Wednesday 7 September 2016

குர்பானி! சந்தேகங்களும்… தெளிவுகளும்….



குர்பானி! சந்தேகங்களும்தெளிவுகளும்….

الحمد لله الذي خلق الخلق ليعبدوه، وأسبغ عليهم نعمه ليشكروه.
والصلاة والسلام على نبينا محمد، دعا إلى توحيد الله وصبر على الأذى في سبيل ذلك حتى استقرت عقيدة التّوحيد، واندحر الشرك وأهله.
وعلى آله وأصحابه الذين اقتفوا أثره وساروا على نهجه، وجاهدوا في الله حق جهاد.
أما بعد:
அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வழங்கியிருக்கிற இபாதத் எனப்படும் வணக்க, வழிபாடுகளின் பிண்ணனியில் வாழ்க்கைக்கான அழுத்தமான பாடங்களும், படிப்பினைகளும் இடம் பெற்றிருக்கும்.

அந்த இபாதத்தை அதன் மிகச்சரியான கோணத்தை அறிந்து கொண்டு, செயல் வடிவம் கொடுத்து அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பது தான் இபாதத் என்பதின் அடிப்படையான அம்சமாகும்.

அந்த வகையில் அல்லாஹ் இந்த உம்மத்திற்கு வழங்கியிருக்கிற எந்த இபாதத்தாக இருந்தாலும் அதில் மூன்று அம்சங்கள் பொதிந்திருப்பதைப் பார்க்க இயலும்.

வணக்கத்தின் நோக்கம், அதைச் செய்வதால், அதை விடுவதால் ஏற்படுகிற சாதக, பாதகங்கள், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த அம்சங்கள் ஆகியவை அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால் நமக்கு வழிகாட்டப்பட்டிருக்கின்றது.

1. இபாதத்தின் நோக்கம் என்ன?

உதாரணத்திற்கு தொழுகையை எடுத்துக் கொள்வோம். தொழுகையின் நோக்கம் என்ன? எதற்காக அல்லாஹ் இந்த உம்மத்திற்கு தொழுகையை கடமையாக்கினான்? என்பது குறித்த கண்ணோட்டத்தில் குர்ஆன், ஸுன்னாவில் இருந்து சிந்தித்து அதன் நோக்கங்களை நோக்கி இந்த உம்மத்தை மிகக் கவனமாக அஹ்லுத் தஸவ்வுஃப் என்று அறியப்படுகிற ஆன்மீக அறிஞர் பெருமக்கள் நகர்த்திச் செல்வார்கள்.

2. இபாதத்தை செய்வதால், விடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

உதாரணமாக தொழுகையை தொழும் ஒருவர் இஸ்லாத்தின் பார்வையில் எவ்வாறு மதிப்பிடப்படுவார்? தொழுகையை விடும் ஒருவர் எவ்வாறு எவ்வாறு மதிப்பிடப்படுவார்? என்பது குறித்த கண்ணோட்டத்தில் குர்ஆன், ஸுன்னாவில் இருந்து ஆய்வு செய்து இந்த உம்மத்தை மிகக் கவனமாக அஹ்லுல் அகாயித் எனும் கொள்கை சார்ந்த அறிஞர்கள் ஒழுங்கு படுத்தி நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

3. இபாதத்தை எப்படி, எப்போது, எவ்வாறு செய்வது?

உதாரணமாக தொழுகையை எந்த நேரத்தில் தொழவேண்டும்? எத்தனை ரக்அத் தொழவேண்டும்? தொழுகையில் எது ஃபர்ள்? எது வாஜிப்? எது ஸுன்னத்? எது தடை செய்யப்பட்டது? எது மக்ரூஹ்? என்பது குறித்த கண்ணோட்டத்தில் குர்ஆன், ஸுன்னாவில் இருந்து ஆய்வு செய்து இந்த உம்மத்தை மிகக்கவனமாக அஹ்லுல் ஃபிக்ஹ் எனும் சட்ட வல்லுனர்கள் பக்குவப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

இப்படியாக, இம்மூன்று பிரிவினரும் அல்லாஹ்வின், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கட்டளைகள் குறித்த நோக்கத்தை, சாதக, பாதகங்களை, சட்ட நுணுக்கங்களை நமக்கு உணர்த்தி சரியான வழியில் நம்மை கொண்டு செல்வார்கள்.

ஆகவே, எந்த ஒரு இபாதத்தை, மார்க்கக் கடமையை நாம் செய்வதாக இருந்தாலும் நமக்கு அஹ்லுத் தஸவ்வுஃப், அஹ்லுல் அகாயித், அஹ்லுல் ஃபிக்ஹ் ஆகிய அறிஞர் பெருமக்களின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகும்.

அப்போது தான் இபாதத் – வணக்க, வழிபாடுகளின் அடிப்படை அம்சமான இறை நெருக்கத்தை நம்மால் அடையமுடியும்.

அந்த வகையில் குர்பானி – உள்ஹிய்யா என்பதும் ஓர் வணக்கம் – இபாதத் ஆகும்.

பராஃ பின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை மேற்கூறிய நபி மொழியில் வணக்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆக குர்பானி சம்பந்தமான அத்துனை அம்சங்களையும் அறிந்து அதன் அடிப்படையில் அந்த வணக்கத்தைப் பூரணமாக நிறைவேற்றி இறை நெருக்கத்தைப் பெற்றிட அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!

தற்போது, குர்பானி சம்பந்தமாக நம்மிடையே ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றது. அப்படியான சந்தேகங்களுக்கும், காலம் காலமாக நம்முடைய மக்களும் குர்பானி சம்பந்தமாக கடைபிடித்துக் வருகின்ற சில மூடப்பழக்க வழக்கங்களுக்கும் அஹ்லுல் ஃபிக்ஹ் சட்ட மேதைகள் வழங்கியிருக்கின்ற தீர்வுகள் என்ன என்பதை பார்த்து நாம் தெளிவு பெறுவதற்கு கடமைப் பட்டு இருக்கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ ()

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!”                                              ( அல்குர்ஆன்: 16: 43 )


1. இறந்து போனவர்களுக்காக அவர்களின் சார்பில் குர்பானியை, உள்ஹிய்யாவை நிறைவேற்றலாமா?

فالأضحية سنة مؤكدة في حق الحي القادر، وتجزئ عنه وعن أهل بيته، وقيل: واجبة، وأما الميت فلا تجب عنه عند أحد من أهل العلم ما لم يوص بها أو ينذرها قبل وفاته، واختلفوا في صحتها لو ذبحت عنه بغير وصية هل تصح أم لا؟ على ثلاثة أقوال

ஃபுகஹாக்கள் எனும் மார்க்கச் சட்ட வல்லுனர்கள் உள்ஹிய்யாவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதுஉள்ஹிய்யா என்பது கொடுப்பதற்கு பொருளாதார வசதியோடு உயிரோடு வாழும் காலத்தில் தனக்காகவும், தன் குடும்பத்தாருக்காகவும் உள்ஹிய்யா கொடுப்பது ஸுன்னத் முஅக்கதா வலியுறுத்தப்பட்ட ஸுன்னத் என்றும், ஃபுகஹாக்களில் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் மட்டும் தனித்து நின்று வாஜிப் என்றும் கூறுவார்கள்.

மேலும், இறந்து போனவர்களின் சார்பாக உள்ஹிய்யா கொடுப்பதைப் பொறுத்த வரையில் மூன்று வகையான அபிப்பிராய பேதங்கள் மார்க்கச் சட்ட வல்லுனர்களிடையே நிலவுவதை சட்ட நூற்களில் பார்க்க முடிகின்றது.

1. இறந்து போனவர்களின் சார்பாக குர்பானிஉள்ஹிய்யா கொடுப்பது கூடும்.

الأول: تصح وهو مذهب الجمهور ويصله ثوابها، ويؤيده ما رواه أبو داود والترمذي في سننهما وأحمد  في المسند والبيهقي والحاكم وصححه، أن عليا رضي الله عنه كان يضحي عن النبي صلى الله عليه وسلم بكبشين،

ஜும்ஹூர் பெரும்பாலான மார்க்கச் சட்ட வல்லுனர்கள் ஆதாரப் பூர்வமான நபி மொழிக் கிரந்தங்களில் பதிவாகி இருக்கிற பின் வரும் நபி மொழியை ஆதாராமாகக் கொள்கின்றனர்.

அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்னர் மாநபி {ஸல்} அவர்களின் பேரில் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்                              ( நூல்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத் )


2. இறந்து போனவர்களின் சார்பாக குர்பானிஉள்ஹிய்யா கொடுப்பது கூடாது.

الثاني: لا تصح إلا إذا أوصى بها الميت وهو مذهب الشافعية، قال الإمام النووي رحمه الله في المنهاج
 ولا تضحية عن الغير بغير إذنه، ولا عن ميت إن لم يوص بها.

இறந்து போவதற்கு முன்பாக தனக்காக உள்ஹிய்யா கொடுக்க வேண்டும் என வாரிசுகளிடத்திலோ, அல்லது உறவுகளிடத்திலோ வஸிய்யத் மரண சாசனம் செய்திருந்தாலே தவிர குர்பானி கொடுப்பது கூடாது. இது இமாம் ஷாஃபிஇ (ரஹ்) அவர்களின் நிலைப்பாடாகும். இந்த கருத்தை இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் அல் மின்ஹாஜ் எனும் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

இன்னும், சட்ட வல்லுனர்களில் ஒரு சாரார்ஒருவர் இறந்து போவதற்கு முன்னால் குர்பானி கொடுப்பதாக நேர்ச்சை செய்திருந்து அந்த நேர்ச்சையை நிறை வேற்றாமல் இறந்து போனாலோ, வஸிய்யத் மரண சாசனம் செய்து விட்டு இறந்து போயிருந்தாலோ அவர் சார்பாக குர்பானி கொடுப்பது வாஜிப் ஆகும்.

3. இறந்து போனவர்களின் சார்பாக குர்பானிஉள்ஹிய்யா கொடுப்பது மக்ரூஹ்வெறுக்கத்தக்கதாகும்.

الثالث: تكره وهو مذهب المالكية، قال الإمام خليل رحمه الله في مختصره في ذكر المكروهات في الأضحية: وكره جز صوفها... وفعلها عن ميتانتهى.
وقال في التوضيح: وقال مالك في الموازية: ولا يعجبني أن يضحي عن أبويه الميتين، قال: وإنما كره أن يضحى عن الميت لأنه لم يرد عن النبي صلى الله عليه وسلم ولا عن أحد من السلف، وأيضا فإن المقصود بذلك غالبا المباهاة والمفاخرة

மாலிக் மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கலீல் (ரஹ்) அவர்கள் தங்களின் முஃக்தஸர் எனும் நூலில் உள்ஹிய்யாவில் மக்ரூஹ் ஆன செயல்கள் எவைகள் என்று குறிப்பிடும் போது இறந்து போனவர்களின் சார்பாக குர்பானிஉள்ஹிய்யா கொடுப்பதையும் மக்ரூஹ் என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஏனெனில், இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தங்களுடைய மவாஸியா எனும் நூலில்வாரிசுகள் இறந்து போன பெற்றோர்களுக்காக குர்பானி கொடுப்பது ஒன்றும் ஆச்சர்யமான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை. இது இயல்பான ஒன்று தான்.

ஆனால், நபி {ஸல்} அவர்களோ, மேன்மக்களான ஸஹாபாப் பெருமக்களோ, தாபியீன்களோ இது குறித்த முன் மாதிரியை உம்மாவில் ஏற்படுத்தவில்லை. மேலும், முன் மாதிரி இல்லாத போது, இறந்து போனவர்களுக்காக குர்பானி கொடுப்பது பெருமிதம், மிகைப்படுத்துதல் ஆகியவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் உண்டுஎன்று குறிப்பிடுகின்றார்கள்.

ஆக குர்பானி கொடுக்கலாம் என்கிற கருத்தும், கொடுக்கக் கூடாது என்கிற கருத்தும் மேன்மக்களான இமாம்களின் ஃபிக்ஹ் சட்ட முன்வடிவு தான். இதில் எதை அமல் செய்தாலும் நன்மை பயப்பவையே.

2. மூன்று பங்குகள் வைப்பது கூடுமா?

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை” என்று ததஜ அமைப்பின் அறிஞர்கள் குழு தொகுத்து வெளியிட்ட குர்பானியின் சட்டங்கள் எனும் நூலில் இடம் பெற்று அது இப்போது பரவலாக எல்லா மக்களாலும் அங்கீகரிக்கப்படும் சூழலுக்கு வந்துள்ளது.

இறைச்சியைப் பங்கிடல் குறித்த

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

”தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்”.                                                  ( அல்குர்ஆன்: 22:28 )

ومن السنّة أن لا يأكل المضحي شيئا يوم النحر حتى يضحي فيأكل من أضحيته ، فقد روى
الدّارمي عن أَبِي موسى الأشعريّ رضي الله عنه أنّ النبيّ صلّى الله عليه وسلّم كان يفعل.

உள்ஹிய்யா கொடுப்பவர் தான் கொடுத்த உள்ஹிய்யாவிலிருந்து அன்றைய முதல் உணவை உட்கொள்வது தனித்த சுன்னத் ஆகும். ஏனெனில், நபி {ஸல்} அவர்கள் அவ்வாறே சாப்பிட்டு இருப்பதாக அபூமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் தாரமீ (ரஹ்) தங்களது தாரமீயிலே ஒரு ஹதீஸை பதிவிட்டு இருக்கின்றார்கள்.

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِى عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ قَالَ قَالَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - « مَنْ ضَحَّى مِنْكُمْ فَلاَ يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَفِى بَيْتِهِ مِنْهُ شَىْءٌ » . فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ الْمَاضِى قَالَ « كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا »

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்' என்று கூறினார்கள்.

அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்' என்று பதிலளித்தார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

من أجل ذلك استحبّ العلماء أن تقسّم الاضحية ثلاثة أثلاث: ثلث يأكل منه أهل البيت، وثلث يُتَصدّق به، وثلث يطعم به الأضياف والجيران.

மேற்கூறிய இறைவசனம் மற்றும் நபிமொழிகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆய்வு செய்த பிறகே இமாம்கள் நமக்கு இவ்வாறு பங்கீடு செய்வதை முஸ்தஹப் விரும்பத்தக்க செயல் என்று வகைப்படுத்தி உள்ளனர்.

1. தனக்கு ஒரு பங்கும், 2. ஏழை, எளியவர்களுக்கு தர்மமாக ஒரு பங்கும், 3. உறவினர்கள், அண்டை அயலார், நண்பர்கள், விருந்தாளிகள் ஆகியோருக்கு ஒரு பங்கும் வைப்பதாகும்.

3. மாற்று மதத்தவர்களான நண்பர்கள், பணியாட்கள், அண்டை வீட்டுக்காரர்களுக்கு குர்பானி இறைச்சியை கொடுக்கலாமா?

وعَنْ مُجَاهِدٍ : " أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ذُبِحَتْ لَهُ شَاةٌ فِي أَهْلِهِ ، فَلَمَّا جَاءَ قَالَ: أَهْدَيْتُمْ لِجَارِنَا الْيَهُودِيِّ ؟ ، أَهْدَيْتُمْ لِجَارِنَا الْيَهُودِيِّ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ ) رواه الترمذي (1943) وصححه الألباني.
قال ابن قدامة : " وَيَجُوزُ أَنْ يُطْعِمَ مِنْهَا كَافِرًا ، ... ؛ لِأَنَّهُ صَدَقَةُ تَطَوُّعٍ ، فَجَازَ إطْعَامُهَا الذِّمِّيَّ وَالْأَسِيرَ، كَسَائِرِ صَدَقَةِ التَّطَوُّعِ ". انتهى من "المغني" (9/450) .
وفي فتاوى اللجنة الدائمة (11/424)
 " يجوز لنا أن نطعم الكافر المعاهد ، والأسير من لحم الأضحية ، ويجوز إعطاؤه منها لفقره ، أو قرابته ، أو جواره ، أو تأليف قلبه...؛ لعموم قوله تعالى
 ( لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ) ، ى

இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் மூலமாக திர்மிதீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸை திர்மிதீயிலே பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வந்ததும் தமது வீட்டாரிடம் நமது அண்டை வீட்டாரான யஹூதியின் வீட்டிற்கு கொடுத்தனுப்புனீர்களா? என மூன்று முறை கேட்டு விட்டு நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்னிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்து சொல்லிய வண்ணம் இருந்தார். எங்கே அண்டை வீட்டாருக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள் என்று கூறிவிடுவார்களோ எனும் எண்ணுமளவிற்குஎன்று. ( நூல்: திர்மிதீ )

இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “மாற்று மதத்தவர்களுக்கும், திம்மீக்களுக்கும், கைதிகளுக்கும் உள்ஹிய்யா இறைச்சியிலிருந்து உண்ணக்கொடுப்பது ஆகுமாகும். மேலும், அது ஸதக்கா ததவ்வுஃ உபரியான தர்ம வகையைச் சார்ந்ததாகும்.

( நூல்: அல் முஃக்னீ லி இமாமி இப்னு குதாமா, பாகம்: 9, பக்கம்: 450 )

லஜ்னத் அத்தாயிமா எனும் ஃபத்வா நூலில்….

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)

தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 60:8 ) 

ولأن النبي صلى الله عليه وسلم أمر أسماء بنت أبي بكر رضي الله عنها أن تصل أمها بالمال 
وهي مشركة في وقت الهدنة " .

அஸ்மா (ரலி) அவர்களின் தங்களது தாயார் இணைவைப்பராய் இருக்கும் நிலையில் அவருக்கு தாம் உதவியாய் இருக்கலாமா? என அண்ணலார் {ஸல்} அவர்களிடம் வினவிய போது, நபி {ஸல்} அவர்கள் உலக விவகாரங்களில் அவர்களோடு தாராளமாக நடந்து கொள்ளுங்கள்என்று கூறினார்கள்

மேற்கூறிய இந்த இறைவசனத்தையும், நபிமொழியையும் ஆதாரமாக வைத்து, மாற்றுமதத்தவர்கள் தம் அண்டை வீட்டுக்காரராகவோ, ஏழையாகவோ, நண்பர்களாகவோ, பணியாட்களாகவோ, சொந்தமாகவோ இருந்தால் அவர்களுக்கு வழங்கலாம்
 
மேலும், அவர்களின் இதயம் இந்த தீனின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்ற ஆதரவுடன் உள்ஹிய்யா இறைச்சியை வழங்கலாம்எனவும் கூறப்பட்டுள்ளது.

                ( நூல்: ஃபதாவா லஜ்னத் அத்தாயிமா, பாகம்: 11, பக்கம்: 424 )

4. குர்பானி தோலின் சட்டம் என்ன?

குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அல்லது ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம். விற்பது கூடாது. அப்படி விற்பனை செய்து விட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு சதகா செய்துவிடுவது கடமையாகும். அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக் கூடாது.

தோலை யாருக்கு கொடுப்பது கூடாது?

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள்.
அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம். ( நூல்: புகாரி (1716), முஸ்லிம் (2320) )

1. மஸ்ஜித் கட்டடப் பணி, மராமத்து பணிகளுக்காகவும், 2. அறுத்து உறிப்பவர், உதவியாளர் ஆகியோருக்கு ஊதியமாகவும், 3. முஅத்தின், இமாம் ஆகியோருக்கு சம்பளமாகவும் கொடுப்பது கூடாது.

மதரஸாவின் கட்டுமானப்பணி, மராமத்துப்பணிக்கோ கொடுக்காமல் அங்கு பயிலும் மாணவர்களுக்காக கொடுக்கலாம்.  பள்ளிவாசலில் பைத்துல்மால் எனும் அமைப்பு இருந்து அதன் மூலம் ஏழை, எளியவருக்கு உதவிகள் கொடுக்கப்படும் என்றிருந்தால் கொடுக்கலாம்.

உள்ஹிய்யாவின் நோக்கம் என்ன?

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

”குர்பானிப் பிராணியின் மாமிசங்களோ அதன் உதிரங்களோ ஒருபோதும் இறைவனை அடைவதில்லை என்றாலும் உங்களின் இறையச்சம் தான் அவனை அடையும் ”.                                                                                                          ( அல்குர்ஆன்: 22:37 )

பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஆகவே, குர்பானி உள்ஹிய்யா விஷயத்தில் முகஸ்துதி, பெருமை, பகட்டு, உட்பட அனைத்து தீய அம்சங்களில் இருந்தும் முற்றிலும் விலகி அல்லாஹ்வுக்காக கொடுக்க முன்வருவோம்!

அல்லாஹ்வின் அச்சத்தோடும் அவனுக்காகவே செய்யும் தூய உள்ளத்தோடும் உள்ஹிய்யா (குர்பானி) கொடுக்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனம் நமக்கு உணர்த்துகின்றது.

நம் வாழ்வில் எல்லா காரியங்களிலும் இறையச்சத்தோடும், உளத்தூய்மையோடும் நடக்க அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் பாளிப்பானாக!

மார்க்கத்தின் விவகாரத்தில் எழும் சந்தேகங்களை உரியவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்று அதனடிப்படையில் செயல்பாடுகளை, அமல்களை சரி செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

     ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

இன்ஷா அல்லாஹ்பெருநாள் குத்பா பேருரைமுதல் முஸ்லிமும்முன் மாதிரி முஸ்லிமும்எனும் தலைப்பில் சனி அல்லது ஞாயிறு லுஹருக்குள் பதிவிடப்படும்.