Thursday 6 June 2013

அற்புதங்கள் இஸ்லாமிய வளர்ச்சியின் அளவுகோலா?.

 


அற்புதங்கள் இஸ்லாமிய வளர்ச்சியின் அளவுகோலா?.
உலகில் அறியப்படும் அனைத்து மதங்களும் கடவுளின் பெயராலேயே அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கடவுளர்களில் அநேகம் பேர் அற்புதங்கள் பல நிகழ்த்தியதின் பேரில் கடவுளர்களாக நம்பப்பட்டு வருகின்றனர்.
இன்னும் கூட மனித சமூகத்தில் ஆங்காங்கே சிலர் அற்புதங்கள் நிகழ்த்தி தஙகளை கடவுளாக, கடவுளின் அவதாரங்களாக, கடவுளின் நேசர்களாக அடையாளாப்படுத்தி வலம் வந்து கொண்டிருக்கிறனர்.
ஆக, அற்புதங்கள் என்பது மனிதனின் கடவுள் மீதான நம்பிக்கைக்கு ஒரு முக்கிய அம்சமாய் அடிப்படையாய் விளங்குகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே உலகின் பெரும்பாலான மதங்களின் கட்டமைப்பு அற்புதங்களைக் கொண்டே கட்டப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மார்க்கம் அற்புதங்கள் குறித்து என்ன சொல்கிறது?.
ஓர் இறை நம்பிக்கையாளனின் இறை நம்பிக்கையில் அற்புதங்களின் மீதான அளவு கோல் - மதிப்பீடு என்னவாக இருக்க வேண்டும்.
அரபியில் முஃஜிஸா - அற்புதம் என்று பொருள்
Ø  சாத்தியம் இல்லாத இன்றை செய்து காட்டுவது
Ø  இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட, அதற்கான காரண காரியங்களை விளக்கிக்கூறிட முடியாத அல்லது மனித அறிவாற்றலால் விளங்கிட முடியாத சம்பவம் அல்லது காட்சி
Ø  மனித குல சக்திக்கு அப்பாற்பட்ட செயல் என்றும் விரிவான பொருள் கொள்ளலாம்.
ஆக,
அற்புதங்களை கண்களை மூடிக்கொண்டு நிராகரிப்ப்பதும், இஸ்லாமிய மார்க்கத்தின் உயர்வுக்கு அற்புதம் தான் அளவுகோல் என்று நம்புவதும் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் தவறானவைகளாகவே கருதப்படுகின்றது.
அப்படியென்றால் குர்ஆனில் பல்வேறு வசனங்களில், பல இறைத்தூதர்கள் நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள் பற்றி கூறப்படுபவைகளைஅந்த இறைத்தூதர்கள் தங்களின் தூதுத்துவத்தை - நபித்துவத்தை மக்களிடையே நிலை நாட்டவே அற்புதங்களை மேற்கொண்டனர்என்று நம்ப வேண்டுமென இமாம் முல்லா அலீ காரீ (ரஹ்) அவர்கள் தங்களின் ஷரஹ்ஃபிக்ஹுல் அக்பர் எனும் நூலில் தெளிவுபடுத்துகின்றார்கள்.
மிஃராஜும் - உம்மத்தும்
இன்றைய முஸ்லீம் சமூகம் ஏனைய சகோதர மதத்தவர்களிடையே இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைத்தன்மையை எடுத்துக்கூறிட ஏதுவாக அற்புதங்களையே முன்வைப்பதை காண முடிகிறது. இஸ்லாமிய அழைப்புப்பணியை பற்றி பேசுகிற பல வலை தளங்கள், முக நூல்கள், தாங்கள் இடம் பெறச்செய்கிற பல புகைப்படங்களில் இத்தகைய அற்புதங்கள் நிறைந்த செய்தியை வெளியிடுவதிலேயே முக்கியத்துவம் கொடுக்கின்றார். உதாரணமாக, கத்திரிக்காயில் அல்லாஹ் எனும் வார்த்தை, மீன் வயிற்றில், மரத்தின் வேரில், பழத்தின் மத்திப்பகுதியில், மனிதனின் எழும்பு மூட்டுப்ப்குதியில் என பல்வேறு புகைப்படங்கள் இதைப்பற்றியே பேசிகின்றது.
ஆனால், இஸ்லாத்தின் நிலைத்தன்மையை எடுத்துக்கூறிட சவால் விடும், அறை கூவல் விடும் எண்ணற்ற சான்றுகள் குர் ஆன் நெடுகிலும் புதைந்திருப்பதை இந்த முஸ்லிம் உம்மத் மறந்துவிட்டது.
அதன் ஒரு பகுதியாக,
மனித வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு வித்திடும் நபிகளாரின் விண்ணேற்றப்பயணம் - மிஃராஜை இந்த உம்மத் வெறும் அற்புதமாகவே கருதி வருவதை இன்றைய காலகட்டத்தில் மிஃராஜ் தினத்தன்று முஸ்லிம்கள் நடந்து கொள்ளும் விதம் பறை சாற்றுகின்றது.
வஹ்ஹாபிகளுக்கு மாற்றம் செய்கிறோம் எனும் பெயரில் மிஃராஜின் நபி தின விழாஎன்று அந்நாளை அமர்க்களப்படுத்துவதை காண முடிகிறது.
மிஃராஜ் இரவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அந்த இரவில் அல்லாஹ்வால் இந்த உம்மத்திற்கு கடமையாக்கப்பட்ட ஐங்காலத்தொழுகைகளுக்கு எந்தளவு தரப்படுகிறது?.
சொல்லப்போனால், அந்த இரவில்சிறப்புத் தொழுகையில்ஈடுபடும் பல பேர் மறுநாள் பஜ்ர் தொழுகையில் காணாமல் போய் விடுகின்றனர் என்பதும் அடுத்த ஆண்டு இதே இரவில் தான் வருகை தருகிறார்கள் என்பதும் தான் பேருண்மை.
மேலும், மனிதன் மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு செய்வதனால் ஏற்படும் விளைவுகள், சுவர்க்க, நரக காட்சிகள், இன்னும் ஏராளமான மனித சமூகத்திற்கான படிப்பினைகள் நிறைந்த ஒரு பயணத்தை வெறும் அற்புதமாக மட்டுமே கருதும் இச்சமூகத்தின் நிலை மாற வேண்டும்
அற்புதங்களும், அண்ணலாரும்.
எப்படி நபிமார்கள் தங்களது தூதுத்துவத்தை - நபித்துவத்தை நிலை நாட்ட முஃஜிஸாக்கள் எனும் அற்புதங்களை அல்லாஹ்வின் உதவியால் நிகழ்த்திக் காட்டினார்கள்.
قال الله في القرآن:{اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ} سورة القمر الآية 1
عَنْ [أَنَسِ بْنِ مَالِكٍ]رَضِيَ اللَّهُ عَنْه أَنَّ ‏ ‏أَهْلَ ‏ ‏مَكَّةَ ‏ ‏سَأَلُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُرِيَهُمْ آيَةً ‏ ‏فَأَرَاهُمْ الْقَمَرَ شِقَّتَيْنِ حَتَّى رَأَوْا ‏ ‏حِرَاءً ‏ ‏بَيْنَهُمَ ا[ البخاري)

وروى البخاري عن جابر بن عبد الله قال: عطش الناس يوم الحديبية والنبي بين يديه ركوة (أي إناء صغير من جلد) يتوضأ فجهش الناس نحوه (أي تجمعوا) قال: ما لكم؟ قالوا: ليس عندنا ماء نتوضأ ولا نشرب إلا ما بين يديك فوضع يده في الركوة فجعل الماء يفور من بين أصابعه كأمثال العيون، فشربنا وتوضأنا، قلت: كم كنتم؟ قال: لو كنا مائة ألف لكفانا، كنا خمس عشرة مائة. 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள்:
Ø  சந்திரனை இரண்டாகப் பிளக்கச் செய்தார்கள்
Ø  அவர்களுடைய கையிலிருந்த கற்கள் தஸ்பீஹ் செய்தன.
Ø  ஒரு மரத்தை நடந்து வரச் செய்தார்கள்
Ø  அகழ் யுத்தத்தின் போது ஒரு சிலருக்கு கூட போதாத உணவை நூற்றுக்கணக்காணோர் உண்ண அவ்வுணவு சற்றும் குறையவே இல்லை.
Ø  வெளியே தொங்கிக் கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்களை தமது கரத்தால் எடுத்து அதற்குறிய இடத்தில் வைத்து துஆ செய்தார்கள்.
Ø  முஹம்மது பின் மஸ்லமா (ரலி) எனும் நபித்தோழரின் இரண்டாக முறிந்து போன காலை மீண்டும் இணைத்து விட்டார்கள்.
Ø  கைபர் யுத்தத்தின் போது ஒரு சிறு தோல்பையிலிருந்த தண்ணீரை மூவாயிரம் படை வீரர்கள் பருகச் செய்தார்கள்.
Ø  ஹூதைபிய்யா உடன் படிக்கையின் போது தங்களது திருக்கரத்தின் விரல்களிலிருந்து தண்ணீர் ஊற்று சுரந்து 1400 பேர் பருகிடச் செய்தார்கள்,.
Ø  ஜாபிர் (ரலி) அவர்கள் ஒரு யூதனிடம் 30 குவியல் பேரீத்தம் பழம் கடன் பட்டிருந்து அதை திருப்பிக்கொடுக்க முடியாமல் திணறிய போது சிறு குவியல் பேரீத்தம் பழத்தின் மீது தமது புனித கால்களால் நடந்து சென்றுவிட்டு அதிலிருந்து யூதனுக்கு 30 குவியல் அளந்து கொடுக்குமாறு ஜாபிர் (ரலி) யிடம் கட்டளையிட, இதுபோன்று 30 குவியலை யூதனிடம் வழங்கிய பின்பு 17 குவியல்கள் மீதமிருக்க வைத்தார்கள்.
இது போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அற்புதங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நிகழ்ந்துள்ளன.
அதில் ஒன்றுதான் மிஃரஜிம், மிஃராஜுக்கு சென்ற இரவில் பைத்துல் முகத்தஸைபற்றி மக்கா குறைஷிகள் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறினார்கள்.
இன்னும் ஒரு படி மேலாக,
நடந்தவை, இனிமேல் நடப்பவற்றை அல்லாஹ்வின் அனுமதிப்படி அறிவித்தார்கள்.
அற்புதத்திற்கெல்லாம் மிகப்பெரிய அற்புதமான திருக்குர் ஆனை கொண்டு வந்தார்கள்.
எனவே,
நபிமார்கள் நிகழ்த்துகின்ற முஃஜிஸா எனும் அற்புதங்கள் ஓர் இறை நம்பிக்கையாளனின் ஈமான் - இறை நம்பிக்கையின் ஒர் அம்சம்தான்.
இஸ்லாத்தின் ஓர் பகுதிதான்.
ஈமானின் முழுமைத்துவமாகவோ இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அளவுகோலாகவோ அற்புதங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.
பரபரப்பான தருணம் அது...
அல்லாஹ்வின் தூதர் சுலைமான் (அலை) அவர்கள் தமது அவையோரை ஒன்று கூட்டி.
அவையோரே! அவர்கள் கீழ்ப்படிந்தவர்களாய் என்னிடம் வரும்முன் அவளுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டுவர முடியும்? என்று கேட்டார்கள்.
ஏகத்துவ அழைப்பை ஹூத் ஹூத் பறவையின் மூலம் அனுப்பியதன் பிறகு நடைபெற்ற பல நிகழ்வுகளுக்குப்பின் இறுதி கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டியவை என்னவென்பதை தீர்மானிக்கும் உரையாடலாக இருந்ததை மேற்கூறிய இறைவசனம் சுட்டிக்காட்டுகின்றது.
பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியதுநீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகிறேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குறியவனாகவும் இருக்கின்றேன்”. அவர்களுள் ஓரளவு வேத ஞானம் பெற்றிருந்த ஒருவர்நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டுவந்து வருகிறேன் என்று கூறினார். அவ்வாறே அவ்வரியவனை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதை சுலைமான் கண்டார்.
அல்குர் ஆன் : 27: 38-40
இறைவனிடம் ஒரு பிரார்த்தனை மூலம் நடைபெற்றிருக்க வைக்க வேண்டிய ஒரு காரியத்தை இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தம்மிடம் காற்றை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்திருந்தும் அதன் மூலமும் சுலைமான் (அலை) அவர்கள் அவ்வரியணையை கொண்டு வர முயற்சிக்கவில்லை.
ஏனெனில், இஸ்லாமிய எழுச்சியின் அலவு கோலாக அற்புதங்கள் நிகழ்த்தப்படுவதில்லை என்பதை உணர்த்தவே அல்லாஹ் இச்சம்பவத்தை நபி சுலைமான் (அலை) அவர்கள் மூலம் நிகழ்த்திக் காட்டுகின்றான்.
மேலும், எப்படி அற்புதங்கள் நபிமார்கள் மூலம் நிகழ்த்தப்படும் என்பதை குர் ஆன் எடுத்துக் கூறுகின்றதோ அதேபோன்று இறை நேசர்களும் அற்புதங்கள் பல நிகழ்த்துவார்கள் என அல் குர் ஆன் மேற்கூறிய இறை வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்னும் சொல்லப்போனால், இறை நிராகரிப்பாளர்களால் கூட அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்பதை அத்தியாயம் 20: 83 முதல் 99 வரை - ஸாமிரி என்பவர் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தாரை அற்புதத்தை நிகழ்த்திக்காட்டி வழிகெடுத்ததை குர் ஆன் கூறுவதை மறுக்க முடியாது.
இவ்வாறே, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இப்னு ஸய்யாத் என்பவன் ஷைத்தானுடைய தீண்டுதலுக்கு உள்ளாகி, அதன் காரணமாக அவன் பிறர் மனதில் நினைப்பதை சில சமயங்களில் சரியாக சொல்லக்கூடியவனாக இருந்தான். அவன் நிகழ்த்திக்காட்டும் அற்புதங்கள் ஒரு எல்லைக்குட்பட்டவையே, பலஹீனமானவையே என்பதை பின்னர் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள் என்பதை புகாரியின் இரு வேறு அறிவிப்புகளின் மூலம் உணர முடிகிறது. (பார்க்க: புகாரி தழிழாக்கம்: 1354, 1355)
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் வல்லமைகளை, ஆற்றல்களை ஒரு போதும் தனது படைப்புகளுக்கு பகிர்ந்தளிப்பது கிடையாது. இவ்வுலகில் எந்நிலையைப் பெற்ற இறை நேசரானாலும் அல்லஹ்வின் வல்லமைகள் என்றுமே ஏற்படாது என்று ஒரு மூமின் நம்ப வேண்டும்.
மேலும் நபிமார்கள், இறை நேசர்கள் செய்தவை உண்மையான அற்புதங்கள். அவற்றை அல்லாஹ்விடமிருந்தே பெற்றார்கள். ஆனாலும் நபிமார்களின் அற்புதங்களுக்கும் இறைநேசர்களின் அற்புதங்களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு என்பதையும் ஓர் மூஃமின் நம்ப வேண்டும்.
மேலும், வலிமார்கள் இறைநேசர்கள் என்றாலே அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்துவதை பிரதானமாகக் கொண்டிருந்தார்கள் என்றதோர் தோற்றத்தை முஸ்லிம் உம்மத்தில் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், வலிமார்கள் -இறைநேசர்கள் என்றால் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தருகிற நல்லறங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் வெறுப்பைப் பெற்றுத்தருகிற தீய செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொண்டிருப்பார்கள் என்று இமாம் முல்லா அலிகாரீ (ரஹ்) அவர்கள் தங்களின் ஷரஹ்ஃபிக்ஹூல் அக்பர் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: ஷரஹ்ஃபிக்ஹூல் அக்பர் பக்கம் 95

ஒட்டு மொத்ததில் அற்புதங்களை நபிமார்களின் தூதுத்துவத்திற்கு ஓர் சான்றாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பதுதான் ஐயமற விளங்குகின்றது.
இதையே அறிவுலக மாமேதை, இறைமையியல் விற்பன்னர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்கள்.
துவக்கத்தில் பைத்துல் முகத்தஸ், அதன்பின் ஏழு வானங்கள், இறைவன் சன்னிதானம், நபிமார்களுடன் உரையாடுதல், சுவர்க்க நரக காட்சிகள் என்று ஓரிரவின் சிறு பகுதிக்குள் நிகழ்ந்த விண்ணேற்றம்மிஃராஜ் என்பது ஒரு பெரும் அற்புதமாகும். இறைதூதர்கள் காட்டும் அற்புதங்கள் அவர்கள் இறைவனின் தூதர்கள்தாம் என்னும் உண்மைக்குச் சான்று பகர்கின்றன. இவ்வாறாக, மிஃராஜ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதற்கு சான்று பகர்கிறது”.
நூல்: இஹ்யா
ஆகவே,
மிஃராஜ் - விண்ணேற்றப்பயணம் என்பது மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக இறைவனால் வழங்கப்பட்ட ஓர் அற்புதப் பயணம் என்பதை ஏற்றுகொள்வோம்.
இஸ்லாமிய எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும்மான அடையாளமும், அளவுகோலும் அற்புதங்கள் அல்ல என்பதை விளங்கிக் கொள்வோம்.
அல்லாஹ் விளக்கத்தை தருவானாக! ஆமின்

வஸ்ஸலாம்!