபி  அவர்கள் ஒரு நாள் ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்ற போது எழுந்து நின்றார்கள். அப்போது, அருகிலிருந்த நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்து போனவர் ஒரு யூதர் என்ற போது, அப்போது நபி  அவர்கள் "அவர் ஒரு மனிதர் இல்லையா?" என்று கேட்டார்கள். 

ففي رواية مسلم عن جابر بن عبد الله قال: "قَامَ النَّبِيُّ وَأَصْحَابُهُ لِجَنَازَةِ يَهُودِيٍّ حَتَّى تَوَارَت"

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:- நபி  அவர்களும், நபித்தோழர்களும் ஒரு யூதருடைய ஜனாஸா கடந்து போகும் போது கால்கள் சோர்ந்து போகும் அளவு நின்றார்கள்". ( நூல்: முஸ்லிம் )

6. பகைமை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் நேர்வழிக்கும், நலனுக்கும் துஆச் செய்யுங்கள்!

எதிரிகளைப் பலரும் சபிப்பார்கள். முஹம்மது நபி  அவர்கள் தனது எதிரிகளுக்கும் நேர்வழி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.

நபி  அவர்களது தோழர் அபூ ஹுரைரா ரலி அவர்கள் நபி  அவர்களிடம் தனது தாய் நபி  அவர்களைத் திட்டித் தீர்ப்பதாகக் கூறுகின்றார். 

பதிலுக்கு அந்தத் தாய்க்கு நேர்வழி காட்டுமாறு நபி  அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

اللهم اهدِ أمَّ أبي هريرة

யாஅல்லாஹ்! அபூஹுரைராவின் தாய்க்கு நேர்வழியை வழங்குவாயாக! என்று நபி  அவர்கள் துஆ கேட்டார்கள்.

இவ்வாறே இஸ்லாத்தின் பரம விரோதியான அபூ ஜஹ்லின் ஹிதாயத்திற்காகக் கூட நபி  அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள் 

عن النبي ﷺ هو "اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك: بعمر بن الخطاب أو بأبي جهل (عمرو بن هشام)"

யாஅல்லாஹ்! இந்த இஸ்லாத்தை உமர் அல்லது அபூஜஹ்ல் இந்த இருவரில் ஒருவரைக் கொண்டு உயர்வு படுத்துவாயாக!" என்று நபி  அவர்கள் துஆ கேட்டார்கள்.

தாயிப் நகரில் தன்னை ஓட ஓட இரத்தம் வழிந்து மயக்கம் ஏற்படுமளவுக்கு அடித்தவர்களைக் கூட அழித்துவிடட்டுமா? என்ற மலக்குகளின் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் வேண்டாம் எனக் கூறி இவர்கள் இஸ்லாத்திற்கு வராவிட்டால் கூட பரவாயில்லை இவர்களது சந்ததிகளாவது சத்திய வழிநடக்க வேண்டும் என்று பிரார்த்தித்த உத்தம நபி தான் முஹம்மத் நபி  அவர்கள்.

சமூக நல்லிணக்கத்தின் பெயரில் ஏனைய சமூக மக்களின் செயல்பாடுகளுக்கு ஒத்துப்போகும் போக்கு ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

عن أبي سعيدٍ الخدري -رضي الله عنه- أنَّ رسول الله -صلى الله عليه وسلم- قال: "لَتَتَّبِعُنَّ سَنَنَ مَن قَبْلَكُمْ شِبْرًا بشِبْرٍ، وَذِرَاعًا بذِرَاعٍ، حتَّى لو سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا يا رَسُولَ اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قالَ: فَمَنْ"،

நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சாணுக்கு சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள்,( நூல்: புகாரி ).

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم 

 مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‏"‏ ‏

எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (208) فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (209)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ( அல்குர்ஆன்: 2: 208 )

யூதப்பாதிரியான அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நபித்தோழர் ஒருவர் அளித்த ஒரு விருந்துக்கு சென்றார். அங்கு ஒட்டகை இறைச்சி பரிமாறப்பட்டது. அவரது முந்தைய மதக்காரர்கள் ஒட்டகை இறைச்சியை வெறுத்தார்கள். அந்தப் பழக்கத்தில் அவரும் முகத்தில் ஒரு அறுவருப்பைக் காட்டினார். அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.

தஃப்ஸீர் இப்னு கஸீரில் இந்த வசனம் இறக்கியருளப்பட்டதற்கான பின்னணியில் இது இன்னும் விரிவாக கூறப்படுகிறது:-

وزعم عكرمة أنها نزلت في نفر ممن أسلم من اليهود وغيرهم، كعبد الله بن سلام، وثعلبة وأسَد

بن عُبَيد وطائفة استأذنوا رسول الله صلى الله عليه وسلم في أن يُسْبتوا، وأن يقوموا بالتوراة ليلا. فأمرهم الله بإقامة شعائر الإسلام والاشتغال بها عما عداها. و

نزلت هذه الآية في مؤمني أهل الكتاب عبد الله بن سلام النضيري وأصحابه، وذلك أنهم كانوا يعظمون السبت ويكرهون لحمان الإبل وألبانها بعد ما أسلموا وقالوا: يا رسول الله إن التوراة كتاب الله فدعنا فلنقم بها في صلاتنا بالليل فأنزل الله تعالى { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً } (1) أي في الإسلام، قال مجاهد في أحكام أهل الإسلام وأعمالهم { كَافَّة } أي جميعا، وقيل: ادخلوا في الإسلام إلى منتهى شرائعه كافين عن المجاوزة إلى غيره، وأصل السلم من الاستسلام والانقياد، ولذلك قيل للصلح سلم،

இக்ரிமா ரலி கூறுகிறார்கள்: சனிக்கிழமையை புனிதமாக கருதவும், இரவு நேரங்களில் தவ்ராத்தைப் படிக்கவும் யூதர்கள் இருந்து புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அஸத் இப்னு கஅப், உஸைத் இப்னு கஅப், ஸஅத் இப்னு அம்ர் கைஸ் இப்னு ஸைத் ஆகியோர் அனுமதி கோரினர். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது”.

இஸ்லாம் கூறும் நடவடிக்கைகளுக்கு எதிரானவைகளை ஷைத்தானின் வழி கேடுகள் என்றும் இது விசயத்தில் சருகுதல்களும் சஞ்சலங்களும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் உறுதிபட இந்த வசனம் பேசுவதை கவனிக்க வேண்டும். ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

சமூக நல்லிணக்கம் பேணுவோம்! சகோதர வாஞ்சையுடன் வாழ்வோம்!!